அவனதிகாரம் - 97
அதிகாரம் – 97
யாழினியின்
நண்பர்கள் எதுவோ பிரச்சனை என்று எண்ணியவர்கள், “யாழினி நாங்க அப்போ கிளம்புறோம். நாளைக்கு காலேஜ்ல மீட்
பண்ணலாம்” என்று கூறி விட்டு வெளியேற
எத்தனிக்க.
அபிமன்யு,
“ஒரு நிமிஷம், எல்லாருக்கும் கீழ
டின்னர்க்கு ரெடி பண்ணி இருக்கோம். சாப்பிட்டு போங்க.. ஆரியன், அவங்கள கூப்பிட்டு
போய் பார்த்துக்கோ” என்று ஆரியனையும் அவர்களுடன்
அனுப்பி வைத்தான்.
ஆரியன் ‘சரி’ என்று தலையசைத்தவன், அவர்களை அழைத்துக் கொண்டு கீழே செல்ல.
வள்ளியம்மை
பாட்டி கலங்கிய கண்களுடன், “ஏங்க.. ஏங்க இப்படி எல்லாம்
பண்றீங்க.. நம்ம பேத்திக்கு தானங்க பிறந்தநாள். உங்களுக்கு பிடிச்ச பேரனுடைய
பொண்டாட்டி வேற. ஏன் இப்படி அவளோட மனசை நோகடிக்கிற மாதிரி நடந்துக்குறீங்க”.
“பேத்தியா.. யாருக்கு யாரு டி
பேத்தி.. இவ எனக்கு பேத்தியா?”.
இவரின்
பேச்சில் சுப்பிரமணிக்கு கோபம் எழ.
விசாலாட்சிக்கு
குதூகலமாக இருந்தது. இவ்வளவு நேரம் தான் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் தன் மனதை குளிர
வைக்கிறார் என்று நடப்பவற்றை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அபிமன்யு
தன் கையை உயர்த்தி அவரைப் பேச விடாமல் தடுத்தவன், “போதும், நீங்க கீழே போங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கு
பேசிக்கலாம்”.
“ஏன், நான் இன்னைக்கு
பேசக்கூடாதா.. நான் பேசுனா உன் பொண்டாட்டியோட பிறந்தநாள் கொண்டாட்டம் வீணா
போயிடுமேனு பாக்குறியா.. அப்போ உனக்கு என்னை விட அவ தான் முக்கியமா?”.
“போதும் தாத்தா. இதுக்கு மேல
வேண்டாம்னு நினைக்கிறேன். தேவை இல்லாம வார்த்தைய விடாதீங்க”.
“அதெல்லாம் முடியாது அபி. எனக்கு
இன்னைக்கே.. இப்போவே.. இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். உனக்கு நான் முக்கியமா
இல்ல, அவ முக்கியமா.. உங்க அம்மாவ இத்தன வருஷமா வளர்த்து கட்டிக் கொடுத்து, உன்ன
இத்தன வருஷமா வளர்த்ததுக்கு நீ காட்டுற நன்றிக்கடன் இது தானா பா”.
“அப்பா என்ன பேசுறீங்க நீங்க...
பெத்தவங்க எல்லாருமே அவங்க பிள்ளைங்களுக்கும், பேர பசங்களுக்கும் செய்யுற ஒரு
சாதாரண விஷயத்தை தான் நீங்களும் செஞ்சிருக்கீங்க. அதுக்காக அவன அவன் பொண்டாட்டி
கூட சந்தோஷமா வாழ கூடாதுனு சொல்லுவீங்களா?”.
மீராவிற்கு
எந்த உண்மையும் தெரியாது என்று எண்ணிய கிருஷ்ணமூர்த்தி, அவர் முன்பு வெளிப்படையாக
பேச முடியாமல் திணறினார். அந்த கோபம் வள்ளியம்மை பாட்டியின் மேல் திரும்பியது.
“உன்கிட்ட நான் என்ன சொன்னேன்..
இவங்க ரெண்டு பேரோட கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்.. நீ
கேட்டன்ற ஒரே காரணத்துக்காக தான் இவங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். அப்பவும் உன்கிட்ட நான் சொன்னேன்ல,
கல்யாணம் நடந்தாலும் இந்த பொண்ணுடைய பெத்தவங்க, உறவுக்காரங்கனு சொல்லிக்கிட்டு
யாரும் இந்த வீட்டப் பக்கம் வரக்கூடாதுன்னு உன்கிட்ட சொன்னேன்ல. எல்லாத்துக்கும்
அப்போ சரி சரினு மண்டைய ஆட்டிட்டு, இப்போ மொத்த கூட்டத்தையும் கூட்டி வச்சு
பிறந்தநாள் கொண்டாட்டம் பண்றீங்களா”.
மரகதம்,
“என்ன வள்ளி, இவர் என்ன சொல்றார்..
ஒன்னும் புரியலையே”.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைகா.. இவர்
இவங்க கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க யாரும் அவளோட உறவு வச்சுக்க கூடாதுனு
சொன்னார். அப்போ தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிப்பேன்னு சொன்னார். எனக்கும் அப்போ வேற வழி தெரியல.
எப்படியாவது இந்த கல்யாணம் நல்லபடியா நடந்துட்டா போதும், அதுக்கப்புறம்
எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்னு நினைச்சு சரினு சொன்னேன். அதான் இப்போ சொல்லிட்டு
இருக்கார். அவர் பேச்சை விடுங்கக்கா. அவர் பேசுறதெல்லாம் நீங்க பெருசா
எடுத்துக்காதீங்க”.
வள்ளியம்மையின்
வார்த்தையில் கொதித்தெழுந்த கிருஷ்ணமூர்த்தி, “ஏய்! என்ன என்னை ஒரு ஆளா மதிக்காம நீ பாட்டுக்கு
எல்லாத்தையும் உன் இஷ்டத்துக்கு முடிவு பண்ண ஆரம்பிச்சுட்டியா.. யோவ் வேலுச்சாமி!
உன்ன எங்க வீட்டுக்கு இன்னைக்கு வாங்கனு உன்ன யார் கூப்பிட்டது? கூப்பிடாத
வீட்டுக்கு இப்படி அழையா விருந்தாளியா வந்து நிக்குறியே.. உனக்கும், உன்
குடும்பத்துக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே கிடையாதா?” என்று அதிகப்படியான வார்த்தைகளை
விட்டார்.
“கூப்பிடாத வீட்டுக்கு வர அளவுக்கு
நாங்க ஒன்னும் தரம் கெட்டுப் போகல. கூப்பிட்டு தான் நாங்க வந்தோம்”.
கிருஷ்ணமூர்த்தி
நக்கலாக சிரித்தபடி, “யாரு உன் பேத்தி கூப்பிட்டாளா,
உன் பேத்தி கூப்பிட்டானு எங்க வீட்டுக்கு கிளம்பி வந்திருக்கியா. எப்படி
கூப்பிட்டா, தாத்தா இன்னைக்கு எனக்கு பிறந்த நாள். அதனால எங்க வீட்டுக்கு வாங்க
தாத்தானு உன்ன கூப்பிட்டாளா” என்று கூறி நகைத்தார்.
“என் பேத்தி என்னை கூப்பிட்டு நான்
இங்க வரல. என் பேரன் கூப்பிட்டு தான் நான் இங்க வந்திருக்கேன்” என்று கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில்
கரியைப் பூசினார்.
வேலுச்சாமியின்
பேச்சில் கிருஷ்ணமூர்த்தி இதயம் பதட்டத்தில் படபடவென வேகமாக அடித்துக் கொள்ள
அவரால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
எப்படி
இது சாத்தியம்.. அபிமன்யுவா அழைத்து இருப்பான். இருக்காது, நிச்சயமாக இருக்காது..
