அவனதிகாரம் - 17
அதிகாரம் – 17
அபிமன்யு
அங்கிருந்து நகர்ந்ததும் ஜீவா மீராவையும், வள்ளியம்மையையும் அழைத்துக் கொண்டு
தாத்தா இருக்கும் அறையை நோக்கி சென்றான்.
அப்பொழுது
அறையில் இருந்து வெளிவந்த செவிலியர் ஜீவாவை பார்த்து, “என்ன சார், எங்க போறீங்க?” என்று விசாரித்தார்.
அதற்கு
ஜீவா, “சிஸ்டர், இவங்க எங்களோட
சொந்தக்காரங்க. வெளியூரிலிருந்து தாத்தாவை பார்க்க வந்திருக்காங்க. அதான் தாத்தாவை
பார்க்க கூப்பிட்டு போயிட்டு இருக்கேன்”
என்று கூறினான்.
அதற்கு
அந்த செவிலியர், “இருங்க, இப்படி மொத்தமா எல்லாரும்
ஐசியுக்குள்ள போகக்கூடாது. அதனால, ஒவ்வொருத்தரா போய் பாருங்க”.
“சரிங்க சிஸ்டர்” என்று ஒப்புக்கொண்டான் ஜீவா.
பிறகு,
ஜீவா வள்ளியம்மையிடம், “பாட்டி, நீங்க முதலில் போய்
பார்த்துட்டு வரீங்களா” என்று கேட்டான்.
வள்ளியம்மைக்கு
எப்படி வேலுச்சாமியை எதிர்கொள்வது என்ற மன தைரியம் இல்லாமல் போனது.
குழப்பமான
மனநிலையோடு, “சரிங்க தம்பி” என்று தலையசைத்தார்.
அவர்
மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள்.
மீரா
யார் என்ற உண்மை மீராவிற்கு தெரிய வந்து விடுமோ, இவர்கள் யாரேனும் கூறி
விடுவார்களோ.. வேலுச்சாமி மீராவை பார்த்தால் என்ன கூறுவாரோ என்ற குழப்பமும்,
பதட்டமும் சேர்ந்த மனநிலையில் தான் வள்ளியம்மை ஐசியூவினுள் சென்றார்.
உள்ளே ஆக்சிஜன்
மாஸ்க்குடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர், இவரை கண்டதும் ‘வா’ என்னும் விதமாக தலையசைத்தார் வேலுச்சாமி.
வேலுச்சாமியின்
அருகில் சென்ற வள்ளியம்மை தன் புடவையின் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு சத்தம்
இன்றி அழுதார்.
அவரை
பார்த்த வேலுச்சாமி ‘அழ வேண்டாம்’ என்னும் விதமாக தன் தலையை அசைத்தார்.
வேலுச்சாமிக்கு ஆக்சிஜன் மாஸ்க் வைத்திருப்பதால் அவரால் பேச முடியவில்லை. எனவே,
தான் கூற வருவதை சைகையில் செய்து காட்டிக் கொண்டிருந்தார்.
வேலுச்சாமியிடம்
வள்ளியம்மை, “என்னை மன்னிச்சிடுங்க மாமா.
என்னால் அவரை மீறி ஒன்னும் பண்ண முடியல”
என்று கூறி அழுதார். அதற்கு வேலுச்சாமி எந்த அசைவும் காட்டவில்லை.
சிறிது
நேரம் வள்ளியம்மை மௌனமாக இருந்தார். என்ன பேசுவது என்று அவருக்குமே தெரியவில்லை.
பிறகு, தயங்கியபடி வேலுச்சாமியிடம், “மாமா,
என் கூட மீராவும் வந்திருக்கா” என்று கூறினார்.
அவர்
கூறியதை கேட்டவுடன் வேலுச்சாமிக்கு பெரும் தெம்பு வந்தது போல் இருந்தது.
மகிழ்ச்சியின் அறிகுறியாய் அவர் கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது.
