அவனதிகாரம் - 11

 

 

அதிகாரம் – 11

 

அந்த பெரிய ஹாலில் நிசப்தம் மட்டுமே நிலவியிருந்தது. அங்கிருந்தவர்கள் யாரின் முகத்திலும் தெளிவு காணப்படவில்லை. அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

 

வேலுச்சாமி பெரும் குழப்பத்தில் இருந்தார். ஏனென்றால், நேற்று அவர் பார்த்த வள்ளிக்கும் இன்று அவர் பார்க்கும் வள்ளிக்கும் எவ்வளவு வேறுபாடு என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அமர்ந்திருந்தார்.

 

மரகதமோ, தன் மகளை எப்போது பார்ப்போம் என்ற ஆவலில் கேள்வியாக தன் தங்கையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

சுப்பிரமணி சிறுவயதில் பாசமாக சித்தி சித்தி என்று சுற்றிக்கொண்டு இருந்தாலும், இப்பொழுது வளர்ந்து பெரிய ஆண் மகனாக இருக்கும் அவருக்கு இந்த உறவு புதிய உறவாக தான் தெரிந்தது. எனவே, பேச சற்று தயக்கமாக அமர்ந்திருந்தார்.

 

வள்ளியம்மையின் மனநிலையோ இவர்கள் அனைவருக்கும் மேல் வேறு விதமாக இருந்தது. ஒரு வித பதட்டத்துடனும், மகிழ்ச்சியுடனும் அமர்ந்திருந்தார்.

 

தன் அக்காவை பார்த்ததும் கட்டி அணைத்துக் கொண்டு அழுத வள்ளியம்மை அனைவரையும் உள்ளே வருமாறு அழைத்து அமர வைத்தார். அப்பொழுது மீரா தன் மகனை பள்ளியில் விடுவதற்காக பாடசாலை சென்று இருந்ததால் அவளுக்கு இங்கு நடக்கும் விஷயம் தெரியவில்லை.

 

கிருஷ்ணமூர்த்தியும் அவசர வேலையாக அவர்கள் ஜவுளிக்கடைக்கு சென்று இருந்தார். எப்பொழுது வேண்டுமானாலும் வீடு திரும்புவார் என்ற பதட்டம் வள்ளியம்மையின் முகத்தில் தெரிந்தது.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தாலும், பேச்சுவார்த்தை எதுவும் இன்றி அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.

 

மரகதமே அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு, என்ன ஆச்சு வள்ளி, இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க.. ஏன் நம்ம ஊரை விட்டு வந்தீங்க என்று பேச்சை ஆரம்பித்தார்.

 

இதற்கு என்ன பதில் கூறுவது என்று அறியாமல் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தார் வள்ளியம்மை. எப்படி கூறுவது, உன் பிள்ளைக்கு உன்மேல் தாய் பாசம் வரக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் தனித்து அழைத்து வந்தோம் என்று எப்படி கூறுவாள்.. கூறினாள், அவளின் அக்கா அதை தாங்குவாளா என்று வள்ளியம்மைக்கு தெரியுமே.. வேலுச்சாமி எதுவும் பேசவில்லை. அமைதியாக இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

மீண்டும் மரகதமே, சொல்லு வள்ளி, என்ன ஆச்சு.. நீ சொன்னா தானத்தா எங்களுக்கு தெரியும். எதுவும் பிரச்சனையா என்று கேட்டார்.

 

அதற்கு வள்ளியம்மை, அக்கா என்று ஆரம்பிக்கும் பொழுதே கிருஷ்ணமூர்த்தி வீட்டினுள் நுழைந்தார்.

 

அவரை கண்ட வள்ளியம்மை எப்படி இவர் இதை எடுத்துக் கொள்வாரோ.. ஏற்கனவே, மனக்குழப்பத்தில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி இவர்களை கண்டதும் மேலும் குழம்புவாரோ அல்லது, எப்படி இதை எதிர் கொள்வார் என்ற பதட்டத்துடன் எழுந்து நின்றார்.

 

அவரைப் பார்த்த மற்ற மூவருமே எழுந்தனர். வந்தவர்களை வாங்க என்று கூட அழையாமல் நேராக வள்ளியிடம் சென்ற கிருஷ்ணமூர்த்தி, என்ன வள்ளி இதெல்லாம்.. யார் இவங்க எல்லாம், எதுக்கு கூப்பிட்டு நடுவீட்டில் உட்கார வச்சிருக்க.. உனக்கெல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா.. முதலில் இவங்களை எல்லாம் வெளியில் போக சொல்லு என்று கத்தினார்.

 

வள்ளியம்மை, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க என்று கூறினார்.

 

எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். இவங்களை முதலில் வெளியில் போக சொல்லு.. யாரைக் கேட்டு அவங்க இங்க வந்தாங்க என்று வள்ளியிடம் எகிறியவர்.

