அவனதிகாரம் - 18

 

அதிகாரம் - 18

தான் பல வருடங்கள் கழித்து பல கனவுகளோடு ஆசையாக ஈன்றெடுத்த தன் மகளை காண இத்தனை ஆண்டுகளாய் தவம் இருந்தார் மரகதம் பாட்டி. அவரின் தவத்திற்கு இறைவன் அளித்த அருட்கொடையாக இன்று மீராவை அவர் சந்தித்து விட்டார்.

 

தன் ஆசைத் தீர தன் மகளை உச்சி முகர்ந்தவர். அவரை முழுவதுமாக தன் கண்களில் நிரப்பிக் கொண்டார். பல வருடங்கள் கழித்து பார்த்த தங்கை மகளை ஆசையாக பார்க்கிறார் என்று எண்ணிய மீரா அறியவில்லை, இவர் தான் அவளை பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் என்று..

 

விதியின் விளையாட்டு இவர்கள் வாழ்வில் இன்னும் முடியவில்லை போலும்.. அப்பொழுது, மருத்துவர்மனைக்குள் நுழைந்தனர் கயல்விழியும், யாழினியும்.

 

யாழினி, அக்கா, தாத்தாவுக்கு இப்போ சரியாயிட்டு இருக்குமா? என்று கயல்விழியிடம் கேட்டாள்.

 

எனக்கு என்னடி தெரியும். போய் பார்த்தா தான தெரியும். அப்பா வேற என்னை பார்த்தாலே டென்ஷன் ஆயிடுவார் என்று வருத்தமாக கூறினாள் கயல்விழி.

 

யாழினி, ஏன் கா இப்படிலாம் சொல்ற, அதெல்லாம் ஒன்னும் இல்ல. அப்பா உன்னை பார்த்தா டென்ஷன் ஆக மாட்டாங்க என்று சமாதானம் படுத்தினாள்.

 

கயல்விழி, ஏன் யாழி உனக்கு தெரியாதா நம்ம வீட்டில் நடக்கிறது பத்தி என்று வருத்தமாக கூறினாள்.

 

எல்லாம் சரியாயிடும் கா. நீ கவலைப்படாத.

 

யாழினி, வெண்ணிலாவை போலும், கயல்விழியை போலும் அல்ல.. இவள் வேறு மாதிரி..

அம்மா என்றால் இவளுக்கு கொள்ளை பிரியம்.

ஆனால், அப்பாவின் முன்னாள் வாயை கூட திறக்க மாட்டாள் அவ்வளவு பயம்.

 

யாழினி அழகிய வட்ட வடிவ முகம் கொண்ட கொடி இடையாள். பிள்ளை முகம் மாறாத பதின் வயது குமரி. ரோஜா நிற வெண்மை தேகம் உடையவள். அப்படியே அவளின் அத்தை மீராவை போல்..

 

பார்ப்பதற்கு மட்டுமல்ல குணத்திலும் அவள் மீராவை போல் தான். அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் அன்பு பாராட்டுவாள், வெள்ளை உள்ளம் கொண்டவள்.

 

யாழினிக்கு தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமே திருமணம் செய்து குழந்தைகளை பெற்று ஜாலியாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது தான்.

 

இவளுக்கு படிப்பில் அவ்வளவு நாட்டம் கிடையாது. சிறுவயது முதலே அவள் வளர்ந்த சூழல் அப்படி.. பெண் பிள்ளைகளுக்கு படிப்பு தேவையில்லை என்று அவளுடைய அப்பா அடிக்கடி கூறுவதை கேட்டு வளர்ந்தவள் வேறு எப்படி இருப்பாள்.

 

வெண்ணிலா திருமணத்தின் போது வெண்ணிலாவின் மேற்படிப்பிற்கு வீட்டில் வேண்டாம் என்று கூறியதும், கயல்விழிக்கும் அதே போல் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதும் இவள் மனதில் நன்கு பதிந்து விட்டது.

 

ஆகையால், நாம் படித்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணத்திலேயே சிறு வயது முதலே படிப்பின் மீது இவளுக்கு நாட்டம் இன்றி போனது. இவள் பள்ளிக்கு செல்வதே ஸ்வேதாவை பார்க்கத்தான்.

 

எந்த ஒரு கவலையும் இன்றி, படித்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இன்றி, தினமும் எழுந்தோம், உண்டோம், ஊர் சுற்றினோம், அனைவருடனும் வாயடித்தோம் என்று பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவள் தான் யாழினி.

 

நம் கதையின் நாயகி..

