அவனதிகாரம் - 3

 

அதிகாரம் - 3   

        

அந்த கல்யாண மண்டபத்தில் கூட்டம் களைகட்டி இருந்தது. கல்யாண மண்டபத்தில் இருந்த விருந்தினரில் ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருந்தார், ஏய் சாரதா, பாத்தியா டி எம்புட்டு கூட்டம்னு.

 

பின்ன, ஊர் தலைவர் வீட்டு, கல்யாணம்னா சும்மாவா..! என்னனு நினைச்ச நீயி... அதுவும், ஐயா வீட்டு முதல் விசேஷம், ஊருக்கே விருந்து வைக்காக... மொத்த ஊரும் இங்க தான கூடியிருக்கு என்று பெருமை பேசினார் சாரதா.

 

அப்பொழுது, அந்த வழியாக ஊர் தலைவரின் வீட்டில் வேலை செய்யும் ராணி கடந்து செல்வதை அவ்விருவரும் கண்டனர்.

 

ஏய் ராணி, ஒரு நிமிஷம் நில்லு என்று சாரதா ராணியை அழைத்தார்.

 

சொல்லு சாரதா அக்கா, என்ன விஷயம்.. அங்குட்டு நிறைய சோலி கிடக்கு என்றாள் ராணி.

 

என்னடி இவ சும்மா ரெண்டு வார்த்தை பேசலாம்னு கூப்பிட்டா, எதோ இந்த கல்யாணமே இவ தலைமையில் தான் நடக்குதுங்குற மாதிரி சிலுப்பிக்கிறா என்றாள் மற்றொருத்தி, சாரதாவின் தங்கை விமலா.

 

அக்கா, இதை பேசத்தேன் என்ன கூப்டீகளா. நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும், இது எங்க வீட்டு கல்யாணம். நான் வேலை பாக்காமல் வேற யாரு பாப்பா என்றாள் அவசர குரலில்.

 

ரொம்ப தான் டி பண்ற... நீ அந்த வீட்டில் வேலைக்காரி தான், வீட்டு ஆளுன்னு  நினைப்போ... என்றாள் விமலா.

 

வேலைக்காரியா இருந்தாலும், என்னையும் அந்த வீட்டு ஆளு போல தான் நடத்துறாக லட்சுமி அம்மா. இதெல்லாம் உங்களுக்கு எங்க புரியப்போகுது. எவ்வளவு தான் பார்த்து பார்த்து பண்ணாலும், குறை சொல்றதுக்காகவே இப்படி நாலு பேரு கிளம்பி வந்துட வேண்டியது என்று நொடிந்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

 

பாத்தியா டி எவ்வளவு திமிரா பேசிட்டு போறானு.. எல்லாம் பெரிய வீட்டில் வேலை பார்க்குறோங்குற திமிரு என்றாள் அவள் போகும் திசையை பார்த்து கொண்டே.

 

சரி விடுக்கா, இவகிட்டலாம் பேச்சு வாங்கணும்னு நமக்கு என்ன தலை எழுத்தா.. பெரிய இவ மாதிரி பேசிட்டு போறா...

 

ராணி பேசுவது அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த யாழினி அவளிடம் ஓடி வந்து, ஹே ராணி அக்கா..! சூப்பர்...! செமையா பேசுன போ... என்று ஹைஃபை அடித்துக் கொண்டாள்.

 

பின்ன என்ன பாப்பா... எப்போ பார்த்தாலும் நான் பெரிய இடத்தில் வேலை பார்க்கேனு என்னை பார்த்தாலே இவளுங்களுக்குலாம் பொறாமை தான். நான் போகும் போது, வரும் போதெல்லாம் ஜாடை மாடையா பேசுவாளுங்க. பெரிய இடத்தில் வேலை பார்க்குறா அது இதுன்னு... நம்ம லட்சுமி அம்மா குணத்துக்கு நான் சும்மாவே அவங்களுக்கு வேலை பார்த்து குடுப்பேன். இவளுங்களுக்கு என்ன தெரியும்... எல்லாம் பொறாமை பிடிச்சவளுக. ஏதாவது குறை சொல்லுறதுக்காகவே கிளம்பி வந்துடுவாளுக. சரி பாப்பா, நிறைய வேலை கிடக்கு நான் போறேன் என்று கிளம்பிவிட்டாள்.

