அவனதிகாரம் - 32
அதிகாரம் – 32
‘கெட்டி
மேளம், கெட்டி மேளம்’ என்னும் சத்தம் உரக்க கேட்க.
மங்கல
வாத்தியங்கள் மண்டபம் முழுவதையும் தன் இசையால் நிறைத்திருக்க. அவளின் சங்கு
கழுத்தில் மங்கலநானை அணிவித்தான் அவன்!
இனிதே
திருமணம் முடிந்தது ‘அபிமன்யு ஆரியன்’ என்னும் ‘அபிமன்யு’விற்கும், ‘யாழினி’க்கும்.
சற்று
நேரத்திற்கு முன்பு, மணமகள் காணாத பரபரப்பில் உறவினர்கள் அனைவரும் ஒரு பக்கம்
சலசலத்துக் கொண்டிருக்க. கயல்விழியின் குடும்பத்தினர் செய்வதறியாது நின்று
இருந்தனர். என்ன செய்து ஈடு செய்ய முடியும்.
மணவறை
ஏறிய அபிமன்யுவிற்கு, இது எவ்வளவு பெரிய அவமானம். மீராவின் குடும்பத்திற்கும் என்ன
செய்வது என்று புரியவில்லை.
ஏன்
இப்படி கயல்விழி செய்தாள் என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், மணவறையில்
அமர்ந்திருக்கும் தங்கள் மகனை எண்ணிய வருத்தமும் மேலோங்கி இருந்தது.
இந்த
திருமணத்தில் விருப்பம் இல்லாதவனை பேசி சரிகட்டி அரை மனதாய் இந்த திருமணத்திற்கு
ஒப்புக்கொள்ள வைத்து கடைசியில் இப்படி ஆகிவிட்டதே.
அனைவரின்
முன்பும் இவ்வளவு பெரிய அவமானத்தை அபிமன்யுவிற்கு நாம் தேடி கொடுத்துவிட்டோம் என்ற
குற்ற உணர்ச்சியில் வள்ளியம்மை பாட்டிக்கு பேச்சே எழவில்லை.
மீராவும்,
மகேந்திரனும் இதுவரை அபிமன்யுவை கம்பீரமாகவும், பூரிப்பாகவும் பார்த்தவர்களால்
இப்படி பார்க்க சங்கடமாக உணர்ந்தனர்.
அவனின்
தம்பி ‘அரவிந்த் ஆரியன்’ என்னும் ‘ஆரியனும்’, ஆரணியும் தங்கள் அண்ணனை இப்படி
ஒரு இக்கட்டான சூழலில் பார்ப்போம் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க
மாட்டார்கள்.
அபிமன்யுவை
பற்றி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே, பெரிதாக ஈடுபாடு இல்லாமல் அமர்ந்திருந்தவன்.
தற்பொழுது கடும் கோபத்தில் அமர்ந்திருந்தான்.
வள்ளியம்மை
பாட்டி அவன் அருகில் சென்று, “அபி...” என்று அவன் தோளில் கை வைக்க.
தன் பற்களை
கடித்துக் கொண்டு, “கையை எடுங்க” என்று வார்த்தையை துப்பினான்.
கோபக்காரன்
தான். ஆனால், இப்படி பலபேர் முன்பு தன் குடும்பத்தினரை மரியாதை இல்லாமல் பேசுபவன்
கிடையாது.
ஆகையால்,
திகைத்த வள்ளியம்மை, “அபி...” என்றார் மீண்டும் தன் ஆற்றாமையுடன்.
கோபத்தில்,
“ஷெட் டப்! இப்போ... இங்கேயே...
இந்த கல்யாணம் நடந்தாகணும். ரைட் நவ்!”
என்று அதிகாரமாகவும், கடும் கோபத்திலும் பற்களுக்கு இடையில் வார்த்தையை கடித்து
துப்பினான் அபிமன்யு ஆரியன்.
அதற்கு
வள்ளியம்மை தன்னால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை அபிமன்யுவிற்கு ஏற்பட்டு
இருக்கிறது என்று எண்ணியவர், “எப்படி அபி?” என்றார் குற்ற உணர்வுடன்.
விசாலாட்சியும்,
ஷைலஜாவும், “என்ன இந்த கிழவி எப்படினு
கேக்குது. அதான் நம்ம ரெடியா இருக்கோம்ல. நம்மகிட்ட கேட்டா நீ கட்டிக்க போற” என்றார் விசாலாட்சி.
