அவனதிகாரம் - 62
அதிகாரம் – 62
அபிமன்யுவின்
கோபத்திற்கு தகுந்தாற்போல் அவனின் அழுத்தமும் கூடிக் கொண்டே போக, யாழினிக்கு வலி
பொறுக்க முடியாமல் விழிகளில் நீர் கசிந்தது.
அதைப்
பார்த்த அபிமன்யுவின் காதல் கொண்ட மனம் கரைய தொடங்க, தன்னை கட்டுக்குள் கொண்டுவர
அவளை விட்டு விலகியவன், அவளை பார்க்காது திரும்பினான்.
தலையை
கோதி அவள் புறம் சாயும் தன் மனதை சமன்படுத்தினான். அபிமன்யு மனதிற்குள், ‘லவ் பண்றவங்க எல்லாருக்குமே இப்படி தான்
பீல் ஆகுமா.. இல்ல, எனக்கு மட்டும் தான் இப்படியானு தெரியலையே. இவ மேல எவ்வளவு
கோவம் இருந்தாலும், இவ பீல் பண்றானு தெரிஞ்சா எனக்கும் கஷ்டமா இருக்கு.
எப்படியாவது அவளை திரும்ப ஹாப்பியா மாத்தணும்னு தோணுது. ச்ச.. இவகிட்ட கோவம் வந்தா
கூட அதை காட்ட முடியல. இப்படியே போனா பைத்தியம் ஆயிடுவோம் போலருக்கு’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
அபிமன்யு
தன் கையை விளக்கினாலும் யாழினிக்கு வலி தாங்க முடியவில்லை. இருந்தும்,
அபிமன்யுவின் முன்பு அதனை காட்ட விருப்பம் இன்றி தன்னை தேற்றிக் கொண்டாள்.
அபிமன்யு தன் மனதை அலைபாய விடாமல் தேற்றியபடி திரும்பிப் பார்க்க. யாழினியின்
முகம் இன்னமும் சற்று சுணக்கமாக தான் இருந்தது.
அபிமன்யு,
“என்ன ஆச்சு?”.
“ஒன்னும் இல்ல”.
“அப்புறம் ஏன் முகத்தை இப்படி
வச்சிருக்க”.
யாழினி
வேறு புறம் திரும்பி நிற்க, அவளின் தோள்பட்டையில் கையை வைத்து தன் புறம் திருப்ப
அபிமன்யு முற்பட்டான்.
அதில்,
மீண்டும் வலி ஏற்பட, “ஸ்ஸ்... ஆஆ...” என்று முகத்தை சுழித்தாள் யாழினி.
அபிமன்யு
பதட்டமாக, “வலிக்குதா?”.
அதற்கு ‘ஆம்’ என்னும் விதமாக தலையசைத்தாள் யாழினி.
“சாரி டா.. தெரியாம... ஏதோ
கோபத்துல... சாரி..” என்றபடி அவளை படுக்கையில்
அமர்த்தினான்.
“சரி வா நம்ம டாக்டர் கிட்ட
போயிட்டு வந்துடலாம்”.
“டாக்டர்கிட்டயா! அதெல்லாம்
தேவையில்ல. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்”.
“இல்ல வேண்டாம்.. வேண்டாம்..
எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கணும். நம்ம ஒரு தடவை செக்அப் போயிட்டு
வந்துடலாம்”.
யாழினி,
அபிமன்யுவின் பதட்டம் கலந்த முக பாவனையை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு நேரம் இங்கே நடந்தது என்ன என்பதை இருவரும் மறந்து விட்டனர்.
அபிமன்யுவின்
இந்த பதட்டம் தனக்கானதா என்று யாழினிக்கு பெரும் மகிழ்ச்சி. எத்தனை பேர் தன்னை
எதிர்த்து நின்றாலும், அசராமல் அனைவரிடமும் வாதிடுபவன், போட்டியிடுபவன்.
ஆனால்,
யாழினிக்கு ஒரு சிறு வலி என்பதை கூட தாங்க முடியாமல் அவளின் முன்பு இதோ,
மண்டியிட்டபடி அமர்ந்திருக்கிறான். இவனை எந்த வகையில் சேர்ப்பது.
கோபத்தையும்,
அன்பையும் மழையென பொழிகிறானே... இந்த அழகிய அசுரன்! என்று மெய்மறந்து தன் கணவனை
ரசித்து கொண்டிருந்தாள்.
பதட்டமாக
பேசிக் கொண்டிருந்த அபிமன்யு யாழினியிடம் எந்த பதிலும் இல்லாததை உணர்ந்து
நிமிர்ந்து பார்க்க, அவள் இவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“யாழினி... பேபி டால்... இங்க
பாரு... உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க. வா, நம்ம டாக்டர்
கிட்ட போகலாம்”.
அபிமன்யுவின்
வார்த்தையில் கலைந்தவள், “ஹி.. ஹி.. ஒன்னும் இல்ல. சும்மா
தான்” என்று தட்டு தடுமாறி ஒருவாறு
சமாளித்தாள்.
அபிமன்யு
இவளின் முக மாற்றத்தை உணராமல், “சரி வா எழுந்திரு டாக்டர் கிட்ட
போயிட்டு வந்துடுவோம்”.
“அதான் ஒன்னும் இல்லைனு சொல்றேன்ல.
நீங்க எழுந்திரிங்க முதல்ல, மேல உட்காருங்க மாமா. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தாலே
சரியா போயிடும்”.
பிறகு
யாழினியின் அருகில் அமர்ந்தவன். சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவளின் கையை தன்
கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான். இருவருக்கும் நடுவே எந்த ஒரு
பேச்சுவார்த்தையும் இல்லை, ஒரு நீண்ட அமைதி. இருவருக்கும் இந்த அமைதி தேவையாக
இருந்தது.
பிறகு,
அபிமன்யு முதலில் ஆரம்பித்தவன், “என் மேல கோவமா இருக்கியா?”.
யாழினி
எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
“எனக்கு தெரியும் நீ என் மேல கோவமா
தான் இருக்கனு. ஆனா, நான் சொல்றதை நீ ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற பேபி டால்.
பார்த்தல்ல.. நீயே வரேன்னு சொல்லி கூட உங்க அப்பா உன்னை அப்படியே விட்டுட்டு
போயிட்டார்.
உனக்கு
இங்க இருக்க விருப்பம் இல்லைனு தெரிஞ்சும் விட்டுட்டு போயிருக்காருனா என்ன
அர்த்தம். அவங்களுக்கு உன்னை பத்தின கவலை எதுவுமே கிடையாது. அதான் உண்மை...
அவங்களுடைய மரியாதையும், கௌரவமும் தான் அவங்களுக்கு முக்கியம்.
பொண்ணுக்கு
பிடிக்காத வாழ்க்கை அமைந்திருக்கு என்பதை விட ஊருகாரங்க முன்னாடி மரியாதையா
இருக்கணும் என்பது தான் அவங்க எண்ணமே. ஆனா, நான் அப்படி கிடையாது. நீயே போறேன்னு
சொன்னாலும் நான் உன்னை அனுப்ப மாட்டேன். நீ என்ன வேணாலும் நினைச்சிட்டு போ. ஆனா,
நீ என் கூட தான் இருக்கணும். சண்டை போட்டாலும் நீ என் கூட இருந்து தான் சண்டை
போடணும்”.
அபிமன்யுவின்
வார்த்தைகளில் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவனை பார்த்தபடி
அமர்ந்திருந்தாள் யாழினி.
பிறகு,
அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட அபிமன்யு மீண்டும் சிறிது நேர இடைவெளி
விட்டு தொடர்ந்தான், “உனக்கு.. நிஜமாவே என் கூட வாழ
விருப்பம் இல்லையா?” என்றான் கேள்வியோடு.
இப்பொழுதும்
யாழினியிடம் எந்த பதிலும் இல்லை. அவள் தான் வேறு ஒரு தனி உலகத்தில் சஞ்சலித்துக்
கொண்டிருக்கிறாளே. இவனின் கேள்வி அவளின் செவி மடலை சென்று அடைந்தால் தானே பதில்
கூற.
யாழினியிடம்
எந்த ஒரு எதிர்வினையும் இல்லாததை கண்டு அவளின் முகத்தை தன்னை நோக்கி
நிமிர்த்தியவன், “என்ன நான் பாட்டுக்கு
பேசிக்கிட்டே இருக்கேன். நீ எதுவுமே சொல்ல மாட்டேங்குற” என்றான் எதிர்பார்ப்போடு.
யாழினி
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி அபிமன்யுவை பார்க்க.
“நீ பாக்குறதை பார்த்தா இவ்வளவு
நேரம் நான் சொன்னது எதுவுமே உன் காதுல விழல போலருக்கே”.
“ம்ம்.. என்ன சொன்னீங்க?”.
அபிமன்யு
யாழினியின் கண்களை பார்த்தவாறு, “நாம ஏன் மறுபடியும் கல்யாணம்
பண்ணிக்க கூடாது”.
“அதான் கல்யாணம் ஆகிடுச்சே” என்றாள் புரியாமல் பார்த்தபடி.
“அப்போ உனக்கு என்னை பத்தி எதுவுமே
தெரியாது. பேமிலி சிச்சுவேஷன்னால தான என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச. இப்போ
உனக்கு என்னை பிடிச்சிருந்தா... நம்ம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்”.
அபிமன்யு
எதை அறிய இப்படி கேட்கிறான் என்பதை உணர்ந்த யாழினியின் கன்னங்கள் இரண்டும் தானாக
வெட்கத்தில் சிவக்க.
சட்டென்று
அவனை பிரிந்து வேறு புறம் நோக்கி எழுந்து நின்றபடி, “அதான் ஒரு தடவை கல்யாணம் ஆயிடுச்சுல்ல. பிடிச்சு நடந்தாலும்,
பிடிக்காம நடந்தாலும் கல்யாணம்.. கல்யாணம் தான... அதுவே போதும். அத்தை கூப்பிடுற
மாதிரி இருக்கு. நான் என்னனு கேட்டுட்டு வரேன்” என்று அறையை விட்டு ஓடி விட்டாள்.
“ஹே இருடி. நான் கேட்குறதுக்கு
ஒழுங்கா பதில் சொல்லிட்டு போ” என்று கத்தியது அவளின் காதில்
விழுந்தாலும், விழாதவாறு ஓடி விட்டாள்.
பிறகு,
யாழினி சென்ற பின் அபிமன்யு வெகு நேரம் இன்றைய நிகழ்வைப் பற்றி சிந்திக்கலானான்.
யாழினியை அவர்களிடம் பேச சம்மதிக்கலாமா, வேண்டாமா என்ற பெரிய மனப்போராட்டத்திற்கு
பிறகு, ஒரு முடிவுடன் வெளியே சென்றான்.
அறையை
விட்டு வெளியேறியவளிற்கு வீட்டில் உள்ள அனைவரையும் எதிர்கொள்ள சற்று சங்கடமாக
இருந்தது. நேராக தோட்டத்திற்கு சென்று அமர்ந்தவளின் மனதிற்குள் எண்ணங்கள் மாற்றி
மாற்றி அலைமோத தொடங்கியது.
ஒரு
புறம், அபிமன்யுவின் காதல். மற்றொரு புறம், அவனுக்கு தன் வீட்டினரின் மீதான
வெறுப்பு. இதில், அனைவரின் முன்பும் அவனுடன் வாழ மாட்டேன் என்று விட்டு அதே
வீட்டில் இருப்பது.
எப்படி
அனைவரையும் எதிர்கொள்வது என்று சிந்தித்தபடி அமர்ந்திருந்தாள். யாரோ அருகில்
அமரும் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்க்க, ஷைலஜா தான். சட்டென்று எழ முற்பட்ட
யாழினியின் கையைப் பிடித்து தன் அருகில் அமர்த்தியவள்.
“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்
யாழினி”.
யாழினி
எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“நீ இப்போ தான் ஒரு நல்ல முடிவு
எடுத்து இருக்க. அபியை சமாளிக்கிற அளவுக்கு உனக்கு திறமை பத்தாது. அவனை
சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். இதுக்கு தான் நான் முன்னாடியே சொன்னேன், அவன் உனக்கு
சரி வர மாட்டான்னு. இப்போ நீயே புரிஞ்சுகிட்ட. சரி சரி.. எப்போ நீ அவனை டைவர்ஸ்
பண்ண போற” என்றாள் ஆவலாக.
இவள்
இன்னும் திருந்தவில்லை என்று புரிந்து கொண்ட யாழினி, “பண்ணும் போது கண்டிப்பா உங்ககிட்ட சொல்றேன்” என்று விட்டு எழுந்து சென்று விட்டாள்.
‘ஏன் எல்லாம் இவனையே சுத்தி சுத்தி
வராங்க. அதுவும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சுமா.. ச்ச..’ என்று அலுத்தபடி வீட்டிற்குள் செல்ல.
மீரா, “யாழினி இங்க வா மா” என்று கிச்சனில் இருந்து அழைத்தார்.
“இதோ வரேன் அத்தை” என்றபடி மீராவை நோக்கி சென்றாள்.
மீரா, “யாழினி.. அபி உன்னை கல்யாணம் பண்ணது அவனோட
முடிவு மட்டும் இல்ல. என்னோட ஆசையும் தான்”.
யாழினி
ஆச்சரியமாக, “என்னத்த சொல்றீங்க? நிஜமாவா? ஆனா,
கயல் அக்காவை தானே நீங்க பேச வந்தீங்க”.
“பேச வந்தது கயல்விழியை தான். ஆனா,
அதுக்கு முன்னாடியே எனக்கு உன்னை தான் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. நீ அப்போ தான்
படிச்சுக்கிட்டு இருந்த, அதனால சரி வராதுனு தான் அம்மா சொன்னதும் சரி கயல்விழியை
பார்க்கலாம்னு நினைச்சேன்.
ஆனா,
உன்ன பாத்ததுமே எனக்கு உனக்கும், அபிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்ற எண்ணம்
வந்துச்சு. அவனுக்கு நீ தான் சரியா இருப்ப, அவன் ரொம்ப கோபக்காரன் தான். ஆனா,
பாசம் இல்லாதவன் கிடையாது மா.
யார்
மேலயாவது அன்பை வச்சுட்டா, அவன் மாத்திக்கவே மாட்டான். அவங்களை யாருகிட்டயும்
விட்டுக் கொடுக்கவும் மாட்டான். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அவங்க பக்கம்
தான் நிப்பான். அதே மாதிரி அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துக்குவான்.
இன்னைக்கு
திடீர்னு நீ உங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சுடா.
எனக்கு புரியுது... அபி உங்க வீட்டு ஆளுங்க கிட்ட சரியா நடந்துக்க மாட்டேங்குறான்.
அது ஏன்னு எனக்கும் தெரியல. ஒருவேளை, கயல்வழி இப்படி பண்ணதால கூட இருக்கலாம்”.
யாழினிக்கு
மீராவை பார்த்து பாவப்படுவதா அல்லது, வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. தன்
பெற்றோர் யார் என்று தெரியாமல் வளர்த்தவர்களை பெற்றோர் என்று நினைத்துக் கொண்டு
இருக்கிறார்.
இவரால்
வெளியே இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. ஆனால், இவரோ எதுவும் அறியாமல் தனக்கு ஆறுதல்
கூறுகிறாரே. இவரால் தான் பிரச்சனை என்று தெரிய வந்தால் அதை எப்படி எதிர்கொள்வாரோ
என்று எண்ணியபடி மீராவையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மீரா
இது எதையும் கண்டுகொள்ளாமல் யாழினியின் கையை பிடித்துக் கொண்டு, “இங்க பாரு யாழினி, அபிமன்யு கோவக்காரன்
தான். எதுவா இருந்தாலும் பட்டுனு பேசிடுவான். ஆனா, ரொம்ப நல்லவன். அவனை விட்டு
போகணும்னு திரும்பவும் நீ நினைக்காத மா. நீ அவன் வாழ்க்கைக்குள்ள வந்ததுக்கு
அப்புறம் தான் அவன் கொஞ்சம் மாறி இருக்கான்.
இப்போ
தான் எல்லாரையும் மாதிரி சிரிச்சு சந்தோஷமா இருக்கான். எல்லாரையும் மாதிரி அவன்
சகஜமா இருக்கனும். அது உன்னால மட்டும் தான் பண்ண முடியும் யாழினி. நீயும் போயிட்டா
அவன் தனியா ஆயிடுவான். திரும்பவும் இந்த மாதிரி பேசாத மா” என்றார் கலங்கிய கண்களுடன்.
“நீங்க இதுக்கு ஏன் கண்
கலங்குறீங்க? நான் இனிமே இப்படி பேச மாட்டேன். அவரை விட்டுட்டு எங்கேயும் போக
மாட்டேன் போதுமா.. முதல்ல கண்ணை துடைங்க. நீங்க இப்படி கண் கலங்கி இருக்குறதை
பார்த்தா அவ்வளவு தான்.. உங்க பையன் நான் தான் உங்களை அழ வைச்சேன்னு என்னை ஒரு வழி
பண்ணிடுவார்”.
அதற்கு
சிரித்தபடி தன் கண்களை துடைத்த மீரா, “ஆமா
மா யாழினி நீ சொல்றதும் சரி தான். ஒரு தடவை அவங்க அப்பா என்னை ஏதோ திட்டிட்டார்.
நான் அழுதுக்கிட்டு இருக்குறதை பாத்துட்டு அவங்க அப்பா கிட்டயே சண்டைக்கு
போயிட்டான். அப்போ அவனுக்கு பத்து வயசு தான் இருக்கும். எப்படி எங்க அம்மாவை அழ
வைக்கலாம்னு அவங்க அப்பாவை கோச்சிக்கிட்டு இவன் ஒரு வாரமா பேசவே இல்ல தெரியுமா!”.
யாழினி
ஆச்சரியமாக, “என்னத்த சொல்றீங்க. சின்ன வயசுல
உங்க பையன் இப்படி எல்லாம் செஞ்சு இருக்காரா”.
மீரா
பழைய ஞாபகங்களை நோக்கி சென்றவாறு, “ஆமா.
சின்ன வயசுல அவன் இப்படிப்பட்டவனே கிடையாது. ரொம்ப குறும்புக்காரன், சேட்டை
பண்ணிக்கிட்டே இருப்பான். ஆனா, திடீர்னு இப்படி மாறிட்டான். ஏன் மாறுனான்,
எதுக்காக மாறுனான், எப்படி மாறுனான் எதுவுமே எங்களுக்கு புரியல.
இப்போலாம்
எதுக்கெடுத்தாலும் கோவப்படுறான். சிரிக்கவே யோசிக்கிறான். ஆனா, உன்னை கல்யாணம்
பண்ணதுக்கு அப்புறம் அவன்கிட்ட நிறைய சேஞ்சஸ் தெரியுது யாழினி. நீ அவனை விட்டுட்டு
போயிட்டேனா அவன் ரொம்ப உடைஞ்சிடுவான்”.
யாழினி
மீராவின் கைகளை பிடித்துக் கொண்டு, “அத்த
நான் எதோ கோவத்துல அப்படி சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் எங்கேயும் போக
மாட்டேன். உங்க பையன் கூட தான் இருப்பேன். திரும்ப உங்க பையனை பழையபடி மாத்தி உங்க
கையில கொடுக்கிறேன் போதுமா”.
“ரொம்ப சந்தோசம் டா. நீ சொல்றது
நடந்தா, நீ என்ன சொன்னாலும் நான் செய்றேன்”.
யாழினி
தன் இடுப்பில் கை வைத்தவாறு, “நல்லா யோசிச்சுக்கோங்க அத்த.
அப்புறம் நான் என்ன சொன்னாலும் செய்யணும்”.
“கண்டிப்பா.. என் பையனையே நீ
எனக்கு திருப்பி கொடுக்குற. நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்”.
“சரி அப்போ ரெடியா இருங்க.
சீக்கிரமா நான் சொல்றதை நீங்க செய்யணும்”.
யாழினி
உண்மைகளை மீராவிடம் கூற வேண்டும் என்று நினைக்கவே இல்லை. எதற்கு தேவையில்லாமல்
அவரையும் போட்டு குழப்ப வேண்டும் என்று எண்ணியவள், தனக்குள்ளேயே அனைத்து
உண்மைகளையும் புதைத்துக் கொண்டாள்.
இந்த
பரபரப்பில் தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்துவிட்டாள். இரவு
உணவிற்கு பிறகு அனைவரும் உறங்க செல்ல. யாழினிக்கு அபிமன்யு அறையில் ஒரு பரிசுடன்
கார்த்திருந்தான்.
அதை
கண்ட யாழினி, “என்ன இது?”.
“உனக்கு தான் பிரிச்சு பாரு”.
அதற்குள்
விலை உயர்ந்த புது மாடல் செல்போன் சிரித்துக் கொண்டிருந்தது.
“எனக்கா?”.
“உன்கிட்ட தானே கொடுத்து
இருக்கேன். அப்போ உனக்கு தான்”.
“எனக்கு இதெல்லாம் வேண்டாம்”.
“ஏன்?”.
“நான் யார்கிட்ட பேச போறேன்.
எனக்கு எதுக்கு போன். எனக்கு தேவைபடாது”.
“உங்க வீட்ல பேசணும்னா கூட உனக்கு
தேவைப்படாதா?” என்றான் கேள்வியாக.
அதற்கு
ஆச்சரியமாக அபிமன்யுவை பார்த்தாள் யாழினி.
“என்ன சொல்றீங்க?”.
“இந்த போன் உனக்கு தான். என்னோட
கிப்ட். நீ யார் கிட்ட பேசணும்னாலும் பேசிக்கலாம். யார்கிட்ட வேணும்னாலும்...!” என்றான் அழுத்தமாக.
யாழினி
தயக்கமாக, “எங்க வீட்ல யார் கூட வேணும்னாலும்
நான் பேசிக்கலாமா?” என்றாள் சந்தேகமாக.
“ம்ம்”.
“என்ன திடீர்னு?”.
“எந்த ஒரு விஷயமும் நாம சொல்லி
புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம். தானா புரிஞ்சுகிட்டா நாம சொல்லணும் ன்ற அவசியமே
இருக்காது”.
அதற்கு
யாழினி, “புரியல”.
“சீக்கிரம் புரியும்”.
அபிமன்யுவின்
மனதில் இருக்கும் எண்ணம் என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக