அவனதிகாரம் - 53
அதிகாரம் – 53
அபிமன்யு
கூறிவிட்டு காரை எடுப்பதற்காக பார்க்கிங்கிற்கு சென்று விட்டான். யாழினிக்கு என்ன
செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.
மரகதம்,
“ஏன் டி.. இங்க என்ன நின்னுகிட்டு
கனவு கண்டுகிட்டு இருக்க. போய் பொண்ணு கூட இரு”.
“பாட்டி நீ தான் என்னை எப்படியாவது
காப்பாத்தணும்”.
மரகதம்
பாட்டிக்கு எதுவோ பெரிய பிரச்சனை என்று எண்ணி வயிற்றில் புளியை கரைத்தது.
“என்னடி பண்ணி தொலைச்ச?” என்றார் பதட்டமாக.
“பாட்டி.. உனக்கு யாரு தப்பு
பண்ணாலும் என் மேல தான் கோபம் வருமா. இங்க பிரச்சனையே உன் பேரன் தான்”.
மரகதம்
பாட்டி குழப்பமாக, “என்னடி சொல்ற. பேரனா... யாரை
சொல்ற?”.
யாழினி
சலிப்பாக, “வேற யாரு.. எல்லாம் என்
வீட்டுக்காரரை பத்தி தான் சொல்லிட்டு இருக்கேன்”.
“ஏன் டி இப்போ என்னவாம் அவருக்கு”.
யாழினி
இவ்வளவு நேரம் நடந்த மொத்த கதையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அதைக் கேட்ட
மரகதம் பாட்டிக்கு ஆயாசமாக இருந்தது.
“இவ்வளவு தானா.. நான் கூட
எதுவோ பெரிய பிரச்சனையோனு நினைச்சு பயந்துட்டேன். நீ இருக்கியே சரியான கிறுக்கி
டி. ஒரு நிமிஷத்துல இப்படி படபடக்க வச்சுட்ட”.
யாழினி
கோபமாக தன் இடுப்பின் மீது கையை வைத்தவாறு மரகதம் பாட்டியை முறைத்தவள்.
“இது உனக்கு சின்ன விஷயமா. ரெண்டு
பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு என் தலை தான் இங்க உருளுது. இப்போ இவர்
பாட்டுக்கு ஏதாவது சொல்லி சமாளிச்சிட்டு வானு போயிட்டார். இப்போ நான் என்ன
பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு நிக்கிறேன். அவகிட்ட போய் நான் என்னன்னு
சொல்றது”.
“நீ போ. நான் பாத்துக்குறேன்”.
“போன்னா.. எப்படி போறது. அவகிட்ட
சொல்ல வேண்டாமா”.
“அதெல்லாம் நீ ஒன்னும் சொல்ல
வேணாம். நான் சொல்லிக்கிறேன். நீ கிளம்பு”.
“அப்புறம் நாளைக்கு வந்தா
கோவிச்சுக்க போறா பாட்டி”.
“ஒன்னும் நடக்காது டி. நீ போ, நான்
பாத்துக்குறேன்”.
யாழினி,
“சரி” என்று கூறிவிட்டு காரில் ஏறி வீட்டிற்கு சென்று விட்டாள்.
மறுநாள்
அபிமன்யுவிடம் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தாள்.
மறுநாள்
காலை அபிமன்யு கூறியது போல் சீக்கிரமே ஸ்வேதாவின் வீட்டிற்கு அழைத்து வந்து
விட்டான். ஸ்வேதா யாழினி நினைத்ததற்கு நேர் மாறாக நடந்து கொண்டிருந்தாள்.
ஸ்வேதா,
“உன்னை பார்க்கவே ரொம்ப சந்தோஷமா
இருக்கு யாழினி. உங்கள மாதிரியே நாங்களும் லவ்லி கப்புல்சா இருக்கணும்னு
ஆசைப்படுறேன்”.
