அவனதிகாரம் - 82

 

 

 

அதிகாரம் – 82

 

அபிமன்யு கூறியதை கேட்ட கயல்விழி கோபமாக எதையோ கூற வாய் எடுக்க. அவளின் கையைப் பிடித்து தடுத்த மகேஷ் தலையசைத்து அவளின் வாயை திறக்காத படி அவளை தடுத்தான். கயல்விழி கோபமாக மகேஷின் கையை தட்டி விட்டவள். அங்கிருந்து கார் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள்.

 

மரகதம் பாட்டி, என் பேத்தி ஆசைப்பட்டுட்டா, அது நடக்கணும்னு நானும் சாமிகிட்ட வேண்டிக்கிறேன்.

 

ஐயோ பாட்டி, அதெல்லாம் ஒன்னும் இல்ல. இவங்க சும்மா சொல்றாங்க என்று யாழினி தன் பக்க நியாயத்தை கூற.

 

ஆரியன், ஒரு குழந்தையை வளர்க்கிறதே கஷ்டம். நீ எப்படி ரெண்டு குழந்தையை வளர்ப்ப என்று தன் சந்தேகத்தை கேட்டான்.

 

வெண்ணிலா, ஜீவா தம்பதியினர் இவர்களை பார்த்து சிரித்தபடி நின்று இருக்க.

 

அபிமன்யு, என்ன ஜீவா, உங்க மச்சினிச்சி என்னை ஓவர் டைம் வொர்க் பண்ண வைக்குறா. அவளுக்கு நீங்க அட்வைஸ் பண்ண கூடாதா என்று அனைவரின் முன்பும் கேட்க.

 

அபிமன்யு இப்படி கேட்டது ஜீவாவிற்கு சற்று சங்கடமாக இருந்தது. ஜீவா என்ன கூறுவது என்று தெரியாமல் விழிக்க.

 

எங்கே தன்னிடம் ஏதேனும் கேட்டு விடுவாரோ என்று சுப்பிரமணி, அம்மா எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு வாங்க. நான் போய் டிரைவர் எங்க இருக்காருனு பார்க்குறேன் என்று நைசாக நழுவி முன்னே சென்று விட்டார்.

 

ஜீவா என்ன கூறுவது என்று தெரியாமல் சிரித்து சமாளிக்க. யாழினிக்கு அங்கு நிற்கவே முடியவில்லை. அனைவரின் முன்பும் அபிமன்யு இப்படி பேசுகிறானே என்று அவனின் காலில் யாருக்கும் தெரியாமல் மிதித்தாள்.

 

ஏன் டி இப்போ என் காலை மிதிச்ச என்று அவன் யாழினியிடம் கேட்க.

 

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைவரும் மெதுவாக அங்கிருந்து நழுவி காரை நோக்கி சென்று விட்டனர்.

 

ஏங்க இப்படி எல்லாம் பண்றீங்க. எல்லார் முன்னாடியும் இப்படி பேசுறீங்க என்று கோபமாக கேட்டாள்.

 

ஏன், இப்போ நான் என்ன சொல்லிட்டேன். உங்க அக்கா நேத்து பேசுனது மட்டும் சரியா. நீ தான் என்னால எங்க பிரச்சனை வருமோனு பயப்படுற. அதான் என்னால எந்த சண்டையும் வரக்கூடாதுனு இப்படி பேசுனேன். என் பொண்டாட்டியை யாரு வேணும்னாலும், என்ன வேணும்னாலும் பேசட்டும்னு என்னால பார்த்துகிட்டு அமைதியா இருக்க முடியாது. அவங்க பேசுனது தப்புனு அவங்களுக்கு புரியணும். அதுக்காக தான் இப்படி சொன்னேன்.

 

யாரிடமும் தன்னை விட்டுக் கொடுக்காமல் அபிமன்யு பேசுவது யாழினிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும், இப்படி அனைவரையும் சங்கடமான சூழ்நிலையில் நிறுத்துவது போல் இருக்கும் அபிமன்யுவின் பேச்சு, யாழினிக்கு சற்று கோபத்தை கொடுத்தது.

