அவனதிகாரம் - 1

 

                                    

அதிகாரம் - 1

             

அந்த அழகிய காலை பொழுதில் பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சி அளித்தது அரசனூர் கிராமம். எங்கும் பச்சை பசேல் என்று பறந்து விரிந்த வயல்களும், ஊரின் நடுவே நீண்ட நெடிய ஆறும், ஆற்றை ஒட்டி அமைந்துள்ள மலைகளும் அந்த ஊரின் அழகை இருமடங்காக காட்டியது.

 

ஊரின் நடுவே உள்ள அரசமரத்தின் அருகில் அவசரமாக பஞ்சாயத்து கூட்டப்பட்டிருந்தது. ஆண்கள் அனைவரும் பரபரப்பாக அமர்ந்திருக்க, பெண்கள் ஒரு பக்கம் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டு இருந்தனர்,  இளவட்டம் ஒரு புறம் ஆர்வமாக என்ன தீர்ப்பு வழங்குவார்களோ என்று காத்துக்கொண்டு இருந்தனர்.

 

அப்பொழுது அங்கே வந்து சேர்ந்தார் அந்த ஊரின் தலைவர் ‘சுப்ரமணியன்’. அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணக்கம் கூற, அவரும் பதில் வணக்கம் வைத்தவாறு சென்று அங்கு வீற்றிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

 

அப்பொழுது கூட்டத்தில் ஒருவர், “என்னப்பா அதான் ஐயா வந்துட்டாங்களே, இப்போவாவது சொல்லுங்க என்ன தான் உங்க பிரச்சினை?”.

 

இளவட்டத்தில் இருந்து பதில் வந்தது, “ஐயா அடுத்த மாசம் ஊர் திருவிழா வருது, உங்க எல்லார்க்கும் தெரியும், இந்த வருஷம் முன்னாடி மாதிரி இல்லாமல் புதுசா பண்ணலாம்னு யோசித்திருக்கோம்”.

 

கூட்டத்தில் ஒருவர், “சின்ன பசங்க உங்களுக்கு என்ன தெரியும் திருவிழா எப்படி  நடத்தனும்னு”.

 

சுப்ரமணியன், “கொஞ்சம் பொறுங்க ஐயா! நீங்க சொல்லுங்க தம்பி, என்ன பண்ணனும்னு எதிர் பார்க்குறிங்க”.

 

இளவட்டம், “தலைவர் ஐயா! எப்போதும் செய்யுற மாதிரி இல்லாமல் இந்த தடவை நம்ம ஊரை விட்டு வெளியூர் போன சொந்தங்களை எல்லாம் வரவைத்து பெருசா திருவிழா பண்ணனும்னு நாங்க ஆசைப்படுறோம். அது மட்டும் இல்லைங்க ஐயா, இனிமேல் வருஷத்துக்கு ஒரு தடவை, ‘ஒன்று கூடல்’ என்ற பெயரில் நம்ம ஊரை விட்டு பொழப்ப தேடி வெளியே போன மக்கள் அனைவரையும் இங்கு வரவைத்து சொந்த பந்தங்களுடன் சேர்ந்து அந்த ஒரு நாளை கொண்டாடணும்னு நாங்க ஆசைப்படுறோம்”.

 

சுப்ரமணியன்,” நம்ம ஊரு திருவிழாவில் நாம மட்டும் முடிவு பண்ண முடியாது. இந்த திருவிழா நமக்கும், பனையூர் கிராமத்துக்கும் பொதுவா இருக்குற கோவிலில் நடக்குற திருவிழா... அதனால், அந்த ஊர் தலைவர்கிட்டயும் கேட்டுட்டு தான் நாம முடிவு எடுக்க முடியும். ஏன்னா, திருவிழா பெருசா பண்ணனும்னா, நம்ம இப்போ பண்ணிருக்க கணக்கை விட செலவு அதிகமா போகும். இதுக்கு அவங்களுக்கும் விருப்பம்னா நாம நீங்க ஆசைபட்ட மாதிரி பண்ணிடலாம்”

 

இளவட்டம், சரிங்க ஐயா, ரொம்ப நன்றி... ‘ஒன்று கூடல்’ நடத்துறது பத்தி ஒன்னும் சொல்லலைங்களே...?”.

 

ஊர் தலைவர், அதை நம்ம ஊர் மக்கள் எல்லார்கிட்டயும் கேட்டுட்டு தான் முடிவு பண்ண முடியும். பஞ்சாயத்தில் கூடி இருக்குற மக்கள் நீங்க எல்லாரும் இந்த பசங்க சொல்றதை பத்தி என்னப்பா நினைக்கிறீங்க. எல்லாரும் ஒரு மனசா சேர்ந்து பண்ணலாம்னு நினைச்சா, உங்க ஆசைப்படியே பண்ணிடுவோம்”.

