அவனதிகாரம் - 24

 

 

அதிகாரம் – 24

 

சிறு வயது அபிமன்யு தங்கள் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது வேலுச்சாமி வள்ளியம்மையையும், கிருஷ்ணமூர்த்தியையும் அவர்களின் ஊர் திருவிழாவிற்கு அழைத்து செல்ல வந்திருந்தார்.

 

வந்தவரை கிருஷ்ணமூர்த்தி தன் வார்த்தைகளால் காயப்படுத்தியும், அவமானப்படுத்தியும் திருப்பி அனுப்பி வைத்தார். அதனை பார்த்த சிறு வயது அபிமன்யுவிற்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும், ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டவன்.

 

வேலுச்சாமி சென்றவுடன் நேராக கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று, தாத்தா, யார் அந்த புது தாத்தா வந்துட்டு போறாங்க? நீங்க ஏன் அவங்களை திட்றீங்க என்று விவரம் அறியாமல் கேட்டான்.

 

அனைத்தையும் இவன் பார்த்துவிட்டதை கேட்டு திகைத்த கிருஷ்ணமூர்த்தி நொடியில் ஒரு புது கதையை உருவாக்கி விட்டார். ஆரம்பத்தில் உறவுகளின்மை, குழந்தையின்மையினால் மீராவை அங்கிருந்து அழைத்து வந்து விட்ட கிருஷ்ணமூர்த்தி, தற்பொழுது மீரா வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டதால் எங்கே என்றேனும் ஒரு நாள் வேலுச்சாமியோ, மரகதமோ வந்து உண்மையைக் கூறி அழைத்து சென்று விடுவார்களோ என்ற பயத்தினால் அபிமன்யுவை தன் கைக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.

 

அபிமன்யுவிற்கு அடங்கி மீரா காலம் முழுக்க அங்கு செல்லாமல் இங்கேயே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த கிருஷ்ணமூர்த்தி, டக்கென்று ஒரு கதையை உருவகித்து அபிமன்யுவிடம் கூறத் தொடங்கினார். உனக்கு ஒரு உண்மையை சொல்லப் போறேன் அபி. அதை நீ அம்மாகிட்ட, அப்பாகிட்ட யார்கிட்டயும் சொல்லக்கூடாது சரியா.

 

என்ன தாத்தா சொல்லுங்க.. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.

 

இப்போ வந்துட்டு போன தாத்தா தான் உன்னோட உண்மையான தாத்தா. அவர் தான் உங்க அம்மாவோட அப்பா என்று வருத்தமாக கூறுவது போல் கூறினார்.

 

அபிமன்யுவிற்கு அவர் கூறுவது சரி வர  புரியவில்லை. பாவம், சிறு குழந்தை தானே..

 

என்ன தாத்தா சொல்றீங்க.. அப்போ நீங்க யாரு?.

 

நானும் வள்ளி பாட்டியும் உங்க அம்மாவை வளர்த்திருக்கோம் அவ்வளவு தான். நாங்க பெத்தவங்க கிடையாது.

 

அப்படியா, நீங்க ஏன் வளர்த்தீங்க. அவங்க கிட்ட இருந்து நீங்க ஏன் வாங்குனீங்க?” என்று தன் சந்தேகத்தை கேட்க தொடங்கினான்.

 

உடனே கிருஷ்ணமூர்த்தி, நாங்க வாங்கல அபி கண்ணா. உங்க அம்மா பொறந்ததும் பொம்பள புள்ளையா பொறந்துடுச்சேன்னு அந்த தாத்தா உங்க அம்மாவை வேண்டாம்னு தூக்கிக்கொண்டு போய் ஹாஸ்பிடலில் திரும்ப கொடுத்துட்டார். அங்க இருந்து மனசு கேட்காமல் நான் வாங்கிகிட்டு அவருக்கு தெரியாமல் வெளியூர் கூட்டிட்டு வந்து வளர்க்கிறேன் என்று வாய் கூசாமல் பச்சையாக பொய் கூறினார்.

