அவனதிகாரம் - 59
அதிகாரம் – 59
அன்று
அபிமன்யு கோபமாக யாழினியை அவளின் வீட்டிலிருந்து அழைத்து வந்த பிறகு அவளின்
பெற்றோருக்கும், தாத்தா, பாட்டிக்கும் பெரும் வருத்தமாகிப் போனது.
சில
நாட்கள் கழித்து லட்சுமி, “என்னங்க இப்போ தான் மாப்பிள்ளை
கொஞ்சம் மனசு மாறுன மாதிரி தெரிஞ்சது. அதுக்குள்ள இந்த கயல் என்ன என்னமோ பேசி
திரும்ப அவரை கோபப்படுத்திட்டாளே” என்றார் வருத்தமாக.
“மூணு பேரையும் நாம ஒரே மாதிரி தான
வளர்த்தோம் லட்சுமி. இவள் மட்டும் ஏன் இப்படி இருக்கானு தெரியலையே. ரெண்டு
பொண்ணுங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கு. இவ அவளுக்கு புடிச்ச வாழ்க்கை தான் வேணும்னு போனா, இப்போ
வந்து கஷ்டப்படுறேன்னு கண்ணை கசக்கிக்கிட்டு நின்னா நம்ம என்ன பண்ண முடியும்.
அவங்களுக்கு பண உதவி செய்யுறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல லட்சுமி.
ஆனா,
உன் பொண்ணுக்கு இன்னும் திமிர் அதிகமாயிடும். நம்மகிட்டயே இந்த பேச்சு பேசுறா அவ,
அங்க இருக்கவங்களை எப்படி மதிப்பா. எங்க அப்பா வீட்டில் இருந்து வந்தது தானே
இதெல்லாம்னு அவங்க கிட்ட திமிரா நடந்துக்கிட்டா அவ வாழ்க்கையே அதனால் வீணா போக கூட
சந்தர்ப்பம் இருக்கு.
எவ்வளவு
கஷ்டம் இருந்தாலும் அதை அவங்களே புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து முன்னேறி வரட்டும்.
அப்போ தான் வாழ்க்கைனா என்னனு அவளுக்கு புரியும். இப்போ உன் பொண்ணு ஒன்னும் அங்க
சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இல்லையே.
இங்க
சின்னதுல இருந்து சொகுசாவே வளர்ந்து பழக்கப்பட்டவளுக்கு அங்க ஏழ்மையான
குடும்பத்தில் சமாளிக்க கஷ்டமா இருக்கு. அதான் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு
இருக்கா. மத்தபடி, அங்க யாரும் இவளை எந்த கொடுமையும் பண்ணல. சாப்பாடு இல்லாமல் பட்டினியும் போடல.
அப்படி ஏதாவது ரொம்ப கஷ்டம்னா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பேனா. என்ன
இருந்தாலும் நம்ம பொண்ணாச்சே நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாதே”.
“எனக்கு அவளை நினைச்சு கவலை
இல்லைங்க. வருத்தம் தான் இருக்கு. அவ செஞ்ச தப்பை அவ தங்கச்சி சரி பண்ணி இருக்கா.
அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம பாவம், அந்த பொண்ண வார்த்தையால இப்படி வதைக்கிறாளே.
யாழினி
புருஷன் அவ நம்ம கிட்ட பேசக்கூடாதுன்னு வச்சிருக்காரு. அவரை இன்னும் கொம்பு சீவுற
மாதிரி இவ நடந்துக்குறதால யாழினியோட வாழ்க்கைக்கு எங்க பிரச்சனையாகிடுமோனு தாங்க
பயமா இருக்கு”.
“எனக்கும் அந்த கவலை இருக்கு
லட்சுமி. அவசரப்பட்டுட்டோமோன்னு கூட தோணுது”.
இவர்கள்
இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மரகதம் பாட்டி, “என்ன பேசுற சுப்ரமணி. பொண்ண கட்டி கொடுத்து வாழ்ந்துக்கிட்டு
இருக்கா. இப்போ போய் அவசரப்பட்டுட்டேன் அது இதுனு பேசிகிட்டு இருக்க. என்ன
இருந்தாலும், அவன் உன் தங்கச்சி பையன். உண்மை தெரியாம தான் இப்படி எல்லாம்
நடந்துக்குறான். என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் அவனுக்கு உண்மை தெரிய வரும்”.
“அதுக்காக.. அவனுக்கு உண்மை
தெரியுற வரைக்கும் என் புள்ளையை கஷ்டப்பட சொல்றீங்களா அங்க இருந்து. நம்ம வீட்ல
குழந்தைமா அவ. இப்போ அங்க எவ்வளவு கஷ்டப்படுறான்னு பாத்தீங்கல்ல. எல்லாம் என்னோட
தப்பு தான். மாப்பிள்ளையோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம கட்டிக்
கொடுத்துட்டேன்”.
“இங்க பாரு சுப்பிரமணி. நீ
நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. அவருக்கு நம்ம மேல கோவம் இருக்கு அது உண்மை
தான். ஆனா, யாழினி கிட்ட அதை காட்ட மாட்டார். நம்ம மேல எந்த அளவுக்கு அவருக்கு
கோபம் இருக்கோ. அதே அவளுக்கு அன்பும், பாசமும் அவருக்கு யாழினி மேல இருக்கு”.
“என்ன தான் அவர் பாசமா
பாத்துக்கிட்டாலும், அன்பா நடந்துக்கிட்டாலும் பெத்தவங்க கிட்ட பேசணும்னு
யாழினிக்கு தோணும்ல அத்த. நம்ம நினைப்பெல்லாம் வரும்ல. நம்ம யாருகிட்டயுமே
பேசக்கூடாதுன்னு வச்சி இருக்கார்.
அவளுக்கு எவ்வளவு
வருத்தமா இருக்கும். உள்ளூரில் கட்டிக் கொடுத்திருக்க வெண்ணிலாவே இரண்டு நாளைக்கு
ஒரு தடவை நம்மள பார்க்க வந்துடுறா. கேட்டா, உங்க ஞாபகமா இருக்குனு சொல்றா.
யாழினியை ரொம்ப தூரத்தில் கட்டி கொடுத்துட்டோம். பார்க்க தான் முடியாது. ஆனா,
பேசக்கூட கூடாதுனா அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்”.
வேலுச்சாமிக்கு
லட்சுமியின் வருத்தமான வார்த்தைகள் காதில் விழ, “என்னை மன்னிச்சிடுப்பா. என்னால தான் இந்த பிரச்சனை எல்லாம்
ஆரம்பிச்சது. நான் வேணும்னா மாப்பிள்ளை கிட்ட பேசி பார்க்கவா”.
“அப்பா முதல்ல நீங்க இங்க
உட்காருங்க. எந்த பிரச்சனையும் இப்போ இல்ல. சீக்கிரமே மாப்ள நம்ம மனசை
புரிஞ்சுகிட்டார்னா போதும். எல்லா பிரச்சனையும் சரியா போயிடும். உங்களுக்கே உடம்பு
சரியில்ல. தேவையில்லாம எதையாவது போட்டு யோசிச்சு இன்னும் உடம்பை கெடுத்துக்காதீங்க.
இப்போ
என்ன லட்சுமி உனக்கு வருத்தம். யாழினி நம்ம கிட்ட பேச முடியாம கஷ்டப்படுவா அதான.
சரி, கிளம்பு.. நாம ஒரு எட்டு போய் புள்ளையை பார்த்துட்டு, அவளுக்கு ஒரு போன்
வாங்கி கொடுத்துட்டு வருவோம். அதுக்கப்புறம் அவ தினமும் உன்கிட்ட பேசவா சரியா”.
லட்சுமி
ஆவலாக, “நிஜமாவாங்க சொல்றீங்க..”.
“நிஜமா தான் சொல்றேன். போய்
கிளம்பு”.
அப்பொழுது
வீட்டினுள் தன் கணவருடன் நுழைந்த கயல்விழி, “என்னம்மா ரொம்ப சந்தோஷமா கிளம்புற போலருக்கு. எங்க
கிளம்புறீங்க?” என்று கேட்டபடி உள்ளே
நுழைந்தாள்.
லட்சுமி,
“யாழினியை பார்க்க போறோம்.
அன்னைக்கு ஊருக்கு போனதுக்கு அப்புறம் அவ கிட்ட பேசக்கூட முடியல. பாவம், அங்க என்ன
சூழ்நிலையோ தெரியல. அதான் போய் பார்த்துட்டு வந்துடலாம்னு கிளம்புறோம்”.
கயல்விழி
ஏதோ சிந்தித்தவள், “அம்மா நாங்களும் வரட்டுமா?”.
மரகதம்,
“ஏன் இங்க வச்சு அவளை பேசுனது
பத்தலையா. அங்க வேற போய் பேசணுமா?”
என்றார் கோபமாக.
“இல்ல பாட்டி. அன்னைக்கு நான் எதோ
கோவத்துல பேசிட்டேன். நடந்தது நடந்திடுச்சு. இனிமே எதையும் மாத்த முடியாது.
அதுக்காக அவ வீட்டுக்காரர் மேல எந்த தப்பும் இல்லைனு நினைச்சுக்காதீங்க. எனக்கும்
மனசு கேட்கல, அதான் அவளை பாக்கணும் போல இருக்கு”.
மரகதம்,
“சரி சுப்பிரமணி. அப்போ எல்லாருமே
போயிட்டு வந்துருவோம்”.
“சரிங்கம்மா. நான் வண்டிக்கு
சொல்லிடுறேன்”.
தன்
குடும்பத்தினர் தன்னை பார்க்க வருவது தெரியாமல் யாழினி அங்கே ஷாப்பிங் மால்லை ‘ஆ’வென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள்
வருவது வள்ளியம்மை பாட்டியின் மூலமாக ஆரியனுக்கு தெரிந்துவிட. அவன் யாழினிக்கு
இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என அவளின் குடும்பத்தினர் வருவதைப் பற்றி அவளிடம் கூற
வேண்டாம் என வள்ளியம்மை பாட்டியிடம் கூறிவிட்டான்.
யாழினியின்
குடும்பத்தினருக்கும் அபிமன்யு கோபமாக இருப்பதினால் அவர்களின் வீட்டிற்கு செல்ல
ஒரு மாதிரியாக இருக்க. அவர்களும் இப்படி வெளியில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்.
மகேஷ், “இங்க பாரு கயல். தேவையில்லாம இனிமே நீ உன்
தங்கச்சியை பத்தி வார்த்தையை விடாத. அவ இப்போ இன்னொருத்தருக்கு பொண்டாட்டி
ஆயிட்டா. அவ யாரை கல்யாணம் பண்ணா உனக்கு என்ன. நீ ஏன் தேவையில்லாமல் அவளை பத்தி
தப்பா பேசுற”.
“சாரி மகேஷ். ஏதோ கோவத்துல அப்படி
பேசிட்டேன். எல்லா தப்பும் என் மேல மட்டும் தான்ற மாதிரி எல்லாரும் என்கிட்டயே
கோபத்தை காட்டுறாங்க. அவளுடைய புருஷன் பண்ண தப்பு யாருக்கும் தெரியலையே. அதான்
அப்படி பேசிட்டேன்”.
“சரி. இனிமே பார்த்து நடந்துக்கோ.
நம்ம மரியாதையை நம்ம தான் காப்பாத்திக்கணும்”.
மகேஷின்
வார்த்தை கயல்விழியை சிந்திக்க தூண்ட, “ஆமா.
யாழினி மேலே இந்த விஷயத்தில் எந்த தப்பும் இல்லையே. அவளுக்கே தெரியாம அபிமன்யு
அவளை விரும்பி இருக்கார். இந்த விஷயத்துல நம்ம யாழினி மேல எந்த தப்பும் சொல்ல
முடியாது. தேவையில்லாம அவர் மேல இருந்த கோபத்தை இவகிட்ட காட்டிட்டேன். பாவம்” என்று வருந்தினாள்.
அதன்
விளைவு தானும் யாழினியைக் காண உடன் வருவதாக கூறி தன் குடும்பத்தாருடன்
கிளம்பியுள்ளனர்.
ஆரியன்,
“ஆரணி இந்த ட்ரெஸ்ஸை துவைச்சு போடுறது
பத்தி எல்லாம் உனக்கு ஒன்னும் தெரியாதா”.
“ஏன் இப்படி கேக்குற?”.
“இல்ல நீ எடுத்து இருக்க டிரஸ்
பார்த்தா ஒரு வருஷத்துக்கு வரும் போலருக்கு”.
அவனை
முறைத்துப் பார்த்த ஆரணி, “அம்மா இவனை பாருங்க. தேவையில்லாம
என்னை டென்ஷன் பண்றான்”.
மீரா, “நீ சும்மா இரு ஆரி. அவ எதையும் பைனல்
பண்ணல. பாத்துட்டு தான இருக்கா”.
“இதுக்கு தான் இந்த பொண்ணுங்க கூட
ஷாப்பிங் வரக்கூடாதுன்றது. அண்ணனை பாருங்க டைரக்டா வரேன்னு சொல்லி எப்படி எஸ்கேப்
ஆயிட்டார். நான் தான் விவரம் தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்”.
வள்ளியம்மை,
“ரொம்ப புலம்பாத டா. அதோ உங்க
அண்ணனும் வந்துட்டான். ரெண்டு பேரும் போய் ஓரமா நில்லுங்க”.
ஆரணி
கடைக்குள் புகுந்தது முதல் இது வேண்டும், அது வேண்டும் என்று எடுத்து அடுக்கிக்
கொண்டே போனாள்.
ஆனால்,
யாழினிக்கு எதையுமே வாங்க வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த இடத்தை சுற்றிப்
பார்ப்பதே அவளிற்கு பிடித்திருந்தது.
ஆரியன்
அபிமன்யுவை பார்த்ததும் அவசரமாக அவன் அருகில் ஓடியவன், “அண்ணா வந்துட்டீங்களா. இங்க வாங்க” என்று அவனின் கையைப் பிடித்து இழுத்தபடி ஆரணியிடம் வந்தான்.
“இங்க பாருங்கண்ணா. எவ்வளவு ட்ரெஸ்
கலச்சி போட்டு வச்சிருக்கா. ஆனா, இன்னும் ஒன்னு கூட எடுக்கல”.
“இன்னைக்கு கடைக்கு வந்ததே
அவளுக்கு ஷாப்பிங் பண்ண தான, அவ பொறுமையா பண்ணட்டும். நீ ஏன் இப்படி அவளை
அவசரப்படுத்துற”.
“நல்லா சொல்லுங்க அண்ணா. என்னை
டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கான்”.
ஆரியன்
அபிமன்யு தன் சார்பாக பேசுவான் என்று எண்ணியிருக்க. அவனோ ஆரணிக்கு சார்பாக
பேசினான். இருந்தும், அவனின் கண்கள் யாழினியை தேடிக் கொண்டிருந்தது.
அவனின்
தேடலை உணர்ந்த ஆரியன், “நீங்க தேடுற ஆளு அங்க இருக்காங்க” என்று தூரத்தில் ஒரு உடையை தடவிப்
பார்த்துக் கொண்டிருந்த யாழினியை கை காட்டினான்.
