அவனதிகாரம் - 2
அதிகாரம் - 2
வெண்ணிலா
தன் தாயிடம் பேசிப் பார்த்து எந்த பலனும் அளிக்காததால் அழுகையுடன் தன் அறை நோக்கி
ஓடினாள். அவளின் தாய் லட்சுமி, தன் மகளுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத தன்
நிலையை எண்ணி வருந்தியபடி அழுகையுடன் செல்லும் தன் மகளை பார்த்து நின்றார்.
சுப்பிரமணியன்,
“என்ன லக்ஷ்மி இங்க நின்னுட்டு
என்னத்த பாத்துகிட்டு இருக்க...”.
“ஒன்னும் இல்லைங்க, இன்னையோட நம்ம
வெண்ணிலாவுக்கு 12ஆவது பரீட்சை முடிஞ்சிடுச்சு”. என்று கூறிவிட்டு கைகளை பிசைந்து கொண்டு நின்றார்.
அவரை
நிதானமாக பார்த்தவர், “என்ன லட்சுமி என்ன ஆச்சு... ஏன்
ஒரு மாதிரி இருக்க...” என்று கேட்டார்.
“இல்லைங்க, நான் தான் உங்ககிட்ட
சொல்லி இருந்தேனே... வெண்ணிலா மேல படிக்கணும்னு ஆசைப்படுறா. நம்ம ஜீவாவுக்கு தானே
அவளை கட்டி வைக்க போறோம். ஆசைப்படுற மாதிரி படிப்பு முடிஞ்சதும், ஜீவாவுக்கு
கட்டிக் கொடுத்திடலாமே.. நான் அண்ணன் கிட்ட பேசுறேன்..” என்று கடகடவென கூறிவிட்டு கணவரின் முகத்தை பார்த்தார்.
“இல்ல லட்சுமி, அதெல்லாம் சரி
வராது. நான் வருகிற தை மாசமே கல்யாணம் வச்சுக்கலாம்னு மச்சான் கிட்ட சொல்லிட்டேன்.
அவர் தான் இல்லை, வெண்ணிலாவோட பரீட்சை முடிவு வந்ததுக்கு அப்புறமா வச்சுக்கலாம்னு
சொல்லிட்டார். அவளுக்கு எது நல்லது, எது கெட்டதுனு எனக்கு தெரியாதா.. எல்லாம் போக
போக சரியாயிடும். 12வது படிச்சதுக்கே என் பிள்ளை எவ்வளவு அறிவா நடந்துக்குனு
பாக்குற இல்ல... இது போதாதா... மேற்கொண்டு படிச்சு என்ன பண்ண போகுது. நமக்கு
இருக்க வசதி எல்லாம் நம்ம பிள்ளைங்களுக்கு தான.. அவங்க வேலைக்குப் போய்
சம்பாதிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. அது மட்டும் இல்லாமல், உங்க அண்ணனுக்கு
இதெல்லாம் தெரிஞ்சா அவரும் ஒத்துக்க மாட்டார். இவளுக்கு அடுத்து இன்னும் இரண்டு
பெண் பிள்ளைங்க இருக்காங்க. இவளுக்கு காலா காலத்தில் கல்யாணம் முடிச்சா தானே, அடுத்து
அவங்களுக்கு பண்ண முடியும்” என்றார் தன் கம்பீரக் குரலில்.
அவ்வளவு
தான்.. லட்சுமிக்கு அனைத்தும் அடங்கி விட்டது. இங்கே மூத்தப் பிள்ளை பெண்
பிள்ளையாக பிறந்து, அடுத்தும் பெண் பிள்ளையாக பிறந்தால், அடுத்த பிள்ளைகளுக்கு
திருமணம் செய்வதில் தாமதமாகும் என்பதை எண்ணி பலர் இப்படி மூத்த பெண் பிள்ளைக்கு
விரைவில் திருமணத்தை முடிக்க வேண்டும் என்றும் எண்ணுகின்றனர்.
“சரி, நேரம் ஆகுது. சீக்கிரம்
சாப்பாடு எடுத்து வை” என்று கூறிவிட்டு தன் அறையை
நோக்கி நகர்ந்து விட்டார்.
லட்சுமி
வழக்கம் போல் ‘நடப்பவற்றை நாம் பார்வையாளராக
மட்டும் தான் பார்க்க முடியும்’ என்பதை மனதில் நினைத்துக் கொண்டு
சமையலறையை நோக்கி நகர்ந்தார். பெரும்பாலான இல்லத்தரசிகளால் இதை மட்டும் தானே செய்ய
முடியும்!