 

அவர் கூறியதை கேட்டு அபிமன்யு, நீங்க சொல்றது நிஜமா தாத்தா. அப்போ அந்த தாத்தா எங்க அம்மாவை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டாரா. அப்போ அவர் நல்லவர் கிடையாது பேட் தாத்தா என்று கோபமாக கூறினான். இதைத் தானே அவரும் எதிர்பார்த்தார் அபிமன்யுவிடமிருந்து.

 

ஆமா அபி கண்ணா. அவர் ரொம்ப பேட். அதனால் தான் நான் திட்டி அனுப்பி விட்டுட்டேன். இனிமே, நீயும் அவரை எங்கேயாவது பார்த்தா பேசாத. அவர் நிறைய பொய் சொல்லுவார். உன்கிட்ட வேற ஏதாவது என்னை பத்தி பொய் சொல்லி நைசா கூப்பிட்டு போகலாம்னு பார்ப்பார். அவர் சொல்றது எதையும் நீ நம்ப கூடாது சரியா. அம்மாகிட்டயும், அப்பாகிட்டயும் இதை பத்தி எதுவுமே சொல்லாத. அப்புறம் அவங்க மனசு கஷ்டப்படும் என்று கூறி ஒரு வழியாக அபிமன்யுவின் வாயை அடைத்து விட்டார்.

 

சரி தாத்தா. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். அம்மா ரொம்ப பாவம் இல்ல என்று கூறி அழுகத் தொடங்கி விட்டான்.

 

அவனை சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்று விளையாட வைத்து திரும்ப வீட்டிற்கு கூப்பிட்டு வந்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

 

பிஞ்சு மனதில் இவர் கூறிய பொய்க்கதை நன்றாக பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. நாளடைவில் அபிமன்யு வளர வளர அவனின் கோபமும் வளர்ந்து கொண்டே போனது.

 

தன் தாயின் மேல் ஒரு வித பரிதாபமும் ஏற்பட ஆரம்பித்தது. அவரைப் பெற்றவர்களின் மேல் கட்டுக்கடங்காமல் கோபமும் பெருக ஆரம்பித்துவிட்டது. வளர வளர இந்த உண்மையின் தாக்கம் அவனை அன்பை வெளிக்காட்ட விடாமல் முரடன் போலும், இறுக்கமானவனாகவும் மாற்றிவிட்டது.

 

மீரா, ஏன் இப்படி இருக்க அபி என்று பலமுறை கேட்டாலும். ஒன்றும் இல்லை அம்மா என்று கூறுபவன், தனிமையில் வந்து தன் தாயை நினைத்து பரிதாபமாக எண்ணும் போதெல்லாம் அவரை பெற்றவர்களின் மேல் பெரும் கோபம் எழுந்தது. அதுவே அவனின் இறுக்கமான மனநிலைக்கு காரணமாகவும் மாறிவிட்டது.

 

இப்படி தங்கள் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வருத்திக் கொண்டு இருந்தான் அபிமன்யு. ஆனால், அந்த இறுக்கத்திலும் அவன் தன் தாத்தா கிருஷ்ணமூர்த்தி என்ன கூறினாலும் அதை மட்டும் கேட்க தவற மாட்டான்.

 

ஏனெனில், அவர் தன் தாய்க்கு வாழ்க்கை கொடுத்தவர் ஆயிற்றே. பாவம், அவனுக்கு தெரியாதல்லவா நடந்த உண்மை என்னவென்று.

 

ஒரு நாள் வேலுச்சாமி மீண்டும் இவர்கள் வீட்டிற்கு வந்ததை பார்த்த அபிமன்யு கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று, இவங்க ஏன் இங்க வராங்க? என்று கோபமாக கேட்பதை கேட்ட வள்ளியம்மை, ஏன் இப்படி எல்லாம் பேசுற. அவர் யாருனே உனக்கு தெரியாது.

 

எல்லாம் எனக்கு தெரியும் பாட்டி என்று தாத்தா கூறிய அனைத்து உண்மையையும் தாத்தாவின் முன்பே போட்டு உடைத்தான் அபிமன்யு.

 

பாட்டிக்கு தான் எல்லா உண்மையும் தெரியுமே என்று நினைத்தவன், அவரின் முன்பே கூறிவிட்டான். அவன் கூறியதை கேட்ட வள்ளியம்மை திகைத்து நின்று விட்டார்.