 

இருவரும் மருத்துவமனையின் உள்ளே நுழைகையில் அபிமன்யு இவர்களுக்கு எதிர்ப்புறம் வந்தான். அவனை பார்த்த யாழினி, யாருக்கா இது.. புதுசா இருக்கு.. நம்ம ஊரில் இப்படி ஒரு பையனா? நான் பார்த்ததே இல்லையே என்று கூறி வாயை பிளந்து கொண்டு செல்லும் அபிமன்யுவை பார்த்தாள்.

 

அபிமன்யு, ஆறடிக்கும் சற்று உயரமான ஆண்மகன். பளிச்சென்று சொல்லும் வெள்ளை நிறமும் அல்லாது மாநிறமும் அல்லாது நடுத்தர வெள்ளை நிறத்தில் இருப்பவன்.

 

எப்பொழுதும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். எப்பொழுது அவனைப் பார்த்தாலும் அவன் சிகைகள் அழகாக ஜெல்லின் கைவசத்தால் அவன் சொல் பேச்சுக்கு படிந்து இருக்கும்.

 

வீட்டில் இருக்கும் பொழுது கூட, அவனுடைய உடைகளில் தனித்தன்மை தெரியும். அவன் அணியும் உடை முதல், காலணி வரை அனைத்திலும் தான் பெஸ்ட் ஆக இருக்க வேண்டும்  என்று மெனக்கெடுப்பவன்.

 

பார்ப்பதற்கே கம்பீரமாகவும், ஆளுமை நிறைந்தவனாகவும் இருப்பவன். தன் கண் அசைவிலேயே அனைவரையும் ஆட்டி வைக்கும் வல்லமை படைத்தவன். சிறு வயது முதலே இவன் யாரிடமும் தன் பாசத்தை காட்டி ஜெயித்தது இல்லை. அனைவரிடமும் தன் அதிகாரத்தின் மூலமே தான் நினைத்த காரியத்தை செய்து முடிப்பவன் தான் நம் நாயகன். இதற்கு, அவன் வீட்டினரும் விதிவிலக்கல்ல.

 

அவர்களிடமும் தன் அதிகாரத்தையும், ஆளுமையையும் மட்டுமே காட்டுவான். எப்பொழுதாவது பாசத்தையும் சிறிது காட்டுவான். ஆனால், அதுவும் அதிகாரத் தோணியில் தான் வெளிவரும்.

 

யாழினி தன்னை பார்ப்பதையும், அவள் கூறும் வார்த்தைகள் தன் காதில் கேட்டும் கூட ஒரு சிறு அசைவும் அவனிடம் இல்லை. எப்பொழுதும் போல் தன் கம்பீர நடையில் அவர்களை கடந்து வெளியேறினான் அபிமன்யு.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த யாழினியின் தலையில் தட்டிய கயல்விழி, என்ன பண்ற யாழி என்று அதட்டினாள்.

 

அக்கா.. அங்க பார்த்தியா.. அந்த அண்ணா சூப்பரா இருக்காங்கல்ல.. நல்லா இருக்காங்க அக்கா என்று அசடு வழிந்தாள் யாழினி.

 

என்ன பேச்சு இதெல்லாம் யாழி. ஒரு பையனை இப்படித் தான் பார்க்குறதா. அவன் நம்மை பத்தி என்ன நினைப்பான். இதெல்லாம் கெட்ட பழக்கம். அப்பாவுக்கு தெரிஞ்சா தோளை உரிச்சிடுவார் என்றும் மிரட்டினாள் கயல்.

 

அப்பா என்னும் வார்த்தையைக் கேட்டவுடன் பெட்டிப் பாம்பாய் அடங்கினாள் யாழினி, ஐயோ அக்கா! அப்பா கிட்ட சொல்லிடாத, நான் சும்மா தான் சொன்னேன் என்று கூறி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

 

சோகமாக இருக்கும் யாழினியை பார்க்க கயல்விழிக்கு பிடிக்கவில்லை, சரி சரி விடு இந்த பேச்சை.. வா, போய் தாத்தாவை பார்க்கலாம் என்று கூறி அவளின் கையை பிடித்து தாத்தா இருக்கும் அறையை நோக்கி நடந்தாள் கயல்விழி.

 

யாழினி அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக கயல்விழியின் பின்னாலேயே சென்றாள்.

 

வெளியே வந்த அபிமன்யு, இந்த ஊரில் எல்லாம் ஒரு மாதிரி தான் போலருக்கு. அந்த ஜீவா, என்கிட்டயே ஆட்டிடியூட் காட்டுகிறான். இந்த பொண்ணு, பார்க்க சுண்டக்கா சைஸ்ல இருந்துகிட்டு என்னை சைட் அடிக்கிறா இடியட்ஸ்.. என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே காரில் ஏசியை போட்டு உள் அமர்ந்தான்.

