அவனதிகாரம் - 28

 

அதிகாரம் – 28

 

அன்று அபிமன்யு ஏர்போர்ட் வாயிலில் காத்துக் கொண்டு இருந்தான் வீடு திரும்புவதற்காக தன்னுடைய காரை எதிர்பார்த்தபடி. சென்னையின் டிராபிக்கை பற்றி தான் அனைவருக்கும் தெரியுமே.

 

எதிர்பாராத விதமாக அபிமன்யுவின் கார் டிரைவர் பெரும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டார். ஆகையால், அரை மணி நேரம் தாமதமாகவே ஏர்போர்ட் வந்தடைந்தார். அதற்குள் கார் டிரைவருக்கு பலமுறை அழைத்து விட்டான் அபிமன்யு.

 

அவரும் இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று கூறி கூறி அலுத்துவிட்டார். இந்த அரை மணி நேரத்தில் பல அர்ச்சனைகளையும் கார் டிரைவருக்கு தன் மனதினுள் செய்துவிட்டான் அபிமன்யு.

 

ஒரு வழியாக அவர் ஏர்போர்ட் வந்தடைந்ததும் கோபத்தின் உச்சியில் இருந்த அபிமன்யு பளார் என்று அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஓங்கி ஒன்று விட்டிருந்தான் கார் டிரைவரை.

 

அவரோ, சாரி சார். வண்டி டிராபிக்ல மாட்டிக்கிச்சு என்று தன் பக்க நியாயத்தை கூற முன் வந்தார்.

 

ஷெட் டப். இடியட்! நீ முன்னாடியே கிளம்பி இருக்க வேண்டியது தானே, கரெக்ட் டைமுக்கு தான் கிளம்புவியோ. நீ ஒன்னும் ட்ரைவ் பண்ண தேவையில்லை. நீ வேலையை விட்டு இப்போவே கிளம்பு நானே டிரைவ் பண்ணிக்கிறேன் என்று கோபமாக கத்தினான்.

 

சாரி சார், ப்ளீஸ் சார் என்று அவன் பின்னே ஓடி வந்தவரை சற்றும் பொருட்படுத்தாது காரினுள் ஏறி காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

 

வரும் வழியெல்லாம் கோபமாகவே வந்தவன் வீட்டினை அடைந்ததும் வாசலிலேயே ஹாரன் சத்தம் காதை கிழித்தது.

 

பதறிய செக்யூரிட்டி, அய்யோ போச்சு, அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் மாட்டிக்கிட்டோம் என்று புலம்பிக்கொண்டே ஓடிவந்து கதவை திறந்தார்.

 

சீக்கிரம் திறக்க மாட்டியா.. ஸ்டுப்பிட்! என்று இரண்டு வசைப்பாடிவிட்டு வீட்டினுள் நுழைந்தான்.

 

‘அப்படி என்ன தான் கோவம் இவனுக்கு வரும்போதே எவ்வளவு சூடா வரான்’ என்று தன் மனதினுள் நினைத்த வள்ளியம்மை பாட்டி, எதிரில் எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.

 

ஆம்! இன்று தான் அபிமன்யுவிற்கும், கயல்விழிக்கும் நிச்சயம் வைத்திருக்கிறார்கள். எனவே, அபிமன்யுவின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கயல்விழியின் வீட்டிற்கு செல்ல புறப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

 

இந்த நிச்சயம் குறித்து முன்கூட்டியே அபிமன்யுவிடம் எந்த ஒரு விவரமும் கூறவில்லை பாட்டி. இவன் ஏதேனும் கூறி இப்பொழுது வேண்டாம் என்று கூறிவிடுவானோ. ஏற்கனவே, ஒரு வருடமாக கயல்விழியின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். மேலும், அவர்களை காக்க வைக்க முடியாது என்று எண்ணிய வள்ளியம்மை பாட்டி அபிமன்யுவிடம் எந்த ஒரு விஷயத்தையும் கூறாமல் இவர்களாகவே முடிவு செய்து நிச்சயத்திற்கு நாள் குறித்துவிட்டனர். நிச்சயம் செய்துவிட்டால் திருமணத்தை நிறுத்த கிருஷ்ணமூர்த்தி எந்த முயற்சியும் செய்ய மாட்டார் என்ற எண்ணம் வள்ளியம்மைக்கு.

