அவனதிகாரம் - 23

 

அதிகாரம் – 23

 

மீராவின் குடும்பம் அரசனூரில் இருந்து சென்னை வந்து இன்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்துவிட்டது. திருமண பேச்சை வீட்டில் யாரும் எடுக்கவில்லை. பாட்டியும் அபிமன்யுவிற்கு சிறிது அவகாசம் கொடுக்க எண்ணியவர், கொஞ்சம் அவனை விட்டுப் பிடிப்போம் என்று எண்ணி ஒரு வாரம் கடத்திவிட்டார்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமை, காலையிலேயே மீராவின் செல்போனிற்கு அழைப்பு வந்தது மரகதத்திடம் இருந்து. போனை எடுத்தவர், சொல்லுங்க பெரியம்மா. நல்லா இருக்கீங்களா. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க? வேலுப்பா நல்லா இருக்காங்களா? என்று வரிசையாக விசாரித்தார்.

 

எல்லாரும் நல்லா இருக்கோம்மா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. அம்மா எப்படி இருக்காங்க? என்று மரகதமும் பதில் நலம் விசாரித்தார்.

 

நல விசாரிப்புகள் எல்லாம் முடிந்து தன் தாயிடம் கொடுப்பதாக கூறி மீரா வள்ளியம்மையிடம் ஃபோனை கொடுத்தாள்.

 

போனை பெற்ற வள்ளியம்மை, அக்கா! எப்படி இருக்க? மாமா நல்லா இருக்காங்களா? என்று விசாரித்தார்.

 

நல்லா இருக்காங்க வள்ளி. வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டோம். அதான் உனக்கு போன் பண்ணி சொல்லலாம்னு போன் பண்ணேன். பசங்க எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு பத்து நாள் தங்குற மாதிரி வீட்டுக்கு வா என்று அழைப்பு விடுத்தார் மரகதம்.

 

சரிக்கா, நான் வீட்டில் பேசிட்டு சொல்றேன்.

 

சரி வள்ளி, கல்யாண விஷயம் பத்தி பேசுனோமே என்ன ஆச்சு..? என்று விசாரித்தார் மரகதம்.

 

நீ தானக்கா சொல்லணும். வீட்டில் எல்லார்கிட்டயும் கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொன்னியே. கலந்து பேசிட்டியா, சுப்பிரமணி என்ன சொன்னான் என்று விசாரித்தார் வள்ளியம்மை.

 

வீட்டில் எல்லார்கிட்டயும் பேசிட்டேன் வள்ளி. சுப்பிரமணியும், லட்சுமியும் சம்மதிச்சிட்டாங்க. எங்க எல்லாருக்கும் முழு சம்மதம் மா. உங்க வீட்டில் என்ன சொல்றாங்க. எல்லாரும் கலந்து பேசுனீங்களா..? என்று விசாரித்தார்.

 

எங்க எல்லாருக்கும் சம்மதம் தான்க்கா.

 

வள்ளி அது வந்து... உன் வீட்டுக்காரர்... என்று இழுத்தார் மரகதம்.

 

தன் அக்கா கூற வருவதை யூகித்த வள்ளியம்மை, அக்கா, இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். உன் பேத்தி தான் எங்க வீட்டு மருமக. நீ எதையும் போட்டு குழப்பிக்காத என்று அவருக்கு வாக்களித்தார் வள்ளியம்மை.

 

ரொம்ப சந்தோஷம் வள்ளி. எங்க நம்ம உறவு நம்மளோட முடிஞ்சிடுமோன்னு நினைச்சு பல நாள் கவலைப்பட்டிருக்கேன். இப்போ நம்ம பசங்க காலத்துக்கும் அது தொடர போகுதுன்னு நினைக்கும் போது ரொம்ப மன நிறைவா இருக்கு மா என்று கூறி சந்தோஷப்பட்டார் மரகதம்.

 

சரிக்கா. மாமா உடம்பை பார்த்துக்கோ. நான் எப்போ வரேன்னு பேசிட்டு உனக்கு திரும்ப கூப்பிடுறேன் என்று கூறி அணைப்பை துண்டித்தார் வள்ளியம்மை.

 

இவரின் உரையாடல் அனைத்தையும் கேட்டுக் கொண்டு அங்கே காபி அருந்திக் கொண்டிருந்த அபிமன்யு எதையும் கண்டுகொள்ளவில்லை.

 

தொலைபேசி அணைப்பை துண்டித்த வள்ளியம்மை, மீரா, பெரியப்பா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டாராம். நம்ம எல்லோரையும் அங்க தங்குற மாதிரி வர சொல்லி அக்கா கூப்பிடுறா. எப்போ பிள்ளைங்களுக்கு லீவுனு சொல்லுமா போயிட்டு வந்துடுவோம்.

 

அதற்கு ஆரணி, ஐ! ஜாலி... நாம எங்கேயாவது ட்ரிப் போக போறோமா. எங்க போறோம்? எத்தனை நாள் ஸ்டே பண்ண போறோம்? என்று கேட்டாள்.

 

ஆமா ஆரணி குட்டி.. நாம உன்னோட பெரிய பாட்டி வீட்டுக்கு போறோம். அது வில்லேஜ்ல இருக்கு என்று கூறினார் வள்ளியம்மை.

 

சூப்பர் பாட்டி. லாஸ்ட் இயர் என் ஃப்ரெண்ட் கூட வில்லேஜ் போய்ட்டு வந்து ரொம்ப நல்லா இருந்ததுன்னு சொன்னா. அது சரி, பெரிய பாட்டினா அது யாரு பாட்டி? என்று தன் சந்தேகத்தை கேட்டாள் ஆரணி.

 

என்னோட அக்கா மா. இவ்வளவு நாள் நீங்க யாரும் பார்த்ததில்ல. ஆனா, இனிமே அப்படி இல்ல, அடிக்கடி பார்க்க போறோம் என்று கூறி அபிமன்யுவை பார்த்தார்.

 

அவன் வள்ளியம்மை பேசுவதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் எதையும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

 

வள்ளியம்மையும் இந்த விஷயத்தில் அவனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அது அபிமன்யுவிற்கு மேலும் மேலும் கோபத்தை கிளறியது. பாவம், மீரா தான் இங்கே என்ன நடக்கிறது என்பது போல் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அவருக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. தன் மகன் கோபமாக இருக்கிறான். அவனுடைய திருமண விஷயத்தில் அவனையே கலந்து கொள்ளாமல் தன் தாயே முடிவு செய்கிறார்.

 

இவ்வளவு கோபக்காரனாக இருப்பவனை எப்படி அவர் கட்டுப்படுத்த போகிறார்‌. இந்த திருமணத்திற்கு எப்படி சம்மதம் வாங்கப் போகிறார் என்று ஒன்றும் புரியவில்லை மீராவிற்கு. இதைப் பற்றி தன் தாயிடம் தனிமையில் பேச வேண்டும் என்று எண்ணியவர்.

 

அபிமன்யு காபி அருந்தி முடித்ததும் தன் தாயிடம், எனக்கு இன்னைக்கு வெளியில் ஒரு மீட்டிங் இருக்கு. வர நைட் ஆகிடும். எனக்கு லஞ்ச் ப்ரிப்பேர் பண்ணாதீங்க. டின்னருக்கு வந்துடுவேன் என்று கூறிவிட்டு, யாரின் பதிலையும் எதிர்பாராமல் கிளம்பி விட்டான்.

 

அவன் சென்றவுடன் மீரா வள்ளியம்மையிடம், அம்மா நீங்க என்ன பண்றீங்க? எனக்கு எதுவுமே புரியல.

 

என்ன மீரா என்ன சொல்ற? என்றார் வள்ளியம்மை.

 

அம்மா நீங்க எடுத்திருக்கிறது எவ்வளவு பெரிய முடிவுன்னு தெரியும்ல. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை. இப்படி ஈஸியா முடிவு பண்ணிட முடியாது‌. நம்ம அபியை பத்தி உங்களுக்கே தெரியும். எந்த நம்பிக்கையில் பெரியம்மாகிட்ட கயல்விழிக்கும், அபிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு சொன்னீங்க.

 

உனக்கு இதில் விருப்பம் இல்லையா... என்று பதில் கேள்வி கேட்டார் வள்ளியம்மை.

 

அச்சோ! நான் அப்படி சொல்லலை மா. எனக்கு சம்மதம் தான். ஆனா, அபியை பத்தி உங்களுக்கு தெரியும்ல. அவன் இந்த கல்யாண விஷயத்தில் ரொம்ப கோவமா இருக்கான். எனக்கு என்னமோ அவனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு நினைக்கிறேன். அந்த பொண்ணுக்கு இவன் கூட கல்யாணம் பண்ணி வச்சா. நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா என்ன மா பண்றது என்று வருத்தமாக கேட்டார்.

 

என்ன தான் தன் மகனின் மேல் உயிரையே வைத்திருந்தாலும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்க மீரா விரும்பவில்லை.

 

அதைப் பத்தி எல்லாம் நீ கவலைப்படாத மீரா. நான் பார்த்துக்குறேன். அபியை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும். இந்த விஷயத்தை என்கிட்ட விட்டுடு. என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்குறேன்.

 

அம்மா ப்ளீஸ், எதுவாயிருந்தாலும் நல்லா யோசிச்சு பண்ணுங்க. முதல்ல அப்பா கிட்ட இந்த விஷயத்தை பத்தி சொன்னீங்களா என்று விசாரித்தார்.

 

அவரிடம் இதை பற்றி கூறினால், அவர் என்ன பதில் சொல்வார் என்று வள்ளியம்மைக்கு தெரியுமே. அவர் குணம் அறிந்தவர் ஆயிற்றே வள்ளியம்மை. பிறருக்காக பார்த்து பார்த்து தான் தன் உடன் பிறந்த அக்காவின் உறவே இல்லாமல் இத்தனை வருடங்களை கடந்து விட்டார்.

 

மேலும், அவரின் பேச்சை கேட்டு தன் பேரனின் வாழ்க்கையையும் வீணாக்க அவர் விரும்பவில்லை. அவரின் பேச்சைக் கேட்டால் எந்த உறவும் இன்றி தன் மகள் தனி மரம் ஆக நின்று விடவாள் என்று எண்ணிய வள்ளியம்மை, தன் அக்காவிற்கு நன்றி கடனாக இந்த திருமணத்தை எப்படியும் நான் செய்தே தீருவேன் என்று மனதில் வாக்குறுதி எடுத்தார்.

 

என்னம்மா அமைதியா இருக்கீங்க. நான் கேட்டுகிட்டே இருக்கேன்ல. பதில் சொல்லுங்க, அப்பா கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசுனிங்களா இல்லையா?.

 

அப்பாவுக்கு இதில் சம்மதம் தான்.

 

இப்பொழுது தான் மீராவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஏனெனில், தன் தாத்தா கூறினால் அபி கண்டிப்பாக அதற்கு மறுப்பு கூற மாட்டான் என்று ஒரு சின்ன நம்பிக்கை மீராவிற்கு.

 

அப்போ சரிமா. அப்பா சொன்னா அபி கண்டிப்பா கேட்பான். இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பான். அவன் ஏன் இப்படி கோபக்காரனா இருக்கான்னு எனக்கு ஒன்னும் புரியல மா. கல்யாணம் பண்ணா கண்டிப்பா மாறிடுவான்.

 

அவரின் தோளில் தட்டிக் கொடுத்த வள்ளியம்மை, கவலைப்படாத மா, கண்டிப்பா அபி அவனோட குணத்தை கூடிய சீக்கிரமே மாத்திப்பான். நீ வேணும்னா பாரு, என் பேத்தி எல்லாத்தையும் மாத்திடுவா என்று கூறி சிரித்தார்.

 

இன்னைக்கு அபியோட அப்பா ஃபாரின்ல இருந்து வருவதா சொல்லி இருக்கார் மா. அவர் வந்ததும் நைட் அபி கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசிடுவோம். பெரியம்மாவுக்கு நம்ம சம்மதம்னு சொல்லனும்ல. அவங்க நமக்காக காத்திருப்பாங்க. ரொம்ப நாள் காக்க வச்சா சரி வராது.

 

நீ சொல்றதும் சரி தான் மீரா. இன்னைக்கே பேசி இதுக்கு ஒரு முடிவு எடுத்துடுவோம் என்று கூறிவிட்டு, மனதில் ஒரு திட்டத்துடன் எழுந்து அவர்கள் அறை நோக்கி சென்றார் வள்ளியம்மை.

 

அறையினுள் வள்ளியம்மை சென்றதும் அவரை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, அந்த பிசியோதெரபி இப்போலாம் சரியான நேரத்துக்கு வர மாட்டேங்குறாங்க வள்ளி. அபி கிட்ட சொல்லு.

 

கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென ஏற்பட்ட விபத்தில் ஒரு கையும், காலும் செயல் இழந்துவிட்டது. அவருக்கு தினமும் பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளித்தால் நாளடைவில் குணமடைய வாய்ப்புள்ளதாக கூறிய மருத்துவர்களின் பரிந்துரைப்படி, தன் தாத்தாவிற்கு பிசியோதெரபி ட்ரீட்மென்ட் கொடுக்க அபி ஒரு மருத்துவரை நியமித்து உள்ளான். அவரைப் பற்றி தான் குறை கூறிக்கொண்டு இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி வள்ளியம்மையிடம்.

 

சரிங்க. நான் அபி கிட்ட சொல்றேன். அப்புறம் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.

 

என்ன.. உங்க அக்காவை போய் பார்த்து மன்னிப்பு கேட்கணுமா? என்று ஏளனமாக கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.

 

வள்ளியம்மை, இல்லைங்க, அபிக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்.

 

ம்ம்... சந்தோஷமா பண்ணலாம். அபி கிட்ட கேட்டீங்களா. என்ன சொல்றான்?.

 

அவனுக்கு என்னங்க தெரியும், சின்ன பையன். நம்ம பொண்ணு பார்த்து இதான் பொண்ணுனு சொன்னா தாலி கட்ட போறான்.

 

நீ சொல்றதை பார்த்தா ஏற்கனவே பொண்ணு எல்லாம் பார்த்து வச்சிட்ட போலருக்கு.

 

ஆமாங்க பாத்துட்டேன். என் அக்காவோட பேத்தி கயல்விழியை தான் நம்ம அபிக்கு கட்டலாம்னு நினைக்கிறேன் என்று அசராமல் கிருஷ்ணமூர்த்தியின் தலையில் குண்டை இறக்கினார்.

 

இவர் கூறுவதை கேட்டு அதிர்ந்த கிருஷ்ணமூர்த்தி, என்ன.. என்ன சொன்ன.. உன் அக்காவோட பேத்தியா.. யாரு? என்று கேட்டார், அவரின் அதிர்ச்சி அவரின் குரலிலேயே தெரிந்தது.

 

என்னங்க ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க. எனக்கு எத்தனை அக்கா இருக்காங்க. எனக்கு இருக்குறது ஒரே ஒரு அக்கா தான். என் அக்கா மரகதத்தை தாங்க சொல்றேன்.

 

இதுவரை தான் கூறிய சொல்லுக்கு மறு சொல் கூறாத தன் மனைவி, இப்பொழுது அதிரடியாக இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டு அதை தன்னிடம் ஓர் அறிவிப்பு போல் கூறுவது கிருஷ்ணமூர்த்திக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 

கிருஷ்ணமூர்த்தி கோபமாக, யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவை நீ எடுத்த என்று எகிறினார்.

 

யாரை கேட்கணும் என்றார் வள்ளியம்மை அசராமல்.

 

என்னை கேட்கணும்‌‌ என்றார் பதிலுக்கு.

 

வள்ளியம்மை, ஏன், நீங்களா கட்டிக்க போறீங்க என்றார் எள்ளலாக.

 

கிருஷ்ணமூர்த்தி, என்ன வள்ளி, ரொம்ப பேசுற.. இனிமே என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைக்கிறியோ என்றார் கோபமாக.

 

வள்ளியம்மை, இனிமே நீங்க பண்றதுக்கு என்னங்க இருக்கு. அதான் இத்தனை வருஷமா எங்க எல்லாரையும் ஆட்டி படைச்சிட்டீங்களே.. நமக்காக எங்க அக்காவும், மாமாவும் எவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சிருக்காங்க. ஆனா, அந்த நன்றி கொஞ்சம் கூட உங்ககிட்ட இல்லையே.. அவங்களை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, கஷ்டப்படுத்த முடியுமோ எல்லாம் செஞ்சீங்க. அதுக்கு தான் கடவுள் இப்போ நமக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்திருக்கார் போலருக்கு. இப்போவும் நீங்க மனசு மாறலைனா... என்று இடைவெளி விட்டவர்.

 

இதுக்கு மேல என்ன சொல்லி உங்களுக்கு புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியலைங்க என்று கூறி கண்கலங்கி விட்டார்.

 

கிருஷ்ணமூர்த்தி, நீ என்ன சொன்னாலும் எனக்கு புரிய வைக்க முடியாது வள்ளி. நீயும் எத்தனை தடவை தான் இதையே சொல்லுவ. இது ஒன்னும் கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை கிடையாது. தெரியாமல் நடந்த ஒரு விபத்து. என் பேரன் சீக்கிரம் என்னை குணப்படுத்திடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. தேவையில்லாமல் அதையும், இதையும் சேர்த்து வச்சு பேசாத என்று எரிச்சலாக கூறி முகத்தைத் திருப்பினார்.

 

சரி, அதெல்லாம் விட்டுடுவோம் என்று கண்களைத் துடைத்த வள்ளி, பழைய கதை எதையும் பேச வேண்டாம். அபிக்கும், கயல்விழிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும். அதுக்கு நீங்க ஒத்துக்கணும். இந்த விஷயத்தில் எதையும் பேசி அபியோட மனசை நீங்க மாத்தக்கூடாது. எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க.

 

என்ன பேசுற நீ.. உனக்கு பைத்தியம் ஏதாவது பிடிச்சிடுச்சா. அந்த குடும்பத்தில் போய் பொண்ண எடுக்க சொல்ற. என் பேரனுக்கு என்ன குறைச்சல், அவங்க கிட்ட பொண்ணு எடுக்கணும்னு அவனுக்கு என்ன தலை எழுத்தா. அவங்க உறவு முடிஞ்சது முடிஞ்சது தான். திரும்ப ஆரம்பிக்கணும்னு கனவு காணாத. அது எப்பவுமே நடக்காது என்று உறுதியாக கூறினார் கிருஷ்ணமூர்த்தி.

 

தனக்கு உடல் முடியாமல் போன பிறகாவது, தான் செய்த தவறை நினைத்து திருந்துவார் என்று எண்ணிய வள்ளியம்மைக்கு, இவரின் மனம் சிறிதும் மாறாமல் அதே முரண்பாடோடு இவர் பேசிக்கொண்டு இருப்பது பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் அளித்தது.

 

இனி இவரிடம் கெஞ்சியோ அல்லது பேசி புரிய வைக்கலாம் என்று நினைப்பதோ எதுவும் வேலைக்காகாது என்று எண்ணிய வள்ளியம்மை. இனி, அவரின் வழியிலேயே சென்று அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

 

சரிங்க, நீங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாம். நான் அபிகிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடுறேன் என்று சாதாரணமாக கூறுவது போல் மிரட்டல் விடுத்தார்.

 

இவரால் என்ன செய்திட முடியும் என்று எண்ணிய கிருஷ்ணமூர்த்திக்கு, அபியிடம் உண்மையை கூறப் போகிறேன் என்று வள்ளியம்மை கூறிய வார்த்தை பெரிதாக தன் வேலையை காட்டியது கிருஷ்ணமூர்த்தியிடம்.

 

கிருஷ்ணமூர்த்தி, என்ன சொல்ல போற? என்று கோபத்தை அடக்கி கொண்டு கேட்டார்.

