அவனதிகாரம் - 16
அதிகாரம் – 16
ஜீவா
மீரா பில்டர்ஸிலிருந்து வெளிவரும் பொழுது அவனுடைய செல்போன் இசைக்கத் தொடங்கியது.
அதனை எடுத்தவன், “சொல்லுங்க மாமா” என்று கூறினான்.
எதிர்
முனையில் இருந்த சுப்பிரமணியன், “என்ன ஆச்சு மாப்ள.. மீராவை
பார்த்தீங்களா..? என்ன சொன்னாங்க..?”.
“ம்ம்.. பார்த்துட்டேன் மாமா..
பார்த்து நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னேன். அவங்க தாத்தாவை பார்க்க
சம்மதிச்சிட்டாங்க”.
“அப்படியா மாப்ள..! ரொம்ப
சந்தோஷம்.... நடக்காதுன்னு நினைச்சதை இப்படி நடத்தி கொடுத்துட்டீங்க. ரொம்ப நன்றி
மாப்ள.. மீரா எங்க உங்க கூட தான் வராளா?”.
அதற்கு
ஜீவா, “இல்ல மாமா, என்கூட வரல.. அவங்க
தனியா காரில் வராங்க.. நான் பேசிட்டு உடனே கிளம்பிட்டேன். அவங்க வீட்டில்
சொல்லிட்டு கிளம்புறேன்னு சொல்லி இருக்காங்க. ஆனா, கண்டிப்பா வந்துடுவாங்க மாமா..
நீங்க கவலைப்படாதீங்க” என்று தெம்பூட்டினான்.
இவன்
கூறியதை கேட்ட சுப்பிரமணியத்திற்கு நம்பிக்கை போய்விட்டது. எத்தனை முறை இப்படி
நம்பி அவர் ஏமார்ந்திருப்பார். அவரின் குரலின் மாற்றமே அவருடைய அவநம்பிக்கையை
காட்டியது.
“சரிங்க மாப்ள.. நீங்க பார்த்து
பத்திரமா வாங்க.. நான் வச்சிடுறேன்”
என்று கூறி அழைப்பை துண்டித்தார்.
அவரின்
குரல் மாற்றத்தை உணர்ந்த ஜீவாவும் நம்மால் வேறென்ன செய்ய முடியும் என்று
விட்டுவிட்டான். பிறகு, ஜீவா தன் பயணத்தை மேற்கொண்டு மருத்துவமனையை அடைந்தான்.
மீரா வரும் விஷயத்தை அறிந்த மரகதமும், லட்சுமியும் உடனே மருத்துவமனையை நோக்கி
விரைந்தனர். ஆகையால், தற்பொழுது மருத்துவமனையில் சுப்பிரமணியன், மரகதம், லட்சுமி என
மூவருமே காத்திருந்தனர்.
ஜீவா
வந்தடைந்ததும் மரகதம் பாட்டி, “என்னய்யா, நீ தான் மீராவை
கூப்பிட்டு வரப்போறதா சுப்பிரமணி சொன்னான். எங்க மீராவை காணோம்?” என்று ஏமாற்றமாக கேட்டார்.
அதற்கு
ஜீவா சிரித்த முகமாக, “வராங்க பாட்டி. நான் விஷயத்தை
சொல்லிட்டு, ஆஸ்பத்திரியில் ஏதாவது தேவைப்படும்னு சீக்கிரம் வந்துட்டேன். அவங்க
பின்னாடி காரில் கிளம்பி வருவதாக சொன்னாங்க. நான் போன் பண்ணி விசாரிச்சிட்டேன்,
அவங்க வந்துட்டு இருக்காங்க. கவலைப்படாதீங்க..” என்று ஆறுதலாக கூறினான்.
மரகதம்,
“நீ சொல்றது நிஜம் தானப்பா.
கண்டிப்பா மீரா வந்திடுவால” என்று ஆவலாக கேட்டார்.
