அவனதிகாரம் - 69

 

 

அதிகாரம் – 69

 

யாழினி, பாட்டி அத்தை என்னை நம்ம வீட்டுக்கு போக சொல்றாங்க. இவங்க நம்ம குடும்பத்தை கஷ்டப்படுத்த தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்காங்கன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க.

 

மரகதம், நீ மீரா கிட்ட போனைக் குடு, நான் பேசுறேன்.

 

மீரா, ஹலோ.

 

மீரா எப்படி இருக்க?.

 

ம்ம்.

 

நாங்க பண்ணது தப்புன்னு நினைக்கிறியா மா?.

 

இல்ல.. ஆனா, எப்படி சொல்றதுன்னு தெரியல. என்னுடைய இத்தனை வருஷ வாழ்க்கையும் பொய் ஆயிட்ட மாதிரி இருக்கு. என்னை அம்மாவும், அப்பாவும் நல்லா தான் பார்த்துக்கிட்டாங்க. என் மேல அவ்வளவு பாசமா இருக்காங்க. இருந்தாலும், ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்த மாதிரி தோணுது.

 

என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாமே. அப்பவும் நான் இவங்க பொண்ணா தான இருந்திருப்பேன். இப்படி மறைச்சு நான் சந்தோஷமா இருக்கணும்னு, எனக்கு எந்த உண்மையும் தெரியக்கூடாது என்பதற்காக ஒரு குடும்பத்தையே கஷ்டப்படுத்தி, ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்கனும்னு நினைக்கிறதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்!.

 

ஒருத்தவங்க மேல நாம கண்மூடித்தனமா பாசம் வச்சுட்டா அதை எப்படியாவது தக்க வச்சுக்கணும்னு தான் பார்ப்போம். அப்படி தான் உங்க அப்பாவும் நியாயம் அநியாயம் பார்க்காமல் விட்டுட்டார். அவருக்கு பயம்.. எங்க உன்னை நாங்க அவர்கிட்ட இருந்து பிரிச்சிடுவோமோனு. சின்ன வயசுல இருந்து எந்த உறவும் தனக்குன்னு இல்லாமலே வளர்ந்தவர்.

 

என் தங்கச்சியை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் அவங்களுக்குனு ஒரு குழந்தை இல்லை என்றதும் ரொம்ப ஏமாந்து மனசு உடைஞ்சு போயிட்டார். நீ அவர் கையில் வந்ததுக்கு அப்புறம் தான் அவருடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்சிருக்கு. அதை நாங்களே அழிச்சிடுவோமோ என்ற பயத்தில் தான் அவர் உன்னை எங்களுக்கு தெரியாத தூரம் கூட்டிட்டு போகணும்னு போயிட்டார்.

 

உண்மையை உன் கிட்ட எப்படி அவரால் சொல்ல முடியும். இவ்வளவு பாசம் கொட்டி வளர்த்துட்டு நாங்க உன்னுடைய அப்பா, அம்மா கிடையாதுனு அவர் எப்படி சொல்லுவார்? அவங்க மட்டும் தான் உனக்கு அப்பா, அம்மாவா இருக்கணும்னு நினைச்சு தானே உன்னை தூக்கிக்கிட்டு போனார். அப்படிப்பட்டவர் உன்கிட்ட உண்மையை எப்படி சொல்லுவார்னு நீ எதிர்பார்க்கிற.

 

மீரா, ஆனா, இப்போ இந்த உண்மை தெரிஞ்சதும் என்னால அவ்வளவு சாதாரணமா ஏத்துக்க முடியல. அவங்க மேல எனக்கு இருந்த பாசம் குறைஞ்சிடுச்சின்னு நான் சொல்ல மாட்டேன். எனக்கு தெரிஞ்சு அவங்க தான் என்னுடைய அப்பா, அம்மாவா இருந்துருக்காங்க. இனிமேலும் இருப்பாங்க! ஆனாலும், மனசுல ஏதோ ஒரு உறுத்தலா இருக்கு. அது மட்டும் இல்லாம, என்னால தான் யாழினியோட வாழ்க்கையும் இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தமா இருக்கு.

 

இங்க பாரு மா, நாங்க என் தங்கச்சிக்காக உன்னை அவ கையில் கொடுத்தோம். அவ உன்னை நல்ல படியா வளர்த்து ஆளாக்கி கட்டிக் கொடுத்து உனக்குன்னு ஒரு குடும்பம் ஆயிடுச்சு. உன்னை பொறுத்த வரைக்கும் அப்பா, அம்மா அவங்க தான். நீ உன் குடும்பத்தை மட்டும் பாருமா.

 

உன் பசங்க, உன் வீட்டுக்காரர், உன் அப்பா, அம்மா அதான் உன் குடும்பம். நீ அவங்களை மட்டும் பாரு. யாழினியோட வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் இல்ல. எந்த பிரச்சனை வரவும் நான் விடமாட்டேன். நாங்க என்ன பார்த்துக்கிட்டு சும்மா இருப்போமா. உங்க அப்பா பண்ணதை அவர் வாயாலேயே உனக்கு தெரியப்படுத்தின கடவுள் ஒரு நாள் அபிக்கும் புரிய வைப்பார்.

 

அது வரைக்கும் இங்க நடக்கிறது எல்லாம் என்னால் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க முடியாது பெரியம்மா. அவனுக்கு கோவம் வந்தா என்ன பண்றோம்னு தெரியாம பண்றான். உண்மையான அன்பு இல்லாம யாராலும் கணவன், மனைவியா சந்தோஷமா வாழ முடியாது. அவன் இஷ்டத்துக்கு இவளை ஆட்டி வைக்கணும்னு நினைக்கிறானே தவிர, இவளுக்கு ஒரு நல்ல கணவனா இருக்கணும்னு அவன் முயற்சி பண்ற மாதிரி தெரியல.

 

எதை வச்சு நீ சொல்ற? அவர் காட்டுற கோவம் தான் உங்க கண்ணு முன்னாடி தெரியுது. அவருடைய அன்பு உங்களுக்கு தெரியாது. ஆனா, யாழினிக்கு தெரியும்.

 

உங்களுக்கு தெரியாது பெரியம்மா. அபி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு காரணமே எனக்கு எந்த உண்மையையும் நீங்க சொல்லக்கூடாதுன்னு பிளாக்மெயில் பண்றதுக்காக தான்.

 

இதை அபி உன்கிட்ட சொன்னானா?.

 

மீரா சிந்தித்துக்கொண்டே, இல்ல.. அப்பா யாழினி கிட்ட பேசும் போது நான் கேட்டேன்.

 

நீ சொல்றது உண்மை தான். ஆனா, இது உன் அப்பாவுடைய பிளான். அபியோடது கிடையாது. அபி மனசுல என்ன இருக்குன்னு நீ அபி கிட்ட கேட்டு பாரு. அபி மனசுல யாழினி தான் இருக்கா. அபிக்கு தேவை யாழினியை கல்யாணம் பண்ணனும். அவ்வளவு தான்! உங்க அப்பா சொன்ன பிளானுக்காக அவன் பண்ணல.

 

உங்க அப்பா சொன்ன பிளானை அவன் பயன்படுத்திக்கிட்டான். இங்க பாரு மீரா, அபி கிட்ட இருந்து யாழினியை உன்னால பிரிச்சு வைக்க முடியாது. யாழினிக்காக உன் பையன் எந்த அளவுக்கு வேணும்னாலும் போவான். நீ வேணும்னா நான் சொல்ற மாதிரி உன் பையன் கிட்ட பேசி பாரு. அவன் மனசுல என்ன இருக்குன்னு உனக்கே தெரியும்.

 

மீரா அரை மனதுடன், சரிங்க பெரியம்மா. நான் அவன்கிட்ட பேசி பார்க்கிறேன். ஆனா, எனக்கு சரி வராதுனு தோணுச்சுனா யாழினியை அங்க அனுப்பிடுவேன். நீங்க எதுவும் நினைச்சுக்க கூடாது.

 

சரி மா. ஆனா, அவசரத்தில் எடுக்குற முடிவு எதுவும் சரியா வராது. நல்லா யோசிச்சுக்கோ.

 

சரி என்று இணைப்பைத் துண்டித்த மீரா அபியை தேடி அறைக்கு சென்றார்.

 

அறைக் கதவை திறந்து கொண்டு மீரா உள்ளே செல்ல. அறையில் யாரும் இல்லாமல் நிசப்தம் மட்டுமே நிலவியிருந்தது. பால்கனியில் யாரோ இருக்கும் அரவம் உணர்ந்து அங்கே சென்று பார்த்தார்.

 

அபிமன்யு தான் தன் கைகளை கட்டியவாறு வெளியே எங்கோ வெறித்தபடி நின்று இருந்தான்.

 

அவன் அருகில் சென்ற மீரா, அபி என்று அழைக்க.

 

டக்கென்று திரும்பி பார்த்த அபி பதட்டமாக, மாம், யாழினி எங்க? என்றான் தன் பார்வையால் அலசியபடி.

 

அபிமன்யுவின் தவிப்பே கூறியது, அவன் எந்த அளவிற்கு யாழினியை விரும்புகிறான் என்று.

 

அவ இங்க வரல. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

 

சொல்லுங்க மாம்.

 

நீ நிஜமாவே விரும்பி தான் யாழினியை கல்யாணம் பண்ணியா? இல்ல, உன் தாத்தா சொன்ன பிளானுக்காக பண்ணியா?.

 

மாம் உங்ககிட்ட உண்மையெல்லாம் சொல்லாதது தப்பு தான். ஆனா, இப்போ தெரிஞ்சது சரினு நான் சொல்ல மாட்டேன். உங்களுடைய வாழ்க்கை முழுக்க இந்த உண்மை உங்களுக்கு தெரியக்கூடாதுனு தான் நானும், தாத்தாவும் நினைச்சோம்.

 

எனக்கு இந்த உண்மை சின்ன வயசுலயே தெரியும். நீங்க நினைக்கிற அளவுக்கு அவங்க யாருமே நல்லவங்க கிடையாது மாம். யாராவது நம்மள வேணாம்னு தூக்கி எறிஞ்சுட்டாங்கன்னு தெரிஞ்சா நம்ம மனசு எவ்வளவு கஷ்டப்படும்.

 

அந்த கஷ்டம் உங்களுக்கு வரக்கூடாதுனு நினைச்சு தான் நானும், தாத்தாவும் இந்த உண்மையை உங்ககிட்ட சொல்லாமல் மறைச்சோம். அவங்க நீங்க பொண்ணா பிறந்ததால் மரியாதை குறைவா நினைச்சு உங்களை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டாங்க.

 

தாத்தாவும், பாட்டியும் தான் உங்களை அவங்க பொண்ணா நினைச்சு இத்தனை வருஷமா வளர்த்துக்கிட்டு வராங்க. இது சொல்ற அளவுக்கு அவ்வளவு முக்கியமான விஷயமா எனக்கு தோணல மாம். உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. இதை நான் எதுக்காக கெடுக்கணும்னு நினைச்சேன்.

 

சோ.. என்னோட வாழ்க்கைக்காக யாழினியோட வாழ்க்கையை அழிச்சிட்டீங்க.

 

மாம்.. அவளோட வாழ்க்கையை நான் எப்படி மாம் அழிப்பேன்? என் வாழ்க்கையே அவ தான்! அவ இல்லாம ஒரு லைஃப் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது. அவ அந்த குடும்பத்து பொண்ணுனு தெரிவதற்கு முன்னாடியே நான் அவளை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் அவளுடைய அக்காவுக்கும், எனக்கும் நீங்க கல்யாணம் முடிவு பண்ணதும் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கும்போது தான், அவ அக்கா கிட்ட அன்னைக்கு பேசி பார்த்தேன்.

 

அவ வேற யாரையோ லவ் பண்றானு தெரிஞ்சது. சரி இதான் சான்ஸ்னு அவகிட்ட கொஞ்சம் பேசுனதும், அவ அந்த மண்டபத்தை விட்டு போயிட்டா. நான் இவளை கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வந்துட்டேன். உங்க எல்லாருக்கும் வேணும்னா இது கட்டாய கல்யாணமா.. விருப்பம் இல்லாத கல்யாணமா.. தெரிஞ்சிருக்கும்.

 

ஆனா, என்னை பொறுத்த வரைக்கும் இது ஒரு லவ் மேரேஜ்! உயிருக்குயிரா காதலிச்ச பொண்ண பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன் அவ்வளவு தான். நான் என்னைக்குமே அவளை கஷ்டப்படுத்தணும்னு நினைச்சதில்ல.

 

ஆரம்பத்துல அவங்க பேமிலி மேல இருக்க கோபத்தில் எங்களுக்குள்ள சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சு. பட், இப்போ அவளே அவங்க பேமிலியை பற்றி புரிஞ்சுக்க ஸ்டார்ட் பண்ணிட்டா. இப்போ கூட அவங்க குடும்பத்துல யாருக்கும் அவ முக்கியம் கிடையாது.

 

அவங்களுடைய கௌரவம் தான் முக்கியம். பார்த்தீங்கல்ல.. அன்னைக்கு கல்யாண மண்டபத்துலயும் பொண்ணு மனசை புரிஞ்சுக்காம எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவ மனசுல என்ன இருக்குன்னு கூட ஒரு வார்த்தை கேட்கல.

 

இப்போ, அவளே அவங்க அப்பா கூட வீட்டுக்கு வரேன்னு சொல்லியும், அவர் கூப்பிட்டு போக மாட்டேன்னு இங்கேயே விட்டுட்டு போயிட்டார். ஏன்னா அவங்க ஊர்க்காரங்க முன்னாடி அவங்களுக்கு அவமானம் ஆயிடுமாம். அப்போ பொண்ணோட வாழ்க்கையை விட அவருக்கு அவங்க மரியாதை தானே முக்கியம்.

 

இப்படிப்பட்டவங்க எப்படி மாம் அவளை சந்தோஷமா பார்த்துப்பாங்க. அவங்களுடைய மரியாதைக்காக அவளை என்ன வேணும்னாலும் செய்வாங்க. அவங்களுக்கு தான் பெண் பிள்ளைங்க எல்லாம் பிடிக்காதே என்றான் இளக்காரமாக.

 

மீரா, அவங்களை பத்தி எல்லாம் விடு அபி. அப்போ நீ யாழினியை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணியா. அது உண்மை தான?.

 

எஸ் மாம். நான் அவளை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணேன். இன்னும் லவ் பண்ணிகிட்டு தான் இருக்கேன். என் லைஃப் லாங் நான் அவளை மட்டும் தான் லவ் பண்ணுவேன். போதுமா... நீங்க என்ன நினைச்சாலும் என்கிட்ட இருந்து அவளை உங்களால பிரிக்க முடியாது. ஏன் யாராலயுமே பிரிக்க முடியாது. அவளே நினைச்சாலும் என்னை விட்டு அவளால போக முடியாது. ஷி இஸ் மைன்!.

 

மீரா, ஓகே.. அப்போ அவளை நான் இந்த வீட்டில் இருந்து அனுப்ப மாட்டேன்.

 

அபிமன்யு மீராவின் கைகளை பிடித்துக் கொண்டு, தேங்க்ஸ் மாம். யாழினி எங்க? அவளை பார்த்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு என்றான் மகிழ்ச்சியாகவும், ஆவலாகவும்.

 

இப்படி எல்லாம் மீராவிடம் அபிமன்யு நடந்து கொள்வது இதுவே முதல் முறை. யாழினியால் பெரிதாக மாறி இருக்கிறான் என்பது மீராவிற்கு புரிய வந்தது.

 

நான் அவளை இங்க இருந்து அனுப்ப மாட்டேன்னு தான் சொன்னேன். அதுக்காக உன் கூட தங்க வைக்க போறேன்னு சொல்லலையே.

 

அபிமன்யு மீராவை புரியாமல் பார்க்க.

 

இங்க பாரு அபி, அவளுடைய ஸ்டடிஸ் முடியுற வரைக்கும் அவ ஆரணி கூடவே தங்கிக்கட்டும்.

 

அபிமன்யு அதிர்ச்சியாக, என்ன மாம் சொல்றீங்க? அதெல்லாம் முடியாது!.

 

ஏன்.. ஏன் முடியாது? அவளுடைய படிப்பு முடிய இன்னும் 4 இயர்ஸ் இருக்கு. உன் பக்கத்துல அவ இருந்தா அவ டிஸ்ட்ராக்ட் ஆக சான்ஸ் இருக்கு. அப்புறம் எப்படி அவ ஸ்டடிஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியும். நீ தான அவ படிக்கணும்னு ஆசைப்பட்ட. அவ‌ ஆரணி ரூமில் இருந்து படிக்கட்டும். படிப்பு முடிஞ்சதும் இந்த ரூமுக்கு ஷிப்ட் ஆயிடுவா.

 

மாம் படிப்புக்கும், இதுக்கும் என்ன மாம் சம்பந்தம்? நான் அவளுக்கு படிக்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கேன் மாம்.

 

அதெல்லாம் ஆரணி பாத்துக்குவா அபி. படிப்புக்காக மட்டும் சொல்லல, அவ உன் கூடவே இருக்குறதால தான் உனக்கு அவளுடைய அருமை தெரியல. கோபம் வந்தா என்ன பண்ணுறோம்னு தெரியாம நடந்துக்குற. அவகிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு தான், அதுக்காக அடிக்கிறது எல்லாம் ரொம்ப தப்பு. அதை நீ புரிஞ்சுக்கணும்ல அதுக்கு தான் இந்த ப்ரேக்.

 

மாம் ஐ ப்ராமிஸ் யூ! இனிமே எவ்வளவு கோபம் வந்தாலும் அதை அவகிட்ட காட்ட மாட்டேன்.

 

மீராவிற்கு தன் மகனா இது! என்று பெரும் ஆச்சரியம்.

 

யாழினிக்காக இப்படி சிறு பிள்ளை போல் அடம் பிடிக்கும் தன் மகனை பார்க்க பிரம்மிப்பாக இருந்து. சிறு வயது முதல் இப்படி எதற்கும் அபிமன்யு அடம் பிடித்ததில்லை‌.

 

தன்னுடைய தேவைகளை தானே பார்த்துக் கொள்வான். சிறுவயதிலேயே பெரியவன் போல் நடந்து கொள்ளும் அபிமன்யுவை பார்க்கும் மீரா அவ்வபோது பெருமைப்படுவதுண்டு.

 

ஆனாலும், அவர் இழந்த அந்த அபிமன்யுவின் சிறுபிள்ளைத்தனத்தை யாழினி இப்பொழுது மீட்டுக் கொடுத்து விட்டாள்.

 

இல்ல அபி. நீ அவ மேல ரொம்ப லவ் வச்சிருக்கனு எனக்கு புரியுது. இருந்தாலும், உங்களுடைய லைஃப் இப்போ தான் ஸ்டார்ட் ஆகுது. இன்னும் லைஃப் லாங் அவ உன் கூட தான் இருக்கணும். உடனே, நீ செஞ்ச தப்புக்கு உனக்கு சாரி கிடைச்சுட்டா அவளோட அருமை உனக்கு தெரியாம போயிடும். இந்த கேப் உங்க ரெண்டு பேருக்குமே தேவைப்படும். அப்போ தான் லைஃப்ல எப்போ உனக்கு கோவம் வந்தாலும், அதை அவ கிட்ட காட்டணும்னு உனக்கு தோணாது.

 

அபிமன்யுவிற்கும் மீராவின் வாதம் சரியாக தோன்ற, யாழினியை அடித்ததற்கு தண்டனையாக இதனை ஏற்றுக் கொண்டான்.

 

ஓகே மாம். நான் பண்ண தப்புக்கு இதை பனிஷ்மென்டா நினைச்சுக்கிறேன். அதுக்காக அவ நினைச்ச நேரம் அம்மா வீட்டுக்கு போய் தங்குறதெல்லாம் கூடாது.

 

மீரா, மரகதம் பாட்டியின் மூலம் இந்த விஷயத்தில் அபிமன்யுவின் மனநிலையை உணர்ந்தவர். மரகதமும், யாழினியும் இந்த விஷயத்தில் மீராவை தலையிட வேண்டாம் என்றும், இதை அவர்களே சரி செய்வதாகவும் கூறி இருக்கவே அபிமன்யுவின் வார்த்தைக்கு எதுவும் பதில் அளிக்காமல் திரும்பி விட்டார்.

 

நேராக சாமியறைக்கு சென்றவர் தன் மகனுக்கு எப்படியாவது உண்மைகள் சீக்கிரம் தெரிய வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

 

வள்ளியமைக்கு மீராவின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தோன்ற மீராவிடம், என்ன ஆச்சு மீரா? ஒரு மாதிரி இருக்க.

 

வள்ளியம்மையை பார்க்கும் பொழுது, தான் சுமக்காத மகளின் மீது இவ்வளவு பாசம் வைக்க முடியுமா! என்று ஆச்சரியமாக பார்த்தார்.

 

இத்தனை வருடங்கள் தன் சொந்த மகளை போல் அவ்வளவு பாசம் கொண்டு வளர்த்திருக்கிறாரே என்று எண்ணிக் கொண்டிருக்கையில் வள்ளியம்மை, என்ன ஆச்சு மீரா? என்ன அப்படி பாக்குற?.

