அவனதிகாரம் - 22

 

 

அதிகாரம் – 22

 

வள்ளியம்மை இவ்வாறு கேட்டுவிட்டு கிளம்பியதும், மரகதத்திற்கு பெரும் திருப்தி. தன் மகளுடன் தங்களுக்கான உறவு முடிந்து விட்டது என்று எண்ணியவருக்கு, இல்லை.. முடியவில்லை.. இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது என்று கூறும் விதமாக இப்படி ஒரு விஷயம் வள்ளியம்மை வாயிலாகவே கேட்டதை எண்ணி உள்ளூர மகிழ்ந்து போனார்.

 

அவரால் தன் மகிழ்ச்சியை வேலுச்சாமி தாத்தாவிடம் பகிராமல் இருக்க முடியவில்லை. ஆகையால், வள்ளியம்மையும், மீராவும் கிளம்பிய உடனே மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டார்.

 

மருத்துவமனையை நோக்கி புறப்பட்டவர் நேராக வேலுச்சாமியிடம் சென்று, என்னங்க வள்ளிக்கிட்ட என்ன பேசுனீங்க? என்று எதுவும் தெரியாதவர் போல் கேட்டார்.

 

அதற்கு வேலுச்சாமி, ஏன் மரகதம், என்ன ஆச்சு என்று மெதுவான குரலில் கேட்டார்.

 

வேலுச்சாமியின் உடல்நிலை முன்பை விட இப்பொழுது நிறைய முன்னேற்றங்கள் அடைந்திருந்தது. அதனால், அவருடைய ஆக்சிஜன் மாஸ்க் நீக்கப்பட்டு இருந்தார். ஆனாலும், ஐசியூவில் தான் வைக்கப்பட்டிருந்தார். நாளை காலை தான் நார்மல் வார்டுக்கு மாற்றுவோம் என்று கூறியிருந்தனர்.

 

பிரச்சனை ஒன்னும் இல்ல. நீங்க பதறாதீங்க. எல்லாம் நல்ல விஷயம் தான் என்று கூறி சிரித்தார் மரகதம்.

 

அவரின் சிரித்த முகத்தை பார்த்ததுமே வேலுச்சாமிக்கு மனம் நிறைவாக இருந்தது. ஏதோ புரிவது போலும் உணர்ந்தார். இருப்பினும், அதனை மரகதத்தின் வாயிலாக கேட்க வேண்டும் என்று எண்ணியவர், என்னன்னு சொல்லு மரகதம் என்று மரகதத்திடம் கேட்டார்.

 

நீங்க ஆசைப்பட்ட மாதிரி மீராவோட பையனுக்கும், நம்ம பேத்திக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுதுங்க என்று கூறி சிரித்தார்.

 

என்ன மரகதம் சொல்ற, நிஜமாவா! என்று ஆனந்தமாகவும், நம்ப முடியாமலும் கேட்டார்.

 

நிஜமா தாங்க சொல்றேன். என்கிட்ட வள்ளியே கேட்டா, அவ பேரனுக்கு நம்ம பேத்தியை கட்டிக் கொடுக்குறீங்களான்னு. நானும் எனக்கு முழு சம்மதம். எதுக்கும் சுப்பிரமணிகிட்டயும், கயல்விழிகிட்டயும், லட்சுமிகிட்டயும் ஒரு வார்த்தை பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேங்க.

 

ரொம்ப சந்தோஷம் மரகதம். நீ சொல்றதை கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க என் ஆசை நிறைவேறாமலே போயிடுமோன்னு நினைச்சேன். நம்ம பேரனுக்கும், பேத்திக்கும் கல்யாணம் பண்ணா கண் குளிர பார்த்துட்டு, அதுக்கப்புறம் எனக்கு என்ன நடந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறி ஆனந்த கண்ணீர் விட்டார்.

 

சட்டென அவரின் வாய்க்கு மேல் தன் கையை வைத்து மூடிய மரகதம், என்ன பேச்சு பேசுறீங்க என்று அதட்டினார், அதுக்குள்ள என்னை விட்டுட்டு போக அவசரமோ என்று கூறி முறைத்தார்.

 

ஏன், நம்ம ரெண்டு பேருக்கும் என்ன இள வயசுன்னு நினைச்சியா. நீ கிழவியாகி பல வருஷமாகுது மறந்துடாத என்று கேட்டார் தாத்தா.

 

யாரை பார்த்து கிழவினு சொல்லுறீங்க என்று எகிறிய பாட்டி, இன்னும் என் பேரனுக்கும், பேத்திக்கும் கல்யாணம் ஆகி, அவங்க குழந்தையை வளர்த்து, அவங்களுக்கும் கல்யாணம் ஆகுறதை பார்க்குற அளவுக்கு எனக்கு உடம்பில் தெம்பு இருக்கு. உங்களுக்கு தான் வயசாகிடுச்சு கிழவன் ஆகிட்டீங்க. அதான் இங்க வந்து படுத்து கிடக்குறீங்க என்று கிண்டல் அடித்தார்.

 

அவரின் வாயைக் கிளறி, அவர் கூறுவதை கேட்பதில் வேலுச்சாமிக்கு அவ்வளவு சந்தோஷம். எப்பொழுதுமே தனிமையில் வேலுச்சாமி இப்படித்தான் செய்வார்.

 

சரிங்க.. மனசை விட்டுடாதீங்க, தைரியமா இருங்க. நம்ம கொள்ளு பேரன், பேத்தி எல்லாரையும் பார்க்க நாம இருக்கணும். நீங்க இல்லைனா என்னால் தனியா இருக்க முடியாது என்று ஆனந்தமாக ஆரம்பித்து கண்கள் கலங்க கூறினார்.

 

உன்னை விட்டுட்டு நான் எப்படி தனியா போவேன் மரகதம். எனக்கு ஒன்னும் ஆகாது. அதான் நம்ம ஆசைப்படியே இப்போ கல்யாணம் நடக்கப்போகுதில்ல. நீ வேணா பாரு, நீ சொன்ன மாதிரி நம்ம கொள்ளுப் பேரன், பேத்தியை பார்த்ததுக்கு அப்புறம் தான் நமக்கு எதுனாலும் நடக்கும் என்று கூறி சிரித்தார்.

 

சரிங்க, நீங்க படுத்துக்கிடுங்க. நான் வீட்டுக்கு கிளம்புறேன்.

 

பாத்து மரகதம் என்று வழி அனுப்பி வைத்துவிட்டு வேலுச்சாமி தாத்தா சற்று கண் அயந்தார்.

 

வெளியே வந்த மரகதம் பாட்டி சுப்பிரமணியிடம், நீ வேணும்னா வீட்டுக்கு போயிட்டு வா பா. நான் இங்க இருக்கேன் என்று கேட்டார்.

 

இல்லமா பரவாயில்ல. நைட் நீங்க தங்குறது சரி வராது. நான் இருந்து பார்த்துக்குறேன்.

 

‘சரி’ என்ற பாட்டி, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.

 

என்னம்மா சொல்லுங்க.

 

அது வந்து பா.. என்று இழுத்தார் மரகதம்.

 

எதுனாலும் சொல்லுங்கம்மா. என்கிட்ட என்ன தயக்கம்.

 

சுப்பு, நம்ம கயல்விழிக்கு மீராவோட பையனை கேட்டு இருக்காங்க.

 

இதற்கு எப்படி செயலாற்றுவது என்று தெரியாமல் சுப்பிரமணி அமைதியாக நின்றார்.

 

வள்ளியம்மை ஊருக்கு கிளம்பும் போது தான் என்கிட்ட கேட்டா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. உன்கிட்ட, லட்சுமிகிட்ட, கயல்விழிகிட்ட எல்லாம் கலந்துக்கிட்டு சொல்றேன்னு சொல்லி அனுப்பிட்டேன். நீ என்னப்பா சொல்ற.

 

சிறிது நேரம் யோசித்த சுப்பிரமணி, சரி மா, நாளைக்கு நான் வீட்டுக்கு வந்ததும் லட்சுமி கிட்ட கலந்து பேசிட்டு உங்களுக்கு ஒரு முடிவு சொல்கிறேன்.

 

சரிப்பா பேசிட்டு சொல்லுங்கஎன்றவர் மீண்டும் சுப்ரமணியிடம், எனக்கும், அப்பாவுக்கும் முழு சம்மதம். நீயும் சம்மதிச்சா நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

சுப்பிரமணிக்கு என்ன முடிவு எடுப்பது என்று பெரும் குழப்பமாகி போனது. ஏனெனில், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதற்கு இது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே.

 

ஏற்கனவே, ஒரு முறை பட்ட அனுபவத்தினால் நிதானமாக முடிவெடுக்க முடிவு செய்தார். எதுவாக இருந்தாலும், நாளைக்கு வீட்டிற்கு சென்று லட்சுமியிடம் கலந்து ஆலோசித்து விட்டு முடிவு எடுப்போம் என்று நினைத்துக் கொண்டு மற்ற வேலையை பார்க்க சென்று விட்டார்.

 

வீட்டில் கயல் விழியோ வள்ளியம்மை பாட்டி கூறியதையும், அதற்கு அபிமன்யு நடந்து கொண்ட விதத்தையும் எண்ணி வருத்தத்தில் அமர்ந்திருந்தாள்.

 

அவளிடம் சென்ற யாழினியும், வெண்ணிலாவும், என்னாச்சு கயல்.. ஏன் ஒரு மாதிரி இருக்க? என்று கேட்டாள் வெண்ணிலா.

 

ஒன்னும் இல்லக்கா என்று கூறிவிட்டு மீண்டும் ஏதோ யோசனையில் மூழ்கி போனாள் கயல்வழி.

 

கடுப்பாகிய யாழினி, என்னாச்சு அக்கா.. என்னன்னு நீ சொன்னா தானே எங்களுக்கு தெரியும். ஏன் இப்படி உம்முன்னு உட்கார்ந்திருக்க.

 

அதற்கும் கயல்விழியிடம் எந்த பதிலும் இல்லை.

 

வெண்ணிலா, யாழினி, நீ சும்மா இரு என்று கூறிவிட்டு கயல்விழியின் அருகில் தன் நிறைமாத வயிற்றை தூக்கிக்கொண்டு உட்கார்ந்தாள்.

 

கயல்விழியின் முகத்தை தன் பக்கம் திருப்பி, என்னனு சொல்லு கயல். உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா? என்று கேட்டாள்.

 

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் கலங்கிய கண்களுடன் வெண்ணிலாவை பார்த்தாள் கயல்விழி.

 

ஏய் கயல்! என்ன ஆச்சு? இப்போ எதுக்கு அழுகுற? என்று வெண்ணிலா பதட்டமாக கேட்டாள்.

 

எனக்கு மட்டும் ஏன்க்கா இப்படி எல்லாம் நடக்குது என்று கண்ணீருடன் கேட்டாள்.

 

விடு, இப்போ என்ன நடந்திடுச்சுன்னு நீ இப்படி வருத்தப்படுற என்றாள் வெண்ணிலா.

 

இன்னும் என்னக்கா நடக்கணும்.. நான் ஆசைப்படுற மாதிரி எதுவுமே எனக்கு நடக்க மாட்டேங்குது. படிக்கணும்னு ஆசைப்பட்டேன், அப்பா வேண்டாம்னு சொல்லிட்டார். மாப்பிள்ளை பார்க்க போறேன்னு சொல்லி பார்த்தார். அதுவும் எதுவும் அமையல. அதுக்கும் நான் தான் காரணம்னு டெய்லி திட்டு வாங்கிகிட்டு இருக்கேன். இப்போ புதுசா யாரோ வீட்டுக்கு வந்ததும், இவங்க தான் நம்ம அத்தைனு சொல்றாங்க. அவங்க பையனுக்கு என்னை பொண்ணு கேக்குறாங்க. நம்ம பாட்டியும் சந்தோஷப்படுறாங்க. ஆனா, அவங்க பேரன் எப்படி கத்திட்டு போனாருன்னு பார்த்தல்ல என்று கூறி கண்ணீர் விட்டாள்.

 

அவளின் கண்ணீரை துடைத்து விட்ட வெண்ணிலா, இதில் நீ அழறதுக்கு எதுவுமே இல்ல கயல். உன் மேல் எந்த தப்பும் இல்லை. நமக்கெல்லாம் 12ஆவது வரைக்கும் தான் படிப்புன்னு நம்ம தலையில் எழுதி இருக்கு போல. நாம இதை எப்படி மாத்த முடியும். நானும் உன்னை மாதிரி தான் காலேஜ் போகணும், படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அப்பா வேண்டாம்னு சொல்லி கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க. ஆனா, இப்போ என்னோட வாழ்க்கை ஒன்னும் வீணா போகலையே டி. நான் ஜீவா மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா தானே இருக்கேன். ஜீவா மாமாவும் ரொம்ப நல்லவங்க. என்னை ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க. நமக்கு ஆசைப்பட்டது கிடைக்கலைனா, அதைவிட நல்லதா ஏதோ கிடைக்கப் போகுதுன்னு நினைச்சுக்கோ என்று கூறி கயல்விழியை சமாதானம் செய்தாள்.

 

அப்படி எல்லாம் இல்லக்கா. உன்னை மாதிரியும், யாழினியும் போல நான் கிடையாது. எனக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டமே இல்ல. அப்பாவுக்கும் என்னை பிடிக்கல. டெய்லி திட்டிக்கிட்டே இருக்கார். இப்போ பாரு, மாப்பிள்ளை பேச ஆரம்பிக்கும் போதே அந்த பையன் எப்படி கத்திட்டு போனாருன்னு நீயும் பார்த்தல்ல. பிடிக்காத வாழ்க்கை எப்படிக்கா சந்தோஷமா அமையும்.

 

இவள் நினைப்பதும் வாஸ்தவம் தானே என்று எண்ணிய வெண்ணிலா. என்ன கூறி சமாதானம் செய்வது என்று தெரியாமல் பார்த்தாள். இருவருக்கும் பிடித்து இணையும் திருமண வாழ்க்கையிலேயே எத்தனையோ பிரச்சனைகள் வரும் பொழுது, இப்படி விருப்பம் இல்லாதவர்களை சேர்த்து வைத்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற எண்ணம் வெண்ணிலாவிற்கும் ஏற்பட்டது.

 

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்க, நடுவில் புகுந்த யாழினி வெண்ணிலாவிடம், அக்கா எனக்கு ஒரு சந்தேகம்.

 

‘என்ன’ என்பதை போல் பார்த்த வெண்ணிலாவிடம் யாழினி, நீ ஏன் மேல படிக்க ஆசைப்படுறேன்னு ஜீவா மாமா கிட்ட சொல்லல என்று பட்டென்று கேட்டாள்.

 

அதற்கு வெண்ணிலா அமைதியாக, சொல்லணும்னு தோணல.. அப்பாவே முடியாதுன்னு சொல்லும் போது ஜீவா மாமா ஒத்துப்பாங்களான்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், அவங்க என்னுடைய ஆசைக்கும் மதிப்பு கொடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா, கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எதுக்கு படிப்புன்னு அவங்களும் அப்பா மாதிரியே கேட்டுட்டாங்கனா என்று கூறி நிறுத்தினாள் வெண்ணிலா.

 

இவர்கள் யாருமே அறியாத ஒன்று, இவ்வளவு நேரம் இவர்களுக்குள் நடந்த உரையாடல் அனைத்தையும் ஜீவா வாசலில் நின்று கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான் என்பது.

 

வெண்ணிலாவின் மனதில் இப்படி ஒரு ஆசை இருக்கின்றது என்பதை அறிந்த ஜீவாவிற்கு மிகவும் வருத்தமாகி போனது.

 

ஏன் டி என்கிட்ட முன்னாடியே இதை பத்தி சொல்லல என்று மானசீகமாக தன் மனைவியிடம் கேட்டான். மேலும், தன் மனதில் ஒரு முடிவுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் ஜீவா.

 

சரி கயல், கண்டதை நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத. எது நடந்தாலும், நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ. கடவுள் கிட்ட வேண்டிப்போம். உன் மனசுக்கு எதுவும் தப்பா நடக்காது. படுத்து தூங்கு என்று கூறிவிட்டு எழுந்து அவள் அறை நோக்கி சென்று விட்டாள்.

 

இவர்களின் மனநிலை இவ்வாறு இருக்க. அங்கே ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருந்தான் அபிமன்யு. வீட்டிற்கு வந்ததும் நேராக மாடிப்படி ஏறி தன் அறைக்கு சென்றவன்.

 

தான் உடுத்திய உடையை கூட களையாமல் ஷவரின் அடியில் சென்று நின்றான். தண்ணீர் தொட்டியில் உள்ள நீர் மொத்தமும் தீரும் வரை ஷவரின் அடியிலேயே நின்றிருந்தவன்.

 

ஷவரில் தண்ணீர் வராததை உணர்ந்து தான் வெளியே வந்தான். தன் ஆடைகளை களைந்து விட்டு இலகுவான உடைக்கு மாறி பால்கனியின் பக்கம் சென்றான். அவ்வளவு நேரம் ஷவருக்கு அடியில் நின்றும் அவன் உடலின் களைப்பு தீர்ந்ததே தவிர, மனப்புழுக்கம் தீரவில்லை, கோபமும் குறையவில்லை.

 

அடங்காத கோபத்தில் பால்கனியின் கம்பியை பிடித்தவன் கைகள் மேலும் மேலும் இருக்கத்தை கூட்டியதே தவிர தளர்த்தவில்லை. சிறிது நேரம் தன்னை நிதானிக்க முயன்றவன், அவனால் முடியாமல் போகவும் நேரே அவனுக்காகவே பிரத்தியேகமாக அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமைத்திருந்த ஜிம் ரூமிற்கு சென்றான்.

 

அங்கே சென்றவன் தன் கோபம், ஆத்திரம் அனைத்தையும் அங்கிருந்த உபகரணங்களின் மேல் காண்பித்தான். அதன் பலனாக விடிய, விடிய ஜிம்மிலேயே செலவழித்துவிட்டு காலை 6 மணிக்கு தான் உடல் சோர்வுற்று கண்ணயந்தான்.

 

எப்பொழுதும் காலை ஜாகிங் செல்வதற்காக கீழே வரும் அபிமன்யு இன்று வராததால் மீரா மேலே சென்று அவன் அறையை பார்த்தார். அவன் அறையில் இல்லை என்றவுடன் யோசனையுடன் ஜிம்மை நோக்கி சென்றார்.

 

அவன் வொர்க் அவுட் செய்துவிட்டு அங்கேயே அசதியில் தூங்குவதைப் பார்த்து அபிமன்யுவின் அருகில் சென்ற மிராவிற்கு அவனை பார்க்கவே பாவமாக இருந்தது.

 

ஏன் இவன் இப்படி முரண்டு பிடிக்கிறான். எதற்காக கோபம் என்று எதுவுமே புரியாமல் மீரா குழம்பி போனார். தன் மகனின் சிகையை மெதுவாக தடவிக் கொடுத்தார்.

 

அதை உணர்ந்த அபிமன்யு டக்கென்று தன் கண்களை விரித்து பார்த்தான். எதிரே அருகில் தன் அன்னை அமர்ந்திருப்பதை கண்டவன். எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல், என்ன வேணும் என்று கேட்டான்.

 

ஏன் அபி இப்படி நடந்துக்குற. உனக்கு என்ன தான் பிரச்சனை. எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லு கண்ணா என்று ஆதரவாய் கேட்டார் மீரா.

 

என்ன கூறுவான்.. தன் அம்மாவிற்காக தான் அவன் இவ்வளவு கோபப்படுகிறான் என்று அவரிடம் கூறினால் அவர் தாங்குவாரா.

