அவனதிகாரம் - 49

 

 

அதிகாரம் – 49

 

வந்திருந்த புதியவர்களின் மாப்பிள்ளை என்ற அழைப்பில் கடுப்பான அபிமன்யு தன் முகத்தை கடுகடுவென வைத்தவாறு, யார் நீங்க என்றான் வெடிக்கென.

 

வந்திருந்தவரோ, மாப்ள என்னை தெரியலையா? என்றார்.

 

அபிமன்யு, ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் மாப்பிள்ளைனு கூப்பிடுறதை நிறுத்திட்டு நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க.

 

வந்திருந்தவர் தான் யார் என்று தன்னை அறிமுகப்படுத்துவதற்குள் அவரை அழைத்து வந்த ஜீவா காரினை பார்க் செய்துவிட்டு அவசர அவசரமாக நடந்து இவர்களை நோக்கி வந்தான்.

 

ஜீவாவை பார்த்ததும் அபிமன்யுவிற்கு புரிந்து போனது யாழினியின் உறவினர் தான் இவர் என்று. ஜீவாவை என்ன என்பது போல் பார்த்தான் அபிமன்யு.

 

ஜீவா, வணக்கம் சார். இது என்னோட அப்பா. அதாவது யாழினியோட தாய் மாமா. உங்களுக்கும் உறவு முறைகளுக்கும் தான் ரொம்ப தூரம் ஆச்சே.. அதான் இவர் யாருன்னு உங்களுக்கு தெரியல என்றான் நக்கலான பார்வையோடு.

 

தன் இரு கைகளையும் கட்டியவாறு ஜீவா கூறுவதை அழுத்தமாக பார்த்த அபிமன்யு, தேவையில்லாத விஷயங்களை பத்தி யோசிக்க எனக்கு நேரமில்லை மிஸ்டர்.ஜீவா. இந்த உறவு முறைகளை பத்தி லெக்சர் எடுக்குற வேலை எல்லாம் இனி வேண்டாம். என் லைஃப்ல முக்கியம் இல்லாதவங்களுக்கு எல்லாம் நான் முக்கியத்துவம் கொடுக்குறது இல்லை என்றான் கத்திரித்தது போல்.

 

இது ஜீவா எதிர்பார்த்தது தானே.

 

அபிமன்யுவை பற்றி தெரிந்திருந்தும் தேவை இல்லாமல் வாயை கொடுத்து விட்டோம் என்று எண்ணி கொண்டு இருக்கும் போதே மீரா, வாங்க தம்பி. வாங்க என்று இருவரையும் அழைத்தார்.

 

மீரா, என்ன இங்கேயே நின்னுட்டீங்க. உள்ள வாங்க என்று இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்றார்.

 

இவர்களை பார்த்த வள்ளியம்மை பாட்டியும், வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க? உட்காருங்க என்று இருவரையும் அமர வைத்து காபி, பலகாரம் என உபசரித்தார்.

 

இது அனைத்தையும் பார்த்த அபிமன்யுவிற்கு தான் உள்ளுக்குள் கோவம் எகிரிக் கொண்டிருந்தது.

 

ஜீவா, பாட்டி யாழினி எங்க? ஆளையே காணோம் என்றான் கண்களால் தேடியபடி.

 

வள்ளியம்மை பாட்டி சிரித்தவர், அவ புருஷன் ரூம்குள்ள 7 மணிக்கு மேல தூங்க விட மாட்டேங்குறானாம். தினமும் ஆபீஸ் போற புள்ள இல்லையா, அதான் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது தூங்கலாம்னு பார்த்தா இவன் எழுப்பி விட்டுடறானாம். அதனால 7 மணிக்கு எழுந்திருச்சு வந்து காபி குடிச்சிட்டு ஆரணியோட ரூமுக்கு போய் தூங்கிட்டு இருக்கா என்றார் சிரித்துக் கொண்டே.