 

ராணியின் அம்மா ராணிக்கு சிறு வயது இருக்கும் போதிலிருந்தே மரகதம் பாட்டியிடம் வீட்டு வேலைக்கு ஒத்தாசையாக வந்து சேர்ந்தார். பிறகு, லட்சுமிக்கு திருமணம் முடிந்து இங்கு வந்ததும், ராணிக்கும் திருமணம் பேசி செலவு அனைத்தையும் இவர்களே செய்து திருமணத்தை நல்லபடியாக முடித்து வைத்தனர். 

 

பாவம்! அவளின் போதாத காலம் அவளின் கணவன் குடிக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விட்டான். ஆகையால், ராணியும் தன் அம்மாவிற்கு அடுத்ததாக லட்சுமிக்கு உதவியாக வீட்டு வேலைக்கு வந்து சேர்ந்தாள்.

 

அப்போதிலிருந்து இங்கே தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதில், ஊரில் உள்ள மற்ற வீட்டு வேலை பார்க்கும் அனைவருக்கும் ராணியை பார்த்தால் பொறாமை தான்...

 

குடும்பத்தில் ஒருத்தி போல் தான் அவளை லட்சுமி அம்மா நடத்துவார். எல்லா சுப காரியங்களிலும் ராணி தான் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள்.

 

அந்த அளவிற்கு அந்த வீட்டில் ஒருத்தியாகவே மாறிப் போனாள் ராணி... ராணிக்கு குழந்தைகள் கிடையாது. எனவே, லட்சுமியின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்வாள். அதிலும், யாழினி என்றால் அவளிற்கு தனி பிரியம்...!

 

 

திருமணத்திற்கு முதல் நாள் ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என வெண்ணிலாவின் அப்பாவும், ஜீவாவின் அப்பாவும் கலந்து ஆலோசித்து முடிவெடுத்து இருந்தனர். அதன்படி, ரிசப்ஷனும் இனிதே ஆரம்பம் ஆனது..!

 

ஊர் மக்கள் கூட்டம் மொத்தமும் இவர்கள் ரிசப்ஷனில் தான் இருந்தது. வெண்ணிலாவை அலங்கரிக்க ஜீவா வெளியூரிலிருந்து பியூட்டிஷியனை வர வைத்திருந்தான்.

 

கயல்விழி, சிவப்பு நிறத்தில் அழகாக லாங் கவுன் அணிந்து இருந்தாள். யாழினியோ வெள்ளை நிறத்தில் லாங் கவுன் அணிந்து இருந்தாள். இருவரும், அதிக ஒப்பனை இல்லாமலே பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் நின்று பார்க்கும் அளவுக்கு அழகாக இருந்தனர்.

 

இயற்கையிலேயே அழகியான வெண்ணிலா. பியூட்டிஷியனின் கைவண்ணத்தில் பேரழகியாக ஜொலித்தாள்..! அவள் அணிந்திருந்த பிங்க் மற்றும் இள மஞ்சள் நிறத்தின் காம்பினேஷனால் ஆன லெகங்காவோடு, பெண்மையின் வெட்கமும் சேர்ந்து அவளை அழகு ரதியாக அனைவர் கண்களுக்கும் காட்டியது.

 

ரிசப்ஷனிற்கு வந்த அனைவரின் கண்களும் வெண்ணிலாவின் மேலேயே நிலைத்து நின்றது. ஊர் மக்களே தங்களின் பார்வையை வெண்ணிலாவின் மீதிருந்து அகற்ற முடியாமல் இருக்கும் பொழுது.

