அவனதிகாரம் - 47
அதிகாரம் – 47
மரகதம்
பாட்டிக்கு அபிமன்யுவின் செயலின் மூலம் தான் நினைத்தது பொய்க்கவில்லை என்று பெரும்
மகிழ்ச்சியாக இருந்தது. இனி எந்த சூழ்நிலையாக இருந்தாலும் யாழினியை அபி பார்த்துக்
கொள்வான் என்ற பெரும் நம்பிக்கையும் வந்தது.
வள்ளியம்மை
பாட்டி, “அக்கா நீ சொன்னது உண்மை தான்
போலருக்கு. அபி யாழினியை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணி இருக்கான். நாங்க தான் ஏதோ
விருப்பமில்லாம பண்ணிட்டோமோனு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தோம். ஏதோ கெட்டதுலையும்
ஒரு நல்லதுன்ற மாதிரி யாழினி மேல இவங்க பழி போட்டு அபிக்கு எவ்வளவு யாழினியை
பிடிச்சுருக்குன்னு நமக்கெல்லாம் தெரியப்படுத்திட்டாங்க” என்றார் மனம் நிறைந்தபடி.
மரகதம்
பாட்டியும் ஆனந்த கண்ணீருடன், “ஆமா வள்ளி, நான் கூட எங்க தப்பு
பண்ணிட்டோமோன்னு தான் ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன். ஆனா, அபியோட நடவடிக்கையில
எனக்கு அவன் யாழினியை விரும்புறானோன்ற சந்தேகம் இருந்துச்சு. இருந்தாலும், அவன்
வாயால சொல்லாம நம்ம எதையும் முடிவு பண்ண முடியாது இல்லையா. என்ன தான் யாழினியை
சமாதானம் படுத்தினாலும், எனக்குள்ளேயும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டு தான்
இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு அபி பேசுனதை கேட்ட அப்புறம் தான் மனநிறைவா இருக்கு.
அவன் யாழினியை விரும்பி தான் கல்யாணம் செஞ்சிருக்கான்”.
“சந்தோஷமான நேரத்துல எதுக்குக்கா
கண் கலங்குற. இனி என் புருஷன் என்ன வேலை பார்த்தாலும் அபி நம்ப மாட்டான். அவன்
யாழினி பக்கம் தான் நிப்பான்”.
“ஆமா வள்ளி, எனக்கும் அந்த
நம்பிக்கை இருக்கு. இனி யாழினிக்கு ஏதாவதுனா அதை அபியே பாத்துக்குவான்”.
வள்ளியம்மை
பாட்டியும் ஆமோதிப்பாக தலையசைத்தார்.
“சரி வள்ளி, நான் ஊருக்கு
கிளம்பலாம்னு இருக்கேன்”.
“என்னக்கா திடீர்னு?”.
“வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சி வள்ளி.
மாமா வேற ஒத்தையில கிடப்பார். அதான் யாழினிக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லைனு
தெரிஞ்சிருச்சே. இப்போ நான் முழு திருப்தியோட தான் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன்”.
“நீ சொல்றதும் சரி தான்க்கா. மாமா
வேற தனியா இருப்பாங்க. நீ கவலைப்படாம போயிட்டு வா. நாங்க யாழினியை பாத்துக்குறோம்”.
“சரி நேரம் ஆகுது வா போய்
படுக்கலாம். காலையில ஊருக்கு கிளம்பனும்”.
மீரா
அறையினுள் நுழைந்ததும் அமைதியாக ஏதோ சிந்தனையிலே உழன்று கொண்டிருந்த மகேந்திரனை
பார்த்து, “என்னங்க ஒரே யோசனையா இருக்கீங்க”.
“மனசு சரியில்லை மா. ஏன் இந்த விசாலாட்சி
இப்படி எல்லாம் செய்யுறானு ஒன்னும் புரியல”.
மீரா
அவரின் நிலையை உணர்ந்தவர், “சரி விடுங்க. அதான் எல்லாம் அபி
சரி பண்ணிட்டானே”.
“இருந்தாலும் என்னால நடந்ததை
கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல மீரா. பாவம் யாழினி, சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம அவ
மேல இப்படி ஒரு பழியை போட்டுட்டாங்களே. அதுவும் ஆரியனையும் அவளையும் சேர்த்து
வச்சு பேசுனது.. பாவம், அந்த பொண்ணு.. எவ்வளவு துடிச்சு போயிருப்பா. எவ்வளவு நாள்
ஆனாலும் இந்த காயம் அவ மனசுல இருந்து ஆறாது. இவங்கள பார்க்கும் போதெல்லாம்
அவளுக்கு இவங்க பண்ண இந்த விஷயம் தானே ஞாபகத்துக்கு வரும் மீரா”.
“யாழினி அப்படிப்பட்ட பொண்ணு
இல்லைங்க. ரொம்ப நல்லவ. இதெல்லாம் மனசுல வச்சுக்க மாட்டா. காலப்போக்குல எல்லாம்
மாறிடும்”.
“என் கூட பிறந்த தங்கச்சி இப்படி
ஒரு அசிங்கமான வேலையை செய்யுறான்னு நினைக்கும் போதே என்னால தாங்க முடியல மீரா.
இவளோட புத்தி ஏன் இப்படி எல்லாம் போகுது”.
விசாலாட்சி
சிறு வயது முதலே சிறு பொறாமை குணம் உள்ளவர் தான். ஆனாலும் உடன் பிறந்தவர்கள் மீது
பாசமும் அதிகம். தன் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கேட்கிறார்களோ
இல்லையோ.. தனக்கு வேண்டிய நகை, பணம் அனைத்தையும் இவரே கேட்டு வாங்கிக் கொண்டு தான்
திருமணம் செய்து சென்றார். இருந்தும் கூட, தன் தாய் வீட்டிற்கு வரும் போது எல்லாம்
இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பார்.
அவரின்
பெற்றோர்களும், சகோதரர்களும் எதையும் வேண்டாம் என்று தட்டிக் கழித்தது கிடையாது.
இன்று வரை அவர் ஆசைப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். ஆனால், இப்போது
அவர் ஆசைப்படுவது அப்படி ஒன்றும் பணமோ, நகையோ இல்லையே.. தன் மகனின் வாழ்க்கை..!
அது
அவனின் விருப்பம் இன்றி எப்படி அமைத்து தர முடியும் என்று எண்ணிய மகேந்திரன். அபி
உடன் திருமணம் நடக்க வேண்டும் என்றால் ஷைலஜாவை திருமணம் செய்து கொள்ள அபி
சம்மதிக்க வேண்டும் என்று கரராக கூறிவிட்டார்.
ஆனால்,
அபியோ மறுத்து விட்டான். ஆகையால், வேறு வழியின்றி மகேந்திரனும் வேண்டாம் என
கூறிவிட்டார். என்ன தான் தங்கை மீது பாசம் இருந்தாலும், மகனின் விருப்பம் இன்றி
செய்ய முடியாது அல்லவா.
ஆனால்,
அதற்கு பழி தீர்க்கும் விதமாக விசாலாட்சி யாழினியிடம் இப்படி நடந்து கொண்டது
அவரால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விசாலாட்சியையும், ஷைலஜாவையும் இந்த
விஷயத்தின் மூலம் முற்றிலுமாக வெறுத்து விட்டார்.
“சரி விடுங்க. அதையே
யோசிச்சுகிட்டு இருக்காதீங்க. நீங்க ஏன் இன்னைக்கு எதுவுமே பேசல”.
“என்ன பேச சொல்ற மீரா. இவங்க என்ன
நல்ல காரியமா செஞ்சிருக்காங்க. ஒரு அப்பாவி பொண்ணுக்கு எதிரா சதி பண்ணி
இருக்காங்க. இதில் நான் யாருக்கு பேச. என் தங்கச்சியாச்சேனு அவ பண்ற தப்புக்கு
என்னால துணை போக முடியாது. அவ இந்த அளவுக்கு போவானு நான் எதிர்பார்க்கல மீரா.
அதான் இவளுக்கு எல்லாம் அபி தான் சரினு அமைதியா இருந்துட்டேன்”.
மகேந்திரனின்
மனநிலையை உணர்ந்த மீரா, “சரிங்க கவலைப்படாதீங்க. சீக்கிரமே
அவங்க செஞ்ச தப்பை உணர்ந்து மனசு மாறிடுவாங்க பாருங்க” என்று சமாதான மொழிகளை கூறினார்.
தான்
வருத்தப்பட்டால் மீராவும் வருந்துவார் என்று எண்ணிய மகேந்திரன், “சரி விடு மிரா. அவளோட புத்தி அவ்வளவு
தான். இனியும் திருந்தலைனா நம்ம என்ன பண்ண முடியும். இந்த விஷயத்துல நம்ம பையனோட
வாழ்க்கை அவன் ஆசைப்பட்ட மாதிரி தான் அமைந்திருக்குன்றது நமக்கு தெரிய
வந்திடுச்சு. அதுவே ரொம்ப சந்தோஷமா இருக்கு”.
“ஆமாங்க. நான் கூட எதிர்பார்க்கவே
இல்லை. அவன் ஆசைப்பட்ட மாதிரி தான் அவன் வாழ்க்கை அமைந்து இருக்கு”.
“அவனுக்கு மட்டுமா?” என்றார் மீராவை உற்றுப் பார்த்து.
ஏனெனில்,
யாழினியை முதல் முறை பார்த்துவிட்டு வந்ததும், மகேந்திரனிடம் மீரா யாழினியின்
புராணம் தானே பாடிக் கொண்டிருந்தார்.
“அப்படியே என்னை போலவே இருக்கா
மகி. என்னை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருந்துச்சு. ரொம்ப நல்ல பொண்ணா வேற
இருக்கா”.
“அப்போ நான் தான் குட்டி மீராவை
பாக்காமல் மிஸ் பண்ணிட்டேனோ”.
“ஆமா மகி. நீங்களும்
வந்திருக்கலாம். எனக்கு அவளை பார்த்ததும் இன்னொன்னும் தோணுச்சு...” என்று இழுத்தார்.
“எதுவா இருந்தாலும் சொல்லு மீரா”.
“அது வந்து.. நம்ம அபிக்கும், அந்த
பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா எப்படி இருக்கும்” என்றார் ஆர்வமாக.
“நீ ஆசைப்பட்டுட்டல்ல, அப்போ
பண்ணிட வேண்டியது தான்”.
மீரா
உள் இறங்கிய குரலில், “அப்படியெல்லாம் பண்ண முடியாது
மகி. அவ சின்ன பொண்ணா இருக்கா. இன்னும் ஸ்கூலிங் கூட முடியல. அவளோட அக்காவுக்கு
நம்ம அபியை பேசுறாங்க”.
“ஓ... சரி, நீ என்ன சொன்ன. இதுக்கு
ஏன் இவ்வளவு பீல் பண்ற. அபிக்கு இல்லைனா என்ன ஆரியனுக்கு பேசலாம்”.
“பேசலாம்...” என்று இழுத்தவர், “எனக்கு என்னமோ அந்த பொண்ண பார்த்ததும் அபி
நியாபகம் தான் வந்துச்சு மகி”.
“என்ன மீரா சொல்ற, சின்ன
பொண்ணுன்னு சொல்ற. அப்புறம் அபி நியாபகம் வந்துச்சுன்னு சொல்ற. உனக்கு அந்த பொண்ண
ரொம்ப பிடிச்சிருக்குல. நமக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு தோணுதுல. அப்போ
அபிக்கு கட்டினா என்ன ஆரியனுக்கு கட்டினா என்ன. எல்லாம் நம்ம மருமக தானே”.
மீரா
அரை மனதுடன், “சரி பார்க்கலாம் மகி. நீங்க
வந்ததுக்கு அப்புறம் நேரில் பேசிக்கலாம்”.
அன்றைய
நாளின் நினைவில் இருவரும் சிரிக்க.
“சரி சரி.. எனக்கும் ஆசை தான்.
