அவனதிகாரம் - 38

 

 

அதிகாரம் – 38

 

இரு பாட்டிகளும் கூறிய செய்தியை கேட்ட யாழினி அதிர்ந்து நின்று விட்டாள். இவ்வளவு நாட்களாக சிறு பெண்ணாக சுற்றிக் கொண்டு இருந்தவள். எந்த ஒரு வீட்டு பிரச்சனையையும் பற்றி அறியாதவள்.

 

இப்பொழுது அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனைகளில் செய்வதறியாது திகைத்து நின்று விட்டாள். திடீரென நடந்த எதிர்பாராத திருமணம். அது மட்டுமா, ஒரு கோபக்காரனை சமாளித்து அவனுடன் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்பதே அவளுக்கு பெரும் ஆயாசமாக இருந்தது.

 

இது அனைத்திற்கும் மேலாக, இப்பொழுது அவள் அறிந்த உண்மை பூதாகரமாக கண்முன்னே நின்று மிரட்டியது. பாவம், சிறு பெண் தானே..

 

திடீரென நேர்ந்த திருமணத்தில், இது தான் தன் வாழ்க்கை என்ற பிடிமானம் ஏற்படவே அவளுக்கு இன்னும் சற்று காலங்கள் தேவைப்படுகிறது.

 

இந்த நிலையில் எதிர்பாராமல் அவன் காட்டும் அன்பும், கோபமும் எது உண்மை என பிரித்தறிய முடியாமல் குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருந்தவளிற்கு பாட்டியின் உரையாடல் மேலும் குழப்பத்தை கொடுத்தது. ஏற்கனவே, இவளிடம் கோபத்தை வார்த்தைகளின் மூலமாக நெருப்பென கக்குபவன்.

 

அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் யாழினிக்கு, இப்பொழுது அவனின் கோபத்திற்கான முழு காரணமும் தன் குடும்பம் தான் என்று அறிந்ததும் அதிர்ந்தே விட்டாள்.

 

இனி என்ன செய்ய முடியும். தன் வாழ்க்கை அவ்வளவு தானா. தன் குடும்பத்தாரை பழிவாங்க தான் நம்மை திருமணம் செய்துள்ளானோ... அப்போ இனிமே நம்மளை கொடுமை படுத்துவானோ. அதுக்காக தான் இப்போ திட்டுறானா, இனிமே அடிப்பானோ என்று ஏகப்பட்ட கேள்விகள் அவளின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. வெகு நேரமாக ஆழ்ந்த சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தவளை மரகதம் பாட்டியின் குரல் கலைத்தது.

 

மரகதம் பாட்டி, யாழினி இங்க பாரு, என்ன ஒன்னுமே பேசாம எதையோ யோசிச்சிக்கிட்டு இருக்க.

 

அதற்கு யாழினி, ஐயோ கிழவி! என்னை இப்படி நல்லா மாட்டிவிட்டுட்டியே. இப்போ உனக்கு சந்தோஷமா.. நான் கேட்டனா.. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைனு நான் கேட்டனா என்று பொங்கி எழுந்து விட்டாள்.

 

வள்ளியம்மை பாட்டியோ பதட்டமாக, யாழினி என்னம்மா பேசுற. அபி கோபக்காரன் தான். ஆனா, ரொம்ப நல்லவன் மா. அவன் உண்மையை புரிஞ்சிக்கிட்டா போதும், உன்னை நல்லா பாத்துக்குவான். உன் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராது. நாங்க எல்லாம் இருக்கோம்ல என்று சமாதானப்படுத்தினார்.

 

போங்க பாட்டி. நீங்க என்கிட்ட பேசாதீங்க. எல்லாம் சேர்ந்து இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சு என்னை கட்டி வச்சிட்டீங்கல்ல. இனிமே நான் என்ன பண்றது. இதுக்கு தான் நேத்து அம்மா, அப்பா எல்லாம் வந்ததும் அவர் என்கிட்ட கோவமா நடந்துக்கிட்டார் போலருக்கு என்று புலம்பினாள்.