 

ஜீவாவின் நிலை இன்னும் மோசமாகி போனது. தன் கண்களை இமைக்காமல் அவன் காதல் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான். இல்லை.. இல்லை.. ரசித்துக் கொண்டிருந்தான்..!

 

ஒரு வருட, இரண்டு வருட அன்பில்லையே அவள் மேல் அவன் கொண்டது..!

 

பல வருடங்களாக... சிறு வயது முதல் சேர்த்து வைத்தது அல்லவா..!

 

சொல்லிவிட்ட அன்பை விட, சொல்லாமல் இருக்கும் அன்பிற்கு வலிமை அதிகம் அல்லவா..!

 

ஜீவாவும் ஒன்றும் குறைச்சல் இல்லை... வெண்ணிலாவின் உடைக்கு மேட்சிங் ஆக பிங்க் வித் கோல்டன் காம்பினேஷனில் சர்வாணி அணிந்திருந்தான். அவனின் நிறத்திற்கும், ஆறடி உயரத்திற்கும் அது கம்பீரமாக அவனுக்கு பொருந்திப் போனது..!

 

பல பெண்களின் கண்களும் ஜீவாவையே வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. நண்பர்களின் கிண்டல் கேலிகளுடனும், வாழ்த்துக்களுடனும், சொந்த பந்தங்களின் வாழ்த்துக்களுடனும் இனிதே ஜீவா மற்றும் வெண்ணிலாவின் ரிசப்ஷன் நிறைவடைந்தது..!

 

வெண்ணிலா, ஜீவாவை ஓரிரு நொடிகள் பார்த்தாலே தவிர, எந்த ஒரு பாவனையும் முகத்தில் காட்டவில்லை. மனதில் இருப்பதை வெளிப்படையாக காட்டிவிட்டால் அது வெண்ணிலா அல்லவே..!

 

தன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவு வந்ததிலிருந்து அவளிற்கு பெரும் மகிழ்ச்சி. நல்ல மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்த்தால் தான். ஆனால், பள்ளியில் முதல் மாணவியாக வருவாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

 

இருந்தும் என்ன பயன்...! பள்ளியில் முதல் மாணவியாக அவள் வந்த பொழுதும் கூட அவளின் தந்தைக்கு  அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. அவர் தான் 12 ஆம் வகுப்பின் அறிவே பெண்களுக்கு போதும் என்று முடிவு செய்து விட்டாரே..

 

எனவே, பேசி வைத்தது போல் வெண்ணிலாவிற்கு திருமணம் செய்வதிலேயே அவர் குறியாக இருந்தார். அவரின் ஆசைப்படியே ரிசெப்ஷன் இனிதே நடந்து முடிந்து விட்டது.

 

விடிந்தால் திருமணம் வெண்ணிலாவின் மனது வெறுமையாக இருந்தது. யாரிடமும் எதுவும் அவள் பேசவில்லை. வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய சொன்னார்களோ அதை அமைதியாக செய்தாள்.

 

பாவம்..! அவளும் பதின் வயது பெண் தானே. பெற்றவர்களை மீறி வேறு என்ன செய்திட முடியும் என்ற எண்ணம் தான் அவள் மனதில். படிப்பிற்காக அவர்களை எதிர்த்து நாம் ஏதேனும் செய்ய போய் அது அவர்களுக்கு தலை குனிவாகிவிடுமோ என்ற பயமும் ஒரு பக்கம்..

 

ஆகையால், இனிமேல் இது தான் நம் வாழ்க்கை என்று அமைதியாக ஏற்றுக் கொண்டாள். மறுநாள், விடியலும் விடிந்தது. அதிகாலையிலேயே மண்டபத்தில் அனைவரும் அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர்.

 

தன் தோழிகளின் கிண்டல், கேலிகளுடன் பியூட்டிஷியனின் கைவண்ணத்தில் வெண்ணிலா தேவதையாக தயாராகிக் கொண்டிருந்தாள்.

 

மணமகன் தனது அறையில் மாப்பிள்ளை தோரணையுடன் தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தார்.