 

தன்னிடம் கேட்காமல் இவர்களின் விருப்பத்திற்கு நிச்சய தேதியை குறித்ததே அபிமன்யுவின் கோபத்திற்கு காரணம். வீட்டினுள் நுழைந்தவன் தன் கோபத்தை தன் வீட்டில் காட்ட முடியாத வண்ணம் வீடு முழுக்க இவனின் தந்தை மகேந்திரனின் உடன்பிறந்தோர் கூடியிருந்தனர்.

 

அபிமன்யுவின் பெரியப்பா, என்ன இது அபி. இன்னைக்கு தான் நிச்சயம் ஒரு நாள் முன்னாடி வந்து இருக்க கூடாதா. பாரு, எவ்வளவு டயர்டா இருக்க. போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு கொஞ்ச நேரம் படுத்து ஓய்வு எடுப்பா பொண்ணு வீட்டுக்கு வேற கிளம்பனும்ல என்றார்.

 

யாரிடமும் தன் கோபத்தை காட்ட முடியாத அபிமன்யு தன் நடையில் வேகத்தை கூட்டினான். அவருக்கு எந்த பதிலும் கூறாமல் விறுவிறுவென தன் அறை நோக்கி நகர்ந்தான் அபிமன்யு.

 

சிறிது நேரம் கழித்து மீரா அபிமன்யுவின் அறைக் கதவை தட்டினார். அறைக் கதவு திறக்கப்பட்டதும் அவர் கண்டது ருத்ரமூர்த்தியாக அங்கே நின்று கொண்டிருந்த அபிமன்யுவை தான்.

 

என்ன ஆச்சு அபி. ஏன் ஒரு மாதிரி இருக்க.

 

என்ன மாம் நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல. என்னை கேட்காமல் எப்படி நீங்க நிச்சயத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணலாம். அதுக்குள்ள என்ன அவசரம். இன்னைக்கு தான நான் வந்திருக்கேன். எனக்கு எந்த டேட் செட் ஆகும்னு கேட்டு தான நீங்க முடிவு செஞ்சிருக்கணும் என்று தன் தாயிடம் ஏறி இறங்கி விட்டான்.

 

அதுக்கில்லபா.. இன்னைக்கு தான் தேதி நல்லா இருக்கு. அதனால் அம்மா இன்னைக்கே வைக்கலாம்னு விருப்பப்பட்டாங்க. பெருசா ஒன்னும் இல்லப்பா சும்மா சிம்பிளா தான் பண்ண போறோம். மேரேஜ் பெருசா பண்ணிக்கலாம்னு இருக்கோம். மேரேஜ்ல எல்லாமே உன்னோட டெசிஷன் படி தான் நடக்கும் அபி. இந்த ஒன் டைம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று கெஞ்சலாக கேட்டார்.

 

என்னவோ பண்ணுங்க போங்க. இந்த கல்யாண பேச்சை ஆரம்பித்ததிலிருந்து எல்லாமே உங்க விருப்பப்படி தான் நடக்குது. கல்யாணம் எனக்கா பாட்டிக்கானு ஒன்னும் புரியல என்று திட்டிக் கொண்டிருந்தான் அபி.

 

இந்த டிரஸ் போட்டுகிட்டு கொஞ்சம் ரெடியாகி சீக்கிரமா கீழே வா. நாம பொண்ணு வீட்டுக்கு கிளம்பனும்ல என்று கூறிவிட்டு, அவன் திரும்பி பார்க்கும் முன்பே உடையை மேஜையின் மீது வைத்துவிட்டு வெளியேறிவிட்டார் மீரா.

 

இல்லை என்றால் இதற்கும் ஏதாவது திட்டுவானே. யாரை கேட்டு என் உடைகளை தேர்வு செய்தீர்கள் என்று. ஆகையால், அவன் கண்ணில் படாமல் வெளியேறி விட்டார்.

 

ஷிட் என்று தன் காலை தரையில் உதைத்தவன் கையை இறுக்க மூடி திறந்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். அபிமன்யு தயாராகி கீழே வரும் முன் மொத்த குடும்பத்தினரும் தயாராகி அபிமன்யுவுக்காக காத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

 

ஜீன் பேண்டும், பிஸ்தா கிரீன் கலர் ஷர்ட்டும் அதற்கு மேல் கருப்பு நிற கோட்டும் அணிந்து கொண்டு கம்பீரமாக படிகளில் இறங்கி வரும் தங்கள் மகனை மீராவும், மகேந்திரனும் பூரிப்புடன் பார்த்தனர்.

 

ஆரணியும், ஆரியனும் ஒரே போல், செம்மையா இருக்கீங்கண்ணா என்று கூறினர்.