 

இதுக்கு பதில் நீங்க சண்டையே போட்டு இருக்கலாம். ஏன் இப்படி என்னோட மானத்தை வாங்குறீங்க.

 

சரி, இனிமே நான் எதுவுமே பேசல போதுமா என்று விட்டு அவன் முன்னே நடக்க.

 

ஐயோ கோவிச்சிக்கிட்டார் போலருக்கே. இவரை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல என்று முணுமுணுத்தபடி பின்னே நடந்தாள்.

 

மறுநாள் மதிய வேலை உணவிற்காக அனைவரும் அமர்ந்திருக்க.

 

சுப்பிரமணி யாழினியிடம், என்ன மா மாப்ள எங்க ஆளையே காணோம் என்று விசாரித்தார்.

 

அவருக்கு ஏதோ ஆஃபீஸ் வேலை இருக்குனு ரூம்ல உட்கார்ந்து செஞ்சுக்கிட்டு இருக்காருப்பா.

 

போய் மாப்ளய கூப்பிட்டுகிட்டு வாம்மா. எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்.

 

யாழினி சரி என்று விட்டு அறைக்கு சென்றாள். அங்கே அபிமன்யு காதில் ஹெட் போனுடன் யாருடனோ சீரியஸாக பேசிக்கொண்டு இருந்தான். அவனது கவனத்தை கலைக்காதவாறு அவனின் அழைப்பு துண்டிக்கும் வரை கார்த்திருந்தவள்.

 

அபிமன்யு பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டித்ததும், கீழ எல்லாரும் சாப்பிடுறதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. வாங்க என்று அழைத்தாள்.

 

அபிமன்யுவிடம் எந்த பதிலும் இல்லை. கண்கள் லேப்டாப்பிலேயே நிலைத்து இருக்க. கைகள் அதன் போக்கில் ஏதோ டைப் செய்தபடி இருந்தது.

 

யாழினிக்கு, தான் கூறியது எங்கே அவன் காதில் விழவில்லையோ என்ற சந்தேகம் எழ.

 

மீண்டும் சத்தமாக அபிமன்யுவிடம், கீழ அப்பா, அம்மா எல்லோரும் சாப்பிடாம உங்களுக்காக கார்த்துக்கிட்டு இருக்காங்க. சாப்பிட வரிங்களா... இல்ல, உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா என்று கேட்க.

 

இப்பொழுதும் அபிமன்யுவிடம் எந்த ஒரு பதிலும் இல்லை. தன் வேலையை செய்தபடி அமர்ந்திருந்தான்.

 

யாழினி, என்ன இவன் இவ்வளவு நேரம் கேட்கிறோம். அப்படியே உட்கார்ந்து இருக்கான் என்று எண்ணியவாறு அபிமன்யுவின் கையில் சுரண்ட.

 

அபிமன்யு கோபமாக திரும்பி யாழினியை பார்த்து முறைத்தவன், என்ன வேணும் உனக்கு இப்போ.

 

யாழினிக்கு தூக்கி வாரி போட்டது. வெகு நாட்கள் கழித்து அபிமன்யுவை இப்படி கோபமாக பார்க்கிறாள்.

 

மீண்டும் அதே படபடப்பு தொற்றிக் கொள்ள, இல்ல.. சாப்பிட வரீங்களா.. என்று இழுத்தாள்.

 

அதான் என்னை எதுவும் பேசக்கூடாதுனு சொல்லிட்டியே. அப்புறம் எல்லார் கூடவும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு நான் என்ன பண்ண போறேன். நான் இனிமே தனியாவே இருக்கிறேன் என்றான் கோபமாக.

 

யாழினி, ஐயோ! சாரி மாமா. நான் வேணும்னு அப்படி சொல்லல என்று தன் பக்கம் நியாயத்தை கூற.

 

சும்மா சொல்லாத யாழினி. உனக்கு உங்க வீட்டுக்கு வந்ததிலிருந்து நான் இங்க வந்ததே பிடிக்கல. அதான் இப்படி எல்லாம் பேசுற என்று அவன் சம்பந்தமில்லாமல் பேச.

