அவனதிகாரம் - 21

 

அதிகாரம் – 21

 

அபிமன்யு, எப்படியாவது மீராவை அங்கிருந்து சீக்கிரமாக அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற முனைப்பிலேயே இருந்தான். அபிமன்யுவிற்கு மீரா இவர்களின் மேல் பாசம் காட்டுவதும், அன்பாக பழகுவதும் சுத்தமாக பிடிக்கவில்லை.

 

அது எப்படி பார்த்து ஒரு நாள் கூட ஆகிடாதவர்கள் மேல் இப்படி பாசம் வரும். அதுவும் சொந்தம் என்று இன்று தான் தெரியும். ஏதோ, பல வருட பழக்கம் போல் இவனின் அம்மா இயல்பாக அவர்களுடன் பழகுவது அபிமன்யுவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

 

மேலும், பல கேள்விகளையும் அவனின் மனதிற்குள் எழுப்பியது. குழப்பமான மனநிலையில் தான் இருந்தான் அபிமன்யு.

 

எந்த ஒரு விஷயத்தையும் சரியாக கணிப்பவன். எவ்வளவோ பெரிய பெரிய ப்ராஜெக்ட்களை எல்லாம் சாதாரணமாக கைப்பற்றுபவனால் இந்த விஷயத்தில் எளிதில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இப்படி அவன் எந்த ஒரு விஷயத்திலும் குழம்பி நின்றதே கிடையாது. இது தான் முதல் முறை. அதுவே அவனை அச்சுறுத்தியது.

 

ஏதோ விபரீதமாக தான் நடக்கப் போகிறது என்று அவன் மனம் அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. ஆகையால், எப்படியாவது அங்கிருந்து சீக்கிரம் சென்று விட வேண்டும் என்பதே அபிமன்யுவின் குறியாக இருந்தது.

 

சரி அபி, கிளம்பலாம் வா என்று கூறி மரகதத்தை பார்த்த மீரா, நாங்க கிளம்புறோம் பெரியம்மா. கண்டிப்பா இன்னொரு நாள் வருவோம். பெரியப்பாவுக்கு நல்லபடியா குணமாகி வீட்டுக்கு வந்ததும் சொல்லுங்க நாங்க கண்டிப்பா வரோம்.

 

சரிமா, உன் நம்பர் கொடுத்துட்டு போ.

 

நீங்க போன் வச்சிருக்கீங்களா பெரியம்மா.

 

இல்லமா, என்கிட்ட இல்ல. கயல் கிட்ட கொடுத்துட்டு போ. அவ உன்கிட்ட பேசணும்னு நினைச்சா போட்டு கொடுப்பா.

 

சரிங்க பெரியம்மா. நான் கொடுத்துட்டு போறேன். அடிக்கடி போன் பண்ணுங்க என்று சிரித்த முகமாக கூறிவிட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.

 

சிறிது நேரம் மரகதத்திற்கு மனம் பாரமாக ஆகிவிட்டது. பார்த்து ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் எப்படி ஒட்டிக் கொண்டாள். தன் ரத்தம் என்பதினால் தானே என்று எண்ண கண்கள் கலங்கி விட்டது.

 

என்ன தான் தன் தங்கையிடமே தான் பெற்ற மகளை கொடுத்து வளர்த்திருந்தாலும், முழு மனதாக அவரின் மனம் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. மனதின் ஒரு ஓரத்தில் அந்த வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது.

 

இருந்து கொண்டே தான் இருக்கும்!

 

வள்ளியம்மையும் அவரின் மகளை எப்படியோ போகட்டும் என்று விடவில்லையே. தான் பெற்றெடுத்த மகளை எப்படி பார்த்திருப்பாரோ, அதைவிட பல மடங்கு அதிகமாக தான் மீராவை பார்த்தார். தனக்கு வரமாய் கிடைத்த மகளை சிறு வயது முதலே அன்பை கொட்டி வளர்த்தார்.

 

கிருஷ்ணமூர்த்தியை பற்றி சொல்லவே வேண்டாம். அவருக்கு எல்லாமே மீரா தான். மீராவிற்கு அடுத்தபடி தான் வள்ளியம்மை கூட. நல்ல முறையில் வளர்த்து, திருமண வாழ்க்கையும் நல்ல முறையில் தான் அமைத்துக் கொடுத்தனர்.

 

நன்கு வசதி வாய்ந்த, செல்வாக்கு நிறைந்த இடத்தில் தான் மீராவை திருமணம் முடித்துக் கொடுத்தனர். மகேந்திரன் ஒன்றும் சாதாரண குடும்பத்து பிள்ளை இல்லை. அவர்கள் பரம்பரை பரம்பரையாக ஜவுளி வியாபாரம் செய்பவர்கள்.

