அவனதிகாரம் - 42

 

 

அதிகாரம் – 42

 

திடீரென தங்கள் பின்னே கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிய அம்மூவரும் சற்றும் அபிமன்யுவை இங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் திகைப்பிலேயே தெரிந்தது.

 

தன் இரு கால்களையும் அகட்டிய படி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு கூர்மையான விழிகளுடன் யாழினியைப் பார்த்தவன், இந்த நேரத்துல எங்க போயிட்டு வர? என்றான் கோபமாக.

 

இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திரும்பி மற்ற இருவரையும் பாவமாக பார்த்தாள் யாழினி. ஆரியனும், ஆரணியும் தங்களுக்குள் திருதிருவென ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க.

 

யாழினியின் பார்வையை உணர்ந்த ஆரியன் எப்படியாவது சமாளிச்சுடுடா ஆரி என்று தனக்குத்தானே தெம்பூட்டிக் கொண்டு, அண்ணா.. அது வந்து.. என்று ஆரம்பிக்கும் போதே அபிமன்யு தன் கையை உயர்த்தி பேசாதே என்பது போல் ஆரியனை தடுத்தவன்.

 

மீண்டும் யாழினியிடம், எங்க போயிட்டு வரனு கேட்டேன் என்றான் சற்று கடுமையாக.

 

பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவள், அது.. வந்து.. ஆ.. ஆரணி கோவிலுக்கு போகலாம்னு சொன்னா.. அதான் போயிட்டு வரர்துக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்றாள் திக்கித் திணறி. 

 

அபி, கோவிலுக்கா.. என்று சந்தேகமாக மூவரையும் பார்த்தவன் இந்த நைட் டைம்ல எந்த கோவில் இருக்கு என்றான் யாழினியிடமே.

 

எல்லா கேள்வியும் என்கிட்டயே கேட்கிறானே. மத்தவங்ககிட்டயும் கேட்கலாம்ல என்று நினைத்தவளுக்கு அபிமன்யுவின் அடுத்தடுத்த கேள்விகளில் மூச்சடைப்பது போல் இருந்தது.

 

யாழினி, இல்ல.. நாங்க ஈவ்னிங் போனோம். திரும்பி வரும் போது சிட்டி புல்லா டிராபிக். வரவே முடியல. வெயிட் பண்ணி வெயிட் பண்ணி நைட் ஆயிடுச்சு என்று ஒருவாறு சமாளித்தாள்.

 

எப்படியும் யாழினி பதில் கூற முடியாமல் சொதப்பி விடுவாள் என்று நினைத்த ஆரியனுக்கும், ஆரணிக்கும் அவளின் இத்தகைய பதில் பெரும் இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.

 

என்ன சொல்லி சமாளிப்பது என்று இருவரும் யோசிப்பதற்குள் யாழினி அழகாக நம்புவது போல் ஒரு கதையை கூறிவிட்டாள் என்று நிம்மதியாகவும் இருந்தது.

 

இருவரும் சற்று ஆசுவாசமாக யாழினியை நோக்க, அப்பொழுது தான் ஆரணி கவனித்தாள். அவளின் கைகள் இன்னும் வெடவெடத்துக் கொண்டு தான் இருந்தது.

 

ஆரணி, ஓ.. பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மென்ட் வீக்கோ என்று எண்ணியவளிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

 

திடீரென தானாக ஆரணி சிரித்ததும் அவளின் புறம் திரும்பிய அபிமன்யு, இங்க என்ன காமெடி ஷோ நடந்துட்டு இருக்கா. லூசு மாதிரி சிரிச்சிட்டு இருக்க என்றான் அதே கடுமையினோடு.

 

டக்கென்று முகபாவனையை மாற்றியவள், அச்சோ இல்லண்ணா. கோவில்ல ஒரு குழந்தை விளையாடிட்டு இருந்துச்சா அத நினைச்சதும் சிரிப்பு வந்துச்சு என்று ஏதேதோ உளறி கொட்டினாள்.

 

ஏற்கனவே, பாட்டி கூறியதைக் கேட்டு டென்ஷனாக இருந்த அபிமன்யு, அந்த டென்ஷனில் இவர்களிடம் கத்திக் கொண்டு இருந்தான்.

 

யாழினி, அடிப்பாவி! நான் இங்க உயிரை கொடுத்து பொய் சொல்லிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட பொறுப்பில்லாம சிரிச்சு மொத்தமா மாட்டிவிட்டுடுவா போலருக்கே என்று ஆரணியை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.

