அவனதிகாரம் - 29
அதிகாரம் – 29
நிச்சயதார்த்த
விழா கயல்விழியின் இல்லத்தில் நடந்ததால் பெண் வீட்டின் சார்பாக நெருங்கிய
உறவினர்கள், தூரத்து உறவினர்கள், ஒன்றுவிட்ட உறவினர்கள் என்று உறவினர்கள் படை
சூழ்ந்துவிட்டனர்.
அனைவரும்
மதிய வேலைக்கு பிறகு கலைந்து சென்றதும், கயல்விழியின் குடும்பத்தினரும், ஜீவாவின்
குடும்பத்தினரும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
மாப்பிள்ளை
வீட்டில் மீராவின் குடும்பத்தினரும், மகேந்திரனின் அண்ணன் மற்றும் தங்கை
குடும்பத்தினரும் இருந்தனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது கயல்விழி மோதிரத்தை
தவறவிட்டது வள்ளியம்மை பாட்டிக்கும், மரகதம் பாட்டிக்கும் ஏதோ அபசகுனம் போல்
தோன்ற.
அவர்கள்
இருவருக்கும் மனதில் ஒரு நெருடலாகவே இருந்தது. எனவே, குடும்பத்தினர் அனைவரும்
ஒன்று கூடி சாயந்திரம் போல் கோவிலுக்கு சென்று இந்த திருமணம் நல்ல முறையில் நடக்க
வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கயல்விழி பெயரிலும், அபிமன்யு பெயரிலும் அர்ச்சனை
செய்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என்று கூறவே அனைவரும் இங்கே இருந்து விட்டனர்.
விசாலாட்சி,
“சரி, பொண்ணு தான் எங்களுக்கு
தெரியாமலே பார்த்து நிச்சயத்துக்கு நேரா கூப்பிட்டு வந்துட்டீங்க. கல்யாணத்துக்கு
என்னென்ன பண்ண போறீங்கன்னாவது இப்போவே பேசி முடிவு எடுத்துடலாமே”.
சுப்பிரமணி,
“இருங்கம்மா எங்க குடும்ப ஜோசியரை
வர சொல்லி இருக்கேன். அவர் வந்து நல்ல நாள் பார்த்து திருமணத்திற்கு தேதி குறித்து
கொடுத்ததும் என்னென்ன பண்ணலாம்னு இப்போவே பேசி முடிவு பண்ணிடலாம்” என்று புன்முறுவலுடன் கூறினார்.
சிறிது
நேரத்தில் ஜோசியர் வந்தவுடன் திருமணத்திற்காக நல்ல நாளும், நேரமும் குறித்து
தருமாறு கேட்டனர். அவர்களின் ஜாதகப்படி அடுத்த மாதத்திலேயே ஒரு நல்ல முகூர்த்தம்
இருப்பதாக குறித்துக் கொடுத்தார்.
லட்சுமி,
“இன்னும் ஒரு மாசம் தாங்க இருக்கு.
எப்படி எல்லா ஏற்பாடும் செய்ய முடியும்”
என்று சுப்பிரமணியிடம் கவலையாக கேட்டார்.
மீரா, “அதெல்லாம் பாத்துக்கலாம் அண்ணி. இன்னும்
ஒரு மாசம் டைம் இருக்குல்ல” என்று சமாதானம் கூறினார்.
விசாலாட்சி,
“ஆமா, பெரிய ராஜ பரம்பரை நீங்க.
இந்த கிராமத்தில் தான கல்யாணத்தை வச்சி நடத்த போறீங்க. இதுக்கு எதுக்கு இவ்வளவு
பில்டப் கொடுக்குறீங்க” என்றார் குத்தலாக.
அதற்குள்
மகேந்திரன் விசாலாட்சியை, “பார்த்து பேசு விசாலாட்சி” என்று அவரை அடக்கி விட்டார்.
லட்சுமிக்கும்,
சுப்பிரமணியனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.