நடந்த
அனைத்து பேச்சு வார்த்தைகளையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மரகதம் பாட்டி தன்
கணவர் வேலுச்சாமியிடம் சென்றார்.
“என்னங்க நம்ம வெண்ணிலா மேல
படிக்கணும்னு ஆசைப்படுது. ஏன் சுப்ரமணி சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்குறான்னு
தெரியலையே... மச்சான் கிட்ட தான பொண்ணு கொடுக்கப் போறான். இதுக்கு ஏன் இவ்வளவு
அவசரப்படுறான்” என்று தன் மனதில் தோன்றியதை
கூறினார்.
“அதெல்லாம்
நம்ம சொன்னா அவன் கேட்க மாட்டான் மரகதம். பொம்பள புள்ளையை எதுக்கு படிக்க வச்சிக்கிட்டுன்னு பார்க்குறான்
போலருக்கு”.
“என்னங்க நீங்களும் அவனை மாதிரியே
பேசுறீங்க. நம்ம பேத்தி ஆசைப்படுறா.. நீங்களாவது அவன் கிட்ட கொஞ்சம் எடுத்து
சொல்லலாம்ல”.
“என்ன பேசுற மரகதம், ஏற்கனவே
என்னால் ஒரு தப்பு நடந்தது பத்தாதா. அதையே எப்படி சரி செய்யனு தெரியாமல் இருக்கேன்” என்றார் பாட்டியை பார்த்து
வருத்தத்துடன்.
இவருடன்
பேசினால் வேலைக்கு ஆகாது என்று எண்ணிய பாட்டி. “இவர் ஒருத்தர், எப்போ பார்த்தாலும் புலம்பிக்கிட்டு... இந்த
கிழவனுக்கு எதுக்கு எடுத்தாலும் பயம் தான் முன்னாடி வந்து நிக்குது” என்று புலம்பிக்கொண்டே பின் வாசலை நோக்கி
நகர்ந்தார்.
அப்பொழுது,
ஸ்வேதாவுடன் பாண்டி விளையாடிவிட்டு ஓடி வந்த யாழினி பாட்டியின் மீது எதிர்பாராத
விதமாக இடித்து விட்டாள்.
யாழினி,
“ஏய் கிழவி, ஒழுங்கா பார்த்து வர
மாட்டியா... கண்ணு என்ன பின்னாடியா இருக்கு”.
“அடி சின்ன கழுதை, பெரியவங்கன்ற
மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் என்னடி கிழவி அது, இதுன்னு கூப்பிடுற. இருடி உன்
அப்பன் கிட்டயே சொல்லி கொடுக்குறேன்”
என்று எகிறினார்.
“ஐயோ பாட்டி,
நான் தெரியாமல் சொல்லிட்டேன். நான் உன்னை மாதிரி இருக்கேன்னு
தான எல்லாரும் சொல்றாங்க. அப்போ எனக்கும் வாய் கொஞ்சம் பெருசா தான இருக்கும்.
இதெல்லாம் போய் அப்பா கிட்ட சொல்லிடாத. சாயங்காலம் யாருக்கும் தெரியாமல் உனக்கு
ஒரு லட்டு எடுத்துட்டு வந்து தரேன்”
என்றாள் தற்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் யாழினி.
ஆம்..!
யாழினியும் அவர்கள் ஊரின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு
படித்துக் கொண்டிருக்கிறாள்.
“அடியேய்! என்ன, என்னைய
ஏமாத்தலாம்னு பாக்குறியா... ஒரு லட்டுக்கு மயங்குற ஆள் நான் கிடையாது டி. ரெண்டு
லட்டு குடு அப்போ தான் உன் அப்பன் கிட்ட சொல்ல மாட்டேன்” என்றார் அவரும் சிறு பிள்ளையாக.
அவர்கள்
வீட்டில் யாழினிக்கும், மரகதம் பாட்டிக்கும் தான் எந்த விஷயத்திற்கும் ஒத்துப்
போகாமல் சண்டை வரும். ஆனாலும், அவர்கள் இருவரும் தான் கூட்டுக் களவாணித்தனமும்
ஒற்றுமையாக செய்வார்கள்.