 

மூவரின் முகமுமே சரி இல்லாததை வைத்து இவர்கள் பொய் தான் கூறுகிறார்கள் என்று உறுதி செய்த அபிமன்யு யாழினியிடம் கோபமாக, ரூமுக்கு வா. உனக்கு இருக்கு என்று கூறிவிட்டு அறையை நோக்கி சென்று விட்டான்.

 

அவன் நம்பி விட்டான் என்று ஆசுவாசப் பட்டதெல்லாம் வீணாகிப் போனது.

 

யாழினி, ஐயோ! போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. எல்லாம் உன்னால தான் டி. உன்னை யாரு சிரிக்க சொன்னா. அறிவு இருக்கா.. இப்படி என்னை நல்லா மாட்டிவிட்டுட்டியே. இப்போ நான் என்ன பண்றது என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

 

கண்களிலோ கண்ணீர் விழவா வேண்டாமா என்னும் நிலையில் தொத்திக் கொண்டு நின்றது. யாழினியின் நிலை ஆரணிக்கும், ஆரியனுக்கும் சங்கடமாகி போக.

 

ஆரணி, பேபி, இவ்ளோ நேரம் நாம என்ன பேசுனோம்னு ஞாபகம் இருக்குல அதை மனசுல வச்சுக்கோ. உன்னால இதெல்லாம் ஈஸியா கிராஸ் பண்ணி வர முடியும். ஓகே.. தைரியமா போ என்று தட்டிக் கொடுத்து அனுப்பினாள்.

 

என்ன தான் மற்றவர்களிடம் தைரியமாக பேசினாலும், நடந்து கொண்டாலும் அபிமன்யுவை பார்க்கும் பொழுது தன் மொத்த தைரியமும் சட்டென வடிந்து விடுகிறது யாழினிக்கு. சற்று பயம் கலந்த படபடப்புடன் தன் கைகளை பிசைந்தவாறு அறையை நோக்கி சென்றாள் யாழினி.

 

அங்கே இவளின் வருகைக்காகவே கார்த்திருந்த அபிமன்யு, வாங்க மிஸஸ். அபிமன்யு ஆரியன் என்று நக்கலாக அழைத்தான்.

 

என்ன இது கோவமா இல்லாம வேற மாதிரி பேசுறான். தெரியாம வந்து நல்லா வசமா சிக்கிட்டோமோ என்று தன் மனதிற்குள் எண்ணியவள் எதுவும் கூறாமல் அமைதியாக அவன் எதிரே சென்று நின்றாள்.

 

எங்க போய்ட்டு வந்த?.

 

அதான்.. சொன்னேனே.. கோவிலுக்கு...

 

தன் கையை உயர்த்தி தடுத்தவன், எனக்கு பொய் சொன்னா பிடிக்காது என்று தன் கூர் விழிகளால் அவளைப் பார்த்தான்.

 

யாழினிக்கு தான் பாட்டியிடம் பேசியது முதல் அடி வாங்கியது வரை நியாபகம் வர, சு.. சும்மா.. ஒரு வாக் போகலாம்னு கூப்பிட்டாங்க. அதான் அப்படியே போயிட்டு வந்தோம் என்று குனிந்த தலை நிமிராமல் கூறினாள்.

 

ஓ.. அப்படியா.. அப்போ ஏன் பொய் சொன்ன?.

 

உங்ககிட்ட சொல்லாம போயிட்டேன். சாரி என்றாள் சிறிய குரலில்.

 

நீ செஞ்சது தப்புனு அப்போ நீயே ஒத்துக்குற என்றான் நெட்டி முறித்தபடி, சோ நம்மளோட டீலிங் உனக்கு இன்னும் மறந்து இருக்காதுன்னு நினைக்கிறேன்.

 

பீலிங்கா.. என்ன.. என்ன பீலிங்.. என்று வெகுளியாக கேட்க.

 

அபி தன் பற்களை கடித்தபடி, பீலிங் இல்ல டி. டீலிங்....

 

டி யா! என்று அவள் அதிர்ச்சியாக கேட்க.

 

நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு டி. நம்ம டீலிங் ஞாபகம் இருக்கா.

 

அவளிற்கு சட்டென்று அன்று ஒரு நாள் அபிமன்யு பனிஷ்மென்ட் என்னும் பெயரில் தன்னை கட்டி அணைக்க வைத்தது ஞாபகத்திற்கு வர முகம் குப்பென்று சிவந்துவிட்டது. சற்று தடுமாற்றத்துடன் இல்லை என்னும் விதமாக தலையை அசைக்கவும். ஒரு அடி அவளை நோக்கி முன்னெடுத்து வைத்தான் அபிமன்யு.