 

மரகதம் பாட்டி, இப்போ எதுக்குடி இப்படி புலம்புற கிழவி மாதிரி.

 

யாழினி கோபமாக, என்னது புலம்புறேனா. என் வாழ்க்கையே இங்க ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்கு. நான் பேசுறது உனக்கு புலம்புற மாதிரி இருக்கா. அவர் என்ன எல்லாம் பேசுறாருன்னு உனக்கு தெரியுமா என்று கண் கலங்க கூறினாள்.

 

மரகதம் பாட்டி, அப்படி என்னடி சொன்னார்.

 

யாழினிக்கு சட்டென்று சற்று நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு கண் முன்னே வந்து மறைய, போ பாட்டி. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாது என்று முறுக்கிக் கொண்டாள்.

 

மரகதம் பாட்டி, ஏன் டி நீ தான் அவர் என்னெல்லாமோ சொல்றாருன்னு சொல்ற, கோபப்படுறாருன்னு சொல்ற. என்ன சொல்றாருன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குற.. நீ சொன்னா தான எங்களுக்கு தெரியும் என்று பதில் கேள்வி கேட்டார்.

 

எப்படி பாட்டியிடம் கூறுவது என்று தெரியாமல் கண்கலங்கிய யாழினி பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள். மரகதம் பாட்டியை பார்த்து, பயமா இருக்கு பாட்டி.

 

இரு பாட்டிகளுக்கும் யாழினியை பார்த்து பாவமாகி போனது. மரகதம் பாட்டி, ஏய் சின்ன குட்டி. என்ன நீ சின்ன புள்ள மாதிரி அழற. நீ எவ்ளோ தைரியமான பொண்ணு. இதெல்லாம் சின்ன விஷயம். இதுக்கு போய் இப்படி கண்கலங்கலாமா என்று கண்களை துடைத்துவிட்டார்.

 

யாழினி அழுகையினோடு, இனிமே என்ன பாட்டி பண்றது. இவர் வேற ரொம்ப கோவப்படுறார். அப்போ நம்மள பழிவாங்க தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்காரா.

 

மரகதம் பாட்டி, நான் இருக்க வரைக்கும் உனக்கு எந்த கஷ்டமும் வராது போதுமா. நான் பாத்துக்கிறேன் என்று சமாதானம் செய்தார்.

 

அதற்கு யாழினி, நீ என்ன பண்ணுவ. பத்து நாள் இருந்துட்டு ஊருக்கு போயிடுவ. அப்புறம் நான் தானே தனியா இருக்கணும். தினம் தினம் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு பாட்டி.

 

வள்ளியம்மை பாட்டிக்கு வார்த்தையே எழவில்லை. பாவம், ஒரு சிறு பெண்ணை அபிமன்யுவிற்கு கட்டி வைத்து தவறு செய்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சியாகிப் போனது.

 

அதை கவனித்த மரகதம் பாட்டி, ஏய் வள்ளி, நீ எதுக்கு இப்போ உம்முன்னு ஓரமா போய் நிக்கிற. அவ என்னடானா அழுவுறா, நீ என்னடானா உம்முன்னு இருக்க. நம்ம மூணு பேரும் சேர்ந்து தான் இந்த விஷயத்தை சரி பண்ணனும். இங்க பாரு யாழினி, அபி ஒன்னும் தப்பானவன் கிடையாது. ஒழுக்கமான பையன். நல்ல குணம் இருக்க பையன். கோவக்காரன் தான் நான் இல்லைனு சொல்லல. யாரு தான் டி கோபம் இல்லாமல் இருக்கா.

 

ஏன், உன் அப்பனுக்கு கோவமே வராதா. உங்க அம்மா அவன் கூட குடும்பம் நடத்தல. அப்படித்தான் ஒவ்வொரு ஆம்பளைங்க ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. இவன் கோவத்துலயும் ஒரு நியாயம் இருக்கு. அவன் எதுக்காக கோபப்படுகிறான். அவனை பெத்த அம்மாவை நம்ம வேண்டாம்னு சொல்லிட்டோம்னு தான். உண்மை என்னனு தெரிஞ்சிடுச்சுனா, அதுக்கப்புறம் நீ சந்தோஷமா வாழலாம் என்று சமாதானம் கூறினார்.