“வெயிட் பண்ணுங்க மாம். இப்போ தான
பேச ஆரம்பிச்சிருக்காங்க. கடைசியில் நம்ம கிட்ட தான் வருவாங்க” என்றாள் தெனாவட்டாக.
விசாலாட்சிக்கு
தன் மனதில் எதுவோ சரி இல்லை என்று பட்டது. அதற்கு ஏற்றார் போல் அவளை நோக்கி கை
காட்டினான் அபிமன்யு ஆரியன். ஆம், யாழினியை தான்..
மொத்த
குடும்பமும் அதிர்ந்து நின்று விட்டனர் மீரா உட்பட.. ஷைலஜாவும், விசாலாட்சியும் தங்கள்
எண்ணம் மீண்டும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற திகைப்பில் எழுந்தே நின்றுவிட்டனர்.
விசாலாட்சி,
“அறிவு இருக்காடி உனக்கு. அப்போவே
சொன்னேன்ல போய் மணவறையில் உட்காருனு. இப்போ பாரு அந்த பொண்ண கை காட்டுறான்.
இப்படியே நீ வேடிக்கை பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான்” என்று கடுகடுவென கூறினார்.
விசாலாட்சியே
சபைக்கு நடுவில் வந்து நின்றவர். அனைவரின் திகைப்பும் மாறும் முன்பே
மகேந்திரனிடம், “அண்ணா, நீ ஒன்னும் கவலைப்படாத.
அந்த பொண்ணு ஓடிப் போனா என்ன. நம்ம குடும்ப கௌரவத்தை நாங்க காப்பாத்துறோம். என்
பொண்ணு ஷைலஜா இருக்கா. அவளுக்கும், அபிமன்யுவுக்கும் கல்யாணம் முடிச்சு வைக்கலாம்.
நீயும், அபியும் இப்படி அவமானப்பட்டு நிக்கிறதை எங்களால பார்க்க முடியலைணா” என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.
அதற்கு
மகேந்திரன் பதில் கூற வரும் முன்பே, மணவறையில் இருந்த அபிமன்யு சத்தமாக, “ஒரு தடவை நான் வேண்டாம்னு தூக்கிப்போட்ட
பொருளை திரும்ப எடுத்துக்க மாட்டேன்”
என்று தாய்க்கும், மகளிற்கும் முகத்தில் அடித்தார் போல் கூறினான்.
இவன்
திருமணம் நின்ற விரக்தியில் தங்களுக்கு அடங்கிப் போவான் என்று நினைத்த
அவ்விருவருக்கும் அபிமன்யுவின் இத்தகைய பேச்சு பெரும் இடியாக இருந்தது.
கோபத்தில்
விசாலாட்சி அபிமன்யுவை பார்த்து, “உன்னை
ஒருத்தி வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போயிருக்கா. அந்த வருத்தம் கொஞ்சம் கூட
இல்லாமல் இப்படி பேசுற. என் மகளை விட்டா உனக்கு வேற எவளும் வாழ்க்கை தர மாட்டா.
எந்த விதத்தில் என் பொண்ணு உனக்கு குறைந்து போயிட்டா” என்று நாக்கை சாட்டை என சுழற்றி பேசினார்.
இவரின்
பேச்சில் சத்தமாக சிரித்த அபிமன்யு, “வாட்...
கம் அகைன்... ஆர் யூ கிரேசி... உங்க பொண்ணு எனக்கு வாழ்க்கை தர போறாளா” என்று கை தட்டியவன், “மாம், டேட் கேட்டிங்களா. இவங்க பொண்ணு
எனக்கு வாழ்க்கை தர போறாங்களாம்” என்று நக்கலாக கூறியவன்.
“இந்த அபிமன்யுவுக்கு வாழ்க்கை தர
அளவுக்கு உங்க பொண்ணு என்ன பெரிய ஆளா?”
என்றான் கேள்வியாக.
அதற்குள்
சுதாரித்த விசாலாட்சி, “இல்ல அபி கண்ணா. ஏதோ கோவத்தில்
அப்படி சொல்லிட்டேன். உன்னை பிடிக்கலைனு போன பொண்ண விட்டுட்டு, உன்னையே
நினைச்சுக்கிட்டு இருக்க என் பொண்ணு ஷைலுவை நீ கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா
இருக்கும். நம்ம குடும்ப கவுரவத்தை அவ காப்பாத்துவா” என்றார் தன் காரியம் நடக்க வேண்டி.
