அவனதிகாரம் - 80
அதிகாரம் – 80
யாழினியின்
குடும்பத்தினர் மொத்த பேரும் இவர்களின் வருகைக்காக கார்த்திருந்தனர். வீடே
பரபரப்பாக இருந்தது.
வேலுச்சாமி,
“மரகதம்.. மரகதம்.. யாழினி அறை
சுத்தமா இருக்கானு பார்த்தியா. மாப்பிள்ளை வேற கூட வரார்”.
“எல்லாம் நாங்க பார்த்துட்டோம்.
நீங்க கொஞ்சம் படபடப்பு ஆகாம பொறுமையா இருங்க”.
“அம்மாடி லட்சுமி, அவங்களுக்கு
சாப்பிட ஏதாவது பணியாரம் செஞ்சியாமா?”.
லட்சுமி
சமையலறையில் இருந்து, “ஆமா மாமா. எல்லாம் ரெடியா இருக்கு” என்று குரல் கொடுத்தார்.
“ஏங்க செத்த நேரம் சும்மா
இருக்கீங்களா. எல்லாம் லட்சுமி பார்த்துக்குவா. இதை செஞ்சீங்களா, அதை
செஞ்சீங்களானு கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு” என்று சிடுசிடுத்தார்.
“இந்த தடவை அவங்க வருத்தப்படுற
மாதிரி எதுவுமே நடக்கக்கூடாது மரகதம். எல்லாமே நம்ம பார்த்து பார்த்து பண்ணனும்”.
இதையெல்லாம்
பார்க்க பார்க்க கயல்விழிக்கு மீண்டும் பொறாமை தலை தூக்க தொடங்கியது. சுப்பிரமணி
வெளியில் இருந்து வரும் பொழுது யாழினிக்கு பிடிக்கும் என்று இனிப்பு வகைகளை
எல்லாம் வாங்கி அடுக்கி வைத்து இருந்தார்.
வெளியே
காரின் ஹாரன் சத்தம் கேட்டதுமே வேலுச்சாமி தாத்தா முதல் ஆளாக வேக எட்டுக்களுடன்
வெளியே சென்றார்.
“பொறுமையா போங்க. ஒரு தடவை சொன்னா
கேட்க மாட்டீங்க. கவலைப்பட்டாலும் ரொம்ப கவலைப்பட வேண்டியது. சந்தோஷப்பட்டாலும்
ரொம்ப சந்தோஷப்பட வேண்டியது” என்று வேலுச்சாமி தாத்தாவை
திட்டியபடி அவரின் பின்னே சென்றார்.
யாழினி,
“பாட்டி..” என்று கத்தியபடி ஓடிச் சென்று மரகதம் பாட்டியை
அணைத்துக்கொண்டாள்.
இந்த
முறை பல மாதங்கள் ஆகிவிட்டது அல்லவா இவர்களை எல்லாம் பார்த்து. அதில் யாழினிக்கு
கண்ணீரும் வந்துவிட்டது. அனைவரும் உள்ளே செல்கையில் அபிமன்யு யாழினியின் கையை
பிடித்து வாசலிலேயே தடுத்தவன்.
“இப்போ எதுக்குடி அழற? நாங்க என்ன
உன்ன கொடுமையா படுத்துறோம்”.
“ஐயோ மாமா.. நீங்க
கஷ்டப்படுத்தறீங்கன்னு நான் எப்போ சொன்னேன். ரொம்ப நாள் கழிச்சு இவங்கள எல்லாம்
பார்க்குற சந்தோஷத்துல அழுகை வந்துடுச்சு”.
அபிமன்யு
குழப்பமாக, “சந்தோஷத்துல அழுக வருமா?” என்று கேட்டான்.
“எல்லாம் வரும். எப்படி வரும்னு
நான் அப்புறமா சொல்லி தரேன் வாங்க”
என்று கூறிவிட்டு முன்னே நடக்க. அவளை பின்தொடர்ந்தான் அபிமன்யு.
சுப்பிரமணி
யாழினியின் தலையை தடவியவாறு, “எப்படிமா இருக்க?”.
“நான் நல்லா இருக்கேன் பா. நீங்க
எப்படி இருக்கீங்க?”.
“நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்
மா. மாப்பிள்ளையை ரூமுக்கு கூப்பிட்டுகிட்டு போ. ரெஸ்ட் எடுங்க”.
கயல்விழி,
இவர்கள் வந்த வண்டியின் சத்தம் கேட்டும் வெளியே வராமல் உள்ளேயே இருந்தாள்.
‘அவ என்ன பெரிய மகாராணியா. அவ வந்த
உடனே நான் அவளை போய் பார்க்கணுமா’ என்று வேண்டுமென்றே சிறிது நேரம்
கழித்து அறையில் இருந்து வெளியே வந்தாள்.
லட்சுமி
யாழினியிடம், “யாழினி கயல்வழி மாசமா இருக்காம்மா”.
யாழினி
மகிழ்ச்சியாக கயல்வழியை நோக்கி சென்றவள், “நிஜமாவாக்கா! ரொம்ப சந்தோஷம். எத்தனை மாசம்?” என்றாள் ஆவலாக.
கயல்விழி
எடுத்த எடுப்பிலேயே, “ஏன் கல்யாணம் பண்ணும் போது தான்
எனக்கு போட்டியா எனக்கு பார்த்த மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட.
இப்போ உனக்கு முன்னாடி நான் மாசமாயிட்டேன்னு என்னை பார்த்தா உனக்கு பொறாமையா
இருக்கா” என்றாள் நாக்கை சாட்டை என
சுழற்றி.
கயல்விழியின்
கேள்வியில் யாழினிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. இப்படி எல்லாம்
கேட்டால் என்ன கூறுவது. அபிமன்யுவிற்கு கயல்விழியின் வார்த்தையில் பெரும் கோபம்
எழுந்தது.
எப்படி
யாழினியிடம் இப்படி பேசலாம் என்று. ஆயினும், எதுவும் கூறாமல் அமைதி காத்தான்.
யாழினியிடம் தன்னால் எந்த பிரச்சனையும் வராது என்று கூறியிருக்கிறானே.
ஆரணியும்,
ஆரியனும் கூட ‘என்ன இவங்க இப்படி எல்லாம்
பேசுறாங்க’ என்று அதிர்ச்சியாக பார்க்க.
மரகதம்
பாட்டி, “கயல் வந்த உடனே ஆரம்பிச்சுட்டியா.
அவ எவ்வளவு ஆசையா உன்ன பத்தி விசாரிக்கிறா. அவகிட்ட போய் இப்படி கோவமா நடந்துக்குற” என்று அதட்டினார்.
“ஆமா பாட்டி. அவ நல்லவ. நான் தான்
கெட்டவ” என்று விட்டு அறைக்கு சென்று
விட்டாள்.
அனைவருக்கும்
அபிமன்யுவை நினைத்து தான் பயம். எங்கே மீண்டும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ
என்று.
ஆனால்,
இவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக அபிமன்யு, “யாழினி ரொம்ப டயர்டா இருக்கு. ரூமுக்கு போகலாமா?” என்று கேட்க.
அனைவருக்கும்
ஆச்சரியம் தான்.
யாழினி
‘சரி’ என்று அபிமன்யுவை அறைக்கு அழைத்து சென்றாள். யாழினிக்கும்
உள்ளுக்குள் பதட்டம் தான்.
எங்கே
அறைக்கு சென்றதும் ஏதேனும் திட்டுவானோ என்று சிறு பதட்டத்துடனே அபிமன்யுவை அறைக்கு
அழைத்து சென்றாள்.
உள்ளே
நுழைந்ததும் அபிமன்யு பின்னிருந்து யாழினியை அணைத்துக் கொண்டான். யாழினிக்கு
பெரும் ஆச்சரியம். கயல்விழியின் பேச்சை கேட்டு அபிமன்யு இந்நேரம் கோபப்பட்டு
இருக்க வேண்டுமே என்று.
“அவங்க பேசுனதெல்லாம் எதுவும்
நினைச்சு பீல் பண்ணாத”.
யாழினி
என்ன சொல்வது என்று தெரியாமல், “ம்ம்” என்றாள்.
“நீ பீல் பண்றதா இருந்தா சொல்லு.
நான் வேணும்னா ஹெல்ப் பண்றேன்”.
யாழினி
புரியாமல் திரும்பி அபிமன்யுவை பார்த்தபடி, “என்ன ஹெல்ப்?”.
அபிமன்யு
சீரியஸான குரலில், “உங்க அக்காவுக்கு ஒரு குழந்தை
தானே பிறக்க போகுது. நாம ட்வின்ஸா பெத்துக்கலாம். அப்போ நாம தானே ஜெயிச்ச மாதிரி
ஆயிடும்” என்று கூறி யாழினியை பார்த்து
கண்ணை சிமிட்ட.
யாழினியின்
முகம் நொடியில் சிவந்துவிட்டது.
“அதெல்லாம் நடக்கும் போது
பார்த்துக்கலாம்” என்று விட்டு அவன் கையை எடுத்து
விட்டு கீழே ஓடி விட்டாள்.
யாழினி
சென்ற பிறகு அபிமன்யு தன் தலையை கண்ணாடியின் முன் நின்று சரி செய்தவாறு, “இதுவரைக்கும் எதிலுமே நான் தோத்ததில்லை.
இதிலும் கண்டிப்பா நான் ஜெயிச்சு காட்டுறேன்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு நின்றிருந்தான்.
பிறகு,
அனைவரும் உணவருந்த அமர்ந்திருக்கும் வேளையில் அபிமன்யு மரகதம் பாட்டியிடம், “இங்க கோவில் எங்க இருக்கு?” என்று விசாரித்தான்.
அனைவரும்
புரியாமல் பார்க்க. மரகதம் பாட்டிக்கு மட்டும் அபிமன்யு கேட்க வருவது புரிந்தது.
“நாளைக்கு நானே உங்கள கூப்பிட்டு
போறேன்”.
“எதுக்கு இப்போ கோவிலுக்கு?” என்றாள் அபிமன்யுவிடம்.
“சும்மா தான்” என்று கூறிவிட்டு தன் உணவில் கவனம்
ஆனான்.
அபிமன்யு
சென்ற பிறகு யாழினி மரகதம் பாட்டியிடம், “பாட்டி எதுக்கு திடீர்னு கோவிலை பத்தி கேட்டார்”.
“எனக்கு என்ன டி தெரியும்”.
“சும்மா சொல்லாத. உனக்கு
தெரியும்னு எனக்கு தெரியும்”.
மரகதம்
பாட்டி அன்று அபிமன்யு போன் செய்து கேட்டதை கூற.
“பாட்டி என்ன பண்ணி வச்சிருக்க நீ.
நீ சொன்னதெல்லாம் பொய்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான். இப்போ தான்
கொஞ்சம் மனசு மாறி நல்லா பேசுறார். திரும்பவும் கோவிச்சுக்க போறார்”.
“எப்படி டி தெரியும். கோவிலுக்கு
11 நாள் போயிட்டு உன்ன ஊருக்கு கூப்பிட்டு போயிடுவார். அதுவரைக்கும் அம்மா வீட்ல
சந்தோஷமா இருந்துக்கோ. நீ ஏன் இதை பத்தி எல்லாம் யோசிக்கிற. நாமலே சொன்னா தான்
அவருக்கு உண்மை தெரியும்”.
“போ பாட்டி. உன்ன யாரு அவர்கிட்ட
இப்படியெல்லாம் பொய் சொல்ல சொன்னது”.
“என்னை வேற என்ன சொல்ல சொல்ற. பொய்
சொல்ல ஆரம்பிச்சுட்டா அதை சரியா சொல்லணும். இல்லைனா சொல்லவே கூடாது. உன்னோட
குழப்பத்தை சரி பண்ண தான் நான் அவர்கிட்ட அப்படி பொய் சொன்னேன். அதான் இப்போ இங்க
வந்து நிக்குது”.
“பாட்டி அவருக்கு இந்த உண்மை
எல்லாம் தெரியாம பார்த்துக்கோ பாட்டி. ப்ளீஸ்”.
கயல்விழி
இவர்களுக்கு பின் இருந்தவாறு, “என்ன உண்மை தெரிய கூடாது?” என்றாள் சந்தேகப் பார்வையுடன்.
யாழினிக்கு
தூக்கி வாரி போட்டது. ‘எங்கே கயல்விழி மொத்தத்தையும்
கேட்டுவிட்டாளோ’ என்று.
“என்ன.. என்ன உண்மை.. நாங்க சும்மா
பேசிகிட்டு இருக்கோம். உன்னை யாரு இதெல்லாம் கேட்க சொன்னா”.
“என்ன பாட்டியும், பேத்தியும்
சேர்ந்து ஏதாவது திருட்டு வேலை பண்றீங்களா”.
“அதெல்லாம் இல்லைகா. சும்மா தான்
பேசிகிட்டு இருந்தோம்”.
“இங்க பாரு யாழினி, இவங்க எல்லாம்
உன் மேல பாசமா இருக்காங்க. உனக்கு எல்லா விஷயத்துக்கும் சப்போர்ட் பண்றாங்கன்றதுக்காக
ஏதாவது பொய் சொல்லி மாட்டிக்காத” என்று எச்சரிக்கை விடுத்து
விட்டு சென்றாள்.
“ஐயோ பாட்டி, அக்காவுக்கு
தெரிஞ்சிடுச்சு போல” என்றாள் பதட்டமாக.
“அதெல்லாம் அவளுக்கு ஒன்னும்
தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சிருந்தா இந்நேரம் வேற மாதிரி பேசி இருப்பா. தெரியாததால
தான் சாதாரணமா பேசிட்டு போறா. அவளை விடு, நீ ஏன் அவளை பத்தி யோசிக்கிற”.
மறுநாள்
அபிமன்யுவும், யாழினியும் கோவிலுக்கு கிளம்புவதை பார்த்த ஆரியன் தானும் வருவதாக
அடம் பிடித்து இவர்களுடன் சென்றான்.
ஆரியன்
செல்வதை பார்த்த ஆரணி தானும் வருவதாக கூற. இவர்கள் அனைவரும் செல்வதால் கயல்விழி
தானும் வருவதாக கூறினாள்.
லட்சுமி,
“மாசமா இருக்கும் போது அந்த
கோவிலுக்கு எல்லாம் சரி வராது. அங்க போனா நடக்கணும்”.
“ஏன் மா உன் கடைசி பொண்ணும்
மாப்பிள்ளையும் மட்டும் சந்தோஷமா வாழ்ந்தா போதுமா. நானும் என் வீட்டுக்காரரும்
சந்தோஷமாக வாழ வேண்டாமா. இவங்க மட்டும் ஜோடியா போய் சாமி கும்பிடுவாங்க. நான்
மட்டும் போக கூடாதா” என்றாள் வெடுக்கென்று.
“எதுக்கு எதை பேசுற நீ. இவங்க
ஊரில் இருந்து வந்திருக்காங்க. அதனால போறாங்க. நீ இந்த ஊரில் தானே இருக்க. எப்போ
வேணும்னாலும் போய்க்கலாம். புள்ள பொறந்ததும் போகலாமே. இப்போ ஏன் அவசரப்படுற”.
“அதெல்லாம் முடியாது. பாட்டி
இவங்களுக்காக ஏதோ வேண்டி இருக்கு. அதனால தான் இவங்களை கூப்பிட்டுகிட்டு போகுது.
நானும் என் வீட்டுக்காரரும் கண்டிப்பா வருவோம்” என்று முரண்டு பிடித்தாள்.
“சரி விடு லட்சுமி. கோவிலுக்கு
தானே போறோம். எல்லாருமே போவோம் கிளம்புங்க” என்று மரகதம் கூற.
அபிமன்யு
யாழினியின் காதில், “உங்க அக்காவுக்கு எது எதுக்கு
போட்டி போடுறதுன்னு விவஸ்த்தையே கிடையாது டி. கோவிலுக்கு போறதுக்கு கூட எப்படி
போட்டி போடுறாங்க பாரு” என்று கூற.
யாழினி
அபிமன்யுவை பார்த்து முறைத்தாள்.
“என்ன முறைக்குற” என்றவுடன்.
எங்கே
மீண்டும் மலையேறி விடுவானோ என்ற பயத்தில், “சும்மாதாங்க பார்த்தேன். எங்க அக்கா அப்படி தான். ஏதாவது
சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு இருப்பாங்க” என்று கூறி சமாளித்தாள்.
பிறகு
வெண்ணிலா, ஜீவாவையும் வர வைக்க. மூன்று மகள்களையும் அவர்களின் கணவருடன் அழைத்துக்
கொண்டு மொத்த குடும்பமாக கோவிலுக்கு புறப்பட்டனர்.
கோவில்
சற்று ஒதுக்குப்புறமாக இருப்பதால் சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்பொழுது
தான் கோவிலை அடைய முடியும்.
உண்மையிலேயே
மரகதம் பாட்டி அபிமன்யுவும், யாழினியும் நல்ல படியாக தங்கள் வாழ்க்கையை வாழ
வேண்டும் என்று பதினொரு நாள் இந்த கோவிலுக்கு அவர்களை அழைத்து வருவதாக வேண்டி
இருந்தார். அபிமன்யு பரிகாரம் கேட்கவும், இதையே பரிகாரமாக கூறி இங்கே அழைத்து
வந்து விட்டார்.
இது
தெரியாத மொத்த குடும்பத்தினரும் இவர்களுடன் கிளம்பி வர, சிறிது தூரம் நடந்ததுமே
அனைவருக்கும் அசதியாகிவிட்டது.
கயல்விழி,
“அம்மா இதுக்கு மேல என்னால நடக்க
முடியாது” என்று பாதியிலேயே நின்றுவிட.
லட்சுமி,
“இதுக்கு தான் அப்போவே சொன்னேன்.
இதெல்லாம் தேவையில்லைனு என் பேச்சை எங்க கேட்ட” என்று திட்டினார்.
மகேஷ், “பரவாயில்ல நான் பார்த்துக்குறேன். நீங்க
வேணும்னா போயிட்டு வாங்க”.
லட்சுமி,
“இல்ல மாப்ள. எனக்கும் நடக்க
முடியல”.
ஆரியன்,
“ஆரணி இங்க சீனரி எல்லாம் சூப்பரா
இருக்குல. நாமளும் இங்கேயே இருந்து சுத்தி பார்க்கலாமா?” என்று ஆரணியிடம் கேட்க.
“நடக்க முடியலைனு சொல்லுடா. கால்
வலிக்குதுனு சொல்றதுக்கு இப்படி சொல்லி கெத்த மெயின்டைன் பண்றியா” என்று ஆரியனை கிண்டல் செய்தாள்.
யாழினி,
“உனக்கு இதெல்லாம் தேவையா ஆரி.
இதுக்கு தான் அப்போவே வீட்ல இருனு சொன்னேன்”.