 

அந்த ஊரில் வசிக்கும் முதியவர் ஒருவர், ”இந்த பசங்க சொல்றதெல்லாம் புதுசா இருக்கு. எங்கேயும் கேள்வி படாத மாதிரி இருக்கு. இந்த பசங்க சொல்ற மாதிரி நம்ம ஊரை விட்டு பொழப்பை தேடி வெளியூர் போனவங்க வருஷத்துக்கு ஒரு தடவை கூட நம்ம ஊரில் வாழுற அவங்க சொந்த பந்தங்களை பார்க்க வருவது இல்லை. என் சின்ன பையன் கூட பொழப்புக்காக வெளியூர் போனான். அங்கனையே கல்யாணம் கட்டிக்கிட்டு அங்கேயே இருந்துட்டான். எங்களை பார்க்குறதுக்கே நாலு வருஷத்துக்கு ஒரு தடவையோ இல்ல, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவையோ தான் நம்ம ஊருக்கு வரான். இந்த பசங்க சொல்ற மாதிரி ‘ஒன்று கூடல்’ நடந்தா, வருஷத்துக்கு ஒரு தடவை என் புள்ளையை பார்க்க முடியும். எனக்கு என்னவோ சரியாதாங்க ஐயா படுது. ஒரு தடவை முயற்சி பண்ணி தான் பார்ப்போமே” என்றார் அந்த முதியவர்.

 

அவர் கூறிய வார்த்தைகளில் இருந்தே, அவர் தன் பிள்ளையை பார்க்க எவ்வளவு ஏக்கத்துடன் கார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

 

‘இப்படி இன்னும் எத்தனை பேர் அந்த ஊரில் தன் சந்ததிகளையும், உறவுகளையும் காண காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்’ என்று ஊர் தலைவர் சிந்திக்கலானார்.

 

ஊர் தலைவர், சரிப்பா, இந்த வருஷம் திருவிழாவை நீங்க எல்லாரும் ஆசைப்படுற மாதிரி பெருசா பண்றதுக்கு பக்கத்து ஊர் தலைவர்கிட்ட பேசிட்டு ஒரு நல்ல முடிவு சொல்றேன். அடுத்த வருஷத்தில் இருந்து ‘ஒன்று கூடல்’ நடத்துவது பத்தி யோசிக்கலாம். திருவிழா நல்லபடியா முடிஞ்சதும் ‘ஒன்று கூடல்’ எப்போ நடத்தலாம்னு ஒரு தேதியை கலந்து பேசி முடிவு பண்ணுவோம். எல்லாருக்கும் இதில் சம்மதம் தானே...?” என்று கேட்டார்.

 

கூட்டத்தில் இருந்த அனைவரும் ஒரு மனமாக சம்மதம் என்று கூறினர். பின்னர், கூட்டம் கலைந்து அவரவர் வேலையை பார்க்க சென்றனர். சுப்ரமணியனும் தனது காரில் ஏறி தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

 

அப்போது காரில் அவர் அருகில் அமர்ந்திருந்த அவருடைய தந்தை வேலுச்சாமி, “என்னையா ஊரில் எல்லாம் இப்படி சொல்றாங்க...” என்று கேட்டார்

“என்னப்பா பண்றது... ஊர்காரங்க ஆசைப்படுறாங்க, பக்கத்து ஊர் தலைவர் கிட்ட பேசி பார்க்கிறேன். அவங்க ஒத்துக்கிட்டாங்கன்னா இவங்க ஆசைப்படியே பெருசா பண்ணிடுவோம். என்ன, செலவு தான் கொஞ்சம் அதிகமா போகும். பரவாயில்ல, பார்த்துக்கலாம். எல்லாரும் ஆசைப்படுற மாதிரி பெருசா திருவிழாவை கொண்டாடுவோம்”.

 

“சரிப்பா, நீ செஞ்சா சரியா தான் இருக்கும். எல்லாரும் அவங்க அவங்க சொந்த பந்தங்களை கூப்பிடும் போது, நம்மளும் கூப்பிட்டா தானப்பா நல்லா இருக்கும்” என்றார் தயக்கமாக.

 

“இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியுது. வீட்டுக்கு போய் லட்சுமி கிட்டயும், அம்மாகிட்டயும் கலந்து பேசிட்டு ஒரு முடிவு எடுக்கலாம்”.

 

“சரிப்பா“ என்று முடித்துக் கொண்டார்.

 

ஆனாலும், மனதிற்குள் ஒரு அவசர வேண்டுதலையும் வைக்க அவர் மறக்கவில்லை. அவரின் ஆசை.... ஏன் கனவு என்று கூட சொல்லலாம்.

