அவனதிகாரம் - 94
அதிகாரம் – 94
யாழினி,
அபிமன்யுவை திட்டியவாறு தன் செல்போனை பார்த்துக்கொண்டு நின்றிருக்க. அவளின் கண்களை
இரு கைகள் மூடியது. அவனின் ஸ்பரிசத்திலேயே யார் என்று கண்டு கொண்ட யாழினி
பட்டென்று அவன் கைகளில் அடித்தாள்.
அபிமன்யு,
“ஸ்ஸ்... ஆஆ.... ராட்சசி...! இப்போ
எதுக்குடி கையில அடிச்ச?”.
சட்டென்று
சுதாரித்த யாழினி, இன்று தனக்கு பிறந்தநாள் என்று அவனுக்கு தெரிகிறதா என்று
பார்ப்பதற்காக, “ஒன்னும் இல்ல... சும்மா தான்....
விளையாட்டுக்காக அப்படி பண்ணேன்” என்று கூறி சமாளித்தாள்.
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்...?”.
அபிமன்யுவின்
கேள்வியில் யாழினிக்கு ‘புஸ்’ என்று ஆகிவிட்டது. ‘அப்படி என்றால் இன்று தனக்கு பிறந்த நாள் என்று இவனுக்கு
தெரியாதா?’ என்று சிந்தித்தபடி நின்றிருக்க.
அபிமன்யு
தன் கபோர்டை திறந்து அதில் எதையோ தேடியபடி, “என்ன, நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம அப்படி என்ன மேடம்
யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்... உங்க வீட்லருந்து எல்லாம்
வந்திருக்காங்க... நீ தான் வர சொன்னியா?”.
அபிமன்யுவின்
பேச்சில் யாழினிக்கு பெரும் கோபம் எழுந்தது. ‘அப்படி என்றால் இன்று தன் பிறந்தநாள் என்று இவனுக்கு
தெரியவில்லை. மனைவியின் பிறந்த நாளைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. இதில்,
இவர் என்னைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்...’ என்று மனதிற்குள்ளேயே அபிமன்யுவை வறுத்தெடுத்துக்
கொண்டிருந்தாள்.
அபிமன்யு
தேடியது அவன் கைக்கு கிடைக்க கப்போர்டை மூடிவிட்டு திரும்பினான்.
அங்கே
சீரியசான முகத்தோடு எதையோ சிந்தித்துக் கொண்டு நின்றிருக்கும் யாழினியின் தலையில்
தட்டியவன், “என்ன, கேட்டதுக்கு பதில் சொல்லாம
எங்கேயோ வேடிக்கை பார்த்துகிட்டு நிக்குற. என்ன ஆச்சு உனக்கு இன்னைக்கு...”.
யாழினி
கோபமாக, “ஒன்னும் இல்ல, நான் வெளியில
போறேன்” என்று வெளியே செல்ல முயன்றவளை
அபிமன்யு செல்ல விடாமல் வழியை மறைத்தபடி நிற்க.
“என்ன வேணும் உங்களுக்கு..
நகருங்க, நான் கீழ போகணும்” என்றாள் மீண்டும் கோபமாக.
“என்ன அவசரம் பொறுமையா போகலாமே..
உனக்காக நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்”.
அபிமன்யு
சர்ப்ரைஸ் என்றதுமே, யாழினிக்கு முகம் பிரகாசமாக. தன் பிறந்த நாளுக்காக தான் இவன்
ஏதோ சர்ப்ரைஸ் செய்யப் போகிறான் என்ற எதிர்பார்ப்போடு, “நிஜமாவா சொல்றீங்க! என்ன சர்ப்ரைஸ்?. அப்போ உங்களுக்கு
தெரியுமா?”.
“ஓ.... தெரியுமே...” என்றான் தன் தோள்களை குலுக்கியபடி.
“அப்புறம் ஏன் இவ்வளவு நேரம்
தெரியாத மாதிரியே நடந்துகிட்டு இருந்தீங்க. நான் கூட உங்களுக்கு தெரியாதுனு
நினைச்சு, உங்க மேல ரொம்ப கோபப்பட்டுட்டேன்”.
“எனக்கு அன்னைக்கே தெரியும். நீ
என்கிட்ட இருந்து மறைக்கும் பொழுதே நான் பார்த்துட்டேன்”.