 

அபிமன்யு, என்ன தூங்கிட்டாளா? என்ன பாட்டி இதெல்லாம். நீங்க எல்லாம் தேவையில்லாம அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க. அப்படி என்ன சின்ன குழந்தையா அவ. டைமுக்கு எழுந்திருக்கனும்னு எத்தன தடவ அவ கிட்ட சொல்றது என்று ஜீவாவின் மேல் இருந்த கோபத்தையும் சேர்த்து பாட்டியிடம் எகிரினான்.

 

மீரா, அபி இப்போ என்ன ஆயிடுச்சுன்னு நீ இவ்வளவு கோவப்படுற. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தானே அவளுக்கு ரெஸ்ட். கொஞ்சம் நேரம் எக்ஸ்ட்ராவா தூங்கினா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. அவ சின்ன பொண்ணு தான். கல்யாணம் ஆயிட்டா உடனே உனக்கு பிடிச்ச மாதிரி தான் எல்லாமே செய்யணுமா. தூங்கட்டும் விடு என்றார் யாழினிக்கு சப்போர்ட்டாக.

 

அதற்கு மேல் ஜீவாவின் முன்பு அவனால் எதுவும் பேச முடியாமல் கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது ஷைலஜாவும், விசாலாட்சியும் அறையில் இருந்து வெளியே வர எத்தனித்தவர்கள். இவர்களை பார்த்து அறையின் வாயிலிலேயே நின்று விட்டனர்.

 

ஷைலஜா விசாலாட்சியிடம், மாம் யார் இந்த பையன். பார்க்க நல்லா ஹேண்ட்ஸமா இருக்கான். எவ்வளவு ட்ரை பண்ணாலும் என்னால ஆரியனை கரெக்ட் பண்ணவே முடியல மாம். பேசாம இவன் யாருனு விசாரிங்க, இவன்கிட்டயாவது ட்ரை பண்ணி பார்ப்போம் என்றாள் ஜீவாவை சைட் அடித்தபடி.

 

விசாலாட்சி ஷைலஜாவை அதிர்ந்த பார்வை பார்த்தவர், பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு ஷைலு. யாரும் உன்னை கட்டிக்க மாட்டேங்கிறாங்களேன்னு கிறுக்காயிட்டியா. இவன் யாருன்னு உனக்கு தெரியல. யாழினியோட அக்கா புருஷன் என்றார் முறைத்தபடி சிடுசிடுப்பாக.

 

ஷைலஜாவிற்கு ஜீவா யார் என்று அறியாமல் அவசரப்பட்டு வாயை விட்டது பெருத்த அவமானம் ஆகிப்போனது.

 

சாரி மாம் என்றாள்.

 

சரி சரி உள்ள வந்து தொலை. இப்ப நாம போனா தேவையில்லாம இவனுங்களுக்கெல்லாம் மரியாதை கொடுக்க வேண்டியதாயிருக்கும். ஏற்கனவே நம்ம நிலைமை ஊரே பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு. இதுல இவங்களுக்கும் தெரிய வேண்டாம். அவங்க போனதுக்கு அப்புறம் நம்ம வெளியில போய்க்கலாம் என்று இருவரும் மீண்டும் அறையினுள் சென்று விட்டனர்.

 

அப்போது தான் தூக்க கலக்கத்திலிருந்து எழுந்து வந்த யாழினி, பாட்டி காபி கொடுங்க என்று கூறியபடியே ஹாலிற்கு தன் கண்களை கசக்கியபடி வந்தாள்.

 

அவளை அபிமன்யு நெருப்பை கக்கும் விழிகளால் முறைத்து பார்க்க. தூக்க கலக்கத்தில் அதையெல்லாம் கண்டு கொள்ளாத யாழினி, கண்ணை திறந்து பார்க்கும் பொழுது தன் எதிரே ஜீவா அமர்ந்திருப்பதை கண்டு, மாமா... என்று கத்தியபடி ஜீவாவின் அருகில் சென்றாள்.

 

அவன் அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவள், எப்படி இருக்கீங்க மாமா? என்று தன் தாய் மாமாவை விசாரித்துவிட்டு ஜீவா மாமா நீங்க வரிங்கன்னு சொல்லவே இல்ல. அக்காவையும் கூப்பிட்டு வந்து இருக்கலாம்ல. எப்போ வந்தீங்க? என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள்.

 

ஜீவா, இரு இரு.. ஒவ்வொரு கேள்வியா பொறுமையா கேளு. நான் பதில் சொல்றேன். இப்படி லைனா கேட்டா நான் எதுக்கு பதில் சொல்றது. நாங்க இப்போ தான் வந்தோம். நீ தூங்கிட்டு இருக்கன்னு பாட்டி சொன்னாங்க.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் ஏழு மணிக்கே எழுந்திருச்சிட்டேன் என்றாள் சமாளிப்பாக.

 

சொன்னாங்க சொன்னாங்க.. எழுந்திருச்சு காபி குடிச்சிட்டு திரும்ப போய் தூங்கினதையும் சொன்னாங்க என்றான் கிண்டலாக.

 

பாட்டி.. நான் தான் ஏழு மணிக்கு எழுந்திருச்சு வந்து காபி எல்லாம் குடிச்சிட்டேன்ல. அப்புறம் ஏன் தூங்குறன்னு சொல்லி இருக்கீங்க. பாருங்க, எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பாங்க என்றாள் கோபமாக கேட்பது போல்.

 

வள்ளியம்மை, நீ பண்ணது தான நான் சொன்னேன். அதுக்கு ஏன் இப்படி கோபப்படுற என்றார் சிரித்துக் கொண்டு. 

 

யாழினி, நல்ல வேளை நீங்க சொன்னது உங்க பேரன் காதில் விழல, அவருக்கு மட்டும் கேட்டு இருந்தா அவ்வளவு தான் என்று கூறிக்கொண்டு திரும்பும் போது தான் பக்கவாட்டில் அமர்ந்திருந்த அபிமன்யு யாழினியின் கண்ணில் பட, யாழினிக்கு நன்றாக மாட்டிக் கொண்டோம் என்ற அதிர்ச்சியில் மூச்சே நின்று விட்டது.

 

அனைவரும் அபிமன்யுவை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொள்ள. அது மேலும் அவனுக்கு எரிச்சலூட்டியது. அங்கிருந்து எழுந்து செல்ல நினைத்தவன் எழுந்திரிக்க முற்பட, மாப்பிள்ளை ஒரு நிமிஷம் என்றார் மாணிக்கம்.

 

என்ன என்பது போல் திரும்பி அவரை பார்த்தவனிடம் மாணிக்கம், தம்பி என் பொண்ணுக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டோம். அங்க பக்கத்து ஊரு தான் மாப்பிள்ளை. படிச்சிட்டு அவங்க நிலத்திலேயே விவசாயம் பண்றார். வசதி, வாய்ப்பு எல்லாம் நமக்கு தகுந்த மாதிரி இருந்துச்சு. மாப்பிள்ளையும் நல்ல குணமானவரா இருந்தார். அதனால பேசி முடிச்சிட்டோம் பா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட அவசியம் வரணும் என்றவர் ஜீவாவிடம், அம்மா எங்க இன்னும் காணோம்?.

 

அப்போது சரியாக வீட்டினுள் வந்த சுமதி, இதோ வந்துட்டேங்க என்றபடி நேராக வந்து யாழினியை அணைத்துக் கொண்டார், எப்படி இருக்க யாழினி? உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆயிடுச்சு. நல்லா இருக்கியா? என்றவர்.

 

இந்தா உனக்காக தான் பூ வாங்க போயிருந்தேன் என்று அவளின் கையில் பூவை கொடுத்தார்.

 

யாழினி, நீங்க எப்படி இருக்கீங்க அத்தை? என்று விசாரித்தாள்.