 

கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வந்து ஜவுளி வியாபாரம் செய்யத் தொடங்கி தன் கடின உழைப்பால் மேலும் மேலும் முன்னேறினார். சிறிது காலத்திலேயே அவரின் ஜவுளி வியாபாரம் பெரும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டது.

 

அதன் பலனாய் சென்னைக்குள்ளேயே பல கடைகளை திறந்தார். இவருடன் ஜவுளி வியாபாரத்தில் பழக்கமானவர் தான் மகேந்திரனின் அப்பா. இவரின் கடின உழைப்பையும், வளர்ச்சியையும் கண்டு இவரின் மகளை தன் மகனுக்கு மணமுடிக்க முன் வந்தார்.

 

ஜவுளி வியாபாரத்தில் முதலிடத்தில் இருப்பது தான் மகேந்திரன் டெக்ஸ்டைல்ஸ். அப்பேர்பட்ட பெரிய இடத்தில் இருந்து தங்கள் மகளை கேட்டு வந்தது கிருஷ்ணமூர்த்திக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

மீரா, சிறு வயது முதலே மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கிருஷ்ணமூர்த்தி கூறிக் கொண்டே இருப்பார். மீரா வளர வளர தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கு மீராவின் ராசி தான் காரணம் என்று தன் மனைவியிடம் பெருமையாக கூறிக் கொண்டே இருப்பார்.

 

இப்பொழுதும் மீராவின் ராசி தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து அவளை பெண் கேட்டு வந்திருக்கின்றனர். அங்கே திருமணம் முடித்து வைத்தால் தங்கள் மகள் சீரோடும், சிறப்போடும் ராணியை போல் வாழ்வாள் என்று மணம் முடித்து விட்டனர். அவர்களின் எண்ணம் போல் தான் மீராவின் வாழ்க்கையும் அமைந்தது.

 

வழக்கம் போல் ஏதேதோ காரணங்களை நினைத்து தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டார் மரகதம். பின்னர், மீராவை பின் தொடர்ந்து மரகதமும் வீட்டினுள் நுழைகையில் கயல்விழியிடம், கயல், அத்தைக்கிட்ட உன் நம்பரை குடுமா என்று கூறினார்.

 

என் நம்பரா... என்று இழுத்தாள் கயல்விழி.

 

ஆமா கயல். அத்தை ஊருக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணி பேசுறதா சொல்லி இருக்காங்க. அதுக்கு தான் உன் நம்பரை கொடுத்தா அவங்க உனக்கு போன் பண்ணுவாங்க. நீ என்கிட்ட குடுப்ப என்று விளக்கம் அளித்தார்.

 

சரி பாட்டி என்று கூறிய கயல்விழி, தன் இலக்கத்தை அவருக்கு கொடுத்தாள்.

 

பிறகு, லட்சுமி அனைவருக்கும் காபியும், சிற்றுண்டியும் கொடுத்தார்.

 

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன், சரி, நேரம் ஆயிடுச்சு நாங்க கிளம்புறோம் என்று கூறினார் மீரா.

 

உடனே, அபிமன்யு எழுந்து நின்று விட்டான். மேலும், தான் அமர்ந்திருந்தால் இவர்கள் இன்னும் நேரம் கடத்துவார்கள் என்று தான் புறப்பட்டு விட்டேன் என்று அவர்களுக்கு உணர்த்தும் விதமாக எழுந்து நின்றான்.

 

எதையோ யோசித்துக் கொண்டே இருந்த வள்ளியம்மை பாட்டியை அழைத்தார் மரகதம் பாட்டி, என்ன வள்ளி, என்ன யோசனையா இருக்க?.

 

அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் நேராக எழுந்து சென்று மரகதத்தின் கரங்களைப் பிடித்த வள்ளியம்மை, அக்கா, என் பேரனுக்கு உன் பேத்தியை கட்டி கொடுப்பியா? என்று தடாளடியாக போட்டு உடைத்தார்.

 

இதைக் கேட்ட அனைவருக்கும் ஒரு நிமிடம் நிதானிக்க தேவைப்பட்டது. முதலில் இவர் கூறுவதை உணர்ந்த அபிமன்யுவிற்கு பிபி எகிரி விட்டது.

 

கோபத்தின் உச்சியில், பாட்டி... என்ன பேசுறீங்க நீங்க என்று கத்தினான்.