அபிமன்யு
பொறுமையாக, “என் குடும்ப கவுரவத்தை எப்படி
காப்பாத்தனும்னு எனக்கு தெரியும். இந்த அவமானத்தை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு
தெரியும். பாவம்.. நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க. உங்க அண்ணன் குடும்பத்தோட மானம்
போயிடாது. அதை நான் போகவும் விட மாட்டேன்” என்று திடமாக கூறினான்.
இதற்கு
மேல் பேச என்ன இருக்கிறது என்று விசாலாட்சி அமைதியாகிவிட்டார். அபிமன்யு எந்த ஒரு
வார்த்தையும் பேசாமல் நேர் பார்வையாக சுப்பிரமணியை பார்த்தான்.
அவன்
பார்வையிலேயே அதன் அர்த்தத்தை உணர்ந்த சுப்பிரமணி யாழினியை பார்த்தார். அவளோ
அப்பொழுது தான் தன் நண்பிகளுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்துவிட்டு திருமண
மண்டபத்துள் நுழைந்தவள்.
அனைவரும்
சலசலத்துக் கொண்டு அதிர்ச்சியாக இருப்பதை கண்டு ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள்.
தன் குடும்பத்தாரிடம் சென்று நின்று கொண்டாள்.
சுப்பிரமணி
தன் கரகரத்த குரலில், “யாழினி போய் மணவறையில் உட்காரு” என்றார்.
தன்
தந்தை கூறுவதை கேட்டு அதிர்ந்த யாழினி, மேலும் இதுவரை கம்பீரமான குரலிலே தன்
தந்தையின் வார்த்தைகளை கேட்டவளிற்கு இப்போது அவரின் கலங்கிய குரல் ஏனோ உறுத்தியது.
திரும்பி
தன் தாயையும், பாட்டியையும் பார்த்தாள். இருவரும் மௌனமாக அழுது கொண்டு நிற்பதை
பார்த்த யாழினி என்ன செய்வது என்று புரியாமல் நிற்க.
சுப்பிரமணி,
“வெண்ணிலா, யாழினியை கூட்டிட்டு
போய் மணவறையில் உட்கார வை”.
வெண்ணிலாவும்
ஒன்றும் புரியாமல் யாழினியை அழைத்துச் சென்றாள். யாழினிக்கு தற்பொழுது என்ன
செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அழுவதா, என்ன நடந்தது என்று விசாரிப்பதா.
தன்
தாயும், பாட்டியும் எதுவும் கூறாமல் அமைதி காப்பது மேலும் அச்சுறுத்தியது. ‘கயல்விழி அக்கா எங்கே?, ஏன் தன்னை
மணவறையில் அமர கூறுகின்றனர்?’ என்ற பல கேள்விகளுடன் சென்று
மணவறையில் அபிமன்யுவின் அருகில் அமர்ந்தாள்.
மணவறையில்
அமர்ந்தாலும் ‘தாயை தேடும் பிள்ளை போல்’ தன் அன்னையையும், பாட்டியையும்
திருதிருவென பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதற்குள்
தன் கழுத்தில் மாலை விழுவதை உணர்ந்து திரும்பி பார்க்க. அபிமன்யு தான் அவளுக்கு
மாலையை அணிவித்துக் கொண்டு இருந்தான். அதில், அதிர்ந்தவள் திடுக்கிட்டு தன்
தந்தையை பார்த்தாள்.
அவரும்
எதுவும் கூறாமல் கலங்கிய முகத்துடன் அமைதி காக்கவும், இங்கே என்ன நடக்கின்றது
என்று எதுவும் புரியாமல், காரணமும் தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
ஆனால்,
கண்களில் மட்டும் கண்ணீர் அருவியென கொட்டத் தொடங்கியது. யாழினியின் நிலையை உணர்ந்த
மீரா அவளின் அருகில் வந்து தோளில் தட்டிக் கொடுத்தார்.
திரும்பி
நிமிர்ந்து மீராவை பார்த்தவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன், “அத்தை...” என்றாள் மெதுவான குரலில்.
“ஒன்னும் இல்லை டா” என்று தட்டிக் கொடுத்த மீரா மேற்கொண்டு
பேசுவதற்குள் ஐயர், “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று உரக்க கூறும் குரல் கேட்டு
அதிர்ந்து திரும்பிய யாழினிக்கு, அபிமன்யு மங்கலநானை கொண்டு அவளின் சங்கு
கழுத்தில் பூட்டினான்.