“கண்டிப்பா உங்க பொண்ணு வர போறாங்க
பாட்டி. நீங்க அவங்களை பார்க்க தான் போறீங்க. ஆனா.. உங்க எல்லார்கிட்டயும் நான்
ஒரு விஷயம் சொல்லணும்” என்று கூறி அனைவரின் முகத்தையும்
பார்த்தான்.
அனைவரும்,
‘எங்கே மீரா வரமாட்டாள் என்று
கூறப் போகிறானோ’ என்னும் விதமாக ஜீவாவையே
பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின்
தவிப்பை உணர்ந்த ஜீவா, “நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி
எதுவும் இல்ல. நான் சொல்லப் போற விஷயம் வேற”.
சுப்பிரமணி,
“என்ன மாப்ள, எதுவா இருந்தாலும்
பரவாயில்ல சொல்லுங்க”.
“மாமா,
அது வந்து...” என்று சற்று தயக்கமாக
ஆரம்பித்தான் ஜீவா.
மரகதம்
பாட்டி, “எதுவா இருந்தாலும் மறைக்காமல்
சொல்லிடுயா. நீ போய் பார்த்த இடத்தில் எதுவும் பிரச்சனை ஆயிடுச்சா..? மீரா
வரமாட்டேன்னு சொல்லிடுச்சா..? எதுவா இருந்தாலும் பரவாயில்ல சொல்லு” என்று பேரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு
கண்ணீர் மல்க கூறினார்.
“ஐயோ! பாட்டி அழுகாதீங்க..
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. மீரா கண்டிப்பா வராங்க”.
அதற்கு
லட்சுமி, “அப்புறம் ஏன் மாப்ள தயங்குறீங்க.
என்னனு சொல்லுங்க” என்று ஜீவாவை ஊக்குவித்தார்.
ஜீவா,
அங்கு தனக்கும் அபிமன்யுவிற்கும் நடந்த பேச்சுவார்த்தை அனைத்தையும் கூறினான்.
ஆனால், அவன் மரியாதை குறைவாக நடந்து கொண்டதை மட்டும் இவர்களிடம் கூறாமல் மறைத்து
விட்டான்.
ஏனெனில்,
இவர்களுக்கு அபிமன்யு ஜீவாவை மரியாதை குறைவாக நடத்தியது தெரிந்தால்
வருத்தப்படுவார்கள் என்று எண்ணினான் ஜீவா. அது உண்மையும் தானே..!
இவன்
கூறிய அனைத்தையும் கேட்ட மற்ற மூவரும் சிலை என அசையாமல் நின்று விட்டனர்.
சுப்பிரமணி,
“என்ன சொல்றீங்க மாப்ள. இத்தனை
வருஷம் கழிச்சு மீராவை பார்க்க போறோம். எப்படி மாப்ள யாரோ மாதிரி பேச முடியும்?”.
அதற்கு
ஜீவா, “வேற வழியில்ல மாமா. பொறுத்து தான்
போகணும். இந்த அளவுக்கு அவங்க தாத்தாவை பார்க்க வரேன்னு ஒத்துக்கிட்டதே பெரிய
விஷயம். வர முடியாதுன்னு சொல்லி இருந்தா நம்மால் என்ன செஞ்சிருக்க முடியும்.
அவங்களே வரேன்னு சொன்னதுக்கு அப்புறம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும் மாமா.
நமக்கு இப்போ முக்கியம் அவங்க வந்து தாத்தாவை பாக்கணும். தாத்தா ஆபத்து
கட்டத்திலிருந்து வெளிவரனும் அவ்வளவு தான். மத்தபடி, அவர்களுடைய உறவு கிடைக்குதா,
இல்லையான்றது இப்போ முக்கியம் இல்லை மாமா” என்று கூறினான்.
சுப்பிரமணி
மரகதம் பாட்டியின் முகத்தை பார்த்தார். மரகதம் பாட்டி எந்த ஒரு பதிலும் கூறும்
நிலையில் இல்லை. பாவம், அவர் என்ன தான் செய்வார். ஒரு பக்கம், தாலி கட்டிய கணவர்.
