அவனதிகாரம் - 77
அதிகாரம் – 77
யாழினி
என்ன கூறி சமாளிப்பது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்க.
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி
தெரியுது?”.
‘இப்படி வசமாக மாட்டிக்கிட்டோமே’ என்று மனதிற்குள் நொந்தவாறு என்ன பதில்
கூறுவது என்று தெரியாமல் நின்று இருந்தாள்.
“சொல்லுடி வேணும்னு பிரச்சனை
பண்ணுறவன் மாதிரி தெரியுதா?”.
யாழினி
அவசரமாக ‘இல்லை’ என்று தலையாட்ட.
“நான் யார்கிட்டயும் தேவை இல்லாம
பிரச்சனை பண்ண மாட்டேன். இப்பவும் என்னால உங்க வீட்ல எந்த பிரச்சனையும் வராது
போதுமா”.
“இல்லைங்க தப்பா
நினைச்சுக்காதீங்க. நான் வந்து..” என்று தொடங்கும் பொழுதே,
அபிமன்யு தன் கையை உயர்த்தி தடுத்தவன், “நீ
எதுக்காக சொல்லி இருந்தாலும் சரி, என்னை நினைச்சு நீ பயப்பட வேண்டாம். உங்க
வீட்டுல இருக்குறவங்களை ஹர்ட் பண்ற மாதிரி நான் எதுவும் பேச மாட்டேன்” என்று வெளியே சென்று விட்டான்.
யாழினிக்கு
இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை, “ஐயோ! லூசு.. லூசு.. இப்படி தான் யார் வராங்கனு கூட பார்க்காம
பேசுவியா. இப்போ தான் கொஞ்ச நாளா சிரிச்சு பேசுறார். அதுக்குள்ள நீயே இப்படி வாயை
விட்டு வாங்கி கட்டிக்கிட்டயே. ஐயோ..! இப்போ இவரை எப்படி மலை இறக்குறதுன்னு
தெரியலையே” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
லட்சுமி,
“அத்த யாழினியும், அவளோட
வீட்டுக்காரரும் நம்ம வீட்டுக்கு வராங்களாம்”.
மரகதம்,
“என்ன லட்சுமி சொல்ற நிஜமாவா!
எப்படி?”.
“தெரியல அத்த. அவள் வீட்டுக்காரர்
உங்க அம்மா வீட்டுக்கு போகலாம்னு சொல்லி கூப்பிட்டாராம். இவ எங்க இங்க வந்து
ஏதாவது பேசிடுவாரோனு பயப்படுறா. அதான் நான் அவளுக்கு தைரியம் சொல்லி இருக்கேன்”.
உடனே
மரகதம் பாட்டி அவசரமாக தன் மனதிற்குள் ஒரு திட்டத்தை தீட்டினார்.
லட்சுமி
கலக்கமாக, “ஏன்த்த கயல்விழி வேற மாசமா
இருக்கானு இங்க வந்து தங்கி இருக்கா. இந்த நேரத்துல யாழினி கிட்ட எதுவும் பிரச்சனை
பண்ணிடுவாளா?”.
“பண்ணாம நாம பார்த்துக்குவோம்
லட்சுமி. நாம எதுக்கு இருக்கோம்”.
“இந்த தடவையாவது யாழினி வந்துட்டு
சந்தோஷமா போகணும் அத்த. போன தடவ மாதிரி எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது”.
“அதெல்லாம் எதுவும் வராது. நீ
மாப்பிள்ளைக்கும், பொண்ணுக்கும் என்ன சமைக்கலாம்னு மட்டும் யோசி. போய் சுப்பிரமணிகிட்ட
சொல்லு இந்த சந்தோஷமான விஷயத்தை”.
இவர்கள்
இருவரும் பேசியதை அறையில் இருந்து வெளிவந்த கயல்விழி கேட்டுவிட்டு கோபமாக அறைக்கு
திரும்பி சென்று விட்டாள்.
மறுநாள்
விடியல் ஷைலஜாவிற்கு மட்டும் படபடப்புடனே ஆரம்பித்தது. முதல் நாள் இரவு முதலே
அவளுக்கு சரியாக உறக்கம் வரவில்லை. ‘என்ன
நடக்கப் போகிறதோ, தன் தாய் என்ன செய்யப் போகிறாரோ’ என்று உள்ளுக்குள் ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.
ஆரணி, “டேய் உனக்கு தான் காலேஜ்
முடிஞ்சிடுச்சுல்ல. ஒழுங்கா அண்ணா கூட கம்பெனிக்கு போய் வேலையைப் பார்க்க
வேண்டியது தான. ஏன் டா வீட்டிலேயே வெட்டியா உட்கார்ந்து இருக்க”.
“நான் படிச்சு படிச்சு கலைச்சுப்
போயிட்டேன். இப்போ எனக்கு பிரேக். அண்ணா என்னை நாளையிலிருந்து ஆஃபீஸ்ல இருந்தா
போதும்னு சொல்லி இருக்கார்”.
யாழினி
அறையில் இருந்து கீழே இறங்கி வரும் பொழுது முகம் கொள்ளா புன்னகையுடன் வந்தாள்.
ஆரணி, “என்ன யாழ் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்க”.
“நான் எங்க அம்மா வீட்டுக்கு
போறேன்”.
ஆரியன்,
“நிஜமாவா”.
“ஆமா”.
“இங்க பாரு யாழினி, என்கிட்ட
மறைக்கணும்னு நினைக்காத. ஒழுங்கா சொல்லிடு அந்த பவுடரை எங்க வச்சிருக்க”.
“ரூம்ல தான் இருக்கும். டிரெஸ்ஸிங்
டேபிள் மேல இருக்கும்னு நினைக்கிறேன்”.
“நான் சொன்ன மாதிரி இவ ஏதோ மேஜிக்
பண்ணி தான் நம்ம அண்ணனை கரெக்ட் பண்ணி வச்சிருக்கா பார்த்தியா” என்றான் ஆரணியிடம்.
“லூசு நீ தான பவுடர் எங்க
இருக்குனு கேட்ட. நான் ஃபேஸ் பவுடரை கேட்குறனு நினைச்சு சொன்னேன். நீ எந்த பவுடரை
சொல்ற. உனக்கும் வேணும்னா சொல்லு கொடுக்குறேன். நீயும் அந்த பவுடரை போட்டுக்கிட்டு
உங்க அண்ணன்கிட்ட போய் மேஜிக் பண்ணி பாரு நடக்குதானு பார்ப்போம்”.
“என்ன யாழினி பேச்சுல திமிர்
தெரியுது. எங்க அண்ணனை கைக்குள்ள போட்டுக்கிட்டோம்னு திமிரா பேசுறியா”.
“ஹா.. ஹா.. உங்க அண்ணன் என்ன
வளையலா.. என் கைல போட்டுக்க”.
ஆரணி, “போதும்.. போதும்.. ரெண்டு பேரும்
நிறுத்துங்க. உங்க ரெண்டு பேருக்கும் வாயே வலிக்காதா. எப்போ பார்த்தாலும் சண்டை
போட்டுக்கிட்டே இருக்கீங்க”.
“நீயே பாரு ஆரணி. நானா வரேன், இவன்
தான் எப்போ பார்த்தாலும் அண்ணனை கைக்குள்ள போட்டுக்கிட்ட. என்னமோ பண்ணிட்ட, என்னமோ
பண்ணிட்டனு சொல்லிகிட்டே இருக்கான். அவரே ஒரு சிடுமூஞ்சி” என்று சொல்லி முடிக்கவும்.
அபிமன்யு
சரியாக யாழினியின் பின்னே வந்து நின்றான். ஆரணி சைகையின் மூலம் யாழினியை வாயை
மூடும்படி காட்ட. எதையும் யாழினி கவனிக்கும் நிலையில் இல்லை.
“உங்க அண்ணனே ஒவ்வொரு நாளைக்கு
ஒவ்வொரு மாதிரி அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பேசுறார். நானே என்ன பண்ணி இவரை
புரிஞ்சுக்குறதுனு தெரியாம குழம்பிப் போய் இருக்கேன். இதில் இவன் வேற என்ன
வெறுப்பேத்துற மாதிரி எங்க அண்ணன் உன் பேச்சு தான் கேட்கிறார்னு சொல்லிக்கிட்டே
இருக்கான்.
நிஜமாவே
அப்படி கேட்டா கூட பரவாயில்லை. மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். நடக்காததை
சொல்லி சொல்லி என்னை வெறுப்பேத்துற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கான்”.
ஆரியன்
தன் அண்ணனை பார்த்ததும் உஷாராக, “ஹி.. ஹி.. யாழினி, நான் சும்மா
விளையாட்டுக்கு சொன்னேன். நீ எல்லாமே உண்மைன்னு நம்பிட்டியா”.
“என்ன திடீர்னு பல்டி அடிக்கிறான்.
இது தப்பாச்சே” என்று அவள் திரும்பிப் பார்க்க.
அபிமன்யு
இவளை முறைத்தபடி நின்று இருந்தான்.
மீண்டும்
திரும்பி ஆரியனைப் பார்த்தவள், ‘அடப்பாவி! ஒவ்வொரு தடவையும் நீ
மட்டும் கரெக்டா எஸ்கேப் ஆயிட்டு, என்னை மட்டும் இப்படி மாட்டிவிடுறியே’ என்று கண்களாலேயே அவனை பொசுக்கி
விட்டாள்.
அபிமன்யு
யாழினியை முறைத்து விட்டு எதுவும் கூறாமல் உணவருந்த சென்றுவிட. ஷைலஜாவும் சரியாக
அதே நேரம் டைனிங் ஹாலிற்கு வருவதை பார்த்த யாழினியின் மனக்கண் முன்பு நேற்றைய
நிகழ்வுகள் வந்து போக. யாழினி அவசரமாக ஓடிச் சென்று அபிமன்யுவின் அருகில் இருந்த
இருக்கையில் அமர்ந்தாள்.
அபிமன்யுவிற்கு
யாழினியின் செயலில் சிரிப்பு வந்துவிட, தன் பற்களை கடித்து அதை
கட்டுப்படுத்தியவாறு யாழினியிடம் மெதுவான குரலில், “எதுக்கு இப்போ ஓடி வந்து உட்காருற?”.
“அது என்னோட இஷ்டம். நான் எப்படி
வேணும்னாலும் உட்காருவேன்”.
‘ஷைலஜா எங்கே அபிமன்யுவின் அருகில்
நேற்று போல் அமர்ந்து விடுவாளோ’ என்ற பதட்டத்தில் யாழினி ஓடி
வந்து அமர்ந்தது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்தது.
யாழினியின்
செயலில் ஷைலஜாவிற்கும் கூட சிரிப்பு எழ, எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.
ஷைலஜா, “குட் மார்னிங் அபி” என்று சிரித்த முகமாக கூற.
அபிமன்யுவும்,
“குட் மார்னிங் ஷைலு” என்றான் பதிலுக்கு.
யாழினி,
“என்ன ‘ஷைலு’வா..! இது எப்போலருந்து” என்று ஷாக்காக பார்க்க.
யாழினியின்
அருகில் ஆரியன் அமர்ந்தான்.
ஆரியன்
சத்தமாக, “என்னண்ணா நீங்களும், ஷைலஜாவும்
ரொம்ப க்ளோஸ் ஆயிட்டீங்க போலருக்கு. பெயரைக் கூட ஷார்ட்டா கூப்பிடுற அளவுக்கு”.
அபிமன்யு,
“எஸ்” என்று சாப்பாட்டில் கவனம் ஆனான்.
யாழினி
வயிற்று எரிச்சலோடு அபிமன்யுவும், ஷைலஜாவும் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்துக்
கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஆரியன்
யாழினியின் காதருகில், “இப்படி வடை போச்சே யாழினி. ஓடி
வந்து பக்கத்துல உட்கார்ந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லையே. அண்ணா உன்கிட்ட
பேசுவார்னு பார்த்தா, எதிர் டேபிளில் உட்கார்ந்து இருக்க ஷைலஜாகிட்டல சிரிச்சு
சிரிச்சு பேசிகிட்டு இருக்கார்”.
யாழினி
அழுதுவிடும் குரலில், “ஆரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா.
நீ சொன்ன மாதிரி அவ தான்டா ஏதோ பவுடர் கலந்து கொடுத்து இருக்கா உங்க அண்ணனுக்கு.
அதான், இப்படி தலைகீழா மாறிட்டார். எப்படியாவது என்னனு கண்டுபிடி டா”.
“நீ ஒன்னும் கவலைப்படாத. அவங்க
ரெண்டு பேரையும் சீக்கிரமா பிரிச்சிடலாம்”.
உணவருந்தும்
பொழுது கூட அபிமன்யு வேண்டும் என்று யாழினியை சீண்டும் படி ஷைலஜாவிடம் சிரித்து
சிரித்து பேசிக்கொண்டே இருந்தான்.
அதிலும்,
அவனின் ‘ஷைலு’ என்ற அழைப்பு யாழினிக்கு பெரும் எரிச்சலை கொடுத்தது. இந்த
காட்சியை பார்த்த விசாலாட்சிக்கு காலையிலேயே மனம் குளிர்ந்துப் போனது.
விசாலாட்சி
மனதிற்குள், ‘இன்னைக்கே கல்யாணத்துக்கு தேதி
எல்லாம் பிக்ஸ் பண்ணிடனும். நாளையில் இருந்து திரும்பவும் அபி பிஸியாகிடுவான்’ என்று மனதிற்குள் வேறு ஒரு கணக்கை
போட்டார். சற்று நேரத்தில் நடக்க இருப்பது தெரியாமல்.
அனைவரும்
உணவை உண்டு முடிக்கவும், கிஷோரின் குடும்பத்தார் வீட்டிற்குள் வரவும் சரியாக
இருந்தது.
அபிமன்யு,
“வாங்க கிஷோர். எல்லாரும் வாங்க” என்று கைகூப்பி வரவேற்றான்.
கிஷோர்,
அவனுடைய பெற்றோர், மேலும் சில உறவினர்களுடன் வந்திருந்தான். கையில் தாம்பூலத்தட்டில்
பழங்களை வைத்துக்கொண்டு வீட்டிற்குள் அவர்கள் வருவதை புரியாமல் அனைவரும்
பார்த்தனர்.
மீரா
வள்ளியம்மை பாட்டியிடம், “என்னம்மா இது கையில் தட்டோட
வராங்க”.
“என்னன்னு தெரியலையே. அபி உன்கிட்ட
ஏதாவது சொன்னானா”.
“இல்லையே மா எதுவும் சொல்லலையே”.
இவர்களை
பார்த்த ஷைலஜா நாணத்துடன் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அனைத்தும் ஆரியனின்
கண்ணில் மட்டும் தவறாமல் பட்டது.
ஆரியன்
மனதிற்குள், ‘என்ன நடக்குது இங்க. கிஷோர் ஏன்
அவங்க பேமிலியோட வந்திருக்கான். தட்டை வேற எடுத்துக்கிட்டு வந்து இருக்கான்.
அதுவும் ஷைலஜா வேற வெக்கப்பட்டுக்கிட்டு ரூமுக்கு போறாளே. ஒருவேளை, இவங்களுக்குள்ள
ஏதாவது கனெக்ஷ்ன் இருக்குமோ?’ என்று சிந்திக்கும் போதே அவனின்
கையை சுரண்டிய யாழினி, “எதுக்கு வந்திருக்காங்க?”.
“நம்ம ஆரணியை பொண்ணு கேட்டு
வந்திருக்காங்க” என்று ஆரியன் ஆரணியின் தலையில்
அசராமல் ஒரு இடியை இறக்கினான்.
ஆரியனின்
பேச்சில் ஆரணிக்கு தூக்கி வாரிப் போட்டது. இதயம் பதட்டத்தில் படபடக்க, சட்டென்று
வியர்க்கத் தொடங்கியது.