அவர்கள்
எதுவும் பதில் கூறவில்லை. சூழ்நிலையை கையில் எடுத்த மகேந்திரன், “இங்க பாருங்க சம்பந்தி, எங்களுக்கு இந்த
தேதி சம்மதம் தான். உங்களுக்கும் சம்மதம்னா சொல்லுங்க மேற்கொண்டு பேசுவோம்”.
“எங்களுக்கும் சம்மதம் தான்
சம்பந்தி” என்றார் சுப்பிரமணி.
“சரிங்க. அப்போ கல்யாணத்தை உங்க
ஊரிலேயே நீங்க ஆசைப்படுற மாதிரி வச்சுக்கலாம். கல்யாணம் முடிஞ்சதும் மறுநாள்
சென்னையில் ரிசப்ஷன் வச்சுக்கலாம். ஏன்னா, அபி சைட்ல இருந்தும், என் சைட்ல
இருந்தும் நிறைய தெரிஞ்சவங்க, பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. அவங்க எல்லாரையும்
கல்யாணத்துக்கு இங்க கூப்பிட்டு வர முடியாது. அதனால அவங்களுக்காக ரிசப்ஷனை
சென்னையில் வச்சுட்டா அவங்க எல்லாம் வருவதற்கு கொஞ்சம் வசதியா இருக்கும்” என்று தங்கள் பக்க கருத்தை கூறினார்.
சுப்பிரமணி
அதனை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தவர், “சரிங்க
சம்பந்தி. உங்க விருப்பப்படியே பண்ணிடுவோம்”.
திருமணத்தின்
தேதி முடிவு செய்வதிலும் சரி, ரிசப்ஷன் வைப்பதிலும் சரி, எந்த ஒரு முடிவையும்
அபிமன்யுவை கேட்காமல் அவர்களின் விருப்பத்திற்கே எடுப்பது அவனுக்கு முற்றிலும்
விருப்பமில்லை.
ஏற்கனவே,
நிச்சயதார்த்தத்தை தன் விருப்பமின்றி செய்தனர். இப்பொழுது திருமணத்தையும் இவனை ஒரு
வார்த்தை கூட கேட்காமல் அவர்களின் விருப்பத்திற்கே முடிவெடுப்பது அபிமன்யுவிற்கு
எரிச்சலாக இருந்தது.
அங்கு
அமர பிடிக்காமல் எழுந்து தோட்டத்தின் பக்கம் சென்று விட்டான். இவனின் நடவடிக்கைகளை
வைத்தே இவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்ட ஷைலஜாவிற்கு
பெரும் மகிழ்ச்சி ஆகிப்போனது.
‘இன்னும் ஒரு மாசம் டைம்
இருக்குல்ல. அதுக்குள்ள எப்படியாவது உன் மனசை மாத்திடுவேன்’ என்று அபிமன்யுவை பார்த்து தன்
மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
அவன்
சென்றதைக் கூட திருமணப் பேச்சில் கண்டுக் கொள்ளாத குடும்பத்தினர். மேற்கொண்டு
திருமணத்திற்கு புடவையை எங்கே எடுக்கலாம் என்று பேசலாயினர்.
லட்சுமி,
“இங்கேயே டவுனுக்கு போய் நாங்க
எடுத்துக்கிறோம் மீரா” என்றார்.
அதற்குள்
விசாலாட்சி, “ஆமா, உங்க ஊர் பெரிய சிட்டி
பாருங்க, இங்க எடுக்குறதுக்கு. இங்க என்ன கலெக்ஷ்ன்ஸ் இருக்கும்னு இங்க
எடுக்குறேன்னு சொல்றீங்க. எங்க குடும்பத்துக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. நீங்க
மாப்பிள்ளைக்கு எடுக்குற டிரஸ் முதலில் அவனுக்கு பிடிக்கணும். இங்க இருக்குற ஏதோ
ஒரு கடையில் போய் எதையாவது தூக்கிக்கிட்டு வந்து கொடுத்தா, அதை எங்க அபிமன்யு கட்டிக்கமாட்டான்.
