அவனதிகாரம் - 40

 

 

அதிகாரம் – 40

 

யாழினி, என்ன பேசணும்னு சொல்லுங்க பேசுறேன் என்றாள் அமைதியாக.

 

மரகதம் பாட்டி, என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்படி சோகமா இருக்க. வாழ்க்கையில சரி பண்ண முடியாத பிரச்சனைனு எதுவும் இல்லை யாழினி.

 

அவர் கூறியதை கேட்டு விரக்தியாக சிரித்த யாழினி, இனிமே என் வாழ்க்கையில என்ன நடக்கணும்னு நீங்க சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல. எல்லாமே மத்தவங்க விருப்பப்படி தான் நடக்குது.  இவ்வளவு நாள் உங்க விருப்பப்படி நடந்துச்சு. இனிமே, அவரோட விருப்பப்படி நடக்கப் போகுது அவ்வளவு தான். உங்க யாருக்கும் என்னை பத்தி எந்த கவலையும் இல்ல. அக்கா பண்ண தப்புக்காக எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு எல்லாரும் சேர்ந்து அவளோட தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்துட்டீங்க.

 

யாழினியின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த மரகதம் பாட்டி அவள் எந்த அளவிற்கு மனம் உடைந்து இருக்கிறாள் என்று அவளின் வார்த்தையிலேயே உணர்ந்தார்.

 

இப்படி எல்லாம் பேசாத யாழினி. இங்க இவ்வளவு பிரச்சனை இருக்கும்னு நாங்க யாருமே நினைச்சு கூட பார்க்கல. உன் வாழ்க்கை வீணா போகணும்னு நாங்களே நினைப்போமா என்றார் யாழினிக்கு தங்கள் பக்க நியாயத்தை கூறும் பொருட்டு.

 

நீங்க என்ன காரணம் சொன்னாலும் நடந்ததை மாத்த முடியாது பாட்டி. அவ்வளவு தான், எல்லாம் முடிஞ்சு போச்சு. அவருக்கு என்னை சுத்தமா பிடிக்கல பாட்டி. பிடிக்காதவர் கூட எப்படி வாழ முடியும். அதான் உங்க யார்கிட்டயும் நான் பேச கூடாதுன்னு சொல்லிட்டார். இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா.. எனக்கு இது எதுவுமே வேணாம் பாட்டி. நான் பழையபடி அப்பாவுக்கு பொண்ணா ஊருக்கே போயிடுறேன் என்றாள் கண்ணீர் மல்க.

 

யாழினியின் கண்ணீரை துடைத்து விட்ட மரகதம் பாட்டி, என்ன பேசுற நீ, வாழ்க்கையில சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை எதிர்த்து போராடி உன் வாழ்க்கையை உனக்கு புடிச்ச மாதிரி நீதான் அமைச்சுக்கணும் யாழினி. இப்படி பிரச்சனையை பார்த்து பயந்து ஓடுனா சரியா போச்சா. சரி, இதுவே வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ணி அப்போ வேற ஏதாவது ஒரு பிரச்சனை வந்திருந்தா என்ன செஞ்சிருப்ப. அப்பவும் இதே மாதிரி எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்னு சொல்லி தப்பிச்சு ஓட பாப்பியா.

 

இது உன் வாழ்க்கை. அதை உனக்கு புடிச்ச மாதிரி மாத்தணும்னா அதுக்கு நீ கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும். நான் இல்லைனு சொல்லல எங்க மேலயும் தப்பு இருக்கு. அபி பத்தி முன்னாடியே நல்லா விசாரிச்சு இருக்கணும். அப்படி பண்ணாம விட்டது எங்க தப்பு தான் என்றார். அவருக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது.

 

ஏன் பாட்டி இவர் இப்படி இருக்கார். மத்தவங்க மேல கோவம்னா, அதை இப்படி தான் என் மேல காட்டணுமா. நான் என்ன தப்பு பண்ணேன். எனக்கு ஏன் தண்டனை கொடுக்குறார். தப்பு யார் பெயரில இருக்குன்னு விசாரிக்காம இப்படி பண்றது கொஞ்சம் கூட நியாயமே இல்ல பாட்டி.

 

இந்த விஷயத்தில் அபியையும் முழு தப்புன்னு சொல்லிட முடியாது யாழினி. சின்ன வயசுலையே அவனோட மனசுல தப்பான விஷயங்களை சொல்லி கிருஷ்ணமூர்த்தி கெடுத்து வச்சு இருக்கார். அதை நாம முதலில் சரி பண்ணனும். இது தான் உன் வாழ்க்கைனு ஆயிடுச்சு. அதனால இதை எப்படி சரி பண்ணி வாழுறதுன்னு தான் நம்ம பாக்கணும்.

 

அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்த யாழினியை பார்த்தவர், அபியை பத்தி நீ என்ன நினைக்கிற யாழினி.

 

அவருக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல பாட்டி. அவங்க அம்மாவை பத்தி யோசிச்சாரு. என்னோட மனசை பத்தி யோசிக்கவே இல்லையே. இத்தனை வருஷம் பெத்து வளர்த்தவங்க, பழகுனவங்க கிட்ட எல்லாம் பேசக்கூடாதுன்னு சொன்னா, நான் எவ்வளவு வருத்தப்படுவேன்னு அவர் நினைக்கலல்ல. அவருக்கு அவங்க குடும்பம் தான் முக்கியம். நான் இப்போ வந்தவ தான, அதான் அவரோட இஷ்டப்படி ஆட்டி வைக்கிறார் என்றாள் கோபமாக.

 

யாழினி கூறியதை கேட்டு சிரித்த மரகதம் பாட்டி, நீ சொல்றதும் சரி தான். ஆனா, அபி நம்ம குடும்பத்தை பழிவாங்குறதுக்காக மட்டும் உன்னை கல்யாணம் பண்ணல. உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணி இருக்கான்.

 

யாழினி சலிப்பாக, ஏன் பாட்டி நீ வேற.

 

நான் நிஜமா தான் சொல்றேன் யாழினி. நீயே யோசிச்சு பாரு, கயல்விழி கூட நிச்சயம் நடந்த அப்போ அபியோட முகம் எப்படி கடுகடுன்னு இருந்துச்சு. கோவமா நடந்துக்கிட்டான். அதுவே மணமேடையில உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னான். உன் கழுத்தில் தாலி கட்டும் போது அவனுடைய முகத்தில் எந்த ஒரு வெறுப்பும் இல்ல. அவனோட கண்ணுல கோவமும் தெரியல.

 

திருமணத்தன்று அவன் பேசிய வார்த்தைகளும், அவனின் முகமும் மனக்கண் முன்பு வந்து போக.

 

என்ன பாட்டி உளறுர. நான் தான் பார்த்தேனே அன்னைக்கு கூட அவர் என்னை திட்டுனார் உனக்கு தெரியுமா என்றாள் உம்மென்று.

 

ஒருவேளை, நீ சொல்றது உண்மையா இருந்தாலும், யாராவது அவங்க விரும்புற பொண்ணுகிட்ட இப்படி தான் நடந்துப்பாங்களா, அடிப்பாங்களா, திட்டுவாங்களா.

 

நீ கேட்குற கேள்வி எல்லாம் சரி தான். ஆனா, அதை என்கிட்ட கேட்காத, அபி கிட்ட கேளு.

 

இவர் கூறுவதை கேட்டு பதறிய யாழினி, ஐயோ பாட்டி, என்னை ஆளை விடு. ஏற்கனவே, வாங்குனதெல்லாம் பத்தாதா. நீ என்னை மறுபடியும் அந்த ஹிட்லர் கிட்ட கோர்த்து விட பாக்குறியா.

