அவனதிகாரம் - 68

 

 

அதிகாரம் – 68

 

மீரா, உனக்கு தான் எல்லா உண்மையும் தெரியுமே யாழினி, ஏன் இவ்வளவு நாளா என்கிட்ட எதையுமே சொல்லாம மறைச்ச?.

 

மீராவின் கேள்வியில் உள்ளுக்குள் யாழினிக்கு அதிர்வலைகள் ஏற்பட்டாலும் வெளியே, நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியல அத்த என்றாள்.

 

மீரா ஒரு விரக்தி புன்னகையை சிந்திய படி, நீங்க இவ்வளவு நேரம் உள்ள பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன்.

 

யாழினிக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. யாருக்கு உண்மைகள் தெரியக்கூடாது என்று இவ்வளவு நாள் பார்த்து பார்த்து பாதுகாத்து வைத்திருந்தார்களோ அவர்கள் வாயிலாகவே இவருக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது. இப்பொழுது என்ன செய்வது என்று எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

 

மீரா, அப்போ நீங்க யாரும் என்கிட்ட உண்மையை சொல்ல கூடாதுனு மிரட்டுறதுக்காக தான் உன்னை அபி கல்யாணம் பண்ணி இருக்கானா?.

 

அப்படியெல்லாம் எதுவும் இல்லத்த.

 

பாவம்! இவங்க எல்லாம் சேர்ந்து உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டாங்க இல்ல. இது எதுவுமே தெரியாம நான் எப்படி முட்டாள் மாதிரி இருந்திருக்கேன் பார்த்தியா.

 

அய்யோ அத்தை! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. நீங்க நினைக்கிற மாதிரி தான் ஆரம்பத்துல நானும் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, எங்க குடும்பத்தை கஷ்டப்படுத்துறதுக்காக உங்க பையன் என்னைக் கல்யாணம் பண்ணல.

 

மீரா, வேற எதுக்காக பண்ணான்னு சொல்ல வர யாழினி. அவன் உன்னை காதலிச்சேன்னு சொன்ன கதை எல்லாம் நீ நம்புறியா. எனக்கு நம்பிக்கை இல்லை. என் அப்பா சொல்லி தான் அவன் உன்னை கல்யாணமே பண்ணி இருக்கான். அப்புறம் எப்படி உன்னை காதலிச்சு இருக்க முடியும்.

 

யாழினியின் மனதையும் சேர்த்து குழப்பும் படி இருந்தது மீராவின் கேள்விகள்.

 

யாழினி, எனக்கு நீங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் என்ன பதில் சொல்றதுனு தெரியல. இதுக்கெல்லாம் பதில் தெரியணும்னா நீங்க உங்க பையன் கிட்ட தான் கேட்கணும்.

 

என்ன கேட்டாலும் அவன் வாயிலிருந்து உண்மையை வர வைக்க முடியாது யாழினி. நான் கூட அவன் உன்னை நிஜமாவே விரும்பி தான் கல்யாணம் பண்ணி இருக்கான்னு நினைச்சுட்டேன். இப்போ தான் எனக்கு எல்லாமே புரியுது. என்னால உன் வாழ்க்கையும் சேர்ந்து இப்படி வினாகிடுச்சு.

 

யாழினி, அத்தை நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான். இவங்க உங்களை வளர்த்தவங்களா இருந்தாலும், உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க. அதனால தான் இப்படி எல்லாம் நடந்து இருக்காங்க. நீங்க இப்படி கவலைப்படுவீங்கன்னு தான் உங்களுக்கு எந்த விஷயமும் தெரியாமல் பார்த்துக்கிட்டாங்க.

 

இப்போ நீங்க கவலைப்படுற அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லத்த. எல்லாமே சரியாயிடுச்சு. இன்னும் ஒரே ஒரு விஷயம் தான் சரி பண்ணனும், உங்க பையனுக்கு அவங்க தாத்தா பண்ண விஷயம் எல்லாம் தெரிய வந்தா எல்லாமே சரி ஆயிடும்.