 

உடனே மீரா தாங்கள் இருக்கும் சூழலை உணர்ந்து, அபி வாட் இஸ் திஸ். ஷெட் அப் என்றார் அதட்டலாக.

 

கட்டுக்கடங்காத கோபத்துடன் இருந்த அபிமன்யு அதற்கு மேல் அங்கே ஒரு நிமிடம் கூட நிற்க முடியாமல் வெளியேறி விட்டான். தங்கள் காரின் அருகில் சென்ற அபிமன்யு தன் கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அங்கே அருகில் இருந்த அரச மரத்தின் மேல் ஓங்கி குத்திக் கொண்டே இருந்தான், கையில் குருதி வழியும் வரை.

 

அவன் பாட்டி கூறியதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை, சற்றும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எப்படி அவரால் இப்படி கேட்க முடிந்தது என்று நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

 

அவன் கோபமாக வெளியே சென்றதை பார்த்த மீராவிற்கு என்ன சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை. குடும்பத்தில் இருந்த அனைவருமே அபிமன்யுவின் கோப முகத்தை பார்த்து திகைத்து நின்று விட்டனர். அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை வள்ளியம்மை.

 

தன் அக்காவின் கையை பிடித்தவர், அவனை விடுக்கா, நீ சொல்லு. என் பேரனுக்கு உன் பேத்தியை கட்டிக் கொடுக்குறியா? என்று மறுபடியும் கேட்டார்.

 

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்த மரகதத்திற்கு அப்பொழுது தான் நினைவு வந்தது வள்ளியம்மையிடம், மாமா ஏதாவது சொன்னாங்களா?.

 

சில நிமிடம் அமைதி காத்த வள்ளியம்மையை மேலும் மரகதம் ஊக்குவிக்கவும், ஆமாக்கா.. மாமா தான் கேட்டாங்க. இதான் அவங்களோட கடைசி ஆசைன்னு சொன்னாங்க. எனக்கும் மாமாவோட ஆசையை நிறைவேற்ற விருப்பம் தான். நான் இதை மாமாவோட ஆசைக்காக மட்டும் சொல்லல, எனக்கும் இதில் முழு விருப்பம். அதனால் தான் கேட்குறேன். உனக்கு சம்மதமா?.

 

அதற்கு மரகதம், இதில் நான் சம்மதிக்க என்ன இருக்கு வள்ளி. முடிவு பண்ண வேண்டியது சுப்பிரமணியனும், லட்சுமியும் தான் என்று கூறி லட்சுமியை பார்த்தார்.

 

லட்சுமி, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சின்னத்த. அவங்க வீட்டுக்கு வந்ததும் கேட்டுட்டு முடிவு சொல்லவா என்று தயங்கியபடி கேட்டார்.

 

திகைப்பாக மீரா இருப்பதை கண்ட மரகதம், நீ என்ன சொல்ற மீரா. உனக்கு சம்மதமா? என்று மீராவின் சம்மதத்தை அறிய கேட்டார்.

 

ஆங்... என்று விழித்த மீரா வள்ளியம்மையைப் பார்த்து, அம்மா, அபி... என்று இழுத்தார்.

 

அவனை நான் பார்த்துக்குறேன். உனக்கு சம்மந்தமானு மட்டும் சொல்லு மீரா என்றார் வள்ளியம்மை திட்டவட்டமாக.

 

அவர் எப்படியும் அபியை சம்மதிக்க வைத்து விடுவார் என்று நம்பிய மீரா, எனக்கு சம்மதம் என்று கூறி புன்னகைத்தார்.

 

மரகதம் கலக்கமாக, நமக்குள்ள மட்டும் பேசிக்கிட்டா எப்படி வள்ளி.. தம்பி கோவமா போகுதே என்று வருத்தமாக கேட்டார்.

 

வள்ளியம்மை, அவன் அப்படி தான்‌க்கா. எதுக்கும் ஒத்து வரமாட்டான், அவனை எப்படி சரி கட்டணும்னு எனக்கு தெரியும். அவன் இப்படி முரட்டுத்தனமா இருக்கான்னு பயப்படாதீங்க. அவன் ரொம்ப நல்லவன் தான். ஆனா, இப்படி முரட்டுத்தனமா தான் எதையுமே வெளிப்படுத்துவான்.

 

அப்படியா... என்று இழுத்த மரகதத்திற்கு அபிக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்னும் எண்ணமும் ஒரு புறம் ஓடியது.

