அவனதிகாரம் - 67
அதிகாரம் – 67
ஷைலஜாவிற்கு
என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை, ஸ்தம்பித்த நிலையில் அமர்ந்து விட்டாள்.
கிஷோர்,
“எனக்கு உங்களுடைய சூழ்நிலை
புரியுது. இப்படி திடீர்னு யாராவது வந்து எனக்கு உங்களை பிடிச்சிருக்கு கல்யாணம்
பண்ணிக்கலாமானு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும். அதுவும் என்னை பத்தி எதுவும்
தெரியாம.. நீங்க நல்லா யோசிச்சு பொறுமையா ஒரு முடிவு சொன்னா போதும். ஆனா,
மறந்துடாதீங்க.. நான் உங்க முடிவுக்காக காத்துகிட்டு இருப்பேன்” என்று விட்டு எழுந்தவன், “அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும்”.
ஷைலஜா
என்னவென்று ஆவலாக பார்க்க.
“இந்த டிரஸ்ஸை விட டூ டேஸ்
முன்னாடி நீங்க போட்டிருந்த ஒயிட் குர்த்தி உங்களுக்கு செமையா இருந்துச்சு” என்று கூறிவிட்டு எழுந்து சென்று
விட்டான்.
ஷைலஜாவிற்கு
தன் மனநிலையை விவரிக்க வார்த்தையே இல்லை. இதை நான் எப்படி எடுத்துக் கொள்வது.
என்னையும் ஒருவன் விரும்புகிறான். என் மனதை பற்றியும் சிந்திக்கிறான்.
நான்
என்ன நினைப்பேன் என்று எனக்காக அவகாசம் கொடுக்கிறான். இன்னும் கூறப் போனால் என்னை
பற்றி முழுவதும் எனக்காகவே யோசிக்கிறான் என்று நினைக்கையிலேயே ஏதோ உள்ளுக்குள்
சொல்ல முடியாத உணர்வு.
ஏனென்றே
தெரியாமல் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறாள். அதுவும் வெகுநாட்கள் கழித்து. அதற்கு
காரணம் வேறு ஏதோ ஒன்று என்று பொய் கூற விரும்பவில்லை.
அவளுடைய
இந்த நிமிட மகிழ்ச்சிக்கு முழு காரணம் கிஷோர் தான். அனைவரும் தன்னை
வெறுக்கிறார்கள், யாரும் தன்னிடம் அன்பாய் இல்லை, யாருக்குமே நான் தேவையில்லை
என்று நினைத்துக் கொண்டிருக்கையில் எனக்கு எல்லாமே நீ தான் என்று ஒருவன் கூறும்
பொழுது எப்படி இருக்கும்.
அதுவும்
தான் அணியும் உடை முதற்கொண்டு கவனிக்கிறான். தனக்காக யோசிக்கவும் ஒருவன்
இருக்கிறான் என்பதிலேயே கிஷோரை ஷைலஜாவிற்கு பிடித்து விட்டது.
இருப்பினும்,
அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே. அவன் எப்படிப்பட்டவன் என்று தெரியாமல்
எப்படி அவனிடம் பழகுவது. என்ன செய்யலாம் என்று சற்று நேரம் சிந்தித்தவள். பிறகு,
மண்டைக்குள் திடீரென பல்பு எரிய நேராக வீட்டிற்கு சென்றாள்.
ஸ்வேதா,
“ஹலோ யாருங்க பேசுறது. ரெண்டு,
மூணு தடவை ஃபோன் பண்ணிட்டீங்க. யாருனு கேட்டா பதில் பேச மாட்டேங்கிறீங்க. ஒன்னு
பேசுங்க இல்லைனா போனை வைங்க. எதுக்கு இப்படி சும்மா போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க” என்று ஒரு முனையில் கத்திக் கொண்டிருக்க.
மறுமுனையில்
யாழினி எதுவும் பதில் பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
கடுப்பாகிய
ஸ்வேதா, “சரி, நான் போனை வைக்கிறேன்.
திரும்ப எனக்கு போன் பண்ணாதீங்க. நான் இந்த நம்பரை பிளாக் பண்ண போறேன்” என்று கோபமாக லைனை துண்டிக்க போன கடைசி
நொடியில் யாழினி, “ஹே.. இருடி.. வச்சிடாத. நான் தான்
யாழினி பேசுறேன்” என்றாள் அவசரமாக.
ஸ்வேதாவால்
நம்ப முடியவில்லை, “யாரு?” என்று மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டாள்.
“என்ன இவ்வளவு நேரம் அந்த கத்து கத்துன.
இப்போ காது கேட்கலையா. நான் தான் யாழினி பேசுறேன்” என்றாள் சத்தமாக.
ஸ்வேதாவிற்கு
மகிழ்ச்சியில் வார்த்தைகளே எழவில்லை, “யாழினி..
நிஜமாவே நீயா”.
“ஆமா, நான் புது போன் வாங்கி
இருக்கேன்”.
“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்
டி. உன்கிட்ட போன் கூட பேச முடியாமல் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு தெரியுமா. எப்போ
புது போன் வாங்குன? உன் வீட்டுக்காரர் வேற எங்ககிட்ட எல்லாம் நீ பேசக்கூடாதுன்னு
சொல்லிட்டாருனு அண்ணி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இனிமே, நாம பேசிக்கவே முடியாதுனு
நினைச்சேன். இப்போ தான் டி எனக்கு சந்தோசமா இருக்கு”.
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது. அவர்
என்னை யார் கிட்ட வேணும்னாலும் பேசிக்கலாம்னு சொல்லிட்டார். உனக்கு தெரியுமா, இந்த
போன் வாங்கி கொடுத்ததே அவர் தான்”.
ஸ்வேதா
ஆச்சரியமாக, “நிஜமாவ டி சொல்ற. அண்ணன் மனசு
மாறிட்டாங்களா. அப்போ, இனிமே எப்போ வேணாம்னாலும் நம்ம பேசிக்கலாமா”.
“ஆமா டி. இனிமே எப்போ வேணும்னாலும்
நாம பேசிக்கலாம். இது தான் என்னோட நம்பர் சேவ் பண்ணி வச்சுக்கோ. உனக்கு எப்போ
என்கிட்ட பேசணும்னு தோணுனாலும் எனக்கு போன் பண்ணலாம்”.
“சரிடி. நீ எப்படி இருக்க? நல்லா
இருக்கியா?”.
“எனக்கு என்ன நான் நல்லா தான்
இருக்கேன். இங்க அத்தை, பாட்டி எல்லாருமே என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. அப்புறம்
ஆரணி இருக்கா இல்ல, அவ தான் உன்னோட இடத்தை எனக்கு ஃபுல் ஃபீல் பண்றா. உன் கூட
இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது அவ கூட இருக்கும் போது. அப்புறம் ஆரியன், அவனும் ஒரு
பிரெண்ட் மாதிரி தான். அப்படியே ஜாலியா போகுது”.
ஸ்வேதா
மெதுவான குரலில் சோகமாக, “அப்போ அவங்க எல்லாம் நல்லா
பேசுறாங்க. அதனால் உனக்கு எங்க ஞாபகம் வரலையா”.
யாழினிக்கு
என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவள் இவர்களை எல்லாம் எவ்வளவு தேடினாள் என்பது
அவளுக்கு தானே தெரியும். எப்படி அதை சொல்வது துக்கத்தில் தொண்டை அடைத்தது.
ஸ்வேதா,
“ஹலோ யாழினி இருக்கியா”.
தன்னை
சமாதானம் செய்து கொண்ட யாழினி, “ஆங்.. ஆங்.. இருக்கேன். உங்களை
எல்லாம் எப்படி தேடாமல் இருக்கும். உங்க எல்லாரையுமே நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.
ஆரம்பத்துல அவர் ரொம்ப எங்க குடும்பத்து மேல கோவமா இருந்தாரு. யாருகிட்டயும் பேச
கூடாதுன்னு சொல்லி இருந்தாரு. ஆனா, இப்போ பரவாயில்ல டி. நிறைய மாறிட்டாரு.
பேசிக்கோன்னு சொல்லிட்டாரு”.