பதில்
எதுவும் கூறாமல் அபிமன்யு யாழினி இருக்கும் திசை நோக்கி செல்ல. அபிமன்யுவை
பின்தொடர்ந்து சென்றான் ஆரியன்.
அபிமன்யு,
“உனக்கு இது பிடிச்சிருக்கா” என்றான் யாழினியின் காதருகில்.
அதில்
திடுக்கிட்டு திரும்பியவள். அபிமன்யு நிற்பதை கண்டு, “நீங்க எப்போ வந்தீங்க. நான் சும்மா தான் பார்த்துக்கிட்டு
இருந்தேன்”.
“உனக்கு ஏதாவது வேணும்னா
வாங்கிக்கோ”.
“எனக்கா.. என்கிட்ட தான் டிரஸ்
எல்லாம் இருக்கே”.
அபிமன்யு
இவளிடம் பேசினால் வேலைக்காகாது என்று எண்ணியவன். அவளின் கையைப் பிடித்து ஆரணி
இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்.
அங்கே
வேலை செய்யும் பணியாளரிடம், “எக்ஸ்கியூஸ் மீ. இவங்க சைஸ்ல
டிரஸ் காட்டுங்க”.
யாழினி
எக்கி அபிமன்யுவின் காதருகில், “என்கிட்ட தான் டிரஸ் இருக்குன்னு
சொல்லிட்டேனே. அப்புறம் ஏன் காட்ட சொல்றீங்க. ஆரணிக்கு தான டிரஸ் வாங்க வந்தோம்”.
“அதனால என்ன.. நான் உனக்கு தான்
வாங்க வந்தேன்”.
இவ்வளவு
நேரம் இவர்களையே பின் தொடர்ந்த ஆரியன் அபிமன்யுவின் வாயிலாகவே அவன் இங்கு வந்த
காரணத்தை தெரிந்து கொண்டு.
“பார்த்தீங்களா அம்மா, பாட்டி நான்
சொல்லும் போது நம்பல. என்னடா எப்பயுமே நம்ம கூட வராத அண்ணன் திடீர்னு வரேன்னு
சொல்றாருன்னு நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு. இந்த மேடம்க்கு டிரஸ் வாங்க தான்
அண்ணா நம்ம கூட வந்திருக்காரு” என்று யாழினியை காட்ட.
யாழினிக்கு
அனைவரின் முன்பும் ஆரியன் இப்படி கூறியது சங்கடமாகிப் போனது.
“இப்போ அதுக்கு என்ன. நான் என்
பொண்டாட்டிக்கு டிரஸ் வாங்கி தர கூடாதா?”.
“ஆனா நான் கேட்டப்போ நீங்க வீட்ல
சொல்லவே இல்லையே”.
“நீ வீட்ல யாருக்கு வாங்க
போறீங்கன்னு கேட்கவே இல்லையே”.
வள்ளியம்மை,
“ஏன்டா ஏழு கழுதை வயசாகுது உனக்கு.
வேற வேலையே இல்லையா.. எப்போ பார்த்தாலும் சின்ன புள்ளத்தனமா அவங்களையே நோட்டம்
விட்டுக்கிட்டு இருக்க. அவன் பொண்டாட்டிக்கு அவன் வாங்கி தரான். இதில் உனக்கு
என்னடா பிரச்சனை. போ.. ஆம்பள பசங்க துணி எங்க இருக்குனு பார்த்து அங்க போய் வாங்கு”.
ஆரியன்,
“நான் எப்போ என்ன சொன்னாலும்
எல்லாருமே அண்ணாவுக்கு தான் சப்போர்ட். எனக்கு சப்போர்ட் பண்ண இந்த வீட்ல யாருமே
இல்ல. போங்க நான் கிளம்புறேன்” என்று திரும்பியவன்.
அவசரமாக
யாழினியின் அருகில் வந்து அவளின் கண்களை மூடினான்.
“என்ன பண்ற ஆரி. கையை எடு”.
அபிமன்யு
கோபமாக, “இது என்ன விளையாடுற இடமா ஆரியன்.
கையை எடு முதல்ல”.
“யாழினிக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு
தான் இப்படி எல்லாம் பண்றேன். பாட்டி அங்க பாருங்க” என்று கண்களால் யாழினியின் குடும்பத்தினர் வருவதை
காட்டினான்.
அவர்களை
கண்ட மீராவும், வள்ளியம்மை பாட்டியும் அவர்களை நோக்கி சென்றுவிட. அபிமன்யுவிற்கு
அவர்களை பார்த்ததும் பிபி ஏற தொடங்கியது.
அபிமன்யு
ஆரியனை கோபமாக பார்த்து, “என்ன இது?” என்றான் குரலில் எரிச்சலோடு.
அபிமன்யுவின்
குரலில் ‘எதுவோ சரி இல்லை’ என்று தோன்ற. யாழினி தன் கண்களை மூடி
இருந்த ஆரியனின் கைகளை எடுத்துவிட்டவாறு பார்க்க. தன் குடும்பத்தினரை அவள் இங்கே
எதிர்பார்க்கவில்லை.
அவர்களை
நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க முயன்றவளின் கையை பற்றி தன் அருகிலேயே நிறுத்திக்
கொண்டான் அபிமன்யு. அபிமன்யுவின் செயலில் அவனை மீறி செல்ல முடியாமல் யாழினிக்கு
கண்கள் கலங்கிவிட்டது.
கலங்கிய
கண்களுடன் அபிமன்யுவை இறைஞ்சலாக பார்க்க. அபிமன்யுவின் காதல் கொண்ட மனம் ஒரு
நொடியில் கரைந்து விட்டது.
யாழினிக்கு
மட்டும் கேட்கும் குரலில், “இந்த ஒன் டைம் மட்டும் தான். நோ
மோர் எக்ஸ்கியூஸஸ்” என்று குறிவிட்டு கையை எடுத்துக்
கொண்டான்.
“நாம என்ன தான் நினைச்சாலும் அவளை
பார்த்தாலே நம்ம மனசு மாறிடுது. இனிமே அவளோட ஃபேஸை பார்க்கவே கூடாது” என்று முணுமுணுத்தவாறு அவர்களை நோக்கி
முன்னேறாமல் அங்கேயே நின்று விட்டான்.
மீராவும்,
வள்ளியம்மை பாட்டியும் அவர்களிடம் நலம் விசாரிக்க. அவர்களை நோக்கி வந்த யாழினி தன்
தாயை கட்டிக்கொண்டாள்.
ஏனோ
அவளிற்கு இந்த அரவணைப்பு தேவைப்பட்டதாக இருந்தது. என்ன தான் தன் வீட்டினர் முன்பு
தான் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக் கொள்ள நினைத்தாலும், தன் மனதில்
இருப்பதை வெளிப்படையாக கூற முடியாமல் மறைக்கும் ஒவ்வொரு தருணமும் மனதிற்குள்ளேயே
உடைந்து போகிறாள். பாவம், அவளும் என்ன தான் செய்வாள்.
பெரும்
பாடுபட்டு வெளியேறத் துடிக்கும் கண்ணீரை தன் உதடு கடித்து உள் இழுத்துக் கொண்டாள்.
வேதனையால் ஏற்படும் கண்ணீரை கூட, ஆனந்த கண்ணீராய் மாற்றக் கற்றுக் கொண்டாள்
யாழினி.
பின்
இயல்பாக, “அப்பா, பாட்டி என்ன எல்லாம்
திடீர்னு இங்க வந்து இருக்கீங்க வீட்டுக்கு வராமல். நீங்க வரிங்கன்னு முன்னாடியே
சொல்லி இருந்தா நான் வீட்டில் இருந்து இருப்பேன்ல”.
திருமணம்
முடிந்த பிறகு ஏற்படும் பிரச்சனைகளால் வேலுச்சாமி தாத்தாவிற்கு தான் தவறு செய்து
விட்டோமோ என்று மனம் உறுத்தலாகவே இருந்தது. இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கையில்
அபிமன்யுவை நோக்கி விரைந்தவர்.
அவனின்
கையை பிடித்துக் கொண்டு, “தம்பி எங்க மேல ஏதாவது கோபம்
இருந்தா அதை என் பேத்தி மேல காட்டிடாதப்பா. பாவம், அவ விளையாட்டு பொண்ணு. உனக்கு
என் பேத்தியை கட்டி வைக்கணும்னு நான் தான் ஆசைப்பட்டேன். ஆனா, நடக்கிறது எல்லாம் பார்க்கும்போது தப்பு பண்ணிட்டேன்னு
மனசு உறுத்தலா இருக்கு. என்னால தான் என் பேத்தியோட வாழ்க்கை வீணாயிடுச்சோன்னு மனசு
பாரமா இருக்கு. உனக்கு என்ன கோபம் இருந்தாலும் எங்க மேல காட்டுப்பா அவக்கிட்ட
காட்டிடாத”.
அவரின்
கையை கோபமாக உதறியவன், “என்ன பேசுறீங்க நீங்க. என்
பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கே சொல்லிக் கொடுக்கிறீர்களா.
உங்களுக்கு தான் பொம்பள புள்ளைங்களே பிடிக்காதே. இப்போ மட்டும் என்ன பேத்தியை
தாங்குறீங்க. இந்த நடிப்புக்கெல்லாம் உங்க பேத்தி வேணும்னா மயங்குவா. ஆனா,
என்கிட்ட உங்க நடிப்பு வேலைக்காகாது”.
இவர்களின்
பேச்சு வார்த்தையை கவனித்த யாழினி, எங்கே தாத்தாவிடம் ஏதேனும் கோபமாக பேசி விடுனோ
என்று பயந்து இவர்களிடம் விரைந்தாள்.
“என்னாச்சு தாத்தா. ஏன் முகமே
சரியில்ல ஒரு மாதிரி இருக்கீங்க” என்று கேட்டபடி அபிமன்யுவையும்,
தாத்தாவையும் மாற்றி மாற்றி பார்க்க.
“அது ஒன்னும் இல்லைமா. இவ்வளவு
தூரம் காரில் வந்தது அசதியா இருக்கு அவ்வளவு தான்”.
“சரி வாங்க தாத்தா வீட்டுக்கு போய்
கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்” என்று கூறிவிட்டு திரும்ப
எத்தனிக்க.
அவளின்
கையை பிடித்து தடுத்த அபிமன்யு, “எங்க கிளம்பிட்ட. ஷாப்பிங் பண்ண
வேண்டாமா”.
“அது இன்னொரு நாள் பண்ணிக்கலாமே.
வீட்டில் இருந்து எல்லாம் வந்திருக்காங்க. டயர்டா இருப்பாங்க வீட்டுக்கு போகலாமே”.
“இப்போ இவங்களை யாரு கூப்பிட்டா.
அதெல்லாம் எனக்கு தெரியாது. நம்ம ஷாப்பிங் முடிச்சிட்டு தான் போறோம்” என்று கராராக கூறிவிட்டான்.
இவன்
கூறுவது கயல்விழியின் காதில் விழ.
“நம்ம என்ன யாரோ ரோட்டில்
போறவங்களா. இப்படி பேசுறாரு, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. இவங்க வீட்டுக்கு
வருவதற்கு தான் நீங்க ஆசையா கிளம்புனீங்களா. வாங்க ஊருக்கு கிளம்புவோம்” என்று கோபமாக தன் தாயிடம் குதித்தாள்.
யாழினியின்
சூழலை கயல்விழி புரிந்து கொள்வாளா...
கருத்துகள்
கருத்துரையிடுக