 

யாழினி சோர்வாக, அட போ பாட்டி. இதெல்லாம் எப்போ நடக்கிறது. நீ சொல்றதெல்லாம் என்ன சாதாரண விஷயமா என்ற சலித்துக் கொண்டாள்.

 

என்னடி நீ, இப்படி பேசுற. எனக்கு பேத்தியா பொறந்துட்டு இப்படி பயந்து சாகுற. நம்ம நினைச்சா எல்லாத்தையும் நடத்தலாம் என்று திடமாக கூறினார் மரகதம் பாட்டி.

 

பாட்டியின் வார்த்தைகளில் வள்ளியம்மை பாட்டிக்கும், யாழினிக்கும் சற்று தைரியம் தென்பட முகமும் தெளிவுற்றது.

 

மரகதம் பாட்டியின் கைகளை பிடித்துக் கொண்ட வள்ளியம்மை பாட்டி, அக்கா நீ பேசுறதை கேட்கும் போது தான் எனக்கும் கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு. யாழினி கண்கலங்கி உட்கார்ந்ததும் எனக்கு மனசு நொந்து போச்சு. தப்பு பண்ணிட்டோமோன்னு உறுத்தல் ஆயிடுச்சு. நீ பேசுறதை கேட்கும் போது தான் கொஞ்சம் தைரியமா இருக்கு. நீ சொல்றதெல்லாம் நடக்கும்ல.

 

மரகதம் பாட்டி, அதெல்லாம் கண்டிப்பா நடக்கும் வள்ளி. நம்ம ரெண்டு பேரும் எதுக்கு இருக்கோம். இங்க பாரு யாழினி, உன் வாழ்க்கை சரியாகி நீ மாப்பிள்ளைகூட சந்தோஷமா வாழுறதை பார்த்ததுக்கு அப்புறம் தான், நான் இந்த வீட்டை விட்டு போவேன் போதுமா என்று உறுதி அளித்தார்.

 

நிஜமாவா பாட்டி என்று ஆர்வமாக கேட்டாள் யாழினி.

 

அதிலிருந்தே அவள் எவ்வளவு பயந்திருக்கிறாள் என்பது இரு பாட்டிகளுக்கும் புரிந்தது.

 

அவளின் தலையை ஆதுரியமாக தடவிக் கொடுத்த மரகதம் பாட்டி, நிஜமா தான் டி சொல்றேன். உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது நான் எப்படி உன்னை விட்டுட்டு போவேன். உன் கூடவே இருந்து உன் வாழ்க்கையை சரி பண்ணி உன் கையில் கொடுத்துட்டு தான் நான் போவேன் போதுமா.

 

அவர் கூறியதை கேட்டு சிரித்த யாழினி, சரி பாட்டி என்று ஒப்புக் கொள்ளவும். அபி அந்த பக்கம் நடந்து செல்லவும் சரியாக இருந்தது.

 

இவ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கா. எப்போ பார்த்தாலும் பாட்டி, பாட்டினு இவங்களோடவே ஒட்டிக்கிட்டு திரியுறா. இவள் குடும்பத்தில் இருந்து இவளை பிரிக்கனும்னு பார்த்தா, இவ என்னடானா அவங்க கூடவே சுத்திக்கிட்டு இருக்காளே என்று நினைத்தவன்.

 

யாழினி... என்று குரல் கொடுத்தான். இல்லை இல்லை கத்தினான்.

 

அதில் அதிர்ந்து திரும்பிய யாழினி அபியை பார்த்ததும் போச்சு எல்லாம் போச்சு என்று வெடவெடக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

அதற்குள் மரகதம் பாட்டி, வாங்க தம்பி என்று அழைத்தார்.