 

பல நாட்களாக மனதில் மறைத்து வைத்திருந்த ஆசை, நடக்காது என்று நினைத்திருந்த ஆசையை நிறைவேற்ற இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

 

இதை அவ்வளவு எளிதில் விட அவர் விரும்பவில்லை. எப்படியாவது, தன் ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

 

சுப்ரமணியனிற்கு மூன்று பெண் பிள்ளைகள். மூத்த மகளின் பெயர் வெண்ணிலா...

இரண்டாம் மகளின் பெயர் கயல்விழி...

மூன்றாம் மகளின் பெயர் யாழினி...

 

வெண்ணிலா அனைத்திலும் கெட்டிக்காரி. அழகிலும் குறைவில்லை, பார்ப்பதற்கு லட்சணமான முகமும், அமைதியான குணமமும் கொண்டவள். படிப்பிலும் முதல் மாணவியாக வருபவள்.

 

அந்த ஊரிலேயே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். எல்லா முடிவுகளையும் நிதானமாக எடுப்பவள், சிந்தித்து செயல்படுபவள்.

 

பள்ளிப்படிப்பை முடித்ததும் தன் வாழ்க்கை தன் கையை மீறி போகப் போவதை அறியாமல், பள்ளிப்படிப்பை முடித்ததும் மேல் படிப்பிற்காக வெளியூர் சென்று நன்றாக படித்து பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறாள்.

 

ஆனால், பெண் பிள்ளைகளுக்கு பள்ளி படிப்பே போதும் என்னும் தன் தந்தையின் எண்ணத்தை அறியாமல் விட்டது தான் அவளின் தவறோ...!

 

அதன் விளைவு, தன் பள்ளி படிப்பை முடித்ததும் மணமகளாக மணமேடையில் அமரப் போகிறாள். அவளின் அம்மா லட்சுமிக்கு ஒரே அண்ணன் பெயர் மாணிக்கம். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 

மூத்தவன் ஜீவானந்தம் என்னும் ஜீவா... அவனுக்கு தான் வெண்ணிலாவை மணம் முடிக்க உள்ளனர்.

 

இரண்டாம் மகள் ஸ்வேதா... தற்பொழுது, பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

 

வெண்ணிலாவின் தங்கை யாழினியும், ஜீவாவின் தங்கை ஸ்வேதாவும் ஒரே பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் மாமன் மகள் என்னும் உறவையும் தாண்டி நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

 

இருவரும் எவ்வளவு நெருக்கம் என்றால், ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டார்கள். யாழினியை பற்றிய அனைத்து விஷயங்களும் ஸ்வேதாவிற்கு தெரியும்.

 

அதேபோல், ஸ்வேதாவை பற்றிய அனைத்து விஷயங்களும் யாழினிக்கு தெரியும். சிறு வயது முதலே இருவரும் நகமும், சதையும் போல் சுற்றி வருபவர்கள்.

 

ஜீவா, அன்பானவன்.. ஒழுக்கமானவன்... எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆறடி ஆண் மகன். விவசாயம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையின் விவசாய நிலத்தில் புதிய முறையில் விவசாயம் செய்து தன் திறமையை அக்கம் பக்கம் இருக்கும் ஊர்களுக்கும் தெரியும் அளவிற்கு தன் உழைப்பால் உயர்ந்துள்ளான்.

 

அது மட்டும் இன்றி, தன் ஊரிலேயே சொந்தமாக உரக்கடையும் நடத்தி வருகிறான். விவசாயம் குறித்து சந்தேகம் கேட்பவர்களுக்கு வழிநடத்த வேண்டி, ஒரு அலுவலகமும் அமைத்துள்ளான்.

 

இவனைப் போலவே, புதிய முறையில் விவசாயம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கும் அறிவுரைகளை வழங்கி அவர்களுக்கும் ஒரு நல்வழியை அமைத்து கொடுக்கிறான். இதில், அவனின் தந்தைக்கு என்றும் பெருமையே... தன் மகனின் முன்னேற்றத்தை கண்டு.

 

ஜீவாவிற்கு வெண்ணிலாவின் மீது சிறு வயது முதலே கொள்ளை பிரியம். அது வெண்ணிலாவிற்கும் தெரியும்..! அவளிற்கு ஜீவாவை திருமணம் செய்வதில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், தன் பட்டப்படிப்பை முடித்த பின் வீட்டில் என்ன முடிவு செய்தாலும் சரி என்று சொல்லும் எண்ணத்துடன் தான் அவளும் இருந்தால்.