 

நான் சொல்றேன் அவன் கிட்ட.

 

ஐயோ! வேண்டாம் அத்தை. உங்களுக்கு எந்த விஷயமும் தெரியக்கூடாதுனு நினைக்கிறாங்க. இதை நாங்களே பார்த்துக்குறோம். நீங்க தெரியாத மாதிரியே இருங்க.

 

என்ன விளையாடுறியா யாழினி. உன் வாழ்க்கையே இங்க கேள்விக்குறியா இருக்கு. எங்க அப்பா என்ன சொன்னாருன்னு கேட்டல்ல. அபி கூட நீ வாழனும்னா உன் குடும்பத்தை விட்டு நீ வரணும்னு சொல்றார். அவர் மட்டும் அவர் பொண்ணுக்காக யாரும் வேண்டாம்னு வருவார். ஆனா, நீ மட்டும் உன் குடும்பத்து கூட பேச கூடாதுனு சொல்றாரே இதெல்லாம் கொஞ்சமாவது நியாயமா இருக்கா. நான் அபி கிட்ட பேசுறேன்.

 

அத்தை மரகதம் பாட்டியும், வேலுசாமி தாத்தாவும் தான் உங்க உண்மையான அப்பா, அம்மானு உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் உங்க பையனுக்கு தெரியக்கூடாது என்று கூறி முடித்ததும்.

 

யாழினியின் கன்னத்தில் அபிமன்யுவின் கை இடி என இறங்கி இருந்தது.

 

அதில் நிலை தடுமாறி கீழே விழப்போனவளை மீரா கை தாங்கலாக பிடித்தபடி கோபமாக, என்ன பண்ற அபி. உன்கிட்ட இந்த மாதிரி நடந்துக்க கூடாதுனு ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன்ல. என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன் மனசுல.

 

தன் தாயின் கேள்விகள் எதுவும் அபிமன்யுவின் காதிற்கு சென்றடையவில்லை. அவ்வளவு கோபம், ஆத்திரம் யாழினியின் மேல்.

 

எந்த உண்மையை இத்தனை நாட்களாக தன் தாய்க்கு தெரியக்கூடாது என்று மறைத்து வைத்திருந்தானோ, அதை யாழினி தெரியப்படுத்தி விட்டாளே என்ற கோபம்.

 

அபிமன்யு அலுவலகத்திலிருந்து வீட்டின் உள்ளே நுழையும் பொழுது பேச்சு குரல் கேட்டு தோட்டத்து பக்கம் வந்தவன். யாழினியின் கடைசி வாக்கியத்தை மட்டும் கேட்டுவிட்டு யாழினி தான் அனைத்து உண்மைகளையும் தன் தாயிடம் கூறிவிட்டாள் என்ற கோபத்தில் அடித்து விட்டான்.

 

மீரா கோபமாக, உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் கேக்குதா, இல்லையா? என்று ஒரு புறம் கத்திக் கொண்டிருக்க.

 

அபிமன்யு யாழினியிடம், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா இப்படி செஞ்சு இருப்ப. எப்படி நீ இந்த விஷயத்தை எங்க அம்மா கிட்ட சொல்லலாம். கடைசியில உனக்கும் உன் குடும்பத்து ஆளுங்க புத்தி தான் இருக்கு என்று கோபத்தில் திட்டினான் வெறுப்பான பார்வையுடன்.

 

யாழினிக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

 

அவன் அடித்ததில் கன்னம் வேறு வின் வின் என்று வலிக்க, வலியில் கண்கள் கலங்கிவிட்டது. ஒரு கையால் தன் கன்னத்தை தாங்கி பிடித்தபடி அதிர்ச்சியாக நின்றிருந்தாள்.

 

அபிமன்யு, எல்லாம் என் தப்பு தான். உன் குடும்பத்தை பற்றி தெரிந்தும் உன்னை போய் கல்யாணம் பண்ணேன் பாரு என்னை சொல்லணும். அப்போவே உங்க அப்பா கூட நீ போறேன்னு சொன்னதும் போனு அனுப்பிவிட்டு இருக்கணும்.

