அவனதிகாரம் - 31
அதிகாரம் – 31
பல்வேறுபட்ட
யோசனைகளுக்கு பிறகு கயல்விழி தன் மனதினுள் ஒரு முடிவுடன் தூங்கச் சென்றாள்.
ஷைலஜாவும்,
விசாலாட்சியும் அவர்கள் நினைத்ததை போல் இந்த திருமணம் நடக்கக்கூடாது. ஷைலஜாவிற்கும்,
அபிமன்யுவிற்கும் தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உறக்கத்திற்கு
சென்றனர்.
கிருஷ்ணமூர்த்தி
தாத்தா யாருக்கும் தெரியாமல் அதிகாலையில் கயல்விழியை கடத்துவதற்கு ஆட்களை தயார்
செய்துவிட்டு தன் உறக்கத்திற்கு சென்றார்.
மற்றவர்கள்
அனைவரும் நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்கள்
துயிலிற்கு சென்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் இந்த இரவை கடந்தனர்.
கயல்விழியின்
மனதில் இருக்கும் எண்ணத்தை அறியாத அபிமன்யு, திருமணம் முடிந்து எப்படி கயல்விழியை
பழி வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தான்.
திருமணம்
அவனுக்கு பிடிக்காவிட்டாலும், ஏனோ மனதிற்குள் ஒரு நிம்மதி. இனி தன் அன்னையிடம்
இவர்களால் எந்த உண்மையையும் கூற முடியாது என்றும் கயல்விழியை வைத்தே அவர்களின்
குடும்பத்தினரை ஓட விட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்.
காலை
கதிரவன் யாருக்கும் கார்த்திராமல் தன் வேலையை செவ்வென செய்தது. அந்த அதிகாலை
நேரத்திலேயே மண்டபம் சலசலவென இருந்தது. ஐயர் ஹோம குண்டத்தில் தன் வேலையை செய்ய
ஆரம்பித்தார்.
மணமகன்
தயாராகிக் கொண்டிருக்க. மணமகள் அவள் அறையில் தயாராக்கப்பட்டு அறையனுள்
அமர்ந்திருந்தால்.
மரகதம்
பாட்டிக்கும், வள்ளியம்மை பாட்டிக்கும் எக்கச்சக்க சந்தோஷம். அவர்களின்
முகத்திலேயே ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து
பார்ப்பதால் உறவினர்கள் படை வள்ளியம்மையை சூழ்ந்து கொண்டது நலம் விசாரிப்பதற்காக.
கிருஷ்ணமூர்த்தி
இது எதிலும் கலந்து கொள்ளாமல் யாருக்கோ போன் செய்வதும், பின்பு வாசலை பார்ப்பதுமாக
இருந்தார். இந்த திருமண மகிழ்ச்சியிலும், பரபரப்பிலும் கிருஷ்ணமூர்த்தியை கவனிக்க
தவறிவிட்டார் வள்ளியம்மை.
விசாலாட்சி
ஒரு பெரிய கரைக் கொண்ட பட்டுப்புடவையை அணிந்து கொண்டு, தன் மொத்த நகையையும் அள்ளி
தன் மேல் போட்டுக் கொண்டார். மண்டபத்தில் இருக்கும் அனைவரின் கண்ணும் அவர் மேல்
தான். ஆனால், ஷைலஜாவோ நான் ரெடி ஆக மாட்டேன் என்று பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.
விசாலாட்சி,
“இப்போ பிடிவாதம் பிடிச்சு என்னடி
பண்றது. காரியம் சாதிக்கணும்னா யாருகிட்ட பிடிவாதம் பிடிச்சிருக்கணுமோ அவங்ககிட்ட
புடிச்சி இருக்கணும். அப்போ கோட்டை விட்டுட்டு இப்போ என்கிட்ட வந்து பிடிவாதம்
பிடிச்சா நான் என்ன பண்ண முடியும். நேரம்
ஆகுது பாரு, நீ ஒன்னும் கவலைப்படாத இப்பயும் எதுவும் கெட்டுப் போயிடல. நான் நேத்து
நல்லா அந்த கயல்விழியை போட்டு குழப்பிவிட்டுட்டு வந்துட்டேன். குழம்புன குட்டையில்
தான் டி மீன்பிடிக்க முடியும். எப்படியும் அவ இந்த கல்யாணத்தை நிறுத்திடுவா பாரு.
