அவனதிகாரம் - 8

 

 

அதிகாரம் – 8

 

பல வருடங்களுக்கு முன்பு....

மரகதம் அக்கா, அங்க பாரு... மாமா உன்னயத்தேன் வச்ச கண்ணு வாங்காம பாக்காங்க என்றார் வள்ளியம்மை.

 

சும்மா இருடி, எல்லாரும் நம்மளைத்தேன் பாத்துட்டு இருக்காங்க என்றார் வெட்கத்துடன் மணக்கோலத்தில் இருந்த மரகதம்.

 

பின்ன, என் அக்கா என்ன சும்மாவா... சும்மாவே நீ ரொம்ப அழகு.. இதில் கல்யாணம் வேற, சொல்லவா வேணும். அழகு சும்மா அள்ளுதே என்று கூறி தன் அக்காவிற்கு திருஷ்டி கழித்து அவரின் புகழை பாடினார் வள்ளியம்மை.

 

சரி போதும் போதும் சும்மா இரு டி என்றார் குனிந்த தலை நிமிராமல் மரகதம்.

 

ஆம்! மரகதமும், வள்ளியம்மையும் அக்கா தங்கை.

 

மரகதம் வள்ளியம்மையை விட இரண்டு வயது மூத்தவள். மரகதத்திற்கும் அவரின் மாமன் மகனாகிய வேலுச்சாமிக்கும் அவர்களின் பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இன்று அவர்கள் இருவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்று முடிந்தது.

 

உறவினரில் ஒருவர், என்னடி வள்ளி, உன் அக்காவை பத்தி ரொம்பத்தேன் பெருமை பேசுற என்று கேட்டார்.

 

பின்ன என் அக்கா போல யார் இருக்கா இந்த ஊரில் என்று பெருமை பேசினார்.

 

தெரியாமல் கேட்டுட்டேன் டி ஆத்தா. உங்க அக்கா, தங்கச்சி பாசத்தை பத்தித்தேன் ஊருக்கே தெரியுமே.. உங்க கிட்ட பேசி யாராவது ஜெயிக்க முடியுமா.. நான் கிளம்புறேன் ஆளை விடு என்று கூறிவிட்டு உறவுக்கார பெண் கிளம்பி விட்டாள்.

 

திருமணம் முடிந்த முதல் வருடத்திலேயே மரகதம் கருவுற்றார். மரகதத்திற்கும், வேலுச்சாமிக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு, சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினர்.

 

சுப்பிரமணியன் பிறந்த ஒரு வருடம் கழித்து வள்ளியம்மைக்கு வேலுச்சாமியின்  நண்பர் ஆகிய கிருஷ்ணமூர்த்தி உடன் திருமணம் செய்து வைத்தனர்.

 

சிறு வயது முதல் கிருஷ்ணமூர்த்தியும், வேலுச்சாமியும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து ஒன்றாக ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது அவர்கள் ஊரிளேயே பெரிய கடை.

 

அது மட்டும் இல்லாமல், வேலுச்சாமிக்கு நிலங்களும் உள்ளன. அதிலும், விவசாயம் செய்து வருகிறார். கிருஷ்ணமூர்த்தி சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். வேலுச்சாமியின் நட்பு கிடைத்த பிறகு இருவரும் உடன் பிறவா சகோதரர்களாகவே பழகி வந்தனர். உறவு என்று கூறிக்கொள்ள யாரும் இல்லாத அவருக்கு வேலுச்சாமி தான் எல்லாமும் ஆக இருந்தார்.

 

வேலுச்சாமி அவரின் ஜவுளி வியாபாரத்திலும் கிருஷ்ணமூர்த்தியை பங்குதாரராக சேர்த்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து நல்ல முறையில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது தான், அவரின் மனைவியின் தங்கையாகிய வள்ளியமைக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தனர்.

 

வேலுச்சாமி தான் கிருஷ்ணமூர்த்தியை பற்றி அவரின் மாமனாரிடம் எடுத்துக்கூறி கிருஷ்ணமூர்த்திக்கு வள்ளியம்மையை மணமுடித்து வைத்தார்.

 

திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் கிருஷ்ணமூர்த்திக்கும், வள்ளியம்மைக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. எத்தனையோ கோவில் குளங்கள் சென்று பிரார்த்தனை செய்தும் எந்த ஒரு பலனும் இல்லாமல் போனது.

 

இறுதியாக இருவரும் ஒரு மருத்துவரை சென்று ஆலோசித்த போது வள்ளியம்மைக்கு கர்பப்பையில் ஏதோ கோளாறு இருப்பதாக கூறி, அவரின் கர்பப்பையை நீக்கி விட்டனர்.

 

வள்ளியம்மைக்கு இனிமேல் குழந்தையே பிறக்காது என்று தெரிந்ததும், தன் அக்காவிடம் புலம்பி அழுது தீர்த்து விட்டார்.

 

அக்கா இனிமே எங்களுக்குன்னு யாருமே கிடையாது. அவருக்கும் அப்பா, அம்மா கூட பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது. எங்களுக்கு பொறக்க போற குழந்தை தான் எங்களுடைய முதல் சொந்தம்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்போ அதுக்கும் வழி இல்லாமல் போச்சு. இனிமே, நாங்க யாருக்காக வாழனும் என்று விரக்தியாக புலம்பி கொண்டு இருந்தார்.

 

அப்படி எல்லாம் பேசாத வள்ளி. கடவுள் எது செஞ்சாலும் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். சுப்பிரமணி எனக்கு மட்டும் புள்ள இல்ல, உனக்கும் புள்ள தான்த்தா. அவனை உன் புள்ளையா நினைச்சுக்கோ. நம்ம ரெண்டு பேருக்குமே சுப்பிரமணி தான் புள்ள சரியா என்று அவர் தலையை தடவி கொடுத்து சமாதானப்படுத்தினார்.

 

எவ்வளவு தான் சமாதானம் கூறியும் வள்ளியம்மையின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

சில நாட்கள் கழித்து, மரகதத்திற்கும் வேலுச்சாமிக்கும் சுப்ரமணியன் பிறந்த பிறகு ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மரகதம் கருவுற்றார். மரகதமும் தனக்கு இரண்டாம் குழந்தை பிறக்க வேண்டி பல வேண்டுதல்களை வைத்திருந்தார்.

 

ஆறு வருடங்கள் கழித்து அவரின் வேண்டுதல் நிறைவேறியது. ஆறு வருடங்கள் கழித்து அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார் மரகதம். ஆனால், வள்ளியம்மைக்கு தான் அந்த பாக்கியம் இல்லாமலே போனது.

 

தன் நண்பனும், வள்ளியம்மையும் குழந்தை இல்லாமல் படும் துயரங்களை பார்த்துக் கொண்டிருந்த வேலுச்சாமிக்கு மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் பெற்றோர் இன்றி உடன்பிறந்தோர் இன்றி எந்த சொந்தபந்தமும் இன்றி எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காத கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் முடிந்தால் அவருக்கு குழந்தைகள் பிறக்கும். அதன் மூலம் அவருக்கு பல உறவுகள் அமையும் என எதிர்பார்த்த வேலுச்சாமிக்கு வள்ளியம்மைக்கு குழந்தை பிறக்காது என்ற விஷயம் பெரும் மன உளைச்சலை அளித்தது.

 

மேலும், தான் பார்த்து நடத்தி வைத்த திருமணம் வேறு... ஆகையால், தன் மனைவியிடம் கூட கேட்காமல் தங்களுக்கு பிறந்து ஆறு மாதமே ஆன தன் பெண் குழந்தையை தூக்கி தன் நண்பன் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தார் வேலுச்சாமி.

 

இந்தா கிருஷ்ணா, இனி இவ உன் பொண்ணு என்று கூறினார்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. பணமோ, நகையோ கடன் பட்டிருந்தால் திரும்ப கொடுத்து விடலாம்.

 

இது அப்படி இல்லையே..! அவருக்கு என்று கிடைக்கப் போகும் முதல் உறவு. என்றாவது ஒரு நாள் திரும்ப கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் அவரின் மனதிற்குள் ஓடியது.

 

வேண்டாம் வேலு. பாவம், ஆறு வருஷம் பிள்ளை இல்லாமல், இப்போ தான் உங்களுக்கும் குழந்தை பிறந்திருக்கு. அதை தூக்கி என்கிட்ட கொடுத்துட்டா நீங்க என்ன பண்ணுவீங்க வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

 

அதற்கு வேலுச்சாமி, நான் சொல்றதை கேட்பியா, மாட்டியா... இனி, இவ தான் உன் பொண்ணு. இவ தான் உன் உறவு. இனிமே, இவளை பத்தி நான் எதுவுமே கேட்க மாட்டேன். உன் பொண்ணு போலவே வளர்த்துக்கோ என்று கூறினார்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு வேண்டாம் என்று மறுக்கவும் முடியவில்லை. வள்ளியம்மை அவரின் அக்கா மரகதத்தின் முகத்தை பார்த்தார். திடீரென வேலுச்சாமி செய்த செயலில் செய்வதறியாது திகைத்து நின்றார் மரகதம்.