 

தனக்கு பிடித்த மெலோடி ஹிட்ஸ் சாங் ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்து கேட்டுக்கொண்டு கண்முடி அமர்ந்தான் அபிமன்யு.

 

கயல்விழியும், யாழினியும் மீராவையும், வள்ளியம்மை பாட்டியையும் பார்த்து யார் என்று தெரியாமல் அமைதியாக நின்றனர்.

 

இவர்களை பார்த்த மீரா, யார் இது அண்ணி? என்று லட்சுமியிடம் கேட்டார்.

 

இவங்க ரெண்டு பேரும் எங்க பொண்ணுங்க என்று கூறி, கயல்விழியை காட்டி, இது எங்க ரெண்டாவது பொண்ணு கயல்விழி என்று அறிமுகம் செய்து வைத்தார்.

 

உடனே கயல்விழி, வணக்கம் ஆன்ட்டி என்று கைகூப்பி வணங்கினாள்.

 

அதற்கு புன்னகையுடன் தலையசைத்த மீரா அடுத்து யாழினியை பார்த்தார்.

 

இவ தான் கடைக்குட்டி யாழினி ரொம்ப வாலு என்று கூறினார் லட்சுமி.

 

அப்பாவின் முன்பு அம்மா தன்னை வாலு என்று கூறியதும், எங்கே அப்பா திட்டுவாரோ என்று திருதிருவென விழித்தாள் யாழினி. மீரா புன்னகையோடு யாழினியின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார்.

 

அருகில் இருந்த கயல்விழி யாழினியின் தோளில் இடித்து, வணக்கம் சொல்லுடி ஆன்ட்டிக்கு என்று கூறினாள்.

 

உடனே யாழினியும் கைகூப்பி, வணக்கம் ஆன்ட்டி என்று கூற.

 

மீரா, பரவாயில்ல, இருக்கட்டும்மா என்று கூறினார்.

 

மீராவின் பார்வை சில நொடிகள் யாழினியின் மேலேயே நிலைத்து இருந்தது. அவருக்கு யாழினியை பார்த்தவுடன் பிடித்து விட்டது. அவரின் மனதிற்குள் யாழினிக்கும், தன் மகன் ஆரியனுக்கும் திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடியது.

 

இவரின் எண்ணம் இவ்வாறு இருக்க.. வள்ளியம்மை பாட்டியோ கயல்விழியை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். தன் பேரனுக்கு இவள் சரியான ஜோடி என்று எண்ணிக் கொண்டு இருந்தார்.

 

இவர்களின் எண்ணம் இவ்வாறு இருக்க. விதியின் விளையாட்டு எவ்வாறு இருக்குமோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

பிறகு, கயல்விழி தன் அம்மாவிடம், இவங்க... என்று மீராவை கைகாட்டி கேட்டாள்.

 

இவங்க பேரு மீரா உனக்கு அத்தை முறை என்று கூறினார் லட்சுமி.

 

யாழினி அதிர்ச்சியாக, அத்தையா? என்று சத்தமாக கத்தி விட்டாள்.

 

பிறகு, தன் அப்பா இருப்பதை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டு அமைதியானாள். அவளின் சிறுபிள்ளைத்தனமான செய்கைகளை எல்லாம் பார்த்த மீராவுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

மரகதம் பாட்டி, இதுக்கு ஏன் டி இவ்வளவு ஷாக் ஆகுற. இது என்னோட தங்கச்சி என்று வள்ளியம்மையை கை காட்டினார். அதற்குள் செவிலியர் ஏதோ மருந்து சீட்டை கொண்டு வந்து நீட்ட.

 

சுப்பிரமணி அதனை வாங்க மருந்தகம் நோக்கி நகர்ந்தார். அவர் செல்வதை உறுதிப்படுத்திக் கொண்ட யாழினி மரகதம் பாட்டியிடம், கிழவி, உனக்கு தங்கச்சிலாம் கூட இருக்கா என்று கிண்டலாக கேட்டாள்.

 

ஏன் டி, உனக்கு அக்கா இருக்கும் போது எனக்கு தங்கச்சி இருக்கக் கூடாதா..? என்று கேட்டார் மரகதம் பாட்டி.

 

அதற்கு யாழினி, இருக்கலாம்.. ஆனா, அது எப்படி, இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் உனக்கு தங்கச்சி பிறந்து இருக்காங்க. இவ்வளவு நாள் எங்ககிட்ட சொல்லவே இல்ல என்று ஒரு மாதிரி பார்த்தாள் மரகதம் பாட்டியை.