நான்
சொல்ல சொல்ல அவ முகமே மாறிடுச்சு. அவ முகமே சரியில்ல. அவளே அபிமன்யு வேண்டாம்னு
சொல்லிடுவா. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, உன்னை வேண்டாம்னு சொல்லி
இருப்பான். இப்போ இத்தனை பேரு முன்னாடி ஒரு பொண்ணு அவனை வேண்டாம்னு சொல்லப் போறா.
அது அவனுக்கு எவ்வளவு அசிங்கம்.
அப்போ
தல குணிஞ்சு அவன் உட்கார்ந்து இருக்கும் போது நீ போய் கம்பீரமா நின்னு வாழ்க்கை
கொடுக்க வேண்டாமா. அப்போ இந்த மொத்த மண்டபத்தின் கண்ணும் உன் மேல தான் டி
இருக்கும். நீ இப்படி ரெடியாகாமல் உட்கார்ந்து இருந்தேனா திரும்பவும் வேற எவளாவது
நான் கட்டிக்கிறேன்னு போய் கட்டிப்பா. அப்புறம் ஐயோ, அம்மானு தலையில்
அடிச்சுக்கிட்டு அழுக வேண்டியது தான்”
என்று எரிச்சலாக கூறினார்.
“அம்மா... நீ சொல்றதெல்லாம்
நடக்குமா” என்று ஆனந்தம் கலந்த
சந்தேகத்துடன் கேட்டாள் ஷைலஜா.
“எல்லாம் நடக்கும். நீ முதலில்
கல்யாண பொண்ணு மாதிரி ரெடியாகு. சல்வார்லாம் போடாத, இந்த பட்டு புடவையை
கட்டிக்கிட்டு, இந்த நகையெல்லாம் போட்டுக்கோ. அவ வேண்டாம்னு சொன்னதும் டக்குன்னு மணவறையில் ஏறி அபி
பக்கத்தில் உட்காரனும். ஏன்னா, கல்யாண பொண்ணு காணும்னு தெரிஞ்சதும், மீரா
குடும்பம் மொத்தமும் நம்ம கிட்ட தான் உன்னை அபியை கட்டிக்க சொல்லி கேப்பாங்க.
கொஞ்ச
நேரம் யோசிக்கிற மாதிரி சீன் போட்டுட்டு, அப்புறம் ஓகேன்னு சொல்லி உன்னை
வேண்டாம்னு சொன்ன அந்த அபி முன்னாடி கெத்தா அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து அவன்
கையாலேயே தாலி வாங்கனும்” என்று தன் திட்டத்தை கெத்தாக
கூறிவிட்டு திரும்பி பார்த்தார் ஷைலஜாவை.
ஆனால்
அவளோ சீலிங்கில் ஓடும் ஃபேனை ‘ஆ’வென பார்த்துக் கொண்டு நின்றாள். விசாலாட்சி அவளின் தோளில்
அடிக்கவும்.
“அம்மா...” என்று பதறிய ஷைலஜா, “மாம்! எங்க அபி?”
என்று தூக்கத்திலிருந்து விழித்தவள் போல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு கேட்டாள்.
“இப்போ தான் நான் நம்ம திட்டத்தையே
சொல்லி முடிக்கிறேன். அதுக்குள்ள மேடம் கனவிலேயே அவன்கிட்ட தாலி வாங்கிட்டீங்களா” என்று கிண்டலாக கேட்டார் விசாலாட்சி.
அதற்கு
வெட்கத்துடன் தரையைப் பார்த்த ஷைலஜாவிடம் விசாலாட்சி, “தயவு செஞ்சு வெட்கம் மட்டும் படாத ஷைலுமா. என்னால முடியல.
சீக்கிரம் ரெடியாகி வாடா. வெளியில் வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.
தனக்கும்,
அபிக்கும் தான் திருமணம் என்ற நினைப்பில் மணப்பெண் போலவே தயாராகி வெளியே வந்தாள்
ஷைலஜா. மணமகன் உறவினர்களில் சிலர் இவளை பார்த்து இவளுக்கும், அபிக்கும் தான்
திருமணம் என்று நினைத்துக் கொண்டு மீராவிடம் கேட்க ஆரம்பித்தனர்.
வள்ளியம்மை
பாட்டி, “இந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா
மீரா. எதுக்கு இப்படி ரெடியாகிட்டு வந்து நிக்குது. ஏதோ இவ தான் கல்யாண பொண்ணு
மாதிரி” என்றார் யோசனையுடன்.