சுப்பிரமணியன்
கூறியபடியே பக்கத்து ஊர் தலைவரிடம் திருவிழாவை பற்றி பேசினார். அவர்களும் இதற்கு
சம்மதம் தெரிவித்துவிட, ஊர் மக்களின் ஆசைப்படியே திருவிழா வெகு விமர்சையாக பெரிய
அளவில் கொண்டாடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி
திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக ஆரம்பமாகின. ஊர் மக்கள் அனைவரும் அவரவர் சொந்த
பந்தங்களை திருவிழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். வேலுச்சாமி தாத்தாவும் தன்
குடும்பத்துடன் ஆலோசித்தார். ஆனால், பாவம்..! அவர் ஆசை தான் நிறைவேறவில்லை.
நாட்கள்
வேகமாக நகர தொடங்கியது. பன்னிரெண்டாம் வகுப்பின் பரீட்சை முடிவிற்கான தேதியும்
வெளியிடப்பட்டது. ஒரு புறம், வெண்ணிலா தன் தேர்வு முடிவுகளுக்காக காத்துக்
கொண்டிருந்தாள்.
மறுபுறம்,
அவள் தந்தையும், மாமனும் சேர்ந்து திருமணத்தை எப்போது வைக்கலாம் என்று திருமண
தேதியை குறிக்க ஜோசியரை பார்க்க சென்றனர். ஜீவாவிற்கு வெண்ணிலா மேல்படிப்பு
படிப்பதில் எந்த வித பிரச்சனையும் கிடையாது.
ஆனால்,
வெண்ணிலா மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கின்றது என்பதே ஜீவாவிற்கு இன்று வரை
தெரியாமல் போனது தான் விதியின் விளையாட்டோ...!
ஜீவாவிற்கு
தெரிந்திருந்தாலாவது அவன் அவனுடைய அப்பாவிடம் பேசி அவள் படிக்க ஏதாவது ஏற்பாடு
செய்திருப்பான். அதற்கும் வாய்ப்பு அமையாமல் போனது.
அத்தை
மகள் தான் வெண்ணிலா என்றாலுமே ஜீவாவும், வெண்ணிலாவும் சிறு வயது முதலே பெரிதாக
பேசிக் கொள்ள மாட்டார்கள். நாளடைவில் ஜீவாவின் மனதிற்குள் வெண்ணிலாவின் மீது ஒரு
பிடித்தம் ஏற்பட்ட பொழுதும் கூட, அவன் வெண்ணிலாவிடம் அதை வெளிப்படுத்தவில்லை.
அதற்குள்
வீட்டில் உள்ள பெரியவர்களே, இவர்கள் இருவருக்கும் திருமண பேச்சு ஆரம்பித்து
விட்டதால் அவனுக்கு அவளுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையாமலே போய்விட்டது.
இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது.
பன்னிரண்டாம்
வகுப்பின் பொதுத் தேர்வுக்கான முடிவு வெளியிடப்படும் நாளும் வந்தது. அதில்,
வெண்ணிலா பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தாள்.
தேர்வு
முடிவு வெளியான நாட்களில் இருந்து மறுவாரம் அவளின் திருமண நாளும் குறிக்கப்பட்டு
இருந்தது . வெண்ணிலா இயல்பிலேயே மிருதுவானவள், யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள்.
அப்படிப்பட்டவள்,
அவள் தந்தையிடம் பேசுவதற்கு ஒன்றுக்கு இருமுறை யோசிப்பாள். தன் மேல் படிப்பு பற்றி தன் தந்தையிடம்
எப்படி கேட்பது என்று நினைத்தே கேட்காமல் விட்டு விட்டாள். இவள் கேட்டிருந்தாலும்,
அவர் அனுமதித்திருக்க மாட்டார் என்பது வேறு விஷயம்..
ஒரு
வழியாக திருமண நாளும் வந்தது. ஜீவாவிற்கும், வெண்ணிலாவிற்கும் நாளை திருமணம் என்ற
நிலையில், யார் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ இல்லையோ, இந்த திருமணத்தில்
இருவருக்கு மட்டும் மிக்க மகிழ்ச்சி.
அது
வேறு யாரும் அல்ல... யாழினியும், மரகதம் பாட்டியும் தான்.
ஏனென்றால்,
திருமணம் என்றால் உணவு வகைகள் ஏராளமாக கிடைக்குமே.. அதனால் தான் இருவருமே எதில்
ஒத்துப் போகிறார்களோ, இல்லையோ... சாப்பாடு விஷயத்தில் நன்றாக ஒத்துப் போவார்கள்.
இருவரும்
ஒன்றாக சேர்ந்து இரவு விருந்துக்காக தயார்படுத்தி வைத்திருந்த வடை சட்டிக்குள்
கையை விட்டு இரண்டு வடையை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து தனியாக வைத்து
சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இதை
எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கயல்விழியோ, “என்ன பாட்டி இது, நீங்களும் சின்ன பிள்ளை மாதிரி பண்ணிட்டு
இருக்கீங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பார்த்தா என்ன நினைப்பாங்க நம்மை பத்தி...
