அவனதிகாரம் - 13
அதிகாரம் – 13
மரகதத்தை
அழைத்துச் சென்ற தாத்தா நேராக சுப்ரமணியின் முன் நின்றார். அப்பொழுது தான் மதிய
உணவு உண்பதற்காக வீடு வந்த சுப்பிரமணியன் தாய், தந்தை இருவரும் தயங்கி தயங்கி ஏதோ
பேச வருவதை கண்டு அம்மாவிடம், “என்னம்மா, என்ன ஆச்சு? என்ன
பேசணும்னு சொல்லுங்க ஏன் தயங்குறீங்க”
என்று கேட்டார்.
“அது ஒன்னும் இல்லையா.. அப்பா தான்
உன்கிட்ட என்னமோ பேசணும்னு கூப்பிட்டு வந்தாங்க” என்று கூறி தாத்தாவை கோர்த்து விட்டார் பாட்டி.
மரகதமே
சுப்ரமணியனிடம் எப்படியாவது பேசி சம்மதம் வாங்கி விடுவாள் என்ற நம்பிக்கையில்
மரகதத்தை அழைத்து வந்த தாத்தாவிற்கு ‘சப்’பென்று ஆகிவிட்டது.
மரகதத்தை
பாவமாக பார்த்தார் வேலுச்சாமி. மரகதமோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
என்பது போல் அமைதியாக நின்று கொண்டார்.
வேலுச்சாமியை
பார்த்த சுப்பிரமணி, “என்னப்பா, என்ன வேணும்.. என்ன
விஷயம்” என்று கேட்டார்.
“அது வந்து...” என்று இழுத்தார் தாத்தா.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா..
ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று வினவினார் சுப்பிரமணி தன்
தந்தையை பார்த்து.
வேலுச்சாமி,
“ஆமா சுப்பிரமணி, நம்ம
கயல்விழிக்கு வரன் பார்க்குறோம்ல” என்று ஆரம்பித்தார்.
“ஆமா பா, இப்போ தான் தெரிஞ்ச
புரோக்கர் ஒருத்தர் கிட்ட கயல்விழி பத்தின விவரத்தை சொல்லிட்டு நமக்கு தோது படுற
மாதிரி சம்பந்தம் ஏதாவது இருந்தா பார்க்க சொல்லி இருக்கேன். அவரும் கைவசம் ரெண்டு,
மூணு வரன் இருக்கு. சாயந்தரம் வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கார்” என்று வேலுச்சாமியை பார்த்து கூறினார்.
அவர்
கூறியதை கேட்டதும் ‘பக்’கென்று ஆனது தாத்தாவிற்கு. உடனே அவசரமாக, “அதுக்கெல்லாம் அவசியம் இல்லை பா” என்றார் சுப்பிரமணியனை பார்த்து.
“ஏன் பா என்ன ஆச்சு... உங்களுக்கு
தெரிஞ்ச இடத்தில் ஏதாவது மாப்பிள்ளை இருக்கா..?” என்று கேட்டார் சுப்பிரமணி.
“ஆமா சுப்பு, நம்ம சொந்தத்திலேயே
ஒரு மாப்பிள்ளை இருக்கு. அதான் கேட்டு பார்க்கலாம்னு யோசிக்கிறேன். அவங்ககிட்ட
கேக்குறதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்னு வந்தேன் பா” என்றார்.
“அப்படியா பா, ரொம்ப நல்லதா
போச்சு. நான் கூட அசலில் எங்க போய் தேடுறதுன்னு தான் யோசிச்சேன். நம்ம சொந்தம்னா
இன்னும் வசதி தான். யாருப்பா அது நம்ம சொந்தத்தில் எந்த மாப்பிள்ளை இருக்காங்க” என்று விசாரித்தார் சுப்பிரமணி.
“எல்லாம் உனக்கு தெரிஞ்ச இடம் தான்
பா” என்று இழுத்த வேலுச்சாமி, “நம்ம மீராவோட பையன்” என்று முடித்தார்.