யாழினி,
“யாரடி சொல்ற..?” என்றாள் சந்தேகமாக.
“உன்னையும், அண்ணாவையும் தான்
சொல்றேன். ஒன் டே கூட பிரியாம எவ்வளவு ஒத்துமையா இருக்கீங்க”.
யாழினி
மனதிற்குள் ‘இதெல்லாம் கண்டிப்பா பாட்டி
வேலையா தான் இருக்கும். நான் பார்த்துக்குறேன்னு சொல்லும் போதே யோசிச்சு
இருக்கணும்’ என்று எண்ணிக் கொண்டிருக்கும்
போதே.
ஸ்வேதா,
“என்னடி.. இப்போ கூட அண்ணனை பத்தி
தான கனவு கண்டு கிட்டு இருக்க”.
யாழினிக்கோ
‘இவ வேற’ என்று உள்ளுக்குள் தோன்ற, வெளியே சிரித்தபடி, “ஹி.. ஹி.. ஆமா டி” என்று மேற்கொண்டு இதைப்பற்றி பேசாமல் முடித்துக் கொண்டாள்.
பிறகு,
ஒவ்வொரு சடங்குகளாக நடக்க. சாய்ந்திரம் அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர்.
இனிதே, ஸ்வேதாவின் ரிசப்ஷனும் தொடங்கியது. யாழினிக்கு யாரோ தன்னை தொடர்வது போல்
இருக்க.
யார்
என்று பார்த்தாள். வேறு யாரு... நம் ஹீரோ சார் தான்..
தூரத்தில்
அமர்ந்திருந்தாலும், அவனின் பார்வை யாழினியை சுற்றியே வட்டமடித்துக்
கொண்டிருந்தது.
அபிமன்யு
தேர்வு செய்து வாங்கி கொடுத்த அழகிய ஆளிவ் கிரீன் நிற பட்டுடுத்தி, அழகு பதுமை
போல் பெண் தோழியாக ஸ்வேதாவின் அருகில் நின்றிருந்தாள். அவளிடம் இருந்து அபிமன்யு
தன் பார்வையை அகற்ற எவ்வளவு சிரமப்படும் முடியவில்லை.
எங்கு
சுற்றினாலும் இறுதியில் யாழினியிடமே வந்து நின்றது அவனுடைய கண்கள். யாழினிக்கோ
அபிமன்யுவின் பார்வையில் வெட்கம் தானாக அழையா விருந்தாளியாக வந்துவிட்டது.
ஸ்வேதா
யாழினியின் காதருகில், “என்ன டி பண்ற.. இங்க நான் தான்
கல்யாண பொண்ணு. ஞாபகம் இருக்கா?”.
யாழினி,
“ஆமா.. நீ தான் டி பொண்ணு. யாரு
இல்லைனு சொன்னா”.
“அப்புறம் என்ன, எனக்கு மேல நீ
வெட்கப்பட்டுக்கிட்டு நிக்கிற”.
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான்
எதுக்கு வெட்கப்பட போறேன்”.
“உன் முகத்தை பார்த்தாலே தெரியுது”.
“கல்யாண பொண்ணு மாப்பிள்ளை கிட்ட
தான் பேசணும். இப்படி என்கிட்ட தொணதொணன்னு பேசிகிட்டு இருந்தா அண்ணா கோவிச்சுக்க
போறாரு. என்னை கவனிக்கிறதை விட்டுட்டு, அவரை கவனி” என்று ஸ்வேதாவின் கவனத்தை திசை திருப்பினாள்.
ரிசப்ஷனிலிருந்து
பாதிக்கும் மேல் விருந்தினர்கள் கலைந்ததும், யாழினியின் அம்மா யாழினியிடம், “போய் மாப்பிள்ளையும், நீயும் சாப்பிடுங்க” என்று கூறி அனுப்பி வைத்தார்.