அபிமன்யு
கூறியதை கேட்டவளிற்கு ஒன்றும் புரியவில்லை. இவன் எதைப் பற்றி கூறுகிறான். நான்
என்ன மறைத்தேன் என்று அபிமன்யுவைப் புரியாத பார்வைப் பார்க்க.
“என்ன இப்படி முழிக்கிற. நான்
எதைப் பத்தி சொல்றேன்னு உனக்கு தெரியலையா? இதைப் பத்தி தான்” என்று தன் கையில் ஒரு அட்டையை தூக்கிக்
காட்டினான்.
அதைப்
பார்த்த யாழினிக்கு தூக்கி வாரி போட்டது. ‘எப்படி இவர்கிட்ட போச்சுனு தெரியலயே... இத்தனை நாள் மறைச்சு
தானே வச்சிருந்தேன்’ என்று பதட்டமாக, இதயம் வேகமாக
துடிக்க தொடங்கியது.
“என்ன ஷாக்கிங்கா இருக்கா.. இது
என்கிட்ட எப்படி வந்துச்சுனு தெரியலையா?”.
“அது.... வந்து.... நான் சும்மா...” என்று அவள் இழுக்க.
“அன்னைக்கு நான் ரூமுக்குள்ள வரும்
போது நீ என்கிட்ட இருந்து எதையோ மறைச்சியே, எனக்கு அப்போவே என்னமோ நீ எனக்கு
தெரியாம திருட்டு வேலை செய்றேன்னு தோணுச்சு. அது என்னனு கண்டுபிடிக்கணும்னு தான்
அதை அன்னைக்கு நீ எங்க வச்சனு உனக்கே தெரியாம உன்னை ஃபாலோ பண்ணி தெரிஞ்சுகிட்டேன்.
ஆனா, எனக்கு தெரியும்னு உனக்கு தெரியாத மாதிரி நடந்துகிட்டேன். அப்புறம் நீ ரூம்ல
இல்லாத நேரமா பார்த்து நீ வச்ச இடத்திலேயே போய் நான் இதை எடுத்துட்டேன். அவ்வளவு
தான்” என்றான் கூலாக.
யாழினிக்கு
இப்பொழுது எப்படி செயலாற்றுவது என்றே தெரியவில்லை. ஒரு புறம், நாணமும், கூச்சமும்
போட்டி போட. ஏன் என்றே தெரியாமல், இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
‘ஐயோ..! யாருக்கும் தெரியாமல்
வச்சிருக்கோம்னு இவ்வளவு நாளா நினைச்சுக்கிட்டு இருந்தோம். இனிமே, எப்படி இவரை
ஃபேஸ் பண்றது’ என்று எண்ணியவள்.
அபிமன்யுவைப்
பார்க்காமல் கீழே குனிந்த படி, “சரி, எனக்கு வேலை இருக்கு. நான்
கீழ போறேன்” என்று மெதுவான குரலில்
கூறிவிட்டு வெளியேற முற்பட.
அவளின்
கையைப் பிடித்து தடுத்தவன், “பதில் சொல்லாம போனா எப்படி?”.
யாழினிக்கு
அங்கு நிற்கவே முடியவில்லை. பெரும் அவஸ்தையாக இருந்தது. அதுவும் அபிமன்யுவின்
பார்வை வேறு அவளைத் துளைத்து எடுத்தது.
எப்படியாவது
அங்கிருந்து சென்றால் போதும் என்பது போல் தவித்துக் கொண்டே நின்றிருந்தாள்.
கால்கள் தரையில் நில்லாமல் நடனம் ஆடத் தொடங்கியது. கைகள் அதன் போக்கில்
அபிமன்யுவிடமிருந்து விடுபட முயற்சி செய்துக் கொண்டிருந்தது.
அபிமன்யு
தன் கையில் இருப்பதைக் காட்டி, “இதை எதுக்காக பண்ணனு சொன்னா தான்
போக விடுவேன்” என்றான் தன் பிடியிலேயே
நின்றபடி.
யாழினி,
என்ன கூறுவது அன்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும், ஷைலஜாவின் திருமணக்
பத்திரிகைகள் அடிக்கப்பட்டு வந்திருந்தது.
அதை்ப
பார்த்த யாழினிக்கு தங்களின் திருமணத்திற்கும் இப்படி பத்திரிக்கை அடித்திருந்தால்
எப்படி இருந்திருக்கும் என்ற ஆசை தோன்ற..
ஷைலஜாவின்
திருமண பத்திரிகையில் இருந்து ஒன்றை மட்டும், யார் பார்வையையும் கவறாதவாறு
எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள்.
அதில்
மணமகன் பெயர் இருக்கும் இடத்தில் அபிமன்யுவின் பெயரையும், மணமகள் பெயர் இருக்கும்
இடத்தில் யாழினியின் பெயரையும் எழுதியவள்.
வெகு
நேரமாக கண்ணிமைக்காமல் அதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். எவ்வளவு நேரம்
அப்படியே அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
அந்த
திருமண பத்திரிக்கையைப் பார்க்கும் பொழுது, யாழினிக்கு ஏதோ தங்களின்
திருமணத்திற்காக பத்திரிக்கை அடித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட.. அதையே
கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது
யாரோ அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வரும் அரவம் கேட்கவும். சட்டென்று, தன்
கையில் இருந்த திருமண பத்திரிக்கையை தனக்குப் பின்னே மறைத்தவாறு நிற்க.
வந்தது
வேறு யாரும் அல்ல, அபிமன்யு தான்!
அபிமன்யு,
யாழினி நெளிந்து கொண்டு நிற்பதை பார்த்தவனிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற.
யாழினியையே நோட்டம் விட்டபடி நின்று இருந்தான்.
யாழினி,
“எ... என்ன.... அப்படி பாக்குறீங்க” என்று தட்டுத் தடுமாற.
அபிமன்யுவிற்கு
புரிந்து விட்டது. இவள் எதையோ தன்னிடமிருந்து மறைக்கிறாள் என்று.
அபிமன்யு
அவளைக் கண்களால் ஸ்கேன் செய்தபடி, “ஒன்னும்
இல்ல... சும்மா தான்... என்ன ஒரு மாதிரி நிக்கிற”.
“அத்த கூப்பிட்டாங்க. அதான்
போகலாமேனு....”.
அபிமன்யு
சந்தேகப் பார்வையோடு, “சரி போ” என்று கூறிவிட்டு கபோர்டை திறந்து தன் மாற்று உடையை எடுக்க
சென்றான்.
யாழினி,
“என்ன செய்வது, எப்படி இதை
மறைப்பது” என்று தெரியாமல் பரிதவித்தபடி
அப்படியே நின்று இருக்க.
மீண்டும்
திரும்பி யாழினியைப் பார்த்தவன், “என்ன
கீழே போகலையா?”.
“ஹி...ஹி... போகணும். நீங்க போய்
ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க”.
யாழினியின்
நடவடிக்கை அபிமன்யுவிற்கு சந்தேகத்தைத் தூண்ட. அவளையே கண்காணித்தபடி தன் உடைமைகளை
எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அபிமன்யு
குளியலறைக்குள் சென்று விட்டான் என்று எண்ணிய யாழினி, “ஐயோ! இதை இப்போ எங்க வைக்கிறதுனு தெரியலையே... நல்ல வேளை,
அவர் கவனிக்கல.. பார்த்திருந்தா என்ன பண்றது. ஒரு நிமிஷம் மூச்சே நின்ன மாதிரி
ஆயிடுச்சு” என்று படபடப்பாக தனக்குத்தானே
பேசிக்கொண்டு இருந்தாள்.
‘இப்போ, இதை எங்க வைக்கிறது. அவர்
கண்ணில் படாமல் மறைக்கணுமே’ என்று ஒவ்வொரு இடமாக வைத்து
பார்த்தவள். கடைசியாக கபோர்ட்டில் தன் உடைகளுக்கு அடியே வைத்தாள்.
‘இங்க தான் அவர் பாக்க மாட்டார்.
வேற எங்க வச்சாலும் நாம தான் மாட்டுவோம். நம்மளோட டிரஸில் எடுக்க அவருக்கு என்ன
இருக்கு. இங்க வச்சா தான் சேஃபா இருக்கும்’ என்று ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு திரும்ப.
அபிமன்யு
குளியலறையில் இருந்து வெளியேறியவன் சரியாக யாழினி மறைத்து வைப்பதைப் பார்த்து
விட்டான்.
அபிமன்யுவை
பார்த்த யாழினி, “அத்த கூப்பிடுற மாதிரி இருக்கு.
நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடறேன்”
என்று விட்டு தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டாள்.
யாழினி
சென்ற பிறகு, அவள் வைத்த இடத்தில் இருந்து அதை எடுத்து பார்த்தவனுக்கு ஒரு நிமிடம்
மகிழ்வதாக, வருந்துவதா என்று தெரியவில்லை.
ஒரு
புறம், இவர்கள் இருவரின் பெயரையும் மணமகன், மணமகள் இடத்தில் யாழினியின்
கையெழுத்தால் எழுதப்பட்டிருப்பதை பார்க்கும் பொழுது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
மறுபுறம்,
வருத்தமாகவும் இருந்தது. யாழினியை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்று
எண்ணியவன். தங்களின் திருமணத்தில் அனைத்து முடிவுகளையும் தானே எடுத்து விட்டான்.
இதில்,
அவளுக்கும் சில விருப்பு, வெறுப்புகள் இருக்கும் என்பதை அறிய தவறிவிட்டான். யாழினி
தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், அபிமன்யுவின் தவறை சுட்டிக்காட்டிக் கொண்டே
இருக்கிறாள், அவளே அறியாமல்...
இது
ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லையே.. அனைவருக்கும் இருக்கும் அடிப்படையான
எதிர்பார்ப்பு தானே... காதல் திருமணமோ அல்லது, வீட்டில் முடிவு செய்த திருமணமோ,
பத்திரிக்கை அடித்து உறவினர்களை அழைத்து திருமணம் நடத்துவது தானே முறை.
அப்படி
தானே அவளுக்கும் ஆசை இருந்திருக்கும். அன்று, தனக்கு திருமணம் நடக்கப் போகிறது
என்பதே தெரியாத யாழினிக்கு தன் திருமணத்திற்கு பத்திரிக்கை அடிப்பார்கள் என்ற
எண்ணம் இருந்தது ஒன்றும் தவறில்லையே.
நடந்ததை
இனி மாற்ற முடியாது. ஆனால், இனி நடக்கப் போகும் ஒவ்வொன்றுமே யாழினியின்
விருப்பப்படி பார்த்து, பார்த்து செய்ய வேண்டும் என்று அபிமன்யு முடிவு செய்தான்.
அபிமன்யு,
“சொல்லு, எதுக்கு இப்படி எழுதுன?”.
யாழினி,
“ஐயோ! மாட்டிக்கிட்டோமே... சும்மா,
ஆசையா இருந்துச்சு எழுதி பார்க்கலாம்னு செஞ்சது. இப்படி எனக்கே ஆப்பு
அடிச்சிடுச்சே. இப்போ, என்னனு காரணம் சொல்றது. இதுக்கெல்லாம் காரணம் கேட்டா என்ன
சொல்றது?” என்று நொந்தபடி நின்று இருக்க.
அபிமன்யு,
யாழினியின் முகத்தருகே குனிந்தவன், “உனக்கு
‘ஓகே’னா சொல்லு பேபி டால், நம்ம வேணும்னா பத்திரிக்கை அடிச்சு
ஊரெல்லாம் கொடுத்து திரும்பவும் மேரேஜ் பண்ணிக்கலாமா?” என்று கேட்க.
யாழினிக்கு
முகமெல்லாம் சிவந்து விட்டது. அபிமன்யுவைப் பார்க்க முடியாமல் வேறு எங்கோ
பார்த்தபடி, “அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. கீழ
எல்லாரும் வந்திருக்காங்க நான் போறேன்”
என்றவள் திரும்பியும் பாராமல் ஓடிவிட்டாள்.
இந்த
கலவரத்தில் யாழினி, அபிமன்யு தன் பிறந்த நாளை மறந்து விட்டான் என்று அவன் மேல்
கோபமாக இருந்ததையே மறந்து விட்டாள். கீழே சென்றாலும், தன்னை சுற்றி அனைவரும்
இருந்தாலும், யாழினியின் மனதிற்குள் அபிமன்யுவின் வார்த்தைகளே ஓடிக்கொண்டிருந்தது.