மற்றொரு பக்கம், தான் பெற்ற மகள்.
யார்
முக்கியம் என்று நினைப்பார். இதுவரை இனிமேல் நாம் பார்க்கவே முடியாது, பேசவே
முடியாது என்று எண்ணிய மகளை இப்பொழுது, இன்னும் சற்று நேரத்தில் நேரில்
காணப்போகிறார்.
இவ்வளவு
நாள் அவர் காத்திருந்த காத்திருப்புக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லாமல் போனது ஜீவா
கூறியதை கேட்டவுடன். ஆகையால், பேசா மடந்தை ஆகிவிட்டார் மரகதம் பாட்டி.
லட்சுமி,
“மாப்ள சொல்றதும் சரி தாங்க. இப்போ
இருக்க நிலைமையில் நமக்கு மாமா உயிர் பிழைக்கிறது தான் முக்கியம். அவங்க வரட்டும்,
வந்து மாமாவை பார்க்கட்டும். அது மூலமா மாமா உடம்பு சரி ஆனாலே போதுங்க” என்றார்.
சுப்பிரமணி,
“சரிங்க மாப்ள. வரட்டும்,
நடக்குறது நடக்கட்டும்” என்று கூறிவிட்டு சோர்வாக சென்று
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
மரகதம்
பாட்டி எதைப் பற்றியும் யோசிக்கும் நிலையிலோ பேசும் நிலையிலோ இல்லை.
வயதான
காலத்தில் பாவம் அவரும் எவ்வளவு வருத்தங்களை தான் தாங்குவார். நின்ற நிலையிலேயே
இருந்து விட்டார்.
அவரின்
அருகில் சென்ற லட்சுமி, “அத்த வாங்க.. இப்படி உட்காருவோம்” என்று கூறி, அவரின் கைகளை பிடித்து
சென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார்.
எந்த
ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் மரகதம் பாட்டி அவர் கூறுவதை பொம்மை போல் செய்தார்.
அவரின் நிலையை பார்த்து அங்கிருந்த மற்ற மூவருக்குமே வருத்தமாக தான் இருந்தது.
ஆனால்,
தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சிறிது
நேரம் கழித்து, அபிமன்யு கூறியதைப் போல் மீராவை அழைத்துக் கொண்டு அந்த
மருத்துவமனையை வந்து அடைந்தான்.
அபிமன்யு
வருவதை கண்ட ஜீவா எழுந்து நின்றான். மற்றவர்கள் அவன் யாரோ என்று எண்ணி பார்த்துக்
கொண்டிருந்தனர். அபிமன்யுவின் பின்னால் மீராவும், மீராவுடன் வள்ளியம்மையும் வந்து
கொண்டிருந்தனர்.
வள்ளியம்மையை
கண்ட பிறகு தான் இவர்கள் இருவரும் யார் என்பது அவர்களுக்கு விளங்கியது. நேராக
சென்று மரகதம் பாட்டியை கட்டிக்கொண்டு அழுதார் வள்ளியம்மை. அதற்கு எந்த ஒரு
எதிர்வினையும் காட்டாத மரகதம் பாட்டி அமைதியாக அமர்ந்திருந்தார்.
“என்னக்கா, இப்படி ஆகிடுச்சு” என்று கூறி அழுதார்.
“இப்படி ஏதாவது ஆனா தான் எங்களை
வந்து பார்க்கணும்னு இருக்குல்ல”.
“அப்படி எல்லாம் நினைக்கலக்கா. என்
சூழ்நிலை வர முடியாமல் போயிடுச்சு”
என்று கண்ணீர் மல்க கூறினார்.
இவர்களின்
பேச்சு வார்த்தையை சற்றும் விருப்பம் இன்றி கேட்டுக் கொண்டிருந்தான் அபிமன்யு.
அவனின் முகம் எரிச்சல் அடைவதை கண்ட ஜீவா, “சரி பாட்டி. மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். இவங்க போய்
தாத்தாவை பார்த்துட்டு வரட்டும்”.
