அவனதிகாரம் - 4

 

 

அதிகாரம் – 4

 

‘’கெட்டி மேளம்.... கெட்டி மேளம்... என்னும் ஐயரின் சத்தம் உறக்க கேட்க...

 

மேல தாளங்கள் இசை முழங்க...

 

உறவினர்கள், நண்பர்கள் படை சூழ...

 

தன் மாமன் மகள் வெண்ணிலாவின் கழுத்தில் மங்கள நாணை மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரி பாதியாக ஆக்கிக் கொண்டான் ஜீவா என்னும் ஜீவானந்தம்..!

 

தன்னவன் முன் தலை குனிந்து என்றும் வாழ்க்கையில் உனக்கு சரி பாதியாக இருப்பேன் என்னும் விதமாக அவன் அணிவித்த மங்கள நாணை ஏற்றுக் கொண்டாள் வெண்ணிலா..!

 

வெண்ணிலாவின் தந்தை, பெருமையுடனும், வெண்ணிலாவின் தாய், கண்களில் மின்னும் ஆனந்த கண்ணீருடனும், மரகதம் பாட்டி, கண்ணீருடன் கூடிய பூரிப்புடனும், கயல்விழியும், யாழினியும், ஸ்வேதாவும் பெரும் மகிழ்ச்சியுடனும், ஜீவாவின் தாயும், தந்தையும் மனநிறைவுடனும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

ஒருவாறு உறவினர்கள், பெரியோர்களின் நல்லாசியுடனும், நண்பர்களின் வாழ்த்துக்களுடனும், கடவுளின் ஆசியுடனும் ஜீவா, வெண்ணிலாவின் திருமணம் இனிதே நடைபெற்றது..!

 

ஒவ்வொரு பெண்ணுக்கும், தன் வாழ்வின் முக்கிய  தருணம் இது. ஏன், அவளின் தலையெழுத்தையே மாற்றும் தருணம் என்று கூட கூறலாம்.

 

தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டும், தன் பெற்றோர்களை விட்டும், உடன் பிறந்தவர்களை விட்டும் , தான் பழகிய இடங்களை விட்டும், வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டும்.

 

புதிய மனிதர்களுடன் பழக வேண்டும், புதிய உறவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் அல்லவே... ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் இப்படி ஒரு தருணத்தை கடந்து வந்து தான் ஆக வேண்டும்.

 

அப்படி ஒரு தருணத்தில் தான் வெண்ணிலா தற்பொழுது இருக்கிறாள். அதுவரை அவள் மாமன் மகனும் அதே ஊர் தான் என்பதினால் வேறு ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் அவளிற்கு ஏற்படவில்லை.

 

அந்த அளவிற்கு அவளிற்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. திருமணம் முடிந்த பின் அவரவர் பெற்றோர்களிடமும், பெரியோர்களிடமும் ஆசிகளை வாங்கிக் கொண்டு மணமக்கள் மணமகன் வீடு நோக்கி புறப்பட்டனர்.

 

அங்கே செய்ய வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு, மணமகள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அந்த ஊரின் வழக்கப்படி முதல் நாள் இரவு பெண் வீட்டில் தான் தங்க வேண்டும் என்பது சம்பிரதாயம். பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் இருவருக்கும் பால், பழம் கொடுத்து, பூஜை செய்து என சில சம்பிரதாயங்களை மேற்கொண்டனர்.

 

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு மரகதம் பாட்டி, ஆத்தா லட்சுமி, தம்பியும், வெண்ணிலாவும் பாவம் எம்புட்டு நேரம் தான் நின்னுக்கிட்டே கிடப்பாங்க. கால் கடுக்க போகுது கொஞ்ச நேரம் ரூம்ல போய் இருக்க சொல்லு என்றார்.

 

சரிங்க அத்தை.

 

சுப்ரமணியன், யாழினி, ஜீவா மாமாவை வெண்ணிலா அக்கா ரூம்ல போய் தங்க வச்சுட்டு வா மா என்றார் அங்கே தூக்க கலக்கத்தில் நின்று கொண்டிருந்த யாழினியிடம்.

 

தந்தையின் குரல் தன் அருகில் கேட்டவுடன் யாழினிக்கு தூக்கம் கூட எங்கோ பறந்து போய்விட்டது பயத்தில்.

 

சரி பா, வாங்க மாமா போகலாம்என்றாள் அங்கு நின்று கொண்டிருந்த ஜீவாவை பார்த்து.

 

வெண்ணிலாவின் தாய் வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு , கயல்விழியின் அறை நோக்கி நகர்ந்தார்.

 

லட்சுமி வெண்ணிலாவிடம், தங்கம் கொஞ்சம் நேரம் இங்கேயே இருடா வந்துடுறேன் என்று ரூமை விட்டு வெளியேறினார்.