யாரு இல்லைனு சொன்னா. எப்படியோ நானும் என் பையனும் ஆசைப்பட்ட மாதிரி யாழினி நம்ம
வீட்டு மருமகளா வந்துட்டா. இப்போ அபிக்கும் இதில் முழு சம்மதம்னு தெரிஞ்சதும்
இன்னும் எனக்கு திருப்தியா இருக்கு மகி”.
இப்படி
அனைவரின் மனநிலையும் மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க. அபியின் அறையிலோ
யாழினி கைகளை கட்டி ஒற்றை கையின் ஆள்காட்டி விரலை வாயின் மீது வைத்தவாறு நின்று
கொண்டு இருந்தாள்.
அபிமன்யு
தன் சிரிப்பை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவாறு, “என்னடி இது?”.
யாழினி
வாயை திறக்காமல் தலையை ஆட்டி ஆட்டி ஏதோ சைகை செய்தாள்.
அபிமன்யு
சலிப்பாக, “ஒண்ணும் புரியல. வாயை திறந்து
சொல்லு”.
தன்
வாயின் மீது வைத்திருந்த விரலை எடுத்தவள், “நீங்க தான மாமா ‘ஷட்
அப்’னு கத்துனிங்க” என்றாள் மெதுவாக.
“ஷட் அப்னு சொன்னா இப்படி தான் கை கட்டி
வாய் மேல விரல் வைக்கணுமா”.
“எங்க ஸ்கூலில் எல்லாம் இப்படி
தான் பண்ணுவோம்”.
அபிமன்யு
மனதிற்குள், ‘இன்னும் ஸ்கூல் படிக்கிற மென்டாலிட்டியிலேயே இருக்காளே. இவளை எப்படி
தான் மாத்த போறோமோ’.
எவ்வளவு
முயன்றும் அவனால் யாழினியிடம் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.
“சரி இங்க வந்து உட்காரு” என்று அவளை அமரச் செய்தவன். “இப்போ சொல்லு, யார் என்ன வேலை
கொடுத்தாலும் செய்வியா”.
யாழினிக்கு
என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“அட்லீஸ்ட், என்கிட்டயாவது சொல்லி
இருக்கலாம்ல”.
“சொல்லனும்னு தான் நினைச்சேன்.
உங்கள பார்க்கவே முடியல”.
“நேரில் சொல்லலைனா என்ன. ஒரு போன்
பண்ணி இருக்கலாம்ல”.
“வேலை செய்யவே டைம் கரெக்டா
போயிடுச்சு. உங்க அத்தை வேற நான் சரியா வேலை பார்க்குறேனானு என்னை பார்த்துகிட்டே
இருப்பாங்க. அதான் ஹாலில் இருந்து லேண்ட்லைன் போன்ல பேச முடியல”.
அப்போது
தான் அபிமன்யுவிற்கு உரைத்தது யாழினிக்கு இன்னும் தான் செல்போன் வாங்கி தரவில்லை
என்று. செல்போன் இருந்தால் தேவை இல்லாமல் அடிக்கடி அவள் வீட்டுக்கு போன் செய்து
பேசுவாள். அவர்களின் நினைவு வந்து கொண்டே இருக்கும் என்று எண்ணியவன். இப்போதைக்கு
யாழினிக்கு போன் தேவை இல்லை என்று முடிவு செய்தான். ஆனால், பின்னாளில் இப்படி ஒரு
பிரச்சனை வரும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.
அபி, “சரி, அவங்க எல்லாம் உன் மேல பொய்யா பழி
சொல்றாங்க, நீ பாட்டுக்கு அழுதுகிட்டு நிக்குற. ஏன் அவங்க கிட்ட நான் எந்த தப்பும்
பண்ணலைனு உன்னால ஃபைட் பண்ண முடியாதா”.
“நான் எடுக்கலைனு சொன்னேன். அவங்க
நம்பல”.
“அதுக்காக மூளையில் போய்
உட்கார்ந்துகிட்டு அழுதா எல்லாம் தானா சரியா போயிடுமா. உன் மேல தப்பு இல்லைனு
எப்படி ப்ரூவ் பண்றதுனு பாக்காம உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க சின்ன புள்ள
மாதிரி”.
“நகையை காணும்னதும் எல்லாம் திட்ட
ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு அழுகை வந்துருச்சு”.
“அழுவதை தவிர உனக்கு வேற ஒன்னுமே
தெரியாதா”.
யாழினிக்கு
மீண்டும் கண்களில் கண்ணீர் வெளிவர ஆரம்பிக்க, “நான் தான் எந்த தப்பும் பண்ணலைனு தெரிஞ்சிடுச்சே அப்புறம் ஏன்
திட்டுறீங்க”.
“எப்பவுமே யாராவது நமக்கு வந்து
ஹெல்ப் பண்ணுவாங்க, சப்போர்ட் பண்ணுவாங்கனு எதிர்பார்க்க கூடாது. நமக்கு நாம தான்
ஃபைட் பண்ணனும். புரிஞ்சுதா.. ஒவ்வொரு தடவையும் நான் வந்து காப்பாத்துவேன்னு
நினைக்காத. உன் மேல தப்பே இல்லைனா எதிர்த்து தைரியமா பேசணும். கோழை மாதிரி அழுக
கூடாது”.
அவன்
கூறிய அனைத்தையும் ‘சரி’ என்னும் விதமாக தலையை தலையை ஆட்டி கேட்டவள், “அப்போ இனிமே வேற எதாவது பிரச்சனை வந்தா
எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டிங்களா” என்றாள் பரிதவிப்பாக.
‘இவ்வளவு நேரம் நான் பேசுன
எல்லாத்தையும் இப்படி ஒரு கேள்வியில் ஆஃப் பண்ணிட்டாளே’ என்று எண்ணியவன், “பண்றேன்...
உனக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன். இப்போ தூங்கலாமா”.
மறுநாள்
காலை விடிந்ததும் மரகதம் பாட்டி ஊருக்கு கிளம்புவதற்காக அனைத்து துணிமணிகளையும்
எடுத்து வைத்துவிட்டு தயாராக இருந்தார்.
யாழினி,
“என்ன பாட்டி எங்க கிளம்பிட்ட?
நம்ம ஊருக்கு போறோமா” என்றாள் ஆர்வமாக.
மரகதம்,
“நம்ம ஊருக்கு போகல யாழினி. நான்
தான் ஊருக்கு போக போறேன்” என்றார் சிரித்த முகமாக.
அவரின்
பதில் யாழினிக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்க, “என்ன பாட்டி சொல்ற. என் கூடவே இருப்பேன்னு சொன்ன. இப்போ
கிளம்புறேன்னு சொல்ற. அதெல்லாம் முடியாது. நீ எங்கேயும் போக வேண்டாம் இங்கேயே இரு” என்று படபடவென பேசினாள்.
“நான் உன்கிட்ட என்ன சொன்னேன்.
உன்னை உன் புருஷன் கூட சேர்த்து வச்சதுக்கு அப்புறமா நான் ஊருக்கு போறேன்னு
சொன்னேன்ல. அதான் இப்போ நீயும், உன் புருஷனும் ராசி ஆயிட்டீங்களே. இனிமே எனக்கு
இங்க என்ன வேலை”.
“அதெல்லாம் ஒன்னும் ஆகல. நேத்து
கூட நான் திட்டுவாங்குனேன் தெரியுமா”.
“திட்டு வாங்குற மாதிரி என்ன பண்ண?”.
“நான் எதுவுமே பண்ணல பாட்டி.
நேத்து இவங்க எல்லாம் பேசுனதுக்கு நான் அழுதேன்ல. அதுக்கு தான் ஏன் அழுத அவங்க
கிட்ட சண்டை போட வேண்டியது தானேனு சொல்லி திட்டிட்டார்”.
“மாப்ள சொல்றது சரி தான.
எதுக்கெடுத்தாலும் அழுதுகிட்டு, மூக்கை உறிஞ்சுகிட்டே உட்கார்ந்திருந்தா
ஆயிடுச்சா. உன் வாழ்க்கையை காப்பாத்திக்க நீ தான் போராடனும்”.
“ப்ளீஸ் பாட்டி போகாத. என்னால
தனியா இருக்க முடியாது. நீ இருக்கேன்னு தான் நானே இருக்கேன். இப்போ நீயும்
போயிட்டா, நான் மட்டும் தனியா இருக்கணுமா”.