“எனக்கு ஒன்னும் கால் எல்லாம்
வலிக்கல. உங்களை மாதிரி கல்யாணம் ஆனவங்க தான் வயசாகிடுச்சுனு கோவில் குளம்னு
போகணும். நானே ஒரு சின்ன பையன்” என்று கூறி சமாளித்தான்.
அபிமன்யு,
“நீங்க யாரும் வர வேண்டாம்.
எல்லோரும் இங்கேயே வெயிட் பண்ணுங்க. நானும் யாழினியும் மட்டும் போயிட்டு வரோம்” என்று கூற.
மரகதம்
பாட்டி, “நீங்க சொல்றதும் சரி தான் தம்பி.
நீங்க ரெண்டு பேரு மட்டும் போங்க. மேல கோவிலில் பூசாரி இருப்பார், சாமி பேர்ல ஒரு
அர்ச்சனை பண்ணிட்டு நல்லா வேண்டிக்கிட்டு கீழ வாங்க. நாங்க எல்லாம் இங்கேயே
கார்த்துகிட்டு இருக்கோம்”.
யாழினி
அபிமன்யுவை பாவமாக பார்த்து, “எனக்கும் கால் வலிக்குது. நீங்க
மட்டும் போயிட்டு வரீங்களா?”.
அவள்
கூறிய அடுத்த நொடி சற்றும் யோசிக்காமல் அனைவரின் முன்பும் அவளை தன் இரு கைகளில்
ஏந்திக் கொண்டு நடக்க தொடங்கினான் அபிமன்யு.
அனைவரின்
முன்பும் அபிமன்யு இப்படி செய்வான் என்று சற்றும் எதிர்பாராத யாழினி பதட்டமாக, “ஐயோ! என்ன பண்றீங்க. எல்லாம்
பார்க்குறாங்க கீழே இறக்கி விடுங்க”
என்றாள் அவசரமாக.
“பார்த்தா என்ன.. நீ தான கால்
வலிக்குதுனு சொன்ன”.
“அதுக்காக எல்லார் முன்னாடியும்
இப்படியா பண்ணுவீங்க”.
அபிமன்யு
அங்கிருந்தபடியே திரும்பி சுப்பிரமணியிடம், “உங்க பொண்ண நான் தூக்கிக்கிட்டு நடக்க கூடாதா?”.
சுப்பிரமணிக்கு
என்ன கூறுவது என்றே தெரியவில்லை. ‘என்னடா
இது இவர் இப்படி கேட்கிறார் அனைவரின் முன்பும்’ என்று சங்கடமாகி போனது.
யாழினியும்
இதை எதிர்பார்க்கவில்லை. ‘தன் தந்தையிடமே இப்படி கேட்கிறானே’ என்று கூச்சமாகி போக.
அவசரமாக,
“சரி சரி, நான் ஒன்னும் சொல்லல
போகலாம் மணி ஆகுது. போங்க.. போங்க..”
என்று அபிமன்யுவை அவசரப் படுத்தினாள்.
சுப்ரமணி,
“நீங்க போயிட்டு வாங்க தம்பி” என்று கூறிவிட்டார்.
கயல்விழிக்கு
இவர்களை பார்த்து பொறாமையாக இருந்தது. என்ன தான் காதல் திருமணம் செய்தாலும்,
இப்படி எல்லாம் மகேஷ் கயல்விழியிடம் நடந்து கொள்வதில்லை.
வெண்ணிலாவிற்கும்,
ஜீவாவிற்கும் யாழினியையும், அபிமன்யுவையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக
இருந்தது.
ஜீவா
யாழினியின் வாழ்க்கையை நினைத்து மிகவும் கவலை பட்டிருக்கிறான். ஆனால், அபிமன்யு
இப்படி முற்றிலுமாக மாறி யாழினியை தன் கையில் வைத்து தாங்குவதை பார்க்கும் பொழுது
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அபிமன்யுவிற்கு
இந்த பரிகாரமே பொய் என்று தெரிய வந்தால் என்னவாகும்..?
கருத்துகள்
கருத்துரையிடுக