அவனதிகாரம் - 96
அதிகாரம் – 96
யாழினியால்
தான் பார்க்கும் காட்சிகளை நம்பவே முடியவில்லை. மிகவும் பிரம்மிப்பாக இருந்தது.
மொட்டை மாடி முழுவதும் அழகாக வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும்
அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் நடுவே அலங்கரிக்கப்பட்ட டேபிளின் மீது அழகிய
கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதை
சுற்றியும் யாழினியின் குடும்பத்தாரும், அபிமன்யுவின் குடும்பத்தாரும், யாழினியின்
நண்பர்களும் நின்று இருந்தனர். அங்கும் அபிமன்யு தென்படவில்லை. யாழினி தன்
கண்களாலேயே அலைபாய்ந்தபடி அபிமன்யுவை தேட.
யாழினிக்கு
பின்னிருந்து அபிமன்யுவின் குரல் கேட்டது, “என்னோட சர்ப்ரைஸ் எப்படி இருக்கு?”.
அபிமன்யுவின்
குரலில் எதிர்பார்ப்போடு திரும்பியவள். அப்பொழுது தான் அபிமன்யுவை வெளிச்சத்தில்
பார்க்கிறாள்.
யாழினியின்
உடைக்கு பொருத்தமாக அவனும் அதே நீல நிறத்தில் சட்டையும், கரு நீல நிறத்தில்
கோட்டும், பேண்டும் அணிந்திருந்தான்.
தன் இரு
கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி அலை அலையான கேசம் காற்றில் ஆட, யாழினியை
அவன் பார்த்த பார்வை யாழினியை முற்றிலுமாக அவன் பால் இழுத்து விட்டது.
தன்னைச்
சுற்றி நடப்பது அனைத்தையுமே மறந்து போனவளாக அபிமன்யுவையே இமைக்க மறந்து
பார்த்திருந்தாள். அபிமன்யு அவளின் முகத்திற்கு முன்பு சொடக்கிட. அதில், தன்னிலை
திரும்பிய யாழினி சுற்றி முற்றிப் பார்த்து அசடு வழிந்தபடி சிரிக்க.
அபிமன்யு
தன் கோட்டை சரி செய்தவாறு, “எப்படி இருக்கு என்னோட ட்ரஸ்?”.
யாழினி
தன் கையின் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து, “சூப்பர்!” என்று தன் இரு கண்களையும் விரித்து கூற. அதில், முற்றிலுமாக
தொலைந்து போனான் அபிமன்யு.
ஆரியன்
சற்று நேரம் பொறுத்து பார்த்தவன், இவர்கள் முடிக்க மாட்டார்கள் என்று, “அண்ணா.. ப்ளீஸ்ண்ணா... போதும். இங்க
பாருங்க, கேக் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு. அப்புறம் உருகி
ஊத்திடும். நாங்களும் எவ்வளவு நேரம் தான் கேக்குக்காக காத்துகிட்டு இருக்குறது.
தயவு செஞ்சு ரெண்டு பேரும் கொஞ்சம் சீக்கிரம் வந்து கேக் கட் பண்றீங்களா” என்று கெஞ்சுவது போல் கேட்க.
அபிமன்யு
தன் தலையை கோதியபடி, “இதுக்கு தான் அவளுடைய கண்ணை
பார்க்கவே கூடாதுனு முடிவு பண்ணி இருந்தேன். சண்டாளி.. சரியான நேரமா பார்த்து
என்னை இப்படி எல்லார் முன்னாடியும் மாட்டி விட்டுட்டா” என்று யாழினியை மனதிற்குள் செல்லமாக திட்டியவாறு, வெளியே தன்
ஒற்றைக் கையை யாழினியை நோக்கி நீட்ட.
அவன்
நீட்டிய கையைப் பற்றிய யாழினி அபிமன்யுவுடன் ஜோடியாக கேக் வைத்திருக்கும் இடத்தை
நோக்கி நடந்தாள்.
