அவனதிகாரம் - 51
அதிகாரம் – 51
யாழினி
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில், “நிஜமாவாக்கா?” என்றாள் ஆவலாக.
வெண்ணிலா,
“ஆமா டி. உனக்கு தெரியாதா?” என்றாள் யோசனையாக.
“நீ இப்போ தானக்கா சொல்ற. உனக்கு
என்கிட்ட முன்னாடியே சொல்லணும்னு தோணவே இல்லல்ல” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.
“ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்லை
யாழ். என்ன பேசுற நீ. உன் கிட்ட சொல்லக்கூடாதுன்னு நான் நினைப்பேனா. நான் அட்மிஷன்
போட்ட அன்னைக்கே பாட்டிக்கு போன் பண்ணி சொன்னேனே. பாட்டி அப்போ உங்க வீட்டில் தானே
இருந்தாங்க. உன்கிட்ட தான் போன் இல்லல்ல, அதனால உன்கிட்ட தனியா சொல்ல முடியல.
அவங்க உன்கிட்ட சொல்லி இருப்பாங்கன்னு நெனச்சேன் டி. கோச்சுக்காத” என்று யாழினியை சமாதானப்படுத்தினாள்.
“போக்கா. நீ என்கிட்ட பேசாத” என்று மீண்டும் முகத்தை திருப்பிக்
கொள்ள.
ஸ்வேதா,
“ஏய்.. ரொம்ப பண்ணாத டி. நீ
மட்டும் என்னவாம். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எங்க எல்லாரையும் மறந்துட்டல்ல.
இத்தனை நாளில் எங்களுக்கு ஒரு போனாவது பண்ணியா. எங்க மேல மட்டும் கோவப்படுற”.
“என்கிட்ட தான் போனே இல்லையே, நான்
எப்படி பேசுறது”.
“போன் இல்லைனா என்ன. உன்
வீட்டுக்காரர் எவ்வளவு பெரிய பிசினஸ் மேன். அவர்கிட்ட கேட்டா வாங்கி கொடுக்க
போறார். உங்க வீட்டுல லேண்ட்லைன் ஃபோன் கூடவா இல்ல. அதில் ஏதாவது பண்ணி
இருக்கலாம்ல”.
ஸ்வேதாவின்
கேள்விக்கு யாழினியிடம் பதில் இல்லை. மௌனமாக அமர்ந்திருந்தாள். பிறகு, வேறு என்ன
கூற முடியும். இத்தனை நாட்களில் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலே
தவிர, அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள நினைக்கவே இல்லை.
எப்படி
பேச முடியும்..
என்ன
பேச முடியும்..
அவர்கள்
இவளை பற்றி ஏதேனும் விசாரித்தால் என்ன கூற முடியும்.
சாதாரண
தம்பதியினர் போன்ற சுமூகமான வாழ்க்கை இன்னும் இவர்களுக்குள் தொடங்கவில்லையே.
இதில்
எதைப் பற்றியாவது அவர்கள் விசாரித்தால் தான் என்ன கூறுவது என்று எண்ணியே பேசாமல்
விட்டுவிட்டாள். அதை அனைவரின் முன்பும் கூற விருப்பமில்லாமல் அமைதி காத்தாள்.
“சரி விடு ஸ்வேதா. யாழினி நான்
அன்னைக்கே பாட்டிகிட்ட உன்கிட்ட சொல்ல சொன்னேன். பாட்டி மறந்துட்டாங்க போலருக்கு.
சரி விடு, அதான் இப்போ தெரிஞ்சிடுச்சுல்ல”.
யாழினி
தன் மனதில் இருப்பதை மறைத்தபடி, “சரிக்கா” என்றாள்.
பிறகு,
படிப்பை பற்றிய பேச்சு வார்த்தை சற்று நேரம் போய்க் கொண்டிருந்தது.
ஸ்வேதா
ஆரணியிடம், “ஆரணி நீ என்ன படிக்கப் போற?”.
“நான் இன்ஜினியரிங் ஜாயின்
பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்”.
“ஓ! சூப்பர் பா. அப்படியே உன்
அண்ணியாருக்கும் ஏதாவது ஒரு காலேஜ்ல சீட்டு வாங்கி கொடுத்துடு”.
ஸ்வேதாவின்
வார்த்தையில் யாழினிக்கு இடி விழுந்தது போல் இருக்க. பதட்டமாக, “ஸ்வேதா.. அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என்றாள் அவசரமாக.