 

தன் அக்காவின் எண்ண ஓட்டத்தை உணர்ந்த வள்ளியம்மை அவரின் கரங்களில் அழுத்தத்தை கொடுத்து, எனக்கு நீ அக்கா மட்டும் இல்ல, கடவுள் மாதிரி என்று கூறி கண்கலங்க, என்கிட்ட மாமா கேட்டதுக்காக மட்டும் நான் இதுக்கு சம்மதிக்கலக்கா. உங்க வீட்டில் இருந்து பொண்ணு எடுக்க எனக்கும்  சந்தோஷம் தான். அதனால தான் உன்கிட்ட கேட்டேன். அபி இப்படி பேசுனதை நினச்சு கவலைப்படாதக்கா.  அவன் ரொம்ப நல்லவன், என்ன கொஞ்சம் முன்கோபம் வந்துடும் அவ்வளவு தான். மத்தபடி திறமையானவன். எங்க எல்லார் மேலயும் உயிரையே வச்சிருக்கான். அவனுக்கு உங்க வீட்டு பொண்ண நம்பி கொடுங்க, நல்லபடியா பார்த்துக்கிடுவான். அவனை நினைச்சு நீங்க எதுவும் பயப்படத் தேவையில்லை என்று நம்பிக்கை அளித்தார்.

 

மரகதம், நீ இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் ஏன் யோசிக்க போறேன் வள்ளி. எங்களுக்கும் சம்மதம் தான், எதுக்கும் சுப்பிரமணி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு, கயல் விழிகிட்டயும் கேட்டுட்டு உனக்கு முடிவு சொல்றேன்.

 

பிறகு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு திருப்தியாக கிளம்பினார் வள்ளியம்மை. மறுபுறம் மீராவோ ஒருவித மன குழப்பத்துடன் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினார்.

 

அங்கிருந்து கோபமாக வெளிவந்த அபிமன்யு நேராக சென்று காரில் ஏறியவன் கிளம்பும் தருவாயில் கூட யாரிடமும் ஒரு வார்த்தைக் கூட கூறாமல் கிளம்பி விட்டான்.

 

அவனின் கோபத்தின் அளவை காரின் வேகமே கூறியது. வள்ளியம்மை ஒரு வித மனநிம்மதியுடன் தன் பயணத்தை மேற்கொண்டார். தன்னால் முடிந்த கைமாறை தன் அக்காவிற்கும், மாமாவிற்கும் செய்யப்போகும் மனதிருப்தியில் பயணித்துக் கொண்டிருந்தார்.

 

மீராவோ அபியின் காரின் வேகத்தை வைத்தே அவனின் கோபத்தை அறிந்தவர். இவனை எப்படி சமாளிக்க போகிறோம் என்று எண்ணிக் கொண்டே வந்தார். அம்மா யாரிடமும் கேட்காமல் இப்படி கூறுவார் என்று சற்றும் எதிர்பார்க்காத மீரா பதட்டத்துடனும், எப்படி இதனை எதிர்கொள்ள போகிறோம் என்ற குழப்பத்துடனும் அமர்ந்திருந்தார்.

 

அது மட்டும் இன்றி, அவர் தன் கணவரிடம் இதைப்பற்றி கூற வேண்டும் அல்லவா.. அவரும் இதற்கு சம்மதிக்க வேண்டும். எவ்வளவு வேலை இருக்கிறது. அம்மா யாரிடமும் கேட்காமல் இப்படி சட்டென்று அவர்களிடம் பேசி விட்டாரே என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தார் மீரா. கார் சென்னையில் அவர்களின் வீட்டை அடையும் வரை அபிமன்யு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன் முழு கோபத்தையும் காரிலேயே காட்டிக் கொண்டிருந்தான்.

 

அவ்வப்பொழுது மீராவே அவன் வேகத்தை கண்டு திகைத்து, பார்த்து அபி, பொறுமையா போ என்று இருமுறை கூறிவிட்டார்.

 

ஆனாலும், அவனின் கோபமும் குறைந்த பாடில்லை, காரின் வேகமும் குறைந்தபாடில்லை (அவ்வளவு கோபம் நம்ம ஹீரோ சாருக்கு). நேராக அவர்களின் வீட்டின் முன் காரை நிறுத்தியவன். கேட் கதவை செக்யூரிட்டி திறக்கும் முன்பு கார் ஹாரனை காதுகள் கிழியும் வரை அடித்துக் கொண்டே இருந்தான்.

 

அதில் பதறி ஓடி வந்து கதவினை திறந்த செக்யூரிட்டியிடம், இடியட்! என்ன பண்ணிக்கிட்டு இருக்க. சீக்கிரம் வந்து கதவை திறக்கணும் என்ற அறிவு இல்ல என்று வசைப்பாடி விட்டே காரை உள்ளே எடுத்துச் சென்றான்.

