அவனதிகாரம் - 36
அதிகாரம் - 36
ரிசப்ஷன்
ஆரம்பித்தது முதல் தெரிந்தவர்கள், நண்பர்கள் என கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.
அபிமன்யுவிற்கும், யாழினிக்கும் சற்று நேரம் ஓய்வெடுக்க கூட முடியாமல் வந்தவர்கள்
அனைவரிடமும் சிரித்த முகமாக பரிசினை பெறுவதும், வாழ்த்துக்களை பெறுவதும் என
பிசியாக போய்க்கொண்டிருந்தது.
அந்த
கூட்டத்திலும் யாழினியின் கண்கள் வாசலை நோக்கி தன் குடும்பத்தை தேடிக் கொண்டே
இருந்தது. அதை கண்ட அபிமன்யுவிற்கு கோபம் ஏறிவிட்டது.
‘நான்
உன் பக்கத்தில் இருக்கும் போது, நீ எப்படி உன் குடும்பத்தை பத்தி யோசிக்கலாம்’
என்று எண்ணியவன் அவளின் கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்தான்.
அதில்,
அவளின் எண்ணம் அபிமன்யுவின் புறம் திரும்பியது. அவனை பொறுத்த மட்டும் யாழினியின்
முழு எண்ணமும், அன்பும் அவன் மேல் மட்டுமே இருக்க வேண்டும். முக்கியமாக அவளின்
குடும்பத்தின் மேல் இருக்கவே கூடாது.
ஆகையால்,
எப்படியாவது அவளின் கவனத்தை இவன் புறம் திருப்பவே கையில் அழுத்தத்தை கொடுத்தானே
தவிர, அந்த அழுத்தத்தினால் அவளிற்கு வலிக்குமே என்பதை பொருட்படுத்தாமல்
விட்டுவிட்டான்.
அவன்
மேலும் மேலும் இருக்கத்தை கொடுக்க யாழினிக்கு வலித்தது. ஆனாலும், அவன் எண்ணியது
போல் அவளின் எண்ணம் அவனிடம் வந்துவிட்டது.
ஒருபுறம்
விருந்தினர்கள் வந்து வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்க. இவனிடம் இருந்து கையை
விளக்க தன்னால் முடிந்த மட்டும் போராடிக் கொண்டிருந்தாள் யாழினி, யாரும் அறியாத
வண்ணம்.
அவளின்
முயற்சி தோல்வியில் முடிய கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது. கலங்கிய கண்களுடன்
அபிமன்யுவை இறைஞ்சுதலாக பார்த்தாள் யாழினி.
“கிஷோர் டயர்டா இருக்கு. நாங்க
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரோம்”
என்று கூறிவிட்டு, யாழினியின் கையை விடாமல் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு
அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து விட்டான்.
இவன்
செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மை பாட்டிக்கு மட்டும் ஏதோ
மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. எப்படி யாழினியிடம் கேட்கலாம் என்று
சிந்திக்கலானார்.
அறையினுள்
நுழைந்ததும் யாழினியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அபிமன்யு. அபிமன்யுவின்
செயல்கள் எதுவும் யாழினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
தன்
விருப்பத்தை பற்றி சற்றும் யோசிக்காமல் அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே
செய்கிறானே என்று வருத்தமாகவும் இருந்தது. அவனிடமிருந்து விலக முற்பட்டாள். இவள்
விலக முயல்வதை உணர்ந்து அபிமன்யு மேலும் இறுக்கத்தை கூட்ட மூச்சு விட கூட
முடியாமல் திண்டாடினாள் யாழினி.
அவன்
கொடுத்த வலிக்கு அவனே மருந்தாக நினைக்க. அதனை ஏற்க முடியாமல் அல்லாடியது பேதையின்
மனம். தினமும் உடற்பயிற்சி செய்து இரும்பு போல் உடலை வைத்திருக்கும்
அபிமன்யுவிடமிருந்து பூ போல் இருக்கும் யாழினியால் தன் பலத்தை காட்ட முடியுமா.
இறுதியில்
அபிமன்யுவே ஜெயிக்க, துவண்டு போனாள் யாழினி. சற்று நேரத்தில் அபிமன்யு யாழினியை
விட்டு விலகவும், அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து
விட்டாள் யாழினி.