“தெரியல மா. இப்போ என்ன பண்ண
போறாங்களோ” என்று தலையில் அடித்துக்
கொண்டார் மீரா, “ஒருவேளை, வயசு பொண்ணாச்சே ஏதாவது
நல்ல மாப்பிள்ளை அமையனும்னு கூட இப்படி ரெடி பண்ணி இருப்பாங்க”.
“இருக்கும்.. இருக்கும்.. இவ
வாய்க்கு தெரிஞ்சவன் எவனும் கட்ட மாட்டான். இப்படி தெரியாத ஊரில் மாப்பிள்ளை
பார்த்தா தான் உண்டு” என்று கூறிவிட்டு, மரகதம்
பாட்டியை தேடி சென்று விட்டார் வள்ளியம்மை பாட்டி.
பிறகு,
ஐயர் மணமகனை அழைத்து வருமாறு அழைப்பு விடுக்கவும், அபிமன்யு அழகிய தங்க ஜரிகை கரை
கொண்ட வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக நடந்து வந்து மணவறையில் அமர்ந்தான்.
மீராவிற்கும்,
மகேந்திரனுக்கும் தங்கள் மகனின் அழகிலும், கம்பீரத்திலும், ஆளுமையிலும்
பெருமிதமாகவும், பூரிப்பாகவும் உணர்ந்தனர்.
மரகதம்
பாட்டியும், “அபிக்கு திருஷ்டி சுத்தி போடணும்
வள்ளி. மொத்த மண்டபத்தில் இருக்குறவங்க கண்ணும் அபி மேல தான் இருக்கு” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
வள்ளியம்மை
திரும்பி பார்க்க ஷைலஜா லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுக்கொண்டு முதல் வரிசையில்
அமர்ந்திருந்தாள் அபிமன்யுவை பார்த்து.
‘இந்த பொண்ணோட போக்கே சரியில்ல.
முதல்ல என்னனு கவனிக்கணும்’ என்று முணுமுணுத்துக் கொண்டே
வள்ளியம்மை பாட்டி வேலுச்சாமி தாத்தாவிடம், “என்ன மாமா இப்போ சந்தோஷமா”.
“மனசு நிறைஞ்சு போச்சு மா” என்று கண்கள் கலங்க கூறினார் வேலுச்சாமி.
“ஐயோ மாமா! ஏன் கண் கலங்குறிங்க.
உங்க ஆசைப்படி இல்ல இல்ல.. இது உங்க ஆசைனு மட்டும் சொல்ல முடியாது. என்னோட ஆசையும்
தான். பல வருஷமா நம்ம குடும்பம் பழைய மாதிரி ஆகனும்ன்ற என்னோட ஆசையும், இந்த
கல்யாணத்தில் தான் மாமா நடக்க போகுது. கடைசி காலத்தில் நாம எல்லாம் ஒன்னா இருக்க
போறோம்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
வெண்ணிலா
அழகிய இளம் பச்சை நிற பட்டுடுத்தி, ஜீவாவும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து, இருவரும்
ஒருவருக்கு ஒருவர் பொருத்தமாக இருந்தனர்.
யாழினி
தான் உம்மென்று சுத்திக் கொண்டிருந்தாள்.
“ஹே யாழ் பேபி, எதுக்கு இப்போ
உம்முன்னு இருக்க” என்று ஆரணியும், ஸ்வேதாவும் தான்
அவளை நச்சரித்துக் கொண்டு இருந்தனர்.
“இங்க பாருங்கடி, கயல் அக்காவுக்கு
தானே கல்யாணம். நானும் புடவை கட்டணும்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் லெஹங்கா
போடலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன்” என்று சோகமாக கூறினாள்.
“இதுக்கு எதுக்கு சோகமா இருக்க.
பாரு நானும் புடவை தான கட்டி இருக்கேன்”
என்றாள் ஸ்வேதா.
ஆரணி, “சரி யாழினி, நீ கவலைப்படாத. உனக்காக
நானும் சேரி கட்டிக்குறேன்”.
“உனக்கு சேரி எல்லாம் கட்ட
தெரியுமா” என்றாள் யாழினி.
“யாருக்கு தெரியும். மம்மி கிட்ட
போய் கேட்டு கட்டிக்கிறேன். நம்ம மூணு பேருமே இன்னைக்கு சேரில ட்வின்னிங்
பண்ணுவோம்” என்று கூறி கண்ணடித்தாள்.
“சூப்பர்! சூப்பர்! அப்போ மூணு
பேரும் சேரி கட்டிட்டு நிறைய ரீல்ஸ் எல்லாம் எடுக்கலாம். சரி, நான் அப்போ ரெடி
ஆயிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு அறையினுள்
நுழைந்தாள் யாழினி.
தன்
அக்கா வெண்ணிலாவின் கை வண்ணத்தில் பிங்க் நிற அடர் பார்டர் கொண்ட ஆரஞ்சு நிற
பட்டுப்புடவையில் அழகிய பதுமை போல் தயாராகி சற்று நேரத்தில் வெளியே வந்தாள்.
ஆரணியும்
தயாராகி வந்துவிட. ஆரணியும், ஸ்வேதாவும் ஒரே நேரத்தில், “வாவ்! சூப்பர் யாழினி. இந்த சேரி உனக்கு செம்மையா இருக்கு” என்று கூறினர்.
“ஆரணி நீயும் புடவையில் சூப்பரா
இருக்க. இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்” என்றாள் யாழினி.
ஸ்வேதா,
“ஆமா, நம்ம மூணு பேருமே இன்னைக்கு
தான் ஃபர்ஸ்ட் டைம் சேரி கட்டி இருக்கோம். வாங்க போய் என்ஜாய் பண்ணலாம்” என்று கூறிவிட்டு மூவரும் ரீல்ஸ்
எடுப்பதற்காக சென்று விட்டனர்.
குடும்பத்தில்
உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க. கிருஷ்ணமூர்த்தி தாத்தா எதிர்பார்த்தவர்களும்
மண்டபத்தின் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்களை
பார்த்தவுடன் தன் போனை எடுத்து அவர்களுக்கு கால் செய்த கிருஷ்ணமூர்த்தி, “பொண்ணு ரூம் அங்க இருக்கு. ரைட் சைடுல
பாருங்க. நான் சொன்ன மாதிரி வேலையை கரெக்டா முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணுங்க.
நான் சொல்லி தான் நீங்க பொண்ண தூக்குனீங்கன்ற விஷயம் யாருக்கும் தெரிய கூடாது.
பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டு அணைப்பை
துண்டித்து விட்டார்.
மணவறையில்
அமர்ந்திருந்த அபிமன்யுவிற்கோ புது மாப்பிள்ளை என்ற பொலிவும் இல்லை, முகத்தில்
எந்த ஒரு உணர்வும் இல்லாமல் ஐயர் கூறிய மந்திரங்களை மட்டும் திரும்ப கூறிக்கொண்டு
அமர்ந்திருந்தான்.
சிறிது
நேரத்தில் மணமகளை அழைத்து வருமாறு ஐயர் கூறவும். லட்சுமி, “வெண்ணிலா போய் கயலை கூட்டிட்டு வா மா”.
“சரி மா” என்ற வெண்ணிலா மணமகள் அறை நோக்கி நகர்ந்தாள். நேரம் கடந்து
கொண்டே இருந்ததே தவிர வெண்ணிலா வந்தபாடில்லை.
ஐயர்
மீண்டும், “நல்ல நேரம் போயிட போகுது. பொண்ண
சீக்கிரம் அழைச்சிட்டு வாங்கோ” என்று குரல் கொடுத்தார்.
வள்ளியம்மை
பாட்டி லட்சுமியிடம், “அம்மாடி லட்சுமி, வெண்ணிலா போய்
ரொம்ப நேரம் ஆகுது. இன்னும் காணும். ஐயர் பொண்ண கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்.
போய் என்னன்னு பாருமா” என்று அறை நோக்கி அனுப்பி
வைத்தார் வள்ளியம்மை பாட்டி.
‘இன்னும் இந்த பொண்ணுங்க என்ன
பண்றாங்க. இன்னுமா ரெடி ஆகல’ என்று புலம்பிக்கொண்டே மணமகள்
அறைக்குள் சென்று பார்க்க. அங்கே வெண்ணிலாவோ ஸ்தம்பித்த நிலையில் தன் கையில் ஒரு
கடிதத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
லட்சுமி
சென்ற வேகத்தில், “என்ன வெண்ணிலா, கயல் எங்க?