அவ தான் சின்ன பொண்ணு நீங்க தான் அவளுக்கு புத்திமதி சொல்லனும்னு பாத்தா...
நீங்களும் அவளோட சேர்ந்து இப்படி பண்ணிட்டு இருக்கீங்களே” என்று இருவருக்கும் சேர்த்து வசைப்பாடிக் கொண்டிருந்தாள்.
தற்பொழுது
ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் கயல்விழி...!
கயல்
விழியை இங்கே எதிர்பார்த்திராத பாட்டியும், யாழினியும் திருடனுக்கு தேள்
கொட்டினார் போல் என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு
நின்றனர்.
“என் பேத்திக்கு எம்புட்டு அறிவு
பாத்தியா டி சின்ன குட்டி... நீ தான் இப்படி புத்தி இல்லாமல் சுத்திக்கிட்டு
திரியுற. பாரு... கயல்விழி எவ்வளவு பொறுப்பா நடந்துக்குறானு”.
பாட்டி
கயல்விழிக்கு ஐஸ் வைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தார். இவர்கள் முயற்சியை எல்லாம் பார்த்து
ஏமார்ந்து விட்டாள் அது கயல் விழி இல்லையே...!
ஆம்...!
கயல்விழி சிறு வயது முதலே துடுக்குத்தனமானவள்.
வெண்ணிலாவை
போல் அமைதியான குணம் கிடையாது. நியாயம் என்று பட்டால் கொஞ்சம் அதிகப்படியாகக் கூட
வாய் பேசுவாள். ஆனால், அந்த பேச்சு எல்லாம் அவள் அன்னையுடன் நின்றுவிடும்.
இதுவரை
அவளின் தந்தையை இவளின் பேச்சு எட்டியதில்லை. அவரை பொருத்தமட்டும், வெண்ணிலாவைப்
போல் தான் கயல்விழியும், யாழினியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அவரின்
எண்ணத்தை தலைகீழாக கயல்விழி மாற்றப் போகிறாள் என்பதை அவர் அறிந்திருக்க
வாய்ப்பில்லை...!
பார்க்கலாம் காலப்போக்கில் கயல்விழியும் வெண்ணிலாவை
போல் தன் வாழ்க்கையை தன் தந்தையின் கையில் ஒப்படைக்கிறாளா... இல்லை, தன் கையில்
தக்க வைத்துக் கொள்கிறாராளா என்று...!
கயல்விழி,
“பாட்டி, இந்த ஐஸ் வைக்கிற வேலை
எல்லாம் வேண்டாம். அம்மா உங்களை ரொம்ப நேரமா அங்க தேடிக்கிட்டு இருக்காங்க. நீங்க
என்னடானா சின்ன பிள்ளை மாதிரி யாழினி கூட சேர்ந்துகிட்டு வடை எடுத்து
சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க. இங்க நடந்துட்டு இருக்குறது உங்க பேத்திக் கல்யாணம்
தான் ஞாபகம் இருக்கா இல்லையா... வாங்க, அத்தை வேற உங்ககிட்ட என்னமோ பேசணுமாம்” என்று அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
“ஆள் தான் பாக்க அரக்காப்படி சைஸ்ல
இருக்கா... வாயை பாரு, நல்லா பெரிய மனுஷி மாதிரி என்ன பேச்சு பேசுறா... அப்படியே,
அவளோட அப்பன் புத்தி வந்து இருக்கு”
என்று புலம்பிக்கொண்டே அவளின் பின்னால் சென்றார் மரகதம் பாட்டி.
பாட்டி
சென்றவுடன் தனக்கு எக்ஸ்ட்ராவாக கிடைத்த பாட்டியின் வடையையும் சேர்த்து எடுத்துக்
கொண்டு, ஸ்வேதாவுடன் இணைந்து சாப்பிடுவதற்காக ஸ்வேதாவை தேடி சென்று விட்டாள்
யாழினி. தாத்தா தான் பாவமாக சுற்றிக் கொண்டிருந்தார்.
அப்படி
தாத்தா என்ன தான் அவர் குடும்பத்துடன் சேர்ந்து கலந்து ஆலோசித்தார்...
எதற்காக
வருத்தப்படுகிறார்...
அவர் செய்த தவறு தான் என்ன...
கருத்துகள்
கருத்துரையிடுக