 

வெண்ணிலா, ஜீவாவை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தில்  நாணத்தோடு அமர்ந்திருந்தாள்.

 

ஜீவாவிற்கோ, எப்பொழுது தன் காதல் மனைவியை பார்ப்போம் என்ற மனநிலையில் அமர்ந்திருந்தான்.

 

யாழினி அறை வந்து சேரும் வரை மாமா உங்களுக்கு அது தெரியுமா, மாமா உங்களுக்கு இது தெரியுமா என்று அவனை கேள்வி கேட்டே ஒரு வழி செய்து விட்டாள்.

 

அவனும் தன் தங்கையிடம் பேசுவதைப் போல் யாழினியிடம் இயல்பாக பேசிக்கொண்டு வந்தான். ஆனால், கயல்விழியிடம் அந்த இயல்பு தானாக அவனிற்கு வரவில்லை. யாழினியை பார்க்கும் போது அவனுக்கு தன் தங்கையை போல் ஒரு உணர்வு தானாக வந்தது.

 

யாழினி எந்த ஆண்களிடமும் சாதாரணமாக பேசிவிட மாட்டாள். சிறு வயதிலிருந்து அவள் வளர்ந்த விதம் அப்படி. அவளின் தந்தை எப்பொழுதும் இவளிடம் அன்பாய் பேசியது கிடையாது.

 

யாழினி ஒரு வித பயத்துடனே அவரிடம் பேசுவாள். ஆனால், ஜீவாவிடம் ஸ்வேதா பேசுவதை பார்த்து பழகியவளிற்கு அவனிடம் பேசுவது அவ்வளவு சிரமமாக இல்லை.

 

வெண்ணிலாவிற்கு அவளின் தோழிகள் புது புடவை அணியக் கொடுத்து அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது லட்சுமி, இந்தாங்க மா, இந்த பூவை வெண்ணிலாவுக்கு வச்சு விடுங்க என்று கொடுத்தார்.

 

மரகதம் பாட்டியோ, இந்தாங்கடி பிள்ளைங்களா... ரொம்ப பவுடர் போட்டு என் பேத்தி அழகை கெடுத்துடாதீங்க. அவ பிறப்பிலேயே பேரழகி தான்... என்னாட்டம்.... என்றார் அவரின் பெருமையையும் சேர்த்து பாடிக் கொண்டு.

 

அப்போது யாழினி, என்ன பாட்டி நீ... உன் கூட போய் என் அக்காவை சேர்த்து சொல்ற. என் அக்கா தான் அழகு..! நீ நல்லா சோளக்கொல்ல பொம்மை மாதிரி இருக்க என்று வாரினாள்.

 

ஆரம்பிச்சிட்டீங்களா... பாட்டியும், பேத்தியும்.... இப்போதைக்கு இது முடியாது என்று கயல்விழி புலம்பினாள்.

 

இவர்கள் இருவரையும் அப்பொழுது தான் கவனித்த மரகதம் பாட்டி, ஏன்டி சின்ன குட்டிங்களா.... உங்களை யார் இங்கெல்லாம் வர சொன்னது. இன்னும் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்கீங்க போங்க... போய் தூங்குற வழியை பாருங்க என்று விரட்டினார்.

 

ஐயோ பாட்டி, நீங்க எல்லாம் இருக்குறதே என்னோட ரூம்ல தான். நான் எப்படி தூங்குறது. நீங்க எல்லாம் போனா தான நான் தூங்க முடியும் என்று கூறினாள் கயல்விழி.

 

உடனே லட்சுமி இவர்களை மறந்து விட்டோமே என்று எண்ணியவர், இன்னைக்கு ஒரு நாள் யாழினி கூடவே படுத்துக்கோ டா கயல்... என்று அங்கிருந்து அவ்விருவரையும் கிளப்பி விட்டார்.

 

சிறுபிள்ளை யாழினியோ, அம்மா, அக்காவுக்கு மட்டும் அலங்காரம் எல்லாம் பண்ணுறீங்க... எங்களை மட்டும் தூங்க சொல்றீங்க. நாங்களும் புது துணி போட்டுக்கிட்டு அக்கா கூட இருக்கோமே என்று வெகுளியாக கேட்டாள்.

 

ஆமா டி இப்போ இது ஒன்னு தான் குறைச்சல். ரெண்டு நாளா புது துணி போட்டுக்கிட்டு ஊரை சுத்தி வந்தது பத்தலையா... இப்போ வேற போட்டுக்கணுமா போய் தூங்கு போ என்று மரகதம் பாட்டி விரட்டினார்.

 

உனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்குல்ல. அதனால் கயல்விழி அக்கா கூட போய் படுத்து தூங்கு என்று லட்சுமி கூறி இருவரையும் யாழினி அறைக்கு அனுப்பி வைத்தார்.

