அவனதிகாரம் - 55

 அதிகாரம் – 55

 

மகேஷிற்கும் கயல்விழியின் இத்தகைய பேச்சு பிடிக்கவில்லை. அவன் பார்த்து விரும்பிய கயல்விழி துடுக்குத்தனமாக பேசுபவள் தான். ஆனாலும், அதில் ஒரு நியாயம் இருக்கும்.

 

அவளுக்குள் இப்படி ஒரு குணம் இருப்பதை இப்போது உணர்ந்த மகேஷிற்கும், கயல்விழியின் வார்த்தைகள் அனைவரின் முன்பும் அவமானமாக இருந்தது.

 

இருந்தும், கீழே விழுந்த கயல்விழியை தூக்கி விட்ட மகேஷ், என்னாச்சு கயல் உனக்கு. நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே. ஏன் இப்படி எல்லாம் பேசுற? என்றான் கண்டிக்கும் குரலில்.

 

தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்ட கயல்விழி மகேஷின் வார்த்தையில் வெகுண்டு எழுந்தாள், பாத்தீங்களா மகேஷ். இங்க வந்த கொஞ்ச நேரத்துலயே உங்கள அவளுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி மாத்திட்டா. இதான் அவளோட குணமே. எல்லாரையும் அவளுக்கு தகுந்த மாதிரி மாத்திடுவா. நீங்க கூட என்னை புரிஞ்சுக்காம அவளுக்காக பேசுறீங்களே என்றாள் ஆதங்கமாக.

 

அனைவரின் முன்பும் மகேஷால் வேறு எதுவும் கயல்விழியை கூற முடியவில்லை. தனிமைக்காக கார்த்திருந்தான்.

 

அபிமன்யு, ஜஸ்ட் ஸ்டாப் இட்! என்று தன் கைகளை உயர்த்தி காட்டியவன்.

 

இனி என் வைஃப் பத்தி ஒரு வார்த்தை பேசுன. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான்.

 

மாம்.. நாங்க கிளம்புறோம். நீங்க எப்போ வேணும்னாலும் வீட்டுக்கு வாங்க என்று கூறிவிட்டு, யாழினியின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு சரசரவென வெளியேறி விட்டான்.

 

யாருக்கும் என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று ஒன்றும் புரியவில்லை. ஏற்கனவே, அபிமன்யு கோபக்காரன். இதில், மேலும் அவனை தூண்டும் படி கயல்விழியின் பேச்சு அமைந்துவிட்டது.

 

மாப்ள.. தம்பி.. ஒரு நிமிஷம் நில்லுங்க... நாங்க சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. என்று அனைவரின் குரலும் மாறி மாறி ஒலிக்க.

 

எதையும் சட்டை செய்யாமல் நேராக காரில் யாழினியை ஏற்றியவன், வண்டியை கிளப்பிக் கொண்டு பறந்து விட்டான். அவனின் கோபத்திற்கு தகுந்தார் போல் காரின் வேகம் அதிகரித்துக் கொண்டே போக.

 

ஒரு கட்டத்திற்கு மேல் யாழினியால் கட்டுப்படுத்த முடியாமல், ப்ளீஸ் பொறுமையா போங்க என்று கூறிவிட்டாள்.

 

திரும்பி யாழினியை அபிமன்யு பார்த்த பார்வையில் மீண்டும் திறக்காத படி அவளின் உதடுகள் இறுக்கமாக ஒட்டிக் கொண்டது. நீண்ட பயணத்திற்கு பின் கார் வீட்டை நோக்கி செல்லாமல் ஒரு பீச் ரெசார்ட்டுக்கு சென்றது.

 

யாழினி என்ன இடம் என்று தெரியாமல் திரும்பி அபிமன்யுவை பார்க்க.

 

அவளின் முகத்தை பாராமலே, இறங்கு என்று கூறியவன். காரிலிருந்து இறங்கி முன்னே நடக்க ஆரம்பித்தான்.

 

வேகமாக அவனோடு இறங்கியவள் ஓட்டமும், நடையுமாக அவனை பின் தொடர்ந்தாள். அங்கே விஐபிகளுக்கு என பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருந்த சூட் காட்டேஜுக்குள் நுழைந்தான் அபிமன்யு. அந்த ரெசார்ட்டில் பணிபுரியும் பணியாள் ஓடிவந்து கதவை திறந்து விட, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

யாழினி இருக்கும் மனநிலையில் அந்த ரம்யமான சூழல் எதுவும் கண்ணிற்கு தெரியவில்லை. தன் சிந்தனையிலேயே உழன்றுக் கொண்டிருந்தவள் அபிமன்யுவின் பின்னோடு சென்று கொண்டிருந்தாள்.

 

பணியாள் செல்லும் வரை காத்திருந்தவன் யாழினி எதிர்பாராத சமயம் அவளை அணைத்திருந்தான். யாழினியிடம் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை. அதே சமயம் ஈடுபாடும் இல்லை. ஆனாலும், இந்த மனநிலையில் அபிமன்யுவின் அரவணைப்பும் தேவைப்படும் ஒன்றாக தான் இருந்தது.

 

தன்னையும் மீறி யாழினியின் கண்கள் கண்ணீரை ஆறென பெருக்கெடுக்க. அபிமன்யு தன் நெஞ்சில் உணர்ந்த ஈரத்தின் விளைவாய் யாழினியை விட்டு விலகியவன், அவளின் முகத்தை தன் ஒற்றை கையால் நிமிர்த்தி பார்த்தான்.

 

கண்கள் சிவந்து கண்ணீருடன் கலைந்த ஓவியமாய் இருந்த யாழினியை பார்த்தவனிற்கு இனம் புரியாத பரிதவிப்பும், வலியும் ஏற்பட்டது.

 

இது என்னாலையா? என்றான் கேள்வியாக.

 

அதற்கு எந்த பதிலும் கூறாமல் தலை குனிந்த யாழினியின் செயலே சொல்லாமல் சொல்லியது நீயும் இதற்கு ஒரு காரணம் தான் என்று’.

 

அபிமன்யுவிற்கு யாரோ வெகுவாக தன் இதயத்தில் தாக்கியது போல் ஒரு வலி. ஒருவரின் வலியை மற்றொருவர் தாங்குவதும் காதலின் ஒரு அங்கம் தானே..

 

யாழினியின் வலிகள் மொத்தத்தையும் போக்க நினைத்த அபிமன்யு. மேலும், அவளை இறுக்கமாக அணைக்க. இருவருக்கும் இடையே காற்றுக்கு கூட வழியில்லை என்று கூறியது அந்த அணைப்பு... மூச்சுக்காற்றைத் தவிர...

 

அபிமன்யுவின் அணைப்பு யாழினிக்கு ஒரு வித ஆறுதலை தந்தாலும், முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் பரிதவித்தாள். சற்று நேரம் அதே நிலையில் இருந்த இருவரும் கதவு தட்டும் ஓசையில் கலைந்தனர்.

 

யாழினியின் கன்னங்களை தன் இரு கரங்களில் தாங்கியவன், யாழினி.. ப்ளீஸ் போதும் என்று தன் கட்டை விரலால் அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

 

இங்க பாரு.. அவங்க பேசுனதெல்லாம் எதுவும் மனசுல வச்சுக்காத.

 

யாழினி கலங்கிய கண்களுடன், அதுக்கு நீங்களும் தான ஒரு காரணம்.

 

இங்க பாரு யாழினி.. நான் அன்னைக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு மட்டும் தான் சொன்னேன். மணவறை வரைக்கும் ஒரு பொண்ண கொண்டு வந்துட்டு, தாலி கட்ட முடியாதுன்னு சொன்னா.. அது அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்.

 

அதனால தான் முன்னாடியே சொல்லலாம்னு நினைச்சேன். அது மட்டும் இல்ல, உங்க அக்கா வேற ஒருத்தரை விரும்புறாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும். நான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னா.. அவங்க லவ் பண்றதை பத்தி உங்க வீட்ல பேசுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்படி ஓடிப் போவாங்கன்னு நான் எதிர்பார்க்கல.

 

என்ன சமாதானம் சொன்னாலும் நீங்க பண்ணதும் தப்பு தான். இப்போ, என்னால தான் இந்த கல்யாணமே நின்ன மாதிரி ஆயிடுச்சு என்றாள் அழுகையினோடு.

 

தன் கைகளை உதறியவன், என்ன பேசுற நீ. இப்போ யாரு சொன்னா உன்னால் தான் இந்த கல்யாணம் நின்னுடுச்சின்னு. உன் அக்கா பேசுறதை உங்க வீட்டிலேயே பெருசா எடுத்துக்கல. அவங்க ஏதோ வாய்க்கு வந்ததை உளறுறாங்க. நீயும் அவங்க சொல்றது சரி தான்ன்ற மாதிரி நடந்துக்குற. அப்போ உங்க அக்கா சொன்னது எல்லாம் உண்மையா.. அக்கா இல்லைன்னதும், நீ இதான் சாக்குன்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா.

 

இதற்கு யாழினியிடம் பதில் இல்லை. மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க அவளை மெலிதாக அணைத்தவன் தலையை கோதியவாறு, ஓகே.. ஓகே.. ரிலாக்ஸ்.. நான் ஏதோ கோவத்துல அப்படி பேசிட்டேன். இந்த கல்யாணத்துக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் அம்மாவை வேண்டாம்னு சொன்ன அந்த குடும்பம் உனக்கும் வேணாம்னு நினைச்சேன். எனக்கு உன்னை முன்னாடியே தெரியும்.

 

அபிமன்யுவின் வார்த்தையில் சட்டென நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தாள் யாழினி.

 

மெலிதாக சிரித்த அபிமன்யு, ஆமா. அன்னைக்கு உங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு ஹாஸ்பிடல் வந்தோம்ல. அப்போ தான் உன்னை பார்த்தேன். நீ இந்த குடும்பத்து பொண்ணுன்னு தெரியாமலே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிடுச்சு. அதுக்கப்புறம் தான் நீ இந்த குடும்பத்து பொண்ணுனு தெரிஞ்சது. உனக்காக தான் கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளி வைக்க சொன்னேன். அப்போ தான உன்னோட ஸ்கூலிங் முடியும். ஆனா, எனக்கு எப்படி இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையோ, அதே மாதிரி தான் உங்க அக்காவுக்கும் விருப்பம் இல்லைன்னு எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.

 

சரி விருப்பமில்லாதவங்க ரெண்டு பேரும் சேராம இருந்தா, உன் அக்கா விரும்புன வாழ்க்கை அவங்களுக்கு அமையும். நான் விரும்புன வாழ்க்கை எனக்கு அமையும்னு நினைத்து தான் அன்னைக்கு அவங்க கிட்ட அப்படி பேசுனேன்.

 

அவங்க அவசரப்பட்டு ஓடிப் போவாங்கன்னு நான் எதிர்பார்க்கல. அவங்க போனதும் கல்யாணம் நின்னுடும். நான் ஆசைப்பட்ட மாதிரி உன்னை கல்யாணம் பண்ண முடியாது. அதான் கிடைச்ச சான்சை மிஸ் பண்ண கூடாதுன்னு நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்.

 

அபிமன்யு ஒவ்வொரு விஷயமாக கூற கூற யாழினிக்கு ஆச்சரியத்திலும், தனக்கே தெரியாமல் தன்னை சுற்றி இவ்வளவு விஷயங்கள் நடந்து இருக்கிறதா என்று கண்கள் பெரிதாக விரிந்து கொண்டது. அவன் கூறுவதையே வாயை திறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

அவங்க யாரும் நல்லவங்க கிடையாது யாழினி. நல்லவங்க வேஷத்துல இருக்கவங்க. நீ சின்ன பொண்ணு, உனக்கு அவங்களை பத்தி எல்லாம் எதுவும் தெரியாது. அதான் அவங்களை ஈஸியா நம்புற. என் கண்ணுல நீ படுறதுக்கு முன்னாடி, அவங்க கூட எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம். ஆனா, என் கண்ணுல நீ பட்டத்துக்கு அப்புறம் உன்னை பத்திரமா பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்கிட்ட தான் இருக்கு. இல்லைனா.. ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த உன்னை நான் ஏன் பாக்கணும்.

 

உன்னை கடவுள் ஏன் என் கண்ணுல காட்டனும். அதுக்கு இதான் காரணம்.. நீ எனக்கானவ.. எனக்கு மட்டும் தான் நீ சொந்தம். அப்போ இருந்த மைண்ட் செட்ல சரி எது, தப்பு எதுனு யோசிக்க எனக்கு டைம் இல்ல. எனக்கு தேவை உன்னை கல்யாணம் பண்ணி என்னோட கூப்பிட்டு போகணும். அவ்வளவு தான்! இதில் உன் அக்கா ஓடிப்போனது எனக்கு ஒரு விஷயமாவே தெரியல.

 

இந்த சமயத்தில் அபிமன்யுவிடம் தன் குடும்பத்தாருக்காக எதுவும் பேச முடியாது என்று எண்ணிய யாழினி அமைதி காத்தாள். ஏனெனில், அபிமன்யுவின் மனதில் இருக்கும் எண்ணம் மாறினால் தானே அவனுக்கு தன் குடும்பத்தாரை பற்றிய நல்ல அபிப்ராயம் தோன்றும்.

 

யாழினியின் மனதில் நேற்று முதல் அறித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்கலாமா, வேண்டாமா என்ற பெரும் போராட்டத்திற்கு பிறகு, ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.

 

இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இருக்கா, இல்லையானு தெரிஞ்சுக்காம நீங்க மட்டும் எப்படி முடிவு பண்ணலாம். உங்கள கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லைனா? என்றாள் கேள்வியாக.

 

படிக்குற பொண்ணுகிட்ட போய் லவ் அது, இதுனு எதுக்கு டிஸ்ட்ராக்ட் பண்ணனும்னு தான் சொல்லல.

 

யாழினியின் கன்னத்தில் கை வைத்து அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன்.

 

அவளின் கண்ணோடு தன் கண்களை கலக்கவிட்டவாறு, விருப்பம் இல்லையா? என்றான் இவனும் கேள்வியாக.

 

இந்த கேள்வியை திருமணம் முடிந்த ஆரம்ப காலத்திலோ, அல்லது திருமணத்தன்றோ கேட்டிருந்தால்...

 

கண்டிப்பாக விருப்பம் இல்லை என்று கூறியிருப்பாள். ஆனால், இப்பொழுது அப்படி இல்லையே.. அவளே அறியாமல் அவளின் மனதிற்குள் சத்தம் இன்றி நுழைந்து விட்டான் அபிமன்யு.

 

ஆனாலும், அதை அபிமன்யுவிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள யாழினியின் மனம் முரண்டு பிடித்தது. ஏற்கனவே, தன் அக்கா தன்னை பற்றிய ஒரு தவறான பிம்பத்தை அனைவரின் முன்பும் கூறி இருக்க.

 

இப்பொழுது விருப்பம் என்று கூறினால் அவள் கூறியது உண்மை என்று ஆகிவிடும் அல்லவா என்ற எண்ணமும் மூளைக்குள் ஓட, தடுமாற்றத்துடன் இல்லை என்னும் விதமாக தலையசைத்தாள்.

 

யாழினியின் பதிலில் சட்டென்று அவளை விட்டு விலகியவன். வேறு புறம் திரும்பி தன் கோபத்தை கட்டுப்படுத்த சற்று நேரம் போராடி அதில் வெற்றியும் கண்டான்.

 

இவளுக்காக தான நாம இவ்வளவு பண்ணி இருக்கோம். இது எதுவுமே இவளுக்கு புரியலையா? இல்ல, புரியாத மாதிரி இருக்காளா? இவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது என்று எண்ணி குழம்பிப் போனான்.

 

யாழினி அபிமன்யுவின் திடீர் விலகளில் சற்று பயத்துடன் அபிமன்யுவை பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள். தன் தலையை கோதி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்.

 

யாழினியை பார்த்து, விருப்பம் இல்லாம யாரும் கஷ்டப்பட்டு என் கூட இருக்கத் தேவையில்லை. வெளியில் போ என்றான் முகத்தில் அடித்தது போல்.

 

அபிமன்யுவின் வார்த்தை யாழினிக்கு ஏனோ பெரும் வலியை ஏற்படுத்த சட்டென கண்கள் கலங்கிவிட்டது. எதுவும் கூறாமல் தலை குனிந்து அமைதியாக நின்று இருந்தாள்.

 

என்ன.. அதான் பிடிக்கலைனு சொல்லிட்டல்ல.. போ டி என்று வாசலை நோக்கி ஒரு அடி அவளை தள்ளியவன்.

 

போய் உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ. யாருடைய சந்தோஷத்தையும் நான் கெடுக்க விரும்பல என்றவன்.

 

அவள் அதே நிலையில் நின்று இருப்பதை பார்த்து, அவளின் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்று போய் விட்டுவிட்டு அறைக் கதவை படார் என அடித்து சாற்றி விட்டு உள்ளே சென்று விட்டான்.

 

அபிமன்யுவின் செயல் ஒரு புறம் யாழினிக்கு பெரும் அவமானமாக இருந்தது, கண்களில் கண்ணீர் சுரக்க அதை பெரும் பாடுபட்டு கட்டுப்படுத்தியவள்.

 

இது எந்த இடம் என சுற்றி முற்றி பார்த்தாள். ஒன்றும் விளங்கவில்லை. அந்த இடம் முழுக்க அழகிய ரம்யமான சூழலே சூழ்ந்து இருந்தது. ஆயினும், இதுவரை யாழினி வந்திராத இடம். எங்கே செல்வது, யாரிடம் உதவி கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை.

 

கையில் பணமும் இல்லை, உதவிக்கு யாரையும் அழைக்க தொலைபேசியும் இல்லை. தன் நிலையை எண்ணியவளிற்கு திடீரென தன் அக்காவின் பழி சொல் நினைவில் வந்தது.

 

வசதியான மாப்பிள்ளை.. அழகா வேற இருக்கார்.. என்று அவள் கூறியது மனக்கண் முன் வந்து போக ஒரு விரக்தி புன்னகை அவளின் இதழில் குடி கொண்டது. மெதுவாக வெளியேற எண்ணி நடந்து சென்றவள்.

 

அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். சுற்றி முற்றி பார்க்க அனைத்து இடமும் ஒன்று போல காட்சியளித்தது. எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை.

 

எந்த அறையில் அபிமன்யு இருக்கிறான் என்பதும் தெரியவில்லை. இருட்ட ஆரம்பிக்கவும் சற்று பயமும் தொற்றிக் கொள்ள, என்ன செய்வது என்று புரியாமல் திருதிருத்தப்படி அமர்ந்திருந்தாள்.

 

அறையிலோ அபிமன்யு யாழினி மேலிருந்த கோபம் தீரும்  வரை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்தான்.

 

உனக்காக நான் எவ்வளவு பண்றேன். உனக்கு எதுவுமே புரியலையா. இதுக்கு மேல எப்படி உனக்கு புரிய வைக்கிறதுன்னு எனக்கு ஒன்னும் தெரியல. என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா. இவ்வளவு நாள்ல என்னை பத்தி நீ புரிஞ்சுக்கவே இல்லையா. ஷிட்.. ஸ்டுப்பிட்.. ஸ்டுப்பிட்.. உன் வீட்டு ஆளுங்க உனக்கு விருப்பம் இருக்கா, இல்லையானு தெரிஞ்சுக்காமலே உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க.

 

அவங்க எல்லாரையும் உனக்கு புடிச்சிருக்கு. உன்னை பத்தி உன் அக்கா எப்படி தப்பா பேசுறாங்க, அவங்களை கூட புடிச்சிருக்கு. என்னை மட்டும் புடிக்கலையா.. இடியட்.. என்று திட்டியபடி இருந்தான்.

 

கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்து விட, எங்கே செல்வது என்று தெரியாமல் பரிதவிப்புடன் அமர்ந்திருந்தாள் யாழினி. அப்போது தனக்கு பின்னே திடீரென கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க.

 

அங்கே இருவர் யாழினியை பார்த்து வித்தியாசமாக சிரித்தபடி நின்று இருந்தனர்.

 

என்ன பாப்பா.. இங்க நிக்குற.. யாரை பாக்க வந்த? என்று ஒருவன் கேட்க.

 

அவன் அருகில் நின்றிருந்த ஐம்பது வயதிற்குரிய ஒருவனோ, என்ன வந்த வேலை முடிந்ததும் துரத்தி விட்டுட்டாங்களா. இல்ல, அடுத்த வேலைக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கியா.

 

அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது புரியாமல், இருவரையும் பயந்த பார்வை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் யாழினி.

 

என்ன.. ஒன்னும் தெரியாத மாதிரி பாக்குற.

 

என்னடா இவ கிட்ட போய் கேள்வி கேட்டுகிட்டு இருக்க. இதெல்லாம் பெரிய இடத்துல வழக்கமா நடக்கிறது தான.

 

யாழினிக்கு இவர்களின் பேச்சும், பார்வையும் ஏதோ தவறாக படவும் அங்கிருந்து நகர முற்பட்டாள்.

 

யாழினியை வழி மறைத்தபடி ஒருவன் வந்து நின்று கொண்டு, என்ன பாப்பா எங்க போற? என்று ஒரு மார்க்கமாக சிரித்தபடி கேட்கவும்.

 

யாழினிக்கு இதயத்துடிப்பு வேகமாக துடிக்க தொடங்கியது. சுற்றி முற்றி அபிமன்யு எங்கேனும் தெரிகிறானா என்று தன் பார்வையை அலசி பார்த்தாள். எங்கும் அபிமன்யு தென்படவில்லை.

 

மேலும், இதயத்துடிப்பு தாறுமாறாக எகுற, அண்ணா.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. நான் என் வீட்டுக்காரர் கூட தான் இங்கு வந்தேன் என்றாள் திக்கி திணறி.

 

உன் வீட்டுக்காரரா.. எங்க காட்டு.. வீட்டுக்காரர் கூட வந்துட்டு எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்க.

 

யாழினிக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. இங்கிருந்து சென்றால் போதும் என்று எண்ணியவள். வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

 

அவளை பின்தொடர்ந்த இருவரும், எங்க போற என்று ஏதேதோ பேசியபடி இவளின் பின்னே நடக்க.

 

பயத்தில் ஓட ஆரம்பித்து விட்டாள். எதிரே யாரின் மீதோ மோதியவள், சாரி.. சாரி.. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க என்று கூறிக் கொண்டே நிமிர்ந்து பார்க்க.

 

யாழினியின் பதட்டத்தைக் கண்ட ஆரியன், ஹே.. யாழினி.. என்ன ஆச்சு? ஏன் இப்படி பயந்து போய் ஓடுற? என்றான் அவளின் கையைப் பிடித்த படி.

 

பதட்டத்திலும், பயத்திலும் ஓடிக்கொண்டிருந்த யாழினி ஆரியனை சற்றும் இங்கே எதிர்பார்க்கவில்லை.

 

ஆரியனை கண்டதும் புது நம்பிக்கை பிறக்க. மகிழ்ச்சியில் பேசமுடியாமல் அழுகை வந்துவிட்டது. சரியாக அந்த நேரம் அபிமன்யுவும் யாழினியை தேடிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான்.

 

தன் கோபத்தாலும், பிறர் மேல் இருக்கும் வெறுப்பாலும் தேவை இல்லாமல் யாழினியை காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை அபிமன்யு உணர்வது எப்போது...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5