கட்டுக்கடங்காது
ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை போல் கண்ணீர் பெருக்கெடுத்த கண்களுடன் யாழினி
அபிமன்யுவை நோக்கிய அந்த நொடி. அவனும் உஷ்ண பெருமூச்சுடன், சிவந்த கண்களுடன்
யாழினியை நோக்கினான்.
அந்த
ஒரு நொடி இருவரின் பார்வையும் பின்னிக்கொள்ள. மங்கலநானை அணிவித்து முடித்து
குங்குமம் இடுகையில் யாழினிக்கு மட்டும் கேட்கும் குரலில் தன் பற்களை கடித்த படி, “இப்போ இங்க என்ன எழவா நடக்குது. எதுக்கு
இப்படி ஒப்பாரி வைக்கிற. இடியட்..!”
என்று முணுமுணுத்தான்.
அவளின்
செந்தாமரை காது மடலை தீண்டிய அவனின் சூடான மூச்சுக்காற்று அவனுடைய கோபத்தின் அளவை
யாழினிக்கு எடுத்துக் கூற. மேலும், அவனுடைய இத்தகைய சொற்கள் பெரும் திகிலை
ஏற்படுத்த, வயிற்றுக்குள் ஒரு கலவரமே நடந்துக் கொண்டிருந்தது யாழினிக்கு பயத்தில்.
ஒவ்வொருவரின்
மனநிலையும் ஒவ்வொன்றாக இருக்க. யாரும் யாழினியின் மனநிலையை பற்றி சிந்திக்கவில்லை.
சற்று நேரத்திற்கு முன்பு வரை, தன் அக்காவின் திருமணத்தில் பட்டாம்பூச்சியாய்
சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருந்தவளை பிடித்து அவளின் இறக்கையை வெட்டி ஏதோ
சிறைக்குள் அடைப்பட்டது போல் உணர்ந்தாள் யாழினி.
திருமணம்
என்றால் ஜாலியாக இருக்கும் என்று பல கனவுகளுடனும், கற்பனைகளுடனும் சுற்றி
வந்தவளின் முன்பு, திருமணம் என்பது பெரும் பூதாகரமான சுழற்சியாய் எழுந்து நின்றது.
அதில்
சிக்கி சின்னாபின்னமாகப் போகிறோம் என்ற பயத்துடன் தன்னவனின் கையால் அணிவித்த மங்கலநானை
ஏற்றுக் கொண்டாள். ‘திருமதி. யாழினி அபிமன்யு ஆரியன்’.
எதிர்பாராமல்
நடந்த இந்த திருமணத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியே. ஆனால், ஒருவருக்கு மட்டும்
பெரும் மகிழ்ச்சி. அவர் ஆசைப்படி யாழினிக்கும், அபிமன்யு ஆரியனுக்கும் திருமணம்
நல்லவிதமாய் முடிந்து விட்டது அல்லவா. அது வேறு யாருமில்லை, அவனின் அன்னை மீரா
தான்..
யாழினியை
பார்த்த முதல் முறையே அவருக்கு மிகவும் பிடித்து விட. அபிமன்யு ஆரியனுக்கும்,
யாழினிக்கும் திருமணம் முடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவருக்குள்
தோன்றியது.
அதற்குள்
வள்ளியம்மை பாட்டி கயல்விழிக்கும், அபிமன்யுவிற்கும் திருமண பேச்சை எடுத்து
விடவும் இவர் அமைதியாகிவிட்டார். இப்போது, எதிர்பாராத விதமாக அவரின் ஆசைப்படியே
இந்த திருமணம் நடந்ததும் அவர் உள்ளம் மகிழ்ந்து போனார்.
ஜீவாவினால்
இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அபிமன்யுவின் குணத்தை அறிந்தவனால்
யாழினியையும், அபியையும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியவில்லை.
கயல்விழியாவது
தைரியசாலி, எப்படியும் சமாளித்து விடுவாள் என்று அமைதியாக இருந்தான். ஆனால்,
யாழினி விஷயத்தில் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவனுக்கு
யாழினியும், ஸ்வேதாவும் வேறு வேறு அல்ல.
இருவரையும்
ஒன்று போல் தான் பார்த்தான். அப்படிப்பட்ட யாழினிக்கு இப்படி ஒரு வாழ்க்கை
அமைந்ததை அவனால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
யாழினிக்காக
பெரிதும் பரிதாபப்பட்டான். எப்படி அவள் இந்த சூழலை எதிர்கொள்ளப் போகிறாள்.
அபிமன்யுவை சமாளிக்க போகிறாள். இனி, அவளின் வாழ்க்கை என்னவாகும்.