 

மணப்பெண்ணின் தங்கைகளோ, மணப்பெண்ணுக்கு முன்னதாக தயாராகி தங்கள் தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். கயல்விழி அழகாக பச்சை சிகப்பு நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். 

 

யாழினி நீல நிறத்தில் பட்டுப் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். இதில், யாழினியையும், ஸ்வேதாவையும் கையிலேயே பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், அவர்களின் அண்ணனுக்கும், அக்காவுக்கும் நடக்கும் திருமணத்தில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

 

ஐயர், மணவறைக்கு மணமகனை அழைத்து வருமாறு கூறினார். தோழர்களும், சொந்தங்களும் படை சூழ பட்டு வேட்டி சட்டையில் ஆண்களுக்குரிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் மணமகன் ஜீவா மணவறைக்கு அழைத்துவரப்பட்டான்.

 

ஐயர் தான் கூறும் மந்திரங்களை மணமகனை திரும்ப கூறச் சொன்னார். சிறிது நேரம் கழித்து ஐயர் மணமகளை அழைத்து வர சொன்னார். அழகிய தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகளை கொண்ட சிகப்பு நிற காஞ்சிபுரம் பட்டு சேலையில் அதற்க்கேற்ப அணிகலன்களுடன் தேவலோக மங்கை என தோழிகள் படைசூழ மணவறைக்கு அழைத்து வரப்பட்டாள் வெண்ணிலா.

 

இருவரும், ஐயர் கூறும் மந்திரங்களை பின்தொடர்ந்து தங்கள் வாழ்க்கை வளமையாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கூறிக் கொண்டிருந்தனர். அவ்வப்பொழுது, ஜீவா யாருக்கும் தெரியாமல் ஓரக் கண்ணால் தன் காதல் மனைவியை பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

இதை அறியாத வெண்ணிலாவோ கண்ணும் கருத்துமாக ஐயர் கூறும் மந்திரங்களை பயபக்தியுடன் கூறிக் கொண்டிருந்தாள்.

 

மேள தாளங்கள் இசைக்க...

 

உறவினர்களும், அந்த மண்டபத்தில் கூடியிருந்த விருந்தினர்களும் மணமக்களை வாழ்த்தி அர்ச்சதை தூவ தயாராக இருக்க...

 

வெண்ணிலாவின் அப்பா தான் நினைத்தபடி பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகின்ற திருப்தியில் மணமக்களை பார்த்துக் கொண்டு நிற்க.

 

வெண்ணிலாவின் அம்மாவுடைய மனநிலையோ ஒருபுறம், தன் பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை அமையப் போகின்றது என்ற மகிழ்ச்சியிலும், மற்றொருபுறம், தன் மகள் திருமணம் முடிந்து வேறொரு வீட்டிற்கு செல்ல போகிறாள் என்பதை எண்ணி வருத்தத்திலும் கண்ணிமைக்காமல் தன் மகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

மரகதம் பாட்டி தன் பேத்தியின் திருமணத்தை மனநிறைவோடும், கண்களில் கண்ணீரோடும் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

தாத்தாவும் தன் பேத்தியின் திருமணத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் .

 

ஆனாலும், அவர் மனதில் ஒரு வருத்தம் இருந்து கொண்டு தான் இருந்தது. தான் நினைத்தபடி நடக்கவில்லையே என்று... ஏன், தான் நினைத்தது நடக்காமலே போய்விடுமோ என்றும் கூட...

 

வெண்ணிலாவிற்கும், ஜீவாவிற்கும் திருமணம் நல்லபடியாக நடக்குமா...?

 

திருமணத்திற்கு பிறகு வெண்ணிலாவை ஜீவா படிக்க அனுமதிப்பானா..?

 

இல்லை, திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்று அவனின் அப்பாவை போல் எண்ணிவிடுவானா..?

 

தாத்தாவின் மனதில் இருக்கும் எண்ணம் தான் என்ன...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 5