அவனதிகாரம் - 12
அதிகாரம் – 12
கார்
அரசனூரை நோக்கி, தன் பயணத்தை தொடங்கியது. அனைவரின் மனதிற்குள்ளும் ஆயிரம்
சிந்தனைகள் ஓடிக் கொண்டு இருந்தாலும் வெளியே வெறும் நிசப்தம் மட்டுமே நிலவியது.
அவர்கள்
வீடு சென்று சேர்ந்ததும் மரகதம் எதுவும் கூறாமல் அவர்கள் அறைக்குள் நுழைந்தார்.
வேலுச்சாமி அமைதியாக அவரை பின்தொடர்ந்தார். நேரம் நள்ளிரவை நெருங்கியதால்
சுப்ரமணியனின் பிள்ளைகள் அனைவரும் உறங்கி விட்டிருந்தனர்.
லட்சுமி
அனைவரும் அமைதியாக செல்வதை கண்டு தன் கணவரிடம், “என்ன ஆச்சுங்க..? பார்த்தீங்களா..? என்ன சொன்னாங்க..?” என்று ஆவலாக கேட்டார்.
“அப்பா சொன்ன மாதிரி தான் அங்க
நடந்துச்சு லட்சுமி. என்ன சொல்றதுன்னு தெரியல நான் அப்போ சின்ன பிள்ளையா
இருந்தேன். நடந்த விஷயம் எதுவும் எனக்கு சரி வர ஞாபகம் இல்ல. கூட படிக்கிற பயலுங்க
எல்லாம் தம்பி, தங்கச்சியோட விளையாடும் போது எனக்கும் ஆசையா இருக்கும். எனக்கும் ஒரு தங்கச்சி வந்ததும் ரொம்ப
சந்தோஷப்பட்டேன். இனிமே, அவ கூட விளையாடலாம், அவளை நல்லா பார்த்துக்கணும்னு
சந்தோஷமா சுத்திக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு
வந்து பார்த்தா தங்கச்சி வீட்டில் இல்ல.
அம்மா
கிட்ட கேட்டதுக்கு அம்மா அழுதாங்க.. அப்பா கிட்ட கேட்டா சித்தி வீட்டுக்கு போய்
இருக்கா வந்திடுவானு சொன்னாங்க. ஆனா, அவ வரவே இல்ல. எங்க இருக்கான்னும் தெரியல.
இவ்வளவு நாள் அவளுக்கு என்ன ஆச்சுனு எல்லாம் பதறிட்டு இருந்தோம். இப்போ நல்ல படியா இருக்காங்கன்னு
தெரிஞ்சிடுச்சு. ஆனா, நம்மளால் தான் அவங்க இந்த ஊரை விட்டு போனேன்னு சொன்னது தான்
ஏத்துக்க முடியல. என்ன தான் காரணம் சொன்னாலும், பெத்தவங்க கிட்ட இருந்து புள்ளையை
பிரிக்கிறது எவ்வளவு பெரிய பாவம்.
இப்படி எல்லாம் கூட
மனுஷங்க இருப்பாங்களான்னு இப்போ தான் பார்க்குறேன் லட்சுமி. மனசே சரியில்ல கூட
பொறந்த பொறப்பு இருந்தும் யாரும் இல்லாம தனியா கிடக்கேன்” என்று வருத்தமாக கூறிக் கொண்டிருந்தார்.
“கவலைப்படாதீங்க எல்லாம் ஒரு நாள்
சரியாயிடும். சீக்கிரமே நம்ம குடும்பம் ஒன்னு சேர்ந்திடும்” என்று அவருக்கு சமாதானம் கூறினார்.
“அப்படி எல்லாம் இனிமே எதுவுமே சரி
ஆகாது லட்சுமி. நீ வேணா பாரு, 30 வருஷம் ஆயிடுச்சு இப்போ கூட அவங்க தங்கச்சியை
காட்டக்கூடாதுன்னு தான் நினைக்கிறாங்க. இனிமே தான் சேர்ந்திட போறாங்களா அட போ
லட்சுமி” என்று விரக்தியாக கூறினார்.
“நீங்க சொல்றது எனக்கு புரியுதுங்க..