ஸ்வேதா,
“ஏன்? என்ன தேவை இல்ல? வெண்ணிலா
அண்ணி படிக்கிறாங்க. ஆரணி காலேஜ் ஜாயின் பண்ண போறா. நானும் கல்யாணத்துக்கு
அப்புறம் காலேஜ் ஜாயின் பண்ண போறேன்”.
யாழினி
ஆச்சரியமாக, “நிஜமாவா சொல்ற!”.
“ஆமா நிஜமா தான். மாப்பிள்ளை
வீட்டில் மேல் படிப்பு படிக்கணும்னா நாங்க படிக்க வைக்கிறோம்ன்னு சொன்னாங்க.
எனக்கும் வெண்ணிலா அண்ணி படிக்குறது பார்த்து ஆசை வந்துடுச்சு. நாங்க எல்லாருமே
படிக்க போறோம். அதனால, நீயும் நல்ல காலேஜா பார்த்து சேர்ந்துடு”.
யாழினி
பதட்டமாக, “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல.
நீங்க எல்லாம் படிச்சா, நானும் படிக்கணுமா. நானெல்லாம் சேர மாட்டேன்”.
அப்போது,
அபிமன்யு பிசினஸ் விஷயமாக போனில் யாருடனோ பேசிக் கொண்டே அந்த பக்கம் வர.
ஸ்வேதா
சத்தமாக அபிமன்யுவை பார்த்து, “அண்ணா.. ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று அழைத்தாள்.
அபிமன்யு
போனில், “கால் யூ பேக்” என்று கூறி கட் செய்து விட்டு இவர்களை
நோக்கி வந்தான்.
“லூசு.. லூசு” என்று யாழினி ஸ்வேதவை திட்டினாள்.
அதற்குள்
அபிமன்யு இவர்களின் அருகில் வந்துவிட.
ஸ்வேதா,
“அண்ணா நாங்க எல்லாருமே காலேஜ்
ஜாயின் பண்ண போறோம். யாழினிக்கும் ஒரு நல்ல காலேஜ் பார்த்து சீட் வாங்குங்க”.
“ரிசல்ட் வரட்டும். இன்னும் 10
டேஸ் தான இருக்கு. மேடம் எவ்வளவு மார்க் வாங்குறாங்கன்னு பார்த்துட்டு, எந்த
காலேஜ்ல ஜாயின் பண்றதுன்னு டிசைட் பண்ணுவோம்” என்றான் யாழினியைப் பார்த்து சிரித்தபடி.
யாழினிக்கோ
திக்கென்றது.
“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல.
நான் காலேஜ் எல்லாம் போக மாட்டேன்”
என்றாள்.
அபிமன்யு,
“ஏன்?”.
“எனக்கு பிடிக்கல”.
“ஃபஸ்ட் ரிசல்ட் வரட்டும். இது பத்தி
அப்புறமா பேசிக்கலாம்”.
“ரிசல்ட் எப்போ வந்தா என்ன. நான்
போக மாட்டேன்... நான் போக மாட்டேன்”.
இவர்களின்
பேச்சு வார்த்தை எங்கே சண்டையில் முடிந்து விடுமோ என்று எண்ணிய ஆரணி, “அண்ணா அவளுக்கு பிடிக்கலைனா விட்டுடுங்க.
போர்ஸ் பண்ணாதீங்க”.
“என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்
ஆரணி”.
அவ்வளவு
தான் ஆரணி இனிமேல் பேசி வாங்கி கட்டிக் கொள்ள முடியாது என்று ‘கப்சிப்’ ஆகிவிட்டாள்.
பிறகு,
யாழினியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
இது
அனைத்தையும் கவனித்த ஜீவா யாழினியிடம், “ஏன்
யாழினி உனக்கு மேல படிக்கிறதுல விருப்பம் இல்லையா”.
யாழினி
அழுதுவிடும் குரலில், “ஐயோ மாமா, 12 படிக்க நான் பட்ட
பாடு எனக்கு தான் தெரியும். எப்போடா முடியும் நிம்மதியா இருக்கலாம்னு இருந்தேன்.
இப்போ திடீர்னு காலேஜ் அது இதுனா என்னாலெல்லாம் மேல படிக்க முடியாது. எனக்கு
விருப்பமில்ல”.
ஜீவா, “சரி விருப்பம் இல்லைனா விட்டுடு” என்று அந்த பேச்சை அத்துடன் முடித்து
விட்டான்.