பாத்ரூம் போய் இருக்காளா. அங்க ஐயர் வேற பொண்ண கூப்பிட்டு வாங்கனு சொல்லிக்கிட்டே
இருக்கார். சீக்கிரம் கதவை தட்டி அவளை வெளியில் வர சொல்லு. நல்ல நேரம் முடிஞ்சிடப்
போகுது” என்று படபடத்தார்.
வெண்ணிலா
அசைவில்லாமல் நிற்கவும், அவளின் தோளில் தட்டிய லட்சுமி, “என்னடி, நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். நீ
பாட்டுக்கு சிலை மாதிரி நிக்கிற” என்று திட்டினார்.
“அம்மா..!” என்று அதிர்ச்சி மாறாத குரலில் திகைத்தபடி இழுத்தாள்
வெண்ணிலா.
“என்ன ஆச்சு வெண்ணிலா. ஏன் ஒரு
மாதிரி இருக்க, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா” என்றார் அவளைத் தொட்டுப் பார்த்தபடி.
“கையில் என்னடி இது. ஏதோ பேப்பர்
வச்சுக்கிட்டு இருக்க”.
மீண்டும்
திகைப்பு மாறாத குரலில் வெண்ணிலா, “அம்மா..
கயல்விழியை.. காணும்மா..” என்றாள் திக்கி அழும் குரலில்.
வெண்ணிலா
கூறுவது புரியாத லட்சுமி, “என்னடி சொல்ற.. காணும்னா எங்க
போய் இருக்கா” என்றார் புரியாமல்.
“இதை படிச்சு பாரு மா. அவளை காணும்” என்று சற்று குரல் உயர்த்தி கத்தினாள்
வெண்ணிலா.
“என்ன இது?” என்று கேட்ட லட்சுமி, வெண்ணிலா நீட்டிய
கடிதத்தை வாங்கி படித்தார்.
அதில்,
இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. என் முழு விருப்பத்துடன் தான் நான்
இங்கிருந்து செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்.
இப்படிக்கு,
கயல்விழி.
என்று
எழுதியிருந்தது.
அதை
படித்ததும் லட்சுமிக்கு வார்த்தைகள் எழவில்லை ஸ்தம்பித்து போய்விட்டார். ஒரு நொடி
உலகமே தன் சுழற்ச்சியை நிறுத்தியது போல் உணர்ந்தவர். சிலையென நின்று விட்டார்.
அவரை
உலுக்கிய வெண்ணிலா, “இப்போ என்ன மா பண்றது” என்று கதறி அழுதாள்.
லட்சுமி
அசையவில்லையே தவிர, கண்களில் இருந்து கண்ணீர் ஆறென பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இவர்கள்
இருவரும் சென்று வெகு நேரம் ஆகியும் வராததால் மண்டபத்தில் இருந்த உறவினர்கள்
தங்களுக்குள் சலசலக்க ஆரம்பித்தனர்.
சுப்ரமணி
மரகதம் பாட்டியிடம், “என்னமா இன்னும் காணும். வா நம்ம
போய் பார்ப்போம்” என்று அவரையும் அழைத்துக் கொண்டு
சென்று பார்த்தார்.
அங்கே
லட்சுமியும், வெண்ணிலாவும் கூறிய விஷயத்தில் செய்வதறியாது நின்றனர்
சுப்பிரமணியனும், மரகதம் பாட்டியும்.
மரகதம்
பாட்டி, “என்ன லட்சுமி இந்த பொண்ணு இப்படி
பண்ணிட்டா. நாம எப்படி எல்லாம் வளர்த்தோம். நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம்
கொஞ்சம் கூட பழக்கம் இல்லையே. இப்படி நம்ம தலையில் மண்ணை அள்ளி போட்டுட்டாளே” என்று கூறி கதறி அழுதார்.
“இந்த விஷயம் மட்டும் உங்க
அப்பாவுக்கு தெரிஞ்சா எப்படி தாங்குவார்னு தெரியலையே பா” என்று சுப்பிரமணியை பார்த்து அழுதார்.
“அம்மா நீங்க அழாதீங்க. என்ன
பண்றதுன்னு யோசிப்போம்” என்று கூறிய சுப்பிரமணி, இந்த
இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் நின்றார்.
மரகதம்
பாட்டியும், சுப்ரமணியனும் உள்ளே செல்வதை பின் தொடர்ந்து வந்த விசாலாட்சி இவர்கள்
பேசுவதை கேட்டுவிட்டு வெளியே வந்தவர். மண்டபத்தின் நடு கூட்டத்தில் நின்று கொண்டு,
“கல்யாண பொண்ணு எங்கேயோ ஓடிப்
போயிடுச்சாம்” என்று கத்திக் கூறினார்.
இவர்
கூறுவதை கேட்டு திகைத்த வள்ளியம்மையும், மீராவும், “என்ன பேசுறீங்க நீங்க?” என்றனர் கோபமாக.
விசாலாட்சி,
“உண்மையை தான் பேசுறேன். அங்க போய்
பாரு, பொண்ண காணும்னு மொத்த குடும்பமும் தலையில் அடிச்சிக்கிட்டு அழுதுகிட்டு
இருக்காங்க” என்றார் நக்கல் இழைந்தோடும்
குரலில்.
இவரிடம்
வாக்குவாதம் செய்வதில் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த வள்ளியம்மை பாட்டி, “மீரா, நீ என்கூட வா” என்று கூறிவிட்டு, மணமகள் அறையை நோக்கி
விரைந்தார்.
“என்ன ஆச்சுக்கா. கயல் எங்கே?” என்று கேட்டார் மரகதம் பாட்டியிடம்.
அதற்கு
அழுது கொண்டே மரகதம் பாட்டி, “எங்களை மன்னிச்சிடு வள்ளியம்மை.
தப்பு பண்ணிட்டோம். அந்த கழுதை எங்கனு தெரியல. எங்கேயும் காணோம்” என்று அழுதார்.
“என்னக்கா சொல்ற?” என்றார் அதிர்ச்சியாக.
இவர்
கூறுவதை கேட்ட மீரா அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறிவிட்டார்.
வெளியில்
வந்தவரிடம் மகேந்திரன், “என்ன ஆச்சு மீரா. ஏன் பொண்ண
கூட்டிட்டு வருவதற்கு இவ்வளவு லேட்”.
“கயல்விழியை காணுங்க” என்றார் திகைப்பாக.
“என்ன சொல்ற.. காணுமா.. எங்க போனா..
நல்லா தேடி பார்த்தீங்களா?” என்றார் மகேந்திரன்.
“எல்லாம் பாத்துட்டாங்களாம்.
எங்கேயும் காணும். கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு லெட்டர் எழுதி வச்சிட்டு
எங்கேயோ போயிட்டா” என்றார் திகைத்தபடி.
இவர்கள்
கூறுவதைக் கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு பெரும் மகிழ்ச்சி. தன் திட்டப்படி எல்லாம்
நல்லபடியாக முடிந்து விட்டது என.
ஷைலஜாவோ
விசாலாட்சியிடம், “சூப்பர் மா. என்ன தான் மா பண்ண,
அந்த பொண்ணு ஓடியே போயிட்டா” என்றாள் தன் அம்மாவிடம்.
விசாலாட்சி,
“உன் அம்மா நினைச்சா முடியாதது
எதுவும் இல்லை. எப்படி பேசி அவளை துரத்துனேன்னு பார்த்தல்ல. இப்போவாவது இந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டக்குனு போய் அபி பக்கத்தில் உட்காரு”.
“கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுமா.
அந்த பொண்ண காணும்னு எல்லாம் தேடிட்டு என்கிட்ட வந்து கெஞ்சுவாங்க. கொஞ்ச நேரம்
கெஞ்ச விட்டுட்டு, அப்புறமா போய் உட்காருறேன். எவ்வளவு கஷ்டப்படுத்துனாங்க நம்மளை
இந்த ஒரு மாசம். அதுக்கெல்லாம் அவங்க அனுபவிக்க வேண்டாமா” என்று அசால்டாக கூறினாள்.
“நீ சொல்றதும் சரி தான். கொஞ்சம்
விட்டுப் பிடிக்கலாம்”.
இருவரும்
கெத்தாக சேரில் கால் மேல் கால் இட்டுக் கொண்டு அமர்ந்தனர்.
கயல்விழி
கிருஷ்ணமூர்த்தியின் ஆட்கள் மூலம் கடத்தப்பட்டு இருப்பாளா...?
அல்லது,
விசாலாட்சியின் பேச்சை கேட்டு எங்கேயும் சென்று இருப்பாளா...?
திருமணம்
நடைபெறுமா...?
அல்லது,
ஷைலஜாவின் எண்ணம் நிறைவேறுமா...?
கருத்துகள்
கருத்துரையிடுக