நம்ம பிள்ளைகளுக்கும் ஒரு அத்தை இருக்காங்க.. ஆனா, வெளியில் சொல்லிக்க முடியல,
சீக்கிரம் எல்லாம் சரியாகும் பாருங்க. உங்க தங்கச்சிக்கு இந்த உண்மை எல்லாம்
தெரிஞ்சா அவங்களே உங்க எல்லாரையும் தேடி வருவாங்க” என்று நம்பிக்கை கூறினார் லட்சுமி.
“சரி லட்சுமி, படுப்போம் நேரம்
ஆகுது. காலையில் நிறைய வேலை கிடக்கு வயலுக்கு வேற போகணும்” என்று கூறிவிட்டு படுத்து விட்டார்.
சென்னைக்கு
சென்று வந்த பின் வள்ளியம்மை பேசியதன் தாக்கம் சில நாட்கள் கழித்து மரகதத்தையும்,
வேலுச்சாமியையும் விட்டு நீங்கியது. சில நாட்கள் அமைதியாகவும், சோர்வாகவும் கழித்த
மரகதமும், வேலுச்சாமியும் நாளடைவில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
லட்சுமியும்
அங்கு நடந்த விஷயத்தை பற்றி எதுவும் தன் மாமியாரிடம் கேட்டு அவரை சங்கடப்படுத்த
விரும்பவில்லை. காலப்போக்கில் எல்லாம் சரியாகும் என்று எண்ணிய லட்சுமி அவர்களை
அவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டார்.
நாட்கள்
இவ்வாறு வேகமாக சென்றது. இவர்களின் மனநிலை மாறியதை போல், கிருஷ்ணமூர்த்திக்கும்
மாறி இருக்கும் என்று எண்ணிய வேலுச்சாமி வருடா வருடம் இவர்களின் ஊர்
திருவிழாவிற்கு அவர்களை வருமாறு அழைப்பு விடுப்பார்.
ஆனால்,
அவர்களிடம் எந்த ஒரு பதிலும் இருக்காது. அவர்களும் வர மாட்டார்கள். அவர்கள்
வருவார்கள் என எதிர்பார்த்து மரகதமும், வேலுச்சாமியும் ஏமாந்து போவார்கள்.
இவ்வாறு
சென்று கொண்டிருக்க.. தற்பொழுது, ‘ஒன்று
கூடல்’ என்னும் பெயரில் புதிதாக
உறவினர்கள் அனைவரையும் அழைத்து விழா நடத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்ட
நிலையில் வேலுச்சாமிக்கு எப்படியாவது மீராவையும், வள்ளியம்மையையும் மற்றும்
கிருஷ்ணமூர்த்தியையும் வர வைக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது.
வயதாக
ஆக அவருக்கு மன உறுத்தலும் அதிகமாகிக் கொண்டே போனது. அம்மாவையும், மகளையும் நாம்
தான் பிரித்து விட்டோமோ..! என்று எண்ணி வருந்த ஆரம்பித்தார்.
அவ்வபொழுது
சுப்பிரமணியனுக்கும் உடன் பிறந்தோர் யாரும் இன்றி தனியாக இருந்து விட்டானே என்றும்
எண்ணுவார். ஆகையால், எப்படியாவது அவர்களை ஒன்று கூடலுக்கு அழைத்து வரவேண்டும் என்ற
முடிவோடு இருந்தார்.
அதற்கிடையில்
வெண்ணிலாவின் திருமணம் முடிவாகிவிட அதற்கு அவர்களை நேரில் சென்று அழைத்துப்
பார்த்தார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி, “நாங்கள்
யாரும் வர முடியாது” என்று கூறி பத்திரிக்கையை கூட
வாங்காது திருப்பி அனுப்பி விட்டார்.
மரகதம்
பாட்டி இவர் வருந்துவதை கண்டு இவரின் முன்பு தான் இயல்பாக இருப்பதை போல் நடந்து
கொள்வார். அவரின் மகளைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் அவர் முன் பேசி விட
மாட்டார்.