 

உடனே பதறிய யாழினி, இப்போ ஞாபகம் வந்துடுச்சு‌.

 

அவளின் முகச்சிவப்பில் தன்னை கட்டுப்படுத்த சற்று திண்டாடித் தான் போனான் அபிமன்யு. அவளின் பதட்டம் கலந்த இன்னதென்று அறிய முடியாத உணர்வு அவனை மேலும் முன்னேற தூண்ட மீண்டும் அவளின் அருகே சென்றவன்.

 

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றுடன் ஒன்று உரசும் அளவிற்கு நெருங்கியபடி ஹஸ்கி வாய்ஸில், என்ன ஞாபகம் வந்துச்சு என்று கேட்டான்.

 

யாழினியே அறியாமல் அனிச்சையாக அவளின் கைகள் எங்கே அபிமன்யு மேலும் முன்னேறிவிடுவானோ என்று அவனை தடுக்கும் பொருட்டு அவன் மார்பின் மீது கையை வைத்தவளிற்கு குரலே எழும்பவில்லை.

 

யாழினி தான் அறியாமலே தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையாலும் அபிமன்யுவின் உணர்ச்சிகளை தூண்டிக்கொண்டே இருந்தாள். யாழினியை அவஸ்தைக்குள்ளாக்க எண்ணியவனே, தற்பொழுது அவஸ்தைக்குள்ளாகி உள்ளான்.

 

மீண்டும், என்ன வெறும் காத்து தான் வருதா என்று அவளை கிண்டல் செய்ய.

 

யாழினிக்கோ ஒன்றும் புரியாத நிலை. எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்.

 

அப்போ நான் கொடுத்த பனிஷ்மென்ட்டை நீ இன்னும் மறக்கல.. ரைட் என்றான் சற்று குனிந்து அவளின் கண்ணோடு தன் கண்களை கலக்கவிட்டவாறு.

 

இருவரின் பார்வையும் பின்னிக்கொள்ள, தான் அவள் மேல் உணர்ந்த காதலை சொல்லாமலே அவளுக்குள் கடத்திக் கொண்டிருந்தான் அந்த கள்வன்!

 

சற்று நேரம் இருவருக்கும் இடையே எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை.

 

மௌனம்.. மௌனம் மட்டுமே நிலவியது.

 

அப்போது திடீரென இருள் சூழ்ந்து கொள்ள. யாழினி சுதாரிப்பதற்கு முன்பே அவளின் இதழில் அழுத்தமான ஒரு முத்தத்தை வைத்துவிட்டு விலகி விட்டான் அபிமன்யு.

 

என்ன ஆச்சு? எப்படி திடீர்னு பவர் கட்? என்று தனக்குத் தானே பேசியபடி தன் செல்போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

 

அடுத்த இரண்டு நிமிடத்தில் மீண்டும் கரண்ட் வந்திருந்தது. அபிமன்யு திரும்பி யாழினியை பார்க்க. பாவம், யாழினி தான் கரண்ட் ஷாக் அடித்தது போல் சிலை என நின்று கொண்டு இருந்தாள்.

 

தன் சிகையை கோதி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன். யாழினி முகத்தருகே சொடக்கிட, திடுக்கிட்டு நிமிர்ந்தவள். அபிமன்யுவை பார்த்து மலங்க மலங்க விழித்தாள். குரலை செறுமி அவளை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தவன்.

 

என்ன முழிக்கிற. பனிஷ்மென்ட் ஞாபகம் இருக்கா.

 

அவள் வேகமாக இருக்கு என்னும் விதமாக தலையை ஆட்டவும்.

 

சரி இப்போ அது வேண்டாம் என்று சலிப்பாக கூறினான்.

 

யாழினிக்கு அப்போது தான் மூச்சே வந்தது. அதற்குள் உன்னை விட்டு விடுவேனா என்பது போல், இப்போ வேற பனிஷ்மென்ட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன் என்றான்.

 

மறுபடியும் முதலில் இருந்தா என்பது போல் அபிமன்யுவை பாவமாக பார்த்தாள் யாழினி.

 

தன் சிரிப்பை பற்கள் கடித்து அடக்கியவன் யாழினியிடம், நான் உனக்கு யாருனு ஞாபகம் இருக்கா.

 

ம்ம்.. ஹஸ்பண்ட்.

 

குட். உங்க ஊர் பக்கம் ஹஸ்பண்டை எப்படி கூப்பிடுவாங்க.

 

வாங்க, போங்கனு கூப்பிடுவாங்க.

 

அது கரெக்டு தான். பட், நான் உன்னோட அத்தை பையன். ஐ மீன்.. ஒரு முறையில உனக்கு அத்தை பையன். சோ, இனிமே நீ என்னை மாமானு தான் கூப்பிடனும் என்றான்.

 

யாழினி அதிர்ச்சியாக, மாமாவா....

 

ஆமா. மாமா தான். ஏன் கூப்பிட மாட்டியா என்று மீண்டும் ஒரு அடி முன்னே வைக்க.

 

பதறிய யாழினி, கூப்பிடுவேன்.. கூப்பிடுவேன்.. நான் எப்போ கூப்பிட மாட்டேன்னு சொன்னேன்.

 

அபி மெலிதாக சிரித்தபடி, குட். எங்க ஒரு தடவை கூப்பிடு பார்ப்போம்.

 

யாழினியோ தனக்குள் ஐயோ விட மாட்டேங்குறானே என்று நொந்து போனவள், மா... என்று தொடங்கும் போது கதவு தட்டப்பட்டது.

 

அவளின் மாமா என்னும் அழைப்பிற்காக ஆசையாக காத்துக் கொண்டிருந்தவனுக்கு கதவு தட்டப்படும் ஓசையில் புஸ் என்றானது.

 

உடனே யாழினி ஆவலாக, யாரோ கதவு தட்டுறாங்க. நான் போய் பாத்துட்டு வரேன் என்று ஓடிவிட்டாள்.

 

வேறு யாரு நம் ஆரணி தான். யாழினியை காப்பாற்ற எண்ணி பியூசை பிடுங்கினாள். ஆனால், அபியினால் மீண்டும் பவர் வந்துவிட்டது. வேறு வழி இன்றி, அறை கதவையே தட்டி விட்டாள்.

 

சிவந்த முகத்துடன் படபடப்பாக கதவை திறந்த யாழினியை பார்த்ததும் ஆரணி, பேபி.. அண்ணா ரொம்ப திட்டிட்டாரா என்று கவலையாக கேட்டாள்.

 

இவள் என்ன கேட்கிறாள் என்று புரியாமல் யாழினி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவளின் பின்னால் வந்து நின்றான் அபிமன்யு.

 

உடனே ஆரணி கப்சிப் என்று வாயை மூடி கொண்டாள்.

 

ஆரணி, அண்ணா, அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க என்று நல்ல பிள்ளை போல் கூறிவிட்டு, நீ வா யாழினி. உன்னை கையோடு கூப்பிட்டு வர சொன்னாங்க என்று அபிமன்யுவின் பதிலை எதிர்பாராமல் யாழினியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

டைனிங் ஹாலிற்கு செல்லும் வரையிலும் ஆயிரம் முறை கேட்டு விட்டாள் ஏன் பேபி ஒரு மாதிரி இருக்க. அண்ணா ரொம்ப திட்டிட்டாங்களா. சொல்லு சொல்லு என்று நச்சரித்து கொண்டே வந்தாள் ஆரணி.

 

ஆனால், யாழினியிடம் எந்த பதிலும் இல்லை. ஒன்னும் இல்ல என்று மட்டுமே கூறிக்கொண்டு வந்தாள்.

 

ஆரணி, அப்புறம் ஏன் உன் பேஸ் டல்லா இருக்கு. அழுதியா சொல்லு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.

 

அதற்குள் டைனிங் ஹாலும் வந்துவிட. இருவரும் அமைதியாக சென்று டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டனர். சற்று நேரத்தில் அபிமன்யுவும் வந்துவிட, அனைவருக்கும் மீரா உணவை பரிமாறினார்.

 

யாழினிக்கோ யாரின் முகத்தையும் பார்க்க முடியாத சங்கடமான மனநிலை. தான் உண்டு தன் வேலை உண்டு என்பது போல் கைக்கும் வாய்க்கும் மட்டும் வேலையை கொடுத்தவாறு தட்டை விட்டு தலையை நிமிர்த்தவே இல்லை.

 

திடீரென தன் காலின் மீது எதுவோ ஊறுவது போல் தோன்ற சட்டென்று குனிந்து கீழே பார்த்தாள். வேறு யார் அபிமன்யுவின் கால்கள் தான் யாழினியின் காலை நோண்டிக் கொண்டு இருந்தது.

 

யாழினிக்கு இது அதிர்ச்சி தான். இப்படி அனைவரின் முன்பும் அபிமன்யு நடந்து கொள்வான் என்று எதிர்பாராத யாழினி அபிமன்யுவை நிமிர்ந்து பார்க்க. அவனோ எதுவும் தெரியாத சிறு பிள்ளை போல் உணவை உண்டு கொண்டிருந்தான்.