 

அறைக்குள் நுழைந்த யாழினி கயல்விழியிடம், அக்கா, விசேஷம் எல்லாம் தான் முடிஞ்சிருச்சே, இப்போ எதுக்காக வெண்ணிலா அக்காவுக்கு அலங்காரம் பண்ணிகிட்டு இருக்காங்க என்று தன் சந்தேகத்தை கேட்டாள்.

 

இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாத கயல்விழி, தெரியல யாழினி, அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சில இனிமே தினமும் இப்படி தான் அலங்காரம் பண்ணிக்குவாங்க போலருக்கு என்றாள்.

 

உடனே யாழினி, அப்போ அம்மாவுக்கும், பாட்டிக்கும் கூட தான் கல்யாணம் ஆயிடுச்சு, அவங்க எல்லாம் தினமும் இப்படி அலங்காரம் பண்ணிக்கலையே... என்று மீண்டும் துடுக்குத்தனமாக தன் சந்தேகத்தை கேட்டாள்.

 

இவளின் கேள்விக்கெல்லாம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் கயல்விழிக்கு தான் விழி பிதுங்கியது. அவளும் சிறு பெண் தானே.. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு மட்டும் வேறு என்ன தெரியும்.

 

அதெல்லாம் எனக்கு தெரியாது யாழினி. உனக்கு ஏதாவது கேட்கணும்னா போய் பாட்டி கிட்டயே கேட்டுக்கோ என்றாள் இவளிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு.

 

அய்யய்யோ! அந்த கிழவி கிட்ட போய் யாரு பேசுறது. அவ்வளவு தான், என்னை அப்பா கிட்ட போட்டுக் கொடுத்துடும்.

 

யாழினி..! என்ன பேச்சு இது கிழவி, அது இதுன்னு இப்படிலாம் பேசக்கூடாதுன்னு உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லிருக்கேன்ல. பெரியவங்களுக்கு எப்போதுமே மரியாதை கொடுத்து தான் பேசணும் என்றாள் கோபமாக.

 

சரி அக்கா, சாரி இனிமே இப்படி பேச மாட்டேன் என்றாள் வருத்தத்துடன்.

 

பிறகு, இருவரும் படுத்து உறங்கி விட்டனர்.

 

பாட்டி, லட்சுமி, வெண்ணிலாவை சாமி அறைக்கு கூட்டிட்டு போய் விளக்கேத்தி சாமி கும்பிட்டு ரூமுக்கு அழைச்சிட்டு போ மா எனக்கு அசதியா இருக்கு நான் போய் படுக்கேன் என்று கூறிவிட்டு படுக்க சென்று விட்டார்.

 

சரி அத்த நான் பார்த்துக்கிறேன் வா வெண்ணிலா... என்று பூஜை அறையை நோக்கி அழைத்து சென்றார்.

 

வெண்ணிலா இன்னையிலிருந்து உன்னோட வாழ்க்கை புதுசா மாறப் போகுது. இவளோ நாள் நீ இருந்த மாதிரி, இனிமே இருக்க முடியாது. நிறைய பொறுப்பு உனக்கு வந்திடுச்சு. இனிமே, ஜிவாவோட குடும்பம் தான் உன் குடும்பம். அங்க தான் உன்னோட வாழ்க்கை. நீ விவரமான பொண்ணு தான் நான் சொல்ல வேண்டியது இல்ல. பாத்து நடந்தக்கோடா.. என்றார்.

 

வெண்ணிலாவிற்கு, என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. அதற்கு பதில் கண்களில் கண்ணீர் குளம் கட்டி விட்டது.

 

என்னடா, என்ன ஆச்சு? என பதறிவிட்டார் மகளின் கண்களில் கண்ணீரை பார்த்ததும்.

 

அப்போ, இனிமே நான் இந்த வீட்டில் இருக்க முடியாதா மா..? இது என்னோட குடும்பம் இல்லையா..? என்றாள் வெண்ணிலா அழுதுவிடும் குரலில்.

 

அப்படி எல்லாம் இல்ல டா. எப்பவுமே நீ எங்களோட பொண்ணு தான்.. இது உன் வீடு தான் என்றார் ஆறுதலாக, வெண்ணிலாவிடம் இதற்கு பதில் இல்லை அமைதி மட்டுமே..

 

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் கடந்து வரவேண்டிய கடினமான தருணம் இது. தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு செல்வது. ஆனாலும், இது மாற்ற முடியாத ஒன்று அல்லவா..

 

நன்கு வேரூன்றிய மரத்தை பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது போன்றது.. இது ஒரு பெண்ணின் வாழ்வில் வரமா அல்லது சாபமா என்று தெரியாது.. ஆனால், இது தான் நடைமுறை..

 

வெண்ணிலா தன் மனதில் வைத்திருக்கும் ஆசையை ஜீவாவிடம் வெளிப்படுத்துவாளா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5