 

பாட்டி அபிமன்யுவின் அருகில் சென்று தன் பேரனுக்கு திருஷ்டி கழித்தார். அதற்கு கடுகடுவென அபிமன்யு தன் பாட்டியிடம், என்ன கலர் இது பாட்டி. இப்படி போய் வாங்கி இருக்கீங்க. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. என்னை கேட்காமல் எதுக்கு செலக்ட் பண்ணீங்க என்று மெதுவான குரலில் பொரிய ஆரம்பித்து விட்டான்.

 

விட்டால் இவன் திட்டிக் கொண்டே இருப்பான் என்று எண்ணிய வள்ளியம்மை, இந்த கலர் உனக்கு ரொம்ப அழகா இருக்கு அபி, இல்ல விசாலாட்சி என்று அபியின் அத்தையை கேட்டார்.

 

நல்லா தான் இருக்கு என்று முடித்துக் கொண்டார் விசாலாட்சி.

 

விசாலாட்சிக்கு அபிக்கு தன் மகளை திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. அவர் தன் எண்ணத்தை வெளி கூறுவதற்கு முன்பே அபிமன்யுவிற்கும், கயல்விழிக்கும் திருமணம் முடிவாகிவிட்டது.

 

விசாலாட்சியின் மகள் ஷைலஜாவிற்கும் அபிமன்யு என்றால் கொள்ளை பிரியம். தன் பதின் வயது ஆரம்பத்திலிருந்து அபிமன்யுவை ஒரு தலையாக விரும்புகிறாள். அது அபிமன்யுவிற்கும் தெரியும்.

 

அவளின் பார்வை தற்பொழுது அபிமன்யுவை விட்டு சற்றும் அகலவில்லை. இருந்தும், அபிமன்யு அவளை கண்டுகொள்ளாமல் இருந்தான்.

 

விசாலாட்சி, மகேந்திரனின் உடன்பிறந்த தங்கை. சற்று பெருமை பேசும் குணம் அதிகம், பணக்கார திமிரும் அதிகம். தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்று கூறுவது போல்.

 

தன் தாயைப் போலவே ஷைலஜாவிற்கும் பணத் திமிர் கொஞ்சம் அதிகமாக வந்துவிட்டது. படிக்கும் இடத்திலிருந்தே வசதி குறைந்தவர்களிடம் பேச மாட்டாள். தனக்கு நிகரான பணம் படைத்தவர்களிடம் மட்டுமே நட்பு பாராட்டும் குணம் கொண்டவள்.

 

அழகிலும் சரி, அந்தஸ்திலும் சரி அபிமன்யு தங்களுக்கு நிகராக இருப்பதாலும், அபிமன்யுவின் மீது அவளுக்கு ஒரு பிடித்தம் ஏற்பட்டது.

 

அபிமன்யுவிற்கும், கயல்விழிக்கும் திருமண பேச்சை எடுப்பதற்கு முன்பே அவள் தன் மனதில் இருப்பதை அபிமன்யுவிடம் வெளிப்படுத்தினாள். அதற்கு அபிமன்யு தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி தட்டிக் கழித்து விட்டான்.

 

தன்னையே ஒருவன் வேண்டாம் என்று கூறியதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படியும் நீ என்னிடம் தான் வந்தாக வேண்டும் என்று மனதிற்குள் கருவி கொண்டு இருந்தாள்.

 

ஆனால் தன் தாய் மாமா சொந்த தங்கை மகளை விட்டு விட்டு இப்படி வெளியில் பெண் எடுப்பார் என்பதை அம்மாவும், மகளும் எதிர்பார்க்கவே இல்லை. இது அவர்களுக்கு பெரும் இடியாக இருந்தது.

 

மேலும், பெண் வீட்டார்கள் மீராவின் உறவு முறையில் சொந்தம் என்று கேள்விப்பட்டதும், கோபம் முழுவதும் மீராவின் மீதும், வள்ளியம்மை பாட்டியின் மீதும் திரும்பியது.

 

ஆகையால், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண் வீட்டை பற்றி மட்டம் தட்டி பேசிக்கொண்டே இருந்தனர் விசாலாட்சியும், ஷைலஜாவும். சாதாரணமாகவே அலட்டல் பேர்வழி என்பதால் யாரும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. மகேந்திரனுக்கு உடன் பிறந்தோர் ஒரு அண்ணன், ஒரு தங்கை மட்டுமே.