தான்
விளையாட்டாக பேசியது யாழினியைக் காயப்படுத்தியதை எண்ணி வருந்திய ஸ்வேதா, “சாரி டி. நான் சும்மா தான் அண்ணாவை
கூப்பிட்டு சொன்னேன். உன்னை கிண்டல் பண்ணலாம்னு நினைச்சேன். அவங்க இப்படி சீரியஸா
பேசுவாங்கன்னு நினைக்கல”.
அபிமன்யுவின்
குணத்தை பற்றி ஸ்வேதாவிற்கு தெரியாது என்று எண்ணிய யாழினி, “பரவாயில்ல விடுடி. எனக்கு இதெல்லாம் பழகி
போச்சு” என்று சாதாரணமாக கூறினாள்.
பிறகு,
அனைவரும் மற்ற கதைகளை பேசி சிரித்துக் கொண்டும், கிண்டல் அடித்துக் கொண்டும்
அரட்டை அடித்தனர். யாழினிக்கு தங்கள் வீட்டில் பத்து நாட்கள் சென்றதே தெரியவில்லை.
அனைவரிடமும்
பேசி சிரித்தபடியும், அபிமன்யுவின் கண்ணில் படாத படியும் திரிந்து கொண்டிருந்தாள்.
அபிமன்யுவின் கண்ணில் யாழினி சிக்கிவிட்டால் அவ்வளவு தான். அவளை அறைக்குள்ளேயே
சிறை கைதி ஆக்கி விடுவான்.
மேலும்,
திருமணத்திற்காக ஷாப்பிங் செல்வது, ஊரை சுற்றிப் பார்ப்பது என்று நாட்கள் வேகமாக
சென்று விட்டது. அபிமன்யுவிற்கு ஒரு புறம் யாழினி தன் கையில் சிக்காமல் சுற்றிக்
கொண்டிருப்பது எரிச்சலை கொடுக்க.
மரகதம்
பாட்டியின் குடும்பத்தினர் மீராவின் மேல் காட்டும் அன்பு மற்றொரு புறம் எரிச்சலை
கொடுத்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவனால் ஒரு சமயத்தில் தன்னை கட்டுப்படுத்த
முடியாமல் போனது.
அன்று
மரகதம் பாட்டி மீராவிற்கு உணவை ஊட்டிக் கொண்டு இருந்தார். அவர் உணவை அருந்திவிட்டு
அறைக்கு செல்வதற்காக காத்திருந்த அபிமன்யு. மீரா சென்றதும் மரகதத்தின் முன் சென்று
நின்றவன்.
“இப்போ என்ன ப்ரூப் பண்ணனும்னு
நீங்க இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க”
என்றான் வெடுக்கென்று.
மரகதம்
அபிமன்யுவின் வார்த்தையில் எதுவும் புரியாமல், “என்னப்பா சொல்ற. ஒன்னும் புரியலையே” என்றார்.
“புரியலையா. எல்லாமே இங்க பிளான்
பண்ணி தான நடக்குது. புரியலைனு சொன்னா என்ன அர்த்தம். குடும்பமா சேர்ந்து எங்க
அம்மாவை உங்க பக்கம் இழுக்கலாம்னு பாக்குறீங்களா”.
அதற்குள்
வள்ளியம்மையும் அங்கே வந்துவிட, “அபி என்ன பேசுற நீ” என்றார் அதட்டலாக.
“போதும் பாட்டி. உங்க அக்காவுக்காக
என் அம்மாவை வச்சி ப்ளே பண்றீங்களா”
என்றான் காட்டமாக.
வள்ளியம்மை
அபிமன்யுவின் வார்த்தையில் அதிர்ந்தவர், “இப்போ
நான் என்ன பிளே பண்ணிட்டேன்னு இப்படி எல்லாம் பேசுற”.
“அதான் வேண்டாம்னு தூக்கி
எறிஞ்சுட்டாங்கல்ல. இப்போ என்ன திடீர்னு பாசம். எங்க இருந்து வந்தது. என்கிட்ட
இருந்து எங்க அம்மாவை பிரிக்கலாம்னு பார்க்குறீங்களா” என்றான் சம்பந்தமில்லாமல்.
அப்போது
அங்கே வந்த யாழினி, அபிமன்யு சத்தமாக பேசுவதை கேட்டு, “என்ன ஆச்சு பாட்டி?”
என்றாள்.
“உனக்கு கூட உன் குடும்பம் தான்
முக்கியம் இல்ல. அவங்க யாருமே நல்லவங்க கிடையாது. துரோகிங்க! என் அம்மாவை பிறந்த
குழந்தையிலேயே வேணாம்னு தூக்கி வீசினவங்க. அப்படி தான் உன்னையும் என்கிட்ட தூக்கி
வீசுனாங்க. மறந்துட்டியா?”.
யாழினிக்கு
அபிமன்யுவின் பேச்சில் ஒன்றும் புரியவில்லை. இவன் எதை கூறுகிறான், என்ன கூறுகிறான்
என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.
மரகதம்,
“உண்மை என்னனு தெரியாம வார்த்தையை
விடாத அபி. நாங்க உங்க அம்மாவை தூக்கி வீசல” என்று அன்று நடந்த மொத்த நிகழ்வையும் அபிமன்யுவிடம்
கூறினார்.
மரகதம்
கூறுவதை கேட்டு சத்தமாக கைத்தட்டி நகைத்த அபிமன்யு, “சூப்பர்..! பர்பக்ட்..! எப்படி.. இது.. எல்லாரும் சேர்ந்து
ஒன்னா யோசிச்ச கதையா... இல்ல, இந்த சிட்டுவேஷன்ல எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம
நீங்களா சொல்ற கதையா” என்றான் பல்லை கடித்தபடி.
“நீ நம்பினாலும் நம்பலைனாலும் இது
தான் உண்மை.. என் தங்கச்சிக்காக நான் பெத்த மகளையே கொடுத்தேன். அந்த நன்றி கொஞ்சம்
கூட இல்லாம உன் தாத்தா உன் மனசுல இப்படி நஞ்ச விதைச்சி வச்சிருக்கார். உண்மையை
யாராலையும் மறைக்க முடியாது. ஒரு நாள் உனக்கு கண்டிப்பா தெரிய வரும். அப்போ இப்போ
பேசுனதெல்லாம் நினைச்சு நீ வருத்தப்படுவ. அதுக்காக தான் சொல்றேன். வார்த்தையை
பார்த்து பேசு”.
அபிமன்யு
கண்கள் சிவக்க, “போதும் நிறுத்துங்க. என்ன கதை
சொல்லிட்டு இருக்கீங்க. இது ஒன்னும் என் தாத்தா இன்னைக்கு நேத்து சொன்ன விஷயம்
கிடையாது. நான் சின்ன வயசுல இருக்கும் போதே என்கிட்ட உண்மையை சொல்லிட்டார்.
ஏன்,
என் பாட்டிக்கு கூட இந்த விஷயம் எனக்கு தெரியும்னு அப்போவே தெரியுமே. ஒரு வேளை,
என் தாத்தா சொல்றது பொய்யா இருந்தா, அவங்க பொய்னு அப்போவே என்கிட்ட சொல்லி
இருப்பாங்க. இன்னைக்கு வரைக்கும் எதுவும் சொல்லாதவங்க. அது எப்படி கரெக்டா நீங்க
அவங்களோட திரும்ப பழக ஆரம்பிச்சதும் பொய்னு சொல்றாங்க” என்றான் சந்தேகப் பார்வையோடு.
யாழினி
அபிமன்யுவின் அருகில் சென்றவள், “கோபப்படாம ஒரு நிமிஷம் பொறுமையா
அவங்க சொல்றதை கேளுங்க”.
யாழினியின்
வார்த்தையில் அபிமன்யுவிற்கு கோபம், இயலாமை, வெறுப்பு என்று அனைத்தும் போட்டி
போட்டுக் கொண்டு வர.
முதல்
முறையாக மடிந்து அமர்ந்தவன், “உனக்கு இவங்கள பத்தி எதுவும்
தெரியாது யாழினி. நீ சின்ன பொண்ணு.. அதனால தான் இப்படி பேசுற. நீ நினைக்கிற மாதிரி
இவங்க எல்லாம் நல்லவங்க கிடையாது. நல்லவங்க வேஷத்துல இருக்காங்க அவ்வளவு தான்.
எங்க
அம்மா பொண்ணா பொறந்துட்டாங்கன்ற ஒரே காரணத்துக்காக, அவங்கள வேண்டாம்னு தூக்கி
போட்டுட்டாங்க. அதுக்கு தண்டனையா தான் கடவுள் உங்க அப்பாவுக்கு உங்க மூணு பேரையுமே
பொண்ணா கொடுத்து இருக்கார்” என்றவன்.
சற்று
இடைவெளி விட்டு குரலை உயர்த்தியவாறு, “இவங்க
எல்லாம் ஏதோ உன் மேல பாசமா இருக்குற மாதிரி பேசுறியே. அப்படி பாசமா இருக்கவங்க
தான் பார்த்து பார்த்து வளர்த்த பொண்ணுக்கு விருப்பம் இருக்கா இல்லையானு கூட
கேட்காம யாரோ ஒருத்தன் வந்து கட்டி வையுங்கனு சொன்னதும் கட்டி வைப்பாங்களா..
அன்னைக்கு
நம்ம கல்யாணம் நடக்கும் போது, யாரும் உன் மனச பத்தி கவலைப்படலையே... உனக்கு இதில்
விருப்பம் இருக்கா இல்லையானு ஒரு வார்த்தை கூட கேட்கலையே... நான் உன்னை கல்யாணம்
பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொன்ன அடுத்த நிமிஷமே உங்க அப்பா உன்னை எனக்கு கல்யாணம்
பண்ணி கொடுத்துட்டார் பார்த்தியா..
அந்த
இடத்துல நான்னு இல்ல, வேற யார் இருந்திருந்தாலும் இவங்க உன்னை கல்யாணம் பண்ணி
கொடுத்து இருப்பாங்க. இவங்களுக்கு முக்கியம் நீ கிடையாது. அவங்களுடைய மரியாதை,
கௌரவம்..! மத்தவங்க முன்னாடி அவங்களுடைய கௌரவத்தையும், மரியாதையையும்
காப்பாத்திக்கிறதுக்காக இவங்க எல்லாம் எந்த எக்ஸ்ட்ரீம்க்கு வேணும்னாலும் போவாங்க”.
இதுவரை
யாழினி பார்த்திடாதே அபிமன்யு..!
ஏன்,
வள்ளியம்மை பாட்டி கூட அபிமன்யுவை இப்படி பார்த்ததே கிடையாது.
எப்போதும்
கம்பீரமாகவும், நிமிர்ந்த நடையுடனுமே பார்த்த அபிமன்யுவை இப்படி மடிந்து அமர்ந்து,
கலங்கிய கண்களுடன் பார்க்க வள்ளியம்மை பாட்டிகே தாங்க முடியவில்லை. அப்படி இருக்க
யாழினிக்கோ அபிமன்யுவின் நிலை பாவமாகி போனது.
சிறு
வயதில் கிருஷ்ணமூர்த்தி அவன் மனதில் விதைத்த விதை. இன்று வேரூன்றி ஆலமரமாக
வளர்ந்து நிற்கிறது. அதை பிடுங்கி எறிவது அவ்வளவு சுலபமில்லை என்று உணர்ந்த
மூவருக்கும் எப்படி அபிமன்யுவை கையாள்வது என்று தெரியவில்லை.
யாழினி
அபிமன்யுவின் அருகில் சென்றவள். அவன் எதிரே மண்டியிட்டு அமர்ந்து அவனின் கைகளை
பற்றியவாறு, “மாமா..” என்று அழைத்தாள் மெல்லிய குரலில்.
இதுநாள்
வரை தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், அபிமன்யுவின்
வற்புறுத்தலினாலும் மட்டுமே ‘மாமா’ என்று அழைத்த யாழினி, முதல் முறையாக முழுமனதுடன் ‘மாமா’ என்னும் ஒன்றை அழைப்பின் மூலம் தன் அன்பை வெளி காட்டினாள்.
அவளின்
வார்த்தை அபிமன்யுவின் காயத்திற்கு மருந்தாகிப் போக. அங்கே இருந்த
வள்ளியம்மையையும், மரகதத்தையும் பொருட்டாக நினைக்காத அபிமன்யு தாவி யாழினியை
அணைத்துக் கொண்டான்.
யாழினிக்கு
எந்த எதிர்ப்பும் காட்ட தோன்றவில்லை. அதற்கு பதில் அபிமன்யுவின் முதுகை தடவி
கொடுத்தவாறு அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றாள்.
அபிமன்யுவின்
அணைப்பில் யாழினி எங்கே தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற பரிதவிப்பு மட்டுமே
இருந்தது. மீரா, அபிமன்யுவிற்கு எவ்வளவு முக்கியமோ, யாழினியையும் அப்படியே
நினைத்தான். இவர்கள் இருவரையும் தன்னிடமிருந்து இவர்கள் பிரித்து விடுவார்களோ என்ற
பயம் அபிமன்யுவிற்கு மேலோங்கியது.
யாழினியே
சூழ்நிலையை பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் வள்ளியம்மையும், மரதமும்
அங்கிருந்து நகர்ந்தனர். தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர சற்று நேரம் பிடித்தது
அபிமன்யுவிற்கு.
அப்போது
அந்த வழியாக வந்த ஆரியன் சத்தமாக, “என்ன
இது.. நடு வீட்டில் ரொமான்ஸா.. வயசு பசங்க இருக்க வீட்ல இப்படி தான்
நடந்துப்பீங்களா” என்றான்.
ஆரியனின்
குரலில் டக்கென்று தெளிந்த இருவரும் செய்வதறியாது, அபிமன்யு அறையை நோக்கி சென்று
விட்டான். யாழினி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அறைக்கு
சென்ற அபிமன்யுவிற்கு வெறும் குழப்பம் மட்டுமே. மனம் ஒரு நிலையிலேயே இல்லை. தன்
தாத்தா கூறியதை பொய் என்று அவனின் மனம் சற்று கூட சந்தேகப்படவில்லை. இருந்தும்,
மரகதம் கூறுவது உண்மையோ என்றும் ஒரு புறம் தோன்றியது.
இத்தனை
வருடமாக வேரூன்றிய உண்மையை ‘பொய்’ என ஏற்றுக்கொள்ள அவன் மனம் முற்படவில்லை. எவ்வளவோ பெரிய
விஷயங்களை சாதாரணமாக கையாளுபவனிற்கு, இந்த விஷயத்தில் உண்மை எது, பொய் எது என்று
புரியாமல் குழம்பிப் போனான். ஆனாலும், தன் தாத்தாவின் மேல் இருக்கும் நம்பிக்கை
மட்டும் துளியும் குறையவில்லை.
இருதலைக்கொல்லி
எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தான். சமையலறைக்குள் சென்ற யாழினிக்கு அபிமன்யுவின்
நிலை புரிந்தாலும் தன் குடும்பத்தாரின் மேல் அவனுக்கு இருக்கும் வெறுப்பை எப்படி
போக்குவது என்று ஒன்றும் புரியவில்லை.
உண்மையை
அவனுக்கு உணர வைத்தாள் மட்டுமே, அவன் தன் குடும்பத்தாருடன் உறவாடுவான் என்பதை
உணர்ந்த யாழினிக்கு தற்போதைய நிலையை எப்படி கையாள்வது என்ற சிந்தனையில் இருந்தாள்.
அவளின்
எண்ணத்தை கலைக்கும் படி லட்சுமி, “ஏய்
யாழினி..” என்று அவளின் முதுகில் தட்ட,
திடுக்கிட்டு விழித்தவள் கையில் ஒரு தட்டை கொடுத்தவர், “போய் மாப்பிள்ளைக்கு கொடு” என்றார்.
“சரி” என்று தலையசைத்துவிட்டு அறைக்கு சென்றாள் யாழினி.
அங்கே
அபிமன்யு ஏதோ சிந்தனையில் மூழ்கி இருக்க.
அவன்
அருகில் சென்ற யாழினி, “மாமா இந்தாங்க” என்று அவனின் சிந்தையை கலைத்தாள்.
“என்ன இது?”.
“அம்மா உங்களுக்கு பணியாரம்
செஞ்சிருக்காங்க. அதான் கொடுத்துட்டு வர சொன்னாங்க, சாப்பிடுங்க”.
“யாழினி நாளைக்கு மறுநாள் கல்யாணம்
முடிஞ்சதும் நம்ம கிளம்பிடலாம். எனக்கு ஆஃபீஸ்ல இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு”.
அபிமன்யுவின்
மனவோட்டத்தை கணித்த யாழினிக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. ‘சரி’ என்று ஒப்புக் கொண்டாள். யாழினியின் சம்மதம் அபிமன்யுவிற்கு
ஆச்சரியமாக இருந்தது.
மேலும்,
சில நாட்கள் இங்கே இருக்கலாம் என்று அடம்பிடிப்பாள் என்று எண்ணியவனிற்கு,
யாழினியின் சம்மதம் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது.
“இப்போ என்னக்கா பண்றது. இவனுக்கு
எப்படி உண்மையை புரிய வைக்கிறதுன்னு எனக்கு ஒன்னும் புரியல” என்றார் கலங்கிய கண்களுடன்.
அபிமன்யு
உண்மையை உணர்வது எப்போது...?
கருத்துகள்
கருத்துரையிடுக