அவனதிகாரம் - 64
அதிகாரம் – 64
காலை
விடிந்ததும் அலுப்பாக எழுந்த கயல்விழிக்கு எரிச்சலாக வந்தது. தன் வாழ்க்கையை
நினைத்தும், தன் எதிர்காலத்தை நினைத்தும். கல்லூரிக்கு செல்வதற்கு கிளம்பியவள்
நேராக மகேஷின் முன்பு சென்று நின்றாள்.
மகேஷ், “கிளம்பிட்டியா போகலாமா?”.
“ம்ம் போகலாம்”.
மகேஷின்
அம்மா கையில் டிபன் பாக்ஸுடன் சமையலறையில் இருந்து ஓட்டமும் நடையுமாக கயல்விழியை
நோக்கி வந்தார், “இந்தா மா டிபன் பாக்ஸ் மறந்துட
போற”.
கயல்விழி
முகத்தை கடுகடுவென வைத்தபடி, “ஆமா, இப்போ இது ஒன்னுக்கு தான்
குறைச்சல்” என்று சத்தமாக முணுமுணுத்தபடி
வெடுக்கென்று டிபன் பாக்ஸை பிடுங்கிக் கொண்டு வாசலுக்கு சென்று விட்டாள்.
தன்
தாயை பார்த்த மகேஷ், “எதுவும் நினைச்சுக்காதீங்கம்மா” என்று சங்கடமாக கூற.
தமிழ்ச்செல்வி,
“பரவாயில்லப்பா” என்று விட்டு தன் கணவரை பார்த்தார்.
ராமலிங்கம்
கண்களை மூடி திறந்து ஏதோ சைகை செய்ய. பெருமூச்சு விட்டபடி அமைதியாக சமையலறைக்குள்
நுழைந்து கொண்டார்.
வெளியே
வந்த மகேஷ் கயல்விழியிடம், “என்ன ஆச்சு கயல் உனக்கு. ஏன்
இப்படி எல்லாம் பேசுற. பாவம் அம்மா, உனக்காக தானே லஞ்ச் ரெடி பண்ணி கொண்டு
வந்தாங்க. இப்படி முகத்துல அடிக்கிற மாதிரி பேசுற. அவங்க முகமே வாடிப் போச்சு”.
கயல்விழி
கோபமாக, “ஆமா இப்போ அவங்க முகம் வாடுனது
மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுது. தினம் தினம் என் முகம் வாடுறது உங்களுக்கு
தெரியுதா”.
“உனக்கு இங்க என்ன பிரச்சனை கயல்.
எங்க அம்மா உன்னை ஒரு வேலை கூட செய்ய விடுவது கிடையாது. எல்லா வேலையும் அவங்களே
இழுத்து போட்டுக்கிட்டு செய்றாங்க. எங்க வீட்ல யாருமே உன்னை ஒரு வார்த்தை கூட
எதுவும் தப்பா பேசுறதோ, உன்னை கஷ்டப்படுத்துற மாதிரி நடந்து கொள்வதோ கிடையாது. நீ
தான் எல்லார்கிட்டயும் எடுத்தெரிஞ்சு பேசுற. ஆரம்பத்துல நல்லா தானே இருந்த கயல்.
இப்போ என்ன ஆச்சு உனக்கு. எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லிடு”.
“என்னால முடியல மகேஷ். காலையில
காலேஜ் போயிட்டு ஈவினிங் வேலைக்கு போயிட்டு நைட்டுக்கு வீட்டுக்கு வந்து காலேஜ்
வொர்க் எல்லாத்தையும் முடிச்சிட்டு படுக்கவே லேட்டாயிடுது. திரும்ப காலையில
சீக்கிரம் எழுந்திருச்சு கிளம்ப வேண்டியதா இருக்கு. எனக்கு எவ்வளவு கஷ்டமா
இருக்குன்னு தெரியுமா”.
“நாங்க யாரும் உன்னை வேலைக்கு போக
சொல்லி கம்பெல் பண்ணலையே. நீயே தான போக போறேன்னு ஒத்த காலில் நின்னு என்கிட்ட
சம்மதம் வாங்குன. இப்போ எங்கள குத்தம் சொன்னா நாங்க என்ன பண்றது. இப்பவும் ஒன்னும்
பிரச்சனை இல்ல கயல். கஷ்டமா இருந்தா வேலையை விட்டுடு”.