 

ஆனால் அவளின் தந்தையோ, ‘பெண் பிள்ளைகளுக்கு பட்டப்படிப்பு அவசியம் இல்லை’ என்று எண்ணுபவர். அவரை பொறுத்தவரை பெண் பிள்ளைகள் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும், அதிகமாக பேசக்கூடாது, சத்தம் வெளிவரும் அளவிற்கு சிரிக்க கூடாது என்று பழைய பஞ்சாங்கம் பாடுபவர்.

 

வெண்ணிலா தன் பன்னிரெண்டாம் பொதுத் தேர்வினை முடித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினால். வீடு வந்து சேர்ந்ததும் தன் தந்தையின் வரவிற்காக காத்திருந்தாள்.

 

தந்தை வந்ததும் தன் அம்மாவிடம் சென்ற வெண்ணிலா, “அம்மா ப்ளீஸ்... அப்பாகிட்ட நீங்க கொஞ்சம் சொல்லுங்க மா... நான் காலேஜ் போகணும்னு ஆசைப்படுறேன்”.

 

“உனக்கு அப்பா பத்தி தெரியும்ல டா, அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார். கல்யாணம் ஆன பிறகு மாப்பிள்ளை கிட்ட சொல்லி நீ ஆசைப்பட்ட படிப்பை படிச்சுக்கோ” என்றார் அவளின் அம்மா லட்சுமி தன் இயலாமையுடன்.

 

அவராலும் வேறென்ன செய்துவிட முடியும். திருமணம் முடிந்த தினம் முதல் பார்க்கின்றார் அல்லவா அவர் கணவரின் குணங்களை பற்றி... என்ன தான் கணவர் எடுக்கும் முடிவுகளுக்கு துணை நின்றாலும் தன் மகளின் ஆசைகளை பற்றியும் அறிந்தவர் அல்லவா..!

 

மகளின் ஆசைகள் தன் கண் முன்னே திசை மாறுவதை தாங்க முடியாமல், பலமுறை அவரும் தன் கணவரிடம் கேட்டுப் பார்த்து விட்டார். அவர் கணவர் ஒன்றும் அவ்வளவு மோசமானவரும் அல்ல..

 

மனைவியையும், மகள்களையும் நல்ல விதமாக பார்த்துக் கொள்பவர் தான். என்ன தான் மனதிற்குள் பாசம் இருந்தாலும், அதை வெளிப்படையாக மகள்களிடம் காட்ட மாட்டார்.

 

அவரை பொறுத்தமட்டும் பெண் பிள்ளைகளிடம் அதிக பாசத்தை காட்டினால், அவர்கள் அதிக சலுகைகள் எடுத்துக் கொள்வார்கள் என்று பிற்போக்காக யோசிக்கும் மனப்பான்மையை கொண்டவர்.

 

தனிமையில் மனைவியிடம் பேசுகையில், தன் பிள்ளைகளின் குணங்களையும், திறமையையும் பற்றி பேசி பெருமை பட்டுக் கொள்வார். ஆனால், அவர் மனைவியே பலமுறை எடுத்துக் கூறியும் பள்ளி படிப்பு முடித்தவுடன் மேல் படிப்பு படிக்க வைக்க முடியாது என்று தன் முடிவை திட்டவட்டமாக கூறிவிட்டார்.

 

வெண்ணிலா, “அம்மா, மாமாவும் அப்பா போல தான். நீங்களே புரிஞ்சிக்கலைனா, அவங்க எப்படி புரிஞ்சிப்பாங்க” என்றாள் அழத் தயாராக இருக்கும் கண்களுடன்.

 

என்ன தான் சொந்த தாய் மாமாவாக இருந்தாலும், அவருக்கும் பெண் பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வைக்க  விருப்பம் இருக்காது என்பதை வெண்ணிலா நன்கு அறிவாள்.

 

இவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்கள் அவர்கள் கிராமத்தில் இப்படிப்பட்ட சிந்தனையுடன் தான் இன்றும் வளம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

 

இவர்களை பொறுத்தவரை பெண் பிள்ளைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அறிவே அவர்கள் வாழ்க்கை நடத்த போதுமானது என்று எண்ணுகிறார்கள்.

 

பெண் பிள்ளைகளை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் முடித்துக் கொடுத்தால், அவர்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளவும், அவர்கள் சந்ததியை வளர்க்கவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். வீட்டில் வேலை பார்ப்பதற்கும், பிள்ளைகளை வளர்ப்பதற்கும் 12 ஆம் வகுப்பே அதிகம் என்னும் எண்ணம் அவர்களுக்கு..!

 

வெண்ணிலாவின் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்கின்ற கனவு நிறைவேறுமா..!

அவளின் தாத்தா வேலுச்சாமி மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் நிறைவேறாத ஆசை தான் என்ன..?

ஊர் திருவிழா ஊர் மக்களின் ஆசைப்படி கொண்டாடப்படுமா..?

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5