 

பிறகு, அனைவருக்குமான பொது நலன் விசாரிப்புகள் முடிந்ததும் மாணிக்கம் மீராவை பார்த்து, அம்மாடி மாப்பிள்ளை எங்க?.

 

மீரா, கொஞ்சம் வெளியில் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.

 

பிறகு, மகேந்திரன் வந்ததும் தாம்பூல தட்டில் பழங்களை வைத்து பத்திரிக்கையை முறைப்படி மீராவிடமும், மகேந்திரனிடமும் கொடுத்தனர் மாணிக்கம் தம்பதியினர்.

 

சுமதி, அவசியம் எல்லாரும் குடும்பத்தோட வரணும் அண்ணா. கல்யாணம் முடிஞ்ச கையோடு யாழினியை இங்க அழைச்சிட்டு வந்தது, அதோட ஊர் பக்கமே அவ வரல. அதனால கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு. நாங்க இப்போவே யாழினியை எங்களோட அழைச்சிட்டு போகட்டுமா என்று கேட்டார் மகேந்திரனிடம்.

 

மகேந்திரன் அபிமன்யுவை பார்க்க.

 

அபிமன்யு, உடனே எல்லாம் எங்களால கிளம்ப முடியாது. கொஞ்சம் ஒர்க் இருக்கு. எல்லாம் முடிச்சிட்டு தான் வர முடியும் என்றான் வெடுக்கென்று.

 

அதற்கு ஜீவா, உங்களை யாரும் கூப்பிடல சார். நீங்க கல்யாணத்தன்னைக்கு வந்தா கூட போதும். நாங்க இப்போ யாழினியை மட்டும் எங்களோட அழைச்சிட்டு போறோம்.

 

ஒர்க் இருக்குன்னு சொன்னது அவளுக்கும் சேர்த்து தான். அவளும் என் கூட டெய்லி ஆஃபீஸ்க்கு வந்து ட்ரெய்னிங் எடுத்துகிட்டு இருக்கா. சோ, நினைச்ச நேரத்துல அப்படியே கிளம்பி வந்துட முடியாது.

 

யாழினி மனதிற்குள் அடப்பாவி டெய்லி ஆஃபீஸ்க்கு போய் கேம் விளையாடிட்டு இருக்கேன். அது தான் உங்க பிசினஸ்ல ட்ரைனிங்கா என்று பாவமாக அபிமன்யுவை பார்த்தாள்.

 

மாணிக்கம், அதுக்கு இல்ல தம்பி. என் பொண்ணும், யாழினியும் சின்ன வயசுல இருந்து ரொம்ப நெருக்கமா பழகுவாங்க. அதான் அவ கல்யாணத்துக்கு இவ பத்து நாள் முன்னாடியே வரணும்னு என் பொண்ணு ஆசைப்படுறா. நீங்க அனுப்பி வச்சா நல்லா இருக்கும்.

 

அதற்கு அபிமன்யு எதுவோ சொல்ல வாயை திறக்கும் முன்பு மகேந்திரன், கண்டிப்பா.. நீங்க இவ்வளவு எல்லாம் எக்ஸ்பிளைன் பண்ணனும்னு அவசியமே இல்ல. என்னைக்கா இருந்தாலும் யாழினி உங்க வீட்டு பொண்ணு தான். நீங்க தாராளமா அழைச்சிட்டு போங்க என்றார் யாழினியை பார்த்தபடி.

 

யாழினிக்கோ மகேந்திரனின் வார்த்தையில் பெரும் மகிழ்ச்சி. சந்தோஷத்தில் மகேந்திரனின் கையை பிடித்துக் கொண்டு, தேங்க்ஸ் மாமா என்றாள்.

 

இதைப் பார்த்த அபிமன்யுவிற்கு கோபம் தலைக்கேற உடனே அறைக்கு சென்று விட்டான்.

 

சுமதி, அதான் மாமாவே போக சொல்லிட்டாங்கல்ல. போய் துணிமணி எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு கிளம்பு.