ஆரணி, “வாவ் அண்ணா...! எப்போ இதெல்லாம் செலக்ட்
பண்ணீங்க. உங்க ரெண்டு பேருக்கும் மேட்சிங் மேட்சிங் ட்ரஸ்ஸா, சொல்லி இருந்தா
நாங்க எல்லாரும் இதே மாதிரியே மேட்சிங்கா டிரஸ் பண்ணி இருப்போம்ல”.
ஆரியன்,
“நீ அப்படி பண்ணுவனு தான் அண்ணா
உன்கிட்ட சொல்லல. அவங்க ரெண்டு பேரும் மட்டும் தனியா தெரியணும்னு தான் அண்ணனோட
பிளானே.. உன் கிட்ட சொல்லி இருந்தா, நீ அதை கெடுத்து விட்டுடுவனு தான் பிளான்
பண்ணி நம்ம கிட்ட இருந்து மறைச்சு இருக்கார்” என்று ஆரணியை வெறுப்பேற்றினான்.
ஆரணி,
அபிமன்யுவைப் பார்த்து, “அண்ணா, இங்க பாருங்க இவன என்ன
சொல்றான்னு”.
அபிமன்யு
ஆரியனிடம் கோபமாக, “ஆரி, உண்மைய எல்லாம் இப்படி தான்
ஓப்பனா எல்லார் முன்னாடியும் சொல்லுவியா?” என்று கண்டிக்கும் குரலில் கேட்க.
ஆரணி
ஆச்சரியமாக, “அண்ணா, எப்போ இருந்து நீங்க
இப்படி மாறுனீங்க!” என்றாள் தன் இடுப்பில் கையை
வைத்தபடி.
“அதெல்லாம் அண்ணா மாறி ரொம்ப நாள்
ஆச்சு. உனக்கு இப்போ தான் தெரியுதா.. யாழினி, எங்க அண்ணன எப்படி உன் கண்ட்ரோல்ல
கொண்டு வந்தன்ற டிப்ஸ மட்டும் எனக்கு சொல்லு. நானும் சில பேர என்னுடைய கண்ட்ரோல்ல
கொண்டு வரணும்னு ட்ரை பண்றேன். முடிய மாட்டேங்குது” என்றான் வர்ஷினியை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
ஆரணி, “அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது” என்று ஆரியனை கிண்டல் செய்தாள்.
மீரா, “சரி சரி, ரெண்டு பேரும் இப்படி மாத்தி
மாத்தி பேசிக்கிட்டே இருக்க போறீங்களா? கேக் கட் பண்ண வேண்டாமா?”.
ஆரியன்,
“ஆமா... ஆமா.... கேக் கட்
பண்ணனும். எல்லாத்தையும் விட கேக் தான் நமக்கு ரொம்ப முக்கியம்” என்று கூற, அனைவரும் நகைத்தனர்.
ஆரணி
கூறிய பிறகு தான், யாழினி தன் உடையையே உற்றுப் பார்த்தாள். ஆம், அபிமன்யு
அணிந்திருக்கும் அதே நேரத்தில் தான் யாழினிக்கும் அழகிய வேலைப்பாடுகளுடைய லாங்
கவுன் ஆரணி அணிய கொடுத்திருந்தாள்.
‘அப்படி என்றால், இது அனைத்துமே
அபிமன்யுவின் வேலை தானா’ என்று எண்ணியவளிற்கு மனம்
குதூகலமானது. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்காத குறை தான். அது அவளின் முகத்திலேயே
பிரதிபலித்தது.
வழக்கத்தை
விட யாழினியின் முகம் மிகவும் பொலிவாக இருந்தது. வெண்ணிலாவும், ஜீவாவும்
யாழினிக்கும், அபிமன்யுவிற்கும் பிரேஸ்லெட்டை பரிசாக அணிவித்தனர்.
அபிமன்யு,
“இன்னைக்கு பர்த்டே அவளுக்கு
மட்டும் தான், எனக்கு இல்ல. எனக்கு ஏன் கிப்ட் கொடுக்குறீங்க?” என்று தன் கையில் பிரேஸ்லெட்டை
அணிவிக்கும் ஜீவாவைப் பார்த்து கேட்க.
“இதெல்லாம் எங்களுடைய ஆசைக்காக
தான் சார். கல்யாணத்துக்கு செஞ்சிருக்கணும். ஆனா, அப்போ செய்ய முடியாத சூழ்நிலை.
அதனால தான் பர்த்டே பார்ட்டியில செய்யணும்னு என் வைஃப் ஆர்டர் போட்டுட்டாங்க”.
உடனே
கயல்விழி, “அக்கா, எனக்கும் தான் நீ
கல்யாணத்துல ஒண்ணுமே செய்யல” என்று கோபமாக கேட்க.
ஜீவா, “ஒரு நிமிஷம் கயல், உனக்கும் உங்க அக்கா
செய்யணும்னு தான் சொல்லி இருக்கா. ஆனா, யாழினியுடைய பிறந்த நாள்ல உனக்கு செஞ்சா
அது நல்லா இருக்காதுல, உனக்கு நாங்க தனியா செய்வோம்”.
மீண்டும்
கயல்விழி எதுவோ கூற வாய் எடுக்க. மகேஷ் அவளின் கையைப் பிடித்து தடுத்தான். அதில்,
எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டாள். ஆனாலும், தன் கோபத்தை முகத்தை திருப்பிக்
கொண்டு காட்டாமல் இருக்க தவறவில்லை.
லட்சுமி
மரகதத்திடம், “இங்க பாருங்க அத்த, இவளுக்கு எந்த
இடத்தில் என்ன பேசணும்ன்ற விவஸ்தையே இல்ல. யாழினி பிறந்தநாளுக்கு வந்துட்டு எப்படி
பேசுறா பாருங்க”.
மரகதம்,
“இது நமக்கு என்ன புதுசா.. இவளப்
பத்தி தெரிஞ்ச விஷயம் தான லட்சுமி. அதான் ஜீவா மாப்பிள்ளையே பதில் சொல்லிட்டாருல.
நீ விடு”.
பிறகு,
மகேஷ் கயல்விழியிடம், “வா நம்ம போய் கிப்ட் கொடுக்கலாம்”.
“நீங்க வாங்குற சம்பளத்துல நம்ம
என்ன கிப்ட் கொடுக்க முடியும்” என்றாள் குத்தலாக.
“ஏதோ என்னால முடிஞ்ச கிப்டை நான்
வாங்கி இருக்கேன். நான் அதை கொடுக்க போறேன். நீ வரியா, இல்லையா?”.
வேறு
வழியின்றி மகேஷுடன் அவர்கள் அருகே செல்ல. மகேஷ் அவளிடம் ஒரு தங்க மோதிரத்தை
நீட்டினான்.
அதில்,
ஆச்சரியமாக மகேஷைப் பார்த்த கயல்விழி, “எப்போ
வாங்குனீங்க, என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லவே இல்ல”.
“இன்னைக்கு தான் வாங்குனேன். உன்னயும்
கூப்பிட்டு போகலாம்னு பார்த்தேன். நீ ரொம்ப டயர்டா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்த.
அதனால தான் உன்ன கூப்பிடல”.
“எப்படியோ நல்ல வேளை
வாங்குனீங்களே. அக்கா பிரேஸ்லெட் போட்டு நம்ம ஒண்ணுமே செய்யாம இருந்திருந்தா,
ரொம்பவே அசிங்கமா இருந்திருக்கும்”
என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
வெண்ணிலாவும்,
ஜீவாவும் யாழினியின் பிறந்த நாளுக்காக பிரேஸ்லெட் வாங்கி இருப்பதாக ஜீவா மகேஷிடம்
கூற.
அவர்கள்
பரிசு கொடுத்தால் கயல்விழி சும்மா இருக்க மாட்டாளே. இதையே பெரிய விஷயமாக ஏதேனும்
பிரச்சனை செய்து விடுவாள் என்று எண்ணிய மகேஷ், உடனேயே தன்னால் முடிந்த ஒரு பரிசு
பொருளை வாங்கி வந்துவிட்டான்.
கயல்விழி
அதை யாழினியின் கையில் அணிவிக்கும் பொழுது யாழினி, “எதுக்குக்கா இதெல்லாம்?”.
“ஏன் பணக்கார அக்கா கொடுத்தா தான்
வாங்குவியா.. நான் கொடுத்தா வாங்க மாட்டியா”.
அதில்,
யாழினிக்கு ஒரு மாதிரியாகிப் போக.
“என்னக்கா இப்படி எல்லாம் பேசுற.
நீ இதெல்லாம் கொடுக்கலனா கூட நான் உன்ன எதுவும் நினைக்க மாட்டேன். எனக்காக நீ இதை
கொடுத்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று அவள் அணிவித்த மோதிரத்தை
ஏற்றுக் கொண்டாள்.
அபிமன்யு
கயல்விழிக்கு பதில் கொடுக்க வாயைத் திறக்க. யாழினி தன் கண் அசைவிலேயே அபிமன்யுவைப்
பேசாமல் செய்துவிட்டாள். இதையெல்லாம் கவனித்த கயல்விழிக்கு, அவர்களின்
அன்னியோன்யத்தில் பொறாமை தலை தூக்கியது.
பிறகு,
யாழினியின் நண்பர்கள் அவர்களைக் கிண்டல் செய்ய. அனைவருக்கும் ஆரியன் கேக்கை
கொடுத்தவன், வர்ஷினியிடம் கொடுக்கும் பொழுது, “எனக்கும் இதே மாதிரி உன்னுடைய பிறந்த நாளை கொண்டாடனும்னு
ஆசையா இருக்கு. ஆனா, நீ எப்போ ஒத்துக்குவியோ தெரியல...” என்றான் பெருமூச்சு விட்டபடி.
“எனக்கு பிறந்தநாள் கொண்டாடுறதும்
பிடிக்காது. உன் கூட பிறந்த நாள் கொண்டாடுறதும் பிடிக்காது. கேக் கொடுக்க வந்தா,
கேக் கொடுக்குற வேலைய மட்டும் பாரு. இப்படி சைடுல ட்ராக் ஓட்டுற வேலையெல்லாம் இங்க
வேண்டாம்” என்று கூறிவிட்டு கேக்கை
வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.
“எப்படி பேசுனாலும் நோஸ்கட்
பண்றாளே.. இவளுக்கு இப்படி சாஃப்டா ஹேண்டில் பண்றது எல்லாம் செட்டாகாது போலருக்கு.
இனிமே, அதிரடியான ஆரியனை தான் இவளுக்கு காட்டணும்”.
ஷைலஜா
கிஷோருடன் வந்து யாழினிக்கு பரிசு பொருளை கொடுத்தவள், “ஹாப்பி பர்த்டே யாழினி” என்று கட்டியணைக்க.
இதைப்
பார்க்கும் பொழுது விசாலாட்சிக்குக் கோபம் தலைக்கேறியது.
மனதிற்குள்,
“இவ இருக்க வேண்டிய இடத்துல அவ
இருக்கா, அவளுக்கு இவ பிறந்தநாள் வாழ்த்து சொல்லுறா... ச்ச...” என்று பொறுமினார்.
பிறகு,
கிருஷ்ணமூர்த்தி யாழினியையும், அபிமன்யுவையும் நோக்கி வர. வள்ளியம்மை பாட்டிக்குப்
பெரும் ஆச்சரியமாக இருந்தது.
வள்ளியம்மை
பாட்டி மீராவிடம் கிசுகிசுப்பாக, “என்ன
மீரா, உங்க அப்பா வர மாட்டேன்னு சொன்னார். ஆனா, இப்போ வராரே... ஒரு வேளை மனசு
மாறிட்டாரோ?”.
“தெரியலையே மா. பேரனுக்காக அவன்
ஆசைப்படுறானேனு இவர் மனசை மாத்திக்கிட்டாரோ என்னவோ...”.