 

கார் சீறிப்பாய்ந்து கொண்டு அவர்களின் வீட்டு வாயிலில் கிரீச் என்னும் சத்தத்தோடு நின்றது. காரில் இருந்து இறங்கிய அபி, ஓங்கி கதவை சாற்றி விட்டு வீட்டினுள் சென்று விட்டான்.

 

இவனை எப்படி கட்டுப்படுத்துவது என்று அறியாத மீரா திரும்பி தன் அன்னையைப் பார்த்தார். ஆனால், இந்த டென்ஷன் எதுவுமே இன்றி வள்ளியம்மை பாட்டி கூலாக இறங்கி வீட்டினுள் சென்றார்.

 

அவருக்கு தெரியுமே என்ன‌ சொன்னால் அபி ஆஃப் ஆவான் என்று. இங்கு என்ன நடக்கிறது என்று மீராவுக்கு தான் பெரும் குழப்பம் ஆகிப்போனது.

 

அபி இவ்வளவு கோவமா இருக்கான். அம்மா எந்த ஒரு ரியாக்ஷ்னும் இல்லாம இவ்வளவு கூலா இருக்காங்க. அபி பத்தி எல்லாம் தெரிஞ்சும் அம்மா எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தாங்க என்ற யோசனையுடனே உள்ளே சென்றார்.

 

உள்ளே மீரா நுழைகையிலே ஆரணி ஓடி வந்து, அம்மா என்று கட்டிக் கொண்டாள்.

 

ஆரணி, எங்கம்மா போயிருந்தீங்க?.

 

ஒன்னும் இல்லை டா. நம்ம சொந்தக்கார தாத்தாவுக்கு உடம்பு முடியல. அதான் பார்த்துட்டு வரலாம்னு போனோம். கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீ சாப்டியா? என்று விசாரித்தார்.

 

ம்ம்.. சாப்பிட்டேன் மா. இந்த ஆரி அண்ணா தான் என்னை டிவி பார்க்கவே விடல. கிரிக்கெட் வச்சுக்கிட்டு என் உயிரை வாங்குறான் என்று ஆரியனை பற்றி கம்பளைண்ட் செய்தாள் ஆரணி‌.

 

உடனே, பொங்கி எழுந்து விட்ட ஆரியன், அம்மா.. அவ பொய் சொல்றா. அவளை நம்பாதீங்க.. ஸ்கூலில் இருந்து வந்ததில் இருந்து சின்ன குழந்தை மாதிரி சின் சான் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருந்தா. நானே இப்போ தான் அவகிட்ட சண்டை போட்டு ரிமோட்டை பிடுங்கி கிரிக்கெட் வச்சேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. இப்போ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி என்னை பத்தி உங்ககிட்ட போட்டுக் கொடுக்குறா என்று தன் பக்க நியாயத்தை கூறினான்.

 

சரி, சரி.. ரெண்டு பேரும் சின்ன பசங்க மாதிரி அடிச்சுக்காதீங்க என்று கூறிய மீரா, போய் படுங்க. மணியாகிடுச்சு காலையில் ஸ்கூல், காலேஜ் போகனும்ல.

 

மாம், ஐ அம் நாட் அ கிட். அவகிட்ட சொல்லுங்க. ஐ நோ வாட் ஐ அம் டூயிங் என்று கூறினான் ஆரியன்.

 

உடனே ஆரணி, மா.. அவனை நம்பாதீங்க. இப்படி தான் உங்ககிட்ட சொல்லிட்டு டெய்லி நைட் வாட்சப்ல பிரண்ட்ஸ் கூட சாட் பண்ணிட்டு படுக்கவே 2 மணி ஆகுது. எப்போ பார்த்தாலும் அவனுடைய போன் ஆன்லைன்லயே இருக்கு என்று போட்டுக் கொடுத்தாள்.

 

நான் ஆன்லைன்ல இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்? என்று அவளை மடக்கினான் ஆரியன். திருதிருவென விழித்தாள் ஆரணி.

 

சரி, சரி.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. உங்க கூட பஞ்சாயத்து பண்ண எனக்கு இப்போ உடம்பில் தெம்பு இல்ல. எதுவா இருந்தாலும், நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ போய் படுங்க என்று இருவரையும் சமாதானம் கூறி அனுப்பி வைத்துவிட்டு தங்கள் அறையை நோக்கி சென்றார் மீரா.

 

வள்ளியம்மை பாட்டியின் ஆசைப்படி அபிமன்யுவிற்கும், கயல்விழிக்கும் திருமணம் நடக்குமா..?

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5