 

இதோ வந்துட்டேன் அத்தை என்றபடி அறைக்கு ஓடிவிட்டாள்.

 

யாழினி அவளின் வீட்டிற்கு செல்ல எவ்வளவு ஏக்கமாக இருக்கிறாள் என்பது அவளின் செயலிலேயே அனைவருக்கும் புரிந்தது.

 

மீரா, அதுக்குள்ள என்ன அவசரம் இருந்து சாப்பிட்டு போகலாமே.

 

மாணிக்கம், சாப்பிட்டுட்டு தான் மா கிளம்ப போறோம்.

 

வள்ளியம்மை, வாங்க.. எல்லாம் வந்து உட்காருங்க சாப்பிடலாம் என்று மூவருக்கும் உணவு பரிமாறினர்.

 

அறையனுள் யாழினி நுழையும் பொழுதே தன் இரு கைகளையும் கட்டியவாறு கோப மூச்சுகளுடன் யாழினியை முறைத்தபடி நின்றிருந்தான் அபிமன்யு.

 

ஊருக்கு செல்ல போகும் ஆவலில் ஓடி வந்த யாழினி, அபிமன்யுவின் பார்வையில் சடன் பிரேக் போட்டது போல் நின்றாள். அபிமன்யு கோபமாக யாழினியின் அருகில் வந்தவன்.

 

அவங்க கிளம்ப சொன்னா உடனே கிளம்பிடுவியா.. நான் சொன்னா தான் போவேன்னு சொல்ல மாட்டியா என்றான் கோபமாக.

 

யாழினி திருதிருவென விழித்தபடி நின்றாள்.

 

பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி பார்க்காத டி. என்கிட்ட கேட்காம நீ பாட்டுக்கு டிரஸ் எடுத்து வைக்க வந்துட்ட.

 

இல்ல.. இல்லையே.. உங்ககிட்ட கேட்க தான் நான் இப்போ ரூமுக்கு வந்தேன் என்றாள் சமாளிப்பாக.

 

தன் கைகளை பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி அவளை ஒரு பார்வை பார்த்தவன், ஓ.. அப்படியா.. சரி.. அப்போ போக வேண்டாம் என்றான் சட்டென்று.

 

ஸ்வேதாவும் நானும் ரொம்ப க்ளோஸ். அவளோட மேரேஜ்க்கு போகாம இருந்தா நல்லா இருக்காது. நீங்களும் என்னை இந்த வீக் தான ஊருக்கு கூப்பிட்டு போறதா சொன்னீங்க. இந்த ஒரு தடவை மட்டும் சரினு சொல்லுங்க என்று விட்டு அபிமன்யுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சரி போகலாம். கிளம்பு.

 

அபிமன்யுவின் வாயில் இருந்து போகலாம் என்ற வார்த்தை வந்தவுடன் குதூகலமாக உடைமைகளை எல்லாம் எடுத்து வைத்தவள் கீழ் இறங்கி சென்றாள்.

 

மாணிக்கம், என்னம்மா எல்லாம் எடுத்துக்கிட்டியா கிளம்பலாமா.

 

ம்ம்.. கிளம்பலாம் மாமா.

 

யாழினியின் பின்னே கையில் தன் லக்கேஜுடன் படிகளில் இறங்கி வந்த அபிமன்யுவை பார்த்த மீரா, என்ன அபி, ஏதாவது பிசினஸ் ட்ரிப் போறியா?.

 

இல்ல மாம், நம்ம எல்லாரும் யாழினியோட ஊருக்கு போக போறோம்.

 

வள்ளியம்மை, என்ன சொல்ற அபி நிஜமாவா? என்றார் அதிர்ச்சியாக.

 

ஆமாம் பாட்டி. மேரேஜ்க்கு வேற இன்வைட் பண்ணி இருக்காங்கல்ல. போயிட்டு வந்துடலாம்.