 

யாழினி தன்னை பார்ப்பதை உணர்ந்தவன். அவளின் காதில் கிசுகிசுப்பாக, மாமானு கூப்பிடு என்றான்.

 

யாழினியும் அவனைப் போலவே அவனின் காதில் கிசுகிசுப்பாக, எல்லாரும் இருக்காங்க. எப்படி கூப்பிடுறது என்று முகம் சிவந்து போய் கேட்டாள்.

 

மீண்டும் அவன் விடாமல், யார் இருந்தா என்ன. நான் உன் புருஷன் தானே. யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க என்றான் மற்றவர்கள் இருப்பதையே மறந்து விட்டு.

 

இருவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வதை அனைவரும் ஆச்சரியமாக ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல் வென பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அதிலும் அதிக அதிர்ச்சி கிருஷ்ணமூர்த்திக்கு தான்‌. வயிற்றெரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

 

மற்றவர்களுக்காக அவள் கூற தயங்குகிறாள் என்றதும் அபிமன்யுவிற்கு மீண்டும் கோபம் துளிர்விட, இப்போ நீ சொல்லல எல்லார் முன்னாடியும் பனிஷ்மென்ட் கொடுப்பேன் என்றான் கராராக.

 

அவனின் வார்த்தையில் பதறியவள், மாமா.. என்று பதட்டமாக சற்று சத்தமாக கூறிவிட்டாள்.

 

உடனே மகேந்திரன், என்னம்மா எதுக்கு கூப்பிட்ட? என்றார்.

 

யாழினிக்கோ எப்படி இந்த சூழலை கையாள்வது என்று ஒன்றும் புரியவில்லை.

 

மாமா.. மாமா.. அது வந்து.. கார.. சட்னி சாப்பிடுங்க.. ரொம்ப.. நல்லா இருக்கு.. என்று கூற.

 

ஆரியன், கார சட்னியா.. மாம்! என்ன இது, யாழினிக்கு மட்டும் ஸ்பெஷலா கார சட்னி செஞ்சு கொடுத்திருக்கீங்க. எங்களுக்கு எங்க?” என்றான்.

 

டேய் இன்னைக்கு மெனுல கார சட்னியே இல்ல. சப்பாத்தியும், குருமாவும் தான் என்று ஆரணி கூற.

 

அப்போது தான் யாழினிக்கு உரைத்தது. நாம் ஏதேதோ உளறிக் கொண்டு இருக்கிறோம் என்று.

 

பிறகு என்று அனைவரையும் பார்த்து இளித்துவிட்டு, ஆ... ஆமா. நான் தான் ஏதோ தப்பா சொல்லிட்டேன் என்று சமாளித்துவிட்டு அபிமன்யுவின் புறம் திரும்ப. அவன் இன்னும் கோபமாக யாழினியை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

யாழினி கெஞ்சும் கண்களுடன் கிசுகிசுப்பாக அபிமன்யுவின் அருகில், ப்ளீஸ்.. அப்புறமா சொல்றேன் என்று கூற.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மொத்தமாக கரைந்து விட்டான். தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வழி தெரியாதவன். அவசர அவசரமாக உண்டு விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டான். அவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வரவே சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

 

வள்ளியம்மை பாட்டியும், மரகதம் பாட்டியும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டு மௌனமாக சிரித்துக் கொண்டனர்.

 

மற்றவர்களுக்கு அபிமன்யுவின் இந்த திடீர் மாற்றம் ஏன் என்று தெரியாவிட்டாலும், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

அபி அனைத்து விஷயங்களையும் கவனமாக செய்பவன். ஆனால், கடந்த சில தினங்களில் அவன் தவறவிட்ட ஒரே விஷயம்.

 

மீரா...

 

மீராவிற்காக என்று தான் அவன் அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கிறான். சில தினங்களாக அவனின் வேலை பளுவின் காரணமாகவும், யாழினியின் மீது செலுத்திய கவனத்தினாலும் மீராவை கவனிக்க தவறி விட்டான்.

 

ஆம்! அன்று யாழினியை அபிமன்யு அடித்ததில் இருந்து மீரா அவனிடம் பேசுவதையே தவிர்த்து விட்டார்.

 

இதை அபிமன்யு உணர்வது எப்போது...?

 

தன் வாழ்க்கை அவ்வளவு தான் முடிந்துவிட்டது என்ற விரக்தியில் சுற்றிக் கொண்டிருந்த யாழினியின் திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் ஆரணி, ஆரியனின் செயல் என்ன....?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5