அவனதிகாரம் - 10
அதிகாரம்
– 10
வீட்டினுள்
நுழைந்ததும் நேராக தங்கள் அறை நோக்கி சென்றார் வள்ளியம்மை. அங்கே கிருஷ்ணமூர்த்தி
தாங்கள் சிறு வயது மீராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு
பார்த்துக் கொண்டிருந்தார்.
வள்ளியம்மை
அவரின் தோளில் கை வைத்து, “என்னங்க, ஏன் ஒரு மாதிரி
இருக்கீங்க.. என்ன ஆச்சு?” என்று கேட்டார்.
அதற்கு
கிருஷ்ணமூர்த்தி, “ஒன்னும் இல்ல வள்ளி, மீரா நம்மளை
விட்டு போயிடுவாளா?” என்று கேட்டார்.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க...
நம்ம பொண்ணு நம்மளை விட்டுட்டு எங்க போக போறா.. நம்மகிட்ட இருந்து அவளை யாராலும்
பிரிக்க முடியாது” என்று அவரை சமாதானப்படுத்தினார்.
“எனக்கு அப்படி தோணல வள்ளி.. மனசு
ஒரு மாதிரி பாரமா இருக்கு” என்று வருத்தமாக கூறினார்.
“நீங்க நினைக்கிற மாதிரிலாம்
எதுவும் நடக்காது. எல்லாமே நல்ல படியா தான் நடக்கும்” என்று கூறி சற்று இடைவெளி விட்டு, “நான் வேலு மாமாவை பார்த்தேன்” என்றார் அவரின் முகத்தை பார்த்து.
‘வேலுச்சாமி’ என்னும் பெயரை கேட்டவுடன்
கிருஷ்ணமூர்த்தி வெடுக்கென நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தார்.
“ஆமாங்க.. வேலு மாமா நம்ம
வீட்டுக்கு வந்திருந்தாங்க”.
கிருஷ்ணமூர்த்திக்கு
படபடவென வந்துவிட்டது வள்ளியம்மை கூறியதை கேட்டவுடன்.
நாற்காலியில்
இருந்து எழுந்து கொண்டவர், “என்ன சொல்ற வள்ளி? வேலு இங்க
வந்தானா? மீராவை பார்த்துட்டானா? மீரா கிட்ட பேசுனானா? மீராவுக்கு வேலு யாருன்னு
தெரிஞ்சிடுச்சா? அப்போ இனிமே மீரா நம்ம கூட இருக்க மாட்டாளா... நம்மளை விட்டுட்டு
போயிடுவாளா? நமக்குன்னு இனிமே யாருமே கிடையாதா.. நாம ரெண்டு பேரும் கடைசி
வரைக்கும் ஒத்தையில் தான் கிடந்து சாகனுமா” என்று படபடவென பேசிக்கொண்டே போனார்.
அவருக்கு
ஆறுதலாக அவரின் கையை பிடித்த வள்ளியம்மை, “கொஞ்சம் பொறுமையா இருங்க.. நான் சொல்றதை கேளுங்க வேலு மாமா
வந்தது உண்மை தான். ஆனா, மீராவுக்கு அவரை யாருன்னு தெரியாது. அதுக்குள்ள நான்
பார்த்துட்டேன். நான் போய் மாமா கிட்ட பேசி, இனிமே இங்க வராதீங்கன்னு சொல்லி
அனுப்பி வச்சிட்டேன். நீங்க பயப்படுற போல எதுவும் நடக்காதுங்க.. மீரா நம்ம பொண்ணு,
நமக்காக கிடைச்ச பொக்கிஷம்.. நம்மளை விட்டுட்டு அவ எங்கனயும் போக மாட்டா” என்று அவரை சமாதானப்படுத்தினார்.
என்ன தான்
சமாதானம் செய்தாலும், கிருஷ்ணமூர்த்தியின் முகம் தெளிவடையவில்லை. அவருக்கு
சமாதானம் கூறினாலும், வள்ளியம்மைக்குமே சற்று பயமாக தான் இருந்தது.
எங்கே
வேலுச்சாமி மீராவை தனிமையில் சந்தித்து அனைத்து உண்மையையும் கூறி விடுவாரோ... மீரா
அவர்களுடன் சென்று விடுவாளோ என்று தோன்றியது. இங்கே இவர்களின் மனநிலை இவ்வாறாக
இருக்க.