 

நேரடியாக மரகதத்தையும், வேலுச்சாமியையும் பார்த்து, வெளியில் போங்க வீட்டை விட்டு என்று கோபமாக கத்தினார்.

 

இதைக் கேட்ட மரகதத்திற்கு கோபம் எகிரியது, என்ன பேசுறீங்க நீங்க.. நாங்க என்ன சோத்துக்கு வக்கில்லாமல் இங்க வந்து நிக்கோம்னு நினைச்சீங்களா.. 30 வருஷமாகுது நான் என் தங்கச்சியை பார்த்து, என் புள்ளையை பார்த்து என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

அவங்களை பார்க்க தான் வந்தேன். என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டோம் என்று நேருக்கு நேராக அவரைப் பார்த்து கூறினார்.

 

இவர்கள் நாம் என்ன கூறினாலும் இங்கிருந்து போக மாட்டார்கள் என்று அறிந்த கிருஷ்ணமூர்த்தி, இப்போ என்ன தெரியணும் உங்களுக்கு.. நாங்க ஏன் ஊரை விட்டு வந்தோம்னு தெரியனும் அதான.. எங்களுக்கு எந்த உறவும் வேண்டாம்னு நினைச்சு தான் நாங்க அந்த ஊரை விட்டு வந்தோம். எங்களுக்கு எங்க பொண்ணு மட்டும் போதும். வேற யாரோட உறவும் எங்களுக்கு தேவை இல்லை. புள்ளையை எங்ககிட்ட கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு, இப்போ எங்க கிட்ட இருந்து கூப்பிட்டு போக வந்து இருக்கீங்களா.. என் புள்ளையை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். மீரா என் பொண்ணு... அவ நான் சொல்றதை தான் கேட்பா.. நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டா என்று சுயநலமாக பேசினார்.

 

மரகதம், என்ன பேசுறீங்க நீங்க.. மீரா உங்க பொண்ணு தான்  நாங்க இல்லைனு சொல்லலையே... அதுக்கும் நீங்க ஊரை விட்டு வந்ததுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று புரியாமல் கேட்டார்.

 

உங்களுக்கு விளக்கம் கொடுக்கணும் என்ற அவசியம் எனக்கில்லை என்று முகத்தில் அடித்தார் போல் பேசிய கிருஷ்ணமூர்த்தி, வள்ளியம்மையை பார்த்து, இவங்களை எல்லாம் இப்போவே வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கதவை மூடு. இல்லை, எனக்கு அக்கா தான் முக்கியம், மாமா தான் வேணும்னு நீ நினைச்சினா.. நீயும் அவங்களோட போயிடு. எனக்கு என் பொண்ணு தான் முக்கியம். வேற யாரும் தேவையில்லை என்று கத்திவிட்டு மாடிப்படி ஏறி சென்று விட்டார்.

 

வள்ளியம்மைக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. நேராக சென்று தன் அக்காவின் கால்களை கட்டிக்கொண்டு கதறி அழுதார், என்னைய மன்னிச்சிடுக்கா.. உங்க கிட்ட இருந்து புள்ளையை வாங்கிகிட்டு வந்ததும் என் வீட்டுக்காரர் இந்த ஊரை விட்டு நம்ம போயிடலாம் யாரும் நமக்கு வேண்டாம், எந்த சொந்த பந்தமும் வேண்டாம், இவ நம்ம புள்ளையா தான் வளரணும், வேற யாருக்கும் இதில் உரிமை இருக்க கூடாதுன்னு சொன்னார்.

 

ஏதோ இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்தினால் இப்படி பேசுறாருன்னு நினைச்சேன். சரி, அவர் போக்கிலேயே போய் கொஞ்ச நாள் கழிச்சு அவர் மனசு சரியானதும் பேசி திரும்ப ஊருக்கு கூப்பிட்டு வரலாம்னு நினைச்சு தான்கா அவர் கூட போனேன்.

 

ஆனா, நான் எவ்வளவு எடுத்து சொல்லியும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் என் பேச்சை கேட்கிறதா இல்லை. சின்ன வயசுல இருந்து எந்த உறவும் இல்லாமல் ஒண்டிக்கட்டையா வளர்ந்த மனுஷன் அவர். என்னைய கட்டி என்னாலயும் ஒரு புள்ளைய பெத்து கொடுக்க முடியல.. எங்க கடைசி வரைக்கும் நாம எந்த உறவும் இல்லாமல் இப்படியே தனி மரமா நின்னுடுவோமோனு அவருக்குள்ள பயம் வந்துடுச்சு.