 

அவன் ஏன் இவ்வளவு கோபப்படுகிறான் என்று கூறவேண்டும் என்றால் பல உண்மைகள் மீராவிற்கு தெரிய வரவேண்டும். அதை அனைத்தையும் மீராவால் தாங்க முடியும் என்று அபிமன்யுவிற்கு தோன்றவில்லை.

 

எனவே, அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான், ஒன்னும் இல்ல மாம் என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான்.

 

செல்லும் அவனையே பார்த்திருந்தார் மீரா. அவன் இப்படி விசித்திரமாக நடந்து கொள்வது இது ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி இல்லாவிட்டாலும், எப்போதாவது அவன் இப்படி நடந்துக் கொள்வதுண்டு.

 

மீரா ஆரம்பத்தில் என்ன என்று விசாரித்தார். ஒன்றும் இல்லை என்று கூறி சென்று விடுவான். சிறுவயதில் மீரா திட்டியும், அடித்தும் கேட்டு பார்த்து விட்டார். அப்பொழுதும் அபி தன் வாயை திறக்கவே இல்லை.

 

நாளடைவில் இவன் இப்படி தான் இவனை மாற்ற முடியாது என்று எண்ணிய மீரா. அவன் போக்கிலேயே விட்டுவிட்டார். சரி, திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று எண்ணிய மீரா, அவனிடம் ஒரு வருடமாக பெண் பார்க்க கேட்டுக் கொண்டிருக்கிறார். அவனும், இன்னும் சிறிது காலங்கள் போகட்டும் என்று கூறி மறுத்து விட்டான்.

 

ஆனால், இப்பொழுது தன் தாய் வள்ளியம்மை கிராமத்தில் இவனின் திருமணத்தை பற்றி பேசியதிலிருந்து கோபத்தின் உச்சிக்கே சென்ற தன் மகனை எப்படி மலை இறக்குவது என்று மீராவிற்கு புரியவில்லை.

 

ஒரு வேளை, அவனுக்கு கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் இல்லையோ.. அதனால் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறானோ என்று தனக்குத் தானே யோசித்து யோசித்து கவலைக்குள்ளானார்.

 

தன் அறைக்கு வந்த அபிமன்யு நேராக தன் காலை கடன்களை எல்லாம் முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான். எவ்வளவு பிரச்சனை வந்தாலும், மன வருத்தம் வந்தாலும் அவன் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று விடுவான்.

 

அவன் தன் கோபங்கள் அனைத்தையும் அவனின் தொழிலின் முன்னேற்றத்தில் காட்டுவான். அப்படித் தான் மீரா பில்டர்ஸ் ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே இப்பொழுது மூன்றாம் இடத்தில் உள்ளது. அதை எப்படியாவது முதலிடம் கொண்டு வர வேண்டும் என்பதையே தன் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறான் அபிமன்யு.

 

அபிமன்யுவின் தாத்தா காலத்தில் இருந்து, அவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் ஜவுளி வியாபாரம் என்றாலும், அதை தொடர்ந்து செய்ய அபிமன்யுவிற்க்கு அவ்வளவாக நாட்டம் இல்லை.

 

அவனுக்கு கட்டிட தொழிலில் தான் விருப்பம் அதிகம். எனவே, தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க நினைத்த அபிமன்யு. தன் படிப்புகளை முடித்து வந்ததும் கட்டிட தொழிலில் ஈடுபட்டான்.

 

அதற்காக ஜவுளி வியாபாரத்தின் முழு வேலையையும் அவன் தந்தையிடம் ஒப்படைக்காமல் அதையும் பார்த்துக் கொண்டான். அவனின் தந்தைக்கு ஓய்வு தர வேண்டி.

 

இவர்களின் ஜவுளி வியாபாரத்தை வெளிநாடுகளிலும் பரப்ப வேண்டும் என்பதே இவனின் குறிக்கோள்.

 

அப்படி என்ன உண்மையை அபிமன்யு மீராவிடம் இருந்து மறைக்கப் பார்க்கிறான்..?

 

அவனின் இவ்வளவு கோபத்திற்கும் பின்னணி என்ன..? யார்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5