அவன் யாழினியின் மேல் சற்று அன்பாக இருக்கிறான் தான். அதற்காக இவர்களின்
குடும்பத்தை எப்படி அவன் ஏற்றுக் கொள்வான்.
நடந்த
அனைத்தையும் அவன் என்ன மறந்து விட்டானா.. இவர் வேறு யாரையோ கூறுகிறார். ஒருவேளை,
ஆரியனாக இருக்குமோ? ஆம்..! இதை எப்படி நாம் மறந்தோம்.
கண்டிப்பாக,
ஆரியனாக தான் இருக்கும். அபிமன்யுவாவது இவர்களை வீட்டிற்கு அழைப்பதாவது என்று
மனதிற்குள் எண்ணியவர்.
“ஆரியன் ஒரு விளையாட்டு பையன்.
அவன் சொன்னத நம்பியா நீங்க எல்லாம் குடும்பத்தோட பொட்டிக் கட்டிக்கிட்டு வந்து
நிக்கிறீங்க. முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே போங்க”.
சுப்பிரமணி,
“அப்பா ஒரு நிமிஷம்.. நான் பேசுறேன்.
நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க”
என்றவர்.
“இங்க பாருங்க சார், எங்கள
இன்னைக்கு உங்க வீட்டுக்கு கூப்பிட்டது ஆரியன் தம்பி கிடையாது. உங்களுடைய மூத்த
பேரன்.. என்னுடைய மருமகன் அபிமன்யு தான் கூப்பிட்டார். போதுமா.. அவர் கூப்பிட்டு
தான் நாங்க இங்க வந்திருக்கோம்.
நாங்க ஒன்னும்
சாப்பாட்டுக்கு வழி இல்லாம உங்க வீட்டுக்கு வந்து நிக்கல. அவங்க வர சொல்லி
கூப்பிட்டதால தான் நாங்க வந்தோம். உங்களுக்கு இதுக்கு மேல ஏதாவது சந்தேகம்
கேட்கணும்னா உங்க பேரனையே கேட்டுக்கோங்க. முதல்ல அடுத்தவங்ககிட்ட மரியாதையப் பத்தி
பேசுறதுக்கு முன்னாடி, வீட்டுக்கு வந்தவங்ககிட்ட எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு
நீங்க தெரிஞ்சுக்கோங்க. அதுக்கப்புறம் எங்ககிட்ட வந்து மரியாதையப் பத்தி பேசலாம்” என்றவர்.
“வா லட்சுமி கிளம்பலாம். அதான்
பிறந்தநாள் எல்லாம் முடிஞ்சிடுச்சுல. எல்லாரும் கிளம்புங்க” என்று மற்றவர்களையும் உடன் அழைத்தார்.
யாழினிக்கு
இவர்களை எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. இதனால் தான் அவள் இவர்களை
இங்கு வாருங்கள் என்று அழைக்கவே மாட்டாள். தொலைபேசியில் மட்டுமே உரையாடுவாளே தவிர,
வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்க மாட்டாள்.
இப்படி
ஏதேனும் நடந்து விட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை.
ஏற்கனவே, அபிமன்யுவால் அவர்களின் குடும்பம் இதே போல் அவமானப்பட்டிருக்கிறது.
அன்று
முதல், யாழினி அவர்களை வீட்டிற்கு வரும்படி அழைக்கவே மாட்டாள். சுப்பிரமணி கூறும்
வரையிலுமே, யாழினிக்கு இந்த விஷயம் தெரியாது.
தன்
வீட்டினர் அவர்களாகவே முன்வந்து தன் பிறந்த நாளுக்காக தன்னைக் காண
வந்திருக்கிறார்கள் என்று எண்ணி இருந்தவளிற்கு சுப்பிரமணி கூறியது இவளுக்கே புதிய
செய்தி தான்.