“ஆமா வேற என்ன பண்றது. உங்க அப்பா
சம்பாத்தியமும், உங்க சம்பாத்தியமும் சாப்பாட்டு செலவுக்கும், வீட்டு செலவுக்குமே
சரியா போயிடுது. என்னோட படிப்பு செலவுக்கு என்ன பண்றது. அதான் வேலைக்கு போறேன்னு
சொன்னேன்”.
மகேஷ்
வருத்தமான குரலில், “நான் காதலிச்ச கயல் நீ கிடையாது.
அவ ரொம்ப நல்லவ, மத்தவங்க மனசு புரிஞ்சுகிட்டு மெச்சூர்டா நடந்ததுப்பா. ஆனா, நீ
மொத்தமா வேற யாரோ மாதிரி தெரியுற கயல். நான் உன்கிட்ட ஏமாத்தி பொய் சொல்லி
கல்யாணம் பண்ணிக்கலையே. எங்க வீட்டு சூழ்நிலை எல்லாத்தையும் தெரிஞ்சு தான நீ
விருப்பப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட. இப்போ இப்படி பேசுனா நான் என்ன
பண்றது”.
“ஆமா தெரியும் தான். தூரத்தில்
இருந்து பார்க்கும் போது எல்லாமே அழகா தான் தெரிஞ்சது. ஆனா, கிட்ட வந்து
பார்க்கும் போது எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. என்னுடைய அக்காவுக்கும்,
தங்கச்சிக்கும் கிடைச்ச மாதிரி எனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருந்தா நல்லா
இருந்திருக்கும்” என்று பட்டென்று கூறிவிட்டாள்.
கயல்விழியின்
வார்த்தையில் மகேஷின் உதட்டில் விரக்தி புன்னகை படர்ந்தது.
“இங்க பாருங்க மகேஷ். சும்மா
இப்படி எல்லாத்துக்கும் கவலைப்பட்டுக்கிட்டு உட்கார்ந்து இருந்தா பத்தாது.
பார்த்தீங்கல்ல யாழினியோட வீட்டை மாளிகை மாதிரி இருக்கு. அவ அங்க ராணி மாதிரி
வாழுறா. ஆனா நான்.. எனக்கு புடிச்ச வாழ்க்கை அமைந்து இருக்குன்னு பேரு தான்.
மத்தபடி நான் சந்தோஷமாகவே இல்லை”.
“இப்போ என்னை என்ன பண்ண சொல்ற”.
“நான் எங்க வீட்ல பேசலாம்னு
இருக்கேன்”.
மகேஷ்
குழப்பமான பார்வையுடன், “உங்க வீட்ல பேச போறியா? என்ன பேச
போற?”.
கயல்விழி
சிறு தயக்கத்துடன், “நமக்கு வீடு வாங்கி தர சொல்லி
கேட்க போறேன்”.
கயல்விழியின்
வார்த்தையில் மகேஷிற்கு சர்ரென்று கோபம் ஏற, “என்ன நினைச்சுக்கிட்டு இருக்க கயல் நீ உன் மனசுல. உன்
இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம். நான் வாயை மூடிக்கிட்டு இருப்பேன்னு
நினைச்சுக்கிட்டியா. என்கூட வாழனும்னா என்னுடைய வருமானத்தில் தான் வாழனும். என்னால
முடிஞ்ச அளவுக்கு உன்னை சந்தோஷமா வச்சுக்க என்ன எல்லாம் பண்ண முடியுமோ அதெல்லாம்
நான் பண்ணுவேன். இப்படி உங்க அப்பா வீட்டில் போய் கேட்டு வாங்கிட்டு வருவது எனக்கு
அவமானமா இருக்கு”.
“அதுக்காக காலம் முழுக்க என்னை
இப்படி கஷ்டப்பட்டுக்கிட்டே வாழ சொல்றீங்களா. ஏன் அந்த வீட்டுல எனக்கு உரிமை
கிடையாதா. என் அப்பாவோட சொத்துல எனக்கும் உரிமை இருக்கு”.
“இப்போ யாரும் உனக்கு உரிமை
இல்லைனு சொல்லல கயல். அதுக்காக நீயே போய் கேட்பியா. அவங்க எல்லாம் என்னை
பத்தியும், எங்க குடும்பத்தை பத்தியும் என்ன நினைப்பாங்க”.