 

அதற்கு மரகதம் பாட்டி வள்ளியம்மையிடம், இவ இப்படித் தான் வள்ளி ஏதாவது கிறுக்குத்தனமா வாய் அடிச்சுக்கிட்டே இருப்பா. இந்த கழுதைக்கு வாய் கொஞ்சம் நீளம். நீ ஒன்னும் நினைச்சுக்காத.

 

பரவாயில்லக்கா, இதில் என்ன இருக்கு. சின்ன பசங்கனா அப்படி தான்.

 

உடனே யாழினி, பார்த்தியா பாட்டி... உன்னை விட உன் தங்கச்சி ரொம்ப நல்லவங்க போலருக்கு. உனக்கு இப்படி ஒரு நல்ல தங்கச்சியா! என்று ஆச்சரியப்படுவது போல் செய்கை செய்தாள்.

 

இதை பார்த்த அனைவருக்கும் தங்கள் சோகம் மறந்து சிரிப்பு வந்து விட்டது. ஏன் டி அப்போ என்னை கெட்டவனு சொல்றியா என்று முறைத்து பார்த்தார் மரகதம் பாட்டி.

 

உடனே யாழினி, அதை வேற நான் என் வாயால சொல்லணுமா. அதான் இந்த ஊருக்கே தெரியுமே.

 

இரு டி, உன் அப்பன் இல்லை என்ற தைரியத்தில் பேசுறியா. வரட்டும், உனக்கு இருக்கு.

 

உடனே வள்ளியம்மை பாட்டியை தன் வசம் அழைத்த யாழினி, பாருங்க பாட்டி உங்க அக்காவை.. எப்போ பார்த்தாலும் சின்ன பிள்ளைனு கூட என்னை பார்க்காமல் அப்பாகிட்ட சொல்லிக் கொடுக்குறதிலேயே குறியா இருக்கும். என்னால சுதந்திரமா பேசக்கூட முடியல இந்த வீட்டில். எல்லாம் இந்த கிழவியால் தான் என்று கூறி மரகதம் பாட்டியை காட்டினாள்.

 

நீ விடுத்தா.. அக்கா அப்படி தான். உனக்கு என்ன வேணும்னாலும் பேசு. நான் பார்த்துக்குறேன் என்று யாழினிக்கு சப்போர்ட்டாக வந்தார் வள்ளியம்மை பாட்டி.

 

வேண்டாம் வள்ளி, இவளை பத்தி தெரியாமல் அவ பக்கம் பேசாத. பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ என்று மரகதம் பாட்டி எச்சரித்தார் வள்ளியம்மையை.

 

இவர்களின் உரையாடலை அனைவரும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

லட்சுமி மீராவிடம், இவ இப்படித் தான் அண்ணி.. அத்தைக்கிட்ட ஏதாவது வம்பு இழுத்துக்கிட்டே இருப்பா. பெரியவளுங்க ரெண்டு பேரும் வேற மாதிரி. இவளுக்கு மட்டும் வாய் கொஞ்சம் அதிகமாயிடுச்சு என்றார்.

 

சின்ன பிள்ளை தானே அண்ணி, விடுங்க.. அவ இஷ்டப்படி இருக்கட்டும் என்று கூறி அவள் தலையை தடவி விட்டார் மீரா.

 

என்னமோ தெரியவில்லை, மீராவிற்கு யாழினியைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது. சிறு வயதில் அவரும் யாழினியை போன்ற ஜாடையில் தான் இருப்பார். அதனாலோ என்னவோ..

 

வள்ளியம்மை பாட்டிக்கு கயல்விழியை பார்த்ததும் பிடித்துவிட்டது. ஏனென்றால், அவள் தானே அவரின் மூத்த பேரனின் மனைவியாக வரப்போகிறாள். ஆகையால், கயல்விழியையே பார்த்துக் கொண்டிருந்தார் வள்ளியம்மை பாட்டி.

 

ஏற்கனவே, ஆடிய விதியின் விளையாட்டில் குடும்பமே சிதறிவிட்டது. மீண்டும் என்ன இவர்களுக்கு செய்ய காத்து இருக்கிறதோ தெரியவில்லை...!

 

வள்ளியம்மை பாட்டியின் எண்ணம் போல் அபிமன்யுவிற்கும், கயல்விழிக்கும் திருமணம் நடக்குமா...?

 

மீராவின் எண்ணம் போல் ஆரியனுக்கும், யாழினிக்கும் திருமணம் நடக்குமா...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5