மணமேடையில்
இருந்து கீழ் இறங்கிய யாழினி அபிமன்யுவை அழைத்துக் கொண்டு உணவருந்தும் இடத்தை
நோக்கி செல்ல, தெரியாமல் யாரின் மீதோ மோதி விட்டாள்.
யாழினி,
“சாரி.. சாரி..” என்று கூறிக் கொண்டே நிமிர்ந்து பார்க்க,
ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று விட்டாள்.
யாழினி
இடித்தது வேறு யாரையும் அல்ல, கயல்விழியை தான்!
கயல்விழி,
“என்ன யாழினி... அடிக்கடி என்னோட
வழியிலேயே குறுக்க வர” என்றாள் ஒரு மாதிரியாக.
யாழினி
வெகு நாட்கள் கழித்து தன் அக்காவை கண்ட மகிழ்ச்சியில் நடந்த நிகழ்வுகளை எல்லாம்
மறந்தவள், “அக்கா எப்படி இருக்க?”.
அவள்
மனதின் ஆனந்தம் குரலிலே இழைந்தோடியது.
“உனக்கு இன்னும் என்னை ஞாபகம்
இருக்கா. புதுசா கல்யாணம் ஆன சந்தோஷத்துல என்னை பத்தி மறந்திருப்பேன்னு நினைச்சேன்” என்றாள் பொறாமை தலை தூக்க.
யாழினிக்கு
அக்காவை கண்டதும் பொங்கி வந்த மகிழ்ச்சி ஒரு நொடியில் வடிந்து விட்டது.
“என்னக்கா இப்படி எல்லாம் பேசுற?”.
இந்த
கயல்விழி யாழினிக்கு புதியவள்.
“பின்ன உன்னை மாதிரி ஆளுகிட்ட
எல்லாம் வேற எப்படி பேச முடியும்”.
கயல்விழி
யாழினியிடம் மரியாதை குறைவாக பேசுவதை தாங்க முடியாத அபிமன்யு, “மைண்ட் யுவர் வேர்ட்ஸ். தேவையில்லாம பேசுற
வேலை வேண்டாம்” என்றான் கோபம் உள் அடங்கிய
குரலில்.
கயல்விழி
அபிமன்யுவின் மேல் இருக்கும் கோபத்தை யாழினியின் மீது காட்டிக் கொண்டிருந்தவள், “அவ என்னோட தங்கச்சி. நான் என்ன
வேணும்னாலும் பேசுவேன்” என்றாள் சீற்றமாக.
“உங்க தங்கச்சியா... ஷி இஸ் மை
மிஸஸ் நவ். என்னோட வைஃப்பை போறவங்க வரவங்க எல்லாம் மரியாதை இல்லாம பேசுறதை என்னால
பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது”
என்றான் கோபமாக.
கயல்விழியும்,
அபிமன்யுவும் எதிரெதிரே நின்று வார்த்தைகளால் அனல் பறக்க விவாதித்துக்
கொண்டிருக்க. யாழினிக்கோ எங்கே பிரச்சனை பெரிதாகி விடுமோ என்ற பயத்தில்
இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறிது.
யாழினி
கயல்விழியிடம் பேசுவதை விட்டுவிட்டு, அபிமன்யுவை எப்படியாவது சமாதானம் படுத்தி
இங்கிருந்து அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவனிடம் எது எதுவோ
பேசி சமாளித்து அழைத்து செல்ல முயற்சி செய்தாள். ஆனால், அதற்கு பலன் தான்
பூஜ்ஜியம்.
இருவரும்
மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருந்தார்களே தவிர, இடத்தை விட்டு நகர்வதாக
தெரியவில்லை.
வாக்குவாதம்
முற்றி போக கயல்விழி, “அன்னைக்கு என்னமோ அவ்வளவு
பேசுனீங்க. உங்க ரேஞ்சுக்கு நாங்க எல்லாம் பக்கத்துல கூட நிக்க முடியாது அப்படி
இப்படினு. இப்போ மட்டும் என்ன.. உங்க ரேஞ்சுக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணயா
கல்யாணம் பண்ணி இருக்கீங்க. கொஞ்சம் கூட உங்களுக்கு தகுதியே இல்லாத பொண்ண தானே
கட்டி இருக்கீங்க” என்றாள் சூடாக.