அங்கே
வேலுச்சாமியோ தான் கண்ட காட்சியை நம்ப முடியாமலும், நம்பாமல் இருக்க முடியாமலும்
மன பாரத்துடன் தன் சொந்த ஊரை நோக்கி பயணம் மேற்கொண்டார்.
வீட்டிற்குள்
நுழைந்த வேலுச்சாமியை அவரின் பேத்தி வெண்ணிலா, “தாத்தா” என்று ஓடி வந்து கால்களை
கட்டிக்கொண்டாள்.
வேலுச்சாமிக்கு
பேத்தி பிறந்ததும் தன் மகளே திரும்ப கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அவர் மனதில்
ஏற்பட்டது. சுப்பிரமணியனுக்கு மூன்றும் பெண் குழந்தையாய் பிறந்ததை எண்ணி ஒருநாளும்
வேலுச்சாமி வருந்தியதில்லை.
அவர்
தொலைத்த மகளை இறைவன் தன் மகனுக்கு மூன்று பெண் குழந்தைகளை கொடுத்து ஈடு
செய்திருக்கிறான் என்று அவ்வப்போது நினைத்து நிம்மதி அடைந்து கொள்வார்.
‘பேத்திகள்’ என்றால் அவருக்கு கொள்ளை பிரியம்.
பேத்தியை பார்த்ததும் அவருக்கு அனைத்தும் மறந்து போனது. ஆனாலும், அவரின் முக
வாட்டத்தை கண்ட மரகதம், “என்னங்க ரொம்ப சோர்வா
இருக்கீங்களே.. கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுங்க” என்று கூறினார்.
அதற்கு
வேலுச்சாமி எந்த ஒரு பதிலும் கூறாமல் தங்கள் அறையை நோக்கி சென்றார். செல்லும்
அவரையே குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த மரகதம் அவருக்காக காபி எடுத்துக்கொண்டு
அறையை நோக்கி சென்றார். அப்பொழுது கை கால்களை கூட கழுவாமல் கட்டிலின் மேலே
அமர்ந்திருந்த வேலுச்சாமியை கண்டார்.
“ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?
என்ன ஆச்சு” என்று வினவினார்.
“ஏன் மரகதம், காணாமல் போன நம்ம
பொண்ணு திரும்ப கிடைச்சா நீ என்ன பண்ணுவ?” என்று கேட்டார்.
“இப்போ எதுக்குங்க அதெல்லாம் பத்தி
பேசிக்கிட்டு.. நடக்குறதை பத்தி பாப்போமே.. திரும்பவும் நம்ம பொண்ணு ஞாபகம்
வந்திடுச்சா உங்களுக்கு.. இப்போ தான் கொஞ்ச நாளா பழைய மாதிரி இருக்கீங்க..
மறுபடியும் பழசை பத்தி பேச வேண்டாம். நடந்தது நடந்து போச்சு இனிமே நம்ம கையில்
என்ன இருக்கு. நடந்து முடிஞ்சு 30 வருஷம் ஆயிடுச்சு.. இனிமே இதை பேசி என்ன நடக்க
போகுது. நம்ம தலையில் என்ன எழுதி இருக்கோ அது படி தான எல்லாம் நடக்கும் விடுங்க..
எங்க இருந்தாலும், வள்ளி நம்ம புள்ளையை நல்லா பார்த்துக்கிடுவா” என்று கூறினார்.
என்ன
தான் சமாதானமாக கூறினாலும், அவர் மன கவலையை அவரின் முக வாட்டமே கூறியது.
“மீராவை பார்த்தேன்” என்றார் வேலுச்சாமி அமைதியாக.
“எந்த மீரா? எங்க பார்த்தீங்க?” என்று சந்தேகமாக கேட்டார் மரகதம்.
மரகதத்தின்
இரு கைகளையும் பிடித்துக் கொண்ட வேலுச்சாமி முதல் முறையாக கண் கலங்கினார், “நம்ம பொண்ணு ‘மீரா’...!” என்று அவரின் முகத்தை பார்த்து கூறினார் வேலுச்சாமி.