 

வள்ளியம்மை தன்னை பார்ப்பதை உணர்ந்து சாதாரணமாக இருப்பது போல் அமைதியாக நின்றார். எனவே, மரகதத்திற்கும் இதில் சம்மதம் என வள்ளியம்மை நினைத்துக் கொண்டார். கிருஷ்ணமூர்த்திக்கும், வள்ளியம்மைக்கும் பேச வார்த்தைகள் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே...!

 

வள்ளியம்மை ஓடிச் சென்று தன் அக்காவின் காலில் விழுந்து கதறி அழுதார்.

 

ரொம்ப நன்றிக்கா.. யாராலும் செய்ய முடியாததை நீ எனக்காக செஞ்சிருக்க. இந்த விஷயத்தை என் உயிர் இருக்க வரைக்கும் நான் மறக்க மாட்டேன். காலத்துக்கும் நான் உனக்கு நன்றி கடன் பட்டிருப்பேன் என்று கூறி கதறி அழுதார்.

 

மரகதம், அழாத வள்ளி, எல்லாம் சரியாயிடும். இனிமே, நீ அழவே கூடாது என்று கூறிவிட்டு தன் கணவரை பார்த்தார்.

 

கிருஷ்ணமூர்த்தியும், வேலுச்சாமியைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினார்.

 

என்ன தான் தன் தங்கைக்கு கொடுப்பதாக இருந்தாலும் ஆறு வருடங்கள் தவமிருந்து பத்து மாதங்கள் பல கனவுகளோடு தன் வயிற்றில் சுமந்த பிள்ளையை தூக்கிக் கொடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதில்லையே!

 

மனதை கல்லாக்கிக் கொண்டு மனமே இல்லாமல் தன் ஆசை மகளை தூக்கி தன் தங்கை வள்ளியமைக்கு தாரம் வார்த்தார் மரகதம். மரகதத்திற்கு வேலுச்சாமியின் மேல் இந்த விஷயத்தில் பெரும் மனஸ்தாபம் உண்டானது.

 

வேலுச்சாமி மரகதத்திடம் இந்த விஷயத்தை பற்றி முன்னரே தெரிவித்து இருந்தால், அவர் வேறு ஏதாவது குழந்தைக்கு ஏற்பாடு செய்திருப்பார். ஆனால், அவ்வாறு யோசிக்கும் மனநிலையில் வேலுச்சாமி இல்லை.

 

அந்த நேரம் அவருக்கு கிருஷ்ணமூர்த்தியின் மனக்கவலையை போக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணினாரே தவிர, வேறு எதைப் பற்றியும் அவர் சிந்திக்கவில்லை.

 

என்ன தான் ஆறு மாதம் சீராட்டி பாராட்டி மகளை வளர்த்திருந்தாலும் சிறு வயது முதல் இருந்த நட்பு அவருக்கு பெரியதாய் போய்விட்டது. இதனால் தன் மனைவிக்கும், மகனுக்கும் எவ்வளவு மன வருத்தம் ஏற்படும் என்பதை கூட அவர் அப்போது எண்ணி பார்க்கவில்லை.

 

குழந்தையை எடுத்துக்கொண்டு வள்ளியம்மையும், கிருஷ்ணமூர்த்தியும் நன்றி தெரிவித்துவிட்டு அவர்கள் இல்லத்திற்கு சென்றனர்.

 

அவர்கள் சென்ற பின் பள்ளி முடிந்து வந்த சுப்பிரமணி, அம்மா, தங்கச்சி பாப்பா எங்கமா என்று ஆசையாக கேட்டான்.

 

அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் மரகதம் தூணில் தலை சாய்ந்து அமர்ந்தார்.

 

அவனின் கண்களில் இருக்கும் ஆசையையும், மரகதத்தின் முகத்தில் இருக்கும் வேதனையையும் பார்க்கும் போது தான், வேலுச்சாமிக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்பது புரிந்தது.

 

சுப்பிரமணி, ஓ! பாப்பா உள்ள இருக்கா என்று கூறிவிட்டு வீடு முழுக்க தேடி வந்தான். ஆனால், எங்கும் குழந்தையை காணவில்லை.

 

சுப்பிரமணி, பாப்பா சித்தி வீட்டுக்கு போயிருக்கு கண்ணா என்று வேலுச்சாமி கூறினார்.

 

எதுக்குப்பா? வாங்க, நம்ம போய் பாப்பாவை தூக்கிக்கிட்டு வரலாம் என்று தந்தையின் கையை பிடித்து இழுத்தான்.

 

அவருக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை, இல்ல கண்ணா, இனிமே பாப்பா சித்தி கூட தான் இருப்பா என்று கூறினார் தந்தை.

 

ஏன்? நம்ம பாப்பா ஏன் சித்தி கூட இருக்கணும்? அதெல்லாம் முடியாது. எனக்கு பாப்பா வேணும் என அடம்பிடித்தான்.

 

இங்க பாருப்பா, சித்திக்கு பாப்பா இல்லைல. பாப்பா இல்லைனு அவங்க தினமும் அழறாங்கல்ல. அதான், நம்ம பாப்பாவை சித்திக்காக கொடுத்துட்டோம். உனக்கு வேற பாப்பா அம்மா கொடுப்பாங்க என்று சமாதானம் செய்ய முயன்றார் வேலுச்சாமி.

 

அவரின் எந்த சமாதானமும் சுப்பிரமணியின் காதில் ஏறவில்லை. பாப்பா வேண்டும் என்று அழுது கொண்டே இருந்தான். நான்கு நாட்கள் வரை சரியாக சாப்பிடாமல் பாப்பா வேண்டும் என்று மட்டுமே அழுது கொண்டிருந்தான்.

 

அவனை சமாளிக்க முடியவில்லை. இந்த நான்கு நாட்கள் அவர்களின் வீடு அமைதியாகி போனது. சிரிப்பு கிடையாது, பேச்சு வார்த்தை கூட கிடையாது.

 

மரகதம் சமைத்து வைத்துவிட்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்து விடுவார். யாரிடமும் பேசவும் மாட்டார், சாப்பிடவும் மாட்டார்.

 

வேலுச்சாமிக்கு தான் செய்தது மிகப்பெரிய தவறு என்று முதல் முறையாக எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

 

மரகதத்தையும், சுப்ரமணியனையும் சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கவே அவர் பெரும்பாடு பட்டுப் போனார்.

 

பிறகு மரகதத்திடம், என்ன மரகதம், சுப்ரமணி தான் இப்படி இருக்கான்னு பார்த்தா. நீயும் சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குறியே. யார்கிட்ட நம்ம புள்ளையை குடுத்து இருக்கோம். உன் தங்கச்சி கிட்ட தான.. பக்கத்து தெருவில் தான இருக்கா.. நினைச்ச நேரம் போய் பார்த்துக்கிடலாம். பாவம்! அவங்களுக்கு இனிமே குழந்தையே பிறக்காது. நமக்காவது சுப்பிரமணி இருக்கான். அவங்களுக்கு அது கூட இல்லை. கிருஷ்ணமூர்த்திக்குன்னு எந்த ஒரு உறவும் இல்லை. இந்த குழந்தை தான் அவனோட முதல் உறவு புரிஞ்சுக்கோ மா என்று அவரை சமாதானப்படுத்தினார்.

 

மரகதத்திற்கும் எல்லாம் புரிந்தது. இருந்தும், பெற்றவர் ஆயிற்றே.... அவரால் அவ்வளவு எளிதில் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 

நான்கு நாட்கள் அழுது கரைந்த சுப்பிரமணி, பாப்பாவை பார்க்கணும் போல இருக்கு. என்னை கூப்பிட்டு போங்க என்று அவனின் தாய் தந்தையிடம் நச்சரித்துக் கொண்டே இருந்தான்.

 

சரி, சென்று குழந்தையை பார்த்து வந்தால் மரகதத்திற்கும் மனம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று எண்ணிய வேலுச்சாமி மரகதத்தையும், சுப்பிரமணியனையும் அழைத்துக் கொண்டு கிருஷ்ணமூர்த்தியின் வீடு நோக்கி சென்றார்.

 

ஆனால், இவர்கள் சென்று பார்க்கையில் அங்கு பூட்டிக் கிடந்த வீடே இவர்களை வரவேற்றது. மரகதத்திற்கும், வேலுச்சாமிக்கும் பெரும் அதிர்ச்சியாகிப் போனது.

 

குழந்தையை எடுத்துச் சென்ற கிருஷ்ணமூர்த்தியும், வள்ளியம்மையும் எங்கு சென்றனர்..?

 

திரும்பி வந்தார்களா, இல்லையா..? குழந்தை என்னவானது..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5