ஆனாலும்,
வேலுச்சாமி எப்படியாவது தான் இறப்பதற்குள் இந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து விட
வேண்டும் என்று ஒவ்வொரு முயற்சியையும் செய்து கொண்டே இருந்தார்.
தற்பொழுது
கயல்விழிக்கு எந்த வரணும் அமையாமல் தட்டிக் கொண்டே செல்லவும், வேலுச்சாமி தாத்தா
கயல்விழிக்கும், மீராவின் மூத்த மகனுக்கும் திருமணம் பேசலாமா என்று கேட்டார்.
என்ன
தான் குடும்பத்தில் இருப்பவர்கள் இவரின் முன்பு தங்கள் வருத்தத்தை காட்டாமல்
நடந்து கொண்டாலும், அவர்களிடம் வலிய சென்று இவர் அவமானப்படுவதை அவர்களால் பார்க்க
முடியவில்லை.
இவரை
அங்கு போகவிடாமல் செய்ய அவ்வப்பொழுது சுப்ரமணி கடுமையாக பேசியும் பார்த்து
விட்டார். ஆனால், எந்த பயனும் இல்லை, இவரை தடுக்கவும் முடியவில்லை.
ஊர்
திருவிழா, ஒன்று கூடல் என்று ஆரம்பித்த வேலுச்சாமி தற்பொழுது திருமணத்தில்
வந்து நிற்கிறார். வேலுச்சாமி மாப்பிள்ளை கேட்டு போனாலும் அவர்கள் என்ன பதில் கூறி
அனுப்புவார்கள் என்று நன்கு அறிந்த சுப்பிரமணி என்ன சொல்லி இவரை இந்த பேச்சை விட
வைப்பது என்று யோசிக்கலானார்.
அவரும்
நமக்குள் நடக்கும் பிரச்சனை தெரிந்தும் எப்படி இப்படி கேட்கிறார் என்றும் எண்ணுவது
உண்டு. இவர் வலிய சென்று அவமானப்படுவதை தாங்க முடியாமல் இந்த திருமணத்திற்கு
மரகதமும் ஒப்புக்கொள்ளவில்லை.
கயல்விழிக்கு
வரன் பார்க்க ஆரம்பித்த முதலே வேலுச்சாமி தாத்தா மரகதம் பாட்டியிடம், “மரகதம் நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன்.
அதுக்கு நீ உண்மையை மட்டும் தான் சொல்லணும்” என்று பீடிகை போட்டார்.
“என்ன பீடிகை எல்லாம் பலமா
இருக்கு. நான் என்னைக்கு உங்ககிட்ட பொய் சொல்லி இருக்கேன். இப்படி வந்து கேக்கீக” என்று மரகதம் பாட்டி கூறினார்.
“ஏன் மரகதம், நம்ம பேத்திக்கு நம்ம
பேரனை கட்டி வச்சா என்ன” என்று சற்று தயக்கமாக கேட்டார்.
அதற்கு
மரகதம் பாட்டி, “என்னங்க பேசுறீங்க அதான்
பேத்திக்கும், பேரனுக்கும் கல்யாணம் பண்ணிட்டோமே. இப்போ, கயல்விழிக்கு வேற தானே
பார்த்தாகணும்” என்று புரியாமல் கேட்டார்.
“ஐயோ மரகதம்! நான் ஜீவாவை பத்தி
பேசல. ‘மீராவோட பையன்’ அவனுக்கும், கயல்விழிக்கும் பேசிப்
பார்க்கலாம்ல” என்றார் எதிர்பார்ப்போடு.
இவர்
கூறுவதை கேட்டு அதிர்ந்த பாட்டி, “என்னங்க
பேசுறீங்க நீங்க, இதெல்லாம் நடக்குற காரியமா.. நம்மளை பார்த்தாலே அந்த மனுஷன்
எரிஞ்சு விழுறார். வருஷா வருஷம் கோவில் திருவிழாவுக்கு கூப்பிட்டு அசிங்கப்படுறது
பத்தாதா.. அவங்க கிட்ட போய் மாப்பிள்ளை கேட்டா ஒத்துப்பாங்களா.. நீங்க யோசிச்சு
தான் பேசுறீங்களா” என்றார். இவருக்கு என்ன சொல்லி
புரிய வைப்பது என்று அவருக்கும் புரியவில்லை.