“ஹே கூல். நான் சும்மா சொன்னேன்.
நீ ஏன் இதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற”
என்று சந்தேகமாக ஆரணியை பார்த்தான்.
“ஒன்னும் இல்ல... திடீர்னு பொண்ணு
பார்க்க வந்திருக்காங்கனு சொன்னா டென்ஷன் ஆகாதா” என்று ஒருவாறு சமாளித்தாள்.
இருந்தாலும்,
ஆரியனின் சந்தேகப் பார்வை மாறவில்லை. இது எதையுமே யாழினி கவனிக்கவில்லை.
அபிமன்யு,
“அத்தை இங்க வாங்க” என்று சத்தமாக அழைத்தான்.
விசாலாட்சி
தன் முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும் படி, “இதோ வரேன் அபி”
என்று விட்டு, யாழினியை ஏளனமாக பார்த்தபடி அபிமன்யுவை நோக்கி சென்றார்.
விசாலாட்சி
வந்தவர்களை, “வாங்க.. வாங்க.. எல்லாரும் ஏன்
நிற்கிறீங்க உட்காருங்க” என்றும் உபசரித்தார்.
“என்ன அபி, நம்ம ஆரணியை பொண்ணு
கேட்டு வந்திருக்காங்களா?” என்றார்.
ஆரணிக்கு
பதட்டத்தில் அங்கு நிற்கவே முடியவில்லை. ‘ஒருவேளை இது உண்மையாக இருந்தால்?’ நினைத்துப் பார்க்கவே மூச்சு முட்டுவது போல் இருந்தது.
இதில்
ஆரியனின் சந்தேகப் பார்வை வேறு ஆரணியைத் துளைத்து எடுக்க. சட்டென்று தனது அறைக்கு
சென்று விட்டாள்.
“ஆமா அத்தை, பொண்ணு கேட்டு தான்
வந்திருக்காங்க. ஆனா, ஆரணியை இல்லை. நம்ம ஷைலஜாவை!” என்று தன் அத்தையின் நீண்ட நாள் ஆசையில் மண்ணைப் போட்டான்.
அவ்வளவு
தான் விசாலாட்சி பொங்கி எழுந்துவிட்டார்.
“என்ன பேசுற அபி நீ. என் பொண்ண
பார்த்தா உங்களுக்கெல்லாம் இளக்காரமா இருக்கா. அவ என்ன விளையாட்டு பொம்மையா, உங்க
இஷ்டத்துக்கு யாருக்கு வேணும்னாலும் கட்டிக் கொடுக்க. அவ மனசுல என்ன இருக்குனு
புரிஞ்சுக்காம, எப்படி உன் இஷ்டத்துக்கு நீ முடிவு பண்ணலாம்?” என்று அபிமன்யுவிடம் எகிறியவர்.
வந்தவர்களை
பார்த்து, “இங்க பாருங்க மா. என் பொண்ண
எல்லாம் கட்டிக் கொடுக்க முடியாது கிளம்புங்க இங்க இருந்து” என்றார் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக.
அதில்
கிஷோரின் பெற்றோருக்கு அவமானம் ஆகிப் போனது.
அபிமன்யு
சட்டென்று நிலைமையை தன் கையில் எடுத்துக் கொள்ள, “அத்த புரியாம பேசாதீங்க. கிஷோரும், ஷைலஜாவும் ஒருத்தரை
ஒருத்தர் விரும்புறாங்க”.
“இருக்கவே இருக்காது. என் பொண்ணு
போய் இவனை விரும்புவாளா. என்ன பேசுற நீ. அவளோட தகுதி என்ன... இவனோட தகுதி என்ன...
போயும் போயும் உனக்கு கீழ வேலை பார்க்கிற ஒருத்தனுக்கா நான் என் பொண்ணை கட்டி
கொடுப்பேன்னு நீ நினைச்ச?” என்றார் அகங்காரமாய்.
இனி
நடக்கப் போவது என்ன..?
கிஷோர்,
ஷைலஜாவின் காதல் கைகூடுமா..?
கருத்துகள்
கருத்துரையிடுக