 

மீரா அவரை அணைத்துக் கொண்டார். வார்த்தைகளால் கூற முடியாத உணர்வு அவருக்கு வள்ளியம்மையின் மேல் எழுந்தது.

 

இன்னைக்கு என்ன வித்தியாசமா நடந்துக்குற?.

 

ஒன்னும் இல்லமா. உங்கள மாதிரி ஒரு அப்பா, அம்மா எனக்கு கிடைத்ததற்கு கடவுள் கிட்ட நன்றி சொல்லிட்டு வந்தேன்.

 

என்னமா திடீர்னு?.

 

என் வாழ்க்கையில் கஷ்டம்னா என்னனு தெரியாமல் இத்தனை வருஷம் நான் இருந்ததுக்கு நீங்க தானம்மா காரணம். நீங்களும் அப்பாவும் சின்ன வயசுல இருந்தே என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டீங்க. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து இருக்கீங்க. என் கணவரும் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறார்.

 

அப்புறம், மூணு குழந்தைங்க.. நான் ஒரு நிறைவான வாழ்க்கையை இத்தனை வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஆனா, இவ்வளவு நாள் எனக்கு பெருசா தெரியாத விஷயம் இன்னைக்கு தெரியுதுமா.. யாழினியை பாருங்க.. கல்யாணம் பண்ணி இங்க வந்ததும் அவங்க அப்பா, அம்மா குடும்பத்துக்கும் இவளுக்கும் நடுவுல எவ்வளவு இடைவெளி ஆயிடுச்சு. ஆனா, அப்படி எல்லாம் இல்லாம, இன்னுமும் நான் உங்க எல்லார் கூடவும் ஒன்னா இருக்கிறது நினைச்சா நான் ரொம்ப அதிஷ்டசாலி தானமா.

 

வள்ளியம்மை மீராவின் தலையை கோதியவாறு, கண்டிப்பா! என் பொண்ணு அதிஷ்டசாலி தான் டா. நீ உன் வாழ்க்கை முழுக்க இதே மாதிரி சந்தோஷமா தான் இருப்ப. அப்புறம் இன்னொரு விஷயம், நீ எதையும் நினைத்து கவலைப்படாத. யாழினி வாழ்க்கையும் சீக்கிரமா சரியாயிடும். அபியும், யாழினியும் சந்தோஷமா வாழ்ந்து எனக்கு கொள்ளு பேரனோ, பேத்தியோ என் கையில் கொடுக்க தான் போறாங்க பாரு.

 

மீரா, கண்டிப்பா மா. நானும் அந்த நாளுக்காக தான் கார்த்துகிட்டு இருக்கேன்.

 

இதை நினைச்சு தான் இன்னைக்கு ஃபுல்லா சோகமா இருந்தியா. என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. சரி விடு கவலைப்படாத, எல்லாம் சீக்கிரமா சரியாயிடும். யாழினியோட நல்ல மனசுக்கு அபி சீக்கிரமா அவளை புரிஞ்சுக்குவான்.

 

வள்ளியம்மை மீராவை பத்து மாதங்கள் சுமக்காவிட்டாலும், தன் சொந்த மகளை எப்படி வளர்ப்பாரோ அதற்கு மேல் அன்பு காட்டி வளர்த்திருக்கிறார். அந்த அன்பே மீராவிற்கு உண்மை தெரிந்த பிறகும் அவரை வேற்று ஆளாக தள்ளி நிறுத்த எண்ணவில்லை.

 

மீராவை வள்ளியம்மை 10 மாதங்கள் தன் வயிற்றில் சுமக்காவிட்டாலும், இத்தனை வருடங்களாக தன் நெஞ்சில் சுமந்து வளர்த்திருக்கிறார்.

 

அதனை பொய் என்று கூற முடியாது. எனவே, மீராவிற்கு உண்மை தெரிந்த விஷயம் வள்ளியமைக்கு தெரியக்கூடாது என்று அனைவரும் முடிவு செய்தனர்.

 

வள்ளியம்மைக்கு மீராவிற்கு உண்மை தெரியும் என்று தெரிந்து விட்டால், இத்தனை வருட அவரின் தாய்மை உணர்வு பொய்த்து விடும் அல்லவா!

 

ஆனால், காலத்தின் விளையாட்டு என்ன என்பதை யார் அறிவார்...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5