கயல்விழி
ஏளனமாக, “ஆமா பொல்லாத குடும்பம். உங்க
குடும்பத்தை பத்தி தான் அவங்களுக்கு எல்லாமே தெரியுமே”.
“எங்ககிட்ட பணம் வேணும்னா கம்மியா
இருக்கலாம் கயல். ஆனா, மரியாதையோட வாழனும்னு நினைக்கிறோம். உனக்கு வசதியான
வாழ்க்கை தான வேணும். என்னால கண்டிப்பா நீ ஆசைப்படுற மாதிரி உனக்கு ஒரு நல்ல
வாழ்க்கையை அமைத்து தர முடியும். ஆனா, அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் கொடு. இப்படி
அவசரப்பட்டா நான் என்ன மந்திரமா பண்ண முடியும்”.
“எவ்வளவு நாள் டைம் வேணும். ஒரு
நாளா, ரெண்டு நாளா.. நீங்க கேட்குற டைமுக்குள்ள எனக்கு வயசாயிடும். இங்க பாருங்க
மகேஷ் எனக்கு உங்க மேல இன்னும் காதல் அப்படியே தான் இருக்கு. அதுக்காக என்னால
கஷ்டப்பட முடியாது. நான் என்ன யார்கிட்டயோவா கேட்க போறேன்னு சொல்றேன்.
என்னை
பெத்தவங்ககிட்ட தான கேட்க போறேன். எனக்குனு அவங்க எதுவுமே செய்யல. என்
அக்காவுக்கும், தங்கச்சிக்கும் போட்ட மாதிரி எனக்கு ஒன்னும் நகை போட்டு கல்யாணம்
பண்ணி கொடுக்கலையே. அதெல்லாம் பண்ண வேண்டியது அவங்க கடமை தான. அதுக்கு பதில்
நமக்கு ஒரு வீடு வாங்கி தர சொல்லி கேட்க போறேன். இதுல என்ன இருக்கு”.
மகேஷ், “ப்ளீஸ், தயவு செஞ்சு நான் சொல்றதை
புரிஞ்சுக்கோ. நீ கேட்குறது எனக்கு அவமானமா இருக்கு”.
“இது எனக்கும், என் அப்பா
அம்மாவுக்கும் நடுவுல இருக்க விஷயம். இதுல நீங்க தலையிடாதீங்க”.
இனி
நாம் என்ன கூறினாலும் இவள் புரிந்து கொள்ள போவதில்லை என்று மகேஷ் எண்ணிக்
கொண்டிருக்க.
கயல்விழி,
“இனிமே நாம இதைப் பத்தி பேச
வேண்டாம். டைம் ஆகுது காலேஜுக்கு போகணும்” என்றபடி பைக்கிற்கு அருகில் சென்று நின்று கொண்டாள்.
பிறகு,
கயல்விழியை காலேஜில் விட்டுவிட்டு யோசனையுடனே மகேஷ் அவனுடைய கல்லூரிக்கு சென்றான்.
ஆரம்பத்தில் இனித்த திருமண வாழ்க்கை கயல்விழிக்கு தற்பொழுது கசந்து விட்டது.
திருமணமான
புதிதில் மகேஷின் அம்மா, அப்பாவிடம் மரியாதையாக நடந்து கொண்டவள். இப்பொழுது சில
நாட்களாக எடுத்தெரிந்தும், மரியாதை குறைவாகவும் நடந்து கொள்கிறாள்.
ஏதேதோ
கோபத்தை அவர்களிடம் திணிக்கிறாள். தன் அக்காவும், தங்கையும் வாழ்வது போல் வசதியான
வாழ்க்கை தனக்கும் வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.
இது
ஒன்றும் முதல் முறை கிடையாது. பலமுறை மகேஷிடம் வாக்குவாதம் செய்திருக்கிறாள்.
அவன், “நீ உன் அப்பா, அம்மாவிடம் இருந்து நீ
வாங்கி வரும் எதுவும் எனக்கு தேவையில்லை”
என்று திட்டவட்டமாக கூறிவிட்டான்.
ஆனால்,
இந்த முறை இனிமேலும் பொறுக்க முடியாது என்று பொங்கி எழுந்து விட்டாள்.
கயல்விழியின்
நிலை புரிந்தாலும், மகேஷால் உடனே என்ன செய்திட முடியும். வசதியாக வாழ்ந்த பெண்
தங்கள் வீட்டில் சிரமப்படுகிறாள் என்பது மகேஷிற்கும் புரியாமல் அல்ல.
இருந்தாலும்,
பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் இல்லையே. படிப்படியாக தானே
முன்னேற வேண்டும். மாமனார் வீட்டிடம் வாங்கி வாழ்வது மகேஷிற்கு கொஞ்சமும்
விருப்பமில்லை.
ஆனால்,
கயல்விழிக்கு அதை பற்றி எல்லாம் கவலை கிடையாது. எப்படியாவது வசதியான வாழ்க்கை வாழ
வேண்டும் என்பது மட்டுமே அவளின் ஒரே குறிக்கோளாக இருந்தது.
அன்றைய
தினம் மாலையே தன் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு கல்லூரி முடிந்ததும் நேராக
தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள். கயல்விழி உள்ளே நுழைகையிலேயே பேச்சு
சத்தமும், சிரிப்பு சத்தமும் வாசல் வரை எட்டியது.
வெண்ணிலா
தன் குழந்தையுடன் அம்மாவையும், பாட்டியையும் பார்க்க வந்திருந்தாள்.
மரகதம்,
“இப்போ படிப்பு எல்லாம் எப்படிமா
போகுது?”.
வெண்ணிலா,
“அதெல்லாம் நல்லா போகுது பாட்டி”.
லட்சுமி,
“வீட்டு வேலையும் பார்த்துகிட்டு
படிப்பையும் படிக்க கஷ்டமா இல்லையா”.
வெண்ணிலா,
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைமா.
அத்தையே எல்லா வேலையும் பாத்துக்குறாங்க. இதோ கண்ணனை கூட அவங்களே
பார்த்துக்குறாங்க மா. எனக்கு படிக்கிற வேலை மட்டும் தான். அதை மட்டும் நீ பண்ணா
போதும்னு சொல்லிட்டாங்க”.
லட்சுமி,
“சரி மா ரெண்டு நாள் தங்குற மாதிரி
வரலாம்ல”.
வெண்ணிலா,
“இல்லை மா. எழுதுற வேலை நிறைய
இருக்கு. நான் இங்க வந்துட்டா மாமா வேற அங்க தனியா இருப்பாங்க”.
மரகதம்,
“பார்த்தியா லட்சுமி, உன் பொண்ணு
அவ வீட்டுக்காரரை விட்டு இங்கே வர மாட்டாளாம்”.
இவர்களின்
பேச்சை காதில் வாங்கிய படி உள்ளே நுழைந்த கயல்விழியை பார்த்த லட்சுமி, “வா மா கயல். எப்படி இருக்க?”.
கயல்விழி,
“ஓ.. உனக்கு இன்னும் என்னை ஞாபகம்
இருக்கா?”.
லட்சுமி,
“என்ன மா இப்படி பேசுற”.
மரகதம்,
“என்னடி வந்ததும் வராததுமா
ஆரம்பிச்சுட்டியா”.
கயல்விழி,
“கொஞ்ச நேரம் சும்மா இருங்க
பாட்டி. என் கஷ்டம் எனக்கு தான் தெரியும். பெரிய பேத்தியும், சின்ன பேத்தியும்
தான் உங்களுக்கு பிடிக்கும். நான் வந்தாலே உங்களுக்கு ஆகாதே”.
மரகதம்,
“நான் என்னைக்கும் என்னுடைய
பேத்திகளை தனித்தனியா பிரிச்சு பார்த்ததில்லை. நீ தான் அப்படி நினைக்கிற”.
கயல்விழி,
“அப்படி பிரிச்சு பார்க்காம
இருந்திருந்தா பெரிய பேத்தியும், சின்ன பேத்தியும் நல்லா வசதியா வாழுறாங்களே நம்ம
ரெண்டாவது பேத்தி மட்டும் கஷ்டப்படுறான்னு உங்க மகன் கிட்ட சொல்லி எனக்கும் ஏதாவது
வசதி வாய்ப்பு ஏற்பாடு பண்ணி தந்திருப்பீங்கல்ல”.
கயல்விழியின்
வார்த்தையில் மூவருமே அதிர்ச்சியாக பார்த்தனர்.
லட்சுமி,
“என்ன டி பேசுற நீ பெரியவங்க கிட்ட
இப்படி தான் பேசுறதா. உனக்கு என்ன கிறுக்கு புடிச்சு போச்சா”.
“உனக்கு என்னை பத்தின எந்த
கவலையும் இல்லையா மா. பெரிய பொண்ணு வீட்டுக்கு வந்தா தங்கிட்டு போயேன்னு சொல்ற.
சின்ன பொண்ண நீயே தேடி போற. ஆனா, என்னை மட்டும் கண்டுக்கவே மாட்டேங்குற”.
லட்சுமி,
“இங்க பாரு கயல். முதல்ல நீ
உட்கார். மாப்பிள்ளை உன்னை நல்லா தானே பார்த்துக்குறார்”.
“அதெல்லாம் நல்லா தான்
பார்த்துக்குறார். சிரிச்சு சிரிச்சு பேசுனா மட்டும் போதுமா”.
மரகதம்
பாட்டி, “வேற என்னடி வேணும்”.
கயல்வழி,
“ஜீவா மாமா வீடு நல்லா பெரிய வீடு.
யாழினி வீடு அதுவும் நல்லா பெருசா இருக்கு. ஆனா, என் வீட்டுக்காரருடைய வீட்டை
நீங்க பார்த்து இருக்கீங்களா. ரொம்ப சின்ன வீடுமா. அதுவும் சொந்த வீடு கூட
கிடையாது வாடகை வீடு. மாச சம்பளம் வீட்டு செலவுக்கு போயிடுது. என் படிப்பு
செலவுக்கு கூட பத்த மாட்டேங்குது மா”
என்றாள் குரல் கமர.
இவள்
கூறுவதை கேட்டபடி வீட்டினுள் நுழைந்த சுப்பிரமணி, “இப்போ அதுக்கு எங்களை என்ன பண்ண சொல்லுற மா”.
கயல்விழி,
“ஒரே ஒரு வீடு வாங்கி கொடுங்கப்பா”.
சுப்பிரமணி,
“வீடா?”.
“ஆமா பா. உங்க மத்த ரெண்டு
பொண்ணுங்களுக்கும் நகை நட்டுனு எல்லாம் போட்டு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க. எனக்கு
அப்படி எதுவும் நீங்க போடலையே”.
“நகை நட்டு போட்டு கட்டிக்
கொடுக்குற அளவுக்கு நீ எங்க கிட்ட சொல்லிட்டு கல்யாணம் பண்ணிக்கலையேமா”.
கயல்விழியிடம்
இந்த கேள்விக்கு பதில் இல்லை.
சுப்பிரமணி,
“இப்போ உனக்கு என்ன வேணும். மத்த
பசங்களுக்கு போட்ட மாதிரி உனக்கும் நகை போடணும் அதான போட்டுடுறேன். என் பொண்ணுங்க
யாருக்கும் குறை வைக்க நான் விரும்பல. மூணு பொண்ணுங்களையும் நான் ஒரே மாதிரி தான்
நினைக்கிறேன். மூணு பேருக்கும் எந்த குறையும் இல்லாம ஒரே மாதிரி எல்லாம்
செய்யணும்னு தான் நினைக்கிறேன். மத்த ரெண்டு பேருக்கு என்ன நகை போட்டேனோ, அதையே
உனக்கும் போட்டுடறேன்”.
“அப்பா எனக்கு நகையெல்லாம்
வேண்டாம். எனக்கு வீடு வாங்கி கொடுங்க”.
சுப்பிரமணி,
“மாப்ள உன்கிட்ட கேட்க சொன்னாரா”.
“இல்லை பா அவருக்கு நான்
கேட்குறதுல விருப்பம் இல்லை. எனக்கு தான் அங்க ரொம்ப கஷ்டமா இருக்கு. வேலைக்கும்
போய், படிக்கவும் போய் ரொம்ப கஷ்டமா இருக்குப்பா”.
சுப்பிரமணி,
“நீ சொல்றது எனக்கு புரியுது மா.
ஆனா, இது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை. மத்த பொண்ணுங்களுக்கு செஞ்ச மாதிரி செய்ய
சொன்னா தாராளமா நான் செஞ்சிடுவேன். ஆனா, உனக்கு மட்டும் அதிகமா செய்ய சொன்னா நான்
செய்ய மாட்டேன்”.
“அப்போ இந்த வீட்டில் எனக்கு உரிமை
இல்லையா”.
“உரிமை இல்லைனு இங்க யாரும்
சொல்லலையே மா. உனக்கு மத்தவங்களுக்கு என்ன உரிமை இருக்கோ, அதே உரிமை தாராளமா
இருக்கு. மத்தவங்களுக்கு என்னுடைய சொத்தை நான் எப்போ தரேனோ அப்போ உனக்கும்
கொடுத்துடுவேன். இப்போவே நீ கேட்டா என்னால தர முடியாது மா”.
கயல்விழி,
“அப்பா...” என்றாள் ஆதங்கமாக.
சுப்பிரமணி,
“தப்பா நினைச்சுக்காத மா. நீ
விரும்புன வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை பொறுத்துக்கிட்டு உனக்கு புடிச்ச
மாதிரி அமைச்சுக்க வேண்டியது உன்னுடைய கடமை தான. எங்ககிட்ட வந்து நிக்கிறதுக்கு
உன் வீட்டுக்காரர் நான் பார்த்த மாப்பிள்ளை இல்லையே.
என்னுடைய
கடமையை எந்த குறையும் இல்லாம நான் செஞ்சிடுவேன். கண்டிப்பா உனக்கு என்னுடைய
சொத்துலையும் மத்த பசங்களுக்கு எப்படி தரேனோ அதே பங்கு கிடைக்கும். ஆனா, இப்போ
கிடையாது. உன் வாழ்க்கையில முன்னேறி வரவேண்டிய கடமை உன்னுடையது. எதுவுமே சுலபமாக
கிடைச்சிட்டா அதோட அருமை தெரியாது. லட்சுமி காபி எடுத்துட்டு வா. தலைவலியா
இருக்கு. நான் ரூம்ல இருக்கேன்” என்றபடி அறைக்கு சென்று
விட்டார்.
கயல்விழி
கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு வாசலை நோக்கி செல்ல.
லட்சுமி,
“ஏய் இருடி, காபி குடிச்சிட்டு போ”.
கயல்விழி
திரும்பியும் பாராமல், “ஒன்னும் தேவையில்லை.
எல்லாத்தையும் உன் பெரிய பொண்ணுக்கும், சின்ன பொண்ணுக்கும் கொடு” என்று விட்டு விறுவிறுவென வெளியே சென்று
விட்டாள்.
வெண்ணிலா,
“என்ன பாட்டி இது?”.
மரகதம்,
“நம்ம வீட்டு பொண்ணு கஷ்டப்படுறதை
பார்த்தா பாவமா தான் இருக்கு நிலா. ஆனா, சுலபமா கிடைச்சுட்டா அவளுக்கு அந்த
பொருளோட அருமை தெரியாம போயிடும். நம்ம குடும்பத்தோட அவ சேர்ந்ததுக்கு அப்புறம்
அவங்க மாமியார் வீட்டு ஆளுங்ககிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குறாலாம்.
யாரோ
உங்க அப்பாகிட்ட சொல்லி இருக்காங்க. இப்போவே இப்படி நடந்துக்குறா, இன்னும் நம்ம
வீட்ல இருந்து சொத்துனு ஏதாவது கொடுத்துட்டா. அவங்களை சுத்தமா மதிக்க மாட்டான்னு
உங்க அப்பா நினைக்கிறார். அதுவும் சரி தான. இவளும் அப்படி தான் நடந்துக்குறா.
ரொம்பவே மாறிட்டா.. உன்னையும், யாழினியையும் பார்த்து பொறாமைப்படுறா” என்றார் கவலையாக.
வெண்ணிலா,
“பாவம் பாட்டி கயல்”.
மரகதம்,
“எங்க தேவையில்லாத பேச்செல்லாம்
பேசி கையில் கிடைச்சிருக்க நல்ல வாழ்க்கையை தொலைச்சிடுவாளோனு உங்க அப்பா
பயப்படுறான். விடு எல்லாம் காலப்போக்கில் மாறிடும்”.
கயல்விழியின்
எண்ணம் நிறைவேறுமா...?
அல்லது
பொறாமை அதிகரிக்குமா..?
கருத்துகள்
கருத்துரையிடுக