 

அவரை சற்றும் கண்டுகொள்ளாத அபி நேராக யாழினியிடம், மணி என்ன ஆகுது. இன்னும் இங்க நின்னு என்ன கதை பேசிகிட்டு இருக்க என்று முறைத்தான்.

 

அதற்கு திரும்பி பாட்டியை பார்த்தவளை, நான் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன். காது கேட்கலையா. அங்க என்ன பாத்துகிட்டு இருக்க என்று கோபமாக திட்டினான்.

 

இல்ல.. இல்லங்க.. சும்மா தான் பேசிகிட்டு இருந்தோம் என்று சமாளிப்பாக கூறினாள் யாழினி.

 

அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கடகடவென அறையை நோக்கி சென்றுவிட்டான். இவனின் அதிரடியால் இரு பாட்டிகளும் செய்வதறியாது நிற்க.

 

வள்ளியம்மை பாட்டி, என்ன இவன் இப்படி பண்றான். பாவம், யாழினி தான் இவன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறா. என்ன சொல்றதுன்னு தெரியல. இவனை சரி பண்ண முடியுமா என்று சந்தேகமாக கேட்டார்.

 

பதிலிற்கு சிரித்த மரகதம் பாட்டி, அதெல்லாம் பாத்துக்கலாம் வள்ளி என்று சாதாரணமாக கூறிவிட்டு நகர்ந்துவிட்டார்.

 

வள்ளியம்மைக்கு ஒன்றும் புரியவில்லை. தன் அக்கா திடமாக இருப்பதே அவருக்கும் சற்று நம்பிக்கையாக இருந்தது.

 

அறையினுள் அழைத்து சென்றவன் யாழினியிடம், எதுக்கு சும்மா நீ பாட்டி கூட நின்னு பேசிகிட்டு இருக்க என்று நேரடியாக கேட்டுவிட்டான்.

 

இதில் என்னங்க இருக்கு. பாட்டி கிட்ட தானே பேசுனேன் என்று புரியாமல் கேட்டாள் யாழினி.

 

எனக்கு பிடிக்கல. இனிமே அவங்ககிட்ட நீ பேசாத என்று சட்டென்று கூறிவிட்டான்.

 

என்ன பேசுறீங்க நீங்க. அவங்க என்னோட பாட்டி. அவங்ககிட்ட எப்படி பேசாமல் இருக்க முடியும்.

 

இதுவரைக்கும் நீ பேசுனியோ, பேசலையோ எனக்கு அதெல்லாம் தெரியாது. இனிமே நீ பேசக்கூடாது அவ்வளவு தான் என்று கூறிவிட்டு படுத்து விட்டான்.

 

யாழினிக்கு தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் தலையே சுற்றுவது போல் இருந்தது. தன் குடும்பத்தை பழி தீர்ப்பதற்காக தன்னை திருமணம் செய்த அபியின் மேல் ஒரு புறம் கோபமும், மற்றொரு புறம் அவனின் நிலையை எண்ணி பரிதாபமாகவும் இருந்தது.

 

காலையில் முதல்ல பாட்டிகிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டணும். என்னால முடியலடா சாமி என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளும் படுத்து விட்டாள்.

 

காலை கதிரவன் தன் பணியை தொடங்கியதும் அவரவர் அவரவர் வேலையில் ஈடுபட்டனர். ஜீவா வெண்ணிலாவிடம் ஒரு காகிதத்தை நீட்டி கையெழுத்து இடுமாறு கேட்டான்.

 

என்னங்க இது என்றாள் வெண்ணிலா.

 

சீக்கிரம் நிலா. டைம் இல்ல. இன்னைக்கு தான் லாஸ்ட் டேட் சைன் பண்ணு என்றான் அவசரமாக.

 

அவன் நீட்டிய காகிதத்தை வாங்கி படித்து பார்த்தவள் புரியாமல் விழித்தாள்.

 

இப்போ இதெல்லாம் தேவையாங்க.

 

ஏன் இப்போ என்ன?”.