ஒருவேளை,
அபிமன்யு கூறியதைப் போல் யாழினியை பிடிக்கவில்லை என்று வேறு யாரையேனும் மணந்து
கொள்வானோ... அப்படி நடக்க நேர்ந்தால் யாழினியின் வாழ்க்கை...? இப்படி பலவாறு
சிந்தித்தவனுக்கு யாழினியின் வாழ்க்கை இப்போது பெரும் சிக்கலில் இருப்பது மட்டும்
தெளிவாக புரிந்தது.
எப்படியாவது
தன்னால் இயன்ற உதவியை யாழினிக்கு செய்ய வேண்டும். அவளுக்கு எந்த பிரச்சனை
வந்தாலும் பக்க பலமாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தான் ஜீவா.
திருமணத்திற்கு
வந்த மற்றவர்களை பொறுத்தவரை மணப்பெண் மாறிவிட்டது அவ்வளவே.. மற்றபடி, திருமணம்
நல்லபடியாக முடிந்ததும், அவர்களுக்குள் அரசல் புரசலாக ஏதேதோ சலசலத்துக் கொண்டே
கூட்டம் கலையத் தொடங்கினர்.
யாழினியின்
நெற்றியிலும், வகுட்டிலும் குங்குமம் வைத்துவிட்டு அபிமன்யு நிமிர்ந்த வேலை,
மண்டபத்தின் வாயிலில் நின்று இருந்தாள் கயல்விழி உடன் ஒரு ஆடவனுடன்.
முதலில்
கயல்விழியை கவனித்த அபிமன்யுவின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. கோபமோ,
வருத்தமோ எந்த ஒரு உணர்வும் காட்டாமல் அவளை சாதாரணமாக பார்த்தான்.
ஏனெனில்,
கயல்விழியுடன் அவனுக்கு உண்டான திருமண ஏற்பாட்டில் அவனுக்கு கயல்விழி மீது எந்த
ஒரு அபிப்பிராயமும், விருப்பமும் ஏற்பட வில்லையே. தன் அன்னைக்காக தானே இந்த
திருமணத்தையே செய்ய ஒப்புக்கொண்டான்.
இப்பொழுதும்
அவன் யாழினியை மணந்து கொண்டது தன் அன்னைக்காக மட்டுமே. ஏனெனில், யாழினியை அவன்
மணந்துள்ளதால் கயல்விழியை வைத்து செய்ய நினைத்ததை தற்பொழுது யாழினியை வைத்து
செய்யப் போகிறான் அவ்வளவே.
கயல்விழியின்
வருகையை பார்த்த அவளின் குடும்பத்தினர் அனைவரும் திகைத்து விட்டனர். அனைவரின்
அதிர்ச்சிக்கும் மேல் மிகுந்த அதிர்ச்சி கிருஷ்ணமூர்த்திக்கு தான்.
எப்படி
இவள் தப்பித்தால்.. தன்னை பற்றி ஏதேனும் உண்மை தெரிந்திருக்குமோ. எதையாவது கூறி
விடுவாளோ. அபிமன்யுவிற்கு நடந்த இந்த பிரச்சனைக்கு பின்பு தான் இருக்கிறேன் என்று
தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று பல குழப்பங்களுடன் அமைதியாக
அமர்ந்திருந்தார்.
கயல்விழியை
பார்த்த மொத்த குடும்பத்தினரும் அவள் அருகில் ஓடிச் சென்றனர். லட்சுமி அவள்
கன்னத்தில் ஓங்கி அறைந்தவர், “ஏன் டி இப்படி பண்ண. நம்ம குடும்ப
மானத்தை இப்படி சபையில் வச்சி வாங்கிட்டியே. உன்னை அப்படியா நாங்க வளர்த்தோம்” என்று கூறி அழுதார்.
சுப்ரமணி
ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை. வள்ளியம்மை பாட்டி, “ஏன் கயல் இப்படி பண்ண. உன்னை கேட்டு தானே எல்லாம் முடிவு
பண்ணோம். எங்ககிட்ட விருப்பம் இல்லைனா, முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியது தான.
இப்படி கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துட்டியே” என்று கண்ணீருடன் கேட்டார்.
அபிமன்யுவின்
குடும்பத்தினர் எதுவும் கூறவில்லை. அவளின் பதிலை எதிர்பார்த்து அமைதி காத்து
நின்றனர். ஆரணிக்கும், ஸ்வேதாவுக்கும் யாழினியின் நிலையை எண்ணி பாவமாகி போனது.