ஸ்வேதா,
“அப்போ உனக்கு ரொம்ப கஷ்டமா
இருந்திருக்கும்ல. உன்னை திட்டுவாரா, அடிப்பாரா?”.
யாழினி,
“எதுக்குடி இப்போ பழசெல்லாம்
பேசிகிட்டு. அதான் உங்க கிட்ட எல்லாம் பேச சொல்லிட்டாருல்ல”.
“இருந்தாலும், ஒரே நாளில் உன்
வாழ்க்கையே மாறும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கல டி. கயல் அக்காவுக்கு
கல்யாணம்னு சொல்லி நம்ம ஜாலியா அரட்டை அடித்ததெல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம்
இருக்கு. எனக்கு உன் ஞாபகம் வரும் போதெல்லாம் நாம அன்னைக்கு மண்டபத்தில் எடுத்த
போட்டோஸ் தான் பார்த்துக்கிட்டு இருப்பேன். நீ ரொம்ப பாவம் யாழினி”.
“சரி, சரி போதும். அதான் எல்லாம்
சரியாயிடுச்சுல்ல. இன்னும் எதுக்கு பழசை பேசிக்கிட்டு இருக்க. உனக்கு இன்னொரு
விஷயம் தெரியுமா. நான் காலேஜ் போக போறேன்”.
ஸ்வேதாவுக்கு
அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை.
யாழினி,
“ஹலோ ஸ்வேதா என்ன தூங்கிட்டியா?”.
“என்னடி சொல்ற நிஜமாவா..
காலேஜ்கா.. நீயா..?”.
“ஆமா டி. வேற என்ன பண்றது.
சேர்த்து விட்டுட்டார் போகலைனு சொன்னா பக்கம் பக்கமா அட்வைஸ் பண்றாங்க. அந்த
அட்வைஸை கேக்குறதுக்கு காலேஜ்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்”.
ஸ்வேதா,
“இருந்தாலும், நீ சொல்றதை என்னால்
நம்பவே முடியலை. பட் இருந்தாலும், ஹாப்பியா தான் இருக்கு. நானும் காலேஜ் ஜாயின்
பண்ணிட்டேன், நீயும் பண்ணிட்ட. பார்த்தியா நம்ம ஸ்கூல் படிக்கும் போது காலேஜ் போக
மாட்டோம்னு பேசிக்கிட்டு இருந்தோம். இப்போ, ரெண்டு பேருமே போக போறோம்” என்று கூறி நகைத்தாள்.
“ஆமா டி. அது வரைக்கும் பரவாயில்ல.
ஆரணி காலேஜிலேயே சீட்டு வாங்கி இருக்கார். அவ கூடவே போயிட்டு வந்துடலாம். சரி டி
உன் மாமியார் வீட்ல எல்லாம் எப்படி. எல்லாம் உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா”.
“ம்ம்.. ஏதோ போகுதடி”.
“என்னடி டல்லா சொல்ற”.
“என்னத்த சொல்ல. என் வீட்டுக்காரர்
ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காரு. அவர் சொல்றது தான் நான் கேட்கணும்னு ரொம்ப கண்டிஷன்
எல்லாம் போடுறார். எங்க வீட்டுக்கு போகணும்னா கூட எப்போ போகணும், எப்போ வரணும்
எல்லாமே அவர் தான் சொல்றார். நான் எந்த விஷயம் செய்யணும்னாலும் அவர் சொல்றதை
மட்டும் தான் செய்யணும்னு சொல்றார். எங்கேயாவது வெளியில் போகலாமானு கேட்டா
எங்கேயும் கூப்பிட்டு போக மாட்டேங்குறார்”.
யாழினி,
“இதெல்லாம் ஒரு விஷயமா டி. இதுக்கு
ஏன் கவலைப்படுற?”.
ஸ்வேதா,
“என்னடி இப்படி சொல்ற. எனக்கு ஏதோ
ஜெயிலில் இருக்குற மாதிரி இருக்கு தெரியுமா. சரி டி அத்தை கூப்பிடுறாங்க நான்
அப்புறமா பேசறேன்”.
“ஓகே, ஓகே பாய்” என்று அழைப்பை துண்டித்தவள்.
என்ன இவ
இப்படி புலம்புறா. இவரும் அவ சொல்ற மாதிரி தான் இருக்காரு. எங்க வீட்டுக்கு எப்ப
போகனும், வரணும்னு இவர் தான் டிசைட் பண்றாரு. இவர் சொல்றது தான் நான் கேக்கணும்னு
சொல்றார் கண்டிஷன் போடுறார். அப்போ, இவரை மாதிரி தான் ஸ்வேதா ஹஸ்பண்டும்
இருக்காரோ. சரி அம்மாவுக்கு போன் பண்ணி சர்ப்ரைஸ் பண்ணுவோம் என்று அனைவருக்கும்
தனித்தனியாக போன் செய்து பேசினாள்.
யாழினியின்
குடும்பத்தில் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. தன் மாப்பிள்ளை மனம் மாறிவிட்டார்.
தங்களுடன் பேச ஒப்புக்கொண்டார் என்று அறிந்ததும்.
ஆனால்,
அதற்கு பின் என்ன இருக்கின்றது என்பதை யாரும் சிந்திக்கவில்லை. தன்
குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசி முடித்ததும், ஏனோ யாழினிக்கு வெகு நாட்கள்
கழித்து பெரும் மன நிறைவு ஏற்பட்டது.
அதே
மகிழ்ச்சியோடு வள்ளியம்மையிடம் சென்றவள், “பாட்டி நான் இன்னைக்கு எங்க வீட்ல எல்லார்கிட்டயும் போன்ல
பேசினேன்”.
“அப்படியா அக்கா கிட்ட பேசுனியா”.
“ஆமா”.
“என்கிட்டயும் கொடுத்து
இருக்கலாம்ல”.
“இதுக்கு ஏன் பாட்டி
கவலைப்படுறீங்க. நம்ம கையில் தான் இப்போ போன் இருக்கே. எப்போ வேணும்னாலும்
பேசலாம். இப்போ வேணும்னா போட்டு கொடுக்கவா”.
அறையில்
இருந்து வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தி, “வள்ளி......” என்று அழைத்தபடி யாழினியை முறைத்துக்
கொண்டே இவர்கள் அருகில் வந்தார்.
அவரை
பார்த்த யாழினி அமைதியாக நின்று கொண்டாள்.
கிருஷ்ணமூர்த்தி,
“நீ சொன்னதுக்காக தான் இந்த பொண்ணு
அபியை கட்டிக்க நான் சம்மதிச்சேன். அது உனக்கே தெரியும். அதுக்காக அப்போ நான்
சொன்னது எதையுமே மறந்திருக்க மாட்டனு நினைக்கிறேன். உன் அக்கா குடும்பத்தோட உறவு
கொண்டாடுறதுக்காக இவளை நாம கட்டிக்கிட்டு வரல தெரியும்ல” என்று அவரை முறைக்க.
வள்ளியம்மை
யாழினியை ஒரு பார்வை பார்த்தபடி யாழினியிடம், “யாழினி, ஆரணி என்ன பண்றானு பாருமா. உன்னை ரொம்ப நேரமா
கூப்பிட்டுக்கிட்டே இருந்தா”.
கிருஷ்ணமூர்த்தி,
“ஏய் நில்லு” என்று யாழினியை நிறுத்தியவர்.
“இங்க பாரு வள்ளி. இனிமே, இந்த
பொண்ணு கிட்ட எதையும் மறைக்கணும்னு அவசியம் இல்லை. எல்லா உண்மையும் தெரியட்டும்.
என்ன பண்ணானு தெரியல, அபி இப்போ கொஞ்ச நாளா என் பேச்சை கேட்க மாட்டேங்கிறான்.
பாரு.. இவளுக்கு போன் வேற வாங்கி கொடுத்திருக்கான். இதெல்லாம் எங்க போய் முடிய
போகுதோ தெரியல. ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ. நீ என்ன தான் முயற்சி
பண்ணாலும், என் பேரனை என்கிட்ட இருந்து உன்னால பிரிக்க முடியாது”.