அவன் வீட்டுக்கு போடுற டிரஸ்ஸீக்கே அவ்வளவு மெனக்கெடுவான். கல்யாணம்னா சும்மா
அப்படியே போட்டுக்க மாட்டான். நாங்க சென்னையில தான் எடுப்போம். நீங்க ஒரு நாள்
சென்னைக்கு வந்து டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க”.
இவர்களின்
பேச்சுவார்த்தை ஜீவாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ‘இதெல்லாம் தேவையா, ஒழுங்கா கயல்விழிக்கு வேற நல்ல
மாப்பிள்ளையா பார்த்து இருக்கலாம்’
என்று தன் மனதில் நூறாவது முறையாக நினைத்துக் கொண்டான்.
அதற்கு
லட்சுமி சுப்பிரமணியனை பார்க்க.. மரகதம் பாட்டி, “அதுக்கு என்னம்மா.. தாராளமா வந்துட்டா போச்சு. கல்யாண புடவை
எல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை எடுக்கிறது. நல்ல கடையிலேயே பார்த்து எடுத்திடுவோம்” என்று சாதாரணமாக கூறி முடித்து விட்டார்.
“சரி பொண்ணுக்கு என்ன நகை போட
போறீங்க, என்னென்ன சீர் செய்ய போறீங்கன்னு இன்னும் சொல்லலையே” என்றார் விசாலாட்சி.
அதற்கு
சுப்பிரமணி பதில் கூறும் முன்னே மகேந்திரன், “விசாலாட்சி...”
என்று அதட்டினார்.
அண்ணனின்
குரலில் அதிர்ந்த விசாலாட்சி, “நான் என்ன கேட்டுட்டேன்னு நீ
இப்படி கோவப்படுறண்ணா. கல்யாணம்னா இதெல்லாம் எல்லா மாப்பிள்ளை வீட்டிலேயும்
கேட்குறது தானே”.
“போதும் நிறுத்து. என்ன பேச்சு
பேசுற நீ” என்று விசாலாட்சியை அதட்டியவர். சுப்பிரமணியனிடம்,
“உங்க விருப்பப்படி நீங்க உங்க
பொண்ணுக்கு என்ன செய்யணும்னு நினைக்கிறீர்களோ அதை செய்யுங்க சம்பந்தி. எங்களுக்கு
எந்த நிபந்தனையும் இல்லை. இனி, இதை பத்தி நாம பேச வேண்டாம்” என்று முடித்து விட்டார்.
மகேந்திரன்
குடும்பத்தின் தரம் சுப்பிரமணியன் குடும்பத்தின் முன்பு மேலும் மேலும் உயர்ந்து
கொண்டே போனது அவர்களின் நடவடிக்கைகளால். வள்ளியம்மைக்கு தான் உள்ளுக்குள்
பதட்டமாகவும், விசாலாட்சியை நினைத்து எரிச்சலாகவும் இருந்தது.
‘ஏன் இப்படி எல்லாம் பேசுது இந்த
பொண்ணு’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு
இருந்தார் இவரால் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று. விசாலாட்சிக்கு அவர் என்ன
கூறினாலும் ‘சரி, சரி’ என்று நயந்து போகும் பெண் வீட்டினரை பார்த்து அவருக்கு
சுத்தமாக பிடிக்கவில்லை.
‘என்ன இவங்க, ஏதாவது பேசி ஒரு
பிரச்சனையை கிளப்பலாம்னு பாத்தா. என்ன சொன்னாலும் சரி, சரின்றாங்க. நம்ம நினைச்ச
மாதிரி எதுவும் பண்ண முடியாது போலருக்கு’
என்று மனதிற்குள் நொந்து கொண்டார்.
விசாலாட்சியை
பற்றி மீரா காலையில் வந்த உடனேயே லட்சுமியிடம் கூறிவிட்டார். அவர் ஏதேனும்
பேசினால் கூட பெருசு படுத்த வேண்டாம் அண்ணி.
‘அவங்க
அப்படித்தான். என்கிட்டேயே இப்படித்தான் பேசுவாங்க. அவங்களால இந்த கல்யாணத்தில்
எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது. அதனால அவங்க ஏதாவது பேசுனாங்கனா பெருசு
படுத்தாதீங்க’ என்று முன்கூட்டியே லட்சுமியிடம்
கூறி வைத்து விட்டார் மீரா.
அது
தெரியாத விசாலாட்சியோ தன்னால் முடிந்த பிரச்சனையை கிளப்ப முயற்சி செய்து கொண்டே
இருக்கிறார் பாவம்!
அபிமன்யுவை
பின் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து எழுந்து சென்ற ஷைலஜா, “வாட் அபி. அங்க உன் கல்யாணத்தை பத்தின
டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. நீ என்னடானா, யாருக்கோ வந்த விருந்துன்ற மாதிரி இங்க
வந்து நின்னுட்டு இருக்க” என்று கிண்டலாக கேட்டாள்.
அவளின்
குரலிலேயே அவ்வளவு நக்கல் இழைந்தோடியதை உணர்ந்த அபிமன்யு, “கல்யாணத்தை பத்தி எல்லாம் பெரியவங்க
டெசிஷன் எடுத்துப்பாங்க. அதனால தான் நான் இங்க வந்துட்டேன்”.
“வாட்!” என்று அதிர்ச்சியாக கேட்டவள், “எங்க அபியா இது. உனக்கு அழகே உன்னோட திமிரும், அந்த கெத்தும்
தான். அதை டோட்டலா இந்த வில்லேஜ் கேர்ள் டேமேஜ் பண்ணிட்டா போலருக்கு. கல்யாண
பேச்சை எடுத்த உடனே இவ்வளவு சாஃப்ட் ஆயிட்ட. உனக்கு இப்படி எல்லாம் கூட பேச
தெரியுமா. யூ ஆர் லுக்கிங் சோ பன்னி அபி”
என்று கூறி நக்கலாக நகைத்தாள்.
“டோன்ட் இரிடேட் மீ. யூ பெட்டர்
கெட் அவுட் ஃப்ரம் ஹியர்” என்று கோபமாக கத்தி விட்டான்.
“இது.. இது தான் அபி!” என்று கூறியவள், ‘எப்படியாவது இவனை டென்ஷன் பண்ணி இவன்
மூலமாகவே இங்கு ஒரு பிரச்சனையை கிளப்ப வேண்டும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
“என்ன அபி நான் ப்ரொபோஸ் பண்ணப்போ
வேண்டாம்னு சொன்ன. என்னை விட இந்த வில்லேஜ் கேர்ள் அவளோ அழகா இருக்காளா”.
அதற்கு
அபிமன்யு, “மோரோவர் எனக்கு இந்த மேரேஜ்
பண்ணிக்கிறது எல்லாம் விருப்பமே கிடையாது. விருப்பமில்லாத கல்யாணத்தை பண்ணிக்கும்
போது பொண்ணு யாரா இருந்தா எனக்கு என்ன”
என்று அசால்டாக கூறினான்.
இப்படி
ஒரு பதிலை அபிமன்யுவிடமிருந்து எதிர்பாராதவள் திடுக்கிட்டு விழித்தாள்.
“அபி, திஸ் ஈஸ் நாட் ஃபன். இது உன்
லைஃப் பத்தின முக்கியமான டிசிஷன்” என்றாள் பதட்டமாக.
“ஐ நோ ஷைலஜா. என் வாழ்க்கையை பத்தி
நீ ஏன் இவ்வளவு மெனக்கெடுற, டென்ஷன் ஆகுற. ஐ நோ ஹவ் டு மேனேஜ்” என்று முகத்தில் அடித்தார் போல்
கூறிவிட்டு திரும்பிக் கொண்டான்.
இவனின்
பதிலில் ஷைலஜாவிற்கு மூக்கு உடைந்தது போல் ஆகிவிட்டது. ‘என்ன செஞ்சு இவனை கரெக்ட் பண்றதுனே தெரியலையே. என்ன
சொன்னாலும் மசிய மாட்டேங்குறான். சரியான ரோபோ’ என்று முணுமுணுத்து விட்டு திரும்பவும் வீட்டின் உள்ளே வந்து
அமர்ந்து கொண்டாள்.