 

எவ்வளவு முயன்றும் வெளியே சாதாரணமாக அவனால் இருக்க முடியவில்லை.

 

எங்கே இனி யாழினியை அனுப்பவே கூடாது என்று நினைத்தானோ.. யாரின் முகத்தில் இனி தான் விழிக்கவே கூடாது என்று நினைத்தானோ.. அங்கேயே இப்படி செல்லும்படி ஆகிவிட்டது.

 

அதுவும் யாழினியால்..

 

நினைக்க நினைக்க கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பெரும்பாடுபட்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன். யாழினியை அங்கே தனியே அனுப்பினாள் சரி வராது என்று தோன்ற தானும் உடன் கிளம்பி விட்டான்.

 

மேலும், அங்கே செல்ல சற்றும் விருப்பம் இல்லாததால் வீட்டினர் அனைவரும் உடன் வந்தால் ஓரளவு அங்கே தாக்கு பிடிக்கலாம் என்று தோன்ற. அனைவரையும் அழைத்துக் கொண்டு புறப்படுவது என்று முடிவெடுத்து விட்டான்.

 

மேலும், யாழினி கடந்த ஒரு வாரத்தில் சற்று சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாலும், ஆரியனை பார்க்கும் போது மட்டும் சற்று சங்கடமாக உணர்வதை உணர்ந்தவன். அவளின் ஊருக்கு சென்று வந்தால் சற்று மனம் மாறும் என்பதால் மட்டுமே அழைத்துச் செல்ல சம்மதித்தான்.

 

ஆரியன் தன் அண்ணன் அங்கே தனியே செல்ல விரும்பாததை உணர்ந்தவன். எப்படியாவது யாழினியுடன் அவனை தனியே அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தோடு அனைவருக்கும் முன்பாக முந்திக்கொண்டு, அண்ணா இதெல்லாம் சரிவராது. எனக்கு காலேஜ்ல ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு. ஆரணிக்கும் அப்ளிகேஷன் போடுற வேலை இருக்கு. சோ, எங்களால வர முடியாது. நீங்களும் யாழினியும் மட்டும் போயிட்டு வாங்க.

 

அபிமன்யு, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். போனா எல்லாரும் ஒன்னா போகலாம். இல்ல யாருமே போக வேண்டாம்.

 

யாழினிக்கு பக்கென்றது.

 

மீரா, ஆரி அதான் அபி எல்லாரும் போகணும்னு ஆசைப்படுறான்ல. நம்மளும் அங்க போய் ரொம்ப நாள் ஆகுது‌. ஒன் வீக் தான எல்லாம் வந்து பாத்துக்கலாம்.

 

ஒரு வழியாக அனைவரும் தயாராகி அரசனூரை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர். வெகு நாட்கள் கழித்து தங்கள் வீட்டிற்கு செல்லும் மகிழ்ச்சியும், பூரிப்பும் யாழினியின் முகத்திலேயே தெரிந்தது.

 

ஊருக்கு செல்லும் மகிழ்ச்சியில் யாழினி அபிமன்யுவை பற்றியே மறந்து விட்டாள். ஜீவாவிடம் சிரித்து பேசிக்கொண்டே அவன் காரில் ஏற சென்றவளை யாரும் அறியாத வண்ணம் அவளின் கைகளை பிடித்து அழைத்து வந்து இல்லை இல்லை.. இழுத்து வந்து தன் காரில் ஏற்றினான் அபிமன்யு.

 

இதை கவனித்த ஆரியன் ஆரணியிடம், என்ன இது. அண்ணன் வர வர சின்ன புள்ளத்தனமா நடந்துக்குது என்றான் சிரித்தபடி.

 

ஆரணி, ஆமாண்ணா. இது நம்ம அண்ணன் தானானு எனக்கே டவுட்டா இருக்கு என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

 

யாழினி அபிமன்யுவின் காரில் ஏறாமல் ஜீவாவின் காரில் ஏற சென்றதற்கு ஆரியனும் ஒரு காரணம். ஏனெனில், ஆரியன் அபிமன்யுவின் காரில் வருவதால் யாழினி ஜீவாவின் காரில் ஏறி கொள்ளலாம் என சென்றாள். இது தெரிந்தோ, தெரியாமலோ அபிமன்யு தன் காரில் அவளை ஏற்றி விட்டான்.

 

வழி நெடுக்க எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி வந்த யாழினியிடம் ஆரணியும், ஆரியனும் எது எதுவோ பேச, யாழினி பதில் எதுவும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.

 

ஆரியன், என்ன ஆச்சு யாழினி? நீ இப்போலாம் என்கிட்ட சரியா பேசவே மாட்டேங்குற.

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் எப்பவும் போல தான் இருக்கேன்.

 

நான் என்ன ஸ்கூல் படிக்கிற பையனா. நீ என்ன சொன்னாலும் நம்புறதுக்கு. முதலெல்லாம் நம்ம மூணு பேரும் சேர்ந்து எப்படி கதை பேசுவோம். இப்போ எல்லாம் நீ என்கிட்ட சரியா பேசவே மாட்டேங்குற. கரெக்டா ஷைலஜா அந்த பிராப்ளம் கிரியேட் பண்ணதுக்கு அப்புறமா நீ என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சுட்ட .

 

ஆரியன் சரியாக கணித்ததில் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் காத்தாள் யாழினி.

 

ஆரியன், சொல்லு யாழினி. என்ன உனக்கு பிரச்சனை. ஏன் இப்படி என்கிட்ட பேசாம இருக்க.

 

அபிமன்யு இவர்களின் உரையாடலுக்குள் எதுவும் தலையிடாமல் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். இதை அவர்களே பேசி சரி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

 

யாழினிக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. மேலும், அபிமன்யுவின் முன்பு இதைப் பற்றி மேலும் பேசவும் விருப்பமில்லை. ஓரக்கண்ணால் அபிமன்யுவை பார்த்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

ஆரணி ஆரியனிடம், அண்ணா அவளுக்கு உன்னை பார்க்கும் போதெல்லாம் அந்த வீடியோ தான் ஞாபகம் வருது போலருக்கு என்று கிண்டல் செய்து சிரிக்க.

 

ஆரியன், சொல்ல போனா நான் தான் உங்களை எல்லாம் ஃபேஸ் பண்ண முடியாம வெட்கப்படனும். ஏன்னா, அந்த வீடியோல மானம் போனது எனக்கு. ஆனா, நீ ஏன் என்னை பார்த்து இப்படி ஃபீல் பண்ற. நடந்த விஷயத்துக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யாழினி. நீ எப்பயும் போல நார்மலா என்கிட்ட பேசு. நீ இப்படி இருக்கும் போது தான் எனக்கு நடந்த விஷயம் திரும்ப திரும்ப ஞாபகம் வந்துகிட்டே இருக்கு.

 

யாழினி, அது..  எனக்கு..  எப்படி சொல்றதுன்னு தெரியல. ஒரு மாதிரி உன்கிட்ட பேச சங்கடமா இருந்துச்சு அதான் பேசல. என் மேல இருக்க கோவத்துல உன்னை இப்படி வீடியோ எடுத்து காட்டிட்டாங்க. எல்லாம் என்னால தான. அதான்... என்று இழுத்தாள்.

 

ஆரியன், இதில் உன் மேல எந்த தப்பும் இல்ல. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. இனிமே பழையபடி என்கிட்ட பேசணும் என்றான் கோபம் போல்.

 

யாழினிக்கும் இதற்கு மேல் அந்த விஷயத்தை பற்றிய பேச்சை வளர்க்க விருப்பம் இல்லாததால் சரி என்று ஒத்துக் கொண்டாள். பிறகு, மூவரும் சேர்ந்து கதைத்துக் கொண்டே வந்தனர்.

 

ஊரில் யாழினிக்காக என்ன காத்திருக்கிறது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5