 

வள்ளியம்மை, சின்ன வயசில இருந்து அபியை உங்க கைக்குள்ள நீங்க வச்சுக்கணும்னு சொல்லி அவன் கிட்ட என் அக்காவையும், மாமாவையும் பத்தி தப்பு தப்பா பேசி சின்ன குழந்தை மனசில் நஞ்சை விதைச்சு வச்சிருக்கீங்களே.. அது எல்லாமே பொய்னு சொல்ல போறேன். நல்லா இருந்த பிள்ளையோட மனச கலைச்சு இப்படி கோபக்காரனாவும், முரட்டுத்தனமாகவும் அவன் நடந்துக்க நீங்க தானே முழு காரணம். நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே பொய்னு அவனுக்கு தெரிஞ்சுட்டா அவனே திரும்ப பழைய மாதிரி மாறிடுவான். நான் உங்களுக்காக தான் இவ்வளவு நாள் சொல்லாமல் இருந்தேன்‌. ஆனா, நீங்க இனிமே மாறுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை. அதனால அபி கிட்ட நீங்க சொன்னது எல்லாமே பொய்னு சொல்ல போறேன் என்றார் ஒரே முடிவாக.

 

கிருஷ்ணமூர்த்தி, இப்போ உனக்கு என்ன வேணும் வள்ளி. அபிக்கு கல்யாணம் பண்ணனும் அதான உன் ஆசை. அவன் அதுக்கு ஒத்துக்க மாட்டிக்குறான். அதனால தான நீ இப்படி கோபமா என்னென்னமோ பேசிகிட்டு இருக்க. சரி, உன் ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறேன். அபியை கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க வைக்கிறேன். ஒரு நல்ல, பெரிய வசதியான இடத்தில் இருந்து அபிக்கு நான் பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன் போதுமா.. நீ ஆசைப்பட்டபடி அபி சந்தோஷமா அந்த பொண்ணு கூட வாழுறதை கண்ணார பாரு. பார்த்து சந்தோஷப்படு என்று ஆத்திரமாக கூறினார்.

 

இந்த பச்சோந்தி வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். இதுக்கெல்லாம் அபி வேணும்னா ஏமாறுவான். இத்தனை வருஷம் உங்க கூட குடும்பம் நடத்தின பிறகும் நான் ஏமாறுவேன்னு நீங்க எப்படி எதிர்பார்க்குறீங்க. என் அக்கா பேத்திக்கும், அபிக்கும் தான் கல்யாணம். இதில், எந்த ஒரு மாற்றமும் கிடையாது. அப்படி நீங்க ஏதாவது கலகம் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தனும், அபியோட மனசை அடியோட மாத்தணும்னு நினைச்சீங்கன்னா.. அடுத்த நிமிஷமே எல்லா உண்மையும் நான் அபிகிட்ட சொல்லிடுவேன். எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்னு சொல்லிடுவேன். அதுக்கு அப்புறம் அபி உங்க முகத்துல கூட முழிக்க மாட்டான் தெரிஞ்சுக்கோங்க என்று கோபமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டார்.

 

பாவம், வள்ளியம்மையும் என்ன தான் செய்வார். இவ்வளவு காலங்கள் தன் கணவனின் பேச்சை மீறாமல் அமைதி காத்தார். ஆரம்பத்தில், எங்கே மகள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்ற பயத்தில் கிருஷ்ணமூர்த்தி இப்படி எல்லாம் செய்கிறார் என்று எண்ணிய வள்ளியம்மை, காலம் தன் கணவரை மாற்றும் என்ற நம்பிக்கையோடு கார்த்திருந்தார். காலம் போக போக தன் கணவர் வேறு மாதிரி மாறுவார் என்று சற்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.

 

அவரே எதிர்பாராமல் நடந்தது, அபியின் இந்த மாற்றம் தான். அதற்கும் தன் கணவர் தான் காரணம் என்று அறிந்த வள்ளியம்மை முற்றிலுமாக உடைந்து விட்டார்.

 

இனி வாழப்போகும் சிறிது கால வாழ்க்கையிலாவது தாங்கள் செய்த தவறை சரி செய்ய எண்ணிய வள்ளியம்மை, முதல் முறையாக தன் கணவனின் பேச்சை மீறி செயல்பட தொடங்கி விட்டார்.

 

அப்படி என்ன சொல்லி அபியின் மனதில் நஞ்சை கலந்திருப்பார் கிருஷ்ணமூர்த்தி..?

கிருஷ்ணமூர்த்தியின் நயவஞ்சகங்களை மீறி கயல்விழிக்கு, அபிக்கும் திருமணம் நடக்குமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5