 

கல்யாணம் ஆயிடுச்சு. குழந்தையும் பொறந்திடுச்சு. இனிமே படிச்சு நான் என்னங்க பண்ண போறேன் என்றாள் சலிப்பாக.

 

கல்யாணம் ஆகுறதுக்கும், குழந்தை பிறக்குறதுக்கும், படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்ல நிலா. எல்லாம் நம்ம மனசு தான் காரணம். உனக்கு படிக்கணும்னு ஆசை இப்பவும் இருக்கு தான. அப்போ படி.

 

இல்லங்க அத்தை, மாமாக்குலாம் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க என்று இழுத்தாள்.

 

அவங்க கிட்ட நான் பேசிக்குறேன். நான் தான உன்னை படிக்க வைக்கிறேன். அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க நீ சைன் பண்ணு என்று விடாப்பிடியாக நின்று கையெழுத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான்.

 

வெண்ணிலாவிற்கு சொல்ல முடியாத ஆனந்தம். தன் அம்மாவிற்கு போனின் மூலம் விஷயத்தை கூறியவளிற்கு தலை கால் புரியவில்லை.

 

அடுத்ததாக பாட்டியிடம் தெரிவிப்பதற்காக போன் செய்தாள், என்ன காலையிலேயே வெண்ணிலா போன் பண்றா என்ற யோசனையுடனே போனை எடுத்த பாட்டி, என்ன வெண்ணிலா, இவ்வளவு காலையில் போன் பண்ணி இருக்க.

 

ஒன்றும் இல்ல பாட்டி. எல்லாம் சந்தோஷமான விஷயம் தான். நான் மேல படிக்க போறேன்.

 

என்னமா சொல்ற நிஜமாவா என்றார் மரகதம் பாட்டி.

 

ஆமா பாட்டி. மாமா தான் காலேஜ்ல இருந்து அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்தாங்க. நான் கூட இப்போ எதுக்கு மாமான்னு கேட்டேன். படிக்கிறதுக்கு எப்போ வேணாலும் படிக்கலாம்னு சொன்னாங்க என்று மகிழ்ச்சியாக கூறினாள்.

 

ரொம்ப சந்தோஷம்மா. பாத்தியா நீ ஆசைப்பட்ட மாதிரியே உனக்கு நடக்குது.

 

ஆமாம் பாட்டி, யாழினி எங்க?.

 

இதோ குடுக்கிறேன் இருமா என்று கூறிவிட்டு, யாழினியிடம் ஃபோனை நீட்டினார் மரகதம் பாட்டி.

 

அவர் நீட்டிய போனை வாங்கி தன் காதில் வைத்த யாழினிக்கு சற்று நேரத்தில் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. மரகதம் பாட்டி ஓடிச்சென்று கீழே விழுந்து கிடந்த யாழினியை தூக்க. அனைவரும் அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தனர்.

 

அபியோ யாழினி பாட்டியிடம் பேசிய கோபத்தில் அவளின் கன்னத்தில் அறைந்துவிட்டு ருத்ரமூர்த்தியாக நின்றுக் கொண்டிருந்தான்.

 

உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது. இவங்க கிட்ட பேசாத பேசாதன்னு என்று மரகதம் பாட்டியை கைகாட்டி கூறியவன்.

 

ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா... நேத்து கூட உன்கிட்ட சொன்னேன். திரும்பவும் அவங்ககிட்ட பேசிகிட்டு நிக்குற. முதலில் கிளம்பு.

 

மீரா, என்ன அபி இதெல்லாம். என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ உன் மனசுல. இது என்ன பழக்கம் பொம்பள புள்ள மேல கை நீட்டுறது. நீ எது செஞ்சாலும் கரெக்டா இருக்கும்னு நினைச்சு தான் இவ்வளவு நாள் நீ என்ன பேசினாலும் நான் தலையிடாம இருந்தேன். இதெல்லாம் ரொம்ப தப்பு. நம்ம வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்கா. அவகிட்ட யாராவது இப்படி நடந்துக்கிட்டா நமக்கு எப்படி இருக்கும். முதல்ல யாழினி கிட்ட சாரி கேளு என்றார் கண் கலங்க. அவருக்கு தன் வளர்ப்பு தவறிவிட்டதே என்று அடக்க மாட்டாமல் கண்கள் கலங்கிவிட்டது.