“கிறுக்கி மாதிரி பேசாத யாழினி.
மாப்பிள்ளை உன் மேல எவ்வளவு பாசமா இருக்காருன்னு உனக்கு இன்னுமா புரியல. அவர்
உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணி இருக்காரு”.
“சும்மா சும்மா இதையே சொல்லாத
பாட்டி. விரும்பி இருந்தா ஐ லவ் யூலாம் சொல்லுவாங்கல்ல. என்கிட்ட ஒண்ணுமே
சொல்லலையே”.
யாழினியின்
தலையில் தட்டிய மரகதம் பாட்டி, “நல்லா சினிமா பார்த்து பார்த்து
கெட்டுப் போய் இருக்க. ஐ லவ் யூ சொன்னா தான் விரும்புறாங்கன்னு அர்த்தமா. நேத்து
அவர் பேசுனதை நீ கவனிக்கலையா. உன்னை பிடிச்சு போய் தான் கல்யாணம் பண்ணி
இருக்கேன்னு அவரே அவர் வாயால சொன்னார். இதுக்கு மேல வேற என்னடி வேணும் உனக்கு.
உன்கிட்ட வேற தனியா வந்து சொல்லுவாரா”.
“சரி பாட்டி. பிடிச்சு கல்யாணம்
பண்ணதாவே இருக்கட்டும். அதுக்காக மறுநாளே நீ பொட்டி கட்டிக்கிட்டு ஊருக்கு
போறேன்னு ரெடியா நிப்பியா. நானும் ஊருக்கு வரேன் பாட்டி. எனக்கு இங்க ஒரு மாதிரி
இருக்கு. ஊருக்கு வந்து கொஞ்ச நாள் உங்க கூட இருந்துட்டு வரேன்”.
“மாப்பிள்ளை கிட்ட உன்னை அன்னைக்கே
கேட்க சொன்னேன்ல கேட்டியா, இல்லையா”.
“ஐயோ.. மறந்தே போச்சு பாட்டி.
அதுக்குள்ள தான் இந்த பிரச்சனை எல்லாம் வந்துச்சா இதில் அதை மறந்துட்டேன். நான்
இப்போவே அவர் கிட்ட கேட்டுட்டு வரேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு
போகலாம் சரியா” என்று அறையை நோக்கி ஓடினாள்.
“சரி.. ஆனா, மாப்பிள்ளை
ஒத்துக்கலைனா அவர் கிட்ட சண்டை எதுவும் போடக்கூடாது”.
அதில்
பாட்டியை நோக்கி திரும்பியவள், “ஆமா சண்டை போட்டுட்டாலும்.
ஏற்கனவே, நான் திட்டு வாங்கிகிட்டு இருக்கேன். இதில், சண்டை வேற போடணுமா” என்று முனங்கினாள்.
“என்னடி முனங்குற?”.
“ஒன்னும் இல்ல பாட்டி. கேட்டுட்டு
வரேன்” என்றவள் ஓடி விட்டாள்.
அங்கே
அபிமன்யு அலுவலகத்திற்கு தயாராகி கொண்டு இருந்தான். கண்ணாடியில் தன்னை சரி
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பின்னால் கைகளை பிசைந்தபடி யாழினி நின்றிருக்கும்
பிம்பம் கண்ணாடியில் தெரிய, கண்ணாடியினோடு ‘என்ன’ என்பது போல் கேட்டான்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் யாழினி.
திரும்பி
நேருக்கு நேராக அவளை பார்த்தவன், “என்ன
சொல்லு”.
“பாட்டி ஊருக்கு போறாங்களாம்...” என்று இழுத்தாள்.
“சோ?” என்று கேள்வியாக பார்த்தான்.
“நானும் பாட்டி கூட ஊர்க்கு
போய்ட்டு வரவா” என்று பயந்தபடி தான் கேட்டாள்.
“நானும் வரேன்”.
அபிமன்யுவின்
மனதிற்குள் என்ன இருக்கிறது...?
கருத்துகள்
கருத்துரையிடுக