 

கிருஷ்ணமூர்த்தி எப்படி சமாளிப்பது என்று யோசனையுடன் நின்று விட்டார்.

 

அபி சென்ற பிறகு வள்ளியம்மை கிருஷ்ணமூர்த்தியிடம், ஏன் இப்படி அவன்கிட்ட பொய் சொன்னீங்க என்று கோபமாக கேட்டார்.

 

கிருஷ்ணமூர்த்தி, எல்லாம் எனக்கு தெரியும் வள்ளி. நம்ம பொண்ணு கடைசி வரைக்கும் நம்ம கூட இருக்கணும்னு தான் இப்படியெல்லாம் பண்ணுறேன் போதுமா. நீ போய் உன் வேலையை மட்டும் பாரு என்று அவரின் வாயை அடைத்து விட்டு சென்று விட்டார்.

 

நாளடைவில் வள்ளியம்மை அபிமன்யுவின் மனம் மாறும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், அவரின் கணக்கு கிருஷ்ணமூர்த்தி விஷயத்தில் எப்படி தவறாக போனதோ, அதே போல் தான் அபிமன்யு விஷயத்திலும் தவறாகி போனது.

 

இவ்வளவு நாள் பொறுத்து பொறுத்து பார்த்த வள்ளியம்மை, இந்த கல்யாண விஷயத்தில் பொங்கி விட்டார். அதற்கு தன் மாமாவின் உடல்நிலையும் ஒரு காரணம். இப்பொழுதாவது அவரின் கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

 

மீட்டிங் முடிந்து 7:00 மணிக்கு எல்லாம் அபிமன்யு வீடு திரும்பி விட்டான். அவன் வருகையில் அவனின் தந்தையும் ஃபாரினில் இருந்து வந்திருந்தார். ஆரணியும், ஆரியனும் அவர்களின் தந்தையுடன் வளவளத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தனர்.

 

வீட்டினுள் நுழைந்த அபிமன்யு, ஹாய் டாட் எப்போ வந்தீங்க? என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

 

ஜஸ்ட் நவ் அபி என்று கூறிய அவனின் தந்தை மகேந்திரன், கம் சிட் என்று இருக்கையை காட்டினார்.

 

வெயிட் டாட். ரெப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன் என்று கூறிவிட்டு, நேராக மாடிப்படி ஏறி தனது அறை நோக்கி சென்று விட்டான்.

 

அவன் கீழே இறங்கி வருவதற்குள் மீராவும், வள்ளியம்மை பாட்டியும் இந்த திருமணத்தை பற்றிய அனைத்து விஷயங்களையும் மகேந்திரனிடம் கூறிவிட்டு இருந்தனர். மகேந்திரனிற்கு மீராவின் விருப்பம் தான் அவருடைய விருப்பமும் என்று கூறிவிட்டார்.

 

நீங்க என்ன சொல்றீங்க மாப்ள என்று கேட்ட வள்ளியம்மையிடம், மீராக்கு ஓகேனா எனக்கும் ஓகே அத்தை. அவ விருப்பப்படியே பார்த்து பண்ணுங்க. இதில் நான் சொல்ல என்ன இருக்கு என்று சிரித்த முகமாக கூறிவிட்டார்.

 

அவர் அப்படித்தான் திருமணம் முடிந்த நாளிலிருந்து அனைத்தையும் மிராவுக்காக என்று தான் செய்வார். அவர்கள் இருவரையும் பார்த்து வளர்ந்த ஆரணியும், ஆரியனும் நமக்கும் இப்படி ஒரு அன்பான துணை அமைய வேண்டும் என்று அவர்களை பிரம்மிப்பாக பார்ப்பார்கள். ஆனாலும், இருவரையும் கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

 

தன் தாய், தந்தையின் ஒற்றுமையையும், காதலையும் பார்த்து எப்பொழுதுமே ஆரணிக்கும், ஆரியனுக்கும் பெருமிதம் உண்டு. இவர்களை போல் நாமும் அன்புள்ள தம்பதியாக வாழ வேண்டும் என்றும் எண்ணுவர்.