 

நீ கேட்குற கேள்விக்கு எல்லாம் இப்போ என்கிட்ட பதில் இல்ல யாழினி. ஆனா, நான் சொன்ன விஷயம் மட்டும் உண்மை. அபி கண்டிப்பா உன்னை விரும்பி தான் கல்யாணம் செஞ்சிருக்கான். அது மட்டும் இல்ல. இப்போ நீ என்கிட்ட கேட்ட கேள்வி எல்லாம் கூடிய சீக்கிரமே உனக்கு அபி கிட்ட கேட்குறதுக்கான நேரமும் வரும் பாரு.

 

இவர் கூறுவது அனைத்தையும் ஏதோ வேற்று மொழி படத்தை பார்ப்பது போல் புரியாமல் பார்த்த யாழினி, சரி, இப்போ நான் என்ன பண்றது. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. நான் நம்ம வீட்டுக்கு போறேன். நீயும் என் கூட வா என்றாள் சிறு குழந்தை போல்.

 

அடி கிறுக்கி, இவ்வளவு நேரம் நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு போகலாம்னு கூப்பிடுற. இனிமே, இதான் உன் வீடு. நீ இங்க தான் இருக்கணும் என்றார் கராராக.

 

முடியவே முடியாது பாட்டி. நான் இப்போவே ஜீவா மாமாக்கு போன் பண்ணி இங்க நடந்தது எல்லாம் சொல்ல போறேன். மாமாவை வரவச்சு அவங்க கூட வீட்டுக்கு போக போறேன். நீ என் கூட வரர்துனா வா. இல்லைனா, இங்கேயே இரு. உன் இஷ்டம் என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

யாழினி இங்க பாரு. நான் சொல்றதை கொஞ்சம் கேளு டி. நான் சொல்ற மாதிரி நீ செஞ்சா உன் வாழ்க்கையில் இருக்க பிரச்சனை எல்லாம் சரியாயிடும்.

 

அவரை திரும்பி முறைத்துப் பார்த்த யாழினி, என்னை ஏன் பாட்டி இப்படி எல்லாம் தொந்தரவு பண்ற. உனக்கு என்ன தான் பிரச்சனை. இப்போ என்னை என்ன பண்ண சொல்ற.

 

நீ ஒன்னும் பண்ண வேண்டாம். நான் சொல்றதை மட்டும் கேளு. நான் இப்போ அபிகிட்ட போய் பேச போறேன்.

 

உடனே யாழினி பதட்டமாக, என்ன.. என்ன பேச போற.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ சும்மாவே இருக்க மாட்டியா.

 

என்னை கொஞ்சம் பேச விடு டி. நான் அபி கிட்ட பேசுனதுக்கு அப்புறம் அவன் உன்கிட்ட பேச வருவான். நீ அவன்கிட்ட பாட்டி சொன்னது எல்லாமே உண்மை தான்னு சோகமா முகத்தை வச்சிக்கிட்டு சொல்லு போதும் என்றார்.

 

யாழினி தலையும் புரியாமல் வாலும் புரியாமல், என்ன பாட்டி சொல்ற. நீ என்ன பேச போற. நான் என்ன உண்மைனு சொல்லணும்.

 

உனக்கு உன் வாழ்க்கை சந்தோஷமா மாறனுமா இல்லையா.

 

ஆமா மாறனும்.

 

பாட்டி, அப்போ நான் சொல்றதை மட்டும் செய். அபி உன்கிட்ட என்ன கேட்டாலும் ஆமானு சொல்லு. பாட்டி சொன்னது உண்மை தான்னு சொல்லு. எதுக்கும் பதட்டப்படாத, வேற எதுவும் உளறி வைக்காத என்றார் அதட்டலாக.

 

குழப்பத்தில் தலையே வெடித்து விடும் போலானது யாழினிக்கு, என்ன பாட்டி ஆளாளுக்கு ஆட்டி வைக்க நான் என்ன பொம்மையா.

 

சொல்லுறதை மட்டும் செய் டி. பெரிய மனுஷி கணக்கா பேசுவ என்று விட்டு கீழே இறங்கி சென்று விட்டார் மரகதம் பாட்டி.

 

வழக்கம் போல் யாழினிக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. குழப்பத்தினோடே அறைக்கு சென்றாள்.