‘ஒருவேளை அவர் சொன்ன மாதிரி
எங்களுக்கும் இன்விடேஷன் அடிச்சு, எல்லாருக்கும் கொடுத்து மேரேஜ் செஞ்சி இருந்தா
எப்படி இருந்திருக்கும். டிரஸ் எல்லாம் வாங்கி இருப்போம், நகையெல்லாம் வாங்கி
இருப்போம், சொந்தக்காரங்க எல்லாம் என்னை கிண்டல் செஞ்சிருப்பாங்க....’ என்று அனைத்தையும் தன் மனதிற்குள்ளேயே
கற்பனை செய்துக் கொண்டு சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.
ஆரணி, “ஏன் டி இவ்வளவு நேரமா நான் பேசிகிட்டு
இருக்கேன். நீ பாட்டுக்கு சுவத்த பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்க...” என்று யாழினியின் முதுகில் தட்ட.
அதில்
சுதாரித்தவள், தூக்கத்திலிருந்து விழித்தது போல் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, “ஓ... கனவா...?”.
“என்ன, பகல் கனவா... நான் பேசுனது
ஏதாவது உன் காதுல விழுந்துச்சா, இல்லையா?”.
“நீ இவ்வளவு நேரம் என்கிட்டயா
பேசிக்கிட்டு இருந்த... என்ன பேசுன..”.
ஆரணி
யாழினியைக் கோபமாக முறைத்துப் பார்த்தவள், “என்னை பார்த்தா உனக்கு காமெடி பீஸ் மாதிரி தெரியுதா...
எவ்வளவு நேரம் நான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன். என்ன பேசுனனு கேக்குற”.
“ஹி.. ஹி.. சாரி ஆரணி, நீ என்ன
பேசுனனு நான் கவனிக்கல”.
“நீ சரியே இல்ல. கொஞ்ச நேரமாவே ஏதோ
மந்திரிச்சு விட்ட மாதிரியே சுத்திக்கிட்டு இருக்க” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே.
வெண்ணிலாவும்,
கயல்விழியும் இவர்களை நோக்கி வந்தவர்கள், “என்ன ஆரணி, என்ன என் தங்கச்சியை ரொம்ப கிண்டல் பண்ணிக்கிட்டு
இருக்க”.
“வாங்கக்கா. வந்து, உங்க தங்கச்சி
என்ன பண்றானு நீங்களே பாருங்க. நான் உட்கார்ந்து இவ்வளவு நேரமா அவ கூட பேசிகிட்டு
இருக்கேன். ஒன்னு கூட அவ காதுல விழலக்கா. ஏதோ, கனவு கண்டுட்டு உட்காந்து இருக்கா”.
வெண்ணிலா,
“என்ன யாழினி, அப்படி என்ன
ஞாபகத்தில் இருக்க”.
“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா.
சும்மா தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்”.
ஆரணி, “சரி, சரி. அதெல்லாம் விடு. அபி அண்ணா
உனக்கு என்ன கிப்ட் கொடுத்தாங்க”.
யாழினிக்கு
இப்பொழுது தான் அபிமன்யு தன் பிறந்த நாளை மறந்ததே ஞாபகத்திற்கு வந்தது.
யாழினி,
தன் தலையில் கை வைத்தவாறு, “அச்சோ.... அவர்கிட்ட
மாட்டிக்கிட்டதுல இதை மறந்துட்டேனே”
என்று சத்தமாக கூற.
வெண்ணிலா,
“என்ன மாட்டிக்கிட்ட..?”.
யாழினி
சிரித்து சமாளித்தபடி, “ஒன்னும் இல்லக்கா... சும்மா....
சொன்னேன்....”.
கயல்விழி,
“இல்லையே.... உன்னுடைய நடவடிக்கையே
சரியில்லையே... என்ன செஞ்சு மாட்டுன..?”
என்று விடாமல் மூவரும் யாழினியை துருவி துருவி கேள்வி கேட்க.
வேறு
வழி இன்றி யாழினி மொத்தத்தையும் கூறி முடித்தாள்.
யாழினியுடன்
அபிமன்யு ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் எப்படி முடிவுக்கு வரும்....?
கருத்துகள்
கருத்துரையிடுக