வள்ளியம்மை
தன் இரு கரங்களையும் கூப்பி வேலுச்சாமியைப் பார்த்து, “தயவு செய்து, அவகிட்ட எந்த உண்மையையும் சொல்லிடாதீங்க மாமா.
உங்க காலில் வேணும்னாலும் விழறேன்”
என்று கூறி அழுதார்.
இதற்கு
வேலுச்சாமிக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவரும் பிள்ளையை இவர்களிடமிருந்து
பிரிக்க வேண்டும் என்று எண்ணவில்லையே. இவர்களுடைய உறவு வேண்டும் என்று மட்டும்
தானே நினைத்தார். இப்பொழுது வேலுச்சாமி தன் ஆக்சிஜன் மாஸ்கை கழட்ட முயன்றார்.
வள்ளியம்மை
பதட்டமாக, “என்ன ஆச்சு மாமா... என்ன
பண்ணுது... டாக்டரை வர சொல்லட்டுமா...”.
வேலுச்சாமி
மெதுவான குரலில், “வேண்டாம் வள்ளி, எனக்கு ஒன்னும்
இல்லை. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ பேசலைனா, இனிமே பேசவே முடியாமல்
போயிடுமோனு தோணுது” என்று கூறினார்.
அதற்கு
வள்ளியம்மை, “வேண்டாம் மாமா, இப்படி எல்லாம்
பேசாதீங்க. உங்களுக்கு எதுவும் ஆகாது”
என்று கண்களில் கண்ணீரோடு கூறினார்.
“நான் மீரா கிட்ட எந்த உண்மையும்
சொல்ல மாட்டேன். ஆனா, நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன். அதை நீ செஞ்சு
கொடுக்குறேன்னு எனக்கு சத்தியம் பண்ணனும்”.
“ஐயோ மாமா! என்னால் முடியாத
காரியத்தை எதுவும் கேட்டுடாதீங்க” என்று கூறி அழுதார் வள்ளி.
“இது மீராவை பத்தின விஷயம் இல்ல
வள்ளி. நீ எதையும் நினைச்சு பயப்பட வேண்டாம். உன் பொண்ண உன்கிட்ட இருந்து நான்
பிரிச்சிட மாட்டேன். இது வேற விஷயம்”.
அவரை
யோசனையோடு பார்த்த வள்ளி, “எதுவா இருந்தாலும் சொல்லுங்க
மாமா. என்னால் முடிஞ்சா கண்டிப்பா நான் பண்ணி கொடுக்கிறேன்”.
உடனே
வேலுச்சாமி தாமதிக்காமல், “உன் பேரனுக்கும், அதாவது மீராவோட
பையனுக்கும், என் பேத்தி கயல்விழிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று மெதுவாக குண்டை போட்டார்.
அதை
கேட்ட வள்ளியம்மைக்கு என்ன பதில் கூறுவது என்று ஒன்றும் புரியவில்லை. அபிமன்யுவின்
குணம் அறிந்தவர் ஆயிற்றே... அபி இதற்கு ஒப்புக்கொள்வானா என்று அவருக்கு
தெரியவில்லை.
யோசனையாக
இருந்த வள்ளியை வேலுச்சாமி, “என்ன வள்ளி, ஒன்னுமே சொல்ல
மாட்டேங்குற. எனக்கு சத்தியம் பண்ணி கொடு. நான் இருந்தாலும், இல்லைனாலும் உன்
பேரனுக்கும், என் பேத்திக்கும் நீ கல்யாணம் பண்ணி வைக்கணும். இது தான் என்னுடைய
கடைசி ஆசை” என்று கூறி தன் நடுங்கிய கையை
மெதுவாக தூக்கி வள்ளியின் புறம் நீட்டினார்.
வேறு
வழியில்லாமல் தனக்கு பிள்ளை செல்வத்தை வாரி வழங்கிய தன் அக்காவிற்கும்,
மாமாவிற்கும் தன்னால் செய்ய முடிந்த ஒரு கைமாறாக நினைத்து வேலுச்சாமியின் கையில்
வள்ளியம்மை சத்தியம் செய்தார், “கவலைப்படாதீங்க மாமா, உங்க
பேத்திக்கும், என் பேரனுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிறது என்னுடைய பொறுப்பு”.