 

கிருஷ்ணமூர்த்தியின் அறையிலோ அபிமன்யு யாழினி பற்றி கூறத் தொடங்கினான்.

 

அபிமன்யு, யாழினியை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க தாத்தா.

 

கிருஷ்ணமூர்த்தி, நான் ஒன்னும் நினைக்கல என்றார் வெறுப்பாக.

 

அபிமன்யு மென்புன்னகையுடன், யாழினியோட தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு தெரிஞ்சதும் விருப்பம் இல்லாம தான் நான் அந்த ஊருக்கு போனேன். ஹாஸ்பிடல் வாசலில் தான் யாழினியை பார்த்தேன். பார்த்ததுமே ஏதோ ரொம்ப நாள் பழகுன மாதிரி ஒரு ஃபீலிங். அதை எப்படி எக்ஸ்ப்ளைன் பண்றதுன்னு எனக்கு தெரியல. ஆனா, பார்த்த முதல் பார்வையிலேயே என் மனசுக்குள்ள வந்து ஆணி அடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டா.

 

இந்த மாதிரி ஒரு ஃபீல் இதுக்கு முன்னாடி நான் எந்த பொண்ணுகிட்டயும் அனுபவிச்சது இல்ல தாத்தா. ஷி இஸ் சோ ஸ்பெஷல் டு மீ. எனக்கு அப்போ இவ யாருன்னு எல்லாம் தெரியாது. பட், அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன்.  ஷி இஸ் மை லவ். ஷி இஸ் மை லைஃப்னு.

 

இவன் கூறுவதை கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு காதில் புகை வராத குறை தான். முகத்தை அருவருப்பாக வைத்தவாறு, என்ன அபி சொல்ற. நீ எங்க அவ எங்க. அது மட்டும் இல்லாம, அவ அந்த  வேலுச்சாமியோட பேத்தி. அவளை இந்த வீட்டு மருமகளா என்னால ஏத்துக்க முடியாது அபி என்றார் திட்டவட்டமாக.

 

அபிமன்யு கூலாக, நீங்க ஏன் அப்படி பாக்குறீங்க. அவ இந்த அபியோட பேபி டால். அப்படி நினைச்சு பாருங்க. அது மட்டும் இல்ல தாத்தா, எனக்கு அவளை ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போதே அம்மா ஞாபகம் தான் வந்தது. நான் அவளை கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணதுக்கு முக்கியமான காரணம் அவ அந்த வேலுச்சாமியோட பேத்தின்றது தான் என்றான் உருக்கமாக.

 

அதைக் கேட்டு அதிர்ந்த கிருஷ்ணமூர்த்தி, என்ன உளறுர. வேலுச்சாமி பேத்தினு தெரிஞ்சுமா அவளை கட்டிக்க விரும்புன.

 

ஆமா, எங்க அம்மாவை எப்படி நான் பிரியக்கூடாதுன்னு நினைக்கிறேனோ, அப்படி தான் இவளை பார்க்கும் போதும் எனக்கு தோணுச்சு. எங்க அம்மாவை எப்படி என் கூடவே வச்சுக்கணும்னு தோணுதோ, அப்படி தான் இவளை பார்க்கும் போதும் தோணுது. எங்க அம்மாவை எப்படி அந்த குடும்பத்தில் சேர விடாமல் பாத்துக்குறேனோ, அப்படித்தான் இவளையும் பாத்துக்குறேன். எனக்கு யாழினியை பார்க்கும் போது எங்க அம்மாவை பாக்குற மாதிரியே இருக்கு.

 

சின்ன வயசுல அவங்க எங்க அம்மாவை வேண்டானம்னு சொல்லிட்டாங்க என்ற உண்மை எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்க. அப்படிப்பட்ட குடும்பத்தில் எங்க அம்மா மாதிரியே இன்னொரு பொண்ணு வாழுறது எனக்கு பிடிக்கல. அவ எனக்கு வேணும்னு தோணுச்சு. என் கூடவே வச்சு பத்திரமா பாத்துக்கணும்னு தோணுச்சு. அதான் கல்யாணம் பண்ணி என் கூடவே கூப்பிட்டு வந்துட்டேன். இனிமே, அவ தான் என்னோட லவ். யாரு நினைச்சாலும் என்கிட்ட இருந்து அவளை பிரிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டான்.