 

அவருக்கு பெரிய குடும்பமா இருக்கணும், நிறைய உறவுகள் கூட வாழனும்னு ரொம்ப ஆசை.. அதனால் தான் வேலு மாமா சொன்னதும் என்னைய கட்டிக்கிட்டார். கடைசியில் எனக்கும் புள்ள பொறக்காமல் போயிடுச்சு.. அவருக்கு மீரா தான்கா முக்கியம். மீராக்கு முன்னாடி நான் கூட ஒன்னும் இல்ல அவருக்கு.. நானும் எத்தனையோ தடவை சொல்லி பாத்துட்டேன், இவ நம்ம புள்ள தான் அவங்க கேட்க மாட்டாங்க நம்ம ஊருக்கு போய் சொந்த பந்தங்களோட சேர்ந்து வாழலாம்னு கூப்பிட்டு பாத்துட்டேன்.

 

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் என் பேச்சைக் கேட்க மாட்டேங்கிறார்கா. எங்க மீராவுக்கு நீங்க தான் பெத்தவங்கன்னு தெரிஞ்சிடுமோ, நம்மளை விட்டு போயிடுவாளோனு பயப்படுறார். தயவு செய்து, எங்களை மன்னிச்சிடுக்கா.. உனக்கு முன்னாடி நாங்க எல்லாம் ஒண்ணுமே கிடையாது. தங்கச்சிக்காக பெத்த புள்ளையவே தூக்கிக் கொடுத்தவ நீ.. உனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு நாங்க நல்லா வாழ முடியாது. மீராவை நான் நல்லா பார்த்துக்குறேன்கா.. அவளை பத்தி நீ கவலைப்படாத என்று கூறி சற்று இடைவெளி விட்டு, தயவு செய்து, இனிமே நீங்க யாரும் எங்களை பார்க்க வராதீங்க.. அக்கா எனக்கு என் புருஷனும், பிள்ளையும் வேணும். அந்த மனுஷன் தினம் தினம் இதை நினைச்சு புலம்பிக்கிட்டு கிடக்குறார். இங்க இருந்து போயிடுங்க என்று கூறிவிட்டு அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டார்.

 

மூவரும் என்ன பேசுவது என்று அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு நின்று கொண்டிருந்தனர். முதலில் நிதானித்த சுப்பிரமணி, சரி வாங்கம்மா, நம்ம கிளம்பலாம் என்று கூறி, அங்கே ஸ்தம்பித்த நிலையில் அழுது கொண்டிருந்த மரகதத்திடம் சென்று அவரின் தோளில் கை வைத்து அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

 

வேலுச்சாமி எதுவும் பேசாமல் அவர்களை பின்தொடர்ந்தார். வேலுச்சாமியும் எப்படியாவது பேசி இதை சரி செய்ய வேண்டும் என்று தான் பார்க்கிறார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி இவர்களுக்கு ஒத்துழைப்பதாகவே இல்லையே.

 

ஏதேதோ தேவை இல்லாத எண்ணங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவரின் எண்ணத்திற்கு தகுந்தார் போல் இவர்களை தண்டித்தால் பாவம், இவர்களும் என்ன தான் செய்வார்கள்.

 

தவறை தன் மேல் வைத்துக்கொண்டு இவர்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர் என்று தன் தவறை புரிந்து கொண்டு அவரின் மனதை மாற்றப் போகிறாரோ.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

இவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் மீரா வீட்டினுள் நுழைந்தார். இதில், யார் மேல் பிழை கூறுவது.. பெற்ற மகளை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தாய் தந்தை துடித்தாலும், வளர்த்தவர்கள் தான் பிள்ளையை அவர்களின் கண்களில் காட்டாமல் சதி செய்கிறார்கள் என்றால் காலமும், நேரமும் கூட இவர்களுக்கு கை கொடுக்க தவறுகிறது.

 

என்ன தான் பெற்றவர்கள் தன் பிள்ளையை தூக்கிக் கொடுத்தாலும், பெற்ற மனம் கேட்கவில்லையே.. ஒரு முறையாவது தன் மகளை பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அவர்களிடம்.

 

எங்கே வளர்த்த மகள் தங்களை விட்டு பெற்றவர்களை தேடி சென்று விடுவாளோ என்ற வளர்த்தவர்களின் பாசம் ஒரு புறம். இருவரின் பாசமும் நியாயமாக இருந்தாலும், அதை கிருஷ்ணமூர்த்தி கையாண்ட விதம் தவறாகிப் போனது.

 

இது எதையுமே அறியாத மீரா தன் பிள்ளையை பள்ளியில் விட்டுவிட்டு வந்து அவர் அன்றாட வேலையை செய்ய தொடங்கினார்.

 

திரும்பிச் சென்ற மரகதமும், வேலுச்சாமியும் அடுத்து எடுக்கப் போகும் முடிவு என்ன..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5