அதைக்
கேட்ட வேலுச்சாமிக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக்சிஜன் மாஸ்கை திரும்பவும் அணிவித்த
வள்ளி, “நான் வெளியில் இருக்கேன் மாமா.
மீராவை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு வெளியே
சென்றார்.
இவர்
வெளியே வந்தவுடன் மீரா அறையினுள் சென்றார். மீராவை பார்த்த வேலுச்சாமிக்கு
வார்த்தைகள் எழவில்லை. கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் மட்டுமே வழிந்து
கொண்டிருந்தது.
வேலுச்சாமியின்
அருகே வந்த மீரா, “அச்சோ.. என்ன ஆச்சு வேலுப்பா.
ஏன் அழுகுறீங்க”.
மீரா
தன்னை ஒரு முறையாவது ‘அப்பா’ என்று அழைக்க மாட்டாளா என்ற அவரின் பல வருட ஏக்கத்தை தன் ஒரே
வார்த்தையில் தனக்கே தெரியாமல் தீர்த்து வைத்து விட்டாள் மீரா.
வேலுச்சாமிக்கு
மீரா ‘அப்பா’ என்று அழைத்ததும் சந்தோஷத்தில் தன் உடல் முழுவதும் குணமாகி
விட்டதைப் போல் உணர்ந்தார். இதுவரை இனிமேல் நாம் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்
என்று இருந்த வேலுச்சாமிக்கு, தன் மகளின் ஒற்றை ‘அப்பா’ என்னும் வார்த்தை பெரும் தெம்பை
கொடுத்தது.
இன்னும்
சிறிது காலம் தன் மகளுடனும், பேரக் குழந்தைகளுடனும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை
வேலுச்சாமிக்கு கொடுத்தது. வேலுச்சாமி தன் ஆக்சிஜன் மாஸ்கை கழட்டி விட்டு
தன் கண்ணீரை துடைத்து விட்ட மீராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “ஒன்னும் இல்லடா. இத்தனை வருஷம் உங்களை
எல்லாம் பார்க்க முடியாத ஏக்கம், இப்போ பார்த்ததும் ஆனந்த கண்ணீரா வந்திடுச்சு” என்று சிரித்த முகமாக கூறினார்.
அவரைப்
பார்த்த மீராவுக்கும் கண்களில் சிறிது ஆனந்த கண்ணீர் துளிர்விட்டது.
“இவ்வளவு பாசமா இருக்கீங்க.
அப்புறம் ஏன் வேலுப்பா பிரிஞ்சு இருந்தீங்க. எங்களுக்கு எந்த உறவும் இல்லைனு
இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் இப்படி ஒரு
பெரியம்மாவும், பெரியப்பாவும் இருக்கிறதே எனக்கு தெரிஞ்சது. எனக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்கு. நமக்குன்னு கூட பிறந்த அண்ணன்,
தம்பி யாரும் இல்லையேனு பல நாள் வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா, இப்போ சுப்பிரமணி
அண்ணா கிடைச்சிருக்காங்க. எங்களுக்கும் இவ்வளவு உறவு இருக்குன்னு இன்னைக்கு தான்
தெரிஞ்சது வேலுப்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கூறினார் கண்களில் ஆனந்த கண்ணீருடன்.
“சரி மா, உன் புள்ளைங்க வரலையா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார்
வேலுச்சாமி.
“இல்லப்பா, பெரியவன் என் கூட தான்
வந்து இருக்கான். வெளியில் இருக்கான். சின்னவன் காலேஜ் போய் இருக்கான். பொண்ணுக்கு
பரீட்சை நடந்துக்கிட்டு இருக்கு”.
“உன் வீட்டுக்காரர் வரலையா மா?”.