 

இவனிடம் கோபமாக பேசினால் வேலைக்காகாது என்று எண்ணிய கிருஷ்ணமூர்த்தி சாதுவாக, அபி கொஞ்சம் யோசிச்சு பாருப்பா. அவங்க எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்காங்க. அந்த குடும்பத்து பொண்ண போய் இப்படி பிடிச்சுருக்குனு சொல்றியே. இது உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்க என்றார்.

 

அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க. அம்மாவுக்கு யாழினியை ரொம்ப பிடிக்கும் என்று கூறும் பொழுதே அவனின் செல்போன் இசைக்க தொடங்கியது.

 

அதை எடுத்து காதில் வைத்தவன், ஒன் மினிட் என்று கிருஷ்ணமூர்த்தியிடம் கூறி விட்டு வெளியேறிவிட்டான்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு தான் இப்பொழுது தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது. தேவையில்லாமல் வள்ளியம்மையின் பேச்சை கேட்டு அபிமன்யுவை இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்து பெரிய தவறு செய்து விட்டோமோ என்று வருந்தினார்.

 

பொதுவாக அபிமன்யு ஒரு விஷயத்தில் முடிவு செய்துவிட்டால், அதை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டான் என்பது இவர் அறிந்த உண்மை.

 

இப்போது இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று பலவாறு சிந்தித்தவர். இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தார். எப்படியாவது யாழினியை அவளே இந்த வீட்டை விட்டு செல்லும்படி செய்ய வேண்டும்.

 

அதற்கு ஒரே வழி ஷைலஜா...!

 

ஷைலஜாவை வைத்து தான் யாழினியை இங்கு இருந்து அனுப்ப முடியும் என்று எண்ணியவர். உடனே, ஷைலஜாவிற்கு அழைத்தார்.

 

அழைப்பை ஏற்ற அவளின் அம்மா விசாலாட்சி, என்ன விஷயம் சொல்லுங்க? என்றார் வெடுக்கென்று.

 

அவருக்கு வள்ளியம்மையின் சொந்தத்தில் அபிக்கு பெண் எடுத்தது சுத்தமாக விருப்பமில்லாததால், அதை கிருஷ்ணமூர்த்தியிடமும் காண்பித்தார்.

 

கிருஷ்ணமூர்த்தி, நீ ஆசைப்பட்ட மாதிரி உன் பொண்ணுக்கும், அபிமன்யுவிற்கும் கல்யாணம் நடக்கணும்னா. உடனே, நீ ஷைலஜாவை கூப்பிட்டுகிட்டு இங்க வா என்றார் எடுத்த எடுப்பிலேயே.

 

தான் கேட்பது உண்மை தானா என்று ஒரு நிமிடம் யோசித்த விசாலாட்சி, நீங்க என்ன சொல்றீங்க. இது எப்படி நடக்கும். அதான் அபிக்கும், அந்த கிராமத்து பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்களே என்றார் எரிச்சலாக.

 

இந்த கல்யாணத்தில் உங்களுக்கு எப்படி விருப்பம் இல்லையோ. அதே மாதிரி தான் எனக்கும் விருப்பம் இல்ல. அபிக்கு அந்த பொண்ணு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவள். வள்ளியோட விருப்பத்திற்காக தான் இந்த கல்யாணமே நடந்திருக்கு.‌ மத்தபடி எனக்கோ, அபிக்கோ இந்த கல்யாணத்தில் துளி கூட விருப்பம் இல்ல. அபிக்கு ஏத்த ஜோடி ஷைலஜா தான். உனக்கும் இந்த குடும்பத்தில் சம்பந்தம் வச்சுக்கணும்னு ஆசை தான என்றார் கேள்வியாக.