‘மீராவின் பையன்’ என்று தன் காதில் விழுந்ததை நம்ப
முடியாமல் சுப்பிரமணியன் தன் தந்தையை திரும்பி பார்த்தார். லட்சுமியும் அதிர்ச்சி
மாறாத முகத்துடன் தன் மாமியார், மாமனாரை பார்த்துக் கொண்டிருந்தார்.
லட்சுமியின்
மனதிற்குள்ளும் இதெல்லாம் சரி வருமா, இவர்களின் உறவையே வேண்டாம் என்பவர்கள் எப்படி
இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்வார்கள். அது மட்டும் இன்றி, தங்கள்
குடும்பத்தையே வெறுப்பவர்களை நம்பி எப்படி நம் பிள்ளையை அந்த வீட்டில் கட்டிக்
கொடுக்க முடியும்.
“என்னப்பா சொல்றீங்க” என்று அதிர்ச்சியாக கேட்டார் சுப்பிரமணி.
“நான் நல்லா யோசிச்சு தான்பா
சொல்றேன். நாம மாப்பிளை கேட்டு பார்ப்போமே” என்றார் வேலுச்சாமி.
“இதெல்லாம் சரி வராது” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்
சுப்பிரமணி.
செல்லும்
அவரை தடுத்த வேலுச்சாமி, “நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சு
பாரு சுப்பு நம்ம கயல்விழியை மீரா வீட்டில் கொடுத்தா முடிஞ்சு போச்சுன்னு நினைச்ச
உறவு திரும்ப தொடங்கும்ல” என்று ஆவலாக கூறினார்.
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் பா.
ஆனா, இதெல்லாம் நடக்காது கண்டிப்பா அவங்க ஒத்துக்க மாட்டாங்க. அவங்க கிட்ட போய்
கேட்டு அசிங்கப்பட நான் விரும்பல. இதுக்கு மேல நீங்க அவங்க கிட்ட போய்
அசிங்கப்படுவதிலும் எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து இந்த பேச்சை இதோட விட்ருங்க” என்று கூறிவிட்டு சரசரவென தங்கள் அறையை
நோக்கி சென்று விட்டார்.
அவர்
சென்ற பின் பாட்டியை பாவமாக பார்த்தார் தாத்தா.
“இதில் நம்ம ஒன்னும் சொல்றதுக்கு
இல்லைங்க. அவன் பொண்ணோட வாழ்க்கை அவன் தான் முடிவு பண்ணனும். விடுங்க, என்ன
நடக்கணும்னு இருக்கோ அதான் நடக்கும்”
என்று கூறி, சமையலறை நோக்கி சென்று விட்டார் பாட்டி.
மரகதம்
பாட்டிக்குமே இந்த திருமணத்தில் பெரும் ஆசை தான். ஆனால், நாம் ஆசைப்பட்டால்
மட்டும் போதுமா.. திருமணம் செய்ய வேண்டியவர்கள் ஆசைப்பட வேண்டும் அல்லவா..
பெண்
எடுப்போருக்கும் விருப்பமில்லை, பெண் கொடுப்போருக்கும் விருப்பமில்லை. இடையில்
நாம் ஆசைப்பட்டு என்ன செய்வது என்று தன் மனதை தேற்றிக்கொண்டு சமையலறையை நோக்கி
சென்று விட்டார்.
“இது தான் நடந்துச்சு மாப்ள. சின்ன
வயசில் பிரிஞ்ச உறவை சேர்க்கணும்னு நினைக்கிறது சந்தோஷம் தான். அதுக்காக விருப்பம்
இல்லாதவங்க கிட்ட போய் மறுபடியும் மறுபடியும் அசிங்கப்பட எனக்கு விருப்பமில்லை.
அதுவும் அங்க யாரை நம்பி என் பொண்ண கொடுக்க முடியும். ஏற்கனவே, என் தங்கச்சியை
பிரிஞ்சது பத்தாதா.. இப்போ, என் பொண்ணு வாழ்க்கையையும் அழிக்க முடியுமா” என்று வருத்தமாக கூறினார் சுப்பிரமணியன்.