 

மாம் இவ என்னோட வைஃப். ஏதாவது தப்பு பண்ணா தண்டிக்க எனக்கு எல்லா ரைட்சும் இருக்கு. யாரும் இதில் தலையிடாதீங்க என்று மீராவின் முகத்தை பார்க்காமலே முகத்தில் அடித்தார் போல் கூறினான்.

 

அபிமன்யு அனைவரின் முன்பும் இப்படி பேசியது மீராவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

 

உடனே வள்ளியம்மை பாட்டி, அபி நீ பண்றது ரொம்ப தப்பு.

 

பாட்டி ஃபஸ்ட் இவங்களை இங்க இருந்து போக சொல்லுங்க என்று மரகதத்தை கை காட்டினான்.

 

வள்ளியம்மைக்கு கோபம் சட்டென்று ஏற, ஏன், எதுக்குடா? அவங்க ஏன் போகணும். அவங்க என்னோட அக்கா. இங்க தான் இருப்பாங்க என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு இங்கே நடக்கும் காட்சிகளை பார்க்க மனதிற்குள் குளுகுளு என்று இருந்தது.

 

உன்னை நான் கிளம்புன்னு சொன்னேன். என்ன உட்கார்ந்துகிட்டு போஸ் குடுக்குறியா என்று அனைவரின் மேலிருந்த கோபத்தையும் யாழினியின் மேல் எரிந்து விழுந்தான் அபி.

 

அவள் தட்டுத் தடுமாறி எழுந்திரிக்கும் வரை பொறுமை இல்லாத அபி. அவனே அவளின் கைகளை பிடித்து தரதரவென அழைத்துக் கொண்டு ரூமிற்கு சென்றுவிட்டான்.

 

ஆரணி மீராவிடம், அம்மா யாழினி ரொம்ப பாவம். ஏன் அண்ணா இப்படி எல்லாம் நடந்துக்குறாங்க.

 

மீரா, அப்பா இருந்தாலாவது இவன் கொஞ்சம் அப்பா பேச்சை கேட்டு இருப்பான். அப்பாவும் ஆபீஸ் விஷயமா வெளியூர் போயிட்டாங்க. ஏன் இப்படி எல்லாம் பண்றான்னு எனக்கு எதுவும் புரியல.

 

மரகதம் பாட்டி, நீ கவலைப்படாத மீரா. எல்லாம் சரியாயிடும்.

 

அவரின் கைகளை பிடித்துக் கொண்ட மீரா, தப்பா நினைச்சுக்காதீங்க பெரியம்மா. அவன் ஏதோ கோபத்தில் இப்படி பேசிட்டான். அவன் பேசுனது தப்பு தான். அவனுக்கு பதில் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று கண்கள் கலங்க கூறினார்.

 

மரகதம், நான் ஒன்னும் நினைச்சுக்கலமா. அவன் போனு சொன்னா, உடனே நான் இங்கிருந்து போயிடுவேனா. நான் எங்கேயும் போக மாட்டேன். என் பேத்தி சந்தோஷமா வாழுறதை பார்த்துட்டு தான் நான் இந்த வீட்டைவிட்டு போவேன் என்று உறுதியாக கூறிவிட்டு அறையை நோக்கி நகர்ந்து விட்டார். அதில், கிருஷ்ணமூர்த்திக்கு பொச பொசவென வந்தது.

 

தன் அதிரடியால் மென்மையாக இருக்கும் யாழினியின் குணத்தை அபிமன்யு மாற்றுவானா...?

 

அல்லது, தன் மென்மையால் அபிமன்யுவின் குணத்தை யாழினி மாற்றவாளா...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5