அவனதிகாரம் - 61

 

 

அதிகாரம் – 61

 

வெளியே சென்றதும் கயல்விழி கோபமாக மகேஷிடம், என்ன பண்றீங்க மகேஷ்? ஏன் இப்படி எல்லார் முன்னாடியும் பிஹேவ் பண்றீங்க? உங்களால எனக்கு அவமானமா இருக்கு என்றாள் சீற்றமாக.

 

நீ பண்றது மட்டும் நல்லா இருக்கா கயல். உங்க அம்மா உன் தங்கச்சிக்கு போன் வாங்கி குடுக்குறாங்கனா அது அவங்களுடைய விருப்பம். நீயே போய் கேட்பியா.. எனக்கும் வாங்கி கொடுங்கன்னு. அவங்களுக்கு விருப்பம் இருந்தா அவங்களே உனக்கு வாங்கி தருவாங்க.

 

அதான் இல்லையே.. யாருக்குமே நான் தேவை இல்லாதவளா போயிட்டேன். யாருக்கும் என் மேல பாசமும் இல்ல, யாருக்கும் நான் முக்கியமும் இல்ல. எல்லாருமே இப்போ இந்த யாழினியை தான தாங்குறாங்க. நான் அவங்களோட பொண்ணு என்பதே அவங்க மறந்துட்டாங்க என்றாள் கலங்கிய கண்களுடன் கோபமாக.

 

மகேஷ் ஆதரவாக அவளின் கையை பற்றியவன், இங்க பாரு கயல், என்ன இருந்தாலும் கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டு அவங்களை அவமானப்படுத்திட்டு நீ போயிட்டன்ற கோபம் அவங்களுக்குள்ள இருக்க தான் செய்யும். உன் தங்கச்சியை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு.

 

அவளும் பாவம் தான. உன்கிட்ட போன் இல்லைனாலும் நான் உன்கிட்ட அன்பா நடந்துக்கிறேன். எங்க வீட்ல உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இப்போ உங்க வீட்டில் பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அடிக்கடி நீ உங்க வீட்டுக்கு போற வர. ஆனா, உன் தங்கச்சிக்கு அப்படி இல்லையே.

 

அவ வீட்டுக்காரர் பேசுறதை பார்த்தா, அவ கிட்ட ஹார்ஷா பிஹேவ் பண்ணுறவர் மாதிரி தெரியுது. இதில் உங்க வீட்ல யாருகிட்டயும் அவர் பேசக்கூடாதுன்னு வேற வச்சிருக்கார். அதிலேயே தெரியல உனக்கு, அவர் எவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்கார் உன் தங்கச்சிகிட்டன்னு. அதனால தான் உங்க அப்பா, அம்மா போன் வாங்கி கொடுத்து இருக்காங்க. பாவம் அந்த பொண்ணு, நீ அதை புரிஞ்சிக்காம அவங்க மேல கோபப்படுற.

 

கயல்விழி மகேஷ் கூறியதை கேட்டு சிந்தித்தவள், ஆமாம் மகேஷ். நீங்க சொல்றதும் சரி தான். அந்த ஆளு சரியான சிடுமூஞ்சி, கோவக்காரன். பாவம் யாழினி, அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா.

 

பார்த்தியா.. கொஞ்சம் யோசிச்சு பார்த்ததும் என்ன சூழ்நிலைனு உனக்கே புரிஞ்சிடுச்சு. எல்லா விஷயத்தையும் யோசிக்காம நம்மளே ஒரு முடிவு பண்ண கூடாது கயல்.

 

மகேஷின் வார்த்தையிலேயே அவனின் மனதிலிருந்து தன் மதிப்பு எவ்வளவு கீழ் இறங்கி இருக்கிறது என்பது நன்றாக கயல்விழிக்கு புரிந்தது.

 

அபிமன்யு கோபமாக, என் பொண்டாட்டிக்கு எப்போ என்ன வாங்கி கொடுக்கணும்னு எனக்கு தெரியும். அதை பத்தி யாரும் இங்க கவலைப்பட வேண்டாம். நீங்க கொண்டு வந்ததை நீங்களே எடுத்துக்கிட்டு போங்க.

 

வேலுச்சாமி தாத்தா, இங்க பாருப்பா, என் மருமகள் அவளோட பொண்ணு கிட்ட பேச முடியாம தினம் தினம் கவலைப்படுறா. தயவு செஞ்சு யாழினியை அவங்க அம்மாகிட்ட பேச விடுப்பா. அதுக்காக தான் அவங்க அப்பா கிட்ட சொல்லி இந்த போனை வாங்கி தர சொல்லி இருக்காங்க. வேண்டாம்னு சொல்லிடாதப்பா என்றார் கைக்கூப்பி.

 

யாழினி ஆற்றாமையுடன், தாத்தா..! என்று குரல் கொடுக்க.

 

அதற்குள் வேலுச்சாமியை நோக்கி விரைந்து வந்த வள்ளியம்மை பாட்டி, அவரின் கைகளை இறக்கி விட்டபடி, என்ன காரியம் மாமா செஞ்சிட்டீங்க. இவனுக்கு என்ன தெரியும்.. சின்ன பையன் விவரம் புரியாம பேசுறான். அவன் முன்னாடி நீங்க இப்படி கைக்கூப்பி நிக்கலாமா என்றார் கண்களில் நீர் கோர்த்தபடி.

 

அதுக்கு இல்லமா. வீட்ல லட்சுமி படுற வேதனையை பார்க்க ரொம்ப உறுத்தலா இருக்கு. என்னால தான இதெல்லாம்னு மனசு கிடந்து அடிச்சிக்கிது. சரி பண்ணனும்னு நினைச்சு பெரிய தப்பு பண்ணிட்டோமேனு உறுத்தலா இருக்கு. இதை என்னால சரி பண்ண முடியுமானு தெரியல. என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன்.

 

போதும் மாமா... உங்க மேல எந்த தப்பும் இல்ல. நீங்க கவலைப்படுறதுக்கு நீங்க எந்த தப்பும் செஞ்சிடல. எது உண்மை, எது பொய்னு புரிய வேண்டியவங்களுக்கு சீக்கிரம் புரியும் என்றார் அபிமன்யுவையும், தன் கணவரையும் பார்த்தபடி.

 

கிருஷ்ணமூர்த்தி தாத்தா எதுவும் கூறாமல் இவர்களை ஏளன பார்வை பார்த்தபடி அறைக்கு சென்று விட்டார்.

 

வள்ளியம்மை, நீ அதை குடு லட்சுமி. உன் பிள்ளைக்கு நீ வாங்கிக் கொடுக்குறது யாரு வேண்டாம்னு சொல்லுறாங்கன்னு நான் பாக்குறேன் என்றார் அபிமன்யுவை முறைத்தபடி.

 

பாட்டி! இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை. இவளுக்கு போன் இல்ல அதான. நான் வாங்கி தரேன் போதுமா.. இவங்க வாங்கி தர போன் இவளுக்கு தேவையில்லை. ஹஸ்பண்டா இவளுக்கு என்ன தேவை இருந்தாலும், அதை ஃபுல் ஃபில் பண்ண வேண்டியது என்னோட கடமை தான..

 

அவளுக்கு மொபைல் வேணும்னா அதை நான் தான் வாங்கி தரணும். அவங்க அம்மா வீட்ல இருந்து வாங்கி கொடுத்தா அது எனக்கு தான் அவமானம். அது மட்டும் இல்ல, நான் ஒன் ஆப் த லீடிங் பிசினஸ்மேன். என்னோட வைஃப் இப்படி மட்டமான ஒரு போனை வச்சுக்கிட்டு சுத்துனா அது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கும். என்னோட ரேஞ்சுக்கு தகுந்த மாதிரி தான் அவ போன் கூட இருக்கணும் என்றான் திமிராக.

 

யாழினிக்கு தன் முன்னே தங்கள் வீட்டினரை இப்படி அவமதிப்பாக அபிமன்யு கூறியது கோபத்தைக் கொடுக்க.

 

கோபமும், ஆற்றாமையும் அவளுக்குள் போட்டியிட.. அதன் விளைவாய் கலங்கிய கண்களுடன் தன் தந்தையை நோக்கி சென்றவள், இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவைனு நீங்க நினைக்கிறீங்களாப்பா? என்றாள் குரல் கம்ம.

 

மரகதம் பாட்டி, என்ன பேசுற யாழினி? என்றார் அதிர்ச்சியாக.

 

போதும் பாட்டி, எந்த உண்மையும் யாருக்கும் தெரிய வேண்டாம்... போதும்!.

 

யாழினியின் வார்த்தைகள் அபிமன்யுவின் மனதிற்குள் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த அனைவருக்குமே யாழினியின் கேள்வியில் அதிர்ச்சி தான்.

 

லட்சுமி, அவசரப்படாதம்மா எதுவா இருந்தாலும் பொறுமையா யோசிச்சு முடிவு செய்யலாம்.

 

அப்படி நினைச்சு தான் மா இவ்வளவு நாளா நான் அமைதியா இருந்தேன். உங்க யார்கிட்டயும் பேச கூடாதுனு சொன்னார், நானும் பேசாம தான இருந்தேன். ஏன்? நான் நினைச்சா உங்க கிட்ட இவருக்கு தெரியாம பேசி இருக்க முடியாதா?.

 

அத்தைகிட்டயோ இல்ல ஆரணிகிட்டயோ போன் வாங்கி பேசியிருக்கலாமே. எதுக்காக நான் பேசாம இருந்தேன், இவருக்காக தான. இவருக்கு உண்மையா இருக்கணும். இவர் மனசு மாறும்னு நினைச்சு தான் இவ்வளவு நாள் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போனேன்.

 

ஆனா, இவர் கொஞ்சம் கூட மாறல மா. இனிமேலும் மாறுவாருன்ற நம்பிக்கை எனக்கு இல்ல. ஒவ்வொரு தடவையும் எனக்காக இவர் முன்னாடி நீங்க அவமானப்பட்டு நிக்கிறதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு மா. இதெல்லாம் வேண்டாமே... நானும் உங்களோடவே வந்துடுறேன்.

 

மீரா, யாழினி நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா.

 

எனக்கு உங்க யார் மேலயும் எந்த கோபமும் இல்லத்த. நான் இது வரைக்கும் உங்களை என் அம்மா மாதிரி தான் நினைச்சிருக்கேன். நீங்களும் என்கிட்ட அப்படி தான் நடந்திருக்கீங்க. ஆரணியை எப்படி பார்த்துப்பிங்களோ, அதே மாதிரி தான் என்னையும் பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்க. இங்க இருக்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் இப்படி என்னுடைய அம்மா, அப்பா அவமானப்படுறதை பார்த்துகிட்டு இருக்க முடியும். இனிமேலும், இவர் மாறுவாருன்ற நம்பிக்கை எனக்கு இல்ல என்றாள் வருத்தமான குரலில்.

 

வள்ளியம்மை பாட்டி, அபி.. என்ன பார்த்துகிட்டு இருக்க. யாழினி அவங்க வீட்டுக்கு போறேன்னு சொல்றா.

 

அவ வீடா? எது அவ வீடு? இதான் அவளுடைய வீடு! இங்கிருந்து அவளால எங்கேயும் போக முடியாது. அவளுக்கும், எனக்கும் எப்போ கல்யாணம் முடிஞ்சதோ.. அப்போவே அவ எனக்கு சொந்தமானவள் ஆயிட்டா. இங்க தான் அவ இருக்கணும்.

 

வள்ளியம்மை பாட்டி, இங்க பாரு அபி. நீ பேசுறது உனக்கே அதிகப்படியா தெரியலையா. நீ அன்பா பேசுறியா, கோவமா பேசுறியான்னு எங்களுக்கே புரியல. அப்புறம் அவளுக்கு எப்படி புரியும்.

 

இப்போ நான் அன்பா பேசுறனா, கோவமா பேசுறனான்றது முக்கியம் இல்ல பாட்டி. நான் சொன்ன விஷயம் எல்லாருக்கும் புரிஞ்சா போதும் என்றான் யாழினியை தீ என முறைத்தபடி.

 

நீங்க சொன்னா நான் இங்கேயே இருக்கணுமா. கல்யாணம் ஆயிட்டா நான் என்ன உங்க பிராப்பர்ட்டியா. உங்க இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் செய்றதுக்கு. நான் எனக்கு என்ன தோணுதோ அப்படி தான் நடந்துப்பேன். நான் ஒன்னும் பொம்மை கிடையாது. உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க என்றாள் அபிமன்யுவை நேருக்கு நேராக பார்த்தபடி.

 

எங்கே பிரச்சனை பெரிதாகி விடுமோ என்ற பயத்தில் மரகதம் பாட்டி யாழினியின் அருகில் சென்றபடி, யாழினி கொஞ்சம் அமைதியா பேசு. ஏன் இப்படி கோவப்படுற?.

 

எஸ் யூ ஆர் ரைட். நீ பொம்மை கிடையாது. ஆனா, என்னோட வைஃப். நான் எங்க இருக்கேனோ, அங்க தான் நீயும் இருக்கணும். வேணும்னா உன்னோட அப்பாகிட்டயே கேளு.

 

இவர்கள் இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு குடும்பத்தினர் என்ன கூறி இருவரையும் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விழிப் பிதுங்கி நின்றனர்.

 

யாழினி சுப்பிரமணியிடம், அப்பா நானும் உங்களோட வரேன். இவர் எப்போ உங்களுக்கு மரியாதை கொடுக்கிறாரோ அப்போ தான் நான் இவர் கூட வாழ்வேன்.

 

அபிமன்யு எதுவும் கூறாமல் அவளை முறைத்துப் பார்த்தபடி நின்றான்.

 

சுப்பிரமணி எதுவும் கூறாமல் இவர்களின் வாக்குவாதத்தை பார்த்தபடி நின்றார்.

 

என்னப்பா எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க.

 

சுப்பிரமணி, இது சரி வராது யாழினி. கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் நீ மாப்பிள்ளையோட தான் இருக்கனும். அது தான் சரி!.

 

ஆனா அப்பா... என்று எதுவோ கூற அவள் வாய் எடுக்கும் போது லட்சுமி, அதான் அப்பா சொல்றாங்கல்ல. அப்பா சொல்றதை கேளுமா. உன்னோட வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்னா நீ இங்க இருக்குறது தான் சரி வரும். அதான் மாப்பிள்ளை உனக்கு வேற போன் வாங்கி தரேன்னு சொல்லிட்டாரே.

 

யாழினி மனதிற்குள், வேறு ஃபோன் வாங்கிக் கொடுத்தால் மட்டும் என்ன மாறப் போகிறது. இவன் தான் தன் குடும்பத்தாரிடம் பேசக்கூடாது என்று கூறியிருக்கிறானே. பிறகு, எப்படி பேச முடியும். அது புரியாமல் அனைவரும் ஃபோனிற்காக தான் இந்த பிரச்சனை என்பது போல் பேசுகிறார்களே என்று வருந்தினாள்.

 

மரகதம் பாட்டி, யாழினியின் கையை பிடித்து, நீ என்கூட வா என்று தோட்டத்து பக்கம் அழைத்துச் சென்றார்.

 

இவர்களின் பின்னே வள்ளியம்மை பாட்டியும் செல்ல.

 

கொஞ்ச நேரத்துல என்ன காரியம் பண்ண பார்த்த நீ யாழினி. கல்யாணம் ஆன பொண்ணு, மாப்பிள்ளையை விட்டுட்டு அம்மா வீட்டுல வந்து உட்கார்ந்திருக்கிறது கொஞ்சமாவது சரியா?.

 

என்னை வேற என்ன பாட்டி பண்ண சொல்றீங்க. இன்னும் எவ்வளவு காலம் ஆனா இவர் நம்மளை புரிஞ்சுப்பாருனு தெரியல. போக போக அவருக்கு வெறுப்பு அதிகமாகிகிட்டு தான் போகுதே தவிர, குறைந்த மாதிரி தெரியல.

 

இவருக்கு ஒண்ணுமே தெரியாதுன்னா அதுக்கு நாம என்ன பண்ண முடியும். என்னால உங்க யார்கிட்டயும் பேச கூட முடியல பாட்டி. இப்போ ஒரு போன்காக தான் இவ்வளவு பெரிய பிரச்சனைனு எல்லாரும் நினைச்சுட்டு இருக்கீங்களா. இப்போ அவரே எனக்கு புது போன் வாங்கி கொடுத்தா கூட உங்க யார்கிட்டயும் என்னை பேச கூடாதுனு தான் சொல்லுவார். அப்புறம் போன் வாங்கி என்ன பிரயோஜனம்.

 

மரகதம், உன்னோட நிலைமை எனக்கு புரியுதுமா. ஆனா, நமக்கு இப்போ வேற வழி இல்ல. பொருத்து தான் போகணும். நான் சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். நீ சொல்லியும் நான் சொல்லியும் உன் வீட்டுக்காரர் புரிஞ்சுக்க மாட்டார்.

 

அவங்க தாத்தா வாயிலிருந்து உண்மை வெளியில் வந்தா தான் நம்புவார். அதுக்கு என்ன வழினு பார்ப்போம். நீ அங்க வந்துட்டா இங்க இவருக்கு உண்மையை எப்படி தெரிய வைக்கிறது. நீ இவ்வளவு கோவமா பேசியும், வீட்டுக்கு போறேன்னு சொல்லியும் கூட அவர் உன்னை போனு ஒரு வார்த்தை கூட சொல்லல பார்த்தியா.

 

அனுப்ப மாட்டேன்னு தான் சொல்றார். அவர் உன் மேல வச்சிருக்க அன்பை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. நீ உன்னோட வாழ்க்கையை மட்டும் பாரு. உன் குடும்பத்தோட உன் வீட்டுக்காரரை எப்படி சேர்த்து வைக்கிறதுன்றதை நான் பார்த்துக்கிறேன்.

 

யாழினி அரை மனதுடன் சரி என்று சம்மதித்தாள்.

 

பிறகு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சுப்பிரமணியன் குடும்பத்தார் தங்கள் ஊர் நோக்கி புறப்பட்டனர். யாழினி மரகதம் பாட்டியுடன் தோட்டத்திற்கு சென்றதும், கோபமாக அபிமன்யு அறைக்கு சென்று விட்டான்.

 

அபிமன்யு, நான் இவ்வளவு சொல்லியும் அவங்களோடு போறேன்னு சொல்றா. அப்போ இவ்வளவு நாள் நான் அவளுக்கு சொன்னது எதுவுமே அவ மண்டையில ஏறலையா? இவள நான் எப்படி எல்லாம் பார்த்துக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இவ திரும்ப திரும்ப அவங்ககிட்டயே போய் நிக்கிறா இடியட். உன்னை எல்லாம் திருத்தவே முடியாது என்று யாழினியை திட்டியவாறு அறைக்குள்ளே நடை பயிற்சி செய்து கொண்டு இருந்தான்.

 

யாழினி அறைக்குள் வந்ததும், இப்போ எதுக்குடி இங்க வந்த. அதான் உங்க அப்பா கூடவே போக போறேன்னு சொன்னல்ல. அப்படியே போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தான. எதுக்கு இன்னும் போகாமல் இங்கேயே இருக்க. உன்னை போய் ப்ரொடெக்ட் பண்ணனும்னு நினைச்சேன் பார்த்தியா... என்னை சொல்லணும். உன்னை போய் லவ் பண்றேன் பார்த்தியா.. ச்ச.. அத்தனை பேரு முன்னாடி என் கூட வாழ முடியாதுன்னு சொல்லிட்டல்ல. என்னை அசிங்கப்படுத்திட்டல்ல. இப்போ சந்தோஷமா உனக்கு என்று கத்தினான்.

 

யாழினி அபிமன்யுவின் கத்தலில் மெதுவாக, இங்க பாருங்க.. உங்களை அசிங்கப்படுத்தனும், அவமானப்படுத்தனும்னு நினைச்சு நான் எதுவும் பேசல. எங்க வீட்ல இருக்கவங்ககிட்ட மரியாதை இல்லாம நீங்க பேசும் போது அவங்களுக்கும் இப்படி தானே இருந்திருக்கும். நீங்க அவங்க மனசை புரிஞ்சுக்கணும்னு தான் இப்படி பேசுனேன். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க.

 

போதும் நிறுத்து. நான் எல்லா இடத்துலயும் உனக்காக தான் நின்னு இருக்கேன். ஆனா, நீ ஒரு இடத்தில் கூட எனக்காக நின்னது கிடையாது. நானா, உன் குடும்பமானு வந்தா, நீ உன் குடும்பத்து பக்கம் தான் நிக்கிற. அப்படி நான் என்னடி கெடுதல் பண்ணிட்டேன் உனக்கு. உன்னை நல்லா பார்த்துக்கணும்னு தானே ட்ரை பண்றேன். உனக்கு அது புரியலையா என்றான் கோபத்தில் கண்கள் சிவந்து ஆக்ரோஷமாக.

 

அபிமன்யுவின் கோபத்தை கண்டு மிரண்ட யாழினி பதில் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றாள்.

 

அவளின் தோள்பட்டை இரண்டிலும் தன் கைகளால் அழுத்தத்தை கொடுத்து குலுக்கியவன், வாயை திறந்து பதில் சொல்லு. நான் உன் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கேன்னு உனக்கு இன்னும் புரியலையா? என் அம்மாவுக்கு அப்புறம் நான் அதிகம் நேசிக்கிறது உன்னை தான். உனக்கு அப்படி என் மேல எந்த ஃபீலிங்கும் இல்லையா.

 

ஒருவன் தான் விரும்பும் பெண்ணிடம் தன் காதலை கூட கோபமாக வெளிப்படுத்துவதை முதல் முறை பார்க்கிறாள் யாழினி.

 

இதுவரை தான் பார்த்த, கேட்ட காட்சிகளை வைத்து காதலை இன்முகமாக தான் கூறுவார்கள் என்று ஒரு கற்பனை உலகில் இருந்தவளிற்கு, அபிமன்யுவின் நிதர்சனமான வார்த்தை கோபத்தில் கூட காதலை உணர்த்தலாம் என்பதை உணர்த்தியது.

 

யாழினியின் பதில் என்னவாக இருக்கும்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5