அவனதிகாரம் - 87

 

 

அதிகாரம் – 87

 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. பிரச்சனை இல்லாத வாழ்க்கை யாருக்கு தான் அமைகிறது.

 

யாழினிக்கு, தன் கணவன், தன் குடும்பத்தினரை புரிந்து கொள்ள வில்லையே என்ற வருத்தம்....

 

கயல்விழிக்கு, தன் கணவன் வீட்டினர் ஏழ்மையாக இருப்பதில் வருத்தம்....

 

ஸ்வேதாவிற்கு, தன் கணவன் தன்னைவிட தன் மாமியாருக்கு அதிக கவனம் செலுத்துகிறாரோ என்ற வருத்தம்....

 

ஸ்வேதா பெரும் வருத்தத்துடனும், கனத்த மனதுடனுமே யாழினியைப் பிரிந்து தன் கணவருடன் சென்றாள்.

 

அதே நிலை தான் யாழினிக்கும். ஆனால், என்ன செய்ய முடியும்... வாழ்க்கை என்றுமே ஒன்று போல் இருக்காதே... நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்...!

 

அபிமன்யு யாழினியிடம், இன்னும் டூ டேஸ் தான் கோவில் போக வேண்டியது இருக்கு. போயிட்டு வந்துட்டா அப்புறம் நம்மளும் கிளம்பிடலாம்.

 

யாழினிக்கு, ஸ்வேதா சென்ற வருத்தமே இன்னும் குறையாமல் இருக்க. இப்பொழுது இன்னும் இரண்டு நாட்களில் தானும் இங்கிருந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தமும் சேர்ந்து கொள்ள முகம் வாடிவிட்டது.

 

என்ன ஆச்சு. ஏன் டல்லா இருக்க?.

 

ஒன்னும் இல்ல.

 

எத்தனை நாட்கள் அம்மா வீட்டில் இருந்தாலும், இந்த பெண்களுக்கு மட்டும் திருப்தியே வராது...

 

இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்க தான் தோன்றும்..

 

அபிமன்யு யாழினியின் மனநிலையை மாற்றுவதற்காக, சரி வா, ஒரு வாக் போயிட்டு வரலாம்.

 

எங்க?.

 

அப்படியே நடந்து வயல் வரைக்கும் போயிட்டு வரலாம். இங்க தான் சுத்தி பார்க்க நிறைய சீனரிஸ்லாம் இருக்குல்ல.

 

சரி என்று யாழினியும் அவனுடன் செல்ல.

 

இருவரும் வயல்வெளிகளை சுற்றிப்பார்த்தவாறு கைகோர்த்து நடந்து கொண்டிருந்தனர்.

 

தூரத்தில் வேலுச்சாமி தாத்தா வயலில் வேலை செய்பவர்களிடம் ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்த யாழினி அபிமன்யுவிடம், தாத்தா அங்க தான் இருக்காங்க. வாங்க, அங்க போய் பார்க்கலாம் என்று விட்டு முன்னே சென்றாள்.

 

வேறு வழி இன்றி பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொண்டு அவளை பின்தொடர்ந்தான் அபிமன்யு.

 

வேலுச்சாமி தாத்தா வேலையாட்களிடம் பேசிவிட்டு வரப்பில் நடந்து வருகையிலேயே, பின்பக்கம் இருந்து மரகதம் பாட்டி வந்து கொண்டிருப்பதை பார்த்தவர். அவரை நோக்கி திரும்ப வரப்பில் கால் இடறி கீழே விழப் பார்த்தார்.

 

அவரை விழவிடாமல் தடுப்பதற்காக யாழினி அதிர்ச்சியில், தாத்தா... என்று கத்தியபடி ஒரு புறம் ஓடி வர.

 

மரகதம் பாட்டி, என்னங்க... என்று பதட்டமாக கத்தியபடி மறுபுறம் ஓடி வந்தார்.

 

இவர்கள் இருவரும் வேலுச்சாமி தாத்தாவின் அருகில் செல்வதற்குள்ளாகவே, அவர் கீழே விழும் இரு நொடிக்குள் யாருமே எதிர்பாராமல் அபிமன்யு அவரை தாங்கி பிடித்தான்.