இவள்
செல்வதையும், அபிமன்யுவிடம் ஏதோ பேசுவதையும், அவன் கோபமாக பதிலிற்கு திட்டியதையும்
ஜீவா கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஏதோ சரியில்லை என்று யூகித்தவன்.
எதையும்
அபிமன்யுவிடம் கேட்டு பதில் பெற முடியாது என்று எண்ணி அமைதியாக வெறும்
பார்வையாளராக மட்டும் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
கயல்விழிக்கோ
திருமண நிச்சயம் முடிந்தது நம்பவே முடியவில்லை.
யாழினி,
“என்னக்கா நிச்சயம் ஆயிடுச்சு
இப்பவும் ஒரு தெளிவு இல்லாமல் இருக்க. உனக்கும், மாமாவுக்கும் ஜோடி பொருத்தம்
சூப்பரா இருக்குக்கா” என்று கயல்விழியை கிண்டல்
செய்தாள்.
அதற்கு
கயல்விழி அமைதியாக அமர்ந்திருக்கவும்.
யாழினி,
“என்ன தான் உன் பிரச்சனை. எதுவும்
சொல்லவும் மாட்டேங்குற, உம்முன்னு இருக்க. என்னனு சொன்னா தானே எங்களுக்கு தெரியும்” என்று சிடுசிடுத்தாள்.
“எனக்கு இந்த கல்யாணத்தில்
விருப்பம் இல்லை யாழினி” என்று அமைதியாக கூறினாள்.
இவள்
கூறுவதை கேட்டு அதிர்ந்த யாழினி, “என்னக்கா
லூசு மாதிரி பேசுற. நிச்சயம் முடிஞ்சிடுச்சு. இப்போ போய் கல்யாணத்தில் விருப்பம்
இல்லைனு சொல்ற. மீரா அத்தை குடும்பம் ரொம்ப நல்லவங்க. எல்லாருமே ரொம்ப நல்ல மாதிரி
பழகுறாங்க. நம்ம ஜீவா மாமா மாதிரியே, அபி மாமாவும் ரொம்ப நல்லவரா தெரியுறார்.
உன்னை நல்லா பாத்துக்குவாங்க. அது மட்டும் இல்லாம, சென்னைக்கு போனா சுத்தி
பாக்குறதுக்கு நிறைய இடம் இருக்கும்க்கா ஜாலியா இருக்கலாம்” என்று கூறினாள்.
இவள்
கூறுவதை கேட்டு சலிப்பாக தன் முகத்தை திருப்பிய கயல்விழி, “நீ கட்டா குஸ்தி படம் பாத்தியா”.
“இப்போ ஏன்க்கா சம்பந்தமே இல்லாமல்
கேட்குற” என்றாள் புரியாமல்.
“நான் கேட்குறதுக்கு மட்டும் பதில்
சொல்லு யாழி. கட்டா குஸ்தி படம் பார்த்தியா, இல்லையா”.
“பார்த்து இருக்கேன். நானும்,
ஸ்வேதாவும் பார்த்தோம். நல்லா காமெடியா இருந்துச்சு”.
“உனக்கு அந்த படத்தில் எந்த சீன்
ரொம்ப பிடிக்கும்”.
“ஹீரோயின் ஹீரோவுக்காக சண்டை
போடுவாங்கல்ல. அப்போ கூட அவங்களுடைய விக்கு கழட்டிகிட்டு வந்திடுமே அந்த சீன் தான்
எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை பார்க்கும் போது நானும், ஸ்வேதாவும் விழுந்து
விழுந்து சிரிச்சோம்” என்று கூறி சிரித்தாள்.
“அதில் இருக்க காமெடியை மட்டும்
பார்த்திருக்க. ஆனா, அதில் ஹீரோயின் ஒரு டயலாக் சொல்லுவாளே அதை கவனிச்சு
இருக்கியா. நம்ம ஊரில் பொண்ணுங்க ஒரு விஷயத்தில் ஜெயிக்கணும்னா, முதலில் அவங்க
குடும்பத்தை அவங்க ஜெயிச்சாகணும்னு. அது ரொம்ப உண்மை தான் யாழினி. சாதாரண படிப்பு
விஷயத்துக்கே நம்மளால சுயமா முடிவு பண்ண முடியல. கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்
எல்லாம் முடிஞ்சிடுமா” என்று கேட்டாள் கயல்விழி.
அதற்கு
என்ன பதில் கூறுவது என்று புரியாமல் விழித்த யாழினி, “நீ ஏன்க்கா இப்படி எல்லாம் யோசிக்கிற. கல்யாணம் பண்ணா ஜாலியா
தானே இருக்கும்” என்று மீண்டும் புரியாமல்
கேட்டாள்.
“கல்யாணம் பண்றது முக்கியம் இல்ல
யாழினி. நம்ம மனசை புரிஞ்சுக்கிற மாதிரி வாழ்க்கை துணை நமக்கு அமையனும். அதெல்லாம்
பெரிய விஷயம். இவ்வளவு நல்லா பழகுறாங்க ஜீவா மாமா வெண்ணிலா அக்கா கிட்ட. ஆனா,
அவங்க கிட்டயே வெண்ணிலா அக்கா இதுவரைக்கும் அவ படிக்கணும்னு ஆசைப்படுறதை
சொன்னதில்ல. இப்படி இருக்கும் போது, மீரா
அத்தையோட பையன் எப்படி இருப்பார்னு யாருக்கு தெரியும். அவருடைய நடவடிக்கையை வச்சு
பார்த்த வரைக்கும் அவர் மேல் எனக்கு எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் வரல.
நான்
கல்யாணம் பண்ணா எனக்கு வர மாப்பிள்ளை என் மனசை புரிஞ்சுகிட்டு நான் ஆசைப்பட்ட
மாதிரி என்னை படிக்க வைப்பாங்கன்னு நினைச்சேன் யாழினி. ஆனா, நடக்கிறது எல்லாம்
பார்த்தா எனக்கு இப்போ அந்த நம்பிக்கை சுத்தமா இல்ல. குடும்பம் ஒன்னு சேரனும்னு
நினைக்கிறாங்களே தவிர, மீரா அத்தையோட பையனோட குணத்தை பத்தி யாருமே யோசிச்சுப்
பார்த்த மாதிரி தெரியல. அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சது” என்று விரக்தியாக கூறினாள்.
“நீ நினைக்கிற மாதிரி எதுவும்
நடக்காது. அவங்க கிட்ட நீ உன் ஆசையை சொல்லு, கண்டிப்பா நடத்திக் கொடுப்பாங்க பாரு” என்று கூறினாள் யாழினி.
அதற்கு
ஒரு சின்ன சிரிப்பை மட்டும் உதிர்த்தவள் பதில் ஏதும் கூறவில்லை. அவளின் மனதிற்குள்
என்ன இருக்கிறது என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை. கயல்விழியுடன் பேச்சு வார்த்தை
முடிந்ததும் யாழினி யோசனையோடு வெளியே சென்றாள்.
அவளை
கடந்த ஸ்வேதா, “ஹேய், என்ன யோசிச்சிட்டு இருக்க?”.
“ஒன்னும் இல்ல ஸ்வேதா. கல்யாணம்
பண்ணா ஜாலியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அப்படி இருக்காது போலருக்கே”.
“என்னடி இது, அதிசயமா இருக்கு.
எப்போ படிப்பு முடிப்போம், கல்யாணம் பண்ணுவோம்னு சுத்திக்கிட்டு இருந்த. இப்போ
என்னடானா கல்யாணம் பண்ணா ஜாலியா இருக்குமா, இருக்காதானு கேட்குற. எங்க இருந்து
உனக்கு இவ்வளவு பெரிய சந்தேகம் வந்துச்சு” என்று கிண்டலாக கேட்டாள்.
“விளையாடாத ஸ்வேதா, நான் சீரியஸா
பேசிட்டு இருக்கேன்” என்றாள் யாழினி.
“அதெல்லாம் நடக்கும் போது
பாத்துக்கலாம். இப்போ எதுக்காக அதை பத்தி யோசிச்சு மண்டையை சூடாக்கிக்குற. ஃப்ரீயா
விடு” என்று கூறிவிட்டு, அவளின் தோளின்
மீது கையை போட்டு, “சரி வா, ஆரணி ரொம்ப நேரமா உன்னை
தேடிகிட்டு இருக்கா போகலாம்” என்று இழுத்துக் கொண்டு சென்று
விட்டாள்.
திருமண
பேச்சு வார்த்தைகள் அனைத்தும் நல்ல படியாக முடிந்து சாயந்திரம் போல் கோவிலுக்கு
இரு குடும்பத்தினரும் சேர்ந்து சென்றனர். அங்கே அர்ச்சனை செய்து முடித்ததும்
அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு மகேந்திரனின் குடும்பத்தினர் சென்னை நோக்கி
புறப்பட்டனர்.
சுப்ரமணியன்
குடும்பத்தினர் வீட்டிற்கு வந்ததும், லட்சுமி சுப்பிரமணியத்திடம், “என்னங்க இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.
அதுக்குள்ள எல்லா வேலையும் கடகடன்னு முடிக்கணும். நீங்க அண்ணா கிட்ட பேசிட்டு
சீக்கிரம் பத்திரிக்கை அடிக்க குடுங்க. ஊரில் எல்லாரையும் அழைக்கணும்ல”.
“ஆமா லட்சுமி. நானும் அதை தான்
யோசிச்சுகிட்டு இருக்கேன். நாளைக்கு சம்பந்திக்கு போன் பண்ணி விவரம் கேட்டுட்டு
பத்திரிக்கை அடிக்க கொடுத்துடலாம்”.
வேலுச்சாமி,
“தம்பி நம்ம சொந்த பந்தம் யாரையும்
விட்டுடக்கூடாது எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுக்கணும். நம்ம ரெண்டு குடும்பமும்
சேர்ந்து நடக்கிற முதல் விசேஷம். அதனால எல்லாரையும் கூப்பிடனும் பா” என்றார் மகிழ்ச்சியாக.
“சரிப்பா அப்படியே பண்ணிடலாம்”.
மரகதம்
பாட்டி, “இப்போ தான் உங்க அப்பா முகத்தில்
சிரிப்பு வருது சுப்பிரமணி. இவ்வளவு நாள் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு
சுத்திகிட்டு கிடந்தார். இப்போ சந்தோஷத்தை பாத்தியா” என்று தாத்தாவை வாரினார் பாட்டி.
“இருக்காதா பின்ன. நான் ஆசைப்பட்ட
போல இந்த கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேர போகுது” என்று மகிழ்ச்சியாக கூறினார்.
இவர்களின்
பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டிருந்த ஜீவாவிற்கு மட்டும் சற்று கலக்கமாக
இருந்தது. அபிமன்யுவின் முழு குணத்தையும் அறிந்தவன் அல்லவா..
இவர்களின்
முன்பு அபிமன்யு ‘பசு தோள் போர்த்திய புலி’ ஆக நடந்து கொள்கிறான் என்பதை உணர்ந்தவன்.
திருமணத்திற்கு பிறகு கயல்விழியை எண்ணி வருத்தமாக உணர்ந்தான்.
கயல்விழி
தைரியசாலி தான். எளிதில் அபிமன்யுவை சமாளிக்கும் குணம் கொண்டவள். இருந்தாலும், தன்
வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று எண்ணி வருந்துவாளோ என்று எண்ணினான்.
ஒவ்வொருவரின்
சிந்தனையும் ஒவ்வொன்றாக இருக்க, யாருக்கு என்ன கார்த்திருக்கிறது என்பதை காலம்
தான் பதில் கூற வேண்டும்..
கருத்துகள்
கருத்துரையிடுக