அவனதிகாரம் - 88

 

 

அதிகாரம் – 88

 

சிறுவயதில் தன் உடன் பிறந்த சகோதரியிடம் எவ்வளவோ சண்டையிட்டு இருப்போம். விளையாட்டு சாமான் முதல் உடுத்தும் உடை வரை அனைத்திற்கும் போட்டி தான்.

 

உண்ணும் உணவில் கூட சரி பாதி பங்கு வேண்டும் என்று எத்தனையோ முறை அடித்துக்கொண்டு இருப்போம். ஆனால், திருமணம் நடந்து விட்டால் எங்கிருந்து தான் இவர்களுக்கு பொறுப்பு வருமோ தெரியாது.

 

தன் உடன் பிறந்தவர்களை பார்க்கும் பொழுது அவ்வளவு பொறுமையாக, பாசமாக நடந்து கொள்வார்கள். தன்னிடம் இருக்கும் எதை அவர்கள் விரும்பி கேட்டாலும், உடனே கொடுத்து விடுவார்கள்.

 

எதுவுமே அருகில் இருக்கும் வரை அதன் அருமை தெரியாது. சற்று விலகி இருந்து பார்க்கும் பொழுது தான் அதன் உண்மையான அருமை நமக்கு புரியும்.

 

மறுநாள் விடியல் அழகாய் விடிந்தது. லட்சுமி சமையலறையில் பரபரப்பாக காலை உணவை தயார் செய்துக் கொண்டிருந்தார். அனைத்துமே யாழினிக்கு பிடித்ததாக பார்த்து பார்த்து தயார் செய்துக் கொண்டிருந்தார்.

 

அவரின் சமையல் மணமே யாழினியை எழுப்பியது. அதை அனுபவித்தபடி எழுந்தவள், காலை கடன்களை எல்லாம் முடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

 

தன் தாயின் சமையல் வாசத்தை பிடித்தபடி இறங்கி வந்தவளுக்கு, மனதின் ஒரு புறம் வருத்தமாக இருந்தது. மீண்டும் இதையெல்லாம் அனுபவிக்க எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற வருத்தம் தான் அது.

 

இருப்பினும், திருமணம் ஆன பிறகு அனைவரின் வாழ்க்கையும் இப்படித் தானே இருக்கும் என்று தன் மனதை தேற்றிக்கொண்டபடி சமையலறைக்குள் நுழைந்தவள்.

 

அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வீடே உங்க சமையல் வாசனையில் மணக்குது என்று கேட்டபடி சமையலறையின் ஸ்லாப் மேல் ஏறி உட்கார்ந்தாள்.

 

அவளின் கையில் ஒரு குவளையில் பாயாசத்தை ஊற்றி கொடுத்தவர்.

 

எப்படி இருக்குனு சாப்பிட்டு பார்த்து சொல்லு.

 

உங்க சமையலை குறை சொல்ல முடியுமா. எனக்கு ரொம்ப பிடிச்ச பாயாசம் ஆச்சே என்றபடி அதனை ரசித்து ருசித்துக் குடித்தாள்.

 

பிறகு வெண்ணிலாவும், கயல்விழியும் சமையலறையில் நுழையும் பொழுதே இந்த காட்சியை பார்க்க.

 

வெண்ணிலா, என்னம்மா உங்க சின்ன பொண்ணுக்கு மட்டும் தான் பாயாசமா... எங்களுக்கெல்லாம் கிடையாதா என்றாள் கிண்டலாக.

 

எல்லாருக்கும் சேர்த்து தான் டி செஞ்சிருக்கேன் என்றபடி அவர்களுக்கும் கொடுத்தார்.

 

பிறகு, அனைவரும் தயாராகி வர குடும்பமாக சேர்ந்து அமர்ந்து காலை உணவை உண்டு முடித்தனர்.

 

யாழினியின் குடும்பம் ஊருக்கு புறப்பட்டது. அனைவரிடமும் கனத்த மனதுடன் யாழினி விடை கொடுத்தபடி காரில் ஏற செல்ல.

 

அபிமன்யு வேலுச்சாமி தாத்தாவை பார்த்து, உங்ககிட்ட ஒரு நிமிஷம் பேசணும் என்று விட்டு அறைக்குள் சென்றான்.

 

வேலுச்சாமி தாத்தா பார்வையால் அனைவரையும் பார்த்தபடி அபிமன்யுவை பின் தொடர்ந்து செல்ல. சற்று நேரத்திற்குள் அபிமன்யுவும், வேலுச்சாமியும் வெளியே வந்தனர்.

 

குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அனைவரும் அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்று பார்க்க. இருவரின் முகத்தை வைத்தும் எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

 

யாழினி அபிமன்யுவிடம் கிசுகிசுப்பாக, என்ன ஆச்சு என்றாள். ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று அவளுக்குள் ஒரு சிறு பதட்டம்.

 

அபிமன்யு யாழினியை பார்த்து தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டியபடி, நத்திங்... சும்மா ஒரு பாய் சொல்லலாம்னு போனேன்.

 

அதற்கு மேல் யாழினி எதுவும் தோண்டித் துருவி கேட்கவில்லை, அப்படியே விட்டு விட்டாள்.

 

வள்ளியம்மை பாட்டி, மரகதம் பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு, வரேன் கா. அப்பப்போ ஊருக்கு வாங்க. உங்க பேத்தியை பார்க்கணும்ல.

 

கண்டிப்பா வருவோம். நீங்க பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. அடிக்கடி போன் பண்ணு.

 

ஆரியன், பாட்டி இன்னும் எவ்வளவு நேரம் இரண்டு பேரும் கையை பிடிச்சுகிட்டு இப்படியே நின்னுகிட்டு இருக்க போறிங்க. இப்போ நீங்க வரலைனா, உங்கள இங்கேயே விட்டுட்டு நாங்க மட்டும் தனியா ஊருக்கு போயிடுவோம்.

 

என்னை இங்கேயே நீ விட்டுட்டு போனா, உங்க தாத்தா உன்ன வீட்டுக்குள்ளேயே விட மாட்டார் என்று ஆரியனுக்கு பதில் கொடுத்தவர்.

 

தன் அக்காவிடம், சரி கா. வரேன் என்று விட்டு காரில் ஏறினார்.

 

அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு கிளம்பினர். பிறகு, கார் அபிமன்யுவின் கையில் சீறிப் பாய்ந்தது.

 

வீட்டை அடைந்ததும் அனைவரும் கலைப்பாக அமர்ந்து விட. அபிமன்யு தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.

 

இவர்கள் அனைவருக்கும் தண்ணீர் அருந்த கொடுத்தபடியே மீரா, என்ன எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணீங்களா?.

 

ஆரணி, எஸ் மாம். ஜாலியா இருந்துச்சு. ஸ்வேதா கூட வந்திருந்தா. எல்லாரும் அங்க கோவிலுக்கு போனோம். அப்புறம், ஆத்தங்கரைக்கு போனோம் என்று அங்கு செய்த ஒவ்வொரு விஷயத்தையும் பட்டியலிட்டு கூறிக் கொண்டிருந்தாள்.

 

யாழினி, நீங்களும் வந்திருக்கலாம் அத்த. ஜாலியா இருந்துச்சு.

 

நானும் வந்துட்டா.. மாமாவையும், அப்பாவையும் யாரு பார்த்துக்கிறது. மாமா ஃபாரின்க்கு போயிருந்தா, நானும் வந்திருப்பேன். அவங்க வேற ஊருக்குள்ள இருக்காங்கல்ல.

 

ஆரியன், இந்த வயசுலயும் எங்க அம்மாவுக்கு எங்க அப்பா மேல எவ்வளவு லவ்வுனு பார்த்தியா யாழினி. அவர் ஊருக்குள்ள இல்லைனா தான் வருவாங்க. அவர் ஊருக்குள்ள இருந்தாருனா அவரை விட்டு பிரியவே மாட்டாங்க என்று கூற.

 

யாழினி, எனக்கும் தெரியும். நானும் நோட் பண்ணி இருக்கேன்.

 

ஆனா, இப்போ அவங்களுக்கு போட்டியா நீயும், எங்க அண்ணனும் வந்துடுவிங்க போலருக்கு என்று யாழினியையும் சேர்த்து கிண்டல் செய்தான்.