“இல்லப்பா. அவர் பிசினஸ் விஷயமா
வெளியூர் போயிருக்கார்”.
“உங்க அப்பா?” என்று கேள்வியாக வினவினார் வேலுச்சாமி.
“நீங்க உடம்பு சரியாகி வந்ததும்
சொல்றேன்” என்று கூறினாள் மீரா.
மீராவின்
சிரித்த முகத்தை பார்த்ததுமே, வேலுச்சாமிக்கு புது தெம்பு கிடைத்துவிட்டது. மீரா
பேசிக்கொண்டு இருக்கையில், வெளியே அனைவரும் பதட்டமும், பயமும் ஆக நின்று
கொண்டிருந்தனர்.
வள்ளியம்மை
மட்டுமல்லாது, மரகதம் பாட்டி குடும்பத்தினரும் மீராவிடம் எந்த உண்மையையும்
வேலுச்சாமி கூறி விடக்கூடாது என்று பதட்டமாக இருந்தனர்.
வள்ளியம்மை
பாட்டிக்கு, மீராவுக்கு உண்மை தெரியக்கூடாது என்ற பதட்டம் ஒரு புறம் இருந்தாலும்,
வேலுச்சாமி தன்னிடம் வாங்கிய சத்தியத்தின் படி எப்படியாவது அபிமன்யுவுக்கும்,
கயல்விழிக்கும் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.
இந்த திருமணத்திற்கு அபிமன்யுவை எப்பாடுபட்டாவது ஒப்புக்கொள்ள வைத்துவிட வேண்டும்
என்ற முடிவுடன் இருந்தார்.
மீரா
வேலுச்சாமியிடம் பேசிக்கொண்டு இருக்கையிலே மருத்துவர் அறையினுள் நுழைந்தார்.
உள்ளே
வந்ததும் மருத்துவர், “நீங்க யாரு?” என்று மீராவை பார்த்து வினாவினார்.
“நான் இவங்க சொந்தக்காரங்க”.
“ஓகே, ஒரு நிமிஷம் வெளிய வெயிட்
பண்ணுங்க. பேஷண்டை செக் பண்ணனும்” என்று கூறி மீராவை வெளியே
அனுப்பினார் மருத்துவர்.
‘சரி’ என்னும் விதமாக மருத்துவரிடம் தலையசைத்த மீரா,
வேலுச்சாமியையும் பார்த்து தலையசைத்து விட்டு வெளியே சென்றார். வெளியே வந்த மீராவை
அனைவரும் ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்.
மீராவிடம்
எந்த ஒரு மாற்றமும் இல்லாததை கண்டு அவளுக்கு எந்த உண்மையையும் வேலுச்சாமி
கூறவில்லை என்று முடிவு செய்து கொண்டனர். வெளியே வந்த மீரா அனைவரையும் பார்த்து
சினேகமாக புன்னகைத்தார்.
நேராக
மரகதம் பாட்டியிடம் சென்ற மீரா, “என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க
பெரியம்மா” என்று கூறி டக்கென்று காலில்
விழுந்து விட்டார்.
ஒரு
நிமிடம் திகைத்து செய்வதறியாது நின்ற மரகதம் பாட்டி, “நல்லா இருமா, நல்லா இரு.. எழுந்திரு” என்று தூக்கிவிட்டார்.
மரகதம்
பாட்டிக்கும் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. தான் ஈன்றெடுத்த மகளை இத்தனை
வருடங்கள் கழித்து கடவுள் அவரின் கண்களில் காட்டியுள்ளாரே, தன் மகளை ஆசை தீர உச்சி
முகுந்தார் மரகதம் பாட்டி.
வேலுச்சாமிக்கு
செய்து கொடுத்த சத்தியத்தை வள்ளியம்மை எப்படி காப்பாற்றப் போகிறார்..?
இதற்கு
அபிமன்யு ஒப்புக் கொள்வானா..?
இதற்கு
மீராவின் பதில் என்னவாக இருக்கும்..?
கருத்துகள்
கருத்துரையிடுக