“அப்படி இல்ல மரகதம், நான் நல்லா
யோசிச்சு தான் பேசுறேன். மீரா பையனுக்கும், சுப்பிரமணி பொண்ணுக்கும் கல்யாணம்
பண்ணி வச்சா பிரிஞ்ச குடும்பம் ஒன்னு சேர்ந்துடும்ல. சுப்பிரமணி தொலைச்ச
தங்கச்சியும் அவனுக்கு திரும்ப கிடைச்சிடுவா. நமக்கும் நம்ம பேரனுக்கு நம்ம
பேத்தியை கல்யாணம் பண்ணி கொடுத்தோம் என்ற திருப்தி இருக்கும். நீ என்ன நினைக்கிற” என்று ஆவலாக கேட்டார் தாத்தா.
“நீங்க சொல்றது நடக்குமானு தெரியல.
ஆனா, கேட்க நல்லா இருக்கு. அப்படி நடந்தா நம்ம பொண்ணு நமக்கு திரும்ப கிடைப்பா.
ஆனா, நடக்கணுமே.. இதுக்கு வள்ளியும், அவளோட வீட்டுக்காரரும் சம்மதிக்கணுமே” என்று ஏக்கமாக கூறினார்.
“பேசிப் பார்த்தா தான மரகதம்
ஒத்துக்குறாங்களானு தெரியும். எதுக்கும் நாம போய் ஒரு தடவை கேட்டு பாப்போமே” என்றார்.
அதற்கு
பாட்டி, “வேண்டாங்க.. கேட்டு
வேண்டாம்னுட்டா அசிங்கமாயிடும். அது மட்டும் இல்லாம, சுப்பிரமணிக்கு இந்த விஷயம்
தெரிஞ்சா என்ன சொல்லுவான்னு தெரியல. எதுக்கும் அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு
அப்புறம் பார்ப்போம்.
என்ன இருந்தாலும்
பொண்ண பெத்தவன் அவன் தானே. அவன் புள்ளையோட வாழ்க்கையில் நாம முடிவு செய்ய
முடியாது. சொல்லி பார்ப்போம்... ஆனா, சுப்பிரமணி இதுக்கு ஒத்துக்கலைனா
அதுக்கப்புறம் நீங்க மேலும் இந்த விஷயத்தை பற்றி பேசக்கூடாது. இதை அப்படியே
விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கணும் சரியா” என்று கூறினார்.
மரகதம்
பாட்டி ‘பேசி பார்ப்போம்’ என்று கூறியதே தாத்தாவிற்கு இந்த
திருமணம் நடந்து விடும் என்று பெரும் நம்பிக்கையாக இருந்தது. தனக்கு பக்க பலமாக
மரகதமும் வந்துவிட்டாள் என்று மகிழ்ச்சியுடன் தாத்தா, “சரி மரகதம், பேசலாம்னு முடிவு பண்ணிட்டு எதுக்கு நாளை
கடத்தனும். வா, இப்போவே போய் சுப்ரமணி கிட்ட பேசி பார்த்திடுவோம்” என்று அழைத்தார் பாட்டியை.
“என்னத்துக்கு இவ்வளவு
அவசரப்படுறீங்க.. பொறுமையா பேசுவோமே”
என்றார் பாட்டி ஆயாசமாக.
“சும்மா இரு மரகதம், நாள் கடத்தினா
அப்புறம் நீ மனசு மாறிடுவ.. இப்போவே போய் பேசிட்டு வந்திடுவோம் வா” என்று வம்படியாக அவரையும் இழுத்துக்
கொண்டு சுப்பிரமணியிடம் பேச சென்றார்.
இதற்கு
சுப்பிரமணியின் பதில் என்னவாக இருக்கும்..?
அப்படி
அவர் சம்மதித்தாலும் வள்ளியம்மையும், கிருஷ்ணமூர்த்தியும் இதற்கு
சம்மதிப்பார்களா..?
மீராவின்
மகனிற்கும் கயல்விழிக்கும் திருமணம் நடைபெறுமா..?
கருத்துகள்
கருத்துரையிடுக