“இவ்வளவு நடந்து இருக்கா மாமா..
தாத்தாவோட எண்ணம் எனக்கு ஒன்னும் தப்பா தோணல மாமா” என்று கூறினான் ஜீவா.
“என்ன மாப்ள சொல்றீங்க, இதெல்லாம்
எப்படி சரிப்பட்டு வரும். நான் நடந்த மொத்தத்தையும் சொல்லி கேட்டதுக்கு அப்புறமுமா
நீங்க இப்படி யோசிக்கிறீங்க” என்று ஆச்சரியமாக கேட்டார்.
“ஆமா மாமா, ஒருவேளை இப்போ அவங்க
மனசு மாறி கூட இருக்கலாம்ல.. முயற்சி பண்ணாமலே எந்த ஒரு முடிவையும் எடுக்க
முடியாது மாமா. ஒருவேளை, அவங்க மனசு மாறி இருந்து செஞ்ச தப்புக்காக
வருத்தப்பட்டுகிட்டு இருந்தா.. அவங்க பண்ண தப்பை சரி பண்ண இந்த கல்யாணம் ஒரு நல்ல
வாய்ப்பா அமையும் இல்லையா.. ரெண்டு குடும்பமும் தாத்தா ஆசைப்படி ஒன்னு சேரும்.
பாட்டிக்கும் அவங்க மகள் திரும்ப கிடைப்பாங்க.. உங்களுக்கு நீங்க இழந்த உங்க
தங்கச்சி திரும்ப கிடைப்பாங்க.. முயற்சி செஞ்சு பார்த்திருக்கலாமே மாமா
தாத்தாவுக்கும் உடம்பு சரியாக இருந்திருக்குமே” என்று கேட்டான் தன் மாமனாரிடம்.
“நீங்க சொல்றதெல்லாம் நடக்கும்
என்ற நம்பிக்கை எனக்கு இப்போ கிடையாது மாப்ள.. ஒரு காலத்தில் நானும் இப்படி தான்
நம்பிகிட்டு இருந்தேன். என்னைக்கா இருந்தாலும் நம்ம தங்கச்சி நம்ம கிட்ட வந்து
சேர்ந்திடுவானு எதிர்பார்ப்போட இருந்து இருந்து ஏமாந்து போனது தான் மிச்சம் மாப்ள.
ஒவ்வொரு வருஷ திருவிழாவுக்கும் அப்பா அவங்களை கூப்பிடுவார்.. சரி, இந்த வருஷம்
வந்திடுவாங்க அடுத்த வருஷம் வந்திடுவாங்கனு நானும் நிறைய எதிர்பார்ப்போடு
இருந்திருக்கேன். எதிர்பார்ப்போடு இருந்து இருந்து வெறுத்துப் போச்சு மாப்ள..
இப்போ அந்த எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. எனக்கு என் பொண்ணுங்க வாழ்க்கை தான்
முக்கியம். என் கண்ணு முன்னாடி அவங்க குடும்பமா சந்தோஷமா வாழுறதை பார்க்கணும். அது
ஒன்னு தான் மாப்ள என் ஆசை” என்று கூறினார்.
“புரியுது மாமா. நீங்க பேச
வேண்டாம். நான் பேசி பார்க்கிறேனே”
என்று கேட்டான் ஜீவா.
“அதெல்லாம் சரி வராது மாப்ள..
திரும்ப திரும்ப அவங்க கிட்ட போய் நின்று அசிங்கப்பட்ட வரைக்கும் போதும். ஏற்கனவே,
அப்பா நிறைய பட்டுட்டார். எங்க பங்குக்கு நாங்க எல்லாரும் அவமானப்பட்டு
முடிச்சாச்சு. நீங்க அப்படி கிடையாது, எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க.. நீங்க போய்
அவங்க முன்னாடி அவமானப்பட்டு நிற்குறதை என்னால் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க
முடியாது” என்று கூறினார் சுப்பிரமணி.