 

அப்போவே அனுப்பி இருந்தா இன்னைக்கு இந்த பிரச்சனை நடக்காமல் இருந்திருக்கும். எந்த விஷயம் யாருக்கு தெரிய கூடாதுனு இத்தனை வருஷமா நாங்க நினைச்சோமோ, இப்படி ஒரே நிமிஷத்துல எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டியே. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா என்று நிறுத்தாமல் திட்டிக் கொண்டே இருந்தவனின் கன்னத்தில் பளார் என அறை விழுந்ததும். அபிமன்யு, யாழினி இருவருமே அதிர்ச்சியாக பார்க்க. மீரா தான் அறைந்திருந்தார்.

 

மீரா, என்னடா நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல.. என்ன நினைச்சுகிட்டு இருக்க.. என்ன நடக்குது, ஏது நடக்குதுனு எதையும் கேட்க கூட மாட்டியா.. கோவம் வந்தா அவளை இப்படி போட்டு அடிக்கிற. யாரு அவளை அடிக்கிறதுக்கு உனக்கு உரிமையை கொடுத்தது. ஆமா, எனக்கு எல்லா உண்மையும் தெரியும். ஆனா, அதுக்கு காரணம் யாழினி கிடையாது.

 

அபிமன்யு தன் தாய் யாழினியை காப்பாற்றுவதற்காக தான் இப்படி கூறுகிறார் என்று எண்ணி, சும்மா சொல்லாதீங்க மாம். இவளை காப்பாற்றுவதற்காக நீங்களும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா.

 

நான் யாருகிட்டயும் பொய்யும் சொன்னது கிடையாது, உண்மையையும் மறைச்சது கிடையாது என்றார் அபிமன்யுவை பார்த்து கோபமாக.

 

சற்று நேரத்திற்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி யாழினியிடம் கூறிய அனைத்தையும் கூறியவர், போ.. போய்.. உன் தாத்தா கிட்ட கேளு. அவரும் நீயும் தானே சேர்ந்து எல்லா பிளானும் போடுவீங்க. நான் இப்போ சொன்னதெல்லாம் உண்மையா பொய்யானு அவர்கிட்டயே கேளு.

 

அவர் சொன்னா தான நீ நம்புவ. யாழினி தப்பே செஞ்சு இருந்தாலும் நீ எப்படி அவளை அடிக்கலாம். வந்ததும் என்ன நடந்ததுனு நீ முதலில் விசாரிச்சு இருக்கணும். அதை விட்டுட்டு இப்படி போட்டு அடிக்கிற. நீ சொல்றது உண்மை தான். அன்னைக்கு அவங்க அப்பா கூட போறேன்னு சொன்னதும் அனுப்பி வச்சிருக்கனும். நானும் லூசு மாதிரி என் பையன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சு இவளோட வாழ்க்கையை வீணாக்கிட்டேன் என்றார் அழுகையினோடு.

 

அபிமன்யு, மாம்.. சாரி மாம்.. என்றான் குற்ற உணர்ச்சியோடு.

 

போதும் அபி.. போதும்.. நீ ரொம்ப பேசிட்ட. நீ சொன்ன மாதிரி இனிமே அவ உன் கூட வாழ மாட்டா. நான் அவளை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்ப போறேன்.

 

இவர்களின் வாக்குவாதத்திற்கு நடுவே யாழினியால் எதுவும் வாயைத் திறந்து பதில் பேச முடியவில்லை. வலியில் இவர்களின் பேச்சு வார்த்தையை அவள் கவனிக்கவே இல்லை.

 

அபிமன்யு இயலாமையுடன், ப்ளீஸ் மாம், தெரியாம பண்ணிட்டேன். நான் விசாரித்து இருக்கணும். தப்பு என் மேல தான் மன்னிச்சிடுங்க.