கயல்விழியின்
மேல் அவர்கள் இருவருக்கும் பெரும் கோபமே வந்தது. கயல்விழி இங்கிருந்து செல்லாமல்
இருந்திருந்தால் யாழினிக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காதே.
அவளின்
முகத்தை பார்க்கவே இவர்களுக்கு பாவமாக இருந்தது. இருந்தும், இவர்களால் என்ன செய்ய
முடியும். தங்களுக்குள் வருந்திக்கொண்டு நடப்பவற்றை பார்வையாளராக மட்டுமே
பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சொல்லுடி. ஏன் இப்படி ஊமை மாதிரி
நிக்கிற. பேசாமல் மூடி வச்சு எங்க தலையில் மண் அள்ளி போட்டது பத்தாதா. இப்போ யார்
குடியை கெடுக்க வாயை மூடிக்கிட்டு நிக்கிற. எதுவா இருந்தாலும் வாயைத் திறந்து பேசு” என்று அவளின் முதுகில் மேலும் நான்கு அடி
போட்டார் லட்சுமி.
அதற்கு
வெகுண்டு எழுந்த கயல்விழி, “போதும் நிறுத்துமா” என்று கத்தினாள்.
“என்ன கேட்டா இந்த கல்யாணத்துக்கு
முடிவு பண்ணிங்க. உங்களுக்கு குடும்பம் ஒன்னு சேரனும். என் வாழ்க்கை எப்படி போனால்
உங்களுக்கு என்ன... அதனால தான மாப்பிள்ளையை பத்தி எதுவுமே விசாரிக்காமல் என்னை
புடிச்சு கட்டி வைக்க முடிவு பண்ணிங்க”
என்று சரமாரியாக கேள்வி கேட்டாள்.
இவளின்
கேள்வியில் திகைத்து நின்றனர் மொத்த குடும்பத்தினரும். மீராவின் குடும்பம் உட்பட.
“என்னடி விசாரிக்கணும். ம்ம்...
என்ன விசாரிக்கணும்னு சொல்ற. அப்படி எங்களுக்கு தெரியாதது என்ன தெரிஞ்சிடுச்சு
உனக்கு மாப்பிள்ளை பத்தி” என்றார் கோபமாக மரகதம் பாட்டி.
“நீங்க பேசாதீங்க பாட்டி.
உங்களுக்கு உங்க தங்கச்சியோட உறவு வேணும். அதுக்காக என் வாழ்க்கையை பலி கெடா
ஆக்கலாம்னு பார்த்தீர்களா” என்றாள் கயல்விழி.
“சரி, உனக்கு விருப்பம் இல்லைனா
முன்னாடியே எங்க கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தான. கடைசி நேரத்தில் ஏன் இப்படி
பண்ண” என்று கேட்டார் சுப்பிரமணி சற்று
குரலை உயர்த்தி.
“சொல்லி இருந்தா என்ன பா பண்ணி
இருப்பீங்க. நான் மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதை உங்ககிட்டயும்
சொன்னேன். நடத்திக் கொடுத்தீங்களா. நீங்க பிடிச்ச பிடியிலேயே தானே நின்னீங்க.
இப்போ மட்டும் இந்த கல்யாணத்தில் நான் விருப்பம் இல்லைனு சொன்னா, உடனே
நிறுத்திடுவீங்களா. இவனை தான் நீ கட்டிக்கணும்னு வற்புறுத்தி என்னை கட்டி
வச்சிருப்பீங்க. அதான் சொல்லல. எனக்கு இவரை தான் புடிச்சிருக்கு” என்று தன் அருகில் நின்று இருந்தவனை கை
காட்டினாள்.
இப்படி
ஒரு அதிர்ச்சியை எதிர்பாராத மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து நின்றது. திருமணம்
பிடிக்கவில்லை என்று கூறியவள், வேறு ஒருவனை விரும்புகிறேன் என்று கூறுவாள் என்று
சத்தியமாக மொத்த குடும்பமும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அபிமன்யு
உடனான யாழினியின் வாழ்க்கை எப்படி அமையப் போகிறது...?
யாழினியின்
திருமண கனவு கானல் நீர் ஆகி போகுமா...?
கயல்விழி
உடன் வந்திருக்கும் ஆடவன் யார்...?
யாருக்கும்
தெரியாமல் எப்படி கயல்விழியின் வாழ்க்கை இப்படி திசை மாறிப் போனது....
கருத்துகள்
கருத்துரையிடுக