ஒரு
புறம், அபிமன்யுவே தங்கள் குடும்பத்தாரை அழைத்திருக்கிறான் என்று எண்ணும்பொழுது
பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
மறுபுறம்,
மீண்டும் அவர்களுக்கு இந்த வீட்டில் ஒரு அவமரியாதை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணும்
பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. இது என்ன மாதிரியான ஒரு சூழ்நிலை.
திருமணத்திற்கு
பின்பு, தன் பிறந்த வீட்டை விட்டு தன் கணவன் வீட்டிற்கு வந்த பிறகு, அவர்கள்
வீட்டை தன் வீடாய் நினைத்து என்ன தான் அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தாலும், தன்
வீட்டினர் தன்னைக் காண கூட இங்கு வர முடியாமல் தவிப்பதும், அப்படி வரும்
பொழுதெல்லாம் அவர்களை இப்படி அவமதிப்பாக நடத்துவதும், எப்படி ஒரு பெண்ணால்
தாங்கிக் கொள்ள முடியும்.
அதுவும்
போன முறை நடந்தது, இன்றும் அவளின் மனக்கண் முன்பு வந்து போனது. அபிமன்யு அவளின்
குடும்பத்தாரை அவமதிப்பாக நடத்திவிட்டான் என்று அவளும் அவர்களுடன் ஊருக்கு கிளம்ப,
அவளின் தந்தை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று விட்டுவிட்டு சென்று விட்டாரே..
எனவே, இப்பொழுது எப்படி செயலாற்றுவது என்று தெரியாமல் நின்றிருந்தாள்.
சமாதானம்
செய்வதைப் பற்றி அவள் நினைத்தும் பார்க்கவில்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு
அவர்களை சமாதானம் செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் இதே போல் நடந்தால் அவர்களின்
நிலையையும் யோசித்துப் பார்க்க வேண்டும் அல்லவா..
உண்மையிலேயே
பல பெண்களின் நிலை இப்படி தான் இருக்கிறது. தன் கணவர் வீட்டிற்கும் ஆதரவாக பேச
முடியாமல், தன் தாய் வீட்டிற்கும் ஆதரவாக பேச முடியாமல், நடுவில் அல்லாடுவது
என்னவோ பெண்கள் தான்.. கிருஷ்ணமூர்த்தி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
‘என் அபியா.. என் அபியா இப்படி..’.
அதே
அதிர்ச்சி மாறாத குரலில், “என்ன அபி, இவர் சொல்றது உண்மையா?
நீயா இவங்கள நம்ம வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்ட”.
அபிமன்யு
செல்லும் சுப்ரமணியிடம் “மாமா, ஒரு நிமிஷம்” என்று அழைத்தான்.
அபிமன்யுவின்
வார்த்தையில் சுப்பிரமணியின் கால்கள் அப்படியே ஒரு அடி எடுத்து வைத்ததோடு நிற்க. அபிமன்யுவை
‘என்ன’ என்பது போல் பார்த்தார்.
“நான் உங்களுக்கு மருமகன் தானே..” என்று கேட்க.
சுப்பிரமணியின்
தலை தானாக ‘ஆம்’ என்பது போல் ஆடியது.
“என் வைஃப்.. அதாவது உங்களுடைய
பொண்ணு.. அவளுடைய பர்த் டேவிற்காக தான நான் உங்கள எங்க வீட்டுக்கு வர சொல்லி
இன்வைட் பண்ணி இருந்தேன். இப்படி ஃபங்ஷன் முடியுறதுக்கு முன்னாடியே கிளம்புனீங்கனா,
அது என்னை அவமானப் படுத்துற மாதிரி இருக்கும்”.
அவ்வளவு
தான், இதற்கு மேல் சுப்பிரமணியால் செல்ல முடியுமா.. அபிமன்யுவின் வார்த்தையில்
அப்படியே சிலை என நின்று விட்டார்.
என்ன
ஒரு இக்கட்டான சூழ்நிலை.. தாத்தா தங்களை அவமதிக்கிறார்.. பேரன் அவனை அவமதிக்கிறோம்
என்று கூறுகிறார். இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தார்.
மற்றவர்களுக்கும்
வேறு வழி இல்லை. சுப்பிரமணி கூறுவதையே கேட்க வேண்டிய சூழ்நிலை. ஏனெனில், நிலைமைக்
கையை மீறி சென்று விட்டது. இருவருமே அதிகப்படியான வார்த்தைகளை விட்டு விட்டனரே.
என்ன செய்ய முடியும், கண்களில் கண்ணீர் ஆறென பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது
லட்சுமிக்கு.
மீரா
லட்சுமியை நோக்கி விரைந்தவர், “அண்ணி, அழாதீங்க...” என்று அவரின் கண்களை துடைத்துவிட்டார்.
“நீங்க அபி கூப்பிட்டு தான வந்திருக்கீங்க.
அப்பா பேசுறதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க” என்றார் இறைஞ்சலாக.
லட்சுமியால்
அதற்கு மேல் அடக்க முடியவில்லை. எவ்வளவு நாட்கள் தான் அவரும் பொருத்து போவார்.
லட்சுமி,
“என் பொண்ணுக்கு மட்டும் ஏன்
இப்படி ஒரு நிலை. எந்த ஒரு விசேஷமும் அவளுக்கு சந்தோஷமா பண்ண முடியலையே.... எல்லாத்துலயும்
ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. அவ சின்ன வயசுலருந்தே யாரு மனசையும்
கஷ்டப்படுத்துற மாதிரி பேசக்கூட மாட்டா.
எல்லார்கிட்டயும்
அன்பா தான் நடந்துபா. ஆனா, அவளுடைய வாழ்க்கைய பார்த்தீர்களா, கொஞ்ச நேரம் அவள்
சிரிச்சுட்டானா அதுக்கும் சேர்த்து வச்சு அழற மாதிரி கடவுள் பிறக்கும் போதே அவள
சாபம் கொடுத்து அனுப்பிட்டார் போலருக்கு. யார் யாரோ பண்ண தப்புக்கெல்லாம் என்
பொண்ணு அனுபவிக்கனும்னு அவ தலையில எழுதி இருக்கு” என்று கூற.
மிரவிற்கு
என்ன கூறி அவரை சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. ஏனெனில், அவருக்கும் ஒரு பெண்
பிள்ளை இருக்கிறாளே. அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் அவரும் இப்படி தானே
வருந்தி இருப்பார்.
மரகதம்,
“ஏன் லட்சுமி, இப்படி எல்லாம்
பேசுற. அதான் அபி தம்பி பேசிக்கிட்டு இருக்குல்ல”.
அபிமன்யு
கண்கலங்கி நிற்கும் வள்ளியம்மையிடம், “பாட்டி
எல்லாரையும் கீழ கூப்பிட்டு போய் சாப்பிட வைங்க. யாரும் இன்னைக்கு ஊருக்கு போகக்
கூடாது. நான் சொல்ற வரைக்கும் இவங்க எல்லாம் இங்க தான் தங்கனும்” என்றான் ஆர்டர் போல்.
அபிமன்யு,
“ஆரணி யாழினியையும் கூட்டிட்டு
போய் சாப்பிட வை”.
“சரிண்ணா” என்றவள், யாழினியை அழைத்துக்கொண்டு கீழே செல்ல.
வள்ளியம்மை
பாட்டி, “எல்லாரும் வாங்க. அதான் அபி
இவ்வளவு தூரம் சொல்றான்ல. அவர் பேசுனது எதுவும் மனசுல வச்சுக்காதப்பா. அவருக்காக
நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்”
என்று சுப்பிரமணியின் முன்பு கைகூப்பி நின்றார்.
அதில்
பதட்டமான சுப்பிரமணி அவரின் கையைப் பற்றியவாறு, “என்ன சித்தி இதெல்லாம், பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க.
நாங்க போகல இருக்கோம்”.
அபிமன்யு
இதை எப்படி கையாளப் போகிறான்....?
கருத்துகள்
கருத்துரையிடுக