“அவ்வளவு சீக்கிரம் மனசு மாறுற ஆளா
உங்க அப்பா”.
“எப்படியோ அப்பா வந்துட்டாங்கல்ல.
அதுவே சந்தோஷம் தான்” என்று கூறி நகைத்தார்.
அபிமன்யு,
“வாங்க தாத்தா, இந்தாங்க கேக்
எடுத்துக்கோங்க” என்று அவருக்கு கேக்கை ஊட்டி விட
செல்ல.
அதை
அபிமன்யு எதிர்பாராத விதமாக கிருஷ்ணமூர்த்தி பெரும் கோவத்தோடு தட்டி விட்டார்.
“அப்பா, என்ன பண்றீங்க?”.
“இப்போ இவளுக்கு இந்த பிறந்தநாள்
கொண்டாடுறது ஒன்னு தான் கேடா.. இவ எல்லாம் வாழ்க்கையில முன்ன பின்ன பிறந்தநாள்
கொண்டாடி இருப்பாளா.. இவளுக்கு இவ்வளவு பெருசா பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம்
தேவையா?” என்று பொரியத் தொடங்கினார்.
“மாமா, உங்க கோபத்த எல்லாம்
வீட்டுக்குள்ள வச்சுக்கலாமே. இன்னைக்கு யாழினியுடைய பிறந்தநாள். இன்னைக்கும்
அவகிட்ட நீங்க இப்படி தான் நடந்துக்கணுமா”.
“மாப்பிள்ளை உங்களுக்கு இவங்களப் பத்தி
எல்லாம் தெரியாது. நல்லவங்க வேஷத்துல இருக்குறதால நீங்க இவங்களயெல்லாம் நல்லவங்கனு
நம்பிட்டீங்க. போகப் போக தான் உங்களுக்கு இவங்களப் பத்தி எல்லாம் தெரிய வரும்”.
“தாத்தா ப்ளீஸ்.... ஸ்டாப்....
போதும். இன்னும் எவ்வளவு நாள் தான் நீங்க இப்படி பிஹேவ் பண்ண போறீங்க யாழினி
கிட்ட. அதுவும் அவளுடைய பர்த்டே அன்னைக்கு போய் இப்படி அவகிட்ட ஹார்ஷா
நடந்துக்குறீங்களே, அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும். அவளுக்காக நான் ஒன்னு ஒன்னும்
பார்த்து பார்த்து செஞ்சிருக்கேன். எதுக்காக.. அவ சந்தோஷமா இருக்கணும்ன்றதுக்காக
தான். ஆனா, நீங்க எல்லாத்தையும் கெடுக்கணும்ன்ற முடிவோட வந்திருக்கீங்களா.
உங்களுக்கு பிடிக்கலனா வராமலே இருந்திருக்கலாமே.. எதுக்காக வந்து அவள ஹர்ட் பண்ற
மாதிரி பிஹேவ் பண்றீங்க” என்றான் கோபமாக.
“இது தான்.. இது தான் அபி எனக்கு
அவ மேல கோவத்த இன்னும் அதிகப்படுத்துது. என் பேரன் என்னை எதிர்த்து ஒரு வார்த்தை
பேச மாட்டான். நான் என்ன சொன்னாலும், அதை அப்படியே கேட்பான்னு இவ்வளவு நாள் ஒரு
கர்வத்தோட இருந்தேன். அதை அடியோட இவ அழிச்சுட்டா. ஆரம்பத்துல இவங்க குடும்பத்த பழிவாங்க தான் நீ இவள கட்டுறனு
சொன்ன. அதை நம்பி நான் சம்மதிச்சது தான் என்னுடைய மிகப்பெரிய தப்பு. எவ்வளவு பெரிய
முட்டாளா நான் இருந்திருக்கேன். எனக்கு என் பேரன் பழையபடி வேணும். அது இவ உன்ன
விட்டு போனா தான் நடக்கும்” என்றார் கோபமாக.
கருத்துகள்
கருத்துரையிடுக