 

ஒவ்வொரு தடவையும் தப்பு பண்ணிட்டு சாரி கேட்கிறது ரொம்ப ஈசி. அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு தான் அதோட வலி புரியும் என்று யாழினியை பார்த்தவர் .

 

உனக்கு என்ன சொன்னாலும் புரியாது அபி என்றார் மீண்டும் அபிமன்யுவை பார்த்து.

 

அபிமன்யுவிற்கு யாழினியை பார்க்கவே சங்கடமாக இருந்தது. அவசரப்பட்டு அடித்த தன் முட்டாள் தனத்தை எண்ணி தன்னையே வெறுத்தவன்.

 

யாழினியை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க முன்னேறியவனை கைநீட்டி தடுத்த மீரா, எங்க போற? என்றார் கோபமாக.

 

அபிமன்யு தயக்கமாக, மாம்... என்றபடி யாழினியை கை காட்ட.

 

மீரா, உனக்கு கொஞ்சம் கூட உறுத்தலாவே இல்லையா. நினைச்சா அடிப்ப, நீ அடிச்சா அவ வாங்கிக்கணும். உடனே, ஐயோ என் மேல தான் எல்லா தப்பும்னு சொல்லி பேசுவ, அவ சரினு மன்னிக்கனுமா. அவளை பத்தி நீ என்னைக்குமே நினைச்சு பார்க்க மாட்டியா.

 

அது சரி, உன்கிட்ட போய் அவளை பத்தி நினைக்க சொல்றேன் பார்த்தியா. உனக்கு அவ குடும்பத்தை கஷ்டப்படுத்தனும். அதுக்காக தான நீ அவளை கல்யாணமே பண்ணி இருக்க. அவங்க குடும்பத்தை கஷ்டப்படுத்த நீ யாரு. உனக்கு யாரு அந்த ரைட்ஸ் கொடுத்தது.

 

அந்த குடும்பத்தை கஷ்டப்படுத்தறேன்னு சொல்லி பாவம், ஒரு பொண்ணோட வாழ்க்கையை நீ அழிச்சிட்ட. இதில் என்கிட்ட என்ன சொன்ன.. இவளை காதலிச்சதால யாருக்கும் தெரியாம இவளை கல்யாணம் பண்ணேன்னு என்ன எல்லாம் கதை சொன்ன.

 

அதையும் நான் நம்பி இருக்கேன் பார்த்தியா. உன்னை பற்றி எல்லா விஷயமும் தெரிஞ்சும், நீ எப்படிப்பட்டவன் எல்லாம் தெரிஞ்சும், நீ காதலிக்கிறேன்னு சொன்னதை நம்பிட்டேன். நான் நம்பி இருக்க கூடாது. என்ன இருந்தாலும் நீ என் பையனாச்சே, எங்க ஏதோ அவசரத்துல நடந்த கல்யாணம் என்பதால் நீ யாழினியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியோ.... உனக்கு அவளை பிடிக்காமல் போயிடுமானு பயந்துகிட்டு இருக்கும் போது, நீ இவளை காதலிக்கிறேன்னு சொன்னதும் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..

 

கடைசியில் எல்லாமே பிளான் தான் இல்ல. சரி, பழசை பத்தி பேசி இனிமே எதுவும் மாறப் போறது இல்ல. இனிமே, என்ன பண்ணலாம்னு யோசிப்போம். இனி, யாழினி இங்க இருக்க வேண்டாம் என்றார் திட்டவட்டமாக.

 

அபிமன்யுவிற்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. எப்படி இதை நாம் சரி செய்வது என்று சிந்தித்தவனிற்கு தெரியாது. இது மட்டும் இல்லை இதை போல்.. ஏன் இதைவிட பெரிய தவறுகள் எல்லாம் நாம் செய்திருக்கிறோம் என்று. அது தெரிய வந்தால் என்ன செய்வானோ..

 

மாம் ப்ளீஸ்.. இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் அவளை எங்கேயும் அனுப்ப மாட்டேன்.

 

அனுப்ப மாட்டேன்னு சொல்றதுக்கு நீ யாரு. கல்யாணம் ஆயிட்டா அவளை நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைச்சுகிட்டு இருக்கியா. எனக்கும் அவ மேல உரிமை இருக்கு. நான் அவளோட சொந்த அத்தை என்று அழுத்தமாக கூறினார்.

 

இவளை இங்க இருந்து அனுப்பிட்டா நீயும், உன் தாத்தாவும் போட்ட பிளான் எல்லாம் நடக்காமல் போயிடுமேனு கவலைப்படுறியா. போய் சொல்லு உன் தாத்தா கிட்ட, இனிமே இவங்க குடும்பத்தை நம்மால ஒன்னும் பண்ண முடியாதுன்னு என்று கூறியவர்.

 

யாழினியிடம் சென்று, இனிமே இவன் உனக்கு வேண்டாம் யாழினி என்று கூறி அவளின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

 

யாழினி சென்று மறையும் வரையிலும் அபிமன்யு அவளையே பார்த்துக் கொண்டு நிற்க..

 

அவள் அபியை திரும்பியும் பார்க்கவில்லை. அது அபிமன்யுவிற்கு மனதளவில் பெரும் அடியை கொடுத்தது.

 

அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லையே. தவறு என் மேல் தான் யோசிக்காமல் அவசரப்பட்டு அவளை அடித்தது என் தவறு தான். அதற்காக என்னை விட்டு போய்விடுவாளா?

 

முடியாது.. அவளை எங்கும் அனுப்ப முடியாது.. அவள் எனக்கு சொந்தமானவள்.. என்னவள்..!

 

அவளை அனுப்ப நான் விடமாட்டேன் என்று பலவாறு மனதிற்குள் புலம்பியபடி வீட்டிற்குள் சென்றான்.

 

ஆனால், அங்கே யாழினியும் தென்படவில்லை, அவனின் அம்மாவும் தென்படவில்லை. வீடு எப்பொழுதும் போல் ஆரணி, ஆரியனின் சண்டைகளால் நிறைந்திருந்தது.

 

அவனுக்கும் இந்த சூழ்நிலையில் எப்படி யாழினியை எதிர்கொள்வது என்று தெரியவில்லை. சற்று தனிமை தேவைப்பட தன்னறைக்கு விரைந்து விட்டான்.

 

இரவு உணவின் பொழுது எப்படியேனும் யாழினியைப் பார்த்து விடலாம் என்று எண்ணியவன். சீக்கிரமாகவே சாப்பாட்டு மேஜைக்கு வந்து அமர்ந்து விட்டான்.

 

அதை பார்த்த வள்ளியம்மை பாட்டி, என்ன அபி ரொம்ப பசிக்குதா, அதுக்குள்ள வந்துட்ட. இரு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.

 

அபிமன்யு, பாட்டி அம்மா எங்க?.

 

என்னன்னு தெரியலப்பா. ரொம்ப டல்லா இருக்கா. தலைவலினு சொல்லிட்டு ரூம்லையே இருக்கா.

 

யாழினி? என்றான் மெதுவாக.

 

அவளா.. அவள் ஆரணி கூட தான் இருந்தா. ரெண்டு பேரும் நாளைக்கு காலேஜ் போறாங்கல்ல அது பற்றி ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க. நீ சாப்பிடு பா, நான் உனக்கு எடுத்து வைக்கிறேன்.

 

அபிமன்யு, ம்ம் என்றவன் தன் பாட்டி பரிமாறிய உணவை மெதுவாக உண்ண தொடங்கினான்.

 

பிறகு, ஒவ்வொருவராக சாப்பிட வரவும். மீராவையும், யாழினியையும் மட்டும் காணவில்லை.

 

ஆரியன், என்னண்ணா இன்னைக்கு ரொம்ப நேரமா சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க.

 

வள்ளியம்மை பாட்டிக்கும் அதே சந்தேகம் தான். எதுவோ சரியில்லை என்று தோன்றியது.

 

அபிமன்யுவின் முகமும் சரியில்லை, அவனது நடவடிக்கையும் சரியில்லை. அதே போல் மீரா மற்றும் யாழினியின் நடவடிக்கையும் சரியில்லை.

 

என்ன நடக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் தான் ஆரியன் தன் வாயிலாகவே கேட்டு விட்டான்.

 

அபி, நத்திங்.

 

பிறகு, கை கழுவி விட்டு தன் அறைக்கு செல்லும் வரையிலும் யாழினியை கண்களால் தேடிக் கொண்டே இருந்தான். ஆனால், எங்குமே அவளை காண முடியவில்லை.

 

மீராவின் அறையில் மீரா, யாழினி நான் உன்னுடைய அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்றேன். நீ நாளைக்கு ஊருக்கு கிளம்பு.

 

யாழினி, அத்தை..! என்றாள் அதிர்ச்சியாக.

 

நான் நிஜமா தான் சொல்றேன் யாழினி. இதுக்கு முன்னாடி ஒரு தடவை அவன் உன்னை அடிச்சிருக்கான். அப்போவே நான் அவனை வார்ன் பண்ணேன். ஆனா, எனக்கு அப்போ இந்த உண்மை எல்லாம் தெரியாது. இப்போ எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம், தெரிஞ்சே என் கண்ணு முன்னாடி ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணாகுறதை என்னால பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. அதுவும் என்னால....

 

அப்படி எல்லாம் இல்லத்த. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. உங்க பையன் இப்போ நிறைய மாறி இருக்கார்.

 

யாழினிக்கு எப்படி மீராவை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. யாழினிக்கும் அபிமன்யுவின் மேல் மலையளவு கோபம் இருக்கிறது. எப்படி என்னை அடிக்கலாம், என் மேல் நம்பிக்கை இல்லையா?

 

என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் எப்படி சந்தேகப்பட்டு இருக்கலாம் என்று ஒரு புறம் கோபம் இருந்தாலும். அது வேறு.. ஆனால், அவனை விட்டு போக அவளிற்கு ஏனோ தோன்றவில்லை.

 

அந்த நேரம் சரியாக மரகதம் யாழினிக்கு போன் செய்ய அணைப்பை ஏற்ற யாழினி, ஹலோ பாட்டி.

 

மரகதம், என்னாச்சு யாழினி. உன் குரலே சரியில்ல. அங்க ஏதாவது பிரச்சனையா? மீரா வேற போன் பண்ணி எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சுன்னு சொல்றா. அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே? என்றார் பதட்டமாக.

 

யாழினிக்கு அழுகை வந்துவிட்டது. தன் தாயை விட தனக்கு அனைத்து விதத்திலும் அறிவுரை கூறுவதும், ஆறுதல் கூறுவதும் பாட்டி தானே. அவரிடம் யாழினிக்கு எதையும் மறைக்க வேண்டும் என்று எப்பொழுதுமே தோன்றாது.

 

தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறிவிடுவாள். இப்பொழுதும் அதே போல், பாட்டி, அத்தைக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு. ஆனா, அவர் நான் தான் சொன்னேன்னு நினைச்சு என்னை அடிச்சிட்டார்.

 

அடிச்சிட்டாரா..! என்ன மா சொல்ற.

 

ஆமாம் பாட்டி. என்னை எதுவுமே ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லை.

 

முதல்ல என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு. எப்படி மீராவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சது.

 

யாழினி ஆரம்பம் முதல் அன்று வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறி முடிக்க.

 

மரகதம், இதை மீரா கேட்டதுக்கு பதிலா அபி கேட்டு இருந்தா எல்லா பிரச்சனையும் இன்னையோட முடிந்திருக்கும் என்றார் ஆதங்கமாக.

 

இனி நடக்கப் போவது என்ன..?

 

யாழினி அவளின் ஊருக்கே மீராவால் அனுப்பப்படுவாளா..?

 

மரகதம் பாட்டி இதை எப்படி கையாள போகிறார்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5