அபிமன்யுவை
அவமானப்படுத்துவதாக நினைத்து, தன் தங்கையை தான் அவமானப்படுத்துகிறோம் என்பதை
அறியாத அளவிற்கு கோபம் கண்ணை மறைத்தது.
கயல்விழியின்
வார்த்தையில் யாழினிக்கு அவமானம் ஆகிப்போனது. இதற்குள் மொத்த குடும்பமும் இவர்களை
சூழ்ந்து விட்டது. அனைவரும் பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தனர். கயல்விழியின்
பேச்சு அனைவருக்கும் சற்று அதிகப்படி தான் என்று தோன்றியது.
மரகதம்,
“என்னடி பேசுற.. கல்யாணம் வேணாம்னு
நீ தான டி ஓடிப்போன. இப்போ என்ன மாப்பிள்ளை மேல பழி சொல்ற. உன் தங்கச்சி ஒழுங்கா
வாழுறது உனக்கு பிடிக்கலையா” என்றார் கோபமாக.
கயல்விழி,
“கல்யாணம் புடிக்கலைனு நான் போனது
உண்மை தான். அந்த கல்யாணத்துல எனக்கு மட்டும் இல்ல, இவருக்கும் விருப்பம் கிடையாது” என்றாள் அபிமன்யுவை கைகாட்டி.
அனைவருக்கும்
குழப்பமாக இருக்க.
வள்ளியம்மை,
“விருப்பம் இல்லாம தான் உன்னை
கட்டிக்க மணவறை வரைக்கும் வந்தானா”
என்றார் பட்டென்று.
கயல்விழி,
“உங்க பேரன் மணவறையில் வந்து
உட்கார்ந்தது என்னை கட்டிக்க இல்ல. இதோ நிக்கிறாளே.. இவளை கட்டிக்க” என்றாள் யாழினியைப் பார்த்து.
மரகதத்திற்கும்,
வள்ளியம்மைக்கும் எதுவோ புரிவது போல் இருக்க அமைதி காத்தனர். மற்ற யாருக்கும்
எதுவும் புரியவில்லை.
என்ன
நடந்திருக்கும் என்ற பெரும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். யாழினிக்கு
இவள் கூறும் விஷயங்கள் அனைத்துமே புதிது.
மேலும்,
மனதிற்குள் பல கேள்விகளோடு அபிமன்யுவை விழி அகலாது பார்த்துக் கொண்டே நின்றாள்.
இனி மறைத்து எதுவும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்த அபிமன்யு, கயல்விழியை உண்மையை
கூறவிடாமல் தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
மேலும்,
தொடர்ந்த கயல்விழி, “கல்யாணத்துக்கு முன்னாடி நாள்
நைட்டு இவர் என்னை பார்க்க வந்தார். எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.
ஆனா, இந்த கல்யாணம் நடக்கணும்னு சொன்னார். எனக்கு ஒன்னும் புரியல. கல்யாணத்துல
விருப்பம் இல்ல, ஆனா நடக்கணும்னா.. அதுக்கு என்ன அர்த்தம்.. அப்போ எனக்கு
புரியல. ஆனா, இப்போ புரியுது” என்று கூறியவள் யாழினியை உற்றுப்
பார்த்தாள்.
“அப்புறம் தான் இவரோட மனசுல என்ன
இருக்குன்னு தெரிஞ்சது. நானும் இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுன்னு தெரியாம
தான் முழிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து இவருக்கு இந்த கல்யாணத்துல
விருப்பம் இல்லைனு சொன்னது மட்டும் இல்லாம, என்னோட தகுதிக்கு நீ எல்லாம் என்
பக்கத்துல கூட நிக்க முடியாது அப்படி இப்படினு வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினார்.
விருப்பமில்லாத
இவரை கட்டிக்கிட்டு கஷ்டப்படுறதுக்கு என் மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை
அமைச்சுக்கலாம்னு நான் மண்டபத்தில் இருந்து போயிட்டேன். இவர் என்னை கட்டிக்க
மாட்டேன்னு சொல்லிட்டா, எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு நினைச்சுட்டாரான்னு இவர்
முன்னாடி கல்யாணம் பண்ணி காட்டணும்னு தான் நான் விரும்புனவரை கல்யாணம்
பண்ணிக்கிட்டு அன்னைக்கு மண்டபத்துக்கு வந்து நின்னேன்.
ஆனா,
இவர் யாழினியை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிக்குறார். அப்புறம் தான் புரிஞ்சது. இவர்
ஏன் இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு சொன்னாருன்னு”.
மீரா, “அபி இந்த பொண்ணு சொல்றதெல்லாம் உண்மையா”.
அபிமன்யு
சாதாரணமாக, “எஸ் மாம்”.
“இதை நீ முன்னாடியே என்கிட்ட
சொல்லி இருக்கலாமே அபி. உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு தெரிஞ்சிருந்தா,
நாங்க ஏற்பாடு பண்ணி இருக்க மாட்டோமே”.
“மாம் என்ன சொல்றீங்க நீங்க.
எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைனு நான் எப்போ சொன்னேன். அதான் நீங்க ஆசைப்பட்ட
மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டேனே”.
“ஆனா நாங்க உனக்கு கல்யாணம்
நிச்சயம் பண்ணது கயல்விழி கூட. நீ கல்யாணம் பண்ணி இருக்கிறது யாழினியை. இதெல்லாம்
எப்படி அபி. உன் மனசுல என்ன இருக்கு”.
அபிமன்யு
பெருமூச்சு விட்டபடி, “எதுவும் இல்லை.. கல்யாணம் முடிவு
பண்ணது உங்க ஆசைப்படி நடந்துச்சு. ஆனா, இவளை கல்யாணம் பண்ணது என்னோட ஆசைப்படி
நடந்துச்சு. தட்ஸ் ஆல். நான் யாரையும் மண்டபத்தை விட்டு ஓடிப் போங்கன்னு சொல்லல
மாம்” என்றவன் கயல் விழியை அழுத்தமாக
பார்த்துவிட்டு மீண்டும் மீராவிடம் தொடர்ந்தவன்.
“எனக்கு இந்த பொண்ண கல்யாணம்
பண்ணிக்க விருப்பம் இல்ல. அதை தான் அவகிட்ட சொன்னேன். அவ ஓடிப்போயிட்டு என்னை
ப்லேம் பண்ணா நான் என்ன பண்ண முடியும். அவ ஓடிப் போகாம இருந்திருந்தாலும், நான்
யாழினியை தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்”.
“அதான் ஏன்னு கேட்குறேன்?”.
“பிகாஸ், ஐ லவ் ஹர். எனக்கு அவளை
தான் பிடிச்சிருக்கு” என்றான் அனைவரின் முன்பும்.
அனைவரும்
அதிர்ச்சியாக பார்க்க.
யாழினிக்கோ
சொல்ல முடியாத உணர்வு.. பதட்டம், பயம், குழப்பம் என படபடப்பாக இருக்க. ஆனாலும்,
உள்ளுக்குள் சிறு மகிழ்ச்சியும் எட்டிப் பார்த்தது. அதை அவள் உணர்ந்தாளா என்பது
அவள் மட்டுமே அறிந்த உண்மை.
அனைவரின்
முன்பும் அபிமன்யு தன்னை விரும்புவதாக கூறவும், யாழினிக்கு யாரையும் எதிர்கொள்ள
முடியவில்லை. மற்றவர்களின் முகத்தை பார்க்க சங்கடமாக இருக்க, அங்கிருந்து மணமகள்
அறைக்கு விரைந்து விட்டாள்.
அபிமன்யுவின்
வார்த்தையில் இருந்து அனைவருக்கும் தெளிவாக புரிந்து விட்டது. கயல்விழி
விரும்புவது வேறு ஒருவரை, அபிமன்யு விரும்பியது யாழினியை. அது தெரியாமல்
கயல்விழிக்கும், அபிமன்யுவிற்கும் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து திருமணம் பேசி
முடிக்க.
இறுதியில்,
அவரவர் விரும்பியவர்களை மணந்து கொண்டனர். இதில், மண்டபத்திலிருந்து யாரிடமும்
சொல்லாமல் சென்றதில் கயல்விழி மீது தவறு இருக்க. அதை தனக்கு சாதகமாக உபயோகித்துக்
கொண்ட அபிமன்யு மீதும் தவறு இருந்தது.
ஏனெனில்,
கயல்விழி மண்டபத்திலிருந்து செல்ல அவனின் வாக்குவாதமும் ஒரு காரணமாகி போனது
அல்லவா. இருவரின் மீதும் தவறு இருப்பதால், இதில் யாரை குறை கூறுவது என்று
தெரியாமல் முழிப்பது குடும்பத்தினரின் முறையானது.
கயல்விழி,
“பார்த்தியாம்மா, அன்னைக்கு நான்
ஓடிப் போயிட்டேன்னு என்ன பேச்சு பேசுன. அதுக்கு இவரும் ஒரு காரணம்” என்றாள் அபிமன்யுவை காட்டி.
லட்சுமி,
“அவர் பண்ணது சரினு நான் சொல்ல
மாட்டேன். அதுக்காக யார்கிட்டயும் சொல்லாம மண்டபத்தை விட்டு போனது சரியா” என்றார் கேள்வியாக.
“என்னை மன்னிச்சிடுங்க.
விருப்பமில்லாதவரை கல்யாணம் பண்ணக்கூடாது என்ற பயத்திலும், எனக்கு பிடிச்ச
வாழ்க்கையை தேடிக்கனும் என்ற அவசரத்திலும் தப்பான முடிவு எடுத்துட்டேன்” என்று கூறியவள் தன் தந்தையின் காலை
பிடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
அதற்குள்
உறவினர்கள் கூட்டம் இவர்களை சூழ்ந்து விட. லட்சுமி கயல்விழியிடம், “எதுவாயிருந்தாலும் ரூமுக்கு போய்
பேசிக்கலாம். எல்லோரும் வேடிக்கை பார்க்குறாங்க பாரு. எழுந்திரு” என்று எழுப்பிவிட்டவர் அறைக்கு அழைத்து
சென்று விட்டார்.
மரகதம்
குடும்பத்தினர் அனைவரும் அறைக்கு சென்றுவிட, வள்ளியம்மை குடும்பத்தினர் வேறு ஒரு
அறைக்கு சென்று விட்டனர்.
அப்போது
தான் கவனித்த அபிமன்யு, யாழினி அங்கு இல்லாததை கண்டு ஆரணியிடம் யாழினி பற்றி
விசாரித்தான்.
ஆரணி, “தெரியலையேண்ணா. இவ்வளவு நேரம் இங்க தான்
இருந்தா. நான் போய் எங்க இருக்கானு பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு யாழினியைத் தேடி மணமகள் அறைக்கு
விரைந்தாள்.
மணமகள்
அறைக்கு வந்த யாழினியின் முகம் தெளிவில்லாததை கண்டு, ஸ்வேதா அவளிடம் என்ன என்று
விசாரிக்க. எதுவும் கூறும் மனநிலையில் யாழினி இல்லாததால் நேராக சென்று படுக்கையில்
படுத்து விட்டாள்.
யாழினியின்
முக வாட்டத்தை வைத்து அவளுக்கு சற்று தனிமை கொடுக்க எண்ணிய ஸ்வேதா எதுவும்
கேட்காமல் அமைதி காத்தாள். யாழினியை தேடி அறைக்கு விரைந்த ஆரணி, யாழினியை மணமகள்
அறையில் கண்டதும் யாழினி அருகே சென்று அமர்ந்தாள்.
ஸ்வேதா
ஆரணியிடம், “என்ன ஆச்சு ஆரணி. ஏன் எப்படி
இருக்கா?” என்றாள் யாழினி காட்டி.
ஆரணி
சற்று நேரத்திற்கு முன் நடந்த அனைத்து விஷயங்களையும் ஸ்வேதாவிடம் கூற.
ஸ்வேதா
அதிர்ச்சியாக, “என்ன சொல்ற நீ. அப்போ உங்க அண்ணா
யாழினியை கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணாரா?”.
“எங்களுக்கே இது புது இன்பர்மேஷனா
இருக்கு ஸ்வேதா. எங்க யாருக்குமே இது பத்தி தெரியல. இப்போ அண்ணாவா சொல்லி தான்
எங்களுக்கு தெரிஞ்சது. ஆனா, இதெல்லாம் எப்படி நடந்துச்சு என்னனு ஒன்னும் புரியல”.
“சரி, உங்க அண்ணன் பண்ணதுக்கு
கயல்விழி அக்கா ஏன் யாழினியை பேசுறாங்க”.
“என்ன நடந்ததுன்னு எங்களுக்கு
கரெக்டா தெரியல ஸ்வேதா. நாங்க போகும் போது அண்ணாவும், யாழினியோட அக்காவும் சண்டை
போட்டுக்குற மாதிரி பேசிக்கிட்டு இருந்தாங்க”.
இவர்கள்
பேசுவது கேட்டாலும், பதில் சொல்லும் நிலையில் இல்லாத யாழினி அமைதியாக கண்களை மூடி
படுத்திருந்தாள்.
கதவு
தட்டும் சத்தம் கேட்டு ஆரணி, “சரி, யாருனு நான் போய்
பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு கதவை திறக்க,
அங்கே அபிமன்யு நின்று கொண்டிருந்தான்.
ஆரணி, “அண்ணா..” என்று அழைக்க.
“யாழினி எங்க?” என்றான் பரிதவிப்பாக.
“உள்ள தான் படுத்து இருக்கா”.
“நான் அவகிட்ட கொஞ்சம் பேசணும்.
வெளியில வர சொல்லு”.
ஆரணி ‘சரி’ என்னும் விதமாக தலையசைத்து விட்டு, உள்ளே சென்றவள் யாழினி
அருகே அமர்ந்தபடி, “பேபி, அண்ணா உன் கிட்ட பேசணும்னு
வெளியில் வெயிட் பண்றாங்கடா” என்றாள் மெதுவாக.
யாழினி
அதற்கு பதில் எதுவும் கூறாமல் ‘இல்லை’ என்னும் விதமாக தலையசைக்கவும்.
பெருமூச்சு
விட்ட ஆரணி வெளியே வந்து, “அண்ணா அவ ரொம்ப டவுனா இருக்கா.
கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கலாமே. மார்னிங் பேசுங்களேன்” என்றாள் தயங்கியபடி.
ஏனெனில்,
யாழினிக்கும், அபிமன்யுவிற்கும் நடுவில் பேசி ஏற்கனவே ஆரணி இருமுறை அபிமன்யுவிடம்
திட்டு வாங்கிய நினைவில்.
அபிமன்யு
எதுவும் கூறாமல் வெளியேறி விட்டான். வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க,
தன் மனபாரம் குறையும் வரை மொட்டை மாடிக்கு சென்றவன். கொட்டும் மழையில் நின்று
விட்டான்.
யாழினியின்
எதிர்வினை என்னவாக இருக்கும்...?
கயல்விழியின்
குடும்பத்தினர் எடுக்கப் போகும் முடிவு என்ன...?
கருத்துகள்
கருத்துரையிடுக