யாழினி,
“தாத்தா உங்க பேரனை உங்ககிட்ட
இருந்து பிரிக்கணும்னு நாங்க என்னைக்குமே நினைச்சது கிடையாது. என்னைகா
இருந்தாலும், அவர் உங்க பேரன் தான். உங்களுக்கு மட்டுமே பேரனா இருக்கட்டும். எங்க
குடும்பத்து மேல நீங்க போட்ட வீண் பழியினால் நாங்க எல்லாரும் இப்போ ரொம்ப
கஷ்டப்படுறோம். அது பொய்னு அவர்கிட்ட சொல்லிடுங்க தாத்தா. அதனால் உங்களுக்கு எந்த
பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்குறேன்”.
கிருஷ்ணமூர்த்தி
ஏளனமாக யாழினியைப் பார்த்து சிரித்தபடி, “உன் தாத்தா, அப்பா எல்லாம் பேசி வேலைக்கு ஆகலைனு இப்போ உன்னை
பேச சொல்லி இருக்காங்களா. நீங்க யாரு என்ன சொன்னாலும் என் மனசு மாறாது. என்
பொண்ணையும், பேர பசங்களையும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது”.
யாழினி,
“இப்போ யாரும் உங்ககிட்ட இருந்து
அவங்களை பிரிக்கணும்னு முயற்சி பண்ணல தாத்தா. என் குடும்பத்து மேல அவருக்கு இருக்க
வெறுப்பு போனாலே போதும். வேற எதுவும் எங்களுக்கு வேண்டாம்”.
கிருஷ்ணமூர்த்தி,
“அது மட்டும் என்னைக்கும்
நடக்காது. ஆமா, நீ சொல்றது உண்மை தான். மீரா என் பொண்ணு கிடையாது. உன்
தாத்தாவுக்கு பிறந்த பொண்ணு தான். ஆனா, அவளை வளர்த்தது நான். அவ மேல முழு
உரிமையும் எனக்கு தான் இருக்கு. அவ என்னோட உறவு, அவளை யாருக்காகவும் நான் விட்டுக்
கொடுக்க மாட்டேன். உன் குடும்பத்தை நான் என் வீட்டுக்குள்ள சேர்த்தா கொஞ்சம்
கொஞ்சமா மீராவோட மனசை மாத்தி உங்களோடவே கூப்பிட்டு போயிடலாம்னு பார்க்குறீங்களா”.
“அப்படி எல்லாம் இல்ல தாத்தா.
நீங்க ஏன் தப்பாவே நினைக்கிறீங்க”.
“நீ என்ன சொன்னாலும் சரி, நான்
உங்களை நம்ப மாட்டேன்.. நம்ப மாட்டேன்.. நம்ப மாட்டேன்..! என் முடிவு இது தான்.
உனக்கு அபி கூட வாழனும்னா உன் குடும்பத்தை விட்டு நீ பிரிஞ்சு தான் ஆகணும். அபியோட
வாழுறதும், வாழாததும் உன்னோட விருப்பம்”
என்றுவிட்டு அறைக்கு சென்று விட்டார்.
இவர்
வீட்டில் தங்களை தவிர வேறு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு பேசியதை,
தோட்டத்திலிருந்து மீரா கேட்டுவிட்டார்.
மீரா, ‘அப்போ இவங்க என்னுடைய உண்மையான அப்பா,
அம்மா கிடையாதா? என்னை வளர்த்தவங்களா.. பெரியம்மாவும், பெரியப்பாவும் தான்
என்னுடைய உண்மையான அப்பா, அம்மா வா? இங்க என்ன நடக்குது? ஏன் என்கிட்ட இந்த
உண்மையை இத்தனை நாள் சொல்லாமல் எல்லாரும் மறைச்சாங்க’.
அதிர்ச்சியில்
அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தோட்டத்து நாற்காலிகிலேயே அமர்ந்து
விட்டார். யாரிடம் இதை கூறுவது என்று ஒன்றும் புரியவில்லை.
அப்போ
அபிக்கும் இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குழந்தை
இல்லைனு என்னை வளர்க்க கொடுத்திருக்காங்க.
அவங்க
நல்ல விஷயம் தானே பண்ணி இருக்காங்க இவங்களுக்காக. இவங்க ஏன் அவங்க மேல
கோவப்படுறாங்க. அப்படி என்ன நடந்திருக்கும்? யார்கிட்ட கேட்கிறது? நமக்கு உண்மை
தெரிஞ்ச விஷயம் தெரிஞ்சா அம்மாவும், அப்பாவும் ரொம்ப மனசு வருத்தப்படுவாங்களே
என்று யோசித்தவர் மரகதம் பாட்டிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அந்த
புறம் மரகதம், “ஹலோ..”.
மீரா, “அம்மா...!” என்றார் குரல் மங்க.
மரகதம்
ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் நின்று விட்டார், “இது மீரா.. மீரா தானே.. மீராவின் குரல் தானே..”.
மீரா, “பெரியம்மா..”.
மரகதம்,
“ஆங்.. சொல்லுமா” என்றார் தட்டுத் தடுமாறி.
“உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்,
தனியா இருக்கீங்களா”.
“ம்ம்.. சொல்லுமா”.
“நீங்க தான் என்னுடைய அம்மாவா?” என்று நேராக கேட்டுவிட.
மரகதத்திற்கு
என்ன பதில் கூறுவது என்று ஒன்றும் புரியவில்லை.
“அது வந்து...” என்று இழுக்க.
“எனக்கு எல்லா உண்மையும் தெரியும்”.
“ஆமா”.
“எனக்கு என்ன நடந்ததுனு முழுசா
தெரியணும்”.
மரகதம்
நடந்த மொத்த கதையையும் கூறி முடிக்க, கேட்ட மீராவிற்கு நம்ப முடியவில்லை.
தன்
தந்தையா இப்படி என்று. அதுவும் தனக்காக... தனக்காக யாருமே தேவையில்லை ஊரும்
தேவையில்லை, உறவும் தேவையில்லை என்று அனைத்தையும் ஒரு நொடியில் விட்டு
வந்திருக்கிறாரே.
இவரை
நினைத்து மகிழ்வதா அல்லது அவர்களின் மனதை நோகடித்து வந்ததை நினைத்து
வருத்தப்படுவதா என்று இருதலைக் கொல்லி எரும்பாய் தவித்தார்.
பிறகு,
தொலைபேசியில் மரகதம் கார்த்திருப்பது எண்ணி, “நான் அப்புறம் பேசுறேன்” என்று விட்டு தொடர்பை துண்டித்தவர் வெகு நேரம் ஆகியும்
அங்கிருந்து செல்லவில்லை.
மீராவை
தேடி தோட்டத்திற்கு வந்த யாழினி, “அத்தை
நீங்க இங்க இருக்கீங்களா. உங்களைக் காணோம்னு நான் எல்லா இடத்திலும் தேடிட்டு
வந்தேன். என்ன ஆச்சு அத்தை? ஏன் டல்லா இருக்கீங்க”.
“ஒன்னும் இல்ல”.
“உடம்புக்கு எதாவது பண்ணுதா
டாக்டர்கிட்ட போயிட்டு வரலாமா”.
“உனக்கு எல்லாமே தெரியுமே ஏன்
என்கிட்ட நீ எதையுமே சொல்லல”.
யாழினி
புரியாமல் பார்த்தவள், “நீங்க என்ன கேக்குறீங்கன்னு
புரியல அத்தை”.
“நம்ம குடும்பத்துல நடக்குற
பிரச்சனை எல்லாம் உனக்கு தெரியும்ல. எல்லாத்துக்கும் நான் தானே காரணம்”.
யாழினிக்கு
தூக்கி வாரி போட்டது. எப்படி இவருக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரிய வந்தது. இவர்
உண்மைகளை தெரிந்து கொண்டு கேட்கிறாரா... அல்லது, தெரியாமல் கேட்கிறாரா... என்று
குழப்பமாக பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
மீரா, “சொல்லு யாழினி உன் குடும்பத்தை
கஷ்டப்படுத்த தான் உன்னை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு கூப்பிட்டு வந்து
இருக்காங்கல்ல?”.
இனி
மீராவின் முடிவு என்னவாக இருக்கும்....?
யாழினி
என்ன கூறப் போகிறாள்...?
கருத்துகள்
கருத்துரையிடுக