 

ஆகையால், எப்படியும் தன் அண்ணன் தன்னிடம் தான் பெண் கேட்பார் என்று விசாலாட்சி சற்று திமிராக தான் நடந்து கொள்வார் மீராவிடம். எப்படியும் தன் மகள் தானே இந்த வீட்டிற்கு மருமகளாக வரப் போகிறாள் என்று தன் அதிகாரத்தை எப்பொழுதும் நாத்தனார் என்னும் முறையில் நிலைநாட்டிக் கொண்டே இருப்பார்.

 

ஆனால், மகேந்திரனுக்கு மீராவிடம் விசாலாட்சி இவ்வாறு நடந்து கொள்வதில் சுத்தமாக விருப்பம் இல்லை. எனவே, ஷைலஜாவை அபிக்கு திருமணம் பேசுவதிலும் அவருக்கு விருப்பம் இல்லாமல் போனது.

 

சரிமா, நேரம் ஆகுது. பேசிக்கிட்டே இருந்தா எப்போ கிளம்புறது. வாங்க கிளம்பலாம் என்றார் மீரா.

 

மூன்று குடும்பத்தினரும், மூன்று காரில் கயல்விழியின் ஊரை நோக்கி புறப்பட்டனர்.

 

கயல்விழியின் வீட்டிலோ மரகதம் பாட்டி, ஏங்க, உங்கள ஒரு ஓரமா உட்கார சொன்னா கேட்க மாட்டீங்களா. எதுக்கு அங்கிட்டும், இங்கிட்டும் நடந்துக்கிட்டே இருக்கீங்க என்று வேலுச்சாமி தாத்தாவை திட்டிக் கொண்டிருந்தார்.

 

வேலுச்சாமி தாத்தாவோ, என்ன மரகதம் விளையாடுறியா.. என் பேத்திக்கும், பேரனுக்கும் கல்யாணம். நான் எப்படி போய் ஓரமா உட்கார முடியும். கல்யாண வேலை எல்லாம் நான் தானே பாக்கணும் என்று வீர வசனம் பேசினார்.

 

மரகதம் பாட்டி, போதும்.. போதும்.. நீங்க கல்யாண வேலை பார்த்து கிழிச்ச லட்சணத்தை தான் நாங்க பார்த்தோமே. எதையாவது செஞ்சிட்டு நெஞ்ச புடிச்சிகிட்டு படுத்துக்கவா. எல்லாம் நாங்க பாத்துக்குவோம். போய் அப்படி ஓரமா உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் என்று நொடிந்து கொண்டார்.

 

வேலுச்சாமி, சும்மா எதாவது பேசிக்கிட்டு இருக்காம போய் வேலையை பாரு மரகதம் என்று கூறிவிட்டு வந்த விருந்தினர்களை வரவேற்க சென்று விட்டார்.

 

இவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் என்று புலம்பிய மரகதம், அம்மாடி லட்சுமி, இவங்களுக்கு எல்லாம் காபி கொடுத்தா என்று வந்த உறவினர்களை நோக்கி கை காட்டினார்.

 

இதோ வரேன்த்த என்று உள்ளிருந்து குரல் கொடுத்த லட்சுமி, ஏய் ராணி, பலகாரம் எல்லாம் செஞ்சு வந்திருச்சா. நேரம் ஆகுது பாரு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட போறாங்க, போய் எல்லாத்தையும் சீக்கிரமா வாங்கிக்கிட்டு வா என்றார்.

 

இதோ போரேன் கா என்று சென்றுவிட்டாள் ராணி.

 

யாழினி, அக்கா இங்க பாரு, இந்த கல்லு வச்ச ஜிமிக்கி உனக்கு ரொம்ப அழகா இருக்கும். இதை போட்டுக்கோ என்று கயல்விழிக்கு வைத்து பார்த்தாள்.

 

இதெல்லாம் வேண்டாம் யாழி. எனக்கு செட் ஆகாது என்று மறுத்துக் கொண்டு இருந்தாள் கயல்விழி.

 

யாழினி, என்னக்கா.. நானும் அப்போலருந்து பார்த்துகிட்டு இருக்கேன். கல்யாணம் நடக்கப்போகுதுன்ற சந்தோஷமே உனக்கு இல்லையா. மாமா ஏற்கனவே ஸ்மார்ட்டா இருப்பார். இப்போ நிச்சயத்திற்கு எப்படி ரெடி ஆகி வரப்போறாரோ. அவருக்கு சமமா நீயும் இருக்க வேண்டாமா. இதெல்லாம் போட்டுக்கிட்டா தானே நீயும் ஹீரோயின் மாதிரி இருப்ப. அப்போ தான் உங்க ஜோடி பொருத்தம் பார்க்கவே சூப்பரா இருக்கும். இந்தா இதெல்லாம் போட்டுக்கோக்கா என்று வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.

 

கயல்விழியோ, நான் தான் வேண்டாம்னு சொல்றேன்ல யாழினி விடேன். ஏன் இப்படி என்னை தொந்தரவு பண்ற என்று எரிச்சலாக முகத்தை திருப்பினாள். இவர்களின் சண்டை ஒரு புறம் சென்று கொண்டிருக்க.

 

அறையினுள் நுழைந்த வெண்ணிலாவோ, என்னடி சத்தம் இங்க. நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிறது வெளியில் வரைக்கும் கேட்குது. எதுக்கு இப்போ ரெண்டு பேரும் கத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டாள்.

 

யாழினி, பாருக்கா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துகிட்டு இருக்காங்க. இந்த நகை எல்லாம் போட சொன்னா, எதுவுமே வேண்டாம்னு உம்முன்னு உட்கார்ந்து இருக்காங்க. என்னனு நீயே கேளுக்கா என்று கயல்விழியை பற்றி குற்றப்பத்திரிகை வாசித்தாள் யாழினி.

 

வெண்ணிலா, என்ன ஆச்சு கயல். ஏன் உம்முன்னு இருக்க. அவங்க வரர்துக்குள்ள நீ தயாராகனும்ல. சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க, நிச்சயத்துக்கு இந்த நகை எல்லாம் உனக்கு போட சொல்லி அப்பா அம்மாகிட்ட சொல்லி இருக்காங்க. இதெல்லாம் போடு அப்போ தான் நம்ம சொந்தக்காரங்க முன்னாடி நல்லா இருக்கும்.

 

பதில் எதுவும் பேசாமல் அவர்கள் கூறியபடியே தயாராகினாள் கயல்விழி. ஆனாலும், அவளின் முகத்தில் கல்யாண பூரிப்போ, சந்தோஷமோ இல்லாமல் எந்த உணர்ச்சியுமே இன்றி அமர்ந்திருந்தாள்.

 

அப்போது அறைக்குள் வந்த ஸ்வேதா, ஹே யாழினி, என்ன டி கயல்விழி அக்காவை விட உனக்கு மேக்கப் ஓவரா இருக்கு என்று யாழினியை கிண்டல் அடித்தாள்.

 

அப்படியா, அப்போ உங்களுக்கு மட்டும் எப்படி இருக்கு என்று பதிலுக்கு ஸ்வேதாவை கேட்டாள் யாழினி.

 

சரி, சரி வா‌. அம்மா பலகாரம் எல்லாம் வரப்போகுதுன்னு சொன்னாங்க. பார்த்துட்டு சாப்பிட்டு வருவோம் என்று ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு யாழினி வெளியே சென்று விட்டாள்.

 

ஸ்வேதா, ஏன் டி, இன்னும் நீ மாறவே இல்லையா. வெண்ணிலா அக்கா கல்யாணத்திலும் இப்படித்தான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். இப்போ கயல் அக்கா கல்யாணத்திலும் இப்படித்தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். நாளைக்கு உன் கல்யாணத்திலும் இப்படித்தான் சாப்பிட்டுகிட்டே இருப்பியா என்று கிண்டல் அடிக்க.

 

கல்யாணம் யாருக்கா இருந்தா என்னடி.. நமக்கு சாப்பாடு தானே முக்கியம் என்று கூறி கண்ணாடித்தாள் யாழினி.

 

அறையினுள் கயல்விழியோ பல்வேறுபட்ட சிந்தனைகளுடன் அலங்காரம் செய்த பதுமை போல் அமர்ந்திருந்தாள்.

 

அவள் அருகில் வந்த லட்சுமி, என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா. அழகா இருக்க என்று கூறி திருஷ்டி கழித்தார்.

 

எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்த தன் மகளை பார்த்த லட்சுமி, என்ன ஆச்சு கயல். ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற.

 

அம்மா.. இப்போ இந்த கல்யாணம் ரொம்ப முக்கியமா என்று கேட்டு அவரின் தலையில் குண்டை தூக்கி போட்டாள் கயல்விழி.

 

இவள் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு பார்த்த லட்சுமி, என்ன பேச்சு பேசுற நீ. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துகிட்டு இருக்காங்க. வீடு முழுக்க சொந்தக்காரங்க நிறைஞ்சுருக்காங்க. யார் காதிலாவது நீ பேசுறது விழுந்தா என்ன நினைப்பாங்க. என்ன பேச்சு இதெல்லாம், ஏற்கனவே முடிவு பண்ண கல்யாணம் தான. இப்போ தான் புதுசா பண்ண போற மாதிரி பண்ற என்று படப்படவென பொரிய ஆரம்பித்து விட்டார்.

 

தன் தாயிடம் கூறுவதில் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த கயல்விழி அமைதியாகிவிட்டாள்.

 

அதற்குள் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கம்மா என்று கூறிக் கொண்டே ரூமிற்குள் ஓடி வந்தாள் யாழினி.

 

சரி சரி.. நான் போய் வந்தவங்களை பார்க்குறேன். நீ அங்கிட்டும், இங்கிட்டும் ஓடிகிட்டு கிடக்காம அக்கா பக்கத்திலேயே உட்கார்ந்து இரு சரியா என்று கூறிவிட்டு, அவளின் பதிலை எதிர்பாராமல் வெளியேறிவிட்டார் லட்சுமி.

 

மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர் என்பதை அறிந்தவுடன் கயல்விழிக்குள் படபடப்பு ஏற்பட்டுவிட்டது. மாப்பிள்ளை வீட்டினர் அனைவரையும் வாசல் வரை சென்று சுப்பிரமணியன் லட்சுமி தம்பதியினரும், மரகதம் வேலுசாமி தம்பதியினரும் கைகூப்பி வாங்க வாங்க என்று வரவேற்றனர்.

 

அபிமன்யுவின் பெரியப்பாவும், பெரியம்மாவும் சிரித்த முகமாக உள்ளே நுழைந்தனர். பின்னே விசாலாட்சியும், ஷைலஜாவும் பெண் வீட்டினரை எடை போடும் பார்வையுடன் உள்ளே நுழைந்தனர். அனைவரையும் உள்ளே அழைத்து வந்து அமர வைத்ததும் ஆரணி கயல்விழியை பார்க்க சென்று விட்டாள்.

 

ஹே யாழ் பேபி.. எப்படி இருக்க? என்று யாழினியை விசாரித்த ஆரணி, வாவ் அண்ணி! சூப்பரா இருக்கீங்க என்று கயல்விழியிடம் முடித்தாள்.

 

அதற்கு எந்த பதிலும் கூறாமல் சிரிப்பை மட்டும் பதிலாக அளித்தாள் கயல்விழி. யாழினியும், ஆரணியும், ஸ்வேதாவும் வளவளத்துக்கொண்டே இருந்தனர். சிறிது நேரம் கழித்து பெண்ணை அழைத்து வருமாறு கூறியதும். இவர்கள் மூவரும் சேர்ந்து, கயல்விழியை அழைத்து சென்றனர்.

 

பிறகு, நிச்சய தாம்பூலம் வாசிக்கப்பட்டது. அபிமன்யுவிடம் மோதிரத்தை கொடுத்து கயல்விழிக்கு போட சொன்னார்கள். அதன்படி அபிமன்யு போட. கயல்விழிக்கும் அபிமன்யுவிற்கு போட சொல்லி மோதிரத்தை கொடுத்தனர்.

 

அவள் அபிமன்யுவிற்கு அணிவிக்கும் முன்னரே மோதிரம் கைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டது. அதற்கு அபிமன்யு தன் சலிப்பை வெளிப்படையாக ச்ச... என்று காட்டிவிட்டான்.

 

ஷைலஜா நக்கலாக கயல்விழியை பார்த்து சிரித்தாள்.

 

மீரா அந்த சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு, ஆரணி, அந்த ரிங் எடுத்து கயல்விழி கையில் கொடும்மா.

 

ஆரணி எடுத்துக் கொடுக்கவும், மீண்டும் அபிமன்யுவின் கையில் அணிவித்தாள் கயல்விழி. இவ்வாறு இனிதே அபிமன்யுவிற்கும், கயல்விழிக்கும் நிச்சயம் நடைபெற்று முடிந்தது.

 

கயல்விழியின் மனதில் என்ன இருக்கிறது.‌.?

 

அவளின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன..?

 

ஷைலஜாவின் எண்ணப்படி அபிமன்யுவிற்கும் அவளிற்கும் தான் திருமணம் நடைபெறுமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5