அவனதிகாரம் - 54

 

அதிகாரம் – 54

 

லட்சுமி, அவர் பண்ணது தப்பா இருந்தாலும், நீ பண்ணது சரி ஆயிடாது. அவர் ஆயிரம் சொல்லி இருந்தாலும், நீ எப்படி போயிருக்கலாம். நாங்க உன்னை சரியா தான வளர்த்தோம். உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு முன்னாடியே எங்க கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தான. கடைசி நிமிஷம் வரைக்கும் சொல்லாம எங்களை எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டல்ல என்றார் கோபமும் ஆதங்கமுமாக.

 

அம்மா.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணது தப்பு தான். கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னாலும், நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தான் இப்படி பண்ணிட்டேன். படிக்கணும்னு ஆசைப்பட்டேன் படிக்க வச்சீங்களா.. உங்க விருப்பப்படி தான கல்யாணம் பண்ண பார்த்தீங்க. அப்போ மாப்பிள்ளை மட்டும் நான் சொன்னா ஒத்துப்பீங்களா. அதுவும் குடும்பம் ஒன்னு சேரனும் அப்படி இப்படினு என்னென்னமோ காரணம் சொல்லி எனக்கு இந்த கல்யாணத்தை பண்ண பார்த்தீங்க.

 

அப்படி இருக்கும் போது நான் என்ன காரணம் சொல்லி இருந்தாலும் நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். கடைசியில, நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை. உங்க எல்லார் மேலயும் அப்போ எனக்கு இருந்த கோபம்.. வெறுப்பு.. இப்படி தப்பான முடிவு எடுத்துட்டேன். உங்களை எல்லாம் கஷ்டப்படுத்திட்டு போனதுக்கு தான் நான் இப்போ கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன் என்றாள் அழுகையினோடு.

 

என்ன தான் பிள்ளைகள் தவறு செய்தாலும், பெற்றவர்களால் பிள்ளைகள் படும் கஷ்ட்டத்தை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாது அல்லவா.

 

லட்சுமி பதட்டமாக, என்னடி சொல்ற! கஷ்டப்பட்டுகிட்டு இருக்கியா. உனக்கு பிடிச்சபடி கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழுறன்னுல்ல நாங்க எல்லாம் நினைச்சுகிட்டு இருந்தோம். இப்படி சொல்ற.. இப்படி கஷ்டப்படுறதுக்கா ஓடி போய் கல்யாணம் பண்ண என்றார் ஆற்றாமையோடு.

 

சுப்பிரமணி, நீ எதுக்கு லட்சுமி அழுகுற. அவ விருப்பப்படி தான கல்யாணம் கட்டிக்கிட்டா. அதில் கஷ்டமோ, நஷ்டமோ அதை அவளே தான் அனுபவிக்கணும். இப்போ வந்து கஷ்டப்படுறேன்னா, நம்ம என்ன பண்ண முடியும் என்றார் கோபமாக.

 

மரகதம், அப்படி சொல்லாத பா. என்ன இருந்தாலும், நம்ம வீட்டு பிள்ளை கஷ்டப்படுவதை பார்த்துகிட்டு நம்ம எப்படி கல்லு மாதிரி இருக்க முடியும்.

 

பின்ன, வேற என்ன பண்ண சொல்ற. நான் என்ன இவங்களுக்கு குறை வச்சிட்டேன். நல்ல படியா தான வளர்த்தேன். நல்ல இடத்துல தான கட்டிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். படிப்பு... படிப்பு மட்டும் தான் நான் வேண்டாம்னு சொன்னேன். இதோ, இப்போ ஓடிப் போனாளே.. எங்க படிக்க வச்சா அந்த மாதிரி ஏதாவது தப்பு பண்ணிடுவாளோனு தான் வேண்டாம்னு சொன்னேன்.

 

ஆனா, ஓடிப்போறதுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லைனு என் கண்ணை திறந்து வச்சுட்டா. வெண்ணிலா கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கல. அந்த மாதிரி இவளும் கல்யாணம் பண்ணிக்கிட்டு வேணும்னா படிச்சிருக்கலாமே. அதை விட்டுட்டு இப்படி ஓடிப் போய் கஷ்டப்படுறேன்னு வந்து நின்னா என்ன பண்றது என்றார் வருத்தம் கலந்த குரலில்.

 

கயல்விழி ஓடிவந்து தன் தந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள், என்னை மன்னிச்சிடுங்க பா. நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். இனிமே, இப்படி செய்ய மாட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க என்றாள் அழுகையினோடு.

 

குடும்பத்தினர் அனைவருக்கும் கயல்விழியை பார்க்க பாவமாக இருக்க. வேலுச்சாமி நடப்பது அனைத்தையும் பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.

 

ஜீவா, சரி மாமா. நடந்தது நடந்து போச்சு. பாவமா இருக்கு, மன்னிச்சிடுங்க. கயல்விழி கல்யாணம் பண்ணி இருக்க பையனும் நல்ல பையன் தான். கவர்மெண்ட் வேலையில் இருக்கார்.

 

தன் மகளின் கண்ணீரிலும், அனைவரின் சமாதானத்திலும் சுப்பிரமணியன் மனம் கரைந்தது, சரி, எழுந்திரு. தப்பு பண்ணிட்டு இப்போ அழுதா என்ன பண்ண முடியும். அழாத.

 

லட்சுமி கயல்விழியின் கண்களை துடைத்தவர், சரி, என்னடி பிரச்சனை உனக்கு. ஏன் சந்தோஷமா இல்லன்னு சொல்ற.

 

அ... அம்மா... அவங்க குடும்பம் நம்மள மாதிரி வசதியான குடும்பம் இல்லைமா. அவங்க அப்பா கவர்மெண்ட் டீச்சரா இருந்து, ரிட்டயர் ஆயிட்டார். இவங்க கவர்மெண்ட் காலேஜ்ல ப்ரோபசரா இருக்காங்க. வாடகை வீடு தான். வசதி எதுவும் கிடையாது. மாச சம்பளம் வீட்டு வாடகைக்கும், வீட்டு செலவுக்குமே சரியா போயிடுது. என்னோட படிப்பு செலவுக்கு கூட பத்த மாட்டேங்குது. நானும் வருமானம் பத்தாம பார்ட் டைம் வேலைக்கு போறேன்.

 

மரகதம், இங்க பாரு கயலு. யார் யாருக்கு என்ன அமையனும்னு இருக்கோ, அதுபடி தான் நடக்கும். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை, அதில் கஷ்டம் வந்தாலும் நீ தான் அனுபவிக்கணும். இப்போ வேணும்னா கஷ்டப்படலாம். ஆனா, பிற்காலத்துல சந்தோஷமா உன் வாழ்க்கை மாறும். படிப்பு முடிஞ்சிட்டா நல்ல வேலை கிடைக்கும். கவலைப்படாத.

 

எனக்கு மட்டும் இப்படி கஷ்டப்படுற மாதிரி வாழ்க்கை அமைந்து இருக்கு. ஆனா, யாழினிக்கு நல்ல வசதியான வாழ்க்கை அமைந்து இருக்கு. அவ மட்டும் சந்தோஷமா இருக்கா. வெண்ணிலா அக்காவும் சந்தோஷமா இருக்கா. நான் தான் கஷ்டப்படுறேன்.

 

அவளின் வார்த்தையிலே அவளின் பொறாமை அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

 

ஜீவாவும், வெண்ணிலாவும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குடும்பத்தினரை பார்க்க. என்ன கூறுவது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை.

 

மரகதம், என்ன பேசுற நீ. இது நீயா தேடிகிட்ட வாழ்க்கை. உன் அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தா, இப்படி கஷ்டப்படுற குடும்பத்துல உன்னை கட்டிக் கொடுத்திருக்க மாட்டான். உனக்கு பிடிச்ச வாழ்க்கை வேணும்னு நீ தான டி போன. அப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும். அதை விட்டுட்டு, உன் அக்காவையும், தங்கச்சியையும் பார்த்து சந்தோஷமா இருக்காங்க, வசதியா வாழுறாங்கன்னா. அதுக்கு என்ன பண்ண முடியும்.

 

வசதி வேண்டாம், விரும்புனவன் தான் வேணும்னு நீ தான போன. யாழினிக்கு அமைஞ்ச வாழ்க்கை எதிர்பாராமல் அவளுக்கு அமைந்தது. உன்னை பத்தியே யோசிக்கிறியே. அவளை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா.. அக்காவுக்கு கல்யாணம்னு நினைச்சு மண்டபத்துல ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த பொண்ண புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சோம். நீ ஓடிப் போனது கூட தெரியாது. அவ மனசு என்ன பாடு பட்டு இருக்கும்.

 

கல்யாணத்துக்கு கொஞ்சம் கூட தயாரா இல்லாதவளுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டோம். இவ்வளவு நாள்ல எங்க யார்கிட்டயும் அவ பேசுனது கூட கிடையாது. அவ வீட்டுக்காரர் எங்க யார்கிட்டயும் பேச கூடாதுன்னு வச்சிருந்தார். உனக்காவது விரும்புன வாழ்க்கை அமைந்திருக்கு, கஷ்டத்தை அனுபவிக்கிறது அவ தான். நீ இல்ல என்றார் கோபமாக.

 

என்ன இருந்தாலும், நீங்க உங்க செல்ல பேத்திக்கு தான சப்போர்ட் பண்ணுவீங்க. அவளை ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணுனு தான் நானும் இத்தனை நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, அவ நல்லா விவரமா தான் இருந்திருக்கா. எனக்கு தான் விவரம் இல்லாம போயிடுச்சு. அக்கா எங்க போனா, எப்படி போனா நமக்கு என்னனு நல்ல வசதியான மாப்பிள்ளையை பார்த்ததும் கல்யாணம் பண்ணிக்கிட்டா. நான் தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்.

 

மரகதம், தேவையில்லாமல் பேசாத கயலு. யாழினி பத்தி இனி ஒரு வார்த்தை பேசுன, அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன். நீ அசிங்கப்படுத்திட்டு போனதும், நம்ம குடும்ப கவுரவத்தை காப்பாத்த அவ வாழ்க்கையவே பணயம் வச்ச குல சாமி அவ. பிடிக்குதோ, பிடிக்கலையோ அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா. உன்னை மாதிரி கிடையாது என்றார் வெடுக்கென்று.

 

லட்சுமி, போதும் கயல். நீ என்ன பேசினாலும், செஞ்ச தப்பை சரி பண்ண முடியாது. தேவையில்லாம யாழினி பத்தி இப்படி பேசாத. உன் வாழ்க்கை கஷ்டத்துல இருக்குனா, அதை எப்படி சரி பண்றதுன்னு மட்டும் பாரு. அவளுக்கு கிடைச்ச வாழ்க்கையை பார்த்து பொறாமை படாத.

 

வேலுச்சாமி பேச்சுவார்த்தையை திசை மாற்றும் பொருட்டு, சரி மா. நீ மட்டும் வந்திருக்கியே. எங்க உன் வீட்டு ஆளுங்க யாரையும் காணோம். மாப்பிள்ளை வரலையா?.

 

அப்போது தான் தன் குடும்பத்தினரை பற்றி ஞாபகம் வந்த கயல்விழி, அச்சச்சோ.. எல்லாம் சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க தாத்தா. நான் இவங்கள பார்த்ததும் இப்படியே வந்துட்டேன்.

 

சரி மா, முதல்ல போய் அவங்களை பாரு. உன் மாமியார் வீட்டு ஆளுங்களை இங்க கூப்பிட்டுகிட்டு வா.

 

தன் குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேர போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கயல்வழி, சரி தாத்தா. நான் போய் அவங்களை கூப்பிட்டு வரேன் என்று வேகமாக வெளியேறி விட்டாள்.

 

லட்சுமி செல்லும் கயல்விழியை பார்த்து கவலையாக, என்னங்க இவ இப்படி ஆயிட்டா. யாழினி பத்தி இப்படியெல்லாம் பேசுறாளே. இவ பண்ண தப்பு இவளுக்கு இன்னும் புரியலையா என்றார் கவலையாக.

 

மரகதம், விடு லட்சுமி. ரெண்டு பேரும் வசதியா வாழறாங்க. நமக்கு வசதி கம்மியா இருக்கேன்னு இப்படி எல்லாம் பேசுறா. போகப் போக சரியாயிடும்.

 

வெளியே சென்ற கயல்விழி தன் கணவன், மாமியார், மாமனார், நாத்தனார் உடன் அறைக்குள் நுழைந்தாள்.

 

சிறு தயக்கத்துடன் உள்ளே நுழைந்த மகேஷின் குடும்பத்தினரை மரகதம் பாட்டி, உள்ள வாங்க என்று அழைத்தார்.

 

சிறிது நேரம் என்ன கூறுவது, எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக இரு குடும்பத்தினரும் இருந்தனர்.

 

பிறகு பேச்சை ஆரம்பித்த வேலுச்சாமி, என்ன பண்றீங்க மாப்பிள்ளை என்று மகேஷிடம் விசாரித்தார்.

 

ஐயா, என் பெயர் மகேஷ். நான் ஒரு கவர்மெண்ட் காலேஜ்ல ப்ரோபசரா இருக்கேன். இது என்னோட அப்பா, பெயர் ராமலிங்கம். கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர். இப்போ ரிட்டயர் ஆயிட்டாரு. இது என்னோட அம்மா, தமிழ்ச்செல்வி. இவ என்னோட தங்கச்சி ராஜி, காலேஜ் படிக்கிறா.

 

ராமலிங்கம், நடந்தது, நடந்து போச்சு. சின்னஞ்சிறுசுங்க தெரியாம தப்பு பண்ணிட்டாங்க. நாம தான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் என்றார் சுப்ரமணியை பார்த்து.

 

சரிங்க சம்பந்தி. கல்யாணம் முடிஞ்சதும் கயல்விழியையும், மாப்பிள்ளையையும் விருந்துக்கு எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போகலாம்னு நினைக்கிறேன். நீங்க எல்லாரும் வரணும்.

 

தாராளமா கூப்பிட்டு போங்க. எங்களை கூப்பிட்டதே ரொம்ப சந்தோஷம். இன்னொரு நாள் கண்டிப்பா வரோம்.

 

அன்றைய இரவு கயல்விழிக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை.

 

மகேஷிடம் தன் குடும்பத்துடன் சேர்ந்ததை பற்றி மகிழ்ச்சியாக கூறிக் கொண்டே இருந்தாள். பிரிந்த உறவு ஒன்று சேர்ந்ததில் குடும்பத்தினர் அனைவருக்கும் நிம்மதி தான்.

 

மரகதம் பாட்டி இந்த விஷயத்தை வள்ளியம்மை பாட்டியிடம் கூற, மீராவின் குடும்பத்தாருக்கும் இதில் மகிழ்ச்சியே.

 

பாவம், யாழினிக்கு தான் அன்றைய இரவு தூங்கா இரவாகி போனது.

 

இது எப்படி சாத்தியம் என்று மனதிற்குள் பல்வேறுக் கேள்விகள் விடை அறியாமல் சுழன்று கொண்டே இருந்தது. அபிமன்யுவிடம் எப்படியாவது கேட்க வேண்டும் என்று நினைத்தாலும், கேட்கும் தைரியம் இவளுக்கு இல்லை.

 

அபிமன்யு தன் மனப் புழுக்கம் தீரும் வரை கொட்டும் மழையில் நனைந்தவன். எவ்வளவு நேரம் நின்றானோ அவனுக்கே தெரியவில்லை. மழை நின்றதும் தான் சூழல் உணர்ந்தவன். வீடு நோக்கி விரைந்து விட்டான்.

 

திருமண மண்டபம் முழுவதும் மங்கள வாத்தியத்தின் இசையால் மூழ்கி இருக்க. மணமகளுக்கே உரிய நாணத்துடனும், பூரிப்புடனும் மணவறையில் ஐயர் கூறும் மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.

 

பிறகு, ஐயர் கெட்டி மேளம் முழங்க, மேளதாளத்தின் இசையுடன் ஸ்வேதாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது. முந்தைய நாளின் பொலிவை முற்றிலும் இழந்து, கடமைக்கென நின்றிருந்தாள் யாழினி. விடிந்தது முதல் யாரிடமும் பெரிதாக முகம் கொடுத்து பேசவில்லை.

 

தன் மேல் எந்த தவறும் இல்லாவிட்டாலும், ஏதோ மனதின் ஒரு மூலையில் சிறு குற்ற உணர்வு அவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. தன் அக்காவின் திருமணம் நின்றதற்கு அபிமன்யு தன் மேல் கொண்டிருந்த அன்பும் ஒரு காரணம் தானே என்று.

 

கயல்விழிக்கும் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை யோசிக்கவில்லை பேதையின் மனம். யாழினியின் மாற்றத்தை உணர்ந்த குடும்பத்தார் அனைவருக்கும் என்ன காரணம் என்று ஒன்றும் புரியவில்லை.

 

மரகதம் பாட்டி யாழினியிடம், என்ன ஆச்சு யாழினி. ஏன் ஒரு மாதிரி இருக்க. மாப்பிள்ளை ஏதாவது சொன்னாரா?”.

 

பாட்டியின் கேள்விக்கு இல்லை என்னும் விதமாக தலையசைத்தாள் யாழினி.

 

அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க. நேத்து கயல் பேசினது நினைச்சு வருத்தப்படுறியா.

 

அதற்கும் இல்லை என்று தலையசைத்தாள்.

 

பின்ன உன் மனசுக்குள்ள என்ன தான் ஓடுது. வாயைத் திறந்து சொன்னா தான எங்களுக்கு தெரியும். என்னன்னு சொல்லுமா என்று வாஞ்சையாக தலையை கோதினார்.

 

ஒன்னும் இல்ல பாட்டி. காலையில சீக்கிரம் எழுந்தது கொஞ்சம் தலைவலி.

 

யாழினியின் சமாளிப்பு மரகதம் பாட்டிக்கு தெளிவாக புரிந்தாலும், ஏன் என்று தெரியவில்லை. ஓ.. சரி என்று முடித்துக் கொண்டார்.

 

திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணும், மணமகனும் அழைத்து சென்ற பின், யாழினியின் குடும்பத்தாரும் உடன் சென்று மணமகள் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பினர்.

 

ஸ்வேதாவின் அம்மா லட்சுமியிடம் இங்கேயே தங்கும் படி கூறியும் லட்சுமி, இல்ல அண்ணி. இன்னைக்கு தான் முதல் தடவையா கயலும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு வராங்க. அவங்களை அனுப்பி வச்சிட்டு வரேன் என்று விட்டு கிளம்பி விட்டார்.

 

அனைவரும் வீட்டிற்கு வந்ததும். கயலுக்கும், மகேஷிற்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். கயலுக்கு மீண்டும் தன் குடும்பத்தாருடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. அது அவளின் முகத்திலும் பிரதிபலித்தது. யாழினி இது எதிலும் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்றிருந்தாள்.

 

அபிமன்யு கூறியது போல் யாழினியிடம், கிளம்பலாமா?என்க.

 

அதற்கு சரி என்னும் விதமாக தலையசைத்தவள். தன் உடமைகளை எடுத்து வைக்க அறைக்கு சென்று விட்டாள்.

 

ஊருக்கு வரும் பொழுது இருந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் இப்போது சுத்தமாக யாழினியிடம் இல்லை. கடமைக்கென அனைத்தையும் செய்து கொண்டிருந்தாளே தவிர, எதிலும் உணர்வில்லை.

 

அபிமன்யுவும் ஊருக்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவன், யாழினியை எதுவும் கேட்கவில்லை. கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.

 

இருவரும் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே வருவதை பார்த்த குடும்பத்தார் சற்று பதட்டமாக, என்ன ஆச்சு மாப்பிள்ளை. எங்க கிளம்பிட்டீங்க. என்னம்மா கையில் பையோட வரீங்க. என்ன ஆச்சு? என்று யாழினியிடமும், அபிமன்யுவிடமும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டனர்.

 

நத்திங்.. எனக்கு ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு. சோ, நாங்க கிளம்புறோம்.

 

வள்ளியம்மை பாட்டி, அதுக்கு ஏன் டா யாழினியை கூட கூப்பிட்டுகிட்டு போற. நீ கிளம்பு, நாங்க எல்லாம் ரெண்டு நாள் இருந்துட்டு வரோம்.

 

பாட்டி.. அவளுக்கும் அங்க ஒர்க் இருக்கு.

 

அவளுக்கு என்னடா பெருசா வேலை இருக்க போகுது. கல்யாணம் இன்னைக்கு தான முடிஞ்சது. நாங்க ரெண்டு நாள்ல கூப்பிட்டுகிட்டு வந்துடறோம். நீ மட்டும் போ, அவ இங்கேயே இருக்கட்டும்.

 

இல்ல பாட்டி. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. நானும் கிளம்புறேன்.

 

மரகதம், இப்போ தான மா கல்யாணம் முடிஞ்சுது. அதான் பாட்டி சொல்றாங்ல்ல. இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு போயேன்.

 

சுப்பிரமணி, மாப்பிள்ளை யாழினியையாவது இரண்டு நாள் விட்டுட்டு போங்களேன். புள்ளையை பார்த்தே ரொம்ப நாள் ஆயிடுச்சு. இந்த கல்யாண வேலையிலயும், அவசரத்துலயும் சரியா பேசக்கூட முடியல.

 

அபிமன்யுவிற்கு இவர்கள் யாழினியிடம் அன்பாக இருப்பது போல் பேசுவது எரிச்சலை கொடுக்க, உங்களுக்காக எல்லாம் மீட்டிங்க தள்ளி வைக்க முடியாது. எனக்கு அதான் முக்கியம் என்றான் வெடுக்கென்று.

 

கயல்விழிக்கோ இங்கு நடப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. வெகு நாட்கள் கழித்து நம் வீட்டிற்கு நாம் வந்திருக்கிறோம். நம்மை விட்டுவிட்டு, யாழினியை அனைவரும் தாங்குவதும், அபிமன்யுவிடம் கெஞ்சுவதும் சுத்தமாக பிடிக்கவில்லை.

 

மரகதம் பாட்டியிடம் கயல்விழி, பாட்டி.. அவங்க தான் போறேன்னு சொல்றாங்கல்ல, விடுங்களேன்‌. எதுக்கு எல்லாம் இப்படி மாத்தி மாத்தி கெஞ்சிகிட்டு இருக்கீங்க.

 

மரகதம், வார்த்தையை விடாத கயல். ஒழுங்கா போயிடு. தேவையில்லாம பேசாத.

 

கல்யாணம் பண்ணதும் இந்த மேடம் பெரிய தியாகி ஆயிட்டாங்களா. அவளே எவன் கிடைப்பான் கல்யாணம் பண்ணலாம்னு திரிஞ்சவ. நான் இல்லன்னதும், வசதியா கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவகிட்ட நீங்க எல்லாம் இப்படி கெஞ்சறிங்க. போனா போகட்டும். நான் இங்க வந்தது இவங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கல. அதான் நான் வந்ததும் கிளம்புறாங்க.

 

யாழினியை கயல்விழியின் வார்த்தை மேலும் மேலும் காயப்படுத்த.

 

கயல்விழியிடம், அப்படியெல்லாம் இல்ல கா. நீ வந்ததுல எனக்கு சந்தோசம் தான். கல்யாணத்துக்கு முன்னாடியே மீட்டிங் இருக்கு, கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பனும்னு என்கிட்ட சொல்லிட்டாங்கக்கா. அதான் கிளம்பறோம்.

 

சும்மா நடிக்காத யாழினி. இப்படி பேசி பேசி தான், நானே உன்னை நல்லவனு இத்தனை நாள் நினைச்சுகிட்டு இருந்தேன். படிக்கணும்னா கஷ்டமா இருக்கு. கல்யாணம் பண்ணிக்க மட்டும் இனிக்குதோ. இன்னைக்கு உனக்கு ரிசல்ட் வந்துடுச்சு பாத்தியா. மேடம் எவ்வளவு மார்க் வாங்கி இருக்கீங்கன்னு தெரியுமா.. மார்க்க பத்தி நீ எங்க கவலைப்பட போற, உனக்கெல்லாம் பாஸ் ஆகுறதே பெரிய விஷயம்.

 

யாழினிக்கோ தேர்வு முடிவுகள் வெளியானதை கேட்டதும் இதயத்துடிப்பு வேகமாக ஓட ஆரம்பித்தது. இந்த திருமண அவசரத்தில் அதை மறந்து விட்டோமே என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள்.

 

என்ன முழிக்கிற.. ரிசல்ட் இன்னைக்கு தான்னு கூட மறந்துட்டியா. கவலைப்படாத நீ பயப்படுற மாதிரி எதுவும் ஆகல. பாஸ் பண்ணிட்ட.

 

இப்பொழுது தான் யாழினிக்கு அப்பாடா என்று இருந்தது.

 

அதுக்காக ரொம்ப சந்தோஷப்படுற அளவுக்கு உன் மார்க்ஸ் இல்ல. ஜஸ்ட் பாஸ்.. அவ்வளவு தான்.

 

சுப்ரமணி, இப்போ எதுக்கு நீ தேவையில்லாத பேச்சு எல்லாம் பேசிட்டு இருக்க கயல். உள்ள போ.

 

ஏன் பா. இவ்வளவு நாள் நான் இந்த வீட்டுக்கே வராம இருந்தேன்னு நினைச்சு நீங்க கொஞ்சமாவது கவலைப் பட்டீங்களா. இந்த மேடம் ஊருக்கு கிளம்புறாங்கன்னதும், புள்ள கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது. அப்படி இப்படினு என்ன எல்லாம் பேசுறீங்க.

 

யார் எப்படி போனா எனக்கு என்னனு எங்களை அசிங்கப்படுத்தி அத்தனை பேரு முன்னாடி நிறுத்திட்டு போனவ நீ. நீ இல்லைனு நான் ஏன் கவலைப்படனும். அதே அந்த மண்டபத்துல என்னுடைய மானத்தை காப்பாத்துறதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டவ என் பொண்ணு. சின்னவளா இருந்தாலும் அந்த நேரத்துல என் கண்ணுக்கு சாமியா தெரிஞ்சா. எனக்கு அவ தான் முக்கியம்.

 

சுப்பிரமணியின் வார்த்தை மேலும் கயல்விழியை தூண்ட, உங்க மானத்தை காப்பாத்த எல்லாம் இவ கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா. எப்போடா நமக்கு மாப்பிள்ளை அமையும், கல்யாணம் பண்ணலாம்னு என் கல்யாணத்துக்காக காத்துகிட்டு இருந்தா. நான் இல்லன்னதும், மாப்பிள்ளை பார்க்குற வேலை மிச்சம். நல்லா வசதியான இடம் வேற, ஆளும் பார்க்க நல்லா இருக்காரு. அதான் உடனே கட்டிக்கிட்டா.

 

அவள் கூறி முடிக்கும் முன்பு அபிமன்யு, ஏய்...! என்று கர்ஜனையாக குரல் கொடுக்க.

 

அவளின் கன்னத்தில் இடி என லட்சுமியின் கை இறங்கி இருந்தது. அதில், சுருண்டு கீழே விழுந்த கயல்விழி என்ன நடந்தது என நிதானிப்பதற்கு இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது.

 

யாழினிக்கோ கயல்விழியின் பேச்சில் மூச்சே நின்று விட்டது. தன்னை பற்றி எவ்வளவு இழிவாக இத்தனை பேரின் முன்பு பேசி விட்டாள்.

 

கயல்விழியின் பொறாமை குணத்தாலும், தாழ்வு மனப்பான்மையாளும் காயப்படும் யாழினியின் மனதை சரி செய்ய அபிமன்யு எடுக்கப் போகும் முடிவு என்ன...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5