“சரிப்பா, நீயே கூப்பிட்டு போய்
தாத்தாவை காட்டிட்டு வா” என்று கூறினார் பாட்டி.
அப்பொழுது
தான் அவர் மீராவையும், அருகில் இருந்த அபிமன்யுவையும் ஏக்கமாக பார்த்தார். இவரின்
பார்வையை உணர்ந்த அபிமன்யு முகத்தை அவரை காணாதது போல் திருப்பிக் கொண்டான். ஆனால்,
மீராவிற்கு தான் எந்த உண்மையும் தெரியாதே, பாவமாக மரகதம் பாட்டியை பார்த்தாள்.
அவளுக்கு
சிறு வயது முதலே தனக்கு ஏன் உடன் பிறந்தோர் யாரும் இல்லை என்று அவ்வபொழுது
நினைத்து வருந்துவார். ஒற்றை மகளாக பிறந்ததினால் தன் மனதில் இருக்கும்
வருத்தத்தையும், மகிழ்ச்சியையும் கூட பகிர்ந்து கொள்ள தன்னுடன் பிறந்தோர் என
யாரும் இல்லையே என்று நினைத்து வருந்துவார் மீரா.
ஆனால்,
அது எதுவும் வள்ளியம்மைக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் தெரியாதபடி பார்த்துக்
கொள்வார். ஏனெனில், அவர்கள் இருவரும் தன்னை அப்படி பார்த்துக் கொள்கிறார்கள்.
அவ்வளவு
பாசமாக இருக்கும் தாய், தந்தையினரின் முன் தன் வருத்தத்தை காட்டி அவர்களையும்
கஷ்டப்படுத்த மீரா விரும்பவில்லை. எனவே, அனைத்து வருத்தத்தையும் தன் மனதோடு
புதைத்துக் கொள்வாள்.
இப்படி
தன் அம்மாவிற்கு உடன்பிறந்த அக்கா ஒருவர் இருக்கிறார் என்பதே மீராவுக்கு தற்பொழுது
தான் தெரியும். உடன் பிறந்தோர் இருந்தும் தன் அம்மா இத்தனை வருடங்களாக யாரும்
இல்லாதது போல் தனியாக இருந்ததை எண்ணி மீராவுக்கு பாவமாக இருந்தது அவர்கள்
இருவரையும் காணும் பொழுது.
அவர்கள்
இருவரின் கணவருக்கும் நடுவில் ஏற்பட்ட மனக்கசப்பால் பாவம், அக்கா தங்கை ஆகிய
இவர்கள் இருவரும் பிரிய வேண்டியதாய் போனதே என்று எண்ணி அவர்களை பார்த்துக்
கொண்டிருந்தார்.
தன்
தாய் அவர்களை பாசமாக பார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அபிமன்யு, “மாம், நான் வெளியில் வெயிட் பண்றேன்.
நீங்க போய் பார்த்துட்டு வாங்க” என்று கூறிவிட்டு சரசரவென
அங்கிருந்து வெளியேறி விட்டான்.
அவன்
நடந்து கொள்வதை விசித்திரமாக பார்த்தனர் மற்றவர்கள். அவர்களுக்கு தான் அவனின்
குணம் தெரியாதே.. ஆனால், அவனைப் பற்றி அறிந்த மீராவும், வள்ளியம்மையும், ஜீவாவும்
இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இவன்
இப்படி செய்யாவிட்டால் தான் அதை அவர்கள் ஆச்சரியமாக பார்த்திருப்பார்களோ,
என்னவோ....
மீரா,
வேலுச்சாமியை பார்க்கும் தருணம் எப்படி இருக்கும்..?
அனைத்து
உண்மையையும் வேலுச்சாமி மீராவிடம் கூறி விடுவாரா..?
அப்படி
உண்மை அறிந்தால் மீராவின் முடிவு என்னவாக இருக்கும்..?
கருத்துகள்
கருத்துரையிடுக