இருவருமே
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு எளிதில் யாரிடமும் கோபப்படும் குணமும்
யாழினிக்கு கிடையாது. அபிமன்யுவின் அடக்கு முறையை அவளால் தாங்கிக் கொள்ளவும்
முடியவில்லை.
எதற்காக
இப்படி செய்கிறான் என்பது கூட அறியாமல், அவனின் செயல்கள் அனைத்திற்கும் அடங்கிப்
போக இவளால் முடியவில்லை. யாழினி தன்னை அடிப்பாள் என்று சற்றும் எதிர்பாராத
அபிமன்யு அவள் அறைந்ததும் திகைத்தவன்.
பிறகு
சுதாரித்து, “ஹவ் டேர் யூ இடியட். இதுவரைக்கும்
என் மாம், டாட் கூட என் மேல கை வச்சது கிடையாது. உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா
இப்படி செஞ்சிருப்ப” என்று கூறி பதிலுக்கு கை ஓங்க.
அதற்குள் வள்ளியம்மை பாட்டி வந்து கதவை திறந்து விட்டார்.
ஆகையால்,
கையை ஓங்க முடியாமல் கீழே இறக்கி விட்டான். உள்ளே வந்ததும் கலங்கிய கண்களுடன்
நிற்கும் யாழினியையும், ருத்ர மூர்த்தியாக நிற்கும் அபிமன்யுவையும் பார்த்த
பாட்டிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற.
யாழினி
அருகில் சென்றவர் அபிமன்யுவை பொருட்படுத்தாமல், “யாழினி உங்க அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அக்கா, மாமா
எல்லாம் வந்திருக்காங்க. சீக்கிரம் வா மா” என்று கூறி அவளின் கையை பிடித்து அழைத்து சென்று விட்டார்.
இப்போது
அபிமன்யுவிற்கோ யாழினி தன்னை அடித்ததை விட, அவளின் குடும்பத்தினர்
வந்திருக்கின்றனர் என்றதும் அவளின் முகத்தில் வந்த ஒளியையும், சிரிப்பையும்
பார்த்து கடுப்பாகிப் போனான்.
“உனக்காக நான் என்ன எல்லாம் பண்ணி
இருக்கேன். என்னை ஒரு ஆளா கூட மதிக்க மாட்டேங்குற. உன் குடும்பத்தில் இருந்து
வந்திருக்காங்கன்னு சொன்னதும் சிரிச்சிகிட்டு சந்தோஷமா போறியா. எப்படியும்
என்கிட்ட தானே வரணும். அப்போ வச்சுக்கிறேன்” என்று மனதினுள் கருவிக் கொண்டு அமைதியாக மேடையை நோக்கி
சென்றான்.
அதற்குள்
யாழினி குடும்பத்தினர் மேடையில் ஏறி யாழினியுடன் பாசப் போராட்டம் நடத்திக்
கொண்டிருந்தனர். அதனை பார்த்த அபிமன்யுவிற்கு மேலும் வெறுப்பாகி போனது.
சுப்பிரமணியன்
மரியாதை நிமித்தமாக அபிமன்யுவிடும், “மாப்ள
நல்லா இருக்கீங்களா?” என்று வினவினார்.
அவர்
யாரையோ கேட்கிறார் என்பது போல் சற்றும் பொருட்படுத்தாது திமிராக நின்று இருந்தான்
அபிமன்யு.
ஜீவாவிற்கு
பொச பொசவென வந்தது. “யாழினி நல்லா இருக்கியா?”.
“நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க
எல்லாம் எப்படி இருக்கீங்க?” என்று பேசிக் கொண்டிருக்கையில்
அபிமன்யு, “கிஷோர் நிறைய கெஸ்ட் வர வேண்டி
இருக்கு. க்ரௌடை கிளியர் பண்ணு” என்று அதிகார தோணியில் கூறினான்.
யாழினிக்கும்,
அவளின் குடும்பத்தினருக்கும் இவனின் வார்த்தையில் ஒரு மாதிரியாகி போய்விட்டது. ஏன்
மீராவிற்கும், வள்ளியம்மை பாட்டிக்கும் கூட முகம் சுருங்கி விட்டது.
வள்ளியம்மை
பாட்டியும், மீராவும், “வாங்க அண்ணா, வாங்க அண்ணி, வாக்கா
எல்லாம் கீழ போய் உட்காரலாம்” என்று சமாளித்து பேசி அழைத்து
சென்றனர்.
யாழினிக்கு
தங்கள் வீட்டினரை இப்படி அவமதிப்பாக அபிமன்யு நடத்துவது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால்,
அதனை வெளிப்படையாக கேட்பதற்கு இந்த இடமும், சூழலும் ஒத்து வராததால் அமைதி
காத்தாள். ஃபங்ஷனுக்கு வந்த அனைவரும் யாழினி, அபிமன்யுவின் ஜோடி பொருத்தத்தை பற்றி
புகழாரம் சூட்டினர்.
அதில்,
ஷைலஜாவிற்கும், அவளின் அம்மாவிற்கும் தான் வயிற்றெரிச்சல் ஆகிப் போனது. ஒரு புறம்,
ஷைலஜாவும் எவ்வளவோ ஆரியனின் கவனத்தை ஈர்க்க போராடிக் கொண்டிருந்தாள். ஆனால், பலன்
தான் பூஜ்யம். ஒரு வழியாக கூட்டம் அனைத்தும் கலைய. யாழினிக்கு மொத்த சக்தியும்
வற்றிப் போய்விட்டது.
யாழினி,
“டயர்டா இருக்கு அத்தை” என்று மீராவிடம் கூறினாள்.
மீரா, “எல்லாம் வந்து போயிட்டாங்கமா. நீ வா நம்ம
வீட்டுக்கு கிளம்பனும்ல அங்க போய் ரெஸ்ட் எடுக்கலாம்” என்று அழைத்து சென்றார்.
ரிசப்ஷன்
இனிதே நிறைவடைந்ததும் மொத்த குடும்பத்தினரும் கிளம்பி வீடு நோக்கி புறப்பட்டனர்.
தன் குடும்பத்தாருடன் காரில் ஏற சென்றவளை இழுத்துக் கொண்டு வந்து தாங்கள் வந்த
காரிலே ஏற்றினான் அபிமன்யு.
இவனின்
அதிரடியால் மொத்த குடும்பமும் ஆடிப் போனது. வள்ளியம்மை பாட்டி மீராவிடம், “மீரா, இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.
யாழினி குடும்பத்தில் இருக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. எல்லார்
முன்னாடியும் இவன் ஏன் இப்படி நடந்துக்குறான்” என்று கோபமாக கேட்டார்.
“எனக்கும் ஒன்னும் புரியல மா. ஏன்
இப்படி எல்லாம் பண்றான்னு” என்று குழப்பமாக செல்லும் மகனை
பார்த்தார்.
யாழினியின்
குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்த நிலையில் அபிமன்யுவின் செயலை பார்த்துக்
கொண்டிருக்க. ஜீவாவிற்கு மட்டும் எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. இவன் இப்படி தான்
செய்வான் என்று முன்னதாகவே கணித்திருந்ததால் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
மரகதம்
பாட்டி வள்ளியம்மை பாட்டியிடம், “வள்ளி, என்னமா நடக்குது இங்க.
மாப்பிள்ளைக்கு எங்க மேல ஏதாவது கோபமா. கயல்விழியை கட்டிக் கொடுக்குறோம்னு சொல்லி,
யாழினியை கட்டி வச்சிட்டோமேன்னு ஏதாவது கோபமா இருக்காங்களா. அதனால யாழினி கிட்ட
இப்படி எல்லாம் நடந்துக்குறாங்களா”
என்று கவலையாக கேட்டார்.
வள்ளியம்மை
பாட்டி, “அக்கா அப்படியெல்லாம் எதுவும்
இல்லக்கா. இப்போ தான் இப்படி நடந்திருக்கான். நேத்துலாம் இப்படி எதுவுமே நடக்கலக்கா”
மரகதம்,
“நாங்க வந்ததில் இருந்து மாப்ள
முகமே சரி இல்லை. நான் கவனிச்சிக்கிட்டு தான் இருந்தேன். வள்ளி, ஒருவேளை நாங்க
வந்தது புடிக்கலையோ” என்றார் சந்தேகமாக.
வள்ளியம்மை,
“என்னக்கா நீ இப்படி எல்லாம்
பேசுற. உங்க வீட்டுக்கு எத்தனை தடவை வந்திருக்கான். அப்போலாம் இப்படி
நடந்துக்கிட்டானா. இப்போ அவன் மனசுல என்ன இருக்குன்னு புரியல. வீட்டுக்கு போய்
கேக்குறேன், நீ ஒன்னும் கவலைப்படாதக்கா”
என்று சமாதானப்படுத்தினார்.