 

அப்பொழுது தான் யாழினிக்கும், மரகதம் பாட்டிக்கும் மூச்சே வந்தது. பிறகு, அவசர அவசரமாக வேலுச்சாமி தாத்தாவின் அருகில் வந்தார்கள்.

 

ஏங்க வரப்புல நடக்கும் போது பார்த்து நடக்க தெரியாதா... என்ன சின்ன வயசுன்னு நினைப்பா கிழவனுக்கு என்றார் மரகதம் கோபம் கலந்த பதட்டத்தில்.

 

மரகதம் பாட்டியின் பேச்சு அபிமன்யுவிற்கு புதிதாக இருந்தது. ஏனெனில், வள்ளியம்மை பாட்டி அவரின் கணவரிடம் இப்படி எல்லாம் பேச மாட்டார்.

 

கிருஷ்ணமூர்த்தியிடம் யாராவது மரியாதை குறைவாக நடந்து கொண்டாள் அவருக்கு பெரிதாக கோபம் வந்துவிடும். அது தன் மனைவியாக இருந்தாலும் சரி..

 

அபிமன்யு அதிசயமாக மரகதம் பாட்டியை பார்த்தபடி நின்றிருந்தான்.

 

ஏதோ தெரியாம நடந்திடுச்சு. நீ இதான் சாக்குனு என்னை கிழவன்னுலாம் சொல்ற வேலை வச்சுக்காத. நீ தான் கிழவி என்றார் அவர் பதிலுக்கு.

 

ஓ... கீழ விழுந்தாலும் கிழவனுக்கு மீசையில் மண்ணு ஒட்டலையோ... நான் கிழவி, நீங்க குமரனா... தலைமுடி மொத்தமும் வெள்ளையா போச்சு. ஆனா, கிழவன்னு சொன்னா இந்த வயசுலயும் கோபம் வருதா.

 

பாட்டி சரி விடுங்க. அதான் தாத்தா விழலையே. தாத்தா இனிமே பார்த்து நடங்க.

 

நீ சும்மா இரு யாழினி. எப்போ பார்த்தாலும் இந்த கிழவி என்னை பார்த்து கிழவன், கிழவன்னு சொல்லுறா. நான் கிழவன்னா, இவ கிழவி தான என்று பதிலுக்கு சண்டைக்கு கிளம்பினார்.

 

யாழினி இருவரையும் சமாதானம் செய்வதற்காக, சரி சரி.. ரெண்டு பேருமே கிழவன், கிழவி தான் போதுமா. இதுக்காகலாமா சண்டை போட்டுப்பீங்க சின்ன பசங்க மாதிரி.

 

ஏன் டி எங்களயே கிழவன், கிழவினு சொல்லுறியா என்று யாழினிடம் சண்டைக்கு நின்றார் மரகதம்.

 

அபிமன்யுவிற்கு இவர்களின் வாக்குவாதம் ஒன்றுமே புரியவில்லை. இது எப்பொழுதுமே இவர்களின் குடும்பத்தில் இவர்கள் மூவருக்கும் நடுவில் நடப்பது தான் என்பது அபிமன்யுவிற்கு தெரியாது அல்லவா. இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறான். புரியாமல் இவர்களை பார்த்தபடி நின்று இருந்தான்.

 

ஆமா, நீங்க ரெண்டு பேரும் கிழவன், கிழவி இல்லாம வேற என்னவாம். வயசானாலும் ரெண்டு பேருக்கும் கிழவன், கிழவினு சொன்னா கோவத்தை பாரு.

 

எங்களுக்குள்ள ஆயிரம் பேசுவோம். நாங்க ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டி. நீ ஏன் டி எங்களுக்குள்ள வர.