இதுவரை
இவ்வாறு தன் கணவனை கண் கலங்கி பார்த்திடாத மரகதம் செய்வதறியாது, “என்ன சொல்றீங்க.. நம்ம பொண்ணா? வள்ளியை
பார்த்தீங்களா, எங்க பார்த்தீங்க? கிருஷ்ணமூர்த்தி நல்லா இருக்காரா? ஒன்னும்
பிரச்சனை இல்லையே? புள்ள எப்படி இருக்கு?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார்.
அவரின்
எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் வேலுச்சாமி அமைதியாக தரையை பார்த்துக் கொண்டு
அமர்ந்திருந்தார்.
மரகதம்,
“என்னங்க நான் பாட்டுக்கு
பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு அமைதியா இருக்கீங்களே.. எனக்கு
சந்தோஷத்தில் என்ன பண்றதுன்னு தெரியல.. சரி வாங்க, சுப்ரமணி கிட்ட இந்த விஷயத்த
சொல்லுவோம். அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். நீங்க நான் சுப்ரமணி மூணு பேரும் போய்
அவங்களை பார்த்துட்டு வந்துடுவோம்”
என்று அழைத்தார்.
அதற்கு
வேலுச்சாமி, “எங்க போக சொல்ற மரகதம்? அவங்க
ரெண்டு பேரும் நம்ம நினைச்ச மாதிரி கிடையாது. இனிமே, என்னை அங்க வரக்கூடாதுன்னு
சொல்லிட்டாங்க.. அவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. ஏன், நான் அவங்களை
பார்த்த விஷயத்தை கூட உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க”.
இவர்
கூறுவதைக் கேட்ட மரகதம் செயலற்று நின்றார், “என்னங்க.. என்ன சொல்றீங்க” என்றார் அதிர்ச்சி மாறாத குரலில்.
“ஆமா மரகதம், அவங்க ஏன் இங்க
இருந்து போனாங்கன்னு நான் கேட்டேன். அதுக்கு என்ன, என்னமோ பேசுறாங்க.. இப்போ தான்
நாங்க நிம்மதியா இருக்கோம். எங்க நிம்மதியை கெடுத்துடாதீங்க.. அப்படி இப்படினு
என்னென்னமோ சொல்றாங்க. அதுக்கும் மேல வள்ளி நான் அவங்களை பார்த்த விஷயத்தை
உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டா.. இனிமே, அவங்களை தேடி அவங்க
வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டா”
என்று கவலையாக கூறினார்.
“என்னங்க கிறுக்கா புடிச்சு போச்சு
அவளுக்கு.. ஏன் இப்படி எல்லாம் பேசுறா.. நம்ம என்ன பண்ணோம்?” என்று கோபமாக கேட்டார் மரகதம்.
“நாங்க என்ன பண்ணோம்.. ஏன் இப்படி
கோபமா பேசுறனு தான் நானும் கேட்டேன். நீங்க எதுவும் பண்ணல, இனிமேலும் எதுவும்
பண்ணிட கூடாதுன்னு சொல்றாங்க மா.. எனக்கு ஒண்ணுமே புரியல” என்றார் வருத்தமாக.
இவரின்
வார்த்தைகள் எதுவும் மரகதத்தின் காதில் விழவில்லை. பெற்ற மனம் தன் பிள்ளையை
பார்க்க துடித்தது.
“சரி கிளம்புங்க... ஒரு எட்டு நம்ம
போய் பார்த்து என்ன பிரச்சனைனு பேசிட்டு வந்துடுவோம். எனக்கும் நம்ம புள்ளயை
பார்க்கணும் போல இருக்குங்க” என்றார் கண்களில் மின்னும்
ஆசையுடன்.
இருவரும்
சென்று சுப்பிரமணியிடம் விஷயத்தை கூறி, அவரையும் அழைத்துக் கொண்டு சென்னையை நோக்கி
புறப்பட்டனர். மறுநாள் காலையிலே முதல் வேலையாக சென்னையில் மிகப்பெரிய வீட்டின்
வாசல் முன் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது
கதவை திறந்த வள்ளி இவர்களை சற்றும் எதிர்பாராது வெளிவந்தார். வெளியே இவர்களை
கண்டதும் வள்ளி அப்படியே சிலையாக நின்று விட்டார்.