 

விசாலாட்சி உடனே, ஆமா, என் அண்ணன் பசங்களுக்கு என் பொண்ண குடுக்கணும்னு எனக்கு விருப்பம் தான். ஆனா, அபி விஷயத்துல இனிமே அது நடக்காதே என்றார்.

 

ஏன் அப்படி சொல்ற. அதெல்லாம் முயற்சி பண்ணா கண்டிப்பா நடக்கும். உன் பொண்ணுக்கு என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு எல்லாம் சொல்லிக் கொடுத்து இங்க கூப்பிட்டுகிட்டு வா என்றார்.

 

ஏற்கனவே, அபியிடம் வாங்கியதை எண்ணிப் பார்த்த விசாலாட்சியோ மனதிற்குள் வேறு ஒரு திட்டத்துடன், சரி வரோம் என்று வைத்துவிட்டார்.

 

ஷைலஜா, யாருமா போன்ல. என்ன விஷயம் ரொம்ப யோசனையா இருக்க என்று கேட்டுக் கொண்டே அறையனுள் நுழைந்தாள்.

 

அந்த கிழவன் தான் டி. திடீர்னு போன் பண்ணி, அபிக்கும் அந்த கிராமத்து பொண்ணுக்கும் சரி வராது. ஷைலஜாவை உடனே கூப்பிட்டுகிட்டு வா. அவ தான் இந்த வீட்டு மருமகளா வரணும்னு என்னென்னமோ உளறுறான். இதெல்லாம் உண்மையா பொய்யானு தெரியலையே என்றார் யோசனையாக.

 

நிஜமாவா மாம் என்று ஆவலாக கேட்டாள் ஷைலஜா.

 

போடி பைத்தியக்காரி. அபிக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு சொல்றாரு. அதை நீ நம்புறியா. பார்த்தல்ல அன்னைக்கு மண்டபத்துல கல்யாணம் நின்னு போனா வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல என்ன என்ன பேச்சுலாம் பேசுனான். இந்த கிழவன் தான் உளறுராருனா, அதை நீயும் நம்புறியா. இதுவும் நல்லதுக்கு தான் ஷைலஜா. அந்த கிழவன் சொன்ன மாதிரி அவர் பேச்சை கேட்டு அந்த வீட்டுக்குள்ள போகுற மாதிரி நாம போவோம். ஆனா, நம்மளுடைய டார்கெட் அபி கிடையாது ஆரியன் என்றார்.

 

அவர் கூறுவதை கேட்ட ஷைலஜா யோசனையோடு, ம்ம்.. சூப்பர்மா. அன்னைக்கு உன்கிட்ட சொன்ன மாதிரி அந்த வீட்டுக்கு மருமகளா போய் அந்த அபியோட முகத்துல கரிய பூசணும். அதுக்கு நல்ல சான்ஸ் நம்மளை தேடி வந்திருக்கு என்று கூறி, இருவரும் சிரித்தனர். பிறகு, மாமன் வீட்டிற்கு கிளம்புவதற்காக அம்மாவும் மகளும் தயாராகினர்.

 

கிருஷ்ணமூர்த்தியின் அறையில் இருந்து அபி வெளியேறுவதற்காக காத்துக் கொண்டிருந்த ஆரணியும், ஆரியனும் அபியின் பின்னோடு ஓடினர்.

 

அண்ணா.. அண்ணா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று நிறுத்தினர்.

 

யாழினி அறியாமலே அவளை விரும்பும் கணவன் ஒரு புறம்...

அவளின் வாழ்க்கையை பறிக்க நினைக்கும் கிருஷ்ணமூர்த்தி ஒரு புறம்...

 

அவளின் வாழ்க்கையை சரி செய்ய நினைக்கும் மரகதம் ஒரு புறம்...

 

என அவரவர் அவரவர் வேலையை பார்க்க. இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இருக்கும் யாழினியின் நிலை என்ன...?

 

மரகதம் பாட்டி அபியிடம் கூறப்போகும் விஷயம் என்ன...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5