 

யாழினிக்கு அபிமன்யு ஏன் இப்படி வாக்குவாதம் செய்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை. யாழினி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற படபடப்புடன் அமர்ந்திருந்தாள்.

 

அது மட்டும் இல்ல, நேத்து கோவில்ல என்னை தான திட்டிக்கிட்டே வந்த.

 

யாழினிக்கு, ஐயோ கடவுளே! கண்டுபிடிச்சிட்டாரே என்று திக்கென்றது. ச்ச.. ச்ச.. இல்ல மாமா என்றாள் சட்டென்று பதட்டமாக.

 

சும்மா சொல்லாத. நீ என்ன ஸ்லோகன் சொன்னனு எனக்கும் கேட்டுச்சு.

 

அபிமன்யுவின் வார்த்தையில் யாழினியின் வாய் கப்சிப் என்று முடிக்கொள்ள தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

 

நான் நீ பீல் பண்ண கூடாதுன்னு உன்ன உங்க அம்மா வீட்டுக்கு கூப்பிட்டு வந்தா. நீ என்னையே மதிக்காம நடந்துக்குற இல்ல.

 

அப்படி எல்லாம் இல்ல மாமா என்றாள் அழுது விடும் குரலில்.

 

தப்பு பண்ணா அதுக்கு பனிஷ்மென்ட் கண்டிப்பா இருக்கும்.

 

யாழினி என்ன என்பது போல் பார்க்க.

 

அபிமன்யு, இன்னைக்கு லஞ்ச் நீ தான் எனக்கு ஊட்டி விடணும். இல்லைனா நான் இனிமேல் உங்க வீட்ல சாப்பிடவே மாட்டேன் என்று கரராக கூறினான்.

 

யாழினிக்கு இது என்னடா புது பிரச்சனை என்று தோன்ற. அப்போ இவ்வளவு நேரம் கோபமாக பேசியது இதற்கு தானா. இவனின் கோபத்தை சமாளிக்க வேறு வழியும் இல்லை. இவன் போக்கில் போனால் தான் சமாளிக்க முடியும் என்றும் உரைத்தது.

 

சரி, நான் போய் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரேன் என்று எழுந்தாள்.

 

அவளின் கையைப் பிடித்து தடுத்த அபிமன்யு, எங்க போற என்றான் கோபம் குறையாத குரலில்.

 

யாழினி மெதுவாக, உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விட சொன்னீங்களே. அதான் எடுத்துட்டு வர போறேன்.

 

அதுக்கு ஏன் எடுத்துட்டு வர போற. நானே வரேன். கீழ போய் சாப்பிட்டுக்கலாம்.

 

கீழயா.... எல்லாரும் இருப்பாங்களே....

 

எல்லாரும் இருந்தா என்ன?.

 

எல்லார் முன்னாடியும் எப்படி மாமா... என்று இழுத்தாள்.

 

ஏன், ஊட்டி விட மாட்டியா...? என்று அவன் கரராக கேட்க.

 

இல்ல.. இல்ல.. அதுக்கு இல்ல, எல்லாரும் பார்ப்பாங்க. அப்புறம் உங்களுக்கு கண்ணு வச்சுட்டாங்கனா நீங்க சரியா சாப்பிட முடியாதுல. அதுக்கு தான் சொன்னேன்.

 

அதெல்லாம் ஒன்னும் வைக்க மாட்டாங்க. நானும் எல்லார் கூடவும் சேர்ந்து தான் சாப்பிட போறேன். ஆனா, நீ தான் எனக்கு ஊட்டிவிடனும் என்றான் அடம் பிடித்தபடி.

 

யாழினி வேறு வழியின்றி சரி என்று ஒப்புக்கொண்டாள்.

 

சரி நீ போ. நான் வரேன் என்று யாழினியை அனுப்பி வைத்தவன்.

 

என்கிட்டயே ஸ்லோகன் சொல்றேன்னு சொல்லி ஏமாத்துறியா.. இன்னைக்கு இருக்கு டி உனக்கு என்று புன்னகைத்தவாறு கூறிவிட்டு கீழே இறங்கி சென்றான்.

 

யாழினிக்கு இப்பொழுது என்ன செய்வது என்று படபடப்பாக இருந்தது. அபிமன்யு கூறியது போல் செய்யாமல் இருந்தால், அவன் கோவித்துக் கொள்வான். அவன் கூறியது போல் அனைவரின் முன்பும் செய்யவும் கூச்சமாக இருந்தது.

 

இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திருதிருவென விழித்தபடி சாப்பிடும் இடத்திற்கு சென்றாள்.

 

வேலுச்சாமி தாத்தா, என்னம்மா மாப்பிள்ளை வரல? என்றார்.

 

அவரின் வார்த்தையை கேட்ட அனைவரும் மொத்தமாக திரும்பி யாழினியை பார்க்க. எல்லாரும் நம்மளையே ஃபோக்கஸ் பண்றாங்களே என்று மனதிற்குள் தோன்றியது.

 

இதோ வராங்க தாத்தா என்று விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

யாழினியின் பின்னோடு சமையலறைக்குள் சென்ற மரகதம், என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க? மாப்பிள்ளை ஏதாவது சொன்னாரா?.

 

பாட்டி என்னை எப்படியாவது காப்பாத்து பாட்டி என்று அவள் அழுதுவிடும் குரலில் கூற.

 

மரகதம் பாட்டி பதட்டமாக, என்ன டி ஆச்சு. திரும்ப ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார்.

 

யாழினி அறையில் நடந்த மொத்த கதையையும் கூறி முடிக்க.

 

மரகதம் பாட்டி அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி, அவ்வளவு தானா. நான் கூட ஏதோ பெரிய பிரச்சனையோனு நினைச்சு பயந்துட்டேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்போ நீ மாப்பிள்ளைக்கு ஊட்டி விடனும் அவ்வளவு தான. இதில் என்ன இருக்கு.

 

எல்லார் முன்னாடியும் எப்படி பாட்டி. அப்பா, தாத்தா எல்லாம் இருக்காங்க. ஜீவா மாமா, கயல்விழி அக்கா வீட்டுக்காரர் எல்லாரும் இருக்காங்க. எனக்கு வெக்கமா இருக்கு.

 

யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க. நீ உன் வீட்டுக்காரருக்கு தான ஊட்டி விட போற. இதில் மத்தவங்க நினைக்க என்ன இருக்கு. போ, போய் ஊட்டி விடு. இல்லனா, மாப்ள கோச்சுக்க போறார் என்று யாழினிக்கு சமாதானம் கூறி அனுப்பினார்.

 

யாழினியின் முகம் சரியில்லாததை உணர்ந்த ஆரியன் யாழினியையே கண்களால் ஃபாலோ செய்தான். அனைவரும் அபிமன்யுவிற்காக கார்த்திருக்க.

 

யாழினிக்கோ இந்த சூழலை கையாள தெரியாமல் திணறியபடி நின்று இருந்தாள்.

 

அபிமன்யுவை பார்த்த வேலுச்சாமி தாத்தா, வா பா. எல்லாரும் உனக்காக தான் கார்த்துகிட்டு இருக்கோம்.

 

அபிமன்யு எதுவும் கூறாமல் அமைதியாக வந்து இருக்கையில் அமர்ந்தான். பிறகு, லட்சுமி அனைவருக்கும் பரிமாற. அனைவரும் உணவருந்த தொடங்கினர். அபிமன்யு மட்டும் தன் தட்டில் கையை வைக்காமல் அமர்ந்திருக்க.

 

அதை பார்த்த ஜீவா, என்ன ஆச்சு சாப்பிடுங்க. ஏன் சாப்பிடாம உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்டான்.

 

அபிமன்யு எதுவும் கூறாமல் யாழினியை பார்க்க.

 

அபிமன்யுவின் அழுத்தமான பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த யாழினி, அது வந்து மாமா.. அவங்களுக்கு கையில கொஞ்சம் அடிபட்டு இருக்கு. அதான் என்று விட்டு, அபிமன்யுவின் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவள்.

 

யாரின் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் கடகடவென அவனுக்கு சாப்பாட்டை பிசைந்து ஊட்டத் தொடங்கினாள்.

 

யாழினியின் சூழ்நிலையை உணர்ந்த மரகதம் பாட்டி, அது ஒன்னும் இல்லப்பா. தம்பி கோவில்ல யாழினியை தூக்கிக்கிட்டு வந்துச்சுல்ல. அதான் கை ரொம்ப வலிக்குதாம். கொஞ்சம் வீக்கமா வேற இருக்கு போல. அதான் யாழினி ஊட்டி விடுறா என்று விளக்கமாக கூறினார்.

 

அனைவருக்கும் இது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை. கணவனுக்கு முடியவில்லை என்று மனைவி ஊட்டி விடுகிறாள் என்று சாதாரணமாக கடந்து விட்டனர். ஆனால், யாழினிக்கு வயிற்றுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறந்தது. பதட்டத்தில் கைகள் உதறியது.

 

தட்டில் இருந்து சரியாக உணவை சிந்தாமல் எடுத்து அபிமன்யுவின் வாய்க்குள் வைப்பதற்க்குள் அவளிற்குள் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

 

அந்த அளவிற்கு பதட்டத்தால் யாழினியின் கைகள் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. இவர்கள் இருவரையும் பார்த்த மற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் இவர்களின் அந்நியோன்னியத்தை பார்த்து பெரும் மகிழ்ச்சி.

 

ஆனால், கயல்விழிக்கு மட்டும் இவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க நமக்கு இப்படி நடக்கவில்லையே.. நாம் தானே இந்த குடும்பத்திலேயே காதல் திருமணம் செய்துள்ளோம்.

 

ஆனால், நாம் இப்படி அனைவரின் முன்பும் ஒற்றுமையாக இல்லையே. அனைவரின் முன்புமே இப்படி நடந்து கொள்பவர்கள், தனிமையில் இன்னும் எப்படி எல்லாம் ஒற்றுமையாக இருப்பார்கள்.

 

ஆனால் நமக்கு ஏன் இப்படி எல்லாம் அமையவில்லை என்று பொறாமையாக இருந்தது. அவர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

அபிமன்யு வேண்டுமென்றே யாழினியின் நிலையை உணர்ந்தாலும், மேலும் அவளை சீண்டும் பொருட்டு அவளின் கையை கடித்தான்.

 

அதில் அனைவரின் முன்பும் கத்தவும் முடியாமல், அவனை திட்டவும் முடியாமல் திண்டாடினாள். யாழினியால் முடிந்தது அபிமன்யுவை பார்த்து முறைப்பது மட்டுமே.

 

எனவே, அதை மட்டும் சரியாக செய்தாள். யாழினிக்கு இந்த சூழல் பதட்டத்தை கொடுத்தாலும் அபிமன்யுவிற்கு பெரும் சுகத்தை கொடுத்தது. முதல் முறை யாழினி ஊட்டி விட்டு சாப்பிடுகிறான். இது அபிமன்யுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

 

சிறுவயதில் தன் அம்மாவின் கையால் உணவு உண்டது. பிறகு, யாரிடமும் இப்படி அவன் ஊட்டி விட்டு சாப்பிட்டது கிடையாது. பெரியவர்களாக வளர்ந்த பிறகும் கூட ஆரியனும், ஆரணியும் அவ்வப்பொழுது அடம்பிடித்து தன் தாயை ஊட்டி விட சொல்லி உணவு உண்பார்கள்.

 

அவர்களை பார்த்துவிட்டு அபிமன்யு கடந்து விடுவானே தவிர, தானும் இப்படி செய்ய வேண்டும் என்று அவன் எண்ணியதே கிடையாது.

 

ஆனால், இப்பொழுது இது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழினி ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு உணர்வை அபிமன்யுவிற்கு கொடுத்திருக்கிறாள். இப்பொழுது தாயின் அரவணைப்பை உணர்கிறான் யாழினியிடம்..‌.

 

காலங்கள் மாறலாம்.. ஆனால், ஒருவரின் மேல் வைத்த உண்மையான அன்பு என்றும் மாறாது..!

 

இவர்களின் அன்பு காலப்போக்கில் மாறுமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5