 

டேட் இது அண்ணனோட லைப். நீங்க என்னனா அம்மாவுக்கு ஓகேனா, உங்களுக்கு ஓகேனு சொல்றீங்க. அம்மாவா கல்யாணம் பண்ணிக்க போறாங்க என்று கிண்டல் அடித்தாள் ஆரணி.

 

கல்யாணம் பண்ண போறது உங்க அண்ணன் தான் ஆரணி. ஆனா, வீட்டுக்கு வர மருமகள் கூட அதிக டைம் ஸ்பென்ட் பண்ண போறது உங்க அம்மா தான். சோ, அவளுக்கு பிடிச்ச மாதிரி மருமகள் வரணும்னு நான் ஆசைப்படுறேன். என் மீராவுக்கு எந்த விஷயத்திலும் டிசப்பாயின்மென்ட் வந்துவிடக்கூடாது. ஷி ஹேவ் டு பி ஹேப்பி ஆல்வேஸ் என்று கூறி மீராவை பார்த்து தலையசைத்தார்.

 

மீராவும் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தார். திருமணம் முடிந்த தினத்திலிருந்து தனக்கு என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் கணவரை மீராவிற்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

 

மாமா கிட்ட பேசிட்டீங்களா அத்தை என்று விசாரித்தார் மகேந்திரன்.

 

ம்ம். சின்ன வயசில் ஏதோ ஒரு சின்ன சண்டை மிஸ்அன்டர்ஸ்டாண்டிங். அதனால மாமாக்கும், இவங்களுக்கும் ஒரு பிரேக் ஆயிடுச்சு. இப்போ தான் எல்லாம் சரியாயிடுச்சே. காலம் எல்லாத்தையும் மாத்திடுச்சு. அதனால மாமாவுக்கும் முழு சம்மதம் இந்த கல்யாணத்தில்.

 

அப்போ ஓகே என்று கூறிய மகேந்திரன் மீராவை பார்த்து, மீரா, அபி கிட்ட கேட்டியா என்று கேட்டார்.

 

அதற்கு மீரா, இன்னும் இல்லைங்க. ஆனா, அவனுக்கும் தெரியும். அம்மா அவன்கிட்ட பேசுகிறதா சொன்னாங்க.

 

அதுவும் சரி தான் அத்தை பேசுனா கரெக்டா தான் இருக்கும். பட், அத்தை அவனுக்கு இதில் சம்மதம்னா மட்டும் ஃபர்தரா புரொசிட் பண்ணலாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

 

இவர் கூறுவதை கேட்ட வள்ளியம்மைக்கு சிறிது கலக்கமாக இருந்தாலும் மனதிற்குள், அதெல்லாம் பார்த்துக்கலாம். எப்படியாவது கிருஷ்ணமூர்த்தியை வைத்து அபியை சமாளித்து விட வேண்டும் என்று கணக்கு போட்டார்.

 

வெளியில், சரிங்க மாப்ள. அபிக்கு விருப்பம் இருந்தா தான் இந்த திருமணம் என்று கூறி முடித்தார்.

 

அந்த நேரத்தில் வேறு உடைக்கு மாறி கீழே இறங்கி வந்தான் அபிமன்யு. அனைவரும் உணவருந்த டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தனர். வந்தவன் அவனும் ஒரு இருக்கையில் அமர்ந்து உணவை உட்கொள்ள தொடங்கினான்.

 

மாம், என்ன ஸ்பெஷல் இன்னைக்கு. ஆலு பரோட்டா செஞ்சிருக்கீங்க. பட்டர் சிக்கன் செஞ்சிருக்கீங்க சூப்பரா இருக்கு என்று கேட்டான் ஆரியன்.

 

அதற்கு மீரா பதில் கூறும் முன்பே ஆரணி, டேய் ஆரி, உனக்கு தெரியாதா.. இன்னைக்கு அப்பா தான் ஸ்பெஷல். அப்பா வந்த மகிமை தான் இந்த ஆலு பரோட்டாக்கும், பட்டர் சிக்கன்க்கும் காரணம் என்று கூறி கண்ணடித்து சிரித்தாள்.

 

தன் பிள்ளைகளின் கிண்டலில் இத்தனை வயதிலும் அழகாக வெட்கப்படும் தன் மனைவியை ரசித்தார் மகேந்திரன்.

 

மீரா மெதுவாக, சும்மா இரு ஆரணி என்று கூறிவிட்டு அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார்.

 

இவை அனைத்தையும் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அபி, எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவன் எப்பொழுதுமே இப்படித்தான். தேவை என்றால் மட்டுமே பேசுவானே தவிர, சிரிக்க கூட யோசிப்பான். அவன் இப்படித்தான் என்று தெரிந்ததால் யாரும் இவனை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை.

 

சாப்பிட்டு முடித்து எழுந்தவுடன் வள்ளியம்மை, அபி உன்கிட்ட தாத்தா பேசணும்னு சொன்னாங்க. கொஞ்சம் ரூமுக்கு வாப்பா என்று அழைத்தார்.

 

வரேன் பாட்டி என்று கூறிய அபிமன்யு கை கழுவி விட்டு அவர்களின் அறைக்குள் நுழைந்தான்.

 

அபி வருவதற்குள் தங்கள் அறைக்குள் சென்ற வள்ளியம்மை கிருஷ்ணமூர்த்தியிடம், இப்போ அபி வருவான். அவன்கிட்ட இந்த திருமணத்துக்கு நீ சம்மதம் சொல்லுன்னு சொல்லணும் புரிஞ்சுதா.

 

என்ன வள்ளி.. என்னையே மிரட்டுறியா என்று எகிறினார் கிருஷ்ணமூர்த்தி.

 

வள்ளியம்மை, நான் எப்படிங்க உங்களை மிரட்ட முடியும். நீங்க சொல்லணும் அவ்வளவு தான். ஏதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு நினைக்காதீங்க. அப்புறம் உங்க பொண்ணு, பேர பசங்க யாரும் உங்க கூட இருக்க மாட்டாங்க. நீங்க எப்படி பொய்யா ஒரு கதையை உருவாக்கி சொன்னீங்களோ. நானும் உண்மை கூட உங்களை பத்தி பொய்யா ஒரு கதையை உருவாக்கி சொல்லுவேன். அவங்க குழந்தையை நீங்களே திருடிக்கிட்டு வந்துட்டதா கூட சொல்லுவேன் என்று கூறி கிருஷ்ணமூர்த்தியை பார்த்தார்.

 

இவர் கூறியதை கேட்டு அதிர்ந்த கிருஷ்ணமூர்த்தி, வள்ளியம்மைக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா என்று ஆச்சரியமாக திகைப்புடன் பார்த்தார். இவர் கூறி முடிக்கவும், அபிமன்யு அறையினுள் நுழையவும் சரியாக இருந்தது.

 

அறையினுள் நுழைந்த அபிமன்யுவை பார்த்த வள்ளியம்மை, வா அபி என்று அழைத்தார்.

 

உள்ளே வந்தவன், எப்படி இருக்கீங்க தாத்தா? இப்போ கை, கால் எல்லாம் வலி குறைந்து இருக்கா என்று விசாரித்தான்.

 

இப்போ பரவால்ல அபி. அந்த பிசியோதெரபி கரெக்ட் டைமுக்கு இப்போலாம் வரமாட்டேங்குறாங்க. கொஞ்சம் என்னனு பாருப்பா.

 

சரி தாத்தா நான் பார்க்குறேன். சரி வரலைனா சொல்லுங்க வேற டாக்டர் மாத்திடலாம்.

 

சரிப்பா என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி சிறிது நேரம் அமைதி காத்தார்.

 

வள்ளியம்மை கண் ஜாடை காட்டவும், உன்கிட்ட நான் ஒன்னு சொல்லுவேன். எனக்காக நீ அதை செய்வியா.

 

உங்களுக்காக என்ன வேணும்னாலும் நான் செய்வேன் தாத்தா. நீங்க என்கிட்ட பர்மிஷன் கேட்கணும்னு அவசியம் இல்ல. ஆர்டரா சொல்லுங்க

 

இவன் கூறுவதை கேட்ட வள்ளியம்மை பாட்டி, எப்படியும் தன் எண்ணம் நிறைவேறிவிடும் என்று தன் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டார்.

 

உங்க பாட்டி ஊரில் நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க அபி.

 

அதற்கு அபியிடம் மௌனம் மட்டுமே.

 

எனக்கு உன் கோபம் புரியுது. இப்போ இருக்கிற சூழ்நிலையில் மீரா அவங்களை பார்த்துட்டா. அதனால நமக்கு இப்போ எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருக்கு. அவங்க ஏதாவது பொய் சொல்லி மீராவோட மனசை மாத்திட்டாங்கன்னா என்ன பண்றது. அதனால நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ.

 

அவர் கூறுவதை கேட்டு அதிர்ந்த அபிமன்யு, என்ன தாத்தா சொல்றீங்க. நான் எப்படி அவங்க வீட்டு பொண்ண கட்டிக்க முடியும். அவங்க எவ்வளவு பெரிய துரோகம் செய்து இருக்காங்க. அதெல்லாம் மறந்துட்டு என்னை எப்படி கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க என்று கேட்டான்.

 

அதற்கு கிருஷ்ணமூர்த்தி, நான் சொல்றதை ஒரு நிமிஷம் அமைதியா கேளு. அவங்க வீட்டு பொண்ணு நம்ம வீட்டில் வாழ வந்தா, அவங்களுக்கும் நம்ம மேல ஒரு பயம் இருக்கும். மீரா கிட்ட ஏதாவது பொய் சொன்னா, அவங்க பொண்ணோட வாழ்க்கை வீணா போயிடுமோ என்ற பயம் அவங்க மனசுக்குள்ள காலத்துக்கும் இருக்கும். அதனால் பயந்துகிட்டு மீரா கிட்ட எந்த பொய்யையும் சொல்லாமல் இருப்பாங்க. நமக்கும் ஒரு நம்பிக்கை வேணுமில்ல. அதுக்காக இந்த கல்யாணத்தை நீ பண்ணி தான் ஆகணும். நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழுனு உன்கிட்ட யாரும் சொல்லல. கல்யாணம் பண்ணி உனக்கு அவங்க மேல இருக்க கோபத்தை அந்த பொண்ண வச்சு தீர்த்துக்கோ.

 

இப்பொழுது இவர் கூறுவதை கேட்டு அதிர்வது பாட்டியின் முறையாகிற்று. அடப்பாவி! இன்னும் நீ திருந்தலையா என்று எண்ணியவர் திகைத்து நின்றார்.

 

தாத்தா கூறுவதை கேட்ட அபிமன்யுவிற்கும் இது சரி வரும் போல் தோன்றவே, சரி தாத்தா நான் யோசிச்சு நாளைக்கு முடிவு சொல்றேன் என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டான்.

 

அபிமன்யு சென்ற பின் தாத்தாவை முறைத்த வள்ளியம்மை பாட்டி, நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா. இன்னும் என்ன பண்ண காத்திருக்கிங்க. பாவம், எல்லாரையும் கஷ்டப்படுத்தியது பத்தாதுன்னு, இப்போ அந்த சின்ன பொண்ண கஷ்டப்படுத்த அபிக்கு சொல்லிக் கொடுக்குறீங்களா.

 

உனக்கு தேவை இந்த கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தான். இப்படி சொன்னா தான் அபி இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பான். நீ வேற என்ன சொன்னாலும் அவன் முடியாதுன்னு தலைகீழா நிப்பான். கல்யாணம் பண்ணி வைக்க சொன்ன, நானும் அபியை ஒத்துக்க வச்சுட்டேன். இதுக்கு மேல அந்த பொண்ணு அவன்கிட்ட இருந்து தப்பிக்கிறது அவளோட சாமர்த்தியம். அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்று சாதாரணமாக கூறினார்.

 

பாட்டிக்கும் இப்பொழுது என்ன செய்வது என்று புரியவில்லை. சரி, திருமணம் நல்லபடியாக நடக்கட்டும். எப்படியும் கயல்விழி அபியை மாற்றிவிடுவாள் என்ற முழு நம்பிக்கையுடன் கடவுளிடம் வேண்டுதலை வைத்தார்.

 

இந்த திருமணம் அபியின் வாழ்க்கையை மாற்றப் போகிறதா..?

 

இல்லை, கயல்விழியின் வாழ்க்கையை மாற்றப் போகிறதா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5