மரகதம்
தான் வள்ளியிடம் சென்று, “என்ன வள்ளி, எப்படி இருக்க? மாமா
கிட்ட என்னவெல்லாமோ பேசி இருக்கீங்க. நாங்க என்ன டி பண்ணோம். உனக்கு புள்ள
இல்லன்றதுக்காக என் புள்ளையை தூக்கிக் கொடுத்தேனே அதான் நான் பண்ண பாவமா” என்று கண்ணீருடன் கேட்டார்.
அதற்கு
மேல் வள்ளியால் கட்டுப்படுத்த முடியவில்லை. மரகதத்தை கட்டி அணைத்துக் கொண்டு தன்
இத்தனை வருட ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்.
ஆம்!
கிருஷ்ணமூர்த்தியும், வள்ளியம்மையும் அன்று குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு
வந்தவுடன், கிருஷ்ணமூர்த்தி வள்ளியிடம், “வள்ளி இனிமே நாம இந்த ஊரில் இருக்க வேண்டாம். நமக்கு இவங்க
யாருமே வேண்டாம். நம்ம எங்கேயாவது போயிடலாம்” என்று கூறினார்.
அவர்
கூறுவதை கேட்டு அதிர்ந்த வள்ளியம்மை, “என்னங்க
என்ன பேசுறீங்க நீங்க.. இப்போ தான் அக்கா கிட்ட இருந்து குழந்தையை வாங்கிட்டு
வந்து இருக்கோம். அதுக்குள்ள ஊரை விட்டு போகலாம்னு சொல்றீங்களே.. நமக்காக அக்கா
குழந்தையவே தூக்கி கொடுத்திருக்கா.. அவளை ஏமாத்திட்டு அவங்க உறவே வேண்டாம்னு நாம
எப்படி போக முடியும்” என்று குழப்பமாக கேட்டார்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது வள்ளி..
இது என் குழந்தை.. எனக்கு மட்டுமான குழந்தை.. என்னுடைய முதல் உறவு.. இதை யார்
கூடவும் பங்கு போட்டுக்க நான் விரும்பல.. இதே ஊரில் நம்ம இருந்தா என்னைக்கா
இருந்தாலும் நம்ம புள்ளைக்கு அவங்க தான் பெத்தவங்கனு தெரிஞ்சுடும். அவங்களுக்கும்
நம்ம பெத்த புள்ள தான்ற உரிமை இருக்கும். அதெல்லாம் சரி வராது.. இவ என் புள்ள..
எனக்கு மட்டும் தான் அவ மேல எல்லா உரிமையும் இருக்கு. எனக்கு கிடைச்ச பொக்கிஷம் அவ..
யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். நம்ம இங்க இருந்து போயிடலாம்” என்று மீண்டும் மீண்டும் அதையே கூறினார்.
ஒரு
கட்டத்திற்கு மேல் அவரை சமாளிக்க முடியாத வள்ளி, சரி என்று அவருடன்
கிளம்பிவிட்டார். சிறிது காலம் கழித்து அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து
வரலாம் என்ற எண்ணத்துடன் அவருடன் புறப்பட்டார் வள்ளி.
ஆனால்,
30 வருடங்கள் கடந்தும் வள்ளியால் தன் கணவரின் மனதை மாற்ற முடியவில்லை. அவரின்
மனதில் சிறு வயது முதல் அவர் இழந்த பாசம், உறவு அவரை வெகுவாக பாதித்திருந்தது.
எங்கே
மீராவும் தன்னை விட்டுப் போய் விடுவாளோ, தனக்கென்று யாரும் இல்லாமல் ஆகிவிடுமோ
என்ற பயத்தில் அவர் திரும்ப அந்த ஊர் பக்கமே செல்ல மாட்டேன் என்று கூறி
சென்னையிலேயே ஜவுளிக்கடை ஒன்றை ஆரம்பித்து இன்று அதை பல மடங்காக பெருக்கி நல்ல
முறையில் தொழில் செய்து வருகிறார்.
வீட்டிற்கு
வந்த வேலுச்சாமியும், மரகதமும் மீராவிடம் உண்மையை கூறுவார்களா...?
சுப்பிரமணியன்
தன் தங்கையை கண்டதும் அவரின் உணர்வு என்னவாக இருக்கும்...?
கருத்துகள்
கருத்துரையிடுக