 

யாழினி மரகதம் பாட்டியை பார்த்து தன் தலைக்கு மேல் கை எடுத்து கும்பிடு போட்டவள், தெரியாம வந்துட்டேன் பாட்டி. தயவு செஞ்சு மன்னிச்சிடு. நீங்க ரெண்டு பேரும் எப்படியாவது சண்டை போட்டுக்கிட்டு போங்க, எனக்கு என்ன.

 

அப்பொழுது தான் அபிமன்யுவை கவனித்தார் வேலுச்சாமி, தம்பி உங்ககிட்ட ஒன்னு சொல்லலாமா? என்றார் தயக்கமாக.

 

அபிமன்யுவிற்கு ஆரம்பத்தில் இவர்களின் குடும்பத்தினரை பிடிக்காமல் இருந்தாலும், இந்த சில தினங்கள் இவர்களுடன் தங்கியதில் ஏதோ ஒன்று, இரண்டு இவர்கள் கூறுவதை கேட்கும் அளவிற்கு பொறுமையை பெற்றுள்ளான்.

 

அபிமன்யு விரைப்பாக நின்றபடி, சொல்லுங்க.

 

அது வந்து.. கொஞ்சம் தனியா பேசணும்.

 

அப்படி என்ன எங்களுக்கு தெரியாத ரகசியம் பேச போறீங்க. எதுவாக இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க.

 

யாழினிக்கு தெரியாம நான் எந்த ரகசியமும் வைக்க மாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் நான் அவகிட்ட சொல்ல தான் போறேன். எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க.

 

இதைக் கேட்கும் பொழுது பெரியவர்கள் இருவருக்குமே மன நிறைவாக இருந்தது.

 

சரிங்க தம்பி. நான் இங்கேயே சொல்றேன் என்று சிறிது நேர அமைதிக்குப் பின், தம்பி யாழினியை உங்களுக்கு திருமணம் செஞ்சு வைக்கணும்னு ஆசைப்பட்டது நான் தான். நீங்க நாங்க சொன்ன விஷயத்தை எல்லாம் நம்பினிங்களோ, நம்பலயோ எனக்கு தெரியாது.

 

என்னுடைய பொண்ணுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லாம போயிடுச்சு. அவ எங்க பொண்ணுனு யாருக்கும் தெரியாம வேணும்னா இருக்கலாம். ஆனா, எங்களுக்கு தெரியுமே.. அவளுடைய உறவு இதோட முடியுறதுல எனக்கு விருப்பமில்ல.

 

எங்களுக்கு அப்புறமும் தொடரனும்னு ஆசைப்பட்டு தான் என் பேத்திக்கு உங்கள திருமணம் முடித்து தர சொல்லி வள்ளியம்மைகிட்ட கேட்டேன். அவளும் நான் ஆசைப்பட்ட மாதிரி செஞ்சு கொடுத்தா. ஆனா, உங்க மனசுல எங்கள பத்தின தப்பான எண்ணம் இருக்கும்னு நாங்க யாருமே சத்தியமா எதிர்பார்க்கல. நான் என்னுடைய மனைவியை உயிருக்குயிரா நேசிக்கிறேன். எனக்கு எல்லாமே அவ தான், அவ மேல் சத்தியம் பண்ணி சொல்றேன் என்றவர்.

 

சட்டென்று மரகதம் பாட்டியின் தலையில் கை வைத்து, என் மரகதத்து மேல சத்தியமா சொல்றேன். மீரா எங்களுக்கு பிறந்த பொண்ணு தான். நாங்க வள்ளியம்மைக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் குழந்தை இல்லாததால தான் அவள வளர்க்குறதுக்காக அவங்க கிட்ட கொடுத்தோம். கிருஷ்ணமூர்த்தி உங்ககிட்ட சொல்லி இருக்க எல்லாமே பொய்.

 

தயவு செஞ்சு, எங்க மேல எந்த தப்பும் இல்லனு நீங்கள் புரிஞ்சுக்கிட்டாலே எங்களுக்கு போதும். நீங்க ஒன்னும் எங்க வீட்டுக்கு வந்து மாச கணக்குல தங்க வேண்டாம் தம்பி. என்ன இருந்தாலும், ஒரு பொண்ணுக்கு பொறந்த வீடுன்னாலே தனி பிரியம் தான்.

 

ஆனா, எங்க மேல இருக்க கோபத்துல நீங்க யாழினி கிட்ட எங்கள பத்தி கோவமா பேசுறது, அவளுடைய மனசுக்கு வருத்தத்தை கொடுக்கும். அவள ஏதாவது விடுமுறை வந்தா எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க‌. உங்க மனைவியா எங்க வீட்டுக்கு வந்து தங்கிட்டு போகட்டும். தயவு செஞ்சு, எங்க மேல எந்த தப்பும் இல்லனு புரிஞ்சுக்கோங்க.

 

யாழினி சட்டென்று மரகதம் பாட்டியின் தலையின் மேலிருந்து அவரின் கையை எடுத்தவள், தாத்தா என்ன பண்றீங்க நீங்க என்றாள் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் உணர்ச்சி வசப்பட்டு.

 

மரகதம், அவர் பேசட்டும் விடு யாழினி.

 

பாட்டி என்ன நீங்களும் தாத்தா கூட சேர்ந்துக்கிட்டு இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் பேசணும்னு எந்த அவசியமும் இல்ல. தாத்தாவுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு. இப்படி உணர்ச்சிவசப்படக் கூடாதுனு டாக்டர் சொல்லி இருக்காங்கல்ல. இங்க பாருங்க தாத்தா, நான் சந்தோஷமா தான் இருக்கேன். என்னை இவர் நல்லா தான் பார்த்துக்கிறார்.

 

நீ வெளியில என்ன தான் சந்தோஷமா இருந்தாலும், உன் மனசுக்குள்ள என்ன வருத்தம் இருக்குனு எனக்கு தெரியாதா மா.

 

நீங்க சொன்னதெல்லாம் உண்மைனு கண்டிப்பா அவருக்கு ஒரு நாள் தெரியவரும் தாத்தா. அது வரைக்கும் நான் கார்த்துக்கிட்டு இருப்பேன். அதுக்காக நீங்க இப்படி உணர்ச்சி வசப்படாதீங்க. கண்டிப்பா அவர் நம்மள ஒரு நாள் புரிஞ்சுப்பார் என்றாள் நம்பிக்கையுடன்.

 

நீ சொல்றது நடக்கணும்னு தான் எனக்கும் ஆசை. ஆனா, அதுவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் இருப்போமோ, இருக்க மாட்டோமோ.. எங்க காலத்துலயே இந்த பிரச்சனை எல்லாம் சரியாகனும்னு நாங்க ஆசைப்படுறோம் என்றார் மரகதம் பாட்டியை பார்த்தபடி.

 

அபிமன்யு எதுவும் கூறாமல் யாழினியிடம், கிளம்பலாமா என்றான் உணர்ச்சிகள் அற்ற குரலில். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று இவர்களால் கணிக்க முடியவில்லை.

 

யாழினி அபிமன்யுவிடம் தங்கள் நிலையை பற்றி விளக்கும் பொருட்டு எதுவுமே கூறவில்லை. சரி என்று அவனுடன் கிளம்பி விட்டாள்.

 

வேலுச்சாமி தாத்தா வருத்தமாக, என்ன மரகதம், நாம இவ்வளவு தூரம் சொல்லியும் இந்த தம்பி ஒன்னுமே பேசாம போயிடுச்சு.

 

நாம சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம். இதுக்கு மேல நம்மால என்ன பண்ண முடியும். சீக்கிரமா அவர் எல்லா உண்மையும் புரிஞ்சுக்கணும்னு நாங்களும் வேண்டுதல் வச்சிருக்கோம். கண்டிப்பா நம்ம வேண்டுதல் பலிக்கும். பொறுத்திருப்போம்.

 

பிறகு, இருவரும் பெருமூச்சு விட்டபடி வீட்டை நோக்கி சென்றனர். அபிமன்யு வீடு வந்து அடையும் வரையிலும் எந்த ஒரு வார்த்தையுமே யாழினியிடம் பேசவில்லை. அமைதியாக எதையோ சிந்தித்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.

 

×××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××

 

பதினொரு நாட்கள் கோவில் செல்லும் வேண்டுதல் இன்றுடன் நல்ல முறையில் முடிவுற்றது. ஒரு புறம், யாழினிக்கு வேண்டுதல் நல்லபடியாக நிறைவேறியதில் மகிழ்ச்சி இருந்தாலும்.

 

மற்றொரு புறம், தங்கள் குடும்பத்தினரை பிரிய வேண்டுமே என்ற வருத்தமும் பெரிதாக தாக்கியது. அவளுக்கு மட்டுமல்ல, அவளின் குடும்பத்தினர் அனைவருக்குமே வருத்தமாக தான் இருந்தது. திரும்ப அவளை பார்க்க எத்தனை மாதங்கள் ஆகுமோ...!

 

அபிமன்யு, நாளைக்கு மார்னிங் கிளம்பிடலாம் யாழினி. ஆபீஸில் நிறைய ஒர்க் இருக்கு என்றான் லேப்டாப்பை பார்த்தபடி.

 

யாழினி சரி என்று தன் உடைமைகளை எல்லாம் எடுத்து வைக்க தொடங்கினாள்.

 

வெண்ணிலா, என்ன யாழினி, எப்போ கிளம்புறதா சொல்லி இருக்காங்க?.

 

யாழினி சோகமான முகத்துடன், நாளைக்கு காலையிலேயே கிளம்ப போறோம்க்கா.

 

ஏன் டி காலையிலேயே கிளம்புறீங்க.

 

அவங்களுக்கு ஆபீஸில் நிறைய வேலை இருக்காம். அதான் காலையிலேயே கிளம்பிடலாம்னு சொன்னார்.

 

இவர்கள் பேசுவதை கேட்டபடி இவர்களின் அருகில் வந்த கயல்விழி, ஏன் யாழினி இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல.

 

இல்லக்கா. அவருக்கு வேலை இருக்கு, எனக்கும் காலேஜ் இருக்கு. செமஸ்டர் எக்ஸாம் நடக்க போகுது.

 

ஓ.. அப்போ, எக்ஸாம் முடிந்ததும் லீவ் வருமே. லீவுக்கு வரியா.

 

கயல்விழியின் வார்த்தையில் மெலிதாக புன்னகைத்த யாழினி, பார்க்கலாம் கா. முடிஞ்சா வரேன் என்றாள் இன்முகமாக.

 

வெண்ணிலா, சரி, ஊருக்கு போனாலும் அப்பப்போ போன் பண்ணி பேசு.

 

சரி கா.

 

பிறகு, சகோதரிகள் மூவரும் அங்கேயே பேச அமர்ந்து விட்டனர். பேச்சு நள்ளிரவையும் தாண்டி சென்று கொண்டிருக்க.

 

தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து வந்த மரகதம் பாட்டி இவர்களை பார்த்து, என்ன டி இது, இன்னும் தூங்காம மூணு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க.

 

வெண்ணிலா, ஆமா பாட்டி. நாளைக்கு யாழினி ஊருக்கு போறால. அதான் சும்மா பேசிகிட்டு இருந்தோம்.

 

ம்ம்.. இத்தன நாள் பேசாம இன்னைக்கு ஒரு ராத்திரியிலேயே மொத்த கதையையும் பேசி முடிச்சிடுவீங்களா. போய் படுங்க டி. காலையில சீக்கிரம் ஊருக்கு போக எழுந்திரிக்கணும்ல என்று யாழினியை பார்த்து கூறினார்.

 

பிறகு, மூவரும் கலைந்து சென்றனர். என்ன தான் ஒரே குடும்பத்தில் பிறந்து ஒன்றாக வளர்ந்து இருந்தாலும், திருமணம் ஆன பின் அவரவருக்கு என தனி, தனி குடும்பம் ஆகிவிடுகிறது.

 

யாழினி வீட்டில் தங்கியிருந்த இந்த 11 நாட்களில் அபிமன்யுவின் மனதிற்குள் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்குமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5