“நீங்க நினைக்கிற மாதிரி எதுவும்
நடக்காது மாமா நான் பார்த்துக்கிறேன். ஒரு தடவை முயற்சி பண்ணி பார்க்க போறோம்.
இதில் என்ன தப்பு இருக்கு. எனக்கு எந்த அவமானமும் வராது மாமா நான் பார்த்து
பண்ணிக்கிறேன்.. நீங்க சரின்னு ஒரு வார்த்தை
மட்டும் சொல்லுங்க மாமா அதுவே போதும்”
என்று கேட்டான் ஜீவா.
“நீங்க இவ்வளவு தூரம் சொல்றதுனால
எனக்கு விருப்பம் இல்லைனாலும் நான் சம்மதிக்கிறேன். உங்க விருப்பப்படி பேசி
பாருங்க மாப்ள.. ஆனா, இந்த ஒரு தடவை மட்டும் தான். இந்த தடவையும் அவங்க நம்ம
குடும்பத்தோட சேர ஒத்துக்கலைனா இது தான் அவங்களுக்கு கடைசி வாய்ப்பா இருக்கும்.
இதுக்கப்புறம் நம்ம குடும்பத்தில் இருந்து யாருமே அவங்க கிட்ட போய் இதை பத்தி
பேசக்கூடாது” என்று கூறினார் சுப்பிரமணி.
“சரிங்க மாமா, சிஸ்டர் மருந்து
வாங்க சொல்லி பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்து இருக்காங்க. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்.
டாக்டர் வந்து என்ன சொல்றாங்கன்னு நீங்க இங்கேயே இருந்து பார்த்துக்கோங்க மாமா” என்று கூறிவிட்டு மருந்தகத்தை நோக்கி
நகர்ந்தான் ஜீவா.
செல்லும்
ஜீவாவையே ஆனந்தமாக பார்த்த சுப்பிரமணிக்கு உள்ளுக்குள் தன் மருமகனை எண்ணி பெரும்
மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை பேருக்கு அமையும் இப்படி ஒரு மாப்பிள்ளை என்று
பெருமையாக பார்த்தார்.
தான்
பெண் எடுத்த வீட்டினரை பற்றி தரக்குறைவாக பேசும் எத்தனையோ மருமகன்களுக்கு இடையில்
தனக்கு தங்கம் போல் மாப்பிள்ளை அமைந்திருப்பதை எண்ணி பெருமை அடைந்தார் சுப்பிரமணி.
ஜீவானந்தம்
சென்று மருந்து வாங்கி வருவதற்குள் மொத்த குடும்பமும் மருத்துவமனையில்
கூடிவிட்டது. தாத்தாவிற்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் அனைவரும் சுப்பிரமணியிடம்
கேள்வி கேட்டு கொண்டு இருந்தனர்.
சுப்ரமணி,
“டாக்டர் வந்து சொன்னா தான்
எதுவும் தெரியும். எல்லாம் கொஞ்ச நேரம் பதட்டப்படாமல் அமைதியா இருங்க அப்பாவுக்கு
எதுவும் ஆகாது” என்று தைரியம் கூறினார்.
என்ன
தான் தைரியம் கூறினாலும் மரகதம் பாட்டிக்கு கண்ணீர் நிற்கவில்லை. அப்போது
வேலுச்சாமி தாத்தாவை பரிசோதித்த மருத்துவர் செவிலியர் உடன் வெளியே வந்தார். உடனே,
குடும்பத்தினர் அனைவரும் அவரை சூழ்ந்து விட்டனர்.
மருத்துவர்,
“என்னம்மா இது... இப்படி வழியை
மறைச்சு நின்னா நான் எப்படி வெளியில் வருவது. கொஞ்சம் தள்ளி நில்லுங்க” என்று குரல் கொடுத்தார்.
வெளியே
வந்த மருத்துவர் தாத்தாவின் உடல்நலம் குறித்து என்ன கூறி இருப்பார்...?
ஜீவாவின்
முயற்சி வெற்றியில் முடியுமா...?
கருத்துகள்
கருத்துரையிடுக