 

வள்ளியம்மை பாட்டி, வீட்ல சும்மா உட்கார்ந்து இருந்தா இப்படித் தான் யார் யார் என்னென்ன பண்றாங்கனு பார்க்க தோணும். உங்க அண்ணன் ஆபீஸ் கிளம்பி போயிட்டான்ல, நீயும் அவன் கூட கிளம்பி போக வேண்டியது தான. வீட்ல உட்கார்ந்துக்கிட்டு என்னடா கதை பேசிகிட்டு இருக்க.

 

ஆரியன், பாட்டி இப்போ தான ஊர்ல இருந்து வந்தோம். டயர்டா இருக்காதா... நாளைக்கு போய்க்கலாம்.

 

உங்க அண்ணனும் இப்போ தான வந்தான். அவன் போகல.

 

அது தான் பாட்டி நானும் யோசிக்கிறேன். அண்ணனுக்கு எவ்வளவு பவர் இருக்குனு பார்த்தீங்களா. டயர்ட் ஆகவே மாட்டேங்குறார்.

 

மீரா, கண்ணு வைக்காத டா.. பாவம், அவனுக்கு ஏதோ இம்போர்டண்ட் வொர்க்னு ரெஸ்ட் கூட எடுக்காம போய் இருக்கான்.

 

ஆரணி, மாம், ஷைலஜாவோட கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது?.

 

மீரா கவலையான குரலில், எங்க போகுது... உங்க அத்தை எந்த வேலையுமே பார்க்க மாட்டேங்குறாங்க. ஷைலஜாவும் கல்யாண பொண்ணு, அவ எப்படி எல்லாத்தையும் பார்க்க முடியும். அதனால உங்க அப்பா தான் பார்த்துக்கிட்டு இருக்கார். இப்போ தான் பத்திரிக்கை அடிக்க கொடுத்து இருக்காங்க. நீங்க எல்லாம் வந்ததுக்கு அப்புறமா கல்யாணத்துக்கு ஷாப்பிங் பண்ணிக்கலாம்னு ஷைலஜா சொல்லிட்டா.

 

ஆரணி, அப்போ இனிமே ஜாலி தான். கல்யாண வேலையில் நம்ம வீடு கலை கட்ட போகுது.

 

விசாலாட்சி, என் பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்குறதுக்கு குடும்பமே சேர்ந்து சந்தோஷப்படுறீங்களா... இதே மாதிரி உன் பொண்ணுடைய வாழ்க்கையும் நீ ஆசைப்பட்ட மாதிரி அமையாம உங்க கண்ணு முன்னாடியே நாசமா போகப் போகுது பாருங்க என்று மனதிற்குள்ளாகவே சாபம் விட்டார்.

 

இரண்டு நாட்களில் யாழினிக்கும், ஆரணிக்கும் பரிட்சைகள் தொடங்க இருப்பதால், யாழினியின் நண்பர்கள் அவளுடன் படிப்பதற்காக இன்று அவளின் வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தனர்.

 

அத்த என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் இன்னைக்கு என் கூட குரூப் ஸ்டடிக்கு நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க.

 

அதுக்கு என்ன மா தாராளமா வரட்டும்.

 

ஆரணி ஹாலில் அமர்ந்து இருந்தவள் யாழினியின் பேச்சை கேட்டு, என்னது அவங்களா... மாம், அவங்க எல்லாம் சரியான வானரப்படைங்க... இவளுக்கு மேல இருப்பாங்க மாம். வீட்டையே ரெண்டா ஆக்கிட்டு போயிடுவாங்க.

 

பாருங்க அத்தை, என்னுடைய பிரண்ட்ஸை எப்படி சொல்றானு என்று ஆரணியை முறைத்தபடி மீராவிடம் குற்றம் சாட்டினாள்.

 

ஆரணி அவளுடைய பிரண்ட்ஸ் படிக்கிறதுக்காக நம்ம வீட்டுக்கு வராங்க. இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஏன், நீ ஸ்கூல் படிக்கும் போது உன்னுடைய பிரெண்ட்ஸை எத்தன தடவ கூப்பிட்டு வந்திருக்க.

 

மாம், என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் அமைதியா இருப்பாங்க. ஆனா, இவளுடைய பிரண்ட்ஸ் எல்லாம் அப்படி கிடையாது. எல்லாருக்குமே வாய் ரொம்ப அதிகம்.

 

அவங்க என்ன இங்க ஸ்டே பண்ணவா வராங்க. படிச்சிட்டு போயிட போறாங்க என்று ஆரணிக்கு பதில் கூறியவர்.

 

யாழினியிடம், எப்போ வராங்க மா என்று விசாரித்தார்.

 

இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க அத்த.

 

யாழினி மறந்துட்டியா, இன்னைக்கு சண்டே. அண்ணா கூட ஆபீஸ் கிளம்புன மாதிரி தெரியலையே. இன்னைக்கு போய் உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் வர வச்சிருக்கியே. ஒருவேளை அண்ணா வீட்ல இருந்தா, எதுவும் சொல்ல மாட்டாரா.

 

நான் உங்க அண்ணன் கிட்ட நேத்து நைட்டே சொல்லிட்டேன். அவங்க ஓகேனு பர்மிஷன் கொடுத்ததுக்கு அப்புறம் தான் என்னுடைய பிரண்ட்ஸையே இங்க வர சொன்னேன்.

 

அப்பொழுது தான் தூங்கி எழுந்து சோம்பல் முறித்தபடி வந்த ஆரியன், அதான் என்னுடைய அண்ணனையே உன் கைக்குள்ள கொண்டு வந்துட்டியே. இனிமே எல்லாம் உன்னோட ராஜ்ஜியம் தான் என்று கூறியபடி சோபாவில் வந்து அமர்ந்தவன். அம்மா எனக்கு ஒரு காபி என்று மீராவிடம் ஆர்டர் செய்தான்.

 

யாழினி, 10 மணி வரைக்கும் தூங்கி எழுந்திருச்சு வந்து காபி வேற கேக்குறியா. எல்லாரும் பிரேக்ஃ பாஸ்டே சாப்பிட்டு முடிச்சாச்சு. இப்போ தான் உனக்கு விடிஞ்சதா.

 

ஹலோ மேடம், எங்க அண்ணா உனக்கு மரியாதை கொடுக்க சொன்னாலும் சொன்னார். உனக்கு ரொம்ப வாய் அதிகமாயிடுச்சு. என்கிட்டயே கேள்வி கேட்குறியா.

 

ஆமா, உன்னுடைய அண்ணி கேட்குற கேள்விக்கு எல்லாம் நீ கரெக்டா பதில் சொல்லணும். இல்ல, நான் உங்க அண்ணன்கிட்டயே கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.

 

அம்மா... பாருங்கம்மா, இவ ரொம்ப ஓவரா பண்றா.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே யாழினியின் நண்பர்கள் படை வந்து சேர்ந்தது.

 

வாசலிலேயே, ஹாய் யாழினி... என்று கத்தியபடி வர்ஷினி, ரவி, அசோக், அஸ்வின் நால்வரும் உள்ளே நுழைந்தனர்.

 

ஆரணி முணுமுணுப்பாக, பார்த்தீங்களா, நான் அப்போவே சொன்னேன்ல. பாருங்க, ஃப்ரெண்ட் வீட்டுக்கு வரர்துக்கு யாராவது இப்படி கத்திக்கிட்டு வருவாங்களா... இனிமே என்ன நடக்கப்போகுதுன்னு பாருங்க.

 

மீரா, வாங்க என்று அனைவரையும் இன்முகமாக வரவேற்றார்.

 

வர்ஷினி, ஹாய் ஆண்ட்டி, நாங்க எல்லாரும் யாழினியோட பிரண்ட்ஸ். இன்னைக்கு நாங்க குரூப் ஸ்டடிஸ்காக வந்திருக்கோம்.

 

யாழினி முன்னாடியே சொல்லிட்டா மா. வாங்க, எல்லாரும் வந்து உட்காருங்க.

 

ஆரியன் வர்ஷினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அதை பார்த்த ஆரணி ஆரியனிடம், என்னடா அந்த பொண்ண அப்படி பார்க்குற.

 

தன்னை ஆரணி கண்டு கொண்டதை உணர்ந்த ஆரியன் ஈஈஈ... என்று பல்லை காட்டி சமாளித்தான்.

 

ஆரணி, அந்த பொண்ணுக்கு மொத்தம் ஆறு அண்ணனுங்க. யாரோ இந்த பொண்ண சைட் அடிச்சாங்கனு சொல்லி வெட்டிட்டு ஒரு அண்ணன் இப்போ ஜெயில்ல இருக்காராம்.

 

ஆரியன் அதிர்ச்சியாக, நிஜமாவா சொல்ற. சைட் அடிச்சதுக்கு போயா வெட்டினார் என்றான் சந்தேகமாக.

 

பின்ன, தங்கச்சிய சைட் அடிச்சா பார்த்துகிட்டு சும்மா இருப்பாங்களா. என்னை யாராவது வம்பு பண்ணா நீயும், அண்ணனும் பார்த்துகிட்டு சும்மாவா இருப்பீங்க.

 

அழகான பொண்ணுங்கள பார்த்தா தான் ஆரணி சைட் அடிப்பாங்க. உன்ன போய் யாராவது சைட் அடிப்பாங்களா.

 

உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னேன் பாரு, என்னை சொல்லணும். போ... யார்கிட்டயாவது வெட்டு வாங்கிட்டு வந்தா தான் நீ எல்லாம் திருந்துவ என்று விட்டு கோபமாக தன் அறைக்கு சென்று விட்டாள்.

 

ஆரியனுக்கு வர்ஷினியை பார்த்ததுமே பிடித்து விட்டது.

 

என்ன யாழினி உன் பிரண்ட்ஸ்க்கு எங்கள எல்லாம் இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்க மாட்டியா.

 

ஓ... பண்ணலாமே. இதான் என்னுடைய அத்தை என்று மீராவை கை காட்டினாள். இது பாட்டி, அப்புறம் ஆரணி தான் உங்களுக்கு தெரியும்ல. அவ தான் அத்தை பொண்ணு. இது ஆரியன், அத்தையுடைய இரண்டாவது பையன்.

 

வர்ஷினி, எங்க பஸ்ட் பையனை காணும்.

 

அவர் ரூமில் இருப்பார் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, மகேந்திரன் எங்கோ வெளியே சென்று விட்டு வீட்டினுள் நுழைந்தார்.

 

இது தான் என்னுடைய மாமா என்று மகேந்திரனை அறிமுகப்படுத்தினாள்.

 

என்ன மா யாழினி, இவங்க உன்னோட பிரண்ட்ஸா.

 

ஆமா மாமா. படிக்கிறதுக்காக வந்திருக்காங்க.

 

ஓகே ஓகே. நல்லா படிங்க என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டார்.

 

ரவி, சரி வா, நாம படிக்க ஸ்டார்ட் பண்ணலாம்.

 

யாழினி இவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கார்டன் ஏரியாவிற்கு சென்றாள்.

 

வர்ஷினி, வாவ்..! இந்த இடம் ரொம்ப சூப்பரா இருக்கு யாழினி. நல்லா மெயின்டைன் பண்றீங்க.

 

இது எல்லாத்துக்குமே அத்தையும், பாட்டியும் தான் காரணம். அவங்க தான் கரெக்டா மெயின்டைன் பண்றாங்க. இங்க கொஞ்சம் அமைதியா இருக்கும் யாரும் வர மாட்டாங்க. நம்ம இங்க படிக்கலாமா.

 

சரி என்று அனைவரும் அங்கேயே அமர்ந்து படிக்க தொடங்கினர். பச்சை பசேல் என்ற புல்வெளியும், வண்ண வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களுக்கு மத்தியில் அமர்ந்து படிக்க வர்ஷினிக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

இந்த சூழலே அமைதியாக, ஏதோ இதமாக இருந்தது. படிக்கலாம் என்று வந்த அனைவருக்குமே இப்பொழுது படிக்கும் சிந்தனையே இல்லை.

 

வர்ஷினி அந்த சூழலை அனுபவித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அஸ்வினுக்கு இந்த சூழலில் யாழினியைப் பார்க்க தேவதை போல் தெரிந்தது.

 

சுற்றிலும் அழகிய வண்ண மலர்கள் அதற்கு நடுவே வீற்றிருக்கும் தேவதை என யாழினியை மனதிற்குள் வர்ணித்தபடி அமர்ந்திருந்தான்.

 

யாழினி அதை கவனிக்காமல் என்ன படிக்கலாம் என்று புத்தகத்தை புரட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இவர்கள் யாரின் பார்வையையும் கவராதபடி ஆரியன் அவனது அறையின் பால்கனியிலிருந்து வர்ஷினையை நோட்டம் விட்டபடி நின்று இருந்தான்.

 

அஸ்வினின் எண்ணம் யாழினிக்கு தெரிய வருமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5