நடப்பது
அனைத்தையும் பார்க்கும் போது கிருஷ்ணமூர்த்திக்கு மட்டும் மனம் குளிர்ந்து
விட்டது. அவரின் திட்டத்தையும் மீறி இந்த திருமணம் நடந்து விட்டது என்ற கடுப்பில்
சுற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்திக்கு, அபிமன்யு யாழினியிடம் காட்டும்
பாராமுகம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
‘கல்யாணம் முடிஞ்சதும் நல்லது தான்’ என்று மனதிற்குள் எண்ணிக்
கொண்டார்.
வேலுச்சாமி
தாத்தாவிற்கு நடப்பதை எல்லாம் பார்த்து மனமே சரியில்லை. ‘மறுபடியும் தப்பு பண்ணிட்டோமோ’ என்ற உறுத்தல் தொடங்கியது.
அனைவரும்
ஒவ்வொரு மனநிலையிலே வீடு வந்து சேர்ந்தனர். அபிமன்யுவின் செயலால் யாழினிக்கு
அவளின் குடும்பத்தினர் முன்பு எப்படி சமாளிப்பது என்று ஒன்றும் புரியவில்லை.
மேலும்,
அபிமன்யுவை வேறு அடித்துவிட்டதால் அவனின் கோபத்தையும் சமாளிக்க வேண்டும். இவளின்
குடும்பத்தினரையும் சமாளிக்க வேண்டும். என்ன செய்வது என்று குழம்பிப் போய்
அமர்ந்திருந்தாள். காரில் ஏறி வரும் வழியெல்லாம் ஆரணி மட்டுமே கதைத்துக் கொண்டே
வந்தாள்.
“யாழ் பேபி, நீ இப்போலாம் முன்ன
மாதிரி இல்ல. மேரேஜ் ஆனதும் ரொம்ப மாறிட்ட. பர்ஸ்ட்லாம் எப்படி ஜாலியா சிரிச்சு
பேசி விளையாடிகிட்டே இருப்போம். இப்போ எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்க. பேசவே
யோசிக்கிற” என்று சாதாரணமாக கேட்டாள்.
அதற்கு
எந்த பதிலும் கூறாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த யாழினியை
அபிமன்யு திரும்பிப் பார்த்தான். அவளின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.
அதற்குள்
ஆரியன் ஆரணிக்கு பேசாதே என்னும் விதமாக கண்களை காட்டி விட அமைதியாகிவிட்டாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் அபிமன்யு வழக்கம் போல் தன் கோபத்தை நடையில் காட்ட அறையை
விரைவில் அடைந்து விட்டான்.
யாழினிக்கோ
தலையே சுற்றுவது போல் இருந்தது இந்த சூழலில். இவர்கள் உள்ளே நுழைந்ததும்
பின்னாலேயே வந்த அவர்களின் குடும்பத்தினரும் உள்ளே நுழைய.
லட்சுமி
யாழினியிடம் சென்று, “யாழினி நீ சந்தோஷமா இருக்கல்ல”.
யாரிடம்
உண்மையை மறைத்தாலும், தன் தாயிடம் யாழினியால் மறைக்க முடியவில்லை. லட்சுமி இப்படி
கேட்டதும் சட்டென கண்கள் குளம் கட்டி விட்டது.
லட்சுமி
புரிந்து கொண்டார் தன் மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று. என்ன பேசுவது என்று
புரியாமல் வாயடைத்து நின்று விட்டார் லட்சுமி.
பிறகு,
வேலுச்சாமி தாத்தா யாழினியிடம், “எப்படிமா இருக்க. கயல்விழி இப்படி
நடந்துக்கிட்டதால உன்னை பிடிச்சி கட்டி வச்சிட்டோம். எங்களை மன்னிச்சிடுமா. என்னால
தான் இந்த கல்யாணமே நடந்துச்சு. இங்க நடக்குறதுலாம் பார்த்தா திரும்பவும் தப்பு
பண்ணிட்டோமோனு மனசு உறுத்தலா இருக்குமா”
என்று கண்கள் கலங்க கூறியவரை பார்த்த யாழினிக்கு பாவமாக இருந்தது.
எங்கே
திரும்பவும் தாத்தாவிற்கு உடல்நிலை ஏதேனும் பழையபடி ஆகிவிடுமோ என்று பயந்தவள், “தாத்தா யாரு சொன்னா நான் சந்தோஷமா
இல்லைனு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா” என்று பழையபடி சிரித்து பேசினாள்.
அப்போது
தான் முகம் தெளிந்த தாத்தா, “நிஜமாவா டா சொல்ற. ஆனா, மாப்ள
மண்டபத்தில் உன்கிட்ட நடந்துகிட்டதை பார்க்கும் போது...” என்று இழுத்தார்.
யாழினி
மழுப்பும் விதமாக, “அதுவா...” என்று இழுத்தவள், “அது
ஒன்னும் இல்ல தாத்தா. நான் நீங்க எல்லாம் வந்ததும் உங்களைப் பார்த்த சந்தோஷத்தில்
அவர்கிட்ட பேசவே இல்ல. அவரை கண்டுக்கவே இல்ல. அந்த கோபம் தான் அப்படி
நடந்துக்கிட்டார். மத்தபடி வேற எதுவும் இல்ல தாத்தா. நான் காரில் ஏறுனதுமே
என்கிட்ட சமாதானம் ஆகிட்டார். இப்போ கூட நீங்க எல்லாம் வருவீங்க நம்ம அப்படி
நடந்துக்கிட்டோமே எப்படி உங்க முகத்தில் முழிக்கிறதுனு தான் ரூமுக்கு போயிட்டார்” என்று வாய்க்கு வந்ததை கூறி சமாளித்தாள்.
அதை
கேட்ட தாத்தாவிற்கு மனம் குளிர்ந்து விட்டது. “அப்போ மாப்பிள்ளை உன்னை சந்தோஷமா பாத்துக்குறாராமா. நீங்க
ரெண்டு பேரும் நல்லா தானே இருக்கீங்க”.
“நல்லா இருக்கோம் தாத்தா. ரொம்ப
சந்தோஷமா இருக்கோம். என்னை ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க”.
வேலுச்சாமி,
“இப்போ தான்டா மனசுக்கு நிறைவா
இருக்கு. ஏற்கனவே ஒரு தப்பு பண்ணிட்டு காலத்துக்கும் கவலைப்பட்டேன். எங்க
திரும்பவும் அதே மாதிரி நடந்திடுமோனு பயந்துக்கிட்டே இருந்தேன். நீ சொன்னதை
கேட்டதுக்கு அப்புறம் தான் மனசுக்கு நிறைவா இருக்கு” என்று கூறி மகிழ்ந்தார்.
இவர்களின்
உரையாடல் ஆரம்பிக்கும் பொழுதே அருகில் வந்து நின்று இருந்த மரகதம் பாட்டி, யாழினி
கூறுவது அனைத்தும் பொய் என்று அவளின் கண்ணை வைத்தே புரிந்து கொண்டார்.
பிறகு,
அனைவருக்கும் டீ, காபி, ஸ்னாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரித்தனர். லட்சுமிக்கு முகமே
சரியில்லை. அதை உணர்ந்த யாழினி லட்சுமியிடம், “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க மா”.
“நீ இங்க சந்தோஷமா இல்லல்ல யாழினி” என்று வருத்தமாக கேட்டார் லட்சுமி.
யாழினி,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. நான்
சந்தோஷமா தான் இருக்கேன். உங்க எல்லாரையும் பார்த்ததும் சட்டுனு கண்ணுல தண்ணி
வந்துடுச்சு அவ்வளவு தான். மத்தபடி நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன். நீ வேணும்னா
அத்தைகிட்டயும், பாட்டிகிட்டயும் கேட்டு பாரு. நம்ம வீட்டில் எப்படி இருப்பேனோ,
அதே மாதிரி தான் இங்கேயும் இருக்கேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை மா” என்று கூறி அவரை சமாதானப்படுத்தினாள்.
மகள்
தன்னை சமாளிப்பதற்காக தான் இப்படி கூறுகிறாள் என்று தெரிந்தாலும், அவளுக்காக
நம்புவது போல் சிரித்தார் லட்சுமி. சுப்பிரமணி, லட்சுமியிடம் யாழினி கூறியதை
கேட்டு உண்மை என்று நம்பியவர் மனதளவில் நிம்மதி அடைந்தார்.
“சரி மா. நேரம் ஆகுது நாங்க
கிளம்புறோம்” என்றார் சுப்பிரமணி.
“என்னப்பா அதுக்குள்ள
கிளம்புறீங்க. இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல”.
“பரவாயில்ல இருக்கட்டும். இன்னொரு
நாள் வரோம். ஊரில் எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்கு”.
அபிமன்யுவின்
குணம் அறிந்தவளால் இவர்களை தங்க வைத்தாலும் ஆபத்து என்று உணர்ந்தவள்.
“சரிப்பா” என்று ஒப்புக்கொண்டாள்.
வள்ளியம்மை
பாட்டிக்கும் யாழினி இந்த சூழலை சமாளித்தது பெரும் நிம்மதியாகி போனது. இல்லை
என்றால் அவர்களின் தலையில் தானே வந்து விழுந்திருக்கும். அப்போது படிகளில் இறங்கி
வந்த அபிமன்யு இவர்களை கண்டு கொள்ளாமல் வெளியே நடக்கவும்.
அவனை
இடைமறித்த சுப்பிரமணி, “மாப்ள நாங்க ஊருக்கு கிளம்புறோம்”.
திரும்பி
அவரை ஒரு பார்வை பார்த்தவன், “கிளம்புங்க” என்று தோள்களை குலுக்கிவிட்டு
வெளியேறிவிட்டான்.
திரும்பி
யாழினியை பார்த்தார் சுப்பிரமணி அதை உணர்ந்தவள், “அவங்க ஆபீஸ்ல இருந்து அவசரமா போன் வந்திடுச்சுப்பா. அதான்
கிளம்பிட்டாங்க. வேற ஒன்னும் இல்ல”
என்று சமாளித்தாள்.
முதலில்
மகள் கூறிய காரணத்தை நம்பியவரால் இப்பொழுது நம்ப முடியவில்லை. தன் மகள்
சமாளிக்கிறாள் என்று புரிந்து கொண்டவர். இருந்தாலும் அவளின் மனதிருப்திக்காக “சரிமா” என்று புன்னகைத்தார்.
அனைவரும்
குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கையில் தனியாக சென்ற ஜீவா, “யாழினி இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு
தெரியும். அபியோட குணம் பத்தியும் எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்.
கயல்விழிக்கும், அபிக்கும் கல்யாணம் முடிவு பண்ண அப்போவே நான் நிறுத்தனும்னு
நினைச்சேன் டா.
ஆனா,
வீட்டில் எல்லாரும் ரொம்ப பிரியப்பட்டாங்க. தாத்தாவோட உடம்பு வேற சரியில்லாமல்
போயிடுச்சு. அதெல்லாம் யோசிச்சு எதுவும் செய்யாமல் விட்டுட்டேன். அது மட்டும்
இல்ல, கயல்விழி தைரியமான பொண்ணு. எப்படியாவது அபியை சமாளிச்சிடுவான்னு பார்த்தேன்.
கடைசியில் நீ வந்து இப்படி மாட்டுவனு நான் சத்தியமா எதிர்பார்க்கல. உனக்கு எப்போ
எந்த பிரச்சனையா இருந்தாலும் தயங்காம மாமாவுக்கு ஒரு போன் போடு. அடுத்த நிமிஷம்
நான் இங்க வந்து நிற்பேன்”.
அண்ணன்,
தம்பி என உடன் பிறக்காத யாழினிக்கு ஜீவாவின் வார்த்தை பெரும் ஆறுதலாக இருந்தது.
அவளிற்கு வார்த்தைகள் எழவில்லை. தொண்டை கமர, கண் கலங்கியது. தலையை மட்டும்
ஆட்டினாள்.
வள்ளியம்மை
பாட்டி, “அக்கா நீ இப்போவே கிளம்பணுமா.
யாழினி கூட கொஞ்சம் நாள் இருந்துட்டு போகலாம்ல”.
யாழினி
முகம் சோர்வாக இருப்பதை பார்த்த மரகதம் பாட்டிக்கு மனம் கேட்கவில்லை.
“நான் மாமா கிட்ட கேட்குறேன்” என்று கூறி, வேலுச்சாமியிடம் சம்மதம்
வாங்கிக்கொண்டு யாழினியுடன் பத்து நாட்கள் தங்கப் போவதாக அவர்கள் வீட்டிலேயே தங்கி
விட்டார். மற்றவர்கள் அனைவரும் விடை பெற்று சென்றனர்.
யாழினி
அபிமன்யுவிடம் சிக்கிக் கொண்டாள் என